மருதூர்க்கொத்தன்

 

சமர்ப்பணம்
அரிவரி வகுப்பில் ஏடு தொடக்கி வைத்து, சி. பா. த. பரீட்சையில் தேறியபின்னர் தன் கைப்பட விடு கைப் பத்திரமும் எழுதித்தந்த ஷரிபுத்தீன் வாத்தியார் (புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள்) முதலாக எனக்குக் கல்வி புகட்டிய, என் ஆற்றல்களை இனங்கண்டு ஊக்கு வித்த ஆசிரியப் பெருமக்களுக்கு இந் நூலைச் சமர்ப்பணம் செய்கிறேன்.
– மருதூர்க்கொத்தன்.

அவனது கதை

வங்காப் ஊரில் அவனும் அவனது கூட்டாளிப் பையன்களும் உரியானாகக் குருவி பிடித்துத்திரிவர். ஒரு நாள் பெரியவர் சிலர், உம்மா மௌத்தாகிவிட்டா என்று சொல்லி காட்டுப் புறமான ஒரு இடத்தில் கொண்டுபோய் அடக்கியது அவனுக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. காளாவி என்ற அந்த ஊரில் 1936ல் பிறந்தான் என்று பின்னால் அறிந்து கொண்டான்,

சின்னமுத்து என அழைக்கப்பட்ட உம்மா சம்மாந் துறையில் பிறந்தவள் என்றும், வாப்பா வாப்பு மரைக்கார் திருகோணமலையிற் பிறந்தவரென்றும் பிற்காலத்தில் தெரிந்து கொண்டான்.

வாப்பா அவனை திருக்கிணாமலையில் மாமாவின் வீட்டில் விட்டுச் சென்றபோது ஏலுமட்டும் அழுதான். பிள்ளைகள் இல்லாத மாமாவும் மாமியும் சாட்டிய ஆதரவில் மனந் தேறிப்போனான். வெள்ளைக்காரப் பட்டாளக்காரரின் தெருப்பவனியைப் புதினம் பார்க்கவென்று தார் றோட் டுக்குப் போவான். மாமி தினமும் காலையிலே புட்டோடு தின்னக்கொடுக்கும் கணவாய் அவியலின் ருசியை இன்னும் அவனால் மறக்கமுடியவில்லை. ஒருநாள் வந்த வாப்பா அவனை அழைத்துச்செல்ல முற்பட்டபோது மாமி விம்மி, விம்மி அழுததை அவன் எப்படி மறப்பான்.

காலை நேரம். வாப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கினான். பாதி தூரம் கிறவலும் மீதி தூரம் மணலுமாய் இருந்த பாதை வழியாக வாப்பா வின் பின்னால் சென்றான். ஒரு வளவுக்குள் குடிசையின் திண்ணைக்குப் போய்ச் சேர்ந்தபோது ஏகப்பட்ட வரவேற்பு, உருவில், பருமனில் உம்மாவை ஒத்திருந்த ஒருபெண், அவனை வாரி இழுத்து மடியில் இருத்திக்கொண்டு கன்னங்களில் கொஞ்சினாள். அந்த அணைப்பு நிரந்தரமாகி அவளே அவனுக்கு உம்மாவாக ஆகிவிட்டாள். மெளத்தாகும் வரை யில் அவளுக்கும் அவன் தான் மகன்.

பெரியம்மாவின் மகன் அச்சுமுகம்மதுக் காக்கா ஓதப் பள்ளிக்கும், பின் படிக்கிற பள்ளிக்கும் அழைத்துச் சென் றான். அரிவரி வகுப்பில் அவன் போயிருந்தபோது, சிவத்தத் தொப்பியோடு பாடம் சொல்லிக் கொடுத்த வகுப்பையா ஷரிவுத்தீன் வாத்தியார் என்று சில நாட்களின் பின் தெரிந்துகொண்டான். அவரில பிள்ளைகளுக்கு நல்ல விருப்பம்.

மருதமுனை அரசினர் தமிழ் ஆண்பாடசாலையில் 5 ஆம் வகுப்பில் பாஸ் பண்ணிவிட்டான். நெசவுப் பாடசாலையில் நெய்து கொண்டிருந்த அச்சு முகம்மதுக் காக்கா வோடு தானும் நெசவுப் பாடசாலைக்குச் செல்ல விரும்பினான். உம்மா அவனுடன் படிக்கிற பள்ளிக்குப்போய் விலத்தி விடுமாறு கேட்டாள். பள்ளிக்கு மட்டம் போட்டால் வளக்கையா கோட்டுக்கு அனுப்பிவிடுவார் என்ற பயம். கீச்சுக்குரலில் பேசும், காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் காதர் ஐ யாவும், ஆலிமு ஐயா அகமது லெவ்வையும், பெரியையா வைரமுத்து வாத்தியாரும் உம்மாவை ஏசி அனுப்பிவிட்டார்கள். அப்துல்காதர் ஐயா 6ம் வகுப்புப் புத்தகங்கள் சிலதை அடுத்தநாள் அவனுக்குக் கொடுத்தார். 8ம் வகுப்புப் படிக்காமல். 9ம் வகுப்பில் 1950ஆம் ஆண்டில் பிரவேசித்தான்.

மஷூர் மௌலானா என்ற இங்கிலிஷ் சேர் வந்தார். தி. மு. க. நூல்களையும் மற்றும் புத்தகங்களையும் கொடுத்து அவனை வாசிக்கத் தூண்டினார். அவர்போக இங்கிலிஷ் சேராக அப்துல்காதர் வந்தார். அவரும் ஒரு தி. மு. க. அபிமானி. வாசிக்கத் தூண்டினார். அடுக்கு மொழியில் பேச்சுக்கள் எழுதிக்கொடுத்துப் போட்டிசளுக்கு அனுப்பினார். அழகு தமிழ் நடையில் நாடகங்கள் எழுதி அவனையும் நடிக்கச்செய்தார்.

பெரியையா ஷரிபுத்தீன் வாத்தியார் எதைத்தான் விட்டுவைத்தார்? கையெழுத்துப் பத்திரிகையை அறிமுகப் படுத்தினார். பெயர் ‘குழந்தை’. அச்சொட்டான எழுத்து வன்மையும் சித்திரம் வரையும் வல்லமையும் உள்ள இப்றா லெப்பை வாத்தியார் அதன் ஆசிரியர். அவன் ‘வெண் ணிலாவே’ என்றொரு பாட்டெழுதிக் கொடுத்தான். முகப்பு அட்டையில் சித்திரத்தால் அலங்கரிக்கப்பட்டு பாட்டு வெளி வந்ததும் அவன் பெரிதும் மகிழ்ந்தான். அடுத்த இதழுக்கு அவன் எழுதிக்கொடுத்த கட்டுரையைத் திருத்தம் செய்த பெரியையா ‘ ‘நீ எழுத்தாளன் தாண்டா” என்றது இன்னும் அவன் காதுகளில் ஒலிக்கிறது. பாடசாலையால் மேற் கொள்ளப்பட்ட கொழும்பு – கண்டி சுற்றுலாவையிட்டு நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் – சுயமாக எழுதப் பட்ட – அவனுக்கே முதல் பரிசு கிடைத்தது. அவன் குதூ கலித்தான். சித்திரம் வரைவதிலும் எல்லா மாணவரையும் முந்தி நின்ற அவன் ‘குழந்தை ‘ ஆசிரியராகவும் தெரிவு செய்யப்பட்டான். மேலும் குதூகலித்தான்,

1953ல், ‘சுதந்திரன்’ பத்திரிகைக்கு அவன் எழுதி அனுப்பிய கட்டுரை அடுத்தவாரமே கொட்டை எழுத்தில் இரட்டைத் தலைப்புகளுடன் பிரசுரமாகியது. அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. சுதந்திரன் இலக்கியப் பூங்கா அவனது கட்டுரைகளை அடிக்கடி பிரசுரித்தது. கொழும்பில் படிப்பித்துக்கொண்டிருந்த நீலாவணன் அவனைப் பாராட் டிக் கடிதம் எழுதினார். உதவியாசிரியர் ‘பிரேம்ஜி’ உனது நடையிலும், விஷயத்தைக் கையாளும் முறையிலும் பெரி தும் கவரப்பட்டுள்ளார். உன்னைக் காணவும் விரும்புகிறார் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அவன் சுதந்திரன் காரியாலயத்துக்குப் போனான். ‘பிரேம்ஜி’ ஆசிரியர் சிவ நாயகம் அவர்களுக்கும் அவனை அறிமுகம் செய்தார்.

அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் கையெழுத் திதழுக்கு அவனும் அவனது சாலை நண்பன் முஸ்லிமும் இணை ஆசிரியர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆறுமாதப் பயிற்சி பெற்ற வேளை அவனும் முஸ்லிமும் இணைந்து ”மருதம்” கையெழுத்து இதழை சொந்த ஹோதாவில் நடாத்தினர். ”சுந்தரி” என்ற சிறுகதையை அதில் எழுதினான். அடுத்த இதழில் ‘சலவைக்காரியை’ எழுதினான். அவனது ஓவியங்கள் மருதத்துக்கு மெருகூட்டின.

56ல் ஆசிரியராயமைந்த பின்னர் நாட்கங்கள் எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றவும் சந்தர்ப்பங்கள் குவிந்தன. நடிக்கவும் செய்தான். அதிலும் அவன் துலங்கினான்.

1961ல் கல்முனை எழுத்தாளர் சங்கம் நீலாவணன் தலைமையில் உதயமான போது இணைச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டான். பின் அவன் மாத்திரமே செயலாளராக இயங்கவேண்டியும் வந்தது. சிறுகதை எழுதுமாறு நீலாவணனால் தூண்டப்பட்டான். “இருள்’, கதையை எழுதினான். கதையைப்படித்த நீலாவணன் துள்ளிக்குதித்து மகிழ்ந்தார். அதுவரை வி. எம். இஸ்மாயில் என்ற சொந்தப் பெயரில் எழுதியவன் தன்னை ஊட்டிய மருதமுனையை ”மருதூர்” என இலக்கியக் கலைச் சொல்லாக்கிக் கொத்தன்’ என்ற பதத்தையும் இணைத்துக் கொண்டான். தொடர்ந்து ‘நாணயம்’, ‘அதர்’, ‘கருமுகில்’ என்று கதைகள் வளர்ந்தன. இருள், இளங்கீரனின் மரகதத்

துக்காக அச்சாகியது. ‘இருள்’ மருதமுனை என்ற கிராமத்தை என் மனக் கண்முன் நிறுத்திவிட்டது எனக் கீரன் கூறிய தாக திரு. ராமநாதன் வாயிலாக அறிந்து கொண்டான். அந்த மரகதம் வெளிவராமலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்டபோது பெரிதும் வேதனை அடைந்தான்.

‘கருமுகில்’ 1962ல் தினகரனில் வெளிவந்து அச்சில் வெளிவந்த முதல்கதை என அறிமுகமாகியது அதே ஆண்டில் தினகரன் நடாத்திய இலக்கியப் பரிசோதனைக்களத்தில் சிறு கதையை எழுதும் வாய்ப்பை எஸ். பொ. அவனுக்கு வழங்கினார். ‘வேலி’யை பரிசோதனைக்களத்தில் எழுதினான்.

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழுக்கு இத்துணை வலுவும் வேகமும் இருக்கிறது என்பதை நிதர்சனமாகக் காட்டியதே கொத்தனின் வெற்றி யென்பேன்” என வ அ.வும் முஸ்லிம் பேச்சு வழக்கிலே ஒரு தனித்துவமுண்டு. அதனைச் செம்மையாகக் கையாண்டு சீரிய முறையில் கதை சொல்ல லாம் என்ற நம்பிக்கையின் குரலைத்தான் வேலியிற் பதித் துள்ளார்.”என அண்ணலும் விமர்சித்து அவனது பரி சோதனையை அங்கீகரித்தனர். சங்க அகத்துறைச் செய்யுட் கள் பல சம்பவங்களை உள்ளொதுக்கிப் பாடப்பட்டவுை. அந்த உத்தியைச் சிறுகதையில் கையாளும் பரிசோதனை யாகவே “மூக்குத்தி” யை எழுதினான். மட்டக்களப்பில் வழக்கிழந்துவரும் சடங்குகள், சம்பிரதாயங்களை வெளிக் காட்டும் பரிசோதனை முயற்சியாக சிறுகதைத் தொகுப் பொன்றை வெளியிட விரும்பிய ‘அன்புமணி’ முதலான மட்டக்களப்பு நண்பர்கள் ‘சேமன் இபுறாகிம்’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதுமாறு அவனைக் கேட்டனர். அதற்காக அவன் எழுதிய கதைதான் ‘சங்கிலித் தொடர்கள்….’

அவன், இலக்கியம் மக்களுக்காக, அதுவும் ஒடுக்கப் பட்ட மக்களுக்காக எழுதப்படவேண்டும் என்று விரும்பு கிறவன். கால ஓட்டம் வாழ்க்கையையும், சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றையும் எவ் வாறு தாக்கமுறச் செய்கின்றது என்பதையும், சமய, சமூக விதிகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்குமிடையே உள்ள முரண்பாட்டையும் தலைமுறை இடைவெளியையும் கதை களில் வெளிக்கொணர முயன்றான். வர்க்க குணாம்சத்தை இனங்காட்டவும் கூர்மைப்படுத்தவும் அவன் முயன்றான். கதைகளிலே கவிதையின் உருக்கத்தைப் பெய்விக்கவும், வித்தியாசமான முறையில் கதை சொல்லவும் விழைந்தான்.

‘அபூ-ஹபீனா’ என்ற புனை பெயரில் அவன் எழுதிய ‘ காவியத்தலைவன்’ என்ற கவிதை நூல் 1977ல் நூலுருவாகியது.

இந்த இனிய சந்தர்ப்பத்தில் அவனை உருவாக்கிய வர்கள் என்று அவன் கருதுகின்ற அத்தனை பேரையும் நன்ற உணர்வோடு நினைவு கூருகிறான். கதாசிரியன் என்ற வகை யில் அவனை இணங்கண்டு, ஊக்குவித்த மறைந்த கவிஞர் நீலாவணன், எஸ். பொ., வ. அ. மூவரையும் அவனால் மறக்கவேமுடியாது. இத்தொகுப்பில் இடம்பெறும் கதை களை வெளியிட்டு அவனை ஊக்கிய ஆசிரியர்களையும் நன்றி யோடு நினைவு கூருகின்றான் .

இத்தொகுப்பைப் பெரும் பொருட்செல்வில் நூலுரு வாக்கிய இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியக நண்பர் கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைச் சமர்ப்பிக் கிறேன். இதை வெளிக்கொணர்வதில் அதிகமதிகம் அக்கறை கொண்டுழைத்த பணியகப் பணிப்பாளர் ஜனாப். S. H. M. ஜெமீல், M. A. அவர்களுக்கும், செயலாளர், முதுபெரும் எழுத்தாளர் அ. ஸ. அவர்களுக்கும் நன்றிகூற வார்த்தை கள் இன்றித் திணறுகிறேன். பொருத்தமுற பதிப்புரையும் அணிந்துரையும் வழங்கிய அவ்விருவருக்கும், அழகிய அட்டைப்பட ஒவியத்தை வரைந்தளித்த ஜனாப். எஸ். ஏ. ஜெலீல் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன் .

மருதூர்க்கொத்தன்
மருதமுனை 01-01-1985.

******

“மருதூரின் கொத்த னெனும் பேரில் குளிர் தமிழில் நம் புதுமைப் பித்தனையே வெல்லு முயர் பீடுநடை சித்தி வரப் பெற்றவனே”
– கவிஞர் நீலாவணன்

“கொத்தனது சிறு கதைகள், ஈழத்து முஸ் லிம் சிறுகதை வளர்ச் சிக்கு ஆக்கபூர்வமான தொண்டினைச் செய் துள்ளன. கலாபூர்வ மான – கரிசனையுள்ள அவருடைய சிருஷ்டிகள் காலத்தை வென்றும் நிலவக்கூடியன”
– வை.அகமத்

“போர்க்களத்துச் சஞ்சயன்போல் ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையைத் தெளிவாக அறிந்து நிர்த்தாட்சண்ய மாகச் சொல்லக்கூடிய ஒருவர் வெளிவந்துவிட்டார். அந்த ஒருவருக்கு நிச்சயமாக ஓர் இடம் இருக்கிறது. மலையாள இலக்கியத்தில் வைகம் முகம்மது பஷீருக் குள்ளதைப்போல என்பதில் எனக்குச் சந்தேகமில்லை”
– வ.அ.இராசரெத்தினம்

மட்டக்களப்பின் சிறுகதைத் துறைக்குப் பெருமை சேர்த்தவர்களுள் பித்தன் ஷாவுக்குப் பிறகு மருதூர்க் கொத்தனே முக்கியமானவர்”
– எஸ்.பொ.

“கவிவளம்மிக்க கிழக்கிலங்கை மண்ணை ஜீவத் துடிப் புடன் கதைகளில் படைக்கும் சிருஷ்டிகர்த்தா இவர். நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும்மிக்க மருதூர்க்கொத்தன் இலக்கியம் மக்களுக்காகப் படைக் கப்படவேண்டும் என்ற இலட்சிய வெறியுடன் சிருஷ் டித்துக்கொண்டிருப்பவர்”
– டொமினிக் ஜீவா.

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *