கறுப்பியின் இடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2025
பார்வையிட்டோர்: 237 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முடி நரைச்சி கூன் உழுந்தாலும் கெழவன் இரும்பு மாதிரித்தான்’ ரங்கனைப் பற்றி சக தொழிலாளர்கள் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள். 

கடின உழைப்பாளிகளின் உடம்பு இறுகிக் கிடப்பதில் என்ன அதிசயமிருக்கிறது. 

ரங்கன் தேயிலைப் பெட்டிகளைச் சுற்றி சுழற்றித் தூக்கித் தோளில் சுமந்து வண்டிலுக்குள் வீசியெறிவது ஒரு தனி லாவகம். 

கறுப்பி அவனுடைய சொத்து – சுமை நிறைந்த வண்டிலை இழுத்துச் செல்லும் அவனுடைய காளை. 

ரங்கன் கறுப்பியின் வாயினுள் நுழைத்துவிடும் புல் கட்டை சவ்வு சவ்வுன்னு சப்பி கடைவாயிரண்டிலும் எச்சில் வழிந்தோட அது தலை குனிந்து வாலால் கொசு விரட்டிக்கொண்டு பொறுமையுடன் நிற்கும். 

இன்னும் எத்தனை பெட்டிகளோ? 

ஒவ்வொரு பெட்டியும் மடார்மடாரென வண்டிலுக்குள் விழுகின்றபோது வண்டில் ஆட்டம்போடும். பூமியுடன் ஒட்டி நிற்கும் கறுப்பியின் கால்கள் விறைப்படைந்து இறுகும். கழுத்து சுளுக்கிக் கொண்டாற் போல் கடூரமாக வலிக்கும். கடைவாயில் எச்சில் நுரைக்க பீளை கூடு கட்டி கிடக்கும். கண்ணோரத்தில் ஈக்கள் சுற்றிச் சுழன்று பறக்கும். கறுப்பி பொறுமையின் சின்னம். 

ரங்கனுக்கு இதொன்றும் பெருங்கவலையல்ல. பெட்டிகளை அடுக்குவதும் வண்டிலுக்குள் எறிவதுமாக அவன் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பான். 

காளையின் துன்பத்தை உணர்கின்றபோதும் அதற்காகக் கவலைப்பட்டால் வீட்டில் பல உயிர்கள் பட்டினித் துயரத்தில் விழுமே! 

புல் கட்டை வாயில் திணிக்கும் வேளையிலும், புண்ணாக்கைக் கரைத்துக் கொடுக்கும்போதும் பாசம் நெஞ்சில் வழிந்தோட பக்குவமாகச் செய்வான். 

நல்ல வெயில் எரித்துக் கொண்டிருக்கிறது. ரங்கன் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறான். மடார்! மடார்! மடாரென பெட்டிகள் வண்டிக்குள் விழுகின்றன. முப்பது பெட்டிகள் ஏற்ற வேண்டும். நான்காவது பெட்டியைத் தூக்கியபோது இடுப்பு எலும்பை எவரோ சளுக்கென உருவி எடுத்தாற் போல் இருக்கிறது. 

அப்பப்பா! என்ன வலி! முகத்தில் ஆயிரம் சுழிவுகளுடன் முனகினான். ரங்கனுக்கு இடுப்பெலும்பிலும் பிடிப்பு. 

நான்காவது பெட்டியைத் தூக்கக் குனிந்த ரங்கன், சில நிமிடங்கள் குனிந்தபடியே நின்றுவிட்டான். நிமிர முடியவில்லை. இடுப்பெலும்பு முறிந்துவிட்டதா என்ன? ‘ஊவ்’ கடூரமான வலி. 

கறுப்பியின் வால் ஆடுகிறது. 

நிமிராமல் குனிந்தபடியே நின்று பின் தரையில் குப்புற விழுந்துவிட்ட தன் எஜமானனை நோக்கி ம்மே என தீனக்குரல் எழுப்புகின்றது. 


நதிக்கரையோரம். 

சின்னச்சின்ன குடிசைகள் நிறைந்த சேரி சாம்ராஜ்ஜியம். 

ரங்கனின் குடிசை… 

கிழிந்த அழுக்கானதொரு பாயில் படுத்துக்கிடக்கின்றான். பீடித் துண்டு உதட்டே டோரத்தில் புகைந்து கருகுகிறது. வெறித்து நிலைகுத்திய கண்கள், மனத்தில் கவலையில் தோய்ந்துவிட்ட நினைவுகள். 

வாழ்வின் முக்கால் பகுதியை விழுங்கிவிட்ட தொழிற்சாலையை நினைத்தான். தேயிலைப் பெட்டிகளைச் சுமந்து சுமந்தே வாழ்வு கரைசலானது. எனினும் பெட்டிகளைச் சுமந்து தோள்பட்டையில் நைந்த சதைப்பாகங்களின் ஊனத்தின் வடிசல் இன்னும் வற்றவில்லை. 

ஐம்பத்தைந்து வயது வந்தவுடன் தொழிற்சாலையில் அவனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள். சேம் இலாப் ஊதியப் பணம் ஏதோ கொஞ்சம் கிடைத்தது. 

அட ஆண்டவனே! அதை எடுக்க அவன் பட்ட பாடு. மலையைக் கிளறி எலியைப் பிடித்த கதைதான். 

மூன்று பெண் பிள்ளைகள். எப்படியோ கரை சேர்ந்தார்கள். 

இளையவள் கடைசிப் பெண் வாழ்க்கைப்பட்ட ம் மிகவும் கஷ்டமானது. மருமகன் மகாக் குடிகாரன். 

பெண் என்ன செய்வாள்? 

தந்தையிடம் யாசகம் கேட்டு நாலு பிள்ளைகளுக்கும் உண்ணவும் அணியவும் கொடுக்கிறாள். அப்பாவிற்குப் பணம் கிடைத்துவிட்டது என்ற செய்தி காதில் விழுந்ததோ, இல்லையோ தனது பட்டாளத்துடன் பறந்தோடி வந்து குடிசையை ஆக்கிரமித்துக் கொண்டாள். 

மூத்தப் பெண்களிரண்டும் தங்களுக்கு விருப்பமான காதலர்களுடன் சென்றவர்கள். இளையவள் மட்டுமே தாய், “மகள் தந்தை சொற்படி திருமணம் செய்தவள். எங்களோட இருக்கட்டுமே’ என பாக்கியம் சொல்ல, ரங்கனும் தலை அசைத்தான். 

ஒரு குடிசைக்குள் இப்பொழுது எட்டு உயிர்கள். 

பணம் கிடைத்ததும் அதை கன்னாபின்னாவென செலவு செய்யாமல் ஒரு மாட்டையும் வண்டியையும் வாங்கி ஓட்டினால் ஒரு நாளைக்கு ஐம்பது, அறுபது என்று சம்பாதிக்கலாம் என்ற நீண்டகாலத் திட்டம் ரங்கனிடமிருந்தது. 

மருமகனுடன் அடிக்கடி உள்நாட்டு போர் மூளும். சதா சோம்பித் திரிகின்ற அவனைக் கண்டாலே ரங்கனுக்கு அருவருப்பு. 

எருமையின் மீது விழுகின்ற அடிகளைப் போல இவ்வளவு காலமும் பொறுமையுடனிருந்த மருமகனுக்கும் ஒருநாள் ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. புகைத்துக் கொண்டிருந்த பீடித் துண்டை எடுத்தெறிந்து சாரத்தை முழங்காலுக்கு மேலாகத் தூக்கிக்கட்டி தூவென் காறி உமிழ்ந்து காரசாரமான சில வார்த்தைகளைக் கொட்டி ஆண் சிங்கமாக விசுக் விசுக்கென வெளியேறி விட்டான். 

அன்று போனவன் போனவன்தான்! 

பத்தோ, பன்னிரண்டோ ஆண்டுகள் கால மணல் வெளியில் காணாமல் போயின. 

வாசு! 

ரங்கனின் மூத்த பேரப்பிள்ளை. 

அவன் அப்பனைப் போலில்லாமல் படு சமர்த்து. கல்வியில் மிக ஆர்வம் அவனுக்கு. அவனைப் படிப்பித்து நல்ல உத்தியோகக்காரனாக்க வேண்டுமென்பது ரங்கனின் இலட்சியக் கனவானது. 

அடடா! அந்தக் கனவுதான் எவ்வளவு உயிர்ப்பு மிக்கது. 

வாசுவிற்கு இப்பொழுது பதினேழு வயது. சின்னவொரு தென்னந்தருவாக நிற்கிறான். புதுப் பாளை வெடித்து சிறு குரும்பட்டியாக அவன் தோன்றியிருக்கும் இந்நாட்களில்தானா ரங்கன் படுக்கையில் விழ வேண்டும். எத்தகைய துர் அதிர்ஷ்டம்! 

வாசுவின் படிப்பு; ரங்கனின் கனவு; இவையெல்லாம் நீர்க்குமிழ்களாகி விடுமா? 

பாயில் சடலம்போல் கிடக்கிறான் ரங்கன். கண்களில் நீர்த்துளிகள். 

‘ம்மே!’ 

கறுப்பியின் அழைப்போசை. ‘ஆத்துப்பக்கம் கரையோரமா வளர்ந்திருக்கிற நீர்ப்புல்லைத் தின்கிறதுன்னா கறுப்பிக்கு கொள்ளை ஆசை. அங்கெல்லாம் அத கூட்டிப் போக, இல்லேன்னா கொஞ்சம் புல்லை அறுத்துக்கிட்டு வர என்னாலே முடியலியே!’ 

ரங்கன் விசனத்துடன் நினைத்துப் பொருமுகிறான். நெஞ்சம் விம்மி வெதும்பி தகிக்கிறது. 

இருள் விழுந்துவிட்டது. 

நுளம்புகளின் ரீங்காரம் செவிகளில் சலனத்தை உண்டு பண்ணிட பாயில் குப்புறப்படுத்து கவலைக் கடலில் மூழ்கிக் கிடக்கும் ரங்கன் கொட்டிலடியிலிருந்து ‘ம்மே!’ என குரலெழுப்பும் கறுப்பியின் வேதனைக் குரலை நெஞ்சிற்குள் தகிப்புடன் ஈர்க்கிறான். 

‘பேரப்பிள்ளை வாசு கல்வியில் சமர்த்து…’ மனம் பதட்டமுடன் முனகிக் கொள்கிறது. 

சிறியதொரு தேயிலைப் பெட்டி. அதன் மீது கறும் புகைச்சுருளை உமிழ்ந்தவண்ணம் குப்பி விளக்கு எரிகிறது. விளக்கின் பக்கத்தில் புத்தகத்தை விரித்துவைத்து வாசு படித்துக் கொண்டிருக்கிறான். தபஸ் நிலையாக நிழலின் தோற்றம். 

“வாசு!” 

சட்டென நிழலில் ஒரு சலனம். 

“என்ன தாத்தா?” 

“நாளையிலிருந்து ஸ்கூலுக்குப் போறதை நிப்பாட்டிரு….!” 

நிழல் நடுங்குகின்றது. 

நெஞ்சிற்குள் பகீரென அதிர்வலைகள் மின்சாரம் பாய்ச்சிட “தாத்தா!” என்கிறான். 

சாவை நோக்கி நகரும் ஓர் ஆத்மாவின் முணுமுணுப்பாக வாசுவின் ஏக்கமான குரல் கம்மி ஒலிக்கிறது. 

என்ன செய்ய அப்பா! நான் பாயிலே உழுந்துட்டேன். குடும்பபாரத்த இனிமே நீ தானே சொமக்கணும்.” 

“கரத்த ஓட்ட சொல்றீங்களா தாத்தா?” 

“ஆமாடா கண்ணு!” 

ரங்கனுக்கு நாக்கு மரத்து விட்டது; நெஞ்சு சுளுக்கிக் கொண்டது; குழி விழுந்த கண்களிலிருந்து மளமளவென் நீர்த்துளிகள் கொட்டுகின்றன. 

“நா உழுந்துட்டா என்ன? மாடு இருக்கு. வண்டி இருக்கு. ஏண்ட எடத்துலே நீ வரணும். அப்பத்தானே ஒரு நேரமாவது கஞ்சு குடிக்கலாம்…” ரங்கன் என்னென்னவோ பிதற்றிக் கொண்டிருக்கிறான். 

வாசு மௌனமாகவிருந்தான்; புத்தகத்தின் பக்கங்களை அவனுடைய விரல்கள் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. 

“ம்மே!’ 

கறுப்பியின் தீனமான குரல். 

அது யாரை அழைக்கிறது? ரங்கனையா? வாசுவையா? ரங்கனால்தான் முடியாதே. 

வாசு சமர்த்துப்பிள்ளை. அவன் எழுந்துவிட்டான். 


வாசுவிற்கு தொழிலின் ஆரம்பம் கடினமாகவிருக்கிறது. பாரமான தேயிலைப் பெட்டிகளைத் தூக்கும்பொழுது மூச்சுத் திணறுகிறது. கை, கால்கள் நடுங்குகின்றன. சர்வாங்கமும் நடனமாடுகின்றன. தோள், கை, மூட்டு அனைத்திலும் இரத்தக் கசிவுகள். பெட்டியைச் சுற்றி அடித்துள்ள தகர வளையங்கள் சதைகளைக் கிழித்து இரத்தச் சுவை காண்கின்றன. அனைத்தும் சில நாட்கள் தான். பழகிவிட்டது. 

தேயிலைப் பெட்டிகளை அனாயாசமாகத் தூக்கிப் போடுவான். வண்டி நகர்ந்து விழுவதுபோல் குலுங்கும். கறுப்பி ‘ம்மே’ என துன்பக்குரல் எழுப்பும். எத்துணை பாரமாகவிருக்கட்டும் ஐய்! ஐய்! என முதுகில் பிரம்பு விழும்போது அது வேகமாக நடக்கும். 

இன்று இதென்ன நாடகம்? கறுப்பி மறியல் போராட்டம் நடத்துகிறது. 

பாரம் ஏற்றியாகிவிட்டது! சளார் சளாரென பிரம்பு முதுகுத் தோலை உரிக்கிறது. ஐய்! ஐய்! என தொண்டையைக் கிழிக்கிறான். 

அட, கறுப்பி அசைந்தபாட்டைக் காணோம். சட்டென பூமியுடன் படுத்துவிடுகிறது. தேயிலைப் பெட்டிகள் மளமளவென வீதியில் சரிந்தன. 

வாசு வெலவெலத்துப் போனான். மாட்டை குனிந்து பார்த்த கண்களில் திகில் நிழல் படர்கிறது. 

கடைவாயில் வெண்ணுரை பொங்கிப் பிரவாகிக்க, கண்கள் சோர்ந்து பரிதாபகரமாக நீர் சொரிய கறுப்பி அவனை வேதனையுடன் பார்க்கிறது. 

சுமைதாங்க முடியாமல் அதன் முழங்கால்கள் மடங்கிவிட, முன்னங்காலொன்றில் எலும்பு முறிந்துவிட்டது. 

முதுமை மனிதனுக்கு மட்டுமா வருகிறது. 

பாவம் ரங்கன். அவனிடத்தில் வாசுவை வைத்தான். கறுப்பியின் இடத்தில் ஒரு சிவப்பியை வைக்க அவன் எங்கே போவான்? 

பல ஆண்டுகள் சுமை இழுத்து, இன்று முதுமை அடைந்து காலை முறித்துக்கொண்டு நிற்கும் கறுப்பியால் வண்டி இழுக்க முடியுமா? 

– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

கே.விஜயன் கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *