சிவனு மனோஹரன்

சிவனு மனோஹரன்
 

சிவனு, மனோகரன் (1978.09.17 – ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும்.

இவரது நூல்கள்

  • ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும்
  • கோடாங்கி
  • மலைகளின் பாடல்
  • மீன்களைத் தின்ற ஆறு

என்னுரை – மீன்களைத் தின்ற ஆறு – மே 2016

சமூக அசைவியக்கத்துக்கான என் படைப்பு நிலத்தில் விளைந்த மூன்றாம் அறுவடையே “மீன்களைத் தின்ற ஆறு” எனும் இத்தொகுதியாகும். “ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும்”, “கோடாங்கி” ஆகிய தொகுதிகள் திறந்து விட்ட படைப்பு சாளரத்தின் ஊடே விரிந்த என் படைப்பு வெளி ஏனைய இரு தொகுப்புகளில் இருந்து தன் பார்வையை இன்னும் விசாலித்திருப்பதாக நம்புகிறேன். 

ஒரு படைப்பாளன் சமூக அக்கறையும், அவதானமும் கொண்டு இயங்கும் போதுதான் மக்கள் இலக்கியங்களை படைக்க முடியும் என நம்புபவன் நான் ஏனெனில் தன் சமூகத்தை அக்கறையோடு, கூர்மையாக அவதானிக்கும் போதுதான் யதார்த்த பூர்வமான படைப்புகளை வெளிக்கொணர முடிகிறது என்பது உறுதி. இத்தொகுப்பில் வரும் கதை மாந்தர்கள் அதியற்புதங்களை நிகழ்த்தும் சாகசகாரர்களாய் இல்லை சமூக யதார்த்தங்களை மீறிக் கொண்டு, புரட்சி நெருப்பை தன் தலையில் சுமப்பவர்களாகவும் இல்லை மாயக்கண்ணாடியும், அரிதாரமும் பூசிக்கொண்டு சமூகத்தில் உலவித்திரியும் வேடதாரிகளாயும் இல்லை. தன் அரசியல் உரிமைகளை புரிந்துக் கொள்ளும் திராணி யற்றவர்களாயும், வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிகளை இதுவரையும் கண்டடையாதவர்களாயும் நெறிபிறழ்வின் காரணமாக தன் வன்மங்களை அத்துமீறி பிறர் மீது திணிப்பவர்களாயும் உள்ளனர். இத்தகைய தனி மனித உள நெருக்கீடுகளையும், அதன் சமூக விளைவுகளையுமே பேசு பொருளாக்கியிருக்கிறது இத்தொகுப்பு. 

தனி மனித உளவியலையும், விளிம்பு நிலையில் வாழும் மக்கள் வாழ்வுக்காய் போராடும் நிலையையும், அகிலமயமாக்கல் சூழ்நிலையால் சிதைந்துப் போகும் எம் விழுமியங்களையும் பேச வேண்டிய தேவை என்ன? என்றொரு வினா எழும் போது மலையக தமிழ் இலக்கியம் இத்தனை கால வரலாற்றில் தொழிலாளர்களின் பொதுப் பிரச்சினைகளான அரசியல், வீட்டுரிமை, போராட்ட குணாம்சங்களை பேசியளவிற்கு தனி மனித உளவியலை அவ்வளவாய் பேசவில்லை. அக்குறையை மீன்களைத் தின்ற ஆறு ஓரளவிற்கேனும் நிவர்திக்கும் என்று நினைக்கிறேன். 

“மாணவனுக்கு கற்பிப்பதற்கு முன் மாணவணை கல்” என்பதை என் தொழில் தர்மமாகக் கொள்வதால் மாணவர்களிடம் கேட்டறிந்த விடயங்களையும், சமூக நெறிப்பிறழ்வின் காரணமாக சீரழிந்த சிறுவர்களும், உள நெருக்கீடுகளோடு வகுப்பறைகளில் வந்தமரும் மாணவர்களும், சமூக பொருத்தபாடின்றி பாடசாலைகள் வெளியேற்றும் மாணவர்களும் தான் என் கதைமாந்தர்கள் ஆயினர். தனி மனித வலிகளை ஆற்றும் வடிகாலலென ஒவ்வொரு ஆசிரியரும் மாறும் போது பாலில் கலந்த நீரென ஆகியிருக்கும் சமூக பிறழ்வுகளில் இருந்து புத்தெழுச்சி மிக்க மாணவ சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியும் என்பதனால் இப்பிரச்சினைகளைத் தாண்டி என்னால் புதிதாய் எதையும் எழுத முடியவில்லை என்பதுதான் உண்மை அதன் விளைவாகவே பெரும்பாலான படைப்புகள் மாணவர்களை மையப்படுத்தியதாக உருவாகின. 

“எந்தவொரு மனிதனும் எவ்வளவு ஈடுபாட்டுடன் உண்மையாகவும், அழகாகவும் தன் எண்ணங்களை வெளியிட விரும்பினாலும் அவனால் தன் ஓட்டத்தின் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிபடுத்த முடியும் அதனால் எல்லா படைப்பாளிகளும் மழலை மொழி பேசும் குழந்தைகளே” என்கிறார் மிகெய்ல்நைமி இக்கூற்றுடன் நானும் உடன்படுகிறேன். ஏனெனில் என் மூன்றாவது தொகுப்பின் வருகையும் கூட இன்னும் இன்னும் சிறுகதை இலக்கியத்தில் பயணிக்க வேண் துாரத்தையும் அதன் காத்திரத்திற்காக உழைக்க வேண்டிய நிலையையும் எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது. 

மேலெழுந்த நோக்குகையோடு என் சமூகத்தில் ஆங்காங்கு தலைகாட்டும் வளச்சி நிலைகளையும், இருநூறு வருட வரலாற்று பரிமாணங்களையும் என் படைப்புகளில் பதிவு செய்யவில்லை என்பதை பலர் குற்றச்சாட்டாக முன்வைத்திருக்கின்றனர். உண்மைதான் தோட்டத் தொழிலாளியின் பிள்ளையாகப் பிறந்து ஓர் ஆசிரியராகி என் தனிப்பட்ட வாழ்வை கொண்டு நடாத்துவதற்கு முடியுமாகியிருக்கிறது என்பதை மட்டும் கொண்டு என் சமூகத்தை பூரணத்துவமுடைய சமூகமென மார்தட்டிக் கொள்ள முடியவில்லை. இப்படி பல ஆசிரியர்களையும் விரல் விட்டு எண்ணக்கூடிய வைத்தியர்களையும், பொறியிலாளர்களையும் கண்டு விட்டதால் என் சமூகம் வளர்ந்து விட்டதாய் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. படித்து உயர்து விட்டதாய் சொல்லிக் கொள்ளும் ஆசிரியர்களும், புத்தி ஜீவிகளும் தோட்டங்களை விட்டு வெளியேறி நீண்ட நாட்களாகி விட்டதால் வெளியில் இருந்துக் கொண்டு தோட்டங்கள் வளர்ச்சி கண்டு விட்டதாய் சொல்லிக் கொள்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. 

தன் சமூகத்தை நிராகரித்து விட்டு நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்த புத்தி ஜீவிகள் தோட்டத் திருவிழாவிற்கும் வேண்டும் பண்டிகைகளுக்கும் மட்டும் பிரசன்னமாவதால் தோட்டங்களின் இயல்பு வாழ்வை அறிய முடியாமல் போய் விடுகிறது. என்னைப் பொறுத்தவரையில் தோட்டங்களில் மலிந்து போயிருக்கும் கைதொலைபேசிகள், நடுவீட்டை நாடக கொட்டகைகள் ஆக்கியிருக்கும் டிஷ் என்டனாக்கள், தலை நகரம் நோக்கிய நகர்வு, அதனால் சீரழிந்து போகும் கலாசாரம், மரண வீட்டையும் மதுக்கடையாய் மாற்றும் நவீனத்துவம் போன்றனவும் மாற வேண்டும் இவை மாறுவதற்கு மக்களின் சிந்தனை மாற வேண்டும். “சிந்தனை மாற்றம் ஏற்படும் போதுதான் பூரணமான சமூக மாற்றம் ஏற்படும்” என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாகும். 

இத்தொகுப்பில் உள்ள பன்னிரு கதைகளும் சமகாலத்தில் என் அவதானத்தில் விழுந்தவைகள் ஆனால் இவை மட்டும் என் சமூகல்ல என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இக்கதைகளில் வரும் கதை மாந்தர்களை வலையென மூடிக்கிடக்கும் வலிகளில் உழன்று பங்கேற்ற திருப்தி இப்படைப்புகளை வெளிக்கொணர்ந்த போது கிட்டியது. இனி இதை தலை மீது வைத்துக் கொண்டாடுவதற்கும் இல்லை துாவென துரத்தள்ளி விமர்சிப்பதற்கும் வாசகர்களுக்கு உரிமையுண்டு. 

மீன்களைத் தின்ற ஆறு தொகுதியாவதற்கு முன்னுரை வழங்கிய மரியாதைக்குரிய எழுத்தாளர் திரு. தி.ஞானசேகரன் அவர்களுக்கும், அணிந்துரை வழங்கிய திரு மு.சிவலிங்கம் அவர்களுக்கும் நண்பர் சுதர்மமகாராஜனுக்கும் நன்றிகள் மேலும் சரவை நோக்குநர் செல்வி சசிரேகாவிற்கும் நண்பர் சண்முகம் சிவகுமாருக்கும் நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன். மேலும் நண்பர் அந்தனி ஸ்டீவன், அஜித்சிங் போன்றோருக்கும் என் நன்றிகள் என் படைப்புகளுக்கு முதல் வாசகியாய் நின்று என்னை உற்சாகப்படுத்தும் மனைவி லோசனாவுக்கும், பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் நண்பர்களுக்கும், தம்பி பிரதீபனுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தொழிலாளர் கட்டிய
மணல் வீடும்
உணர்வு பிரலயமாய்
கொட்டிய கோடாங்கியும்
மீன்களைத் தின்ற ஆற்றோடு
கரையொதுங்காது.
அது உழைக்கும் மக்களுக்காய்
என்றும் உரத்தொலிக்கும்.

சிவனு மனோஹரன்,
ஸ்ரீ மஹா இல்லம்,
தரவளை மேற்பிரிவு, டிக்கோயா.
071 298 5552
sivanumanoharan@gmail.com