கலியுகக் களம்
தணிகாசலம் தன் நண்பர் ஏலையனுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார் ராட்டையூரில் பிரசித்தி பெற்ற ‘ ஏகாம்பரம் தேநீர்-சிற்றுண்டி’ கடையில். அந்த கடையில் தேநீர் அல்லது சிற்றுண்டி உண்ணாதவர்களே இல்லை என்பது மட்டுமல்ல, அக்கம் பக்கத்தில் உள்ள நகரத்தில் வசிப்பவர்கள் கூட வார இறுதியில் இங்கு வந்து ருசிப்பார்கள். எந்த நேரத்திலும் கடையில் கூட்டத்தைக் காணலாம்.

ஏகாம்பரம் ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு காலை வேளைகளில் மட்டும் திறந்திருக்கும் தேநீர் கடையாக வியாபாரத்தை ஆரம்பித்தார். ஆனால் அவரின் கைப்பக்குவம், குறைந்த லாபத்துடன் நல்லவிதமான தேநீர் தந்த விதம், வாடிக்கையாளர்களிடம் அணுகும் முறை, அவர் கடைக்கு மக்களை ஈர்த்தது. மேலும் அவருக்கு இருந்த சமையல் கலையின் திறமைகளால் தேநீரோடு சில சிற்றுண்டிகள், நொறுக்குகள் இவைகளையும் அறிமுகப்படுத்தவே கடையின் வணிகம் பெரிய அளவில் வளர்ந்தது. பகுதி நேர வியாபாரம் முழுநேரமும் செய்யும் அளவுக்கு வளர்ந்து, நல்ல பெயரையும் சம்பாதித்து இருந்தது. அவருக்குப் பின் அவருடைய சந்ததி கந்தவேல் படிப்பை முடித்து விட்டு, வியாபாரத்தை தொடர்ந்து நல்ல முறையில் நடத்தி வருகின்றான்.
தணிகாசலமும், ஏலையனும் ராட்டையூருக்கு அருகே அமைந்திருக்கும் நெல்லியூர் எனும் சிறு நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். பள்ளி படிப்பை ஒன்றாகவே முடித்த இருவரும், கல்லூரி படிப்பை வேறு, வேறு கல்லூரிகளில் படித்து முடித்தார்கள். வேலை தேடி இருவரும் நன்னாடு நகரத்திற்கு பெற்றோர்களுடன் இடம் பெயர்ந்தனர். அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் நல்ல அலுவலகங்களில் வேலை கிடைத்து, அந்நகரத்திலேயே நிரந்தரமாக தங்கி விட்டனர். இன்னும் மூன்று வருடங்களில் பணி ஓய்வு பெற்றிடுவார்கள். ஏகாம்பரம் தேநீர் கடைக்கு சிறுவயதிலிருந்தே வாடிக்கையாளர் ஆனவர்கள்.
எப்போதாவது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த பக்கம் வந்து இங்குள்ள கோயிலில் வழிபாடு செய்துவிட்டு திரும்புவார்கள். முக்கியமாக ராட்டையூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கும், பெருமாள் கோவிலுக்கும் வந்து செல்வார்கள். இந்த முறையும் இப்படித்தான் இங்கே வந்துள்ளனர். இங்கு வரும்போதெல்லாம் ‘ஏகாம்பரம்’ கடைக்கு வராமல் போகமாட்டார்கள்.
தட்டில் இருந்த பக்கோடாவை மிகவும் ரசித்து ருசித்தார்கள் நண்பர்கள் இருவரும்.” தணிகா, என்னதான் நன்னாடு ஹோட்டல்கள்ல பக்கோடா சாப்பிட்டாலும் இந்த டேஸ்ட் அங்கே கிடைக்க மாட்டேங்குது இல்லையா?” என்றார் ஏலையன்.
” ஆமாண்டா, ஏலையா, அங்கே எல்லாம் ஃப்ரெஷ் கிடையாது. இங்கே அன்னிக்கு போடறது அன்னிக்கே வித்துடும். மறுநாளுக்கு புதுசு தான். அதனால் டேஸ்ட் நல்லாவே இருக்கும். இன்னொண்ணு ப்யூர் கடலைமாவு. அதையும் சொல்லணும் ” என்றார் தணிகாசலம். இந்த நேரத்தில் அவர்கள் பார்வையில் இவைகள் பட்டன.ன
முதல் களம்
அப்போது அங்கே இருவர் கடைக்காரருடன், அதாவது ஏகாம்பரத்தின் மகன் கந்தவேலுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
“இல்லையே, நான் கேட்கவே இல்லையே, ரெண்டு ப்ளேட் சமோசா, ஒரு பக்கோடா இது மட்டுமே சாப்பிட்டோம். நீங்க பில் தப்பா போட்ருக்கீங்க. ரெண்டு பக்கோடா செட் கொடுத்த மாதிரி கணக்கு பண்ணிருக்கீங்க. அதெல்லாம் தர முடியாது” என்று அந்த நபர் சொல்லிக்கொண்டிருந்தார்.
“டேய், ராஜா, இவருக்கு ரெண்டு பக்கோடா ப்ளேட் கொடுக்கலைங்கறாரே, என்னடா?” என்று அங்கே வேலை செய்த பையன் ராஜாவைக் கேட்டான் கந்தவேல்.
“இல்லை அண்ணே, ரெண்டு ப்ளேட் தான். ஐயா நான்தானே கொண்டு வந்தேன்” என்றான் ராஜா.
” டேய், நாங்க அப்ப பொய் சொல்றோம்னு சொல்றியா? மரியாதை கெட்டு போயிடும் ஜாக்கிரதை. ஒரு இருபது ரூபாய்க்காக உங்க கிட்ட நாள் முழுக்க பேசிட்டு இருக்கணுமாடா? எங்களுக்கு வேற வேலை இல்லேன்னு நினைச்சியா?” என்று சத்தம் போட்டு அந்த நபர் கத்தினார்.
உடனே கந்தவேல் ” சார், கோபப்படாதீங்க, கூட்டம் அதிகம். கணக்கு அங்கே இங்கே ஏதாவது தவறு நடந்திருக்கும். நான் பில்லை மாத்தி தரேன். நீங்க அதை மட்டும் பே பண்ணிட்டு போங்க. வாக்குவாதம் வேண்டாம். நம்ப ரெண்டு பேருக்கும் நேரம் இல்லை அதுக்கு” என்று கந்தவேல் கூறி புதிய தொகைக்கு விற்பனை சீட்டு கொடுத்தான். அவர்கள் இருவரும் மௌனமாக பணம் கொடுத்து விட்டு முணுமுணுத்தவாறே நகர்ந்தனர்.
தணிகாசலமும், ஏலையனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
இரண்டாம் களம்
அப்போது கடையின் வாசல் பக்கம் ஒரு ஓரத்தில் போட்டிருந்த மேசை முன் இருவர் அமர்ந்து வடைகள் சாப்பிட்டுக்கொண்டே தேநீரையும் பருகியவாறு பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் திடீரென்று இருவரும் சத்தம் போட்டு சண்டை போடும் தோரணையில் பேச ஆரம்பித்தனர்.
“எத்தனை நாள்டா இப்படி சொல்வே, என்னதான் நினைச்சிட்டு இருக்கே உன்னைப்பத்தி? என்கிட்ட சொன்னபடி நீ நடக்கலேன்னா விஷயம் வேற மாதிரி ஆகிடும்.” என்று கண்ணாடி போட்டுக் கொண்டிருந்த ஒருவர் கோபத்துடன் சொன்னார்.
“சும்மா கத்தாதே நீ. அதனால் நான் அடங்கிடுவேனா? நீ சொன்னபடி நடந்துகிட்டியா? அதை யோசிச்சு பாரு!” என்று இரண்டாம் நபர் பதில் கொடுத்தார்.
” டேய், சும்மா நிறுத்துடா, எனக்கு என்ன மரியாதை கொடுத்தே நீ, எவ்வளவு அலைய வச்சே? உனக்கு கர்வம் அதிகமாயிடுச்சுடா! ” என்று முதல் நபர் கத்தினார்.
” உனக்கு என்ன மதிப்பு கொடுக்கணுமோ அதை கொடுத்தேன். அதிகமா தர்றதுக்கும் ஒரு தகுதி வேணும் டா, ஞாபகம் வச்சுக்க. எங்கிட்ட இப்ப இல்லைன்னா கேட்டுட்டு போக வேண்டியதுதானே? சச்சரவு செஞ்சு வாங்கிடலாம்னு பாக்கறயாடா?” இது இரண்டாம் நபர்.
“உன் தரத்தை விட நான் மேல்தான். சொன்னா சொன்ன நேரத்திற்கு கொடுக்க வக்கில்லை. பேசறான் வாய் கிழிய, போடா! எங்கிட்ட ஒரு நாள் வந்து கெஞ்சப் போறீங்க பாருடா!” கண்ணாடி நபர்.
“சரிதான் போடா, அது மாதிரி நிலைமை வந்தா பாக்கலாம். தர முடியாதுடா. என்ன செய்ய முடியும் உன்னாலே?” என்று முதல் நபர் சத்தம் போட்டு கேட்க,
வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருவரும் சட்டையை பிடித்து இழுத்து மாறி மாறி அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
உடனே அங்கு அருகில் இருந்த அவ்வூர்காரர்கள் ” அட, வேணு, இந்தாப்பா செல்வம், சண்டை வேண்டாம்பா, பிடிக்கலையா ஒதுங்கி போய்டுங்க, கடைல
வந்து வியாபார நேரத்தில் இதெல்லாம் சரியில்லைப்பா. ” என்று தடுத்து இருவரையும் தனியே விலக்கி உட்கார வைக்க முயற்சித்தனர். அதைப் பார்த்த கந்தவேல் உடனே அவர்கள் இருந்த இடத்திற்கு ஓடினான். இருவரிடமும் ஏதோ ஐந்து நிமிடங்கள் பேசி வேணு என்ற கண்ணாடிக்காரரை வெளியே அனுப்பினான் முதலில். அவர் போகும்போது, ” கந்தவேல், உன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நான் போறேன். இல்லாட்டினா நடக்கிறதே வேற இன்னிக்கு” என்று சொல்லி விட்டு ” நான் சாப்பிட்ட வடைக்கும், டீயுக்கும் இந்தா ரூபாய். பாக்கி அப்புறம் வந்து வாங்கிக்கறேன்” என்று நூறு ரூபாயை தந்துவிட்டு போனார்.
இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து செல்வம் என்ற அந்த இரண்டாம் நபர் அமைதியாக கந்தவேலிடம் காசைக்கொடுத்துவிட்டு, ” நல்லதுக்கு காலம் இல்லை கந்தவேல்” என்றபடி வெளியே சென்றார்.
மூன்றாம் களம்
இந்த சண்டையை வேடிக்கை பார்க்க சாலையில் பழம் விற்றுக் கொண்டிருந்தவர் உள்ளே வந்து நின்று கொண்டிருந்த சமயம் பார்த்து அவர் கடை அருகே நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் யாரும் பார்க்கும் முன் அந்த வண்டியில் இருந்து இரண்டு ஆப்பிள், ஆரஞ்சுகளை தன் பையில் போட்டுக் கொண்டு வேகமாக நடையைக் கட்டினார். அவரோடு கூட வந்தவர் அவரை ஏதோ கேட்கிறார். முதலாமவர் கோபத்துடன் ஏதோ காரணம் சொல்ல, இரண்டாமவர் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டி ” சரி, சரி, வா போகலாம்” என்று சொல்வது போன்ற ஜாடையுடன் அருகில் நிறுத்தி வைத்திருந்த வண்டியில் ஏறிச் செல்கின்றனர்.
இதையும் தணிகாசலம், ஏலையன் இருவரும் கவனித்தனர்.
நான்காம் களம்
எப்போது வந்தாலும் தணிகாசலமும் ஏலையனும் ‘ ஏகாம்பரம் தேநீர்-சிற்றுண்டி’ கடையில் இரண்டு மணி நேரம் குறைந்த பட்சம் உட்கார்ந்து விட்டுப் போவது வழக்கம். கந்தவேலுக்கும் இது நன்கு தெரியும். அன்றும் அப்படித்தான் உட்கார்ந்து கொண்டிருந்தபோது இவைகளை பார்த்துவிட்டு ” ஏய் தணிகா, நாம் என்னவோ நகரம்தான் வீணாகி விட்டது ஆனால் கிராமத்தில் நல்ல சூழ்நிலைதான் இருக்குன்னு நினைச்சுட்டு இருக்கோம். இங்கே பாரு, என்னவெல்லாம் நடக்குது. ச்சே” என்று சலித்தபடி பேசினார் ஏலையன். ” ஆமாண்டா, எப்பவும் இல்லாத அளவில் இந்த தடவை நிறையவே இந்த மாதிரி தென்பட்டிருக்கு. கந்தவேலுவை கேட்போம் இங்கேருந்து போறதுக்கு முன்னாடி” என்றார் தணிகாசலம்.
இந்த நேரத்தில் ஒரு ஐம்பது வயது இருக்கும் ஒருவர் வேகமாக ஓடி வந்து கந்தவேலுவிடம் ” கந்தவேலு என்னை காப்பாத்துப்பா. இந்த பசங்க துரத்திட்டு வரானுக. சும்மா கண்டிச்சேன். அதுக்கு கோபப்பட்டு கொலைவெறில அடிக்க வரானுக.நான் இங்கே உள்ளே போய் உட்கார்ந்துக்கறேன்.” என்று அழாக்குறையாக கதறிவிட்டு உள்ளே போய் விட்டார். அவர் கூறியபடியே ரெண்டு பையன்கள் கம்பை கையில் வைத்துக் கொண்டு” இங்கே வந்தவன் எங்க ஐயா, இன்னிக்கு சரியான பாடம் சொல்லித்தரப்போறோம் அவனுக்கு.” என்று கந்தவேலுவைப் பார்த்து உரத்த குரலில் பேசினார்கள்.
உடனே கந்தவேல் அந்த பையன்களிடம் ” உன்னோட நல்லதுக்குதானடா சொன்னாரு. உஙகளோட அப்பன் ஆத்தாளுக்கு தெரிஞ்சு அவங்க கண்டிச்சா அவங்களையும் அடிச்சு போடுவிங்களாடா? சரி, அவரு சொல்றதை கேட்க வேண்டாம். அவருக்கு மரியாதை தர வேண்டாம். உங்களை திருத்த முடியாது.ஆனா அவரு கண்ணுல படாமல் போய் செய்து தொலைய வேண்டியதுதானே? இப்படியே செஞ்சிங்கன்னா, அவரு சும்மா இருந்தாலும் நான் போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்டா, நிசமா சொல்றேன். ஒழுங்கா இடத்தை காலி பண்ணு. வெளியே போய் அவரு வரும்போது வம்பு செய்தீங்கன்னா தொலைஞ்சீங்கடா, ஞாபகம் இருக்கட்டும்” என்று மிரட்டி விட, அவர்கள் முணு முணுத்துக்கொண்டே ஓடி விட்டனர். உள்ளேயிருந்து வெளியே வந்து அந்த நபர் கந்தவேலுவின் கையைப்பிடித்து நன்றி கூறினார்.
“விட்டிடுங்க ஐயா, எக்கேடோ கெட்டு போகட்டும் அந்த தறுதலைங்க” என்று சொல்லி அவரை வழியனுப்பினான்.
அவர் போனவுடன் தணிகாசலம் ஏலையனிடம் ” சரிப்பா, இனிமேல் சும்மா இருக்க வேண்டாம். நாம போய் கந்தவேல் கிட்ட இதெல்லாம் என்னன்னு கேட்டுட்டு கிளம்புவோம்” என்றார்.
“கரெக்ட், நமக்கும் போற வழியில் கொஞ்சம் வேலை இருக்கு. இப்ப கிளம்பினா சரியா இருக்கும் ” என்றான் ஏலையன்.
இருவரும் கந்தவேல் அருகில் போய் நின்றனர். ” என்ன சார், கிளம்பறீங்களா, ஏதாவது ஸ்நாக்ஸ் பார்சல் வேணுமா? அப்புறம் எப்ப வருவீங்க? ” என்று கேட்டான் கந்தவேல்.
“இன்னும் ஆறு மாசத்துல ஒரு ட்ரிப் இருக்கு கந்தவேலு. இந்த ஊர் கோவிலுக்கு சில பணிகளை செஞ்சு தரதா உறுதி தந்திருக்கோம். அதுக்காக வருவோம். அதை விடு, என்னப்பா நடக்குது இங்கே? நாங்களும் எல்லாத்தையும் பாத்துகிட்டிருந்தோம்.
ஒருத்தர் இருபது ரூபாய்க்கு ஆர்க்யூ செய்றாரு. அவர் பொய் சொன்ன மாதிரி தெரிஞ்சது எங்களுக்கு. ஆனால் நீ அவர் சொன்னதை நம்பிட்டே.
இன்னொரு பக்கம் பணம் கொடுத்தவன் திருப்பி கேட்டா கொடுக்க முடியாதுன்னு அடம்பிடிச்சு திமிரா பேசறான் ஒருத்தன்.
பழ வண்டிலேர்ந்து கவலைப்படாமல் உரிமையாளர் பார்க்காத போது எடுத்துட்டு போறான் ஒருத்தன்.” என்று தணிகாசலம் நிறுத்த,
“அதை விட மோசம், ஒரு பெரியவரை ரெண்டு பசங்க அடிக்க துரத்திட்டு வரானுக” என்று ஏலையன் முடித்தான்.
கந்தவேல் இவர்களுக்கு பதிலளித்தான்.
“சார், முதலில் என் கிட்ட, தான் ஒரு ப்ளேட் பக்கோடா வாங்கலைன்னு சொன்னது பொய்னு தெரியும்.எங்கிட்ட வேலை பாக்கற ராஜாவுக்கும் தெரியும். அந்தாளுக்கு இது ஒரு வழக்கமா போச்சு. ஏதாவது ஒரு கடைக்கு போய் வம்பு இழுத்து தகராறு வளக்க வேண்டியது. அடாவடித்தனம் செய்ய வேண்டியது. அரசியல் செல்வாக்கை வச்சு கடைக்கு இடைஞ்சல் செய்யறது, இதை ஒரு பிழைப்புன்னு செய்திட்டு இருக்கான் அந்த மடக்கூர் எம்.எல்.ஏ சொந்தக்காரன். எங்கிட்ட அதிகமா வச்சுக்கறதில்லை. ஏன்னா, நான் அவனுக கிட்டேர்ந்து எப்பவும் தள்ளி இருப்பேன். இருபது ரூபாய்க்கு பொய் சொல்ற ஒரு கேடுகெட்டவனோட எதுக்காக வம்புன்னுட்டு அவன் சொல்றதை நம்பி பணத்தை கொடுத்து அனுப்பிட்டேன். ஃப்ராடு பயதான் எனக்கு தெரியும். நான் சண்டை போடுவேன்னு எதிர்பார்த்து ஏமாந்திருப்பான் முட்டாள்!
அந்த ரெண்டாவது சொன்னீங்களே, அதுல பணம் கடன் கேட்டவன்தான் வேணுங்கறவன். பணம் தரமாட்டேன்னு சொன்ன செல்வத்தை அடிக்க வரான். இப்பல்லாம் கடன் கேட்கறவன் அதிகாரமா கேட்கறான். திரும்ப தரது பத்தி கவலையே படறதில்லே. கடன் கொடுத்தவன் கெஞ்சி கேட்டு கதறரான். இப்படி போன தடவை செல்வத்தை கதறவிட்டது நினைவுக்கு வந்ததால வேணுவுக்கு பணம் தர முடியாதுன்னு சொன்னான். அது பொறுக்க முடியாமல் அவனை அடிக்க போய்ட்டான் வேணு.” என்று நிறுத்தி விட்டு, அங்கு வந்த வாடிக்கையாளர் தந்த பணத்தை வாங்கி கல்லாவில் போட்டு விட்டு இவர்களைப் பார்த்தான்.
“அப்போ அந்த பழத்தை எடுத்து போனாரே அதை என்ன சொல்ற கந்தவேல்?” என்று ஏலையன் கேட்டான்.
“அந்த பழ வண்டிக்காரர் குப்புசாமி பொருள் நல்லதா வச்சிருந்தாலும் கொஞ்சம் அகம்பாவம் பிடிச்சவர். வழக்கமா வாங்க வரவங்களை கூட ரொம்ப மதிக்காமல் நடந்துப்பாரு. அந்த பழத்தை எடுத்துட்டு போனவரை எனக்கும் தெரியும். இன்னிக்கு அவர் செஞ்சதையும் பாத்தேன். போனவாரம் அவர் குப்புசாமியிடம் வாங்கிட்டு போன சில ஆப்பிள் நல்லா இல்லைன்னு சொல்லி மாத்திக்க வந்தாரு. இவரு ஒண்ணு மாத்தி கொடுத்திருக்கலாம் இல்லைன்னா அதுக்கு உண்டான காசை கொடுத்திருக்கலாம். இவரு இது எங்கிட்ட வாங்கின பழமே இல்லைன்னுட்டாரு. அவரு கோபத்துடன் கத்தராறு. இவரும் வாக்குவாதம் செய்ராறு. கடைசியா அங்கே பக்கத்தில் இருந்தவங்க எல்லாரும் சமாதானம் செஞ்சு வேண்டா வெறுப்பா ஒரு ஆப்பிளை கொடுத்தாரு. அவர் நேரம் பார்த்து இன்னிக்கு குப்புசாமி கவனம் சிதறினப்ப ஃப்ரீயா பழத்தை எடுத்துட்டு போய்ட்டாரு. இதெல்லாம் தப்பாவே நினைக்கவில்லை அவரு.
அப்புறம் ரெண்டு பசங்க ஒருத்தரை அடிக்க வந்தானுக பாருங்க, அவனுக ஸ்கூல் பசங்க. பயந்து ஓடி வந்தவர் ஆசிரியர். இவனுக சிகரெட், பீர் கையோடு இருக்கிறதை ஸ்கூல் கேம்பஸ்ல பாத்திருக்கார். கண்டிச்சிருக்காரு. அடுத்த வாரமும் பாத்து வார்னிங் செஞ்சிருக்காரு, இந்த வாரம் வந்து அவனுக பேரண்ட்ஸ் கிட்ட சொல்லப்போறேன்னு சொல்லிருக்காரு. அவனுக வேண்டாம்னு கெஞ்சிருக்கானுக. இவர் பிடி கொடுக்காமல் இருந்ததை கண்டு கோபமாகி அவரை அடிக்க கிளம்பிட்டானுக. இப்படிதான் நடக்குது சார் இப்போ.” என்று சொல்லி முடித்தான் கந்தவேல்.
” ச்சே, ச்சே, பெரிய நகரங்களிலதான் இது போல மனிதர்களோ இல்லை கும்பல்களோ நிறைஞ்சு கிடக்குதுன்னா சிறிய டவுன்கள்லயும், கிராமங்களிலேயும் அதே மாதிரி இருக்கே கந்தவேல், ரொம்ப மோசமாயிடுச்சு மனுஷங்களோட நடவடிக்கைகளும், வாழற முறைகளும் இல்லையா?” என்று தணிகாசலம் விரக்தி தொனியில் கேட்டார்.
” ஐயா, நாம் எல்லோரும் தினசரி ஒவ்வொருத்தர் இதுபோல வாழறதையும், பேசறதையும்,நடந்துக்கற முறைகளையும், தரங்கெட்ட விதங்களையும் பார்ப்பது சர்வசாதாரணமா போச்சு எல்லா இடத்திலேயும். ஏன்னா நாம் இருக்கிறதே நீதியில்லாத களத்தில். இங்கே பத்து நிகழ்வு பாத்திங்க, கேட்டீங்கன்னா அதுல எட்டு ஏடாகூடமாகத்தான் இருக்கும். நேர்மைக்கு மாறானதுதான் நிறையவே பாப்போம். எப்பவாவது ஒண்ணு ரெண்டு நல்லதா தென்படும். ” என்று சொன்னவன் சற்று தூரத்தில் ஒருவன் வருவதை பார்த்து விட்டு ” இப்போ ஒரு நல்லது காண்பீங்க, பொறுமையா கவனிங்க” என்று தணிகாசலம், ஏலையன் இருவரிடமும் சொன்னான்.
ஐந்தாம் களம்
அவர்கள் அருகில் வந்த இளைஞன் ” கந்தவேல் ஐயா, இதை எண்ணிப்பாருங்க” என்று கூறி மூன்று கட்டுகளாக இருந்த பணத்தை கொடுத்தான்.
” என்ன ஞானசேகரா, எப்படி இருக்கே, தொழில் நல்லா போகுதா? சரி, நீ உட்கார்ந்து ஒரு டீ சாப்பிடு. நான் எண்ணி பாத்துட்டு சொல்றேன். டீ மட்டும் போதுமா, வேற ஏதாவது சாப்பிடறயா?” என்று கந்தவேல் இளைஞனை கேட்டான்.
ஞானசேகரன் என்ற அந்த இளைஞன் ” டீ போதும் ஐயா, வேற ஒண்ணும் வேணாம் ” என்று சொல்லி அங்கே முன்னால் இருந்த மேசை அருகே உட்கார்ந்தான்.
“டேய், ராஜா, ஞானம் தம்பிக்கு டீ கொடுப்பா” என்று சொல்லி விட்டு, கையிலிருந்த பணக்கட்டுகளை பிரித்து எண்ண ஆரம்பித்தான்.தணிகாசலமும், ஏலையனும் அதை கவனித்தவாறு அருகில் இருந்த சிறிய மர இருக்கையில் உட்கார்ந்தனர்.
பணத்தை எண்ணி முடித்து கந்தவேல் ” பதினஞ்சாயிரத்து இருநூறு ரூபாய் இருக்குப்பா ஞானம். பதினாலுதானே உன் கணக்குப்படி தரணும். எக்ஸ்ட்ரா தந்திருக்கியே, ஏன் தம்பி?” என்று ஞானசேகரனிடம் கேட்டான்.
தேநீர் குடித்து முடித்து விட்டு அங்கு வந்த ஞானசேகரன்” ஐயா, நான் உங்களுக்கு போன மாசம் பதிமூணுதான் கொடுத்தேன். மறுவாரமே தரேன்னு சொன்னேன் மீதி ஆயிரம் ரூபாயை, வேலை ஜாஸ்தியாகிட்டதால வரமுடியல. அப்புறம் அன்னிக்கு டீ, பஜ்ஜி, போண்டா, சுண்டல் இதெல்லாம் வீட்டுக்கு பார்சல் வாங்கிட்டு போனேன் இல்லையா, அந்த இருநூறு ரூபாய் அதுக்குதாங்க!”என்றான்.
“அட, நீ என்னப்பா, நான்தான் வட்டியே வேண்டாம்னேன், முடியாதுனு தர ஆரம்பிச்சே, அதுவும் நீ நினைச்ச படி. நான் அவ்வளவு வேண்டாம்னு சொன்னாலும் நீ கேக்கலை. கடைக்கு யாரோ வந்திருக்காங்கன்னு ஃபோன் வந்தவுடன் அன்னிக்கு பார்சல் வாங்கிட்டு போனதுக்கு காசு வேண்டாம்னேன், அதையும் கொண்டு வந்திருக்கே, உங்கிட்ட நான் என்ன சொல்றது ஞானம்?” என்றான் கந்தவேல்.
“ஐயா, அன்னிக்கு அந்த கஷ்டத்தில் இருக்கும்போது நீங்க எவ்வளவு உதவி செஞ்சீங்க, அப்போ நான் ஏதாவது கொடுக்கற நிலையில துளியும் இல்லை. இன்னிக்கு நல்லா இருக்கறப்போ கொடுக்கலைன்னா நான் மனுஷனே இல்லை ஐயா. தயவு செஞ்சு மறுக்காமல் ஏத்துக்கங்க. இந்தாங்க” ன்னு பத்து ரூபாயை தந்தான் ஞானசேகரன். “இது எதுக்கு” கந்தவேல் கேட்க, “இப்ப குடிச்ச டீக்கு காசு தர வேண்டாமா?” என்று ஞானம் சொல்ல, “உன்னை திருத்தவே முடியாதுப்பா” என்று சிரித்தபடி கூறி மீதி பணத்தை அவனிடம் கொடுத்தான்.
“அடுத்த மாசம் பாக்கலாம் ஐயா. புதுசா நீங்க கொடுத்த அட்ரஸ்ல போய் பார்த்து ஆர்டர் புடிச்சுட்டேங்க. ரொம்ப தேங்க்ஸ்” என்று ஞானம் சொல்ல “சூப்பர்” என்று சொல்லி கந்தவேல் அவன் தோளைத்தட்டிக்கொடுத்தான்.
அவன் சென்றபின் தணிகாசலம், ஏலையன் இருவரையும் பார்த்து கந்தவேல் கூறினான். “ஞானசேகரன் நல்லா படிப்பான். அவன் முதல் வருஷம் காலேஜ் படிப்பு முடிக்கும் போது அவனோட பேரன்ட்ஸ் ஒரு விபத்தில இறந்துட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் தையற்கலை நன்றாகத் தெரியும். டிசைனிங் படிப்பு படித்தவர்கள். இங்கே பக்கத்தில் இருக்கும் மணல்முட்டூர்ல ஒரு கார்மென்ட் கம்பெனில வேலை பாத்துட்டு இருந்தாங்க. திடீர்னு இப்படி அவங்களுக்கு ஆனதும் ஞானத்துக்கு என்ன செய்றதுன்னு தெரியாமல் கலங்கி உட்கார்ந்து இருந்தான். காலேஜும் போகாமல். ஒரு உதவி செய்ற மாதிரி சொந்தமும் இல்லை.
நான் அவனுக்கு தைரியம் கொடுத்து அவன் படிப்பை முடிக்க சொன்னேன். அப்பாவிடம் நல்லா தையல்கலையை கற்றவன். ஊரில் சிலபேர் அவனிடம் ட்ரெஸ் தைத்து வாங்கிப்பாங்க. நான் எனக்கு தெரிஞ்ச சில டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் கிட்ட சொல்லி காட்டன் கேரி பேக் ஆர்டர் வாங்கி கொடுத்தேன். நல்லபடியா அவன் செஞ்சதினால் நிறைய ஆர்டர் வந்தது. இப்ப சமீபத்தில் பெரிய கம்பெனி ஒண்ணு ரொம்ப பெரிய ஆர்டர் கொடுத்திருக்காங்க. அவனுக்கு வங்கி லோன் கிடைக்க ஏற்பாடு செஞ்சு கொடுத்தேன். மேற்கொண்டு சில பொருட்கள் வாங்க ஒரு லட்சம் கொடுத்தேன். அதைத்தான் மாசா மாசம் இப்படி திருப்பி தரான். வட்டி வேண்டாம்னா கேட்க மாட்டேங்கறான். புது புது டிசைன்ல கேரி பேக் தைத்து கொடுத்து ரொம்ப பிரசித்தம் ஆகிட்டான் இந்த ஏரியாவில். ரெண்டு பையன்களுக்கு வேலையும் கொடுத்திருக்கான். ஆனாலும் அவன் அதே பணிவான குணம், நேர்மை இதிலேர்ந்து மாறவே இல்லை. தினமும் அப்பா, அம்மா படங்களை வணங்காமல் வேலையை ஆரம்பிக்க மாட்டான்.
இந்த களத்தில் இப்படி ஒரு நபரையும் நீங்க பாக்குறீங்க இல்லையா?” என்று சொல்லி கந்தவேல் இவர்களைப் பார்த்தான் புன்னகையுடன்.
தணிகாசலம் சொன்னார் “கலியுக களம் இது நல்லா புரிஞ்சு போச்சு கந்தவேல். பத்து நிகழ்வுல ஒண்ணு இல்லை ரெண்டு நல்ல நிகழ்வா இருக்குங்கறதும் தெரிஞ்சது இப்போ!”
ஏலையன் “ஞானசேகரன் போல் மனிதர்கள் இன்னும் இருக்கறதால்தான் கொஞ்சம் நல்லதும் நடக்குது. மழையும் பெய்யுது இந்த கலியுக களத்தில். எல்லாரும் பழகிக்கணும் இந்த களத்தை. ஏன்னா இது இனி மாறப்போவது இல்லை.” என்று உரக்க சொன்னான்.
பில் தொகை போக மீதியை அவனிடம் கொடுத்துக்கொண்டே “மிகவும் அற்புதமா சொன்னீங்க ஐயா” என்றான் கந்தவேல்.
![]() |
பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க... |