கன்றைக் கொன்ற பசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 897 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாபரை எதிர்த்து நின்ற சிங்கம், சித்தூர் ராணா ஸாங்கா இறந்துவிட்டான். மந்திரிகளால் விஷம் இட்டுக் கொல்லப்பட்டான். என்ற வதந்தி உலவி வந்தது. அவனுடைய மூன்றாவது மகன் ரத்னா பட்டத்திற்கு வந்தான். ரத்னாவுக்குப் பின்பு அவனுடைய சகோதரன் விக்கிரமஜித் சித்தூர் சிம்மாஸனம் ஏறினான். ராணா விக்கிரமஜித் உயர்குலத்து ராஜபுத்திரத் தலைவர்களுக்கும் பிரபுக்களுக்கும் உரிய மரியாதைகளையும் வெகுமதிகளையும் சாதாரணப் போர் வீரர்களுக்கு அளித்ததால் வெகுசீக்கிரம் செல்வாக்கு இழந்தான். பெரும் பிரபுக்களை அரச சபையிலேயே அவமரியாதையாக நடத்த ஆரம் பித்தான். போர்ச் செருக்கு வாய்ந்த ராஜபுத்திரத் தலைவர்களால் இதைப் பொறுக்க முடியவில்லை. ஆகையால் அவனைச் சிம்மாசனத்தினின்றும் நீக்கினார்கள். ராணா ஸாங்காவினுடைய கடைசிப் புத்திரன் உதயசிங் ஆறு வயசுப் பாலகனாக இருந்தான். டில்லியில் மொகலாய வம்சம் வேரூன்றிவிட்டது. அவர்களுடைய கண்ணுக்குச் சித்தூர் கறுப்பாக இருந்தது. இத்தகைய காலத்தில், ஒரு பச்சைப் பாலகனைச் சிம்மாசனம் ஏற்றுவது அறிவுடைமை ஆகாது. ஆகையால், பிரிதிவிராஜனுடைய ஆசை மகனாகிய பன்பீரைச் சிம்மாசனம் ஏற்றினார்கள். 

பன்பீர், முதலில் ராஜ பதவியை வேண்டாமென்று மறுத்தாலும், சிம்மாசனத்தில் உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே, அதன் சொகுசு தென்பட்டுவிட்டது. அதை விடுவதற்கு அவனுக்கு மனம் இல்லை. அந்தச் சுகத்தைத் தன் வாழ்க்கை முழுவதும் அநுபவிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இரவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தான். கொலைகாரன் சூரியனுக்கு அஞ்சுவது போல் கடவுளுக்குக்கூட அஞ்சுவதில்லை. இருளும் கொலையும் சகோதரர்கள். ஆகையால் ஒன்றின் குற்றத்தை மற்றொன்று வெளிப்படுத்தாது என்று கொலைகாரன் நினைக்கிறான். 

2 

இரவு வந்தது. தாதி பன்னா உதயசிங்குக்குப் பாலும் சாதமும் ஊட்டித் தொட்டிலில் படுக்க வைத்தாள். தனக்கு வரப்போகும் அபாயத்தைக் கொஞ்சமும் அறியாத குழந்தை தூங்கியது. திடீரென்று அந்தப்புரத்தினின்றும் பெண்களின் அழுகைக் குரல் கேட்டது. தாதி திடுக்கிட்டு விழித்தாள். ராஜகுமாரன் சாப்பிட்ட மீதத்தை வாங்கிக்கொண்டு போவதற்கு அரண்மனை நாவிதன் அறைக்குள் நுழைந்தான். 

“ஏன் இந்தக் கூக்குரல்?” என்று மெல்லிய குரலில் பன்னா பயத்துடன் நாவிதனைக் கேட்டாள். 

“உனக்குத் தெரியாதா? அந்தக் கொலைகாரப் பாவி பன்பீர், ராஜா விக்கிரமஜித்தைக் கொன்று விட்டான்” என்றான் நாவிதன். 

“நிஜமாகவா?” 

“ஆம்.” 

பன்னாவின் மனத்தில் திடீரென ஒரு பயங்கர எண்ணம் குடிகொண்டது. அவள் உடம்பெல்லாம் நடுங்கியது. பன்பீரின் ரத்த தாகம் ஓர் உயிரோடு தணியாது என்று நினைத்தாள். அடுத்தாற்போல் பச்சைக் குழந்தை உதயசிங்கின் உயிருக்கு ஆபத்து வரும் என்பது அவளுக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. அவள் உதயசிங்கின் தாதி .ராஜகுமாரனின் உயிர் அவளிடத்தில் ஒப்பிக்கப் பட்டிருந்தது. அவனைக் காப்பாற்றுவது அவளுடைய கடமை. பன்பீரோ கொடிய மூர்க்கன். அவனுடைய கரங்களினின்றும், ஸாங்கா விருக்ஷத்தின் கடைசிக் கிளையை எங்ஙனம் காப்பாற்றுவது? சிங்கத்தின் குட்டி சிங்கம் என்பார்கள். ”மொகலாயச் சேனையைத் தோற்கடிக்காமல் சித்தூரில் நுழையமாட்டேன்.” என்று சபதம் செய்த ராணா ஸாங்கா, அதை நிறைவேற்றுவதற்குள் இறந்துவிட்டான். அந்தச் சபதம் இன்னும் நிறைவேறவில்லை. அதற்குள் ராணாவின் குலவிளக்கை அவிய விடுவதா? ஒருகாலும் கூடாது என்று தீர்மானித்தாள். 

நாவிதனிடத்தில் ஒரு பழக் கூடையைக் கொடுத்து, “இதைப் பத்திரமாகக் கோட்டைக்கு வெளியில் கொண்டுபோய், நதிக்கரையில் காத்துக்கொண்டிரு; நான் கூடிய சீக்கிரம் வருகிறேன்” என்றாள். 

3 

ரத்தம் ஒழுகும் கத்தியுடன் பன்பீர் அறைக்குள் நுழைந்து, “எங்கே உதயசிங்?” என்று உறுமினான். பன்னாவிற்கு வயிற்றில் தீப்பற்றியது. என்ன செய்வாள்? பதில் சொல்ல அவளுடைய உள்ளம் மறுத்தது; வாய் மறுத்தது; கண் மறுத்தது; கை மறுத்தது; அவளது ஒவ்வோர் அங்கமும் மறுத்தது! தன்னிடத்தில் ஒரு கத்தி இருந்தால், இந்தக் கொலைகாரனை ஒரே குத்தில் கொன்றுவிடலாமே என்று நினைத்தாள். அதற்குள் பன்பீர் மீண்டும் கர்ஜித்தான்: “எங்கே உதயசிங்?” 

“அதோ” என்று சொல்ல வாயெடுத்தாள். வார்த்தை தொண்டையிலேயே விக்கிக்கொண்டது. கை மட்டும் நடுங்கிக்கொண்டே தொட்டிலைக் காட்டியது. 

மூர்க்கன் தொட்டிலை அணுகினான். கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. கொலையும், பேராசையும், கோபமும் பன்பீர் முகத்தில் குடி கொண்டிருந்தன. கோபி குருடன்! அவனுடைய கத்தி, அந்தப் பச்சைக் குழந்தையின் மார்பில் பாய்ந்தது. 

பன்னா ஓ வென்று அலறினாள். இந்தக் கொடுந் தொழிலை அவளால் பார்க்க முடியவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டாள். :ஸாங்காவின் கடைசிப் புத்திரனும் இறந்துவிட்டான்; ராணாவின் வம்சம் அழிந்தது; பெயர் சொல்ல ஒரு பிள்ளைகூட இல்லையே!” என்று அந்தப்புர ஸ்திரீகள் எல்லோரும் ஓலமிட்டு அழுதார்கள். எல்லோரின் துக்கத்தைக் காட்டிலும் பன்னாவின் துக்கம் அளவுகடந்ததாக இருந்தது. விம்மி விம்மி அழுதாள். குழந்தையின் அருமை பெற்று வளர்த்த அவளுக்கு அல்லவா தெரியும்? அவ்விரவே அவசர அவசரமாக அதற்கு அந்திமக் கிரியைகளைச் செய்து முடித்துவிட்டுப் பின்பு நாவிதனைச் சந்திக்க ஓடினாள். 

நாவிதன் பழக் கூடையைத் தூக்கிக்கொண்டு கோட்டை வாசலைக் கடந்து வெளியேறினான். சிறிது தூரம் சென்றதும், கூடையிலிருந்த பழம் அழ ஆரம்பித்தது! நாவிதன் திடுக்கிட்டு நின்றான். பழம் அழுகக் கண்டிருக்கிறான்; ஆனால் அழக் கேட்டதில்லை. ஆகையால் ஆச்சரியத்துடன், கூடையை இறக்கிப் பார்த்தான். என்ன அதிசயம்! உதயசிங் கால்களை உதறி அழுது கொண்டிருந்தான். அரண்மனை மெத்தையின் சுகம் பழக்கூடையில் வருமா? 

சிறிது நேரத்திற்குப் பின் பன்னா வந்து சேர்ந்தாள். நாவிதன் வெகு ஆச்சரியத்துடன், “அந்தக் கொலைகாரனுக்கு என்ன பதில் சொன்னாய்?” என்று கேட்டான். 

“என் மகனைக் காட்டினேன்.” 

“பன்னா!” 

“ஆம்.” 

”பாவி! கொன்றுவிட்டானா?” 

“ஆம்.” 

அவளுடைய கண்களினின்றும் கண்ணீர் மாலை மாலையாக வடிந்தது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “என் ராணா! என் செல்வம்!” என்று உதயசிங்கைத் தூக்கி முத்தமிட்டாள். 

5 

பன்னாவின் கடமை இதனுடன் முடிந்துவி… வில்லை. ராஜபுதனப் பாலைவனத்தில், பசி என்றும் தாகம் என்றும் பாராமல், உள்ளங்கால் வெள்ளெலும் போட, ராஜகுமாரனைத் தூக்கிக்கொண்டு, ஊரூராய்க் கடந்து சென்று கடைசியில் தியோலாவை அடைந்தாள். அதை அந்தக் காலத்தில் ஆண்டு கொண்டிருந்த சிங்ராவின் தகப்பன், சித்தூருக்காகத் தன் உயிரைக் கொடுத்த வீரன். அவனிடத்தில் தன் விருத்தாந்தம் முழுவதையும் சொல்லி, உதயசிங்கை ஒப்பித்தாள். தந்தையின் வீரம் மகனிடத்தில் இல்லை. பன்பீரின் கொடுங்கோலுக்கு அஞ்சி, அரசகுமாரனுக்கு அடைக்கலம் மறுத்தான். 

பின்னர் பன்னா டாங்கர்பூருக்குச் சென்றாள். அவ்வரசனும் உதவி செய்ய் மறுத்தான். ஆனால் பன்னா சிறிதேனும் மனம் தளரவில்லை. எங்ஙனமாயினும் ராணாவின் புத்திரனை, வயசு வரும் வரையில் மறைவாக வைத்திருந்து, சித்தூருக்கு ராஜாவாக்க வேண்டுமென்று தீர்மானித்துவிட்டாள். ஆகையால் ஏடூர வழியாக அராவலி மலைக் கணவாய்களைக் கடந்து, நெடுந்தூரம் சென்று,இறுதியில் கோமல் மீர் அடைந்தாள். அஸ்ஸா ஸா என்பவன் அந்த நகரின் கவர்னர். அவனிடம் சென்று, உதயசிங்கை அவன் மடியில் வைத்து, “இவன்தான் உம்முடைய ராஜா! இவனைக் காப்பாற்றும்” என்றாள். அஸ்ஸா ஸா உல்லாசப் பூங்காவில் தன் தாயுடன் ஏதோ பேசிக்கொண்டு அமர்ந்திருந்தான். இப்படித் திடீரென்று பைத்தியக்காரி போலக் கிழிந்த ஆடையும், தூசுபடிந்த மேனியுமாக ஒருத்தி வந்து ஒரு குழந்தையைத் தன் மடியிலிட்டு, இவன்தான் உம்முடைய ராஜா என்றதைக் கேட்டு அவன் திடுக்கிட்டு விட்டான். 

“யார் நீ, பைத்தியம்!” என்பது போலப் பன்னாவைப் பார்த்தான் 

பன் பன்பீரின் கொடூரத்திற்குத் தப்பி வந்த விவரத்தையும், அந்தக் குழந்தை தான் ராணா ஸாங்காவின் கடைக்குமாரன் உதயசிங் என்பதையும் சொன்னாள். 

பன்பீர் ராணா விக்கிரமஜித்தையும் குழந்தையையும் கொன்றுவிட்டான் என்ற செய்தி அவளுக்கு முன்னே அஸ்ஸா ஸாவுக்கு எட்டியிருந்தது. அதனால் அவன் கேலியாகச் சிரித்து, “என்ன கதை – பேசுகிறாய்!” என்று அதட்டினான். 

பன்னா அதுதான் ராணா ஸாங்காவின் குழந்தை என்பதை அடையாளங்களுடன் நிரூபித்தாள். அப்போதும் அவனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. “போ, போ” என்று மடியில் இருந்த குழந்தையைக் கீழே உதற முயன்றான். 

அவன் அருகில் நின்ற அவன் தாய் அவனைக் கையமர்த்தி, “ஆனால் பன்பீர் கொன்றுவிட்டதாகச் சொல்லப்படும் குமாரன் யார்?” என்று கேட்டாள் பன்னாவிடம். 

 பன்னாவின் கண்களிலிருந்து பிரவாகம் எடுத்தது. மிகவும் தயக்கத்துடன் அடைத்த குரலில், “இந்தப் பாவி பெற்ற பிள்ளை. அந்தச் சண்டாளன் ராணா விக்கிரமஜித்தைக் கொலை செய்த செய்தி கேட்டவுடன், என் ராஜாவின் தொட்டிலில் என் மகவைத் தூங்க வைத்தேன்” என்றாள். 

அஸ்ஸா ஸாவும் அவன் தாயும் பிரமித்துக் கற்சிலைகளாகிவிட்டனர். 

இதுவும் சாத்தியமா! 

அதிசய அதிர்ச்சி தீர்ந்து சுய பிரக்ஞை வந்தவுடன், அஸ்ஸா ஸாவுக்குத் தன் நிலைமையின் ஞாபகம் வந்தது. கொடுங்கோலன் பன்பீரின் வாளை ஏமாற்றிய ராஜ குமாரனைத் தான் அபயம் கொடுத்து வளர்ப்பது உசிதமா என்று யோசனை பிறந்தது. தயங்கினான். 

அவன் தயக்கத்தைக் கண்ட அவன் தாய் சீறி எழுந்து, “மகனே! உன் குழந்தைப் பருவத்தில், விஜய வீரர்களாய் நித்தியத்துவம் பெற்ற ராஜபுத்திர ரத்தினங் களின் கதைகளைக் கலந்து உனக்குச் சோறு ஊட்டினேனே! அதன் பலனா இந்தத் தயக்கம்? பார்; கொஞ்சம் யோசித்துப் பார். நீ இதுவரை கேட்டுள்ள ரஜபுத்திர வீரச் சரிதங்களிலே எந்த வீரனாவது, அல்லது வீரப் பெண்மணியாவது இத்தகைய மகத்தான வீரமும் தியாக புத்தியும் காட்டியது உண்டோ? மனித சரித்திரத்திலேயே இது தனித்து நிற்கும் தியாகமன்றோ! கேவலம் ஒரு தாதி தான் சுமந்து பெற்ற மதலையை அந்த அரக்கன் வாளிலே நேருக்கு நேர் தூக்கிக் கொடுத்து, இதைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறாள். நீ ஓர் ஆண் மகன். கண்ணுக்குத் தெரியாத தூரத்திலுள்ள அந்தக் கொடுங்கோலன் கத்தியை நினைத்து நடுங்குகிறாய்! பேஷ்!” என்றாள். 

அஸ்ஸா ஸாவினுடைய நெஞ்சம். கொதித்தது. குழந்தையை அள்ளி மார்புடன் அணைத்துக்கொண்டு பன்னாவைப் பார்த்தான். 

குழந்தையைத் தழுவி முத்தமிட்டுச் சித்தூர் திரும்பினாள் பன்னா. அவள் கண்ணீர் குழந்தையை நனைத்து அவள் கண்களையும் மறைத்தது. ஆயினும் இந்தப் பன்னா என்னும் நக்ஷத்திரத்தைக் கால வெள்ளத்தாலும் மறைக்க முடியுமோ! 

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *