இரா.துரைமாணிக்கம்

இரா.துரைமாணிக்கம்2

இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார்.

தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர் வானொலியில் சமூக நேரம் எனும் நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளார்.

சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் பொருளாளராகவும், தமிழர் பிரதிநிதித்துவ சபை மற்றும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கச் செயலவை உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பொருளாளராகவும் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் கொள்கை முழக்கம், மாணவர் பூங்கா போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1997ல் தமிழாசிரியர் சங்கம் வெளியிட்ட தமிழாசிரியர் குரல் எனும் இதழின் ஆசிரியரும் இவரே.

வேம்பரசன் எனும் புனைப்பெயரில் சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய துறைகளில் எழுதிவரும் இவரின் முதல் ஆக்கம் 1958ல் மாணவர் மணிமன்ற மலரில் வெளியானது.

எழுதியுள்ள நூல்

  • காலம் கடந்துவிட்டது, 1990.
  • வளர்பிறை, 2006.
  • எல்லைக்கோடு, 2006.
  • மரணம் நம்மைப் பிரிக்கும் வரை, 2008.

முத்தமிழ் விழா – தமிழவேள் விருது 2026

1988ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும் தமிழவேள் விருது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்துறையின் ஒரு முக்கிய விருதாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு (25/4/2026) சனிக்கிழமை, காலை 9.30 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற 31 ஆவது முத்தமிழ் விழாவில் தமிழாசிரியரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் அதன் செயலவை உறுப்பினராகவும், பொருளாராகவும் தொடர்ந்து 40 ஆண்டுகள் துணைத் தலைவராகவும் சேவையாற்றிய திரு துரைமாணிக்கம் அவர்களுக்கு தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் திரு. விக்ரம் நாயர் அவர்கள், திரு. துரைமாணிக்கம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, தமிழவேள் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது 50ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடவிருக்கும் இந்த ஆண்டில், கழகத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த திரு துரைமாணிக்கம் அவர்களுக்கு தமிழவேள் விருது வழங்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

அவருக்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.💐

புகைப்படத்தில்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர் திரு இரா தினகரன் ஜே.பி, ஆண்டுதோறும் தமிழவேள் விருதை வழங்குவதற்கு நிதியுதவி வழங்கி வரும் எம்.ஏ .முஸ்தபா அறக்கட்டளை நிறுவனர் திரு முஸ்தபா, சிறப்பு விருந்தினர் திரு விக்ரம் நாயர், விருதாளர் திரு துரைமாணிக்கம், அவரது துணைவியார் திருவாட்டி ஜோதி துரைமாணிக்கம், கழகத்தின் மேனாள் தலைவர் திரு நா.ஆண்டியப்பன், தலைவர் திரு சு.முத்துமாணிக்கம், சிறப்புப் பேச்சாளர் திரு ஆ.நாகமுத்து பாண்டியன், செயலாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம்.

என்னுரை – எல்லைக்கோடு – 2006

நான் தொடக்கப் பள்ளியில் பயின்ற காலையில் தமிழ் முரசுடன் இணைந்து வந்த மாணவர் மன்றத்திற்கு எழுதத் தொடங்கினேன். சிறு சிறு கட்டுரைகள் எழுதி எனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டேன். அக்காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழர் திருநாள் இலக்கியப் போட்டிகளும் மலேசியாவில் பல்வேறு இலக்கிய மன்றங்கள் நடத்திய இலக்கியப் போட்டிகளும் எனது எழுத்தாற்றல் வளர்ச்சிக்கு வழி அமைத்தன.

சிங்கப்பூர் வானொலியில் சிறுவர்களுக்காக இடம் பெற்ற பலவகையான நிகழ்ச்சிகளில் பெரியோர் வாழ்க்கை வரலாறு, சிறுவர் நாடகங்கள் போன்ற எனது படைப்புகள் ஒலி ஏறின.

கட்டுரைகள், அவ்வப்போது சிறு கவிதைகள், சிறுவர் பாடல்கள் என எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் எனது அருமை நண்பர் அமரர் நா. கோவிந்தசாமியின் நாடகங்கள் வானொலியில் இடம் பெற்று வந்தன. அவரது நாடகங்களைக் கேட்டதால் எனக்குள் நாடகம் எழுத வேண்டும் என்ற உந்து சக்தி பிறந்தது. அதனால் நானும் நாடகங்கள் எழுதத் தொடங்கினேன். அவற்றுள் சில ஏற்றுக்கொள்ளப்பட்டன. சில ஒதுக்கப்பட்டன.

அடுத்து தமிழ் முரசு, தமிழ் மலர், தமிழ் நேசன் போன்ற நாழிதழ்களில் ஞாயிறு தோறும் சிறுகதைகள் இடம் பெற்றன. அவற்றைப் படித்து வந்ததால் எனக்கும் சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆசை ஊற்றெடுத்தது. அதனால் சிறுகதை பக்கம் எனது சிந்தனையோட்டம் திரும்பியது. எழுதிய கதைகள் பிரசுரிக்கப்படாமல் எனக்கே வந்து சேர்ந்தன. இருப்பினும் சோராத எனதுள்ளம் என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டிய வண்ணமிருந்தது. தொடர்ந்து எழுதினேன். 1981-ல் ஒரு நாள் ‘காலம் கடந்து விட்டது’ என்ற எனது சிறுகதை. தமிழ் முரசில் வெளிவந்தது. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயின் நிலையை நான் அடைந்தேன்!

நண்பர்கள் அளித்த ஊக்கத்தால் தொடர்ந்து நாளிதழ்களுக்குச் சிறுகதைகள் எழுதி வந்தேன். அந்தத் தருணத்தில் அதாவது, 1990-ல் சிங்கப்பூரின் இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி இந்தியர் பண்பாட்டு மாதம் என்னும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அந்நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் தலைவர் காப்டன் மா. கோவிந்தராசும் அவர்தம் குழு உறுப்பினர்களும் சிங்கப்பூருக்கு நமது படைப்புகள் என்னும் தலைப்பில் இருபத்தைந்து தமிழ் நூல்களை வெளியிட்டனர். அவற்றுள் எனது முதல் சிறுகதை தொகுப்பான ‘காலம் கடந்து விட்டது’ என்ற நூலும் வெளியீடு கண்டது. அதில் இடம் பெற்ற பதினொரு கதைகளும் தமிழ் முரசில் வெளிவந்தவைகளே ஆகும்.

வான் அலையிலும் சிறுகதைகள் எதிரொலித்தன. எனவே எனது சிறுகதைகள் வானொலிக்கு அனுப்பப்பட்டன. இவ்வேளையில் ஒலி 96.8க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சிறுகதைகளுக்குக் குரல் கொடுத்து ஒலிக்கச் செய்த படைப்பாளர்கள் திரு. அ. பீட்டர், திரு. ரெ. சோமசுந்தரம், திருமதி. பிச்சையம் மாள் பழனியாண்டி. திருமதி. பிரேமா லெட்சுமணன் ஆகியோருக்கு, இந்நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூல் வெளிவருவதற்குத் தூண்டுகோலாக இருந்த அருமை நண்பரும் தமிழ்க் கலை அச்சகத்தின் உரிமையாளருமாகிய திரு. ம.பெ.சாமிக்கும் எனது வாழ்க்கைத் துணைவி ஜெயஜோதி துரைமாணிக்கத்திற்கும் எனது நன்றியை நவில்கின்றேன்.

சிறந்ததோர் நூல் அறிமுக உரை வழங்கிய எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய இனிய நண்பர் பேராசிரியர் அ. வீரமணி அவர்களுக்கும் வாழ்த்துரை வழங்கிய சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு. சி. சாமிக்கண்ணு அவர்களுக்கும் வாழ்த்துப்பா வழங்கிய முன்னால் தமிழ் எழுத்தாளர்க் கழகச் செயலாளரும் என்து இனிய நண்பருமாகிய பாத்தேறல் திரு. இளமாறன் அவர்களுக்கும் நன்றி உரித்தாகுக.

மேலும் எனது படைப்புகளை அவ்வப்போது படித்து, நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி, வம்புக்கு இழுக்கும் எனது துணைவிக்கும் நான் தொடர்ந்து எழுதவும் எழுதியவற்றைப் படித்துக் கருத்துக் கூறும் எனது பிள்ளைகளுக்கும் நன்றி.

மேலும் இந்நூல் வெளிவர ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருந்த ஏனையோருக்கும் எனது நன்றியை நவில்கின்றேன்.

அன்பன்,
இரா. துரைமாணிக்கம்.

என்னைப் பற்றிய சில விவரங்கள் – காலம் கடந்துவிட்டது – 1990

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பங்குளம் என்னும் கிராமத்தில் 1945ஆம் ஆண்டில் பிறந்த நான், 1957ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தேன். விவேகானந்தர் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து பயின்றேன். தொடர்ந்து உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் உயர்கல்வியை முடித்தபின் தமிழாசிரிய- ராகப் பணியாற்றி வருகின்றேன்.

தொடக்கப் பள்ளியில் பயின்ற காலையிலேயே மாணவ மணி மன்றத்தில் எழுதத் தொடங்கினேன். தொடக்கக்காலத்தில் நான் கட்டுரைகளே எழுதி வந்தேன். சிங்கப்பூரில் நடந்த தமிழர் திருநாள் இலக்கியப் போட்டிகளிலும், மலேசியாவில் பல்வேறு இலக்கிய மன்றங்கள் நடத்திய இலக்கியப் போட்டிகளிலும் கலந்து. பரிசுகள் பல பெற்றுள்ளேன். குறிப்பாக. மலேசியாவிலுள்ள சுடரொளி கலை மன்றம் 1964-ல் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். 1968-ல் சென்னை மாணவர் மணிமன்றமும் மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கமும் சேர்ந்து நடத்திய கட்டுரைப் போட்டியில், இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசான தங்கப் பதக்கம் கிடைத்தது. 1978-ல் தேசிய அளவில் நடைபெற்ற நமது குழந்தைகளுக்கான கதைகள் என்னும் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். 1979-ம் ஆண்டில் நமது மரபு வழிக்கதைகள் எழுதும் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றேன். இதே ஆண்டில் தேசிய தொழிற் சங்கக் காங்கிரஸ் பணிவன்பு இயக்கத்தின் தொடர்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றேன்.

சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்திற்கு சிறுவர்களுக்கான நாடகங்கள் பல எழுதியுள்ளேன்.

1981-ல் எனது முதல் சிறுகதை தமிழ் முரசில் இடம் பெற்றது.

‘மாணவர் பூங்கா’ என்ற சிறுவர் இதழுக்கு இரண்டாண்டு காலம் ஆசிரியராக இருந்துள்ளேன். சிங்கப்பூர்த் தமிழர் இயக்கத்தின் கொள்கை வெளியீடான, கொள்கை முழக்கத்தின் ஆசிரியராகவும் இருந்துள்ளேன்.

இரா.துரைமாணிக்கம்.


வாழ்த்துரை – எல்லைக்கோடு – 2006

சிங்கப்பூரில் தமிழாசிரியராகப் பணியாற்றுபவர்களில் எழுத்தாளர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவே. அதற்குக் காரணம், கற்பித்தல் என்பது ஒரு தனிக்கலை என்றால் எழுதுவது என்பது மற்றொரு தனிக்கலை ஆகும். எழுத்தை ஆள்வது என்பது எல்லாராலும் முடியாத ஒன்றுதான். அதற்கென்று தனிப்பயிற்சி உண்டா? என்று கேட்டால், உண்டு என்றே கூறலாம். அதற்கென்று ஒரு பள்ளி இருக்கிறதா? இல்லை. மொழியில் வல்லமையும் எழுதுவதில் ஆர்வமும் இருந்தாலே போதும். மேலும், தான் கண்டதை, படித்ததை, கேட்டதை அல்லது மற்றவர் கூறியதைக் கற்பனை நயத்துடன் எழுதிக் கொண்டே இருந்தால் எழுத்தாளராகி விடலாம்.

மேலும், எழுத்தாளர் உணருவதை எல்லாம் அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பதில்லை; ஆங்காங்கே அவர் கருத்துக்களைக் கோடிட்டு காட்டிவிட்டு. வாசகர்களைச் சொந்தமாக முடிவு செய்து கொள்ளும்படி செய்யலாம். அத்துடன் வாசகர்கள் எதை விரும்புகிறார்களோ, அதை எழுதினால் போதாது. அவர்கள் எதை விரும்ப வேண்டுமோ அதை அவர்கள் விரும்பக்கூடிய முறையில் எழுத வேண்டும்.

இந்த வகையில் எழுதுவதில் ஆர்வம் கொண்டு வெளியீடு செய்துள்ள நண்பர் திரு. இரா. துரைமாணிக்கம் அவர்களின் ‘எல்லைக்கோடு’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

நாற்பது ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றும் இவர் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கச் செயலவை உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழகத் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும் இன்றும் சில சமூக அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். கடந்த காலங்களில் சில அமைப்புகளில் பொறுப்புகள் ஏற்று அரிய சேவைகள் ஆற்றியுள்ளார்.

‘மாணவர் பூங்கா’ என்ற சிறுவர் இதழுக்கு ஆசிரியராக இருந்தவர். சிங்கப்பூர்த் தமிழர் இயக்கத்தில் வெளியீடு கண்ட ‘கொள்கை முழக்கம்’ இதழுக்கும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ‘தமிழாசிரியர் குரல்’ இதழுக்கும் பொறுப்பாசிரியராக இருந்து எழுத்துப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

இவரைச் சுமார் ஐம்பது ஆண்டுகளாக அறிவே. இவர் அன்பானவர்; பண்பானவர்; அடக்கமானவர். ஆனால் அழுத்தமானவர். இவரிடம் நான் கண்ட ஓர் உயர்ந்த குணம் கர்வமில்லாப் பெருந்தன்மை என்ற பெருங்குணமாகும்.

இன்று தமிழர் பலரிடம் தன்னை உயர்த்திப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் ‘ஆளுமை மோதல்’ காணப்படுகிறது.

‘அவரைவிட எனக்குத் தான் திறமை அதிகம், எனக்குத் தான் எல்லாம் தெரியும்; அவரைவிட நான் சிறப்பாகச் செயலாற்றுவேன்’ என்று நினைப்பது பாமரநிலை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. என்னிடமும் வேறொரு திறமை இருக்கிறது என நினைப்பது உண்மை நிலை. தன்னம்பிக்கை என்பது வேறு. தன்னை முன்னிலைப் படுத்திக் கர்வப்படுவது வேறு. ‘தன்னை வியந்தான், விரைந்து கெடுவான்’ என்கிறது வள்ளுவம்.

‘ஆளுமை மோதல்’ பொதுவாக வேலையிடங்களில் பொது அமைப்புகளில் காணப்படுவதால் நமது வளர்ச்சி தடைப்படுகிறது. எப்பொழுது நாம் பிறரைப் பாராட்டுகிறோமோ அப்பொழுதே நாம் பாராட்டப்படுகிறோம்.

திரு. இரா. துரைமாணிக்கத்திடம் கர்வமில்லாப் பெருந்தன்மை என்ற அருங்குணத்தைக் கண்டு நான் வியந்தேன். அவர் பிறரைப் புண்படுமாறு பேசமாட்டார். தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று பெருமை பாராட்டமாட்டார். புகழுக்காக எதையும் செய்யமாட்டார். அதனால்தான் எல்லாரும் அவருடன் பழக விரும்புகிறார்கள்; நட்பு பாராட்டுவார்கள்.

அவர் ‘எல்லைக்கோடு’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு நம் நாட்டு இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். நான் அவரைப் பாராட்டுகிறேன். தொடரட்டும் அவரது எழுத்துப் பணி.

02.10.2006

சி. சாமிக்கண்ணு
தலைவர்
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்


டாக்டர் அ. வீரமணி அவர்களின் நூல் அறிமுக உரை

நண்பர் திரு. துரைமாணிக்கத்தின் மூன்றாவது நூல் எல்லைக்கோடு. தனது சிறுகதைப் படைப்புகளை நூல் வடிவில் கொண்டு வருவதைப் பலகாலம் தள்ளிப்போட்டு, முதல் நூலை நான் 1990ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் கால் நூற்றாண்டு கால அரசியல் விடுதலையை ஒட்டி 25 தமிழ் நூல்களை வெளியிட்டபோது, மிகவும் தயக்கத்துடன் முதல் நூலை வெளியிடத் தந்தார். சுமார் பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டு நூல்களை ஒரே நேரத்தில் வெளியிடத் துணிந்துள்ளார்.

இன்றைய நிலையில், சிங்கப்பூர்த் தமிழ் படைப்பிலக்கியம் தொடர்பாக, காரசாரமான விவாதங்களும், பல்கலைக் கழக ஆய்வுகளும், ஒருவர் மற்றொருவரின் படைப்பை இரட்டிப்பு செய்துவிட்டார் அல்லது காப்பியடித்துவிட்டார் என்றெல்லாம் படிக்கிறோம். இவற்றையெல்லாம் படித்துத்தான் படைப்பிலக்கியம் படைக்க வேண்டும் என்ற நியதி எழுத்தாளனுக்கு இருக்க வேண்டியதில்லை. சிங்கப்பூரில் தமிழைக் கொண்டு பணத்தையும், புகழையும், பதவியையும் விரும்புவோருக்குத்தான் அத்தகைய போராட்டங்கள் தேவை. தன்னுடைய பணி எழுதுவது, முடிந்தால் அவற்றை நூலாக வெளியிட்டு பலருக்கும் எட்டச் செய்வது எனும் குறிக்கோளுடன் வாழும் எழுத்தாளர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்தால்தான், தமிழில் எழுத்தும் நூற்களும் பெருகும். போரிட்டுத் தங்களை வருத்திக்கொள்ளும் ஆய்வாளர்களையும், பணம் செய்பவர்களையும், புகழ் தேடுபவர்களையும் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்குச் சிங்கப்பூரில் அதிக வாய்ப்பிருந்தும். எழுதுவோர் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்போர், என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைப் பட்டியலிடுவதில்லை. ஒருவர் எத்தனை எழுதிய பின்னர் எழுத்தாளராக முடியும் என்பதையும் யாரும் கூறுவதில்லை. எழுதுவதைப் பாராட்ட எத்தனை பேர் உள்ளனர் என்பதும் யாருக்கும் தெரியாது.

இத்தகைய சூழலில், ஆசிரியரும் நண்பருமான துரைமாணிக்கம் தனது நூலை வெளிக்கொண்டு வந்துள்ளார். பதிமூன்று சிறுகதைகளை ஒன்று திரட்டி, ‘எல்லைக்கோடு’ எனும் தலைப்பில் இந்நூல் வெளிவருகிறது. இந்நூலுக்கு பல எல்லைக் கோடுகளை ஆசிரியர் தனக்கென விதித்துக் கொண்டுள்ளார். கதைகள் உருவாகிய காலக்கட்டம், கதைக்கரு, பொருளாதார மாற்றத்தின் தாக்கம், நல்ல தமிழ்ப் பயன்பாடு என பல எல்லைகளைக் கதைகளில் காணலாம்.

நூலில் காணப்படும் கதைகளை, இன்றைய சூழலைக் கொண்டு படித்தோமானால், அனைத்தும் புனைகதைகளாக மட்டுமே தெரியும். சிங்கப்பூர் 1950களிலும் 1960களிலும் கண்ட வாழ்க்கை முறையை பின்புலமாகக் கொண்டு. கதைகளைப் படித்தால்தான் கதைகளில் பொருள் புரியும்.

1950களில்தான், சிங்கப்பூரில் தமிழ் குடும்பங்கள் வேரூன்றத் தொடங்கின. அரசாங்க ஊழியராய், குடும்பத்துடன் வாழ்ந்த தமிழர்கள் பெரும்பாலும், அந்தந்த அரசு நிறுவனங்கள் கட்டித்தந்த இல்லங்களிலேயே வாழ்ந்தனர். பெரும்பாலானத் தமிழர்கள், தனித்து வாழ்ந்தாலும், குடும்பங்களாக வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் சில சவால்கள் பரவலாகத் தென்பட்டன. திருமணங்கள் உறவினர் மத்தியிலும், சாதி அடிப்படையிலும் நடந்ததால், அக்குடும்பங்களில் நிலைத்தன்மை இருந்த அதே வேளையில், சிங்கப்பூரில் நிகழ்ந்த பொருளாதார அரசியல் – சமூக மாற்றங்களும் தத்தம் தாக்கத்தை ஏற்படுத்தின.

இவற்றை, இந்நூலின் கதைகளில் ஆசிரியர் காட்டியுள்ளார். சிறுகதைகள் வாழ்க்கையின் சில பகுதிகளையே களனாகவும் கருவாகவும் கொண்டு அமையமுடியும் என்பதால், அனைத்து கதைகளையும் படித்தபிறகுதான், கதைகள் காட்டும் காலப்பகுதியை ஓரளவு உணரமுடியும். மாற்றாந்தாய், இரண்டு மனைவியர், தமிழாசிரியரின் குமுகாயப் பொறுப்பு, மாமாவை மணந்திடும் பெண், குடும்பங்களில் ஏற்படும் புரிந்துணர்வு இல்லாத மனமுறிவு ஆகியவை, குடும்பச் சூழலில் ஏற்படும் கருத்துக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை.

ஆசிரியர் துரைமாணிக்கம் நல்ல தமிழை முறையாகக் கையாண்டுள்ளார். கதை மாந்தருக்குத் தந்திருக்கும் பெயர்கள் நல்ல பெயர்களாக, எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவையாக உள்ளன. இன்றைய நிலையில் நவீனப் பெயர்கள் என, புரியாத பெயர்களைச் சூட்டி, பிள்ளைகளைப் புரிந்துகொள்ள முடியாத மனிதர்களாக மாற்றும் பெயர்களைக் கொண்ட காலப்பகுதிக்கு, கதாமாந்தரின் பெயர்கள் செவிக்கு விருந்தாக உள்ளது.

நல்லாசிரியரும் நண்பருமான திரு. துரைமாணிக்கம், மென்மேலும் பல கதைகளை எழுதவேண்டும். அவர் கண்ட சமுதாய வாழ்க்கையைக் கதைகளில் எழுதுவதன் வழி, அவருடைய கதைகள் ஒரு காலக்கண்ணாடியாக மாறிடும்.

பல்லாண்டுகள் வாழ்ந்து, பல படைப்புகளைச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

பேராசிரியர் அ.வீரமணி,
செப்டம்பர். 2006.