அஷ்ரஃப் சிஹாப்தீன்

 

நூலாசிரியரின் பிற நூல்கள்

கவிதை

  • காணாமல் போனவர்கள் – 1999 உன்னை வாசிக்கும் எழுத்து – 2007 (மொழிபெயர்ப்பு)
  • என்னைத் தீயில் எறிந்தவள் – 2008 (அரச சாஹித்திய தேசிய விருது பெற்றது)

சிறுவர் இலக்கியம்

  • புள்ளி – 2007
  • கறுக்கு மொறுக்கு – முறுக்கு – 2009
  • புல்லுக்கு அலைந்த மில்லா – 2009

ஏனையவை

  • தீர்க்க வர்ணம் – 2009 (பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு
  • ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை- 2009 (பயண அனுபவங்கள்)
  • ஒரு குடம் கண்ணீர் – 2010 – உண்மைக் கதைகள் (அரச சாஹித்திய தேசிய சான்றிதழ் பெற்றது)

சிறுகதை – மொழிபெயர்ப்பு

  • ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள் (2011) (அரச சாஹித்திய தேசிய விருது பெற்றது)

எனது கதையெழுத்து – விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.

எனது சிறுகதைகள் அடங்கிய முதலாவது தொகுதி இது. 

முதலில் ஒரு கவிதை இலக்கியக்காரன் என்றே நான் பலருக்கு அறிமுகமாகியிருந்தேன். அவ்வப்போது ஓரிரு சிறுகதைகளையும் எழுதியேயிருக்கிறேன் என்பதை வெகு சிலரே அறிவார்கள். 

கவிதைத் துறையில் இருந்த பேரார்வம் சிறுகதைத் துறையில் எனக்கு இருக்கவில்லை. சிறுகதைகளைப் படிப்பதில் எனக்கிருந்த ஆர்வம் எழுதுவதில் இருக்கவில்லை. சிறுகதை எழுதுவதற்கு நிறையப் பொறுமை தேவை. கவிதை ஒன்று எனின் அதிகம் இரண்டு பக்கங்களுக்குள் அடங்கி விடும். அதைச் செம்மைப்படுத்துவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 

ஆனால் சிறுகதை அப்படியல்ல. எழுதித் திருப்பி எழுதி, அதை ஒரு மூத்த படைப்பாளியிடம் அல்லது நல்ல ஒரு வாசகரிடம் படிக்கக் கொடுத்து அவர்களது கருத்தைப் பெற்று மீண்டும் திருப்பி எழுதி… இப்படி இயங்குவது ஓர் ஆக்கினையாகப்பட்டது எனக்கு. கதை நன்றாக வர வேண்டுமென்றால் இந்த அவஸ்தைகளைப் பட்டுத்தான் ஆகவேண்டும். இன்று நம்முன்னால் உள்ள நல்ல சிறுகதையாளர்கள் எல்லோரும் இந்தச் சிரமங்கள் அனுபவித்து வந்தவர்கள்தாம். 

இத்தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்ட காலப்பிரிவை அவதானித்தீர்களானால் இவற்றுள் பதினைந்து கதைகள் 2009 நடுப் பகுதிக்கும் 2010 முற்பகுதிக்கும் இடையில் ஒருவருடத்துக்கும் குறை வான காலத்துள் எழுதப்பட்டவையாக இருப்பதைக் காண்பீர்கள். ஒரு கதை மட்டும் 2006ம் ஆண்டு எழுதப்பட்டது. இது ஏன், எப்படி நிகழ்ந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. எழுதவேண்டும் போல் இருந்தது, எழுதினேன்.ள்களும் அதை உறுதிப்படு, 

எண்பதுகளில் எழுதப்பட்ட எனது மூன்று சிறுகதைகள் ஞாபகமிருக்கின்றன. ‘நிர்வாணங்கள்’ என்ற சிறுகதை தினகரனில் வெளிவந்தது. ‘சில்மியா சேர்ச்சுக்குச் செல்கிறாள்’ என்ற சிறுகதை எம்.எச்.எம். ஷம்ஸ் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட ‘அஷ்ஷூரா’வில் வெளியானது. ‘அவ்வாக்குட்டி’ என்ற கதை ‘களம்’ என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. இவற்றுள் எந்தச் சிறுகதை முந்தியது, பிந்தியது என்று என்னால் இப்போது அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இந்த மூன்று கதைகளும் என்னிடம் இல்லை. இவற்றுள் அவ்வாக்குட்டி’ சிறுகதை வெளியான ‘களம்’ சஞ்சிகைப் பிரதியை நீண்ட காலமாக நான் பத்திரப்படுத்தி வந்தேன். இடைப்பட்ட காலங்களில் வாடகை வீடுகள் மாறியதில் பிரதி தொலைந்து போயிற்று. 

அவ்வாக்குட்டி’ சிறுகதை பேசும் விடயம் எப்படிப் போனாலும் அந்தக் கதை தன்னை வெளிப்படுத்திக்கொண்ட மொழியை நான் பெரிதும் விரும்பினேன். அக்கதையை எழுதிவிட்டு எஸ். எல். எம். ஹனிபா அவர்களிடம் பார்வைக்குக் கொடுத்தேன். அக்கதையை அவர் எந்தத் திருத்தமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டார். அவரே அக்கதையைக் ‘களம்’ சஞ்சிகைகைக்கு அனுப்பிப் பிரசுரமானதும் சஞ்சிகைப் பிரதி யையும் பெற்றுத் தந்தார். 

இந்தத் தொகுதியில் அந்தக் கதை இடம் பெறவேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன். எவ்வளவு முயன்றும் சஞ்சிகையின் மற்றொரு பிரதி யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. 

ஓர் ஒலிபரப்பாளனாக மாறிய பிறகு முஸ்லிம் சேவையின் சிறுகதை நிகழ்ச்சி, வர்த்தக சேவையின் ‘வாலிப வட்டம்’ போன்றவற்றுக்கும் அவ்வப்போது கதைகள் எழுதியிருக்கிறேன். அவசரத்துக்கு இடைவெளி நிரப்ப எழுதப்பட்ட அவை காற்றோடு கலந்து சென்று விட்டன. அவற்றின் பிரதிகளை நான் பத்திரம் செய்யவில்லை. 

அவ்வெண்ணிலவில்’ என்ற கதைக்கான கரு இணையத்தள மொன்றில் இடம்பெற்றிருந்த சி. ஜெயபாரதன் எழுதியிருந்த கட்டுரை யொன்றைப் படித்த போது உருவானது. இந்த நூல் அச்சிடுவதற்கான வேலைகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிஸம்பர் 2012 காலப் பகுதியில் அமெரிக்கா சந்திரனைத் தகர்ப்பதற்குத் திட்டமிட்டிருந்தது என்ற ஒரு இணையத் தகவலை முகநூலில் யாரோ ஒருவர் பதிவிட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன். கதையை நீங்கள் படித்தீர்களானால் நான் ஏன் அதிர்ந்தேன் என்பது புரியவரும். 

ஒரு சிறுகதையை நான் எப்படிச் சொல்ல விரும்பினேனோ அப்படித்தான் சொல்லியிருக்கிறேன். இதுதான் எனக்கு வாலாயமான முறையாக அமைந்திருக்கிறது. நான் எழுத நினைத்த கதை எனக்குள் ளிருந்த வார்த்தைகளை எடுத்துக் கொண்டு இப்படித்தான் வெளிவந்திருக் கிறது. இக்கதைகளைப் பற்றி எனால் சொல்ல முடிந்தது அவ்வளவுதான்! 

மொழிபெயர்ப்பிலும் நான் ஈடுபட்டு வருவதால் வேறு தரிசனங் களும் எனக்குக் கிடைக்கின்றன. நமது தமிழ்ச் சூழலில் படிக்கக் கிடைக் காத கதைப் பின்னலையும் கதை சொல்லும் அழகையும் கதைகளுக்கான உத்திகளையும் புதிதாக வெளிவரும் வேற்று மொழிச் சிறுகதைகளில் என்னால் காண முடிகிறது. நமக்குப் பரிச்சயப்பட்டுப்போன தமிழ்ச் சூழல் கதைகளிலிருந்து சற்று விடுபட்டுக் கைகளுக்குள் சுருங்கிப் போன- உலகமே ஒரு பூகோளக் கிராமம் என்கிற நிலையிலிருந்தும் நமது பார்வையைச் செலுத்துவது அவசியம் என்று நான் நினைக்கிறேன். உலகத்தின் ஒவ்வொரு பிரஜையினதும் வாழ்க்கை சர்வதேச அரசிய லோடும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

நமது முன்னோடிச் சிறுகதைப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் ஐயாவிடம் இந்தக் கதைத் தொகுதியைக் கொடுத்து ஒரு மதிப்புரை கோரினேன். இதற்காக அவரை நான் தேர்ந்ததற்குக் காரணம் அவரது நேர்மையும் யாரையும் எதையும் சாராமல் மனதில் தோன்று வதை வெளிப்படையாகச் சொல்லும் ஓர்மையும்தான். 

அவரது கருத்துக்களை அறிந்த பிறகு மனதிலிருந்த பயம் தகர்ந்து தொடர்ந்து சிறுகதை எழுதலாம் என்ற ஆர்வம் வந்திருக்கிறது. எனது நூல் வெளிவரவேண்டிய கால எல்லையைப் புரிந்து கொண்டு தாமதிக்காமல் தனது மதிப்புரையை வழங்கியமைக்காக அவருக்கு எனது அன்பு கனிந்த நன்றிகள். 

அகாலத்தில் எம்மை விட்டுப் பிரிந்த நண்பர் ஏ.ஜி.எம். ஸதக்காவின் தோற்றத்தைக் கோட்டோவியமாக வரைந்து தந்த சகோதரர் எஸ். நளீம் அவர்களுக்கும் இச்சிறுகதைகளில் சிலவற்றைப் பிரசுரித்த பத்திரிகை, சஞ்சிகைகளின் ஆசிரியர்களுக்கும் இந்த நூல் வெளிவர அனுசரணை வழங்கிய தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை யினருக்கும் படிகளைப் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கிய மற் றொரு முன்னோடிச் சிறுகதையாளரும் கவிஞருமான அல் அஸூமத் அவர்களுக்கும் ‘மற்றும் ‘காப்பியக்கோ’ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர் களுக்கும் அழகுற அச்சிட்டுத் தந்த தெஹிவளை, ஏ.ஜே. பிரின்டர்ஸ் நிறுவனத்தினருக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள். 

அஷ்ரஃப் சிஹாப்தீன்
10.01.2013


அஷ்ரஃப் சிஹாப்தீனுடைய கதை மொழி ஒரு சித்திரம்போல் நம்மைக் கவர்ந்துகொள்கிறது. சொற்களைத் தேடி அவர் ஓடாமல் அவரைத் தேடிச் சொற்கள் ஓடிவருகின்றன. அதனதன் இடத்தில் சக்கைக் கல்போல் அமர்ந்து கதையின் கட்டுமானத்தை மேலெழுப்புகின்றன. மிகச் சாதாரணமான வழக்காற்று மொழிச் சொற்கள் கூட இவரது கதைகளுக்குள் உயிர்த்தெழுகின்றன. வார்த்தைகளைக் கோர்த்து விடும் வித்தை மிகவும் அருமையாகக் கைவந்த ஒருவராகவே இவரைக் காணுகின்றேன். 

கோட்பாடுகள் தேடாமல், புதிய மொழியாக்கம் தேடாமல், சொல்லாட்சி நுட்பங்கள் தேடாமல் தன்பாட்டில், தன் மொழியில் தனக்கே கைவந்த சொல்லாடல்களுடன் கதைகூறும் வல்லமை கொண்டவராகத் தன்னை இனம் காட்டுகிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன். 

து நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்னும் கீதை வரிகள் போலவே நொண்டாமல் – நொடிக்காமல், 

சரியாமல் – சளைக்காமல் அஷ்ரஃப் சிஹாப்தீனின் இந்தக் கதைகளும் நன்றாகவே நடக்கின்றன. 

-தெளிவத்தை ஜோசப், விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.