கர்வம் கொண்ட யானை




காட்டில், ஒரு யானை தான்தான் பெரிய ஆள் என்று கர்வம் கொண்டு அட்டகாசம் செய்தது. சிறிய மிருகங்களைக் கண்டால் துரத்திப் பிடித்து, காலால் மிதித்துக் கொல்லும். எனவே, காட்டில் அந்த யானையைக் கண்டால் எல்லா மிருகங்களும் பயந்து நடுங்கின. அதன் தொல்லை அளவு மீறிப் போகவே, எல்லா மிருகங்களும் சிங்க ராஜாவிடம் போய் முறையிட்டன.

சிங்கராஜா நரியை அனுப்பி யானையை அழைத்து வரச் சொன்னார். ஆனால், கர்வம் பிடித்த யானை சிங்கத்தின் அழைப்பை மதிக்கவில்லை.
சிங்கராஜாவும், “பிறகு பார்த்து பேசிக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்.
ஒருநாள், வேட்டைக்காரன் வெட்டிப் போட்டிருந்த குழியில் கர்வக்கார யானை விழுந்து விட்டது. வெளியே வர முடியாமல் கதறியது. யாரும் தனக்கு உதவிக்கு வரமாட்டார்கள் என்று எண்ணியது. அதனால் காடே அதிரும்படி பிளிர ஆரம்பித்தது.
யானையின் அலறல் சத்தத்தைக் கேட்ட சிங்கராஜா, எல்லா காட்டு மிருகங்களையும் அழைத்து, “யானை குழியை விட்டு மேலே வருவதற்கான ஏற்பாட்டை செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்.
ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியுமா? எல்லா மிருகங்களும் வெறுப்புடன் அங்கு சென்றன. புலிகள், வேட்டைக்காரர்கள் வராது காவல் காத்தன. மற்ற எல்லா மிருகங்களும் வேகவேகமாய் குழியில் மண்ணைத் தள்ளி, யானையை மேலே கொண்டு வந்தன.
அதுவரை கர்வத்துடன் திரிந்த யானை, தன்னைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொல்லி, அனைவரிடமும் நட்புடன் பழக ஆரம்பித்தது.