கர்ம பலன்கள்
நம் வாழ்க்கையில் பல அதிசயங்களை நம்மில் ஒவ்வொருவரும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.
அதில் ஒன்று தற்செயல் ஒற்றுமை.
“உன்னைத்தான் நினைத்தேன்… நீ வந்து எதிரில் நிற்கிறாய். உனக்கு நூறு வயுசு என்று நாம் அனைவருமே ஒரு தடவையாவது சொல்லி இருப்போம்.
நினைத்தது நடப்பதில்லை. நடப்பது மிகவும் கஷ்டம் என்று நாம் நினைக்கும் சில காரியங்கள் மிக எளிதாக நடக்கிறது. நாம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொருளை, அதைப்பற்றி பேசி வாங்க முடிவு செய்தபோது, அதே பொருளை ஒருவர் பரிசாகத் தருகிறார்.
இதைத்தான் தற்செயல் ஒற்றுமை என்கிறோம். நம்ப முடியாத பல தற்செயல் ஒற்றுமைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் இது…
பிரபல ஆங்கில மாத இதழான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் சிறந்த கட்டுரைகளை மட்டுமே அது வெளியிடும். அதுவும் ஒவ்வொரு சம்பவமும், தகவலும் நன்கு சரி பார்க்கப்பட்ட பிறகே!!
அதில் ஒரு அற்புதமான கட்டுரை கர்மபலன் சம்பந்தப்பட்டது. அதில் வரும் சம்பவம்தான் இது…
மார்செல் என்பவர் ஹங்கேரியில் பிறந்தவர். பிழைப்புக்காக நியுயார்க் குடியேறி ஒரு போட்டோகிராபராக வாழ்ந்து வந்தார். அவரது தினசரி வாழ்க்கை மிகவும் வழக்கமான ஒன்று.
வீட்டிலிருந்து ஐந்தாம் அவென்யூவில் உள்ள தன் அலுவலகத்திற்குச் சென்று அங்கு எட்டு மணி நேரங்கள் உழைத்துவிட்டு, திரும்பவும் வீடு வந்து சேர்வது என்பதுதான் அவரது வழக்கம்.
1948 ம் ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி வயதான மார்செல் வழக்கம்போல சரியாக 9.05க்குக் கிளம்பும் ஐலேண்ட் ரெயில்ரோட் புகைவண்டியில் ஏறி உட்சைடு என்ற அவரது இடத்க்குப் போயிருக்க வேண்டும்.
ஆனால் அன்று அவருக்குத் திடீரென ப்ருக்ளினில் இருக்கும் தன் நண்பரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆகவே ப்ருக்ளின் செல்லும் ரயிலில் ஏறி தன் நண்பரின் இல்லத்திற்குச் சென்று அவருடன் அளவளாவினார். பின்னர் மறுபடியும் ரயில் நிலையத்துக்கு வந்து அலுவலகம் செல்லும் ரயிலில் ஏறினார்.
ரயிலில் ஒரே கூட்டம். உட்கார இடம் கிடைக்கவில்லை. அப்போது அடுத்த ஸ்டேஷனில் இறங்க வேண்டிய ஒருவர் எழுந்து நின்றார். உடனே சட்டென்று அந்த இடத்தைப் பிடித்து மார்செல் அமர்ந்து கொண்டார்.
போட்டோகிராபருக்கே உரித்தான இயல்புடன் தனக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவரின் முகத்தைப் பார்த்தார். அவருக்கு சுமார் நாற்பது வயது இருக்கும். ஒருவிதமான சோகம் அவர் கண்களில் தளும்பிக் கொண்டிருந்தது.
அவர் ஹங்கேரிய மொழியில் வரும் செய்தித்தாள் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். தனது தாய்மொழியில் இருக்கும் பேப்பரைக் கண்டு ஆனந்தம் அடைந்த மார்செல் உடனே அவரிடம் அதைச் சற்றுத் தருமாறு ஹங்கேரிய மொழியில் வேண்டினார். அவருக்கு ஒரே ஆச்சர்யம். அமெரிக்காவில் தன்னிடம் ஹங்கேரிய மொழியில் பேசும் ஒருவரா?
அடுத்த அரைமணி நேரப் பயணத்தில் தன்னுடைய சோகக்கதை முழுவதையும் மார்செல்லிடம் அவர் கொட்டிவிட்டார்.
அவரது பெயர் பாஸ்கின். அவர் சட்டம் படிக்கும் மாணவராக இருந்தபோது இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானது. அரசு அதிகாரிகள் அவரைப் பிடித்து, இறந்த ஜெர்மானியர்களைப் புதைப்பதற்காக உக்ரேனில் இருந்த முகாமுக்கு அனுப்பிவிட்டார்கள்.
யுத்தம் முடிந்தவுடன் பல நூறு மைல்கள் நடந்து சென்று ஹங்கேரியில் இருந்த டேப்ரேசன் என்ற தன் சொந்த ஊருக்கு வந்த பாஸ்கின், தன் வீட்டிற்குச் சென்றபோது அதிர்ந்து போனார். அங்கே அவரது தந்தை, தாயார், சகோதர சகோதரிகள், அருமை மனைவி யாரையுமே காணவில்லை.
அங்கே இருந்தவர்களுக்கு பாஸ்கின் குடும்பம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. மலைத்து நின்ற பாஸ்கினை நோக்கி வந்த ஒரு வயதானவர், “பாஸ்கின், உங்கள் வீட்டில் இருந்த அனைவருமே இறந்து விட்டனர்… நாஜிக்கள் உங்கள் மனைவியை மட்டும் அசுவிச் சித்திரவதை முகாமுக்கு கொண்டுசென்று விட்டனர்…” என்று கூறினார். சோகத்தோடு பாரீஸ் திரும்பிய பாஸ்கின் 1947 அக்டோபர் மாதம் நியுயார்க் வந்து சேர்ந்தார்.
இந்தக் கதையை கேட்டுக் கொண்டிருந்த மார்செலுக்கு திடீரென்று தான் சமீபத்தில் சந்தித்த ஒரு பெண்மணியின் நினைவு வந்தது. அந்தப் பெண்மணியும டேப்ரேசனைச் சேர்ந்தவர்தான். அவரது உறவினர்கள் நச்சு வாயு சேம்பர்களில் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். அசுவிச்சில் ஜெர்மானிய ஆயுத பேக்டரியில் கைதியாக வேலை பார்த்துவந்த அவரை யுத்த முடிவில் அமெரிக்கர்கள் விடுவித்தனர்.
பாஸ்கினிடம், “உங்கள் மனைவியின் பெயர் மரியாவா?” என்று மார்செல் கேட்டபோது, பாஸ்கின் ஆச்சரியப்பட்டு திடுக்கிட்டார். அது எப்படி முகம் அறியாத ஒருவருக்குத் தன் மனைவியின் பெயர் தெரிந்தது?
அடுத்த ஸ்டேஷனில் பாஸ்கினை இறங்கச் சொன்னார் மார்செல். ஒரு போன் பூத்திற்குச் சென்று, தனது டயரியைப் பார்த்து ஒரு போன் நம்பரை டயல் செய்தார். மரியாவிடம் அவரது கணவரின் அடையாளங்களைக் கேட்டார். பாஸ்கின்தான் அவரது கணவர் என்று உறுதிப் படுத்திக்கொண்ட மார்செல், போனை பாஸ்கினிடம் தந்து, “உங்கள் மனைவியிடம் பேசுங்கள்” என்றார்.
வாயடைத்துப்போன பாஸ்கின் சில நிமிடங்கள் அப்படியே நின்றார்.
பிறகு தன் மனைவியுடன் உருக்கமாகப் பேசி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பின்னர் ஒரு டாக்ஸியில் பாஸ்கினை ஏற்றி மனைவியிடம் செல்லுமாறு கூறிய மார்செல், தம்பதிகள் இணையும் புனிதமான தருணத்தில் தான் இருப்பது அழகல்ல என்று விளக்கி பாஸ்கினை மட்டும் அனுப்பினார்.
“இப்போதுகூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று என்னால் நம்பமுடியவில்லை…” என்று கூறும் மார்செல் சம்பவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசுகிறார்.
தன் நண்பரைப் பார்க்க வேண்டும் என திடீரென்று அவருக்கு ஏன் தோன்ற வேண்டும்? அந்தக் குறிப்பிட்ட ரயிலில் ஏன் ஏற வேண்டும்? அதில் ஒரு இருக்கை தனக்கு மட்டும் ஏன் கிடைக்கவேண்டும்? அருகில் இருந்தவர் அந்தக் கணத்தில் ஏன் ஹங்கேரியப் பேப்பரைப் படிக்க வேண்டும்? இப்படி ஏராளமாக தொடர்ந்து நடந்த அதிசயங்களை நினைவு கூர்கிறார்.
இறைவனின் வழி தனிவழி என்று முடிகிறது கட்டுரை…
கர்ம பலன்கள் தவறாது அந்தந்த கணத்தில் உரியவரை வந்து அடையும் என்பதைக் காட்டும் இந்தச் சம்பவம் உண்மையில் நடந்தது!! ஆனால் நம்மில் பலருக்கு இதுபோன்ற அதிசயச் சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
அதில் உள்ள அபூர்வமான நிகழ்வுகளை இனம் காணும் மனோபாவம்தான் நம்மில் பலருக்கு இல்லை. ஒருவேளை அப்படி இனம் காணும் சிலருக்கும் அவற்றைக் கர்ம பலன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தெரியவில்லை.
ஒவ்வொருவரும் தனது வாழ்வில் நிகழும் சம்பவங்களை அன்றாடம் இரவு படுக்கப்போகும் முன்னர் அலசினால், கர்ம பலன்களின் ரகசியத்தை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்.