ஏ.ஏ.ஹெச்.கே.கோரி

 

திருநெல்வேலிக்காரரான ஏ.ஏ.ஹெச்.கே.கோரி இப்போது வசிப்பது சென்னையில். ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும், இலக்கியப் பத்திரிகைகளிலுமாக இதுவரை 200 ப்ளஸ் சிறுகதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள். மெய்ன் காட் கேட் என்கிற சிறுகதைத் தொகுதியும், காதில் மெல்ல காதல் சொல்ல என்கிற நாவலும் 2009ல் வெளியாயின. மாம்பழ சாலை என்கிற ஆறாவது சிறுகதைத் தொகுதியும், சிரிக்கும் நாளே திருநாள் என்கிற நாவலும் 2011ல் வெளியாகவிருக்கின்றன. 2009ம் வருஷம் கல்கி மற்றும் கலைமகள் பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் கோரிக்கு முதல் பரிசு.

1. எழுத்துலகில் நீங்கள் காலடி வைக்கக் காரணமாக இருந்தது எது? யார்?

எழுபதுகளில், எண்பதுகளில் எழுத வந்த இளைஞர்களில் பெரும்பாலோர் வேலையில்லாத் திண்டாட்டம், காதல் தோல்வி, வாழ்க்கையில் விரக்தி போன்ற துயரங்களின் தாக்கத்தினால் எழுத வந்தவர்கள். இதில் முன்னது மட்டும் எனக்கு இருக்கவில்லை. மன வலிக்கு எழுத்து வடிவம் கொடுத்துக் கீழே இறக்கி வைக்கிற உந்துதலில் எழுத வந்தவன்தான் நானும். நம்ம எழுத்தைப் பத்திரிகைகளில் பார்க்கிறபோது, விரக்திகளையெல்லாம் முந்திக்கொண்டு ஒரு பரவசம் எட்டிப் பார்த்தது. முதல் கதைக்கு குமுதத்திலிருந்து எண்பது ரூபாய் வந்தபோது, ஒரேயொரு காலரையாவது தூக்கிவிட்டுக் கொள்ள நியாயம் இருக்கிறது என்று ஓர் உற்சாகம் தலை தூக்கியது.

குமுதம், ஆனந்த விகடன், தினமணி கதிர் வட்டத்துக்குள் இருந்த என்னுடைய தோளைத்தட்டி, எனக்கு வானத்தை சுட்டிக்காட்டி, கணையாழி, சதங்கை, செம்மலர், தாமரை போன்ற இலக்கியப் பத்திரிகைகளை எனக்குக் காட்டித் தந்தவர் என்னுடைய இனிய நண்பர் சா. ஜோதிவிநாயகம்.

கணையாழியும், சதங்கையும் இப்போது இல்லை. ஜோதி விநாயகமும்!

2. போர் முனை வாளை விட பேனா முனை கூரியது என்ற வாசகம் இன்றும் பொருந்துமா?

இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே அந்த வாசகம் பொருந்தாது. எழுத்தாளனை மேன்மைப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட ஒருதலைப் பட்சமான வாசகம் இது என்பதைப் பாரபட்சம் பார்க்காமல் நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். வாள் முனையையும், பேனா முனையையும் ஒப்பிடுவதே தப்பு. நாட்டுப் பாதுகாப்புக்காக வட எல்லையின் பனிக்கட்டிக் குளிரில், ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் உயிரையும் பிடித்துக்கொண்டு நிற்கிற போர்வீரர்களையெல்லாம் வாபஸ் வாங்கிக்கொண்டு, ஒரு பத்தாயிரம் எழுத்தாளர்களைத் திரட்டி, கையில் பேனாவைக் கொடுத்து எல்லையில் நிறுத்தி வைப்பது சாத்தியமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஃப்ரஞ்சுப் புரட்சி போன்ற சில சாதனைகள் பேனா முனையால் நிகழ்ந்திருக்கலாம். சமூக மாற்றங்களை எழுத்துக்கள் ஏற்படுத்தியிருக்கலாம். பாமரர்களிடையே விழிப்புணர்வை படைப்பாளிகள் சிலர் ஊட்டியிருக்கலாம். அதற்காக ஒரேயடியாக வாள்முனையை மழுங்கடித்துவிட முடியாது.

3. சிறந்த சிறுகதையின் லட்சணம் என்ன?

நாலுபக்க அஞ்சுபக்க அச்செழுத்துகளைத் தாண்டி, வாசகனை யோசிக்க வைப்பதுதான் சிறுகதையின் லட்சணம் என்று நினைக்கிறேன்.

4. உங்கள் சிறுகதையின் சிறப்பம்சமாக எதைக் கருதுகிறீர்கள்?

யதார்த்தம், நெஞ்சைக் கனக்கச் செய்கிற கதைகளில் கூட ஒரு lighter element, மனசை சுண்டியிழுக்கிற மாதிரி வெடுக்கென்று ஒரு கடைசி வாக்கியம் இவற்றை என்னுடைய சிறுகதையின் சிறப்பம்சங்களாகச் சொல்லுவேன்.

5. ராஜேந்திர குமார் பாணியில் துப்பறியும் கதை எழுதுவதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?

நிறுத்தவில்லை. ஆரம்பித்தால்தானே நிறுத்துவதற்கு! ராஜேந்திரகுமார் மட்டுமல்ல, யார் பாணியிலேயுமே நான் துப்பறியும் கதை எழுதியதில்லை. ‘கொல்லத்தான் நினைக்கிறேன்’ என்கிற என்னுடைய சிறுகதையைத் துப்பறியும் கதை என்று கொண்டால், நான் எழுதிய ஒரே துப்பறியும் கதை அதுதான். ‘அமாவாசையும் அப்துல்காதரும்’ என்கிற என்னுடைய சிறுகதை துப்பறியும் கதை போன்ற தோற்றத்தைத் தருகிற வட்டார வழக்குக் கதை. இந்த ரெண்டுமே யாருடைய பாணியையுமே பின்பற்றி எழுதப்பட்டவை அல்ல. என்னுடைய பாணியிலேயே அமைந்த, யதார்த்தத்திலிருந்து முரண்படாத, கடைசி வாக்கியத்தில் ஒரு சொடுக்குப் போடுகிற சிறுகதைகள் இவை.

6. வெளியிடும் பத்திரிகைக்கேற்ப கதை, மொழிநடை ஆகியவற்றைத் தேர்வு செய்வீர்களா?

இல்லை. கதையை எழுதி முடித்த பின்னால், இது இந்தப் பத்திரிகைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றும். அதன்படி அந்தப் பத்திரிகைக்குக் கதை போய்ச் சேரும்.

7. சிறுகதை இலக்கியத்தில் உங்களுடைய பாணி என்று எதைச் சொல்வது?

எவருடைய பாணியையும் பின்பற்றாமல், யாரையும் முன்னோடியாய் ஏற்றுக் கொள்ளாமல் எனக்கென்று ஒரு தனிப்பாணியை அமைத்துக்கொண்டிருக்கிற மனநிறைவோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறுகதைக்குக் கருவை விட மொழியாளுமையும் ஸ்டைலும் முக்கியம் என்று நினைக்கிறவன் நான். கரு களவாடப் படலாம். ஆனால் மொழியாளுமையும், ஸ்டைலும் களவாடப்பட முடியாதது. அதுதான் ஒரு படைப்பாளியின் தனித்தன்மையைப் பறை சாற்றுவது. அதோடு, கடைசி வாக்கியத்தில் அல்லது கடைசிப் பத்தியில் ஒரு கொக்கி போட்டு சுண்டியிழுத்து வாசகனைச் சிலிர்க்கச் செய்கிற உத்தியை அல்லது வித்தையையும் என்னுடைய தனித்தன்மையாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது, ஓ. ஹென்றியின் பாணி என்கிற கருத்து சில வாசகர்களிடையே இருக்கிறது. இருக்கலாம். ஆனால் இது ஒரு தற்செயல் நிகழ்வே. ஏனென்றால், ஓ. ஹென்றியை நான் வாசித்ததே இல்லை.

8. வாசகர்கள் மனதைக் கனக்கச்செய்த ‘ஃபெயில் காலம்’ போண்ற படைப்புகளை நிலாச்சாரலில் மீண்டும் எப்போது படைப்பீர்கள்?

ஃபெயில் காலத்தைப் பாராட்டியிருப்பதற்கு நன்றி. வாசகர் மனதை மட்டுமல்ல, என்னுடைய மனதையும் கனக்கச் செய்த கதை அது. ஃபெயில் காலத்துக்கு இணையான கனமான கதைகள் சில ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். சிகப்பாய்க் கொஞ்சம் கண்ணீர், மாதா, யாழ் இனிது யார் சொன்னது, அப்பன் தொழில், வளைக்காதே ஒடிஞ்சி போகும் போன்ற கதைகளைச் சொல்லலாம். இதுபோன்ற சிறுகதைகளை இன்னும் படைத்து, அதி விரைவில் நிலாச்சாரல் வாசகர்களின் மனதைக் கனக்கச் செய்கிற அஜென்டா கைவசம் இருக்கிறது.

9. சமூக அரசியல் சீர்கேடுகளைச் சுட்டும் கதைகளில், நகைச்சுவையுணர்வு இழையோடுவது அக்கதையின் இறுக்கத்தைக் குறைத்து விடாதா?

அங்கதமான நகைச்சுவை (satire), சமூக அரசியல் சீர்கேடுகளைச் சுட்டும் கதைகளில் இழையோடலாம். இழையோடத்தான் வேண்டும். அப்போதுதான் இறுக்கம் குறையும். குறையத்தான் வேண்டும். இல்லாவிட்டால் கதை கடினமாகி விடும். கதை கனமாய் இருக்கலாம், கடினமாய் இருக்கக்கூடாதில்லையா!

10. எழுத்தாளராய் உங்களைப் பெருமையடையச் செய்த விமர்சனம் என்று எதைக் கருதுகிறீர்கள்?

‘தடுமாற்றங்கள் பதினஞ்சு’ என்கிற என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி திருநெல்வேலியில் வெளியானபோது, அந்தக் கதைகளை வாசித்துவிட்டுப் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் எனக்கு ஒரு நீளமான கடிதம் எழுதியிருந்தார். ஒவ்வொரு கதையையும் விலாவாரியாய்ப் பாராட்டி ரொம்ப சந்தோஷமாய் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். ஆக்கபூர்வமான அந்த விமரிசனத்தைக் குறித்து இன்றும் நான் பெருமைப்படுகிறேன்.

கணையாழியில் பிரசுரமான காய்தல் என்கிற என்னுடைய ஐந்தே ஐந்தாவது சிறுகதை இலக்கியச் சிந்தனைத் தேர்வு பெற்றபோது ‘அஞ்சாவது கதையிலேயே இலக்கியச் சிந்தனை வாங்கினவங்க எனக்குத் தெரிஞ்சி யாருமே இல்ல’ என்று பாராட்டிய ஜோதிவிநாயகத்தின் வாக்கியத்தை நினைவுகூர்ந்து பெருமைப்படுகிறேன்.

ஆர். அனந்தராமன். பெங்களூரில் வசிக்கிற வாசக டாக்டர். என்னுடைய ஒவ்வொரு சிறுகதையையும் வாசித்துப் பாராட்டித் தொடர்ந்து எஸ்ஸெம்மெஸ் அனுப்பி என்னைத் திணறடித்துப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறவர் டாக்டர் அனந்தராமன்.

11. ‘சமகால எழுத்தாளர்களில் சிறந்த பத்து சிறுகதையாளர்கள்’ என்று கேட்டால் யார் யாரைக் கூறுவீர்கள்?

யாழ்ப்பாணத்தில் வசிக்கிற ஐ.சாந்தனைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும். நான் எழுத்தாளனாய் உருவாவதற்கு முன்பே கணையாழியில் அவருடைய கதையை வாசித்து சாந்தனின் எழுத்தின் மேல் காதல் வசப்பட்டவன் நான். ரெண்டாவது, திருநெல்வேலியில் வசித்த ஜோதிவிநாயகம். பிரசுரம் பெறாத ஜோதியின் பல சிறுகதைகளைக் கையெழுத்துப் பிரதிகளாய் வாசித்துப் பரவசம் அடைந்திருக்கிறேன்.

அடுத்தது எஸ். ஷங்கரநாராயணன். சிறுகதையில் தூக்கலாய் இருக்கவேண்டும் என்று நான் கருதுகிற மொழியாளுமை, ஸ்டைல், தனித்தன்மை என்கிற கோட்பாடுகளுக்குள் கச்சிதமாய்ப் பொருந்துகிற எழுத்து ஷங்கரநாராயணனுடையது. அடுத்தபடியாய் பா.செயப்பிரகாசம். ஒரு ஜெருசலேம், என்கிற செயப்பிரகாசத்தின் சிறுகதைத் தொகுதி அதியற்புதமான சிறுகதைகளை உள்ளடக்கியது. சாவகன், சேனாதிராஜா என்கிற ரெண்டு இளம் இலங்கை எழுத்தாளர்கள் என்னை சமீபத்தில் பிரமிக்கச் செய்தவர்கள். ஆறு பேராச்சு. இதற்குமேலும்சொல்ல வேண்டுமானால் ரொம்ப யோசிக்க வேண்டும்.

12. உங்கள் கதைகளில் வாசகர்களை அதிகமாக கவர்வது எது? நகைச்சுவையுணர்வு / வட்டார வழக்கு?

திருநெல்வேலிக்காரன் என்கிற திமிரில் திருநெல்வேலி வட்டார வழக்குக்குள்ளே சர்வ சுதந்திரத்தோடு புகுந்து புகுந்து புறப்படுவதில் புளகாங்கிதங் கொள்கிறவன் நான். தவிர மதுரை, திருச்சி, தூத்துக்குடி, பரமக்குடி, ஊட்டி முதலிய ஊர்களில் வாழ்ந்தவன் என்கிற உரிமையிலும், இலங்கைக்கு அடிக்கடி போய்வருகிறவன், இலங்கை எழுத்தாளர்களோடும் எழுத்துக்களோடும் பரிச்சயங் கொண்டவன் என்கிற தகுதியிலும், சென்னையில் இப்போது வசித்துக் கொண்டிருக்கிறவன் என்கிற தெனாவட்டிலும் அந்தந்த லோக்கல் வட்டார வழக்கில் எழுதுவதை ஒரு கலையாய்க் கொண்டிருக்கிறேன். செந்தமிழில் செயற்கையாய் உரையாடல்களை அமைப்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது. என்னுடைய வட்டார வழக்கு உரையாடல்கள் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பதற்கு இணையாகவே என்னுடைய சிறுகதைகளில் இழையோடுகிற மென்மையான நகைச்சுவையும் ரசிக்கப்படுகிறது. இந்த ரெண்டில் வாசகர்களை அதிகமாய்க் கவருவது எது என்று சொல்லுவது ரொம்பக் கஷ்டம்.

13. உங்கள் எழுத்தின் நோக்கம் என்ன?

இந்தக் கேள்விக்கு பதில் கொஞ்சம் நீளமாய்ப் போகும். பரவாயில்லையா? பரவாயில்லை என்கிறீர்கள். சரி சொல்கிறேன்.

வாள்முனையையும், பேனாமுனையையும் ஒப்பிடுவது தப்பு என்று ரெண்டாம் கேள்விக்கான பதிலில் சொல்லியிருந்தேன். ஆனாலும் சில வரையறைகளுக்குட்பட்டு பேனாமுனையாலும் சாதனைகளை நிகழ்த்த முடியும், சாதனைகளை நிகழ்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். முயற்சிகளை மேற்கொண்டுமிருக்கிறேன். பெரிதாய் சாதனை ஏதும் நிகழ்த்த முடியாமல் போகலாம்தான். ஆனால் சில நபர்களிடமாவது ஒரு மனமாற்றத்தையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கமிருக்கிறது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி எக்கச்சக்கமான சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.

பிரபலமான ஒரு சங்கிலித்தொடர் உணவுவிடுதியின் உரிமையாளர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். பலகாலமாய் அவர் செய்துவந்த அசிங்கமான காரியங்கள் ஒரு கொலையில் முட்டிக்கொண்டு நின்றபோது கைது செய்யப்பட்டார். உள்ளே போகவும் வெளியே வரவுமாக இருப்பார். இப்போது உள்ளேயா வெளியேவா என்று யாருக்குமே தெரியாது. கோடிகளும் கேடிகளும் கைவசம் இருந்தால் எந்த பஞ்சமா பாதகத்தையும் செய்துவிட்டுத் தப்பிவிடலாம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிற சமூகவிரோதி. ஆனால் அவருடைய உணவுவிடுதிகளில் கூட்டம் அலைமோதும். உணவுவிடுதியின் உரிமையாளர் ஒரு சமூகவிரோதி என்பது அந்தக் கூட்டத்துக்குத் தெரியும். ஆனாலும் அங்கேதான் போய் இடித்துக்கொண்டு நிற்பார்கள். கூட்டமாய் இருந்தாலும் சாப்பாடு நல்லாயிருக்கு என்பார்கள். காசு கூடன்னாலும் காஃபி டேஸ்ட்டாயிருக்கு என்று ஒரு காரணம் சொல்லுவார்கள். இந்த சமூகவிரோதியின் சாப்பாட்டுக் கடைகள் புறக்கணிக்கப்பட வேண்டாமா? அந்தப் புறக்கணிப்பு நடந்திருந்தால் துபாயிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அந்த நிறுவனம் கிளைகள் பரப்பிப் படர்ந்திருக்க முடியுமா? என்ன ஜனங்கள் இவர்கள் என்கிற மனக்கொதிப்பை சமீபத்தில் டோக்கன் ஸ்ட்ரைக் என்கிற சிறுகதையில் வெளிப்படுத்தியிருந்தேன். அந்தக் கதையை வாசித்து எத்தனை சாப்பாட்டுப் பிரியர்களும், காஃபி ரசிகர்களும் மனந்திருந்தினார்கள் என்று தெரியாது. ஆனாலும் என்னுடைய நோக்கத்திற்கு வரிவடிவம் கொடுத்து விட்டதில் ஒரு திருப்தி.

வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் குடியமர்த்துகிற கொடுங்கோன்மையைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறேன், உறவுதான் ராகம் என்கிற சிறுகதையில்.

லஞ்ச ஊழல் அசிங்கத்தை உயிரெலாம் பாசம் என்கிற கதையில் அலசிக் காயப்போட்டிருக்கிறேன். லஞ்சம் வாங்கித் தின்பது ஆண்வர்க்கத்தின் ஏகபோக ஈனத்தனம் என்று பாமரத்தனமாய் நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, பெண் அதிகாரி ஒருத்தி நாக்கூசாமல் லஞ்சம் கேட்ட அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அந்தத் தாக்கத்தில் அக்னிப்பிரகாசம் என்று ஒரு சிறுகதை பிறந்த்து.

மதுப் பழக்கத்தின் அவலத்தை விமர்சித்து அப்பன் தொழில், குடிமக்கள் என்று ரெண்டு கதைகள் எழுதியிருக்கிறேன். குடியைக் குறித்து பல கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கலாம். திரைப்படங்களில் கூட குடி குடியைக் கெடுக்கும் என்று பலமுறை காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் குடியைவிட பெரிய உயிர்க்கொல்லியான சிகரெட் என்கிற சாபக்கேட்டைப் பற்றி எழுதப்படவுமில்லை. திரைப்படத்திலும் சொல்லப்படவில்லை என்கிற உறுத்தல் என்னை ஒரு சிறுகதை அல்ல, நாவல் எழுதத் தூண்டியது. ஏப்ரல்/மே 2011ல் வெளியாகவிருக்கிற சிரிக்கும் நாளே திருநாள் என்கிற என்னுடைய நாவல் புகைப்பழக்கத்தைச் சாடுகிற ஒரு காதல் கதை. நாவல் வெளிவந்த பிறகு அதை வாசித்துவிட்டு ஒரேயொரு வாசகராவது சிகரெட்டைக் காலுக்கடியில் போட்டு சிதைத்துவிடுகிற புண்ணிய காரியம் நிகழ்ந்தால் நான் இலக்கியம் படைக்கிற நோக்கம் நிறைவு பெறுகிற அறிகுறி தெரிய ஆரம்பித்துவிட்டதாய்ப் பெருமிதம் கொள்ளுவேன்.

14. நிலாச்சாரலும் நீங்களும்..?

நிலாச்சாரலை எனக்கும் என்னை நிலாச்சாரலுக்கும் அறிமுகப்படுத்தி வைத்த அன்பான சிநேகிதர் எஸ். ஷங்கரநாராயணனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்லவேண்டும். உள்ளூர் இலக்கியப் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டு, சில ஆயிரம் வாசகர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த ஏ.ஏ.ஹெச்.கே. கோரியை அகில உலக வாசக வட்டத்திற்கு வாசிக்கக் கொடுத்துப் பிரபலப் படுத்தியது நிலாச்சாரல் என்று நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

கொழும்பில், வி.சுந்தரலிங்கம் என்று ஒரு குடும்ப நண்பர் இருந்தார். அறுபது எழுபதுகளில் இலங்கை வானொலியிலும், பிறகு லண்டன் பி.பி.சி. தமிழோசையிலும் ஆதிக்கம் புரிந்துகொண்டிருந்த வெங்கலக் குரல் வேந்தர். அவருடைய மனைவி திருமதி பராசத்தி சுந்தரலிங்கம் புலம் பெயர்ந்து இப்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். என்மேல் அபிமானங் கொண்டிருக்கிற இலக்கிய வாசகி. கடந்த பத்தாண்டுகளில் பத்திரிகைகளில் வெளிவந்த என்னுடைய சிறுகதைகளோ என்னுடைய சிறுகதைத் தொகுதிகளோ அவருக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. சமீபத்தில் ஈமெய்லில் என்னைத் தொடர்புகொண்ட திருமதி பராசக்தி சுந்தரலிங்கம், நிலாச்சாரலில் தொடர்ந்து என்னுடைய கதைகளை வாசித்து வருவதாய் சந்தோஷப்பட்டார். சந்தோஷம் அந்த அவுஸ்திரேலிய வாசகிக்கு மட்டுந்தானா? அதைவிட அதிக சந்தோஷம் எனக்கு. திரும்பவும் நன்றி நிலாச்சாரலுக்கு.

15. நன்றாக பாடக் கூடியவர் என்று அறிந்தோம்…உங்கள் ரசிகர்கள் எப்படி?

முன்னொரு காலத்தில் தூத்துக்குடியில் இருந்தபோது அட்டகாசமான பக்கவாத்தியங்களோடு பல மேடைகளில் பாடியிருக்கிறேன். ‘சின்ன மாமியே உன் சின்ன மகலெங்கே, பல்லிக்குச் சென்றாலோ படிக்கச் சென்றாலோ’ என்கிற நித்தி கனகரத்தினத்தின் பொப்பிசைப்பாடலை இலங்கை உச்சரிப்போடு பாடி அப்ளாஸ் வாங்கியிருக்கிறேன். இப்போது சென்னையில் ரோட்டரி க்ளப் இசைமேடைகளில் பாடுவதுண்டு. ஏ.எம். ராஜா மாதிரி குரல் என்று என்னைக் குறித்து நடக்கிற உரையாடல்களை ஒட்டுக்கேட்டு கர்வம் கொண்டதுண்டு. அதோடு நான் ஒரு சந்திரபாபு ஸ்பெஷலிஸ்ட். பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே என்பது என்னுடைய அபிமானப் பாடல். எல்லாமே சினிமாப் பாடல்கள்தான். சங்கீதமெல்லாம் சத்தியமாய்த் தெரியாது. இனிமையான பழைய பாடல்களின் மேலே மோகமும், இந்தக்கால இரைச்சல்களின் மேலே கோபமும் உண்டு.

உதயகண்ணனும் எஸ். ஷங்கரநாராயணனும் இணைந்து அண்மையில் பதிப்பித்த இருவாட்சி பொங்கல் மலரில் ‘பழைய பாடல்களில் பரவசங் கொள்கிற பாமரனொருவன்’ என்கிற என்னுடைய கட்டுரை இருக்கிறது. நிலாச்சாரலின் பார்வைக்கு அந்தக் கட்டுரையை அனுப்பி வைத்திருக்கிறேன்.

நிலாச்சாரலுக்குப் பேட்டியளிக்கிற கௌரவத்தை எனக்குத் தந்ததற்காக நன்றி.

நன்றி: ​​​​​​​இரத்தினச் செவ்வி – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி – Nilacharal