கலையின் விலை?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,296 
 
 

தான், தன் மாணவிகளுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுப்பதை ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்த சேரிச் சிறுமியை ஆரம்பத்தில் வெறுத்துத் துரத்திய பிரபல நாட்டியத் தாரகை பத்மா ரகுநாதன் நேற்று மொட்டை மாடியிலிருந்து அந்தக் காட்சியைக் கண்டபின் தன் வெறுப்பு மனத்தை மாற்றிக் கொண்டாள்.

கீழே…சேரியில்…ஒரு குடிசையின் பின்புறம்… சாக்கடை நதியருகில்… வெகு சுலபமாக அந்தச் சிறுமி ஆடிக் கொண்டிருந்ததைப் பாரத்துப் பிரமித்துப் போனாள். அவ்வப்போது ஒளிந்திருந்து பார்த்துக் கற்றுக் கொண்ட நடன அசைவுகளையும்… முக பாவங்களையும் தன் மாணவியரை விடச் சிறப்பாக அச்சிறுமி வெளிப்படுத்திய விதம் அவளை மிரள வைத்தது .

அடுத்த வாரத்தில் ஒரு நாள் மார்க்கெட்டிற்குச் சென்றிருந்த பத்மா ரகுநாதன் அங்கு கூடியிருந்த சிறு கும்பலைக் கண்டு ஆர்வமுடன் எட்டிப் பாரத்தாள். உள்ளே அந்தச் சேரிச் சிறுமி தன் நடனத் திறமையைக் காட்டிக் கொண்டிருக்க அதற்கு கன்னாபின்னாவென தாளமடித்துக் கொண்டிருந்தான் ஒரு கட்டம் போட்ட லுங்கிக்காரன். இன்னொரு பக்கம் அவளைப் பெற்றவன் துண்டு விரித்து வசூல் நடத்திக் கொண்டிருந்தான்.

வெறுத்துப் போன பத்மா ரகுநாதன் ஆவேசத்துடன் அச்சிறுமியைப் பெற்றவனை அணுகி கத்தலாய்க் கேட்டாள். ‘ஏன்யா…எப்பேர்ப்பட்ட தெய்வீகக் கலை… அதைப் போய் இப்படி… காசுக்காக… ச்சை”

‘இதப் பார்ரா… இவங்க மட்டும் ஆயிரக் கணக்குல பணம் வாங்கிக்கிட்டு வீட்டுக்குள்ளார வெச்சு வியாபாரம் பண்ணுவாங்களாம்… ஆனா நாம இப்படி ரோட்டுல வெச்சு காசு சம்பாதிக்கக் கூடாதாம்… இதென்ன நியாயம்?”

சாட்டையடி பட்டாற் போலிருந்தது பத்மா ரகுநாதனுக்கு. ‘அவர்கள் சொல்வதும் உண்மைதானே?”

மறுநாளே நாட்டியத் தாரகை பத்மா ரகுநாதனின் வீட்டின் முன் இருந்த ‘பரத நாட்டியப் பள்ளி” என்ற போர்டு ‘இலவச பரத நாட்டியப் பள்ளி” என்று பெயர் மாற்றம் பெற்றது

mukilthinakaran பெயர் - முகில் தினகரன் முகவரி - சைட் நெ-3ஃ சாந்தி நகர்ஆவாரம்பாளையம் ரோடுகணபதி அஞ்சல்கோயமுத்தூர் – 641 006. அலை பேசி எண் - 98941 25211 கல்வித் தகுதி - எம்.ஏ.(சமூகவியல்)எம்.காம்.பி.ஜி.டி.பி.எம். (மனித வள மேம்பாடு)டி.ஈ.எம். (ஏற்றுமதியியல்) வயது - 49 ஆண்டுகள் தொழில் - மத்திய அரசு சார்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சிறுகதைகள்இதுவரை எழுதியுள்ளவை - 600பிரசுரமானவை - 300 –க்கும் மேல்பிரசுரமான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *