கனவுகள் கரைந்து போன போது…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 15, 2026
பார்வையிட்டோர்: 188 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த வீட்டைப் பார்த்ததும் அவள் அசையாமல் அப்படியே நின்று விட்டாள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடைந்து, மண்ணோடு புதைந்து கிடந்த கேற்றைச் சிரமப்பட்டுத் தள்ளித் திறந்தவள், மெதுவாக வளவுக்குள் சென்றாள். வளவு, காடு பத்திக் கிடந்தது. சிறு செடிகளும், பெருஞ் செடிகளும் கொடிகளும் வீட்டைச் சூழ இருந்தன. நாகதாளி, சதுரக்கள்ளி, எருக்கிலை கூட அங்கு இருந்தன. நாகதாளி இங்கு எப்படி வந்தது?… அவளுக்காக, செம்மணியில் இருந்து அவனெடுத்து வந்த பழத்தின் விதையிலிருந்து முளைத்ததா…? சிறு மரமாக இருந்தாலும் நாகதாளியில் மலர் இருந்தது. மலரைக் கிள்ளி முகர்ந்து பார்த்தாள். மலரில் பாம்பின் வெதவெதப்பான வெடில் மணத்தது. அவளது பாதங்களின் அருகாக ஒரு பாம்புச் செட்டை – செடிகளில் சிக்கிய நிலையில், காற்றில் படபடத்தது. ‘பாம்பு இருக்குமா…!. சாரையா… நாகமா…? நாகதாளிக்கும் பாம்புக்கும் அப்படி என்ன ஜென்ம பிராப்த்தி…’ 

அவளைப் பயம் கவ்விக் கொண்டது. 

திடீரெனத் திரும்பியவள் வீட்டு முற்றத்துக்கு மேற்காக, வேலியோடு இருந்த வேப்பமரத்தைப் பார்த்தாள். எப்பொழுதுமே, சடைத்து வளர்ந்து அரசோச்சும் அந்த மரம் ஏன் சரிந்து விழுந்து கிடக்கிறது. ஷெல் அடிபட்டிருக்க வேண்டும். அது கருகிக் கிடந்தது. ஒரு கிளையில் மட்டும் உயிர்ப்பை உணர்த்தும் பசுந்தளிர்கள்! 

வேலியோடு, தெற்குப் பார்த்து அடர்ந்த புல்லாந்திச் செடிகள், கொழுத்த பழங்களுடன். பச்சை நிறப் பிஞ்சுகளும், இளஞ்சிவப்பு மணி மலர்களும் அவளை மயக்கின. செடிக்கருகாகச் சென்றவள், பழங்களை உருவி வாயில் போட்டுக் கொண்டாள். வாயில் கரைந்த பழங்கள், உவர்ப்பும் இனிப்புமாய் சுவைத்தன. 

மெதுவாக முற்றத்துக்கு வந்தாள். அந்த வீட்டின் அடையாளமே அந்த எலுமிச்சை மரம்தான். கிணற்றுக்கும் முற்றத்துக்கும் இடையில் அது – முப்பது சதுர அடி பரப்பில் – தழையத் தழைய நின்றது. கிணற்று நீரையெல்லாம் அடியாளம் வரை செல்லும் அதன் வேர்கள் மட்டுமே, இப்பொழுது சுவைக்கின்றன. ஊருக்கே உபகாரியாய் இருந்த, இருக்கும் அந்த மரத்தில், வெண் பற்களாய் மலர்ச்சி கொண்டிருக்கும் மொட்டுக்களும், மலர்களும்! சில பிஞ்சுகளும் காய்களும் கூடக் கிடந்தன. இந்த மரத்தின் கீழ் மெத்தையாய்  உதிர்ந்து கிடக்கும் சருகுகள்; இன்னும் புதிதான பழுத்த மஞ்சள் இலைகளும். மெத் தைக்கு மேலாக கொத்துக் கொத்தாய் உதிர்ந்து கிடக்கும் முள் அலக்குகள். முட்களைப் பார்த்ததும் – சுரீரென குதிக்காலில் ஏறிய கடு கடுப்பை அவள் உணர்ந்தாள். முன்னர், குதியில் முள் ஏறி, கெந்திக் கெந்தி நடந்தது அவளுக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. 

முற்றிய எலுமிச்சங் காய்களில் இரண்டைப் பறித்துக் கொண்டவள், வீட்டு வாசல் பக்கமாக நகர்ந்தாள். வாசலோடு அந்தப் பிச்சி மரம். அவள் போஷித்து வளர்த்த பிச்சிக் கண் டொன்றை, வேரோடும் வேரடி மண்ணோடும் எடுத்து வந்து அவனிடம் தர, ஆழக்குழி வெட்டி, உலர் எரு இட்டு, நட்டது அவன்தான். அந்தச் செடிக்கு அவனும் அவளும் மாறி மாறி நீர் வார்த்தார்கள். அதன் முதல் குருத்தைக் கண்ட அவள், குதூகலமாய்க் குரல் கொடுத் தாள். அவளது குரல் கேட்டு வந்த அவன், அவளது கரங்களைப் பற்றித் தட்டாமாலை சுற்றினான். “தலை சுற்றது சுபேன்…” என்று கூறியவள், அவனில் சரிந்து கொண்டாள். 

முதல் ஸ்பரிசம். அது அவனுக்கு முதல் மழையாய் வர்ஷித்தது. 

“சுபேதா…! நீ பூப்போல… புதுப் பட்டுப் போல மெதுமெதென்டு…” 

பதினாலு கூடத் தொடாத அந்த வயதிலும் அவனது மனதில் கள்ளம் புகுந்துவிட்ட பதகளிப்பு. 

“என்ன சுபேன் உன்ரை கை நடுங்குது…” என்று கூறிய, அந்தச் சின்னப் பெட்டையை அவன் நிமிர்ந்து பார்த்தான். 

அவளது கண்களில் இழைந்த பரிவும் மிருதுவான வசீகரமும் அவனை அவள் மீது ஆசை கொள்ள வைத்தன. 

அவளது முன்னெற்றியில் புரண்ட கூந்தலை அவன் மெதுவாக நீக்கிவிட்டான். 

தூரத்துப் பறவையொன்றின் இனிய, இசைப் பிழிவான பாடல் அவளை மீளவும் நிஜ உலகத்துக்கு அழைத்து வந்தது. 

‘பட்டி விக்கிரமாதித்தன் குருவியா…? தனது பெடையை நினைத்து உருகுகிறதா…?’ 

வாசல் படி ஏறி, வீட்டின் முன் விறாந் தைக்கு வந்தாள். வாசலுக்கு முன்பாக இருந்த அறைக் கதவு மரத்தாலானது; பழமையான வேலைப்பாடு கொண்டது – ஒற்றைப் பிணைச் சலில் தொங்கியபடி இருந்தது. சில துப்பாக்கிச் சன்னங்களின் காயங்களோடு இருந்த அந்தக் கதவை அவள் அகலத் திறந்தாள். திறந்ததும் 

சுவாமிப் படங்கள் தெரிந்தன. அறையின் தென்மேல் மூலையில் புற்றாய்க் குவிந்திருக்கும் கறையான்கள், படங்கள் இருந்த மரப்பீடத்தை மட்டுமல்ல, படங்களையும் அவை பதம் பார்த் திருந்தன. படங்கள் – சட்டங்கள் தகர்ந்த நிலை யில் உடைந்த கண்ணாடிகளுடன் நிலத்தில் சரிந்து கிடந்தன. பீடத்தில் விநாயகர் சிலை மட்டும் தலைசாய்ந்து கிடந்தது. உடைய வில்லை. அதைக் கையில் எடுத்துக்கொண்டாள். சிலை அவளைப் பார்த்துச் சிரித்தது. 

அவள் “விநாயகா…!” என்று முனகினாள். 

அன்று அரசடிப் பிள்ளையார் கோவில் சப்பறத் திருவிழா. கோயில் பக்கத்தில் தானே என்று பயமேதுமில்லாது, கையொழுங்கையில் இறங்கினாள். அம்மா கோயிலுக்குச் சற்றுத் தாமதமாக வருவாள் என்பது அவளுக்குத் தெரியும். வீடு திரும்பும் போது அவள் துணையாக இருப்பாள். 

பூர்வபக்க அட்டமி. வானத்தில் முகிலின் அடர்த்தி. சந்திர ஒளி லேசாகத் தெரிந்தது. இவள் எட்டி நடைபோட்டாள். பின்னால் ஆளரவம். திரும்பிப் பார்த்தாள். சுபேன்! 

“சுபேதா நில்லும் நானும் வாறன்…!” 

மந்திர வசப்பட்டவள் போல நின்றாள். 

நெருக்கமாக வந்தவன் அவளைப் பார்த்து, வியப்புடன் கூறினான், “ஆள் வளர்ந் திட்டா… பாவாடை… சட்டை… மேல் தாவணி… அடே அப்பா…!” 

“ம்… என்ன… பிடிக்கேல்லையா…?” 

வெக்கம் அவளைப் பிய்த்துக் கொண்டது. 

நெருங்கி வந்தவன், அவளது மூச்சுக் காற்றுப் படும்படி நின்றுகொண்டான். 

அவள் அப்படியொன்றும் வெடவெடப் பான உயரமில்லை; அளவான உயரம். முகம் முழுவதுமே கண்கள் இருந்தன. குவிந்த உதடு களில், தேன் தடவியது போல லேசான ஈரம். முகில்கள் ஒதுங்க, சந்திர ஒளியில் எல்லாமே தெரிந்தன. 

அவளைச் சூழப் பிச்சிப்பூ வாசனை. மாலையில் அவனது வீட்டில் பறித்த மொட்டு கள், அழகான மாலையாய் அவளது அடர்ந்த கூந்தலில்! அவன் அருகாக, நெருங்கி வந்தான். அவளது உடலசைவுகளிலும் மெய்ப்பாடு களிலும் ஓர் இணக்கத்தைக் கண்டு கொண்ட வன், அவளை வாரியணைத்து, கண்களில் முத்தமிட்டான். பின்னர் உதடுகளில்… 

“ம்… இது வேண்டாம் சுபேன்!” அவளது குரலில் லேசான நடுக்கம். உடலும் நடுங்கியது. 

திடீரெனத் திரும்பியவள், கோயிலுக்குப் போகாமல் வீட்டைப் பார்த்து நடந்தாள். 

அவளது இயல்பான துணிவும் அலட்சிய மும் அந்த நிமிடம் அவளை கைவிட்டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அம்மாவுடன் அவள் மீண்டும் கோயிலுக்குப் போனாள். சனசந்தடி அதிகமாக இருந்தது. கானமூர்த்தி, பஞ்சமூர்த்தியின் நாதஸ்வர இசை. அதிலொரு கணம் கிறங்கியவள், ஏதோ குறை பட்டவள் போலத் தவித்தாள். இருப்புக் கொள்ளவில்லை. இசையில் மனம் லயித்த பொழுதும் கண்கள் அங்குமிங்கும் அலை பாய்ந்தன. 

‘சுபேன் வரேல்லையா…? ஏன்…? ஏதோ ஒரு வேகத்தில் நடந்த விஷயம் இதற்குப் போய் இப்படி நடந்திருக்க வேண்டாமே… சடங்கு செய்யப் போறவன், சின்னச் சின்ன தாய்ச் சேட்டைகள் செய்வது பிழையா…? அந்தத் கனிவான கணங்களில், எதிர்ப்பு ஏது மில்லாத சமிக்ஞை என்னளவிலும் இருந்ததே… அதனால்தானே அவன்…!’ 

வசமிழந்த அவளது மனசு தவித்தது. 

‘குற்ற உணர்வுதான் சுபேனைக் கோயில் பக்கம் வராமல் தடுத்ததா? இருக்காது…’ 

அவன் தொடை நடுங்கியல்ல. அது அவளுக்குத் தெரியும். அவனது ஒவ்வொரு செயலிலும் துணிவு பீறிடும். அவர்களது காதல் வீடுவரை வந்தபோது, மிகவும் உசாராயிருந் தவன் அவன்தான். 

அவனது அப்பா இது விஷயமாகச் சற்றுக் கசமுசக்கவே செய்தார்; 

“படி… பல்கலைக்கழகப் படிப்பு முடி யட்டும். நீ சொந்தக்காலிலை நிக்கேக்கைதான் உனக்கு உந்தச் சேட்டையள் வரவேணும். அந்தப் பெட்டைக்கும் ‘என்றென்ஸ்’ கிடைக் கும் போல கிடக்கு… படிக்கிறவளை அதை இதைச் சொல்லிக் குழப்பிப் போடாதை…” 

அப்பா சொன்னதையெல்லாம் சுபேந்திரன் கூறித்தான் இவள் தெரிந்து கொண்டாள். 

அவனது அப்பா மாதிரி இல்லை சாந்தி மாமி. சுபேனில் அவள் – தாய் என்ற அளவில் உயிரையே வைத்திருக்கிறாள். இவளிடத்தில் சொரியும் பரிவும் பட்சமும் எதுவிதத்திலும் குறைந்ததல்ல. நிக்கர் போடாது, பாவாடை கட்டித் திரிந்த பருவத்திலேயே, “மாமி… என்ரை ஆசை மாமி…’ என்று அவளோடு ஒட்டிக்கொண்டவள் இவள். 

அந்தச் செல்லப் பெட்டை, தனது மரு மகளாக வருவதில் மாமிக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. இது சுபேதாவுக்கும் நன்கு தெரியும். 

சுபேனைக் காணும் போதெல்லாம் அவளது பேச்சு மாமி பற்றியதாகவே இருக்கும். 

“மாமிதான் எனக்கு றோல் மொடல். அவ தான் எனக்கு எல்லாம். அவ இல்லையெண்டா உம்மையே நான் ஏறெடுத்துப் பார்த்திருப்பனோ தெரியாது…!” 

“ஓ…! அப்படியா? அப்ப அம்மாவையே கட்டிக்கொள்ளன்…” 

“என்ன பகிடியா…? போதும். சுபேன் உம்மட்ட ஒரு விஷயம் கேப்பன், சத்தியம் செய்வீரா…?” 

“ம்… சத்தியம்…” 

“நாம சடங்கு முடிச்சு, தனியா எல்லாம் போக வேண்டாம். உத்தியோகம் அது இதெண்டு ட்ரான்ஸ்ஃபரில போனாலும் மாமி எப்பவும் எங்களோடதான் இருக்க வேணும்…” 

“யூ ஆர் ஸோ கிறேஸி… இது முடியிற காரியமா சுபேதா…!” 

“மாமியின்ரை சுவாசக் காற்றுப் படாமல், அந்த ஈரலிப்பு இல்லாமல் என்னாலை இருக்க முடியாது சுபேன்.” 

சுபேனிடம் மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் போது, அப்பாவிடமும் அம்மாவிடமும் அவள் மாமி மான்மியம்தான் பாடுவாள். மூச்சுக்கு முன்னூறு தரம், “என்ன மாதிரிச் சீவனப்பா அது…!” என்று மாய்ந்து போவாள். 

அவளது பேச்சுக்கு எதிர்ப் பேச்சு அப்பா விடம் இருந்து வராது. ஆனால் அம்மாவுக்கு அவளது பேச்சு எரிச்சலூட்டுவதாய் இருக்கும். தீராத பகை உணர்வு விகாசம் கொள்ள, மாமி பற்றி அம்மா சொல்வதெல்லாம் ஆசூசை யானவையாகும். 

“அவளைத் தெரியாதா… கேடு கெட் டவள்…! வீட்டை விட்டு ஓடிவந்த ஓடுகாலி…! சிவத்தாரோடை இஞ்ச வரேக்கை அவளுக்கு வயித்திலை பிள்ளை. அவற்ரையா… இல்லை ஆரிட்டை வாங்கினாளோ அந்த தறி கெட்டவள்…! 

அம்மாவின் கொக்கரிப்புகள் உப்புப் புளி இல்லாதவை என்பது சுபேதாவுக்கு நன்றாகத் தெரியும். 

மரத்துப் போன உணர்வுகளுடன் ஒரு கணம் மௌனமாக நின்றவள், வீட்டின் மேற்குப் பக்கமாக நகர்ந்தாள். எதிரில் சுபேனின் படிப்பறை! அந்த அறையைக் கண்டதும் குப்பெனக் கூச்சம் அவளைப் பற்றிக் கொண்டது. 

யுத்தத்தின் காங்கையால் தென்மராட்சிக்கு இடம்பெயர்வதற்கு நாலு நாட்களுக்கு முன்னர் தான் அவள் அவனை அந்த அறையில் சந்தித்தாள். 

மாமாவும் மாமியும் வீட்டில் இல்லை யென்பதைத் தெரிந்துகொண்டுதான் அவள் அவனிடம் வந்தாள். பட்டப் படிப்பை முடித்து – எஸ்.எல்.ஏ.எஸ் பரீட்சைக்குத் தன்னைத் தயார்ப்படுத்துவதில் அவன் தீவிரமாக இருந் தான். அவனைக் குழப்ப வேண்டாமே என அவள் நினைத்துக் கொண்டாலும் மனம் இருப்புக் கொள்ளாமல் குதியாட்டம் போட்ட தால் அவனை அறையில் எட்டிப் பார்த்தாள். 

:ஆரது… என்ரை சுபேதாவா…” என்ற வன், அறையை விட்டு வெளியே வந்து, அவளது கைகளைப் பற்றி அறையினுள் இழுத்துச் சென்றான். 

மேசை மேல் ஒழுங்கற்றுச் சிதறிக் கிடந்த புத்தகங்களைச் சீர் செய்த சுபேதா, அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

அவனது கண்களில் இருந்த மயக்கம் அவளைக் கலங்க வைத்தது. நெருங்கி வந்த வன், அவளை இறுக்கமாகப் பற்றி அணைத்து, அவளது உதடுகளில் முரட்டுத்தனமாக முத்த மிட்டான். 

“இதென்ன ரௌடித்தனம்…! சரியான காடு… காடு…” என முனகியவள் தொடர்ந்து, “உதடுகள் எரியுது… இப்படியெல்லாம் இனி வேண்டாம்…” எனக் கூறினாள். 

“எனக்கு வேணும்…!” 

“உங்களுக்கும் வேண்டாம்…” 

அவளது குரலில் லேசான கண்டிப்பு. வியப்புடன் அவளைப் பார்த்தான். 

“பி ஸீரியஸ் சுபேன், இந்த விளையாட் டெல்லாம் போதும். நாட்டு நிலமை… மூச்சு முட்டிற இந்த நெருக்கடி… இதுகளுக்கு மத்தி யில… நம்ம கலியாணம் நல்ல மாதிரி நடக்க வேணும். அன்பு, ஆசையெல்லாம் முப்பது நாளில் முடியிற காரியமில்ல. நம்ம மூச்சு இருக்கிற வரை அது தொடர வேணும்…” 

“உடல் சார்ந்த கிளர்ச்சிகளுக்கு மேலாலை, வாழ்க்கையில எத்தனையோ விஷயங் களிருக்கு… இதை நான் உங்களுக்குச் சொல்ல வேணுமென்டில்ல… உயிர்ப்பும் அர்த்தமும் உள்ளதா நம்ம சீவியத்தை நாமதான் அமைச்சுக் கொள்ள வேணும். நாம அடெலெஸென்ஸ் பொம்மைகள் இல்ல… பொறுப்பான விஷயங் களில அக்கறை கொள்ள, எங்களுக்கு முதிர்ச்சி வந்திட்டதா நான் நினைக்கிறன்.” 

“அப்பா…! என்ன தொண தொணப்பு… ஸோ… என்ன செய்ய வேணும் சொல்லுங்க பாட்டி…!” 

அவனது கண்களிலும் பேச்சிலுமிருந்த கேலி, அவளைக் கோபம் கொள்ள வைத்தது. 

அவளது முகம் காட்டிய உக்கிரத்தில் அவன் சிறிது நடுங்கினான். 

“ஸொரி சுபேதா… வெரி ஸொரி. உனக் காகத்தான் எஸ்.எல்.ஏ.எஸ். எழுதப் போறன். பரீட்சை எழுதி முடிஞ்சா வேலை கிடைச்ச மாதிரி… நீரும் படியும்… உம்மடை ஃப்பைனல் எக்ஸாம் முடிஞ்சதும் கலியாணத்தை வைப்பம். பிறகென்ன, என்ரை குஞ்சை ராணி மாதிரிப் பார்த்துக் கொள்ளுவன்.” 

“ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தை யள் எங்களுக்குப் போதும். பட்டத்து இள வரசன், இளவரசி மாதிரி அவையள நாம வளர்த்தெடுப்பம். உமக்கு வேலை கிடைச்சாப் பாரும். இல்லாட்டிப் பரவாயில்லை. வீட்டில அரசி மாதிரி இருந்து என்னையும் குழந்தை களையும் பாருமன்…” 

விட்டேந்தியாய் பேசியவன், திடீரெனச் சந்தியவந்தனைப் போலத் தொடர்ந்தது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அதேசமயம் அவனது பேச்சின் அடியூறலாய் மிதப்புக் கொண்ட ஆணின் முசுடுகளை அவள் கவனம் கொள்ளவும் செய்தாள். 

“அரசியா…? அதெல்லாம் வேண்டாம். சக ஜீவியா, மனுஷியா என்னைப் பாருங்களன்… அது போதும்.’ 

அவள் கூறியதைப் புரிந்து கொள்ள முயற்சி யாத அசமந்தமாய், “இவ என்ரை… என்ரை ஆசை மனிஷிதான்” என் உளறியவன், மீளவும் அவளுக்கு நெருக்கமாக வந்து அவளை அணைத்துக் கொண்டான். அப்பொழுது அவள் ஒரு துள்ளலுடன் அவனிலிருந்து தன்னைப் பிய்த்துக் கொண்டாள். 

நினைவுகளின் சொருகளில் இருந்து நிதான மடைந்தவள், நிலத்தில் குவிந்து கிடந்த புத்த கங்களை எழுத்து மேசையில் வைத்துவிட்டு, முற்றத்துக்கு வந்தாள். 

முன்கேற்றைச் சிரமத்துடன் இழுத்துச் சாத்தியவள், வீதியில் இறங்கினாள். 

அப்பொழுது அவளுக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. 

“மீசாலையில இருந்து வந்த கையோடை மாப்பிள்ளை வீட்டைப் பார்க்கப் போயிட்டாளா இந்த… இந்த இவள்…” 

அம்மாவின் குரைப்பு அவளுக்குக் கேட்பது போலிருந்தது. பதட்டப்பட்டவளாய் வீடு நோக்கி விரைவாக நடந்தாள். 

வீதியில், எதிரே வந்த ராசு மாமி இவளைப் பார்த்துக் கேட்டாள், 

“தம்பி சுபேன் வன்னியில இருந்து வந்த பிறகுதான் உன்ரை சடங்கு நடக்கும் போல…” 

“அவர் வந்து… நிதானப்பட்டு, என்னை முடிக்க எத்தனை வருஷமாகுதோ ஆர் கண்டது…” 

“கொண்டலடியான் எல்லாம் பார்த்துக் கொள்வான்… நீ கலங்காத நாச்சியார்…! உன்ரை சடங்கு இந்த ஊரும் உலகமும் மெச்சிற மாதிரி சிறப்பா நடக்கும்.” 

மாமிக்கு நின்று பேச முடியாத அவசரம். ஆனாலும் – அவளது பேச்சில் வழிந்த பரிவு, இவளை முட்டி முட்டிப் பொங்க வைத்தது. 

சுபேதாவுக்கு வீட்டில் வேலை போலக் குவிந்து கிடந்தது. எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அவளே செய் தாள். அப்பா தன்னாலானதைச் செய்தார். அம்மாவால் எதுவுமே முடியவில்லை. ஆனால், அவளது குரல் மட்டும் அதிகாரம் குறையாது ஒலித்துக்கொண்டே இருந்தது. 

விடுபட்டுப் போன பட்டப் பரீட்சையை முடித்துக் கொண்டவள் – அவள் கல்வி கற்ற செங்குந்தா இந்துவிலேயே பகுதி நேர ஆசிரியையாக இணைந்து கொண்டாள். 

காலம் மிக மெதுவாக நகர்வதாகவே அவளுக்குத் தோன்றியது. ‘ஏன் அது இறக்கை கட்டிப் பறக்கக் கூடாது…?” 

‘வன்னி சென்ற சுபேனுக்கு என்ன நடந் திருக்கும்… மாமி எப்படி இருப்பாள்… சுபேனின் அப்பா…? அவர்கள் நோய் நெடி யில்லாமல் இருந்தால் போதும்…’ 

மனம் இறுகிப்போய், துயரமே துணையாக இருந்த சுபேதாவுக்கு அந்தச் செய்தி ஆறுதல் தருவதாயிருந்தது. 

‘சுபேன் வட்டக்கச்சியில… மகா வித்தி யாலயத்தில் படிப்பிக்கிறாராம். யாழ்ப்பாணத் துக்கு வாற எண்ணமும் அவருக்கு இருக்காம். என்னைப் பற்றி மறுகி மறுகி வேறு விசாரித் திருக்கிறாராம்.’ 

இந்தச் செய்தியை, அவளது வீடுவரை கொண்டு வந்தது சுபேனின் நண்பன் ரவிதான். 

‘ரவிக்குக் கடிதமா எழுதியிருப்பார்…? அவருக்கு எழுதியவர் எனக்கு ஏன் எழுத வில்லை! வட்டக்கச்சி மகா வித்தியாலயத் துக்குக் கடிதம் எழுதலாமா…? எழுதினால் அவருக்குக் கிடைக்குமா…? பாராமுகமாக இருக்கும் அவருக்கு எதை எழுதுவது… எதை விடுவது…?’ 

தவிப்புடன் பலதையும் நினைத்தாள். 

ரவியுடன் கதைத்து – சரியாக ஆறு மாதங் களின் பின்னர், சுபேன் ஊர் வந்த விஷயம் அவளது காது வரை எட்டியது. அவள் போவதா விடுவதா எனச் சிறிது தயங்கிய போது – ராசு மாமி சொன்ன செய்தி அவளில் ஊறலாய்க் கிடந்த ரணத்தை மீளவும் கீறியது. 

பட்டும் படாமலும் பேசினாள். பேச்சு சாந்தி மாமி பற்றியதாகவே இருந்தது. சுபேனைப் பற்றி அவள் ஏதும் சொல்லவில்லை. 

ஆரைப் பார்க்க விட்டாலும், அந்த மனிசி சாந்தியைப் போய்ப் பார் பிள்ளை. அவள் உன்னிலை உயிரையே வைச்சிருந்தாள். சுகமில் லாமல் படுக்கையோட கிடக்கிறாள். 

மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அவள் மாமி வீட்டுக்குப் புறப்பட்டாள். அப்பொழுது அம்மா வெளியே வந்து, அவளது தலையை அன்புடன் வருடியபடி ஆசீர்வதிப்பது போலக் கூறினாள்; 

“மாமியையும் பார்த்திட்டு… சுபேனையும் கண்டு கதைச்சு ஒரு நல்ல முடிவோட வாம்மா…! சுபேனுக்கு விருப்பமெண்டா… அப்பாவும் நானும் போய் சாந்தியோட கதைக் கிறம்… இனியும் கடத்தேலாது…. உங்க சடங்கு முடியவேணும்.” 

‘அட அம்மாவா இப்படிப் பேசுகிறாள்…! இவள் எவ்வளவு மாறிவிட்டாள்… இவளது வக்கணையும், தொலுக்கரிப்பும் எங்கே போய் ஒழித்துக் கொண்டுவிட்டன…?’ 

காலம் கடந்த அவளது மாற்றம் சுபேதா வுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. திரும்பி அம்மாவை பரிவு ததும்பப் பார்த்தவள், படி இறங்கி நடந்தாள். 

உடைந்து கிடந்த கேற், சரி செய்யப் பட்டிருந்தது. வீடும் வளவும் துப்பரவாக இருந்தது. 

‘வந்து கனநாளா…? இல்லை. முந்தநாள் வந்ததாகத்தானே ராசு மாமி சொன்னாள். அவையள் வந்தது எனக்கு ஏன் தெரியாமல் போய்விட்டது… வெளியே வராமல் வீடு, பாட சாலை என்று புதைந்து கிடந்தால் ஊர் நடப்பு எப்படித் தெரியவரும்…’ 

இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையொன்று முன் விறாந்தையில் விளை யாடிக் கொண்டிருந்தது. அவள் குழந்தையை வைத்த கண் வாங்காது பார்த்தாள். பன்னீர் பட்ட பூப்போல குழந்தை அழகாக இருந்தது. உதடுகளைக் குவித்து ஊ காட்டியது. இவளைப் பார்த்து லேசாக சிரிக்கவும் செய்தது. 

அப்பொழுது, உள்ளறையிலிருந்து ஒரு பெண் ஓடி வந்தாள். உயரம் குறைவாக இருந்த அவள், சற்றுக் குண்டாகவுமிருந்தாள். நிறம் கூட அப்படி இப்படித்தான். மூக்கு விரிந்து, கண்கள் பொடுகளவில் இருந்தன. அவளது கைகளில் இருந்த, எவர்சில்வர் கிண்ணத்தி லிருந்து குழந்தைக்கு செருலாக்ஸோ எதுவோ ஊட்ட முயற்சித்தாள். குழந்தை அதைத் தட்டி விட்டு ஓடி வந்து, இவளுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டது. 

குழந்தையை கைகளில் ஏந்திய சுபேதா வைப் பார்த்து அவள் கேட்டாள்; 

“ஆரு வேணும்…” 

“சுபேன் இருக்கிறாரா…?” 

“இருக்கிறார். எக்ஸாமுக்குப் படிக்கிறார்.” 

“என்ன எக்ஸாம்?” 

“எஸ்.எல்.ஈ.எஸ்.” 

“எஸ்.எல்.ஏ.எஸ்?” 

“எடுக்கேல்லை… ரீச்சரா இருக்கிறதால எஸ்.எல்.ஈ.எஸ். நல்லமெண்டு எடுக்கப் போறார்.” 

குரல் கேட்டதும் சுபேன் வெளியே வந்தான். அவனது கண்களில் லேசான கலக்கம். 

முகம் தளர்ச்சி ஏதுமில்லாது இறுகிப் போயி ருந்தது. முன் மண்டையில் லேசான சொட்டை 

“வன்னி ஒத்துக்கொள்ளேல்லையோ…?” 

“இவ பாலேஸ்… ஆரெண்டு உமக்குத் தெரியுமா…? ஒரு குழந்தை. பெண். உம்மட பெயரை வைப்பமெண்டிருந்தம்… ஏன் உந்த சென்ரிமென்ற் எண்டு விட்டிட்டம்.” 

“இவ தெரிஞ்சவ… நாலு வீடு தள்ளி இருக்கிறா… நீண்ட நாள் பழக்கம். சின்னப் பெட்டையில இருந்தே தெரியும். அம்மான்னை பெஸ்ட் ஃப்பிரண்ட்.” 

“அப்படியா, உள்ள வாருங்க… இருங்க…” என்று கூறிய பாலேஸ்வரி அடுக்களைப் பக்கமாக நகர்ந்தாள். 

சுபேதாவின் நொந்து போன இதயம், கண் வழி நீராய் வழிந்தது. தனக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரம், வேறொருவருக்குமே வரக்கூடாது என நினைத்துக் கொண்டாள். 

‘எல்லாமே பொய்யா…? சந்தித்தது. பழ கியது. சத்தியவசப்பட்டுப் பேசியது. சமயங் களில் சரசமாடியது. இழுத்து வைத்து முத்த மிட்டது…’ 

நுனி நாக்குவரை வந்த கேள்விகளைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். 

ஒருவகை எதிர்ப்பையும் ரௌத்திரத்தையும் காட்டிய அவளது விழிகள், மறுகணம் கனிந்து படபடத்தன. 

“எப்படி… எப்படி ஐயா…! உன்னாலை இது முடிந்தது…?” 

அவளது கனிவும் அந்தப் பேச்சும் அவனைப் பாடாய்ப் படுத்தியது. முகத்தை மறுபக்கமாகத் திருப்பிக் கொண்டான். 

“சுபேன் நீர் நல்லா இருந்தா போதும்…” கூறியவள், விடு விடென்று இறங்கி நடந்தாள். ஒருகணம் தயங்கியவள், ஏதோ யோசனைக்கு உட்பட்டவளாய் நின்று நிதானமாகக் கேட்டாள், 

“மாமி…?” 

அவளை, கூடத்துக்கு அருகாக இருந்த அறைக்கு அவன் அழைத்துச் சென்றான். 

“அம்மாவுக்குச் சுமில்லை.” 

“…”

மௌனமாகக் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். 

மாமி கட்டிலில் கிடந்தாள். இவளைக் கண்டதும் அவளது உதடுகள் துடித்தன. அவள் ஏதோ பேச முயற்சிப்பது போல இருந்தது. கண்களில் இருந்து நீர் தாரையாய் வழிந்தது. வலது கையை உயர்த்தி இவளை அருகாக அழைத்தாள். சென்றவள், மாமியின் கரங்களை எடுத்து முத்தமிட்டாள். இன்னும் நெருங்கி வந்து, மாமியின் நெற்றியிலும், கன்னங்களிலும் மாறி மாறி ஒரு வெறியுடன் முத்தமிட்டாள். 

மனதின் அடிவரை ஊறலித்துக் கிடந்த துயரம் வெளிப்பட, குமுறி அழுதபடி வெளியே வந்தாள். வந்தவள், சுபேனைப் பார்த்துக் கேட்டாள், 

“சடங்கு முடிச்சது எப்ப…? மாமி சுகமா இருக்கேக்கையா… இல்லைப் பிந்தியா…?” 

“அவவுக்குப் பக்கவாதம் வந்த பிறகு தான்.” 

“அதுதான் பாத்தன்! மாமி சுகமாக இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்ன…?” 

குலுங்கியவள், முன் திண்ணைக்கு வந்து, புயல் போலப் படியிறங்கினாள். 

“கோப்பி குடிக்காமலா…?” பாலேஸ் கேட்டாள். 

விசுக்கென வெளியே நடந்தவளை அவன் பின்தொடர்ந்தான். அவனுக்கு எங்கோ வலித்தது. 

தனது திருமணம் பற்றி ஏதோ விளக்கம் தர முற்பட்டவனைப் பார்த்த சுபேதா, “போதும்… போதும் சுபேன்… எனக்கு எதுவும் வேண்டாம்” என்றாள். 

“சட்டபூர்வமா எனக்கும் பாலேசுக்கும் எதுவும் நடக்கேல்லை… அவளோட படுத்தன். பெத்தன். அவ்வளவுதான்.” 

“ஷிற்… இது கொச்சைத் தனமில்லை…” 

“இதிலை என்ன கொச்சைத்தனமிருக்கு சுபேதா…? அவளை விட்டிட்டு, லீகலா உன்னை என்னால சடங்கு முடிக்கேலும்…” 

“இப்படிக் கதைக்க உங்களுக்கு வெக்க மாயில்லை… இது ஆம்பிளைத்தனமா…? இந்த வக்கரிப்புக்கு என்ன பெயர்…? பாலேஸ் பாவம். விவாகப் பதிவுகாரரைப் பாருங்க… பார்த்துப் பேசி, செய்த சடங்கைப் பதிஞ்சு, உறுதிப்படுத்துங்க… அவளையும் குழந்தை யையும் கவனமா பாருங்க…” 

கூறியவள், கேற்றைக் கடந்து போவதைப் பார்த்தபடி நின்றான். 

‘காலத்தின் சுமையும், பாலுணர்வின் பல வீனங்களும் சத்தியத்துக்கும் எனக்குமான பிணைப்பை என்னமாய் அந்நியப்படுத்தி விட்டன…!” 

நினைவுகளில் நனைந்தபடி நின்றவனை யாரோ தோளில் தெடுவது போலிருந்தது. திரும்பிப் பார்த்தான். அவனது துணைவி பாலேஸ்வரிதான். 

“கண்ணைத் துடையுங்க…” எனக் கூறியவள், “இவதானா அந்தச் சுபேதா…” என்று கேட்கவும் செய்தாள். 

பாலேசை அணைத்தபடி அவள் உள்ளே சென்றான். அவளுடைய ஸ்பரிசம் சுபேதாவினது போல அவனுக்கு அப்பொழுது இருந்தது.

– 2009 ஜனவரி, மல்லிகை 44வது ஆண்டு மலர்,

க.சட்டநாதன் க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *