கரண்டு
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராமசாமி நாயக்கருக்கு கோவம். அண்டகடாரம் முட்டியது. ‘பம்ப்செட் ரூமை’ சுற்றிச்சுற்றி வந்தார். இன்னதுதான் செய்வதென்று தெரியவில்லை.
“சவத்துப் பயலுக்குப் பிறந்த பயல்கள்” என்று சொல்லி, பல்லை நெறுநெறுத்தார். கண்கள் கோவப்பழத்தைவிட நிறம் கொஞ்சம் கம்மி யாக இருந்தது. மழுங்கச் சிரைத்திருந்ததால் உதடுகள்மட்டுமே துடித்தன. வானத்தை அண்ணாந்து பார்ப்பதும் பக்கத்தில் பார்ப்பது மாக நிலைகொள்ளாமல் தவித்தார்.
விறுவிறு என்று ரெண்டே எட்டில் சமீபத்திலிருக்கும் ‘டிரான்ஸ் பார்மருக்கு’ப் போய்…. பல தடவை, அதில் கரண்ட் வரவழைக்கும் ‘வித்தை’யைப் பார்த்திருக்கிறார். “படுபாவிப் பயல்கள்; இன்னும் கொஞ்சநேரம் கரண்டு கொடுத்தால் என்ன; கொள்ளையா போகிறது” என்று சொல்லி மண்வெடடியை நங்கென்று ஓசை எழ விட்டெறிந்தார். விட்டெறிந்த அந்தத் திசையில் தெய்வாதீனமாகவும் அதிர்ஷ்ட வசமாகவும் நமது மேன்மைதங்கிய மின்சார அமைச்சரோ அல்லது மின்சாரபோர்டு கனம் மெம்பர்கள் யாராவதோ இல்லை, இருந்திருந் தால் துரதிர்ஷ்டவசமாக ஒரு சிறந்த அமைச்சரையோ, நிர்வாகம் தெரிந்த ஒரு மெம்பரையோ நம் மாநிலம் இழந்து ஒரு ஈடுசெய்ய முடியாத மாபெரும் நஷ்டத்துக்குள்ளாகி இருக்கும்.
ராமசாமி நாயக்கர் என்ற பெயருள்ள அந்த விவசாயி தன்னுடைய நாலு ஏக்கர் தோட்டத்தில், சோளம் முளைக்கட்டி இருந்தார். தொடர்ந்து, தண்ணீர் பாய்ச்சினால்தான்; இல்லையென்றால் எறும்பு கள் தானியத்தைக் கூட்டிவிடும். மேலும் நாட்கள் வித்தியாசத்தால் கதிர் ஒன்றுபோல் வந்து வாங்காது, உற்பத்தி பெருகாது. நாயக்கருக்குக் கோபம் வரத்தானே செய்யும் பின்னே?
கரண்ட் வினியோகத்திற்கு இங்கே, ‘ஷிப்ட்டு’ முறை என்று ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். ஒரு வாரம் மத்தியானம்வரை கரண்ட், அடுத்த வாரம் மத்தியானத்துக்குமேல் கரண்ட், இடையில் வாரத்தில் ஒருநாள் மின்சாரம் நின்றுவிடும்; அதற்கும் லீவு வேண்டுமல்லவா?
அணைகளில் தண்ணீர் பொங்கி வழிந்தாலும் ஷிப்ட்டுதான். நாற்பதுநாள் அடைப்புப் பிடித்து மழை கொட்டினாலும் விவசாயத் துக்கு ஷிப்ட்டுதான். இந்தக் கரண்டை என்னதான் செய்கிறார்களோ தெரியவில்லை.
கொஞ்ச வருசங்களுக்கு முன்னெல்லாம் நாயக்கர் நிம்மதியாக பூவரசுமரத்து நிழலில், சுகமாக கமலை வண்டியின் ஒலி ஏற்ற இறக்கங் களுக்கு இசைய வடத்தின்மேல் ஒருக்களித்து உட்கார்ந்துகொண்டு தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தார். “நாட்டுப் பாடல்களை” வாய் விட்டுப் பாடி ஆனந்தித்திருந்தார்.
ஒருநாள் அவரிடம் வந்து ஏழு கையெழுத்துக்கள் வாங்கினார்கள். எல்லாம் இங்கிலீஷில் அச்சடித்திருந்தது.
இரண்டாயிரம் ரூபாய் செலவழித்து, பம்புசெட் ரூமும் நிறுவினார் நாயக்கர். அந்த நாளை மறக்கவே முடியாது. பச்சை நிறத்தில் ஒரு பித்தான். அதை அமுக்கவேண்டும். டுவைங்ங்ங்… வெளியே வந்து பார்த்தால் சர சர சரவென்று குழாய்வழியாகத் தண்ணீர் வழிந்து கொட்டுகிறது. ‘அடேயப்பா; என்ன அதிசயம்; கமலையில்லை, மாடு இல்லை, மாயமாக வந்து விழுதே தண்ணீர்!”
“சூச்சம்; சூச்சம்; வெள்ளைக்காரன் சூச்சம்!;”
வீட்டிலிருந்து மோர், பழம், சர்க்கரையெல்லாம் வரவழைத்து அங்கிருந்த எல்லோருக்கும் வினியோகித்தார் நாயக்கர்.
கரும்பை தலைகீழாக வைத்துத் தின்றுகொண்டு வருகிறமாதிரி காரியாதிகள் வரவர சப்பென்றுகொண்டு வந்தது. இவர் பம்ப்செட்டை ஓட்டினாலும் சரி ஓட்டாவிட்டாலும் சரி வருஷத்துக்கு நூத்தி அறுபது ரூபாய் கட்டியாகவேண்டும். எவ்வளவு ஓட்டினாலும்..”உக்கிக் கரணம்” போட்டாலும்… மொத்தம் அறுபது ரூபாயிக்குமேல் இவரால் ஓட்ட முடியாது. நூறுரூபாய் வருஷக் கடைசியில் மொத்தமாகக் கட்ட வேண்டும். இப்படிப் பத்து வருஷம் கட்டியாக வேண்டும்.
“நான் கரண்ட் போட்டதுக்கு இது அபராதம் ஐயா! நான் கரண்ட் போட்டதுக்கு அபராதம்…” என்று சொல்லிக்கொண்டே, பணம் கட்டுவார் நாயக்கர்.
மாதாமாதம் பில் ரூபாயை அவர்கள் வந்து வாங்குவார்களா? மாட்டார்கள். ஒவ்வொரு மாதமும் செலவழித்து கோவில்பட்டி போய் தான் கட்டவேண்டும். அங்கே போனவுடன் பில்லுக்கு ரூபாய் வாங்கிக் கொள்ள நாம் என்ன வச்ச ஆளா.
“அய்யா வந்தீரா, வாரும் போர்டைப் பார்த்தீரா, பாரும். இது பில் கலெக்டரின் இளக்காரமான குரல்.
“திங்கட்கிழமை வரணுமண்ணு எழுதியிருக்கா? போரும்”
“திங்கட்கிழமை சந்தை தினம்; கார் கிடைக்காதே”
“ஆமா, கிடைக்காது; அதுக்கு நாங்க என்ன செய்ய?”
திங்கட்கிழமை நடக்கும் ரண்டாவது காட்சி – ;
“திங்கட்கிழமைதான் வந்தீரே, காலாகாலத்தில் வரப்படாதா” “ஐயா, நான் என்ன செய்வேன்; கார் கிடைக்கலை நேரமாயிருச்சி; கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க, ஐயா, ஐயா.”
“மூச்! அந்த சோலியே வச்சிக்கிடப்படாது; போயிட்டு, வாரும்”
“ஐயா…ஐயா……”
“எனக்கு டிரஷரிக்கு நேரமாச்சி; அடுத்த திங்கட்கிழமை வாரும்………நகரும்.”
மின்சார இலாகாவினர், இந்த – கரண்ட் உபயோகிக்கும் விவசாயி களை, ‘கன்ஸுமர்கள்’ என்று அழைக்கிறார்கள். இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா! ‘நாய்க்குப் பிறந்த பயல்கள்’ என்று அர்த்தம்!
நாள் முழுவதும் கரண்ட் வேண்டும் – சோளம் முளைக்கட்ட தற்காலிகமாவது நாள்பூராவும் கரண்ட் வேண்டும் என்று ஒரு மனு எழுதிக்கொண்டு ராமசாமி நாயக்கர் கோவில்பட்டிக்கு வந்தார்.
முதலில் ஒரு குட்டி அதிகாரியைப் பார்த்தார். ‘பாச்சா, பலிக்க’வில்லை. அதற்கும் கொஞ்சம் பெரிய அதிகாரியிடம் போனார்.
காக்கிக் கால்சட்டையைப் போட்டுக்கொண்டு,பப்ளிமாஸ் கன்னங்களோடு ஆள் கடோர்கஜன்மாதிரி வீற்றிருந்தார் அந்த அதிகாரி.
மனுவை வாங்கி, பார்க்காமலேயே “என்ன?” என்று எரிச்சலோடு கேட்டார்.
“நோ, நோ, முடியாது, எங்களுக்கு மேலே இருந்து ஸ்டிக்டா ஆடர் வந்திருக்கு” என்று தலையை பலமாக, குலுக்கிவிட்டார்.
இதுக்கும்மேலே அதிகாரி ஒருவர் இருந்தார். அவரையும் பார்ப்பது என்று மனு ஏந்திப் புறப்பட்டார் நாயக்கர்.
இவர் போன அந்த வேளையில் அந்த அதிகாரி ஒரு பெரிய பிளாஸ்க்கிலிருந்து காப்பியை ஊற்றி ஊற்றி அண்ணாந்து குடித்துக் கொண்டிருந்தார். அப்படி அண்ணாந்து குடித்துக்கொண்டிருக்கும் போது அவருடைய தொண்டையின் மத்தியிலுள்ள மேடான உருண்டை ஒன்று மேலுங்கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அந்த அதிகாரிக்கு நீண்ட மூக்கோடு கூடிய ஒல்லியான உடம்பு. தலை தும்பைப் பூவாக நரைத்திருந்தது.
ஒரு மனிதன் வந்து பக்கத்தில் நின்று கொண்டிருப்பது அவருக்குத் தெரியும். பார்க்காமலேயே தெரியும். அதிகாரிகளாக இருந்து பழக்க முள்ளவர்களுக்குத்தான் இப்படிப் ‘பார்க்க’த் தெரியும்.
கேவலம் மனிதன் பக்கத்தில் வந்து நிற்கிறான்; புலி வந்து அப்படி நின்றால் பார்க்காமல் இருக்கமுடியுமா; அதிகாரி பத்திரிகை படிக்க ஆரம்பித்தார்.
அந்த அறையில், சுவர்க்கடிகார பெண்டுலத்தின் சப்தத்தைத் தவிர ஒன்றுமில்லை. ஏகதேசம், காற்று உள்ளே நுழைந்து தாள்களை சட சடத்து அலுக்கிவிட்டுச் செல்லும். மனிதனை மனிதன் பணிய வைக்கும் இந்த மௌனம் அதிகாரிக்கு திருப்தியாகவும் விவசாயிக்கு துன்பமாகவும் இருந்தது.
ஏக்கம் நிறைந்த பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு நாயக்கர் பூனை போல அடியெடுத்து வைத்துத் திரும்பினார். பத்திரிகையிலிருந்து தன் முகத்தை ஒரு பொம்மைபோல் திருப்பி, ‘என்ன வேண்டும்?” என்று கேட்டார்; மனு நீட்டப்பட்டது.
வாங்கி அதன்மேல் ஒரு கல்லைத் தூக்கி வைத்து அதை சமாதி பண்ணினார் அதிகாரி.
‘ஜன்னல் வழியாகப் பார்வையை வெளியே விட்டுக் காதை கன்ஸுமர்’ பக்கம் காட்டி, விஷயத்தைக் கேட்டுகொண்டதுமாதிரி தலையை ஆட்டி’,
“போம், போம்! பதில் வரும்” என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி பத்திரிகையில் ஆழ்ந்துவிட்டார்.
ராமசாமி நாயக்கரை யாரும் அவமானப்படுத்தவில்லை. அவமானப்படுத்தியிருந்தாலும் அவருக்கு ஒரு நிம்மதி பிறந்திருக்கும். தலை கவிழ்ந்து தரையைப்பார்க்க, மெதுவாகப் படியிறங்கி ரோட்டுக்கு வந்தார்.
பகல் சினிமா காட்சி விட்டு ஜனங்கள் வந்துகொண்டிருந்தனர். அந்த ஊரிலுள்ள மூன்று சினிமாக் கொட்டகைகளிலும் தினம் தினம் மும்மூன்று காட்சிகள் நடக்கும். பஜார் வழியாக நாயக்கர் நடந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கடையில் பகல் வெளிச்சத்திலேயும் லைட் எரிந்து கொண்டிருந்தது. ரேடியோக்கள் ‘போட்டி போட்டு’ பாடிக் கொண்டிருந்தன; ரைஸ்மில்கள் கூடத்தான்.
நாயக்கர் நடந்தே திரும்பி ஊருக்கு வரவேண்டும். அவர் இன்னும் நகரத்தின் மையத்தைத்தான் தாண்டி இருக்கிறார்; பையப் பைய இருள் பரவ ஆரம்பித்தது; ஜில்லென்று நகரமே மின்சார ஒளிவிளக்கில் மூழ்கிப் பிரகாசித்தது.
விளம்பர அலங்கார ஒளி எழுத்துக்கள். அவைகளில்தான் எத்தனை கலர்கள்; அணைந்து அணைந்து தானாகப் பொருந்திக் கொள்ளும் பல்புகளின் சரவரிசை வேறு; ஒரு, தெய்வலோகமாகக் காட்சி அளித்தது நகரம்.
எவ்வளவு பிரகாசம் வெளியில் இருந்ததோ, அவ்வளவு மன இருட்டில் புழுங்கித் தவித்தார் நாயக்கர்.
தண்ணீரில் விழுந்த கோழி, கரையேறி தன் இறக்கைகளை சட சடவென்று அடித்து உதறுவதுபோல், நாயக்கர் தன் மனதைக் கவ்வியி ருந்த கோழைத்தனமான எண்ணங்களை உதறி எறிந்தார். வேஷ்டியை அவிழ்த்து இறுகக் கட்டித் தார் பாய்ச்சினார், கால்களை அகலப் பரப்பிக்கொண்டு மேல்த்துண்டை உதறி, அழுத்தமாகத் தலையில் லேஞ்சி கட்டிக்கொண்டு டிரான்ஸ்பார்மரை நோக்கிப் போனார்.
ஒன்றையும் தொடாமலேயே அவருக்கு ஒரு “ஷாக்” அடித்தது. செய்யவேண்டிய காரியம் இது அல்ல; அது இதைவிட முக்கியமானது என்று தோன்றியது. தன் சக விவசாயிகளை நோக்கி நடந்தார்!
– சாந்தி, ஏப்ரல் 1962.
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |