கே.பாலசுந்தரி

 

வயது 62  புதுவை யூனியன்  பிரதேசத்தை சேர்ந்த திருமலைராயன் பட்டினம் பிறந்த ஊர். பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ்ந்த போதிலும் எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு தடா. உடன் திருமண பொடா.

பதினாறு வயதில் தாரமாகிப். பதினேழு வயதில் தாயாகி, முப்பத்து ஆறு வயதில் பாட்டியான பின்னும் அடிவயிற்றில் அக்னியாக உயர்  கல்விக் கனவு. கனவு வசப்பட்டது ஐம்பது வயதில்.தொலைதூரக் கல்வி வாயிலாக வரலாற்றில் முதுகலைப் பட்டம். அறுபது வயதில் ‘அஞ்சல் மூலம் அறிவோம் காந்திஜியை ‘ என்ற பட்டய படிப்பில் தேர்வு.

ஐம்பது ஒன்பதாவது வயதில் எழுத்துலகப் பிரவேசம் வாரமலர், பெண்கள்மலர், அமுதசுரபி, திருக்கோவில், ஞானதேடல், கனிமொழி இதழ்களில் படைப்புகள். பெண்கள்  மலரில் இரு முறைகள் சிறந்த வாசகியாக கவிதைகள் தேர்வு.

அமுதசுரபி”வசுமதி ராமசாமி அறகட்டளை”ச் சிறு கதை போட்டியில் பரிசு எனது முதல் சிறு கதைக்கு,மேற்படி போட்டியில் பிரசுரிக்க ஏற்ற  கதையாக இரண்டாவது சிறு கதை தேர்வு.

வாரமலர் அமரர் TVR  நினைவு சிறு கதை போட்டியில் மூன்றாவது சிறு கதைக்கு ஆறுதல் பரிசு. சிறுசேமிப்பும்கவராக பணி.மேற்படி அனுபவங்கள் பற்றி திருச்சி காரைக்கால் வானொலி நிலையங்களில் பேட்டி.

அன்புடன்                                                               
கே.பாலசுந்தரி(மாங்குடிபாலா)  
மாங்குடி
திருவாரூர்

நான் ஏன் எழுதுகிறேன்

கே.பாலசுந்தரி வயது 66, புதுவை யூனியன் பிரதேச காரைக்காலை அடுத்த திருமலைராயன் பட்டினம் பிறந்த ஊர். ஆறு ஆண்டுகளாக எழுத்துலகப் பிரவேசம். பல்வேறு முன்னணி இதழ்களில் படைப்புகள் பரிசுகள். (அமுத சரபி. பெண்கள் மலர், வார மலர், திருக்கோயில், குடும்ப மலர்).

ஞானத்தேடல், கனிமொழி, வானம்பாடி சிறு இதழ்களில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சமையற் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வானொலி நேர்காணல்கள்.

ஞானத்தேடலில் வெளியான கட்டுரைகள் ‘தஞ்சைத் தரணியிலே’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. விரைவில் இரண்டாவது நூலும் வெளிவர இருக்கிறது. பல்வேறு கவிதைகளில் பங்கேற்பு.

எழுத்து!

எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டுவதே எழுத்து! உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பதே எழுத்து!

இராமாயணம் உருவாகக் காரணமாய் அமைந்ததே இணையை இழந்த கிரெஞ்ச பட்சியின் உணர்வுப் பூர்வமான சோகக் குரல் தானே? அந்த வகையில் அவரவர் உணர்வுகளின் வெளிப்பாடே எழுத்து.

என் தந்தை புத்தக முகவராகப் பணிபுரிந்தவர். எனவே எனது எட்டு வயதிலிருந்து பதினாறு வயதுக்குள், மு.வ.வும்.கல்கியும், ஜெயகாந்தனும், புதுமைப் பித்தனும், தி.சானகிராமனும், செகசிற்பியனும், நா.பார்த்தசாரதியும், சாரம் கிருஷ்ணனும், லட்சுமியும், தொ.மு.பாசுகரத் தொண்டைமானும் எனக்கு அறிமுகம்.

பதினாறு வயதில் மனைவியாகி, பதினேழு வயதில் தாயாகி, முப்பத்து ஆறு வயதில் பாட்டியாகி, வறுமையில் போராடி, குழந்தைகளைக் கரைசேர்த்து நிமிரும்போது தசரதனது காதோர நரையாக முதுமையின் ஆரம்பம். முறையான படிப்பு இல்லையென்றாலும், நானும் எழுத வேண்டும் என்ற முனைப்பு இளமையிலேயே உண்டு. இளமையில் படிப்பு எட்டாம் வகுப்பில் இடைனிறுத்தம் முதுமையில் முதுகலைப் பட்டம் வரலாற்றில் (50 வயதில்) இருந்தும் மனத்துக்குள் ஒரு வெறுமை.

மனநல மருத்துவர் மருத்துவர் செலின் அவர்களின் அறிவுரையைப் படித்தபின் எனக்குள் ஒரு மாற்றம்.

“வாழ்வில் கண்ட அவமானங்களையும். ஏளனங்களையும் துரோகங்களையும் மனக் கண்ணில் கொண்டு வாருங்கள். அந்த வலியை எப்போதும் உணருங்கள். மறுபடி மறுபடி அந்த நிகழ்ச்சியை மனத்துக்குள் ‘ஆக்சன் ரீப்ளே’ செய்யுங்கள். அப்போது உங்கள் மனத்தில் தோன்றும் வெறியே உங்கள் வெற்றிக்கான உந்து சக்தி”. இது எல்லோருக்கும் பொருந்தும் தானே?

வாழ்க்கையில் என்னைச் செதுக்கிய உளிகளை விட சில்லுசில்லாய்ச் சிதைத்த உளிகளே ஏராளம். அந்தச் சில்லுகளில் இருந்து செதுக்கப்பட்ட உருவங்களே எனது படைப்புகள்.

அமரர் சுசாதா கூறியிருக்கிறார் : “ஒவ்வொருவர் எழுத்திலும் உண்மையும் கற்பனையும் கலந்தே இருக்கும். இது உண்மை? எது கற்பனை என்று பிரித்து அறியாத வகையில் எழுதுபவரே சிறந்த படைப்பாளி”. அவர் கூறியபடி ‘கான மயிலாடக் கண்டிருந்த வாங்கோழியாய்’ என் எழுத்துச் சிறகை விரித்தேன். அநுபவர்களைத் தொகுத்தேன். அரங்கேற்றம் செய்தேன். காயங்களை மாற்றும் மாயம் எழுத்துக்கு உண்டுதானே?

எழுத்து என்பதும் ஒருவித போதையே! இதில் ஆழ்ந்தவர்கள் மீள்வது என்பது இயலாத காரியம். அந்தப் போதையில் தம்மை ஆழ்த்திக் கொள்வது தனிச் சுகம். அந்தப் போதையில் நமது உபாதைகளை மறப்பது சுகமான அநுபவம். அந்த ஆனந்த அநுபவத்தில் திளைத்து என்னை மறக்கவே நான் எழுதுகிறேன்.

சான்றிதழ்கள்

https://mangudibalaa.weebly.com/297030062985302129933007298029963021296529953021.html

Website: mangudibalaa.weebly.com