என்னுரை – விண்ணில் ஒரு மணல் வீடு – பிப்ரவரி 2011
சிறுகதை எழுதுவது என்பது ஒரு கலை. அத்தகைய கலையை ஆர்வத்தோடு படைப்பவனும் படிப்பவனும் கலைஞன். இத்தகைய சிறுகதைகளை ஆர்வத்தோடு வாசகர்கள் வாங்கிப் படிப்பதால் அவர்களுக்கும் படைப்பிலக்கியம் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும்.
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு காலகட்டத்தில் உருவானவை. ஒரு சில கதைகள் தமிழ்முரசு நாளேட்டிலும் வேறு பல இதழ்களிலும் வெளிவந்தவை.
படைப்பிலக்கியம் சிங்கப்பூரில் மிகவும் குறைவாக உள்ளன. அதுவும் தமிழில் மிக மிக அருகிலே காணப்படு கின்றன என்ற அமைச்சர் பெருமக்களின் பேச்சு ஆகியவையே இவற்றை ஒரு சிறுகதைத் தொகுப்பாக வெளியிட ஆர்வமூட்டின. அதோடு தமிழ்க்கலை அச்சக நிர்வாகி திரு.ம.பெ.சாமி அவர்கள் என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தி நான் பல நேரங்களில் எழுதிய சிறுகதைகளைத் தொகுக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்தார். நானும் அதைக் கருத்தில் கொண்டு ஒரு சிறுகதைத் தொகுப்பாகக் கொண்டுவர முயற்சி செய்தேன். அதனுடைய வெற்றிக்கனியே இச்சிறுகதைத் தொகுப்பு. இந்நேரத்தில் தமிழ்க்கலை அச்சக நிர்வாகி திரு.ம.பெ.சாமி அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
இச்சிறுகதைத் தொகுப்பு என்னுடைய ஐந்தாவது தொகுப்பாகும். நான் இக்கதைகளை ஓய்வு நேரங்களில் எழுதி வந்தேன். பெரும்பாலான கதைகளுக்கான கருக்கள் சிங்கப்பூரில் நான் சாலைகளில் நடந்து செல்லும் பொழுதும் வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லும் பொழுதும் விமானத்தில் பயணம் செய்யும் பொழுதும் பொதுமக்கள் பேசுகின்ற பேச்சிலிருந்தும் அவர்களுடைய நடத்தைகளிலிருந்தும் பெற்றுக் கொண்டேன். இக்கதைகள் சுவாதி, அருட்கொடையரசன், என்ற புனை பெயர்களில் பல்வேறு சூழல் நிலைகளில் எழுதியவை ஆகும்.
‘விண்ணில் ஒரு மணல் வீடு’ என்னும் இச்சிறுகதைத் தொகுப்பிற்கு ஆய்வுரை வழங்கிய ஆசியான் விருது பெற்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு.இராம கண்ணபிரான் அவர்களுக்கும் நான் மதிப்புரை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டபோது தயங்காது மதிப்புரையும் நூலுக்கு அழகிய முகப்பு ஓவியமும் வரைந்து கொடுத்த நன்யாங் தொடக்கக் கல்லூரி விரிவுரையாளரும் ஓவியக் கவிஞருமான திரு.ப.திருநாவுக்கரசு அவர்களுக்கும் மதிப்புரை வழங்கிய என் இனிய ஆசிரியரும் தேசியக் கல்விக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான டாக்டர் கா.இராமையா அவர்களுக்கும் இந்நூல் வெளிவரப் பலவகையிலும் உதவி செய்த தேசியக் கல்விக்கழகத் துணைப் பேராசிரியர் டாக்டர் இரா.வேல்முருகன் அவர்களுக்கும் இந்நூலை நூல் வடிவமாக்கி உங்கள் கைகளில் தவழ விட்டிருக்கும் தமிழ்க்கலை அச்சக நிர்வாகி அவர்களுக்கும் இத்தருணத்தில் என் மனமுவந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
டாக்டர் மா.வீ.தியாகராசன்
துணைப்பேராசிரியர்
தேசியக் கல்விக் கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர்.
ஆய்வுரை – விண்ணில் ஒரு மணல் வீடு – பிப்ரவரி 2011
பண்பாட்டு விளக்கம்
டாக்டர் மா.வீ.தியாகராசன் அவர்கள் முத் துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு , இடையறாது, உழைத்துக் கொண்டிருப்பவர். அந்த மூன்று துறைகள் கலைத்துறை , இலக்கியத்துறை, பொதுத்துறை ஆகும்.
தமிழ்நாட்டில் பிறந்து, அங்கேயே கல்வியியலில் முதுநிலைப்பட்டம், கல்வியியலில் இனநிலைப் பட்டம், பதிற்றுப்பத்து ஆய்வியலில் முதுநிலைப் பட்டம் ஆகியன பெற்று , ஆசிரியர் தொழிலை மேற்கெண்டவர்.
சிங்கப்பூரில் உறவுப் பெண்ணை மணம் புரிந்து, சிங்கைக் குடியரசில் குடியேறி, உமறுப்புலவர் தமிழ் நிலையத்திலும், உயர்நிலைப் பள்ளியிலும், ஜூரோங் தொடக்கக் கல்லூரியிலும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்த டாக்டர் மா.வீ.தியாகராசன் அவர்கள், தற்போது சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேசியக் கல்விக் கழகத்தின் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், “சிங்கப்பூர் _ மலேசியா – இந்தியாவில் உருவாக்கம் பெற்ற புதுக்கவிதைகள் ஓர் ஒப்பாய்வு (1965 – 1990)” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் இவர் பெற்றிருக்கிறார்.
இலக்கியத் துறையில், டாக்டர் மா.வீ.தியாகராசனுக்குப் புதுக்கவிதை உயிர் என்றால் ஆய்வுக்கட்டுரை உடலாகும். கல்வித்துறையில் பல பட்டங்கள் ஈட்டி பலநிலை மாணவர்களுக்கு ஆசிரியராக வீற்றிருந்த காலத்தில் எல்லாம் இவருடைய ஆன்மா கதை வடிவத்தையும் நாடியிருக்கிறது எனலாம் . தொடக்கப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி , தொடக்கக் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவ , மாணவிகளுக்குக் குடியரசுத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் வரையப்பட்டுள்ள பழமொழிகள், திருக்குறள் பாக்கள், மரபுத் தொடர்கள் பற்றி விளக்கி எழுதுவதற்கு, டாக்டர் அவர்கள் கதை வடிவத்தையே தேர்வு செய்திருப்பது , இவரது நெஞ்சம் கதை நெஞ்சம் என்பதை நன்கு வெளிப்படுத்தும்.
‘சிங்கை சுவாதி’ என்ற புனை பெயரில், டாக்டர் அவர்கள் நான்கு கதை நூல்களை வெளியிட்டுள்ளார். அவைகளாவன: ‘மரபுத் தொடர்க கதைகள்’ (1990 ), ‘ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ (1995), ‘ மனதில் உறுதி வேண்டும்’ (1995), ‘தியாகப்பிறவி’ (1965). கற்பனை வளமம் சரளமான மொழிநடையும் கொண்ட இந்நான்கு நூல்களின் கதைகள், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் பொருட்ட. கருத்துக்களை நிகழ்ச்சிகளின் வாயிலாக எடுத்துச் சொல்லும் நீதிபோதனைக் கதைகளாக அமைந்துள்ளன.
‘ மரபுத்தொடர்கள் கதைகள்’ என்ற புத்தகத்தில், ‘ஏமாற்றம்’ கதையும், ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ தொகுதியில் ‘ சிறுதுரும்பும் பல்குத்த உதவும்’ என்ற கதையும் சிங்கப்பூரின் நடப்பு விவகாரங்களைக் கருப் பொருளாகக் கொண்டுள்ளன. ‘தியாகப்பிறவி’ தொகுப்பில் ‘ உண்டை உறவு’ என்ற கதை , உற்றார் உறவினர்களின் போலி உறவை எடுத்துக்காட்டுவதில் சிறந்து விளங்குகிறது . மரபுத்தொடர்கள், பழமொழிகள், திருக்குறள் பாக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு , அவற்றின் மையக் கருத்துக்களை மாணவ மாணவிகளுக்கு விளக்க விரும்பியதளல் , தொண்ணூறுகளில் வெளிவந்த இந்த நான்கு கதைத் தொகுப்புகளில், நேர் ஓட்டமான கதைப் போக்கையே ஆசிரியர் கையாண்டள்ளார்.
நேரோட்டக் கதைப் போக்கில், ஒரு கதையானது ஒரு கால எல்லையில் தொடங்கி, தொடர்ந்து சென்று , இன்னொரு கால எல்லையில் முடியும் ஒரே ஓர் ஊரிலே என்று ஆரம்பித்து, ஒன்றன்பின் ஒன்றாகக் காலக்கிரம வரிசையில் கதை நிகழ்ச்சிகள் நகர்ந்து , சுபமாகவே துயரமாகவே முடிவுபெறும். இவ்வாறு நேர்க்கோட்டுத் தன்மையில் எழுதப்படும் கதைத்திறனை, வளைவுகள் அதிகம் இல்லாத சாலையில், ஒரு கனரகச் சரக்குந்தை நீண்டநேரம் ஓட்டும் ஒரு வாகனமோட்டியின் திறனுக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம். பொழுதுபோக்கு அல்லாத, நல்ல கருத்துக் கதைகளை வளரும் மாணவர் உள்ளங்களில் பதியவைக்க அ பொறுப்புள்ள இந்த நிதான கதை ஓட்டுதல் மிகவும் இன்றியமையாதது.
உங்கள் கையில் தவழும் ‘ விண்ணில் ஒரு மணல் வீடு ‘, பெரியவர்களுக்காக எழுதப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு நூல் இந்நூலின் கதைகள், நீளச் சிறுகதை வடிவத்தைப் பெற்றவை.
சிறுகதை வடிவம், இது முதலில் நடந்தது.
சிறுகதை வடிவம், இது முதலில் நடந்தது. பிறகு அது நடந்தது , அதற்குப் பின்னர் அவை நடந்தன என்று சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்லிச் செல்லாத தன்மையை உடையது. அது சிறுகதைப் பின்னல் என்ற ஒரு செயல் திட்டத்தில் இயங்கக் கூடியது.
சிறுகதைப் பின்னல் என்பது நெடிய ஒரு கால இழையிலே, அறுபட்டு விழுந்த ஒரு துண்டு இழையைச் சித்தரிப்பது. ஆயினும், அந்தப் பின்னல் தன்னனவிலே முழுமை பெற்று, அர்த்தம் உடைய காலப் பரப்பெல்லையைக் கொண்டதாகப் பரிமளிக்கும் காரணம் சிறுகதைப் பின்னல் ஒருமை அழுத்தத்தையே ஆதாரச் சுருதியாகப் பெற்றிருப்பதே ஆகும் உவமையாகச் சொன்னால், சிறுகதை எழுதும் பணியை ஒரு ‘ ஸ்போட்ஸ் காரை’ ஓட்டுகின்ற திறனுக்கு ஒப்பிடலாம். அதிக வளைவுகள் உள்ள குறுகிய தூரச் சாலையில் மிக அதிவேகத்தில் சிறுகதை என்ற ‘ ஸ்போட்ஸ் காரை’ ஓட்ட வேண்டும். கரணம் தப்பினால், மரணம் நிச்சயம் எனவே, ஒரு சிறுகதையை ஒருமை அழுத்தத்துடன் தொடங்கினோமா, முடித்தோமா என்ற விரைவான போக்கில், அதே நேரத்தில் அதன் நுட்பங்கள் சிதையாமல் எழுத வேண்டும்.
டாக்டர் மா.வீ.தியாகராசன் அவர்கள் கனரகச் சரக்குந் தான கதை உருவத்தையும், ‘ ஸ்போட்ஸ் காரான’ சிறுகதை உருவத்தையும் சீரான முறையில் அமைக்கும் வித்தை களைப் பெற்றவராகத் திகழ்கிறார். ஏனெனில் , இவர் அடிப்படையில் கதை, சிறுகதை ஆகிய இரண்டு வகைத் தன்மைகளை உடைய ஒரு கதை சொல்லியாக இருப்பதுதான்.
நூல் வரிசையில் ‘விண்ணில் ஒரு மணல் வீடு ‘, ஆசிரியரின் ஏழாவது நூல் கதைப் படைப்பிலக்கிய நூல்கள் என்று பார்த்தால், இந்நூல் ஆசிரியரது ஐந்தாவது நூலாக அமைகிறது. நனவீனச் சிறுகதை உருவம் தாங்கிய கதை நூல் என்று பார்க்கையில், இந்த நூல் இவரது முதல் சிறுகதை நூலாகும்.
ஆசிரியரின் படைப்புகள், சிங்கையின் ‘தமிழ் முரசு’ , ‘சிங்கா’ , மலேசியாவின் ‘தமிழ் நேசன்’ , தமிழகத்தின் ‘தமிழ் மாருதம்’ ஆகியவற்றில் பிரசுரம் கண்டுள்ளன.
இந்தச் சிறுகதை நூலில், என்பதுகளில் வரைந்த ஆறு சிறகதைகள், தொண்ணூறுகளில் எழுதிய ஒரு சிறுகதை, சமீப ஆண்டுகளில் உருவக்கப்பட்ட இரண்டு சிறுகதைகள் என, ஒன்பது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஒன்பது படைப்புக்களும், ஆசிரியரால் கடந்த இருபது ஆண்டுக் காலப் பர்பில் செதுக்கப்பட்டவை ஆகும்.
ஸ்ரீராமகிருஷ்ணர், ஏசுநாதர் போன்றோர் சிறுசிறு கதைகள் சொல்லி, மக்களுக்கு நல் கருத்துக்களை விளக்கினார்கள். அதுபோன்று கல்வியாளரும் படைப்பாளரும், பொதுச் சேவையாளருமான டாக்டர் மா. தியாகராசன் அவுர்கள், மாணவர்ளுக்கும், பெரியவர்களுக்கும் மானுட வாழ்வின் பண்பாட்டு மாட்சியை விளக்குவதற்குக் கதைக் கருவியே வல்லமையானது என்று தீர்மானித்து, அவ்வடிவிலேயே நல்வழிபடுத்தும் கருத்துக்களை வெளிக் கொணர்ந்துன்னார்.
சுருங்கக் கூறின், ஆசிரியர் எழுதியிருக்கும் இந்நூலின் ஆக்கங்கள், நவீனச் சிறகதை உருவம் தாங்கி , கருப்பொருளிலும், பாத்திரப் படைப்பிலும், நெறிகள் அடங்கிய மனித வாழ்க்கையின் பண்பாட்டு விளக்கமாய்ப் பிரகாசிக்கின்றன எனலாம் .
திரு. இராம.கண்ணபிரான்
ஆசியான் விருது பெற்ற சிங்கப்பூர்ச் சிறுகதை ஆசிரியர்.
சிங்கப்பூர்,
24.01.2003