கண்ணீர் எப்ப முடியும்?





(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதலாவது தவணைக்கான லீவு நாட்கள் நேற்றோடு காலாவதியாகி இன்று, இரண்டாந் தவணைக்கான முதல் நாள்.. மாணவர்களும் ஆசிரியர்களும் வேலையாக நிற்கின்றனர். பாடசாலைச் சுத்தம், வகுப்பறைச் சுத்தம், வகுப்பு ஒழுங்குகள்… இப்படிப் பல வேலைகள்.
நான் அதிபரின் காரியாலய வாசலில் நிற்கின்றேன்.
குத்தி நொருக்கப்பட்ட றஸ்க் பிஸ்கற்றைப் போல், வெடித்துக் கிளம்பி நொருங்கிப் போயிருக்கும் பாடசாலை விறாந்தைச் சீமெந்து நிலம்… அதிலும் அதிபரின் காரியாலய முன் பக்கம்… எனக்குள் நான் சிரித்துக் கொள்கிறன்…
இது ஒரு கிராமப் புறப் பாடசாலை.
அதிபரும் இரண்டு மூன்று தடவைகள் என்னைப் பார்த்து விட்டார். நான் ஒரு ‘ஆசிரியன்’ என்பதை அவரால் தீர்மானிக்க முடியாமல் போய்விட்டது. தன்னிடம் ஏதோ அலுவலாக வந்த ஒருவனாகவே அவர் என்னைக் கருதிக் கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அது அவருடைய தவறல்ல ஏனென்றால், ‘ஆசிரிய லட்சணங்களில்’ ஒன்று கூட என்னிடமில்லை!
நானும், என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் அவசரப்பட்டுக் கொள்ளவில்லை. இது என்னிடமுள்ள இயல்பான குணம்.
என்னை ஒரு ஆசிரியனாகப் பார்க்கின்ற ஆசை என்னைப் பெற்றவர்களுக்கே இருந்ததில்லை, ஏனென்றால், நான் அதற்கு ‘அருகதையற்றவன்’ என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனால், இந்த அரசாங்கம் என்னை ஆசிரியனாக்கி விட்டது. என்னில் என்னத்தைக் கண்டதோ, எனக்குத் தெரியாது.
நான் இந்த ஆசிரிய வேலையை விட்டுப் போயிருக்கலாம். ஆனால், எனது மனதுக்குகந்த வேலை கிடைக்குமா? அந்தப் பயத்தினால் கிடைத்த இந்த ஆசிரிய வேலையோடு ஒட்டிக் கொண்டு வாழ்கிறேன்.
ஓரளவு வெளிவேலைகள் ஒதுங்கி, வகுப்புக்களை ஒழுங்கு படுத்துகின்ற நிகழ்ச்சி ஆரம்பமாகின்றது. அதிபருக்கு ஓரளவு மனத்திருப்தி… அவர் என்னை நோக்கி வருகின்றார்.
‘வாருங்கள்’ அதிபர் என்னை உள்ளே அழைக்கின்றார். நான் காரியாலயத்தினுள் சென்று ஒரு கதிரையில் அமர்கிறேன்.
அறிமுகப்படலம்
‘புதுச்சேர் வந்திருக்கிறார்…’ எங்களுக்குள் நடந்த சம்பாஷணைகளை அவதானித்த மாணவர்கள் பேசிக் கொள்வது எனக்குக் கேட்கின்றது.
புதிய முறைக் கல்வித் திட்டத்தின்படி ‘மாணவர் சுதந்திரம்’ இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ என்னவோ அதிபரின் காரியாலயத்தினுள் மாணவர்கள் மிகவும் சுதந்திரமாகவே பழகுகின்றனர்!
படிப்படியாக, இங்குள்ள ஆசிரியர்களின் அறிமுகங்கள்… நான் அதிபரிடமிருந்து விடுபட்டு ஆசிரியர்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.
வகுப்பு ஒழுங்குகள் முடிந்து, காலை வணக்கமும் முடிந்து மாணவர்கள் தங்கள் வகுப்புக்களுக்குப் போக பத்து மணியாகிவிட்டது.
பின்னர்… ஆசிரியர்கள் மத்தியில் நடக்கின்ற சமூக, அரசியல், சம்பள உயர்வு… பற்றிய நீண்டதொரு ‘அலசல்’ நடந்து… இடைவேளையும் விடுகின்றது.
இன்னும் மூன்று பாடவேளைகளைச் சமாளித்து வெற்றி கண்டால், இன்றைய ‘தொழில்’ முடிவடையும். யேசுநாதர் சிலுவையைச் சுமந்தது போல், இந்தக் கடைசிப் பாடம் மூன்றையும் சுமப்பது மிகக் கடினம்…
‘நாங்கள் இனி வகுப்புகளுக்குப் போவமா’ அங்கு வந்த அதிபர், நமது கடமை உணர்வை, இலேசாக வருடுகிறார்.
அசட்டுச் சிரிப்புகளுடன் ஆசிரியர்கள் பிரிகின்றனர். நானும் பிரிந்து ஒரு வகுப்புக்கு வருகிறேன்.
‘வணக்கம் சேர்…’
‘வணக்கம் மாணவர்களின் வணக்கத்தைத் தொடர்ந்து நானும் வணக்கம் கூறி அமர்கிறேன்.
மூன்றாம் வகுப்பு
மாணவர்கள் ஆவலோடு என்னைப் பார்க்கின்றனர்.
‘இப்ப என்ன பாடம்…’
‘…தமிழ் …’
‘இந்த வகுப்பிலை எத்தினை புள்ளையள்…’
‘நாப்பத்தைஞ்சு..’
‘ஆர் மொனிற்றர்..’
‘ஜெஸ்மி…’
‘ஜெஸ்மி எழும்புங்கோ..’ நான் கூறுகிறேன், அந்த ஜெஸ்மி எழும்பி நிற்கின்றாள். உருண்டைத்தலை, சுருண்ட கேசம், பருத்த கண்கள், சிவப்பு நிறம்… கள்ளமில்லாத முகம்… மிகவும் அழகானவள், அவளுடைய உடுப்பு, போட்டிருக்கும் நகைகள்… அவளது வாழ்க்கைச் செழிப்பைக் காட்டுகின்றது.
‘இந்த வகுப்பிலை கெட்டிக்காரப் பிள்ளை ஆர்…’
‘ஜெஸ்மி தான் சேர்…’ பேச்சு முடிகின்றது வகுப்பில் அமைதி… இப்படியே அமைதியாக எவ்வளவு நேரம் இருப்பது…? மூன்று பாடநேரம் இருக்க முடியுமா?
மாணவரையும் கஷ்டப்படுத்தாமல், நானும் கஷ்டப்படாமல் எப்படியும் நேரத்தைக் கடத்த வேண்டும்.
வகுப்பு நேரத்தைக் கடத்தத் தெரியாத ஒருவன் ஆசிரியனாக இருக்க முடியுமா?
‘ஏதாவது எழுதுவமா…’ நான் கேட்கிறேன். வகுப்பை அமைதிப்படுத்தவும், நேரத்தைக் கடத்தவும் எழுத்து வேலை சிறந்த வழி!
‘எழுதுவம் சேர்…’ அவள் ஜெஸ்மி கூறுகிறாள்.
‘என்னத்தைப் பற்றி எழுதுவம்…’
‘வருஷப் பிறப்புப் பற்றி எழுதுவம்’
வருஷப் பிறப்பு மிகவும் பொருத்தமான தலைப்பு, ஏனென்றால், சித்திரை வருஷப்பிறப்பு முடிந்து ஒரு கிழமை தான் ஆகின்றது. சகலருமே வருஷப் பிறப்பைக் கொண்டாடியிருப்பார்கள். அதனால், மாணவர்களின் மனதோடு தொடர்புபட்ட பொதுவான விஷயம்.
‘சரி வருஷப் பிறப்பைப் பற்றி எழுதுவம்…’
‘எப்பிடிச் சேர் எழுதிறது.’
‘வருஷப் பிறப்பன்று காலமை தொடக்கம் இரவு வரை நீங்கள் செய்த வேலையளிலை முக்கியமானதுகளை எழுதுங்கோ…’
‘பத்து வரி எழுதினால் போதுமா சேர்…’
‘எத்தனை வரியும் எழுதலாம்’
சகலரும் தங்கள் கொப்பிகளை எடுத்து விரித்து எழுதத் தொடங்குகின்றனர்.
நான் வகுப்பு மாணவர்கள் மீது பொதுவானதொரு கண்ணோட்டம் செலுத்துகின்றேன். எந்த வகுப்பிலும் ‘பின் வாங்கில் இருப்பவர்களைக் கூடுதலாக நான் அவதானிப்பேன். ஏதோ ஒரு வகையில் பெலவீனமானவர்களே அநேகமாகப் பின் வாங்கில் இருப்பார்கள், அவர்களுடைய பெலவீனத்தைக் கண்டு ஏனைய மாணவர்கள் ஒதுக்கி விடுவதும் உண்டு, தங்கள் பெலவீனத்தை எண்ணி தாங்களாகவே ஒதுங்கிக் கொள்வதும் உண்டு.
நான்…?
பின் வாங்கி இருந்தவர்களின் ‘பட்டியலைச் சேர்ந்தவன்…?
வீட்டில் நின்றால் பசிக்குதென்று அழுவேன் என்பதற்காக என்னைப் பெற்றவளே என்னை அடித்துப் பாடசாலைக்குத் துரத்தி விடுவாளாம்…
வறுமை தணலில் கால் கொப்பளிக்க நடந்தவன் நான்!…
அதனால் நானாகவே பின் வாங்கில் அமர்ந்து கொண்டேன்! மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டும் போல் இருக்கின்றது. அவ்வளவு அலுப்பு.. ஆசிரியனாகி விட்டால் சோம்பல் தேடி வந்து சேர்ந்து விடும்… அதிலும் ஒரு மாத காலம் லீவில் நின்று ‘சிறு சோம்பலால்’ சிறிது நேரம் படுத்து… அதனால் சோம்பல் வளர்ந்து பெரும் சோம்பலாகி தொடர்ந்து படுத்து எழும்ப முடியாத
சோம்பல்…
அந்த சோம்பலோடு தான் பாடசாலைக்க வந்தேன். அதனால் தான் நீட்டி நிமிர்ந்துபடுக்கின்ற எண்ணம் எனக்கு…
பழக்கப்பட்ட பாடசாலையென்றால், மேசையில் தலையை வைத்து தூங்கி விடலாம்… இது புதிய பாடசாலை என்ற காரணத்தால் அப்படிப்படுக்க என் மனம் கூசுகின்றது…!
‘சேர் எழுதினவை காட்டலமா’ ஜெஸ்மி கேட்கிறாள். நான் அவளைப் பார்க்கின்றேன். சொக்கில் குளி விழுகின்ற கவர்ச்சியான, மாசு மறுவற்ற சிரிப்பு.
‘காட்டலாம்’
ஜெஸ்மி கொப்பியைக் கொண்டு வருகின்றாள். மிகவும் அழகான உறை போடப்பட்டிருக்கின்றது. கோப்பியை விரிக்கின்றேன். கோர்க்கப்பட்ட மணிகளைப் போல், அடுக்கடுக்கான அழகான எழுத்துக்கள்.
பத்து வரிகள் எழுதியிருக்கின்றாள்.
வருஷப் பிறப்பன்று அதிகாலையில் எழுந்தேன்.
பல் துலக்கிக் குளித்தேன்.
புதுச் சட்டை போட்டேன்.
காரில் கோயிலுக்கு போனேன்.
பலகாரம் வாழைப்பழம் சாப்பிட்டேன்.
இப்படியே வாக்கியங்கள் தொடர்பாக எழுதப்பட்டிருக்கின்றன.
ஜெஸ்மி செல்கிறாள்.
வேறு யாராவது எழுதியிருப்பார்களாவென்று வகுப்பைப் பார்க்கிறேன்… எனது பார்வை முன் வாங்கிலுள்ள முதல் மாணவனில் தொடங்கி வரிசையாக நகர்ந்து வருகின்றது.
பின் வாங்கில் ஒருவன் பேசாமல் இருக்கிறான். அவனுக்கு முன்னால் கொப்பி விரித்தபடி கிடக்கின்றது… எழுதுகின்ற மனோநிலை அவனிடம் இல்லை!
சக மாணவர்களோடு சுரட்டுப் பண்ணுகின்ற மனோபாவம்… அதுவும் அவனிடமில்லை.
முன்னோக்கி வளர்ந்து எண்ணெய் தண்ணியின்றி செம்படையாகி விட்ட தலைமயிர், குளி விழுந்து பருத்து முன்னோக்கிப் பிதுங்கியிருக்கும் கண்கள், மிகவும் கட்டையான தோற்றம்… குரும்பைக் கயர் ஊறிப் போயிருக்கும் ஒரு சேட்… நூல் எல்லையையும் தாண்டி எரிந்த வீடிக்குறை போன்ற ஒரு பென்சில் துண்டு… அடிக்கடி கொட்டாவி விட்டுக் கொள்கிறான்.
வீட்டில் நின்றால் பசிக்குதென்று அழுவேன் என்பதற்காக என்னைப் பெற்றவள் என்னை அடித்துப் பாடசாலைக்குக் கலைத்தாளே…
அது போல் இவனையும்…
இவனைப் பெற்றவள்…
எனது சிந்தனைப் பறவை பின் நோக்கிப் பறந்து… எனது கடந்தகால வாழ்வில், இளமைக் கால வறுமை நிகழ்வுகளின் தழும்புகளைக் கொத்தி… அந்த மாணவனுக்குப் பொருத்தமானதைத் தேடிக் காண்கின்றது.
அவனில் என்னைக் காணுகின்ற ஒரு நினைப்பு! எனது மனம் இப்படித்தான்… வறுமையின் வெளிப்பாடுகளை எந்த ரூபத்தில் கண்டாலும்… அதை என்னோடு ஒப்பீடு செய்து… வெந்து வெடித்து… அமுகை வந்து விடும்!
இவன் என்ன எழுதியிருப்பான்? அவனது கொப்பியைப் பார்க்க எனது மனம் ஆவல்படுகின்றது.
நான் என்னை மறந்து அவனைப் பார்த்ததைச் சகல மாணவர்களும் அவதானித்துக் கொண்டு எல்லோரும் அவனையே பார்க்கின்றனர். அவனோ என்னைப் பார்க்கின்றான்.
‘தம்பி இஞ்சை வாருங்கோ…’ நான் அவனை அழைக்கின்றேன். அவன் கொப்பியையும் கொண்டு வருகின்றான்.
‘உங்கடை பெயர் என்ன’
‘கேசவன்’
‘எழுதி முடிஞ்சிதா…’
‘ஓம்…’
கொப்பியை வாங்குகிறேன். மட்டையில்லை. நான்கு ஒற்றைகள், சகல பாடங்களும் எழுதப்பட்டிருக்கின்றது.
எனக்குக் கோபம் வரவில்லை!
‘கேசவன்… எல்லா பாடமும் ஒரு கொப்பியிலையா எழுகிறது..’
‘அம்மா கொப்பி வாங்கித் தரவில்லை…’
அவன் எழுதியிருப்பதைப் பார்க்கின்றேன். கோணல் மாணலாக நான்கு வரிகள் மட்டும் எழுதியிருக்கிறான்.
வருஷப் பிறப்பன்று காலை அம்மா அழுது கொண்டிருந்தா.
பகல் ஒன்றும் சமைக்கவில்லை.
மத்தியானம் நான் குரும்பை குடித்தேன்.
இரவு அப்புச்சி அரிசி கொண்டு வந்தார் கஞ்சி காய்ச்சிக் குடித்தோம்.
திரும்பவும் அந்த நான்கு வரிகளையும் வாசிக்கின்றேன்.
எனது கண்களில் தீப்பிடித்து… கண் பாவைகள் இரண்டும எரிந்து… கருகுவதைப் போன்று…
நான் கேசவனைப் பார்க்கிறேன்.
அவன் முகத்தில் எந்தச் சலனமுமில்லை.
‘கேசவன்…’
‘சேர்..’
‘வருஷப் பிறப்பண்டு அம்மா ஏன் அழுதவ’
‘அவ நெடுகலும் அழுகிறவ…’
‘அப்புச்சி எங்க போனவர்…’
‘வேலைக்கு…’
‘சேர், சேர்.உவன் கேசவன் வீட்டிலை ஒருக்காலும் சமைக்கிற தில்லைச் சேர்… நெடுகலும் இளனிக் குரும்பை தான். குடிக்கிறவை..”
ஒருத்தி கூறுகின்றாள்.
‘உங்களுக்கெப்பிடி இதெல்லாம் தெரியும்…’
‘என்ரை வீட்டுக்குப் பக்கத்திலை தான் சேர்… கேசவன்ரை வீடு…’
‘கேசவன் இப்ப சொன்னதெல்லாம் உண்மையா…’ நான் கேட்கிறேன். அவன் தலையை அசைத்து அதை ஒப்புக் கொள்கிறான்.
‘ஏன் கேசவன்… உங்கடை அம்மா ஏன் சமைக்கிறதில்லை…’
‘அரிசி சாமான் ஒண்டும் இருக்காது…’
‘உங்களுக்குப் பசிக்காதா’
‘பசிக்கும்… ஆனால் பழக்கம்…’
அவனது சேட்டில் படிந்திருக்கும் குரும்பைக் கயர்களைப் பார்க்கின்றேன்… சழுதாயத்தில் ஒட்டியிருக்கும் வறுமைக் கறைகளின் பிரதிகளாய்…
‘சேர்… வருஷப் பிறப்பண்டு அழுதால் இந்த வருஷம் முழுவதும் அழ வேண்டி வரும் இல்லையா சேர்…’ ஒரு மாணவன் கேட்கின்றான்.
‘ஆர் சொன்னது…’
‘அம்மா சொன்னவ…’
கேசவன் என்னைப் பரிதாபமாகக் பார்க்கின்றான். அவனது பார்வையில் புதிய தேவைகளின் பிரசவம் எனக்குத் தெரிகிறது.
என்ன கேசவன்.
‘அம்மா வருஷப் பிறப்பண்டு அழுதவ… அப்ப எனிமேலும் அழுவாதானே உலகம் புரியாத அந்தப் பாலகனின் பாச உணர்வு..?
‘கேசவன்…’
‘சேர்…!
உங்கடை அம்மா அழுதால்… நீங்கள் அழுகிறதில்லையா…’
‘அழுகிறனான்…’
‘நீங்கள் அழுதால் உங்கடை அம்மா ஒண்டும் சொல்லுறதில்லையா…
‘சொல்லுறவ…’
‘எங்கடை வறுமைக்கெல்லாம் நீதான் சொந்தக்காறன்… இப்ப கூட அழுது பழகினால்தான் பிறகு நல்லாய் அழலாம்… எண்டு சொல்லுற…’ கிளி போல அவன் கூறுகிறான்.
கேசவனின் தாய் கூறியது…? மாற்றமற்ற இந்தச் சமுதாயத்தைப் பற்றிய தீர்க்க தரிசனமா?
என்னால் பேச முடியவில்லை!
‘சேர்…’
‘என்ன கேசவன்…’
‘அம்மாவின்ரை கண்ணுக்குள்ளை இருக்கிற கண்ணீர் எப்ப சேர் முடியும்…’
கேசவன் கேட்ட கேள்வி?
‘ஏன் கேசவன் அப்பிடிக் கேக்கிறீங்கள்…’
‘கண்ணீர் முடிஞ்சு போச்சுதெண்டால் அம்மா அழமாட்ட… அது தான் கேட்டன்…”
‘எங்களுடைய வறுமை தீர வழியில்லையா’ என்பதைத்தான், அவன் கேட்கத் தெரியாமல் கேட்கின்றான்!
‘வற்றிப்போன ஏரிகள், நீருக்காக வானத்தைப் பார்த்து ஏங்குவது போல்’ கேசவன் போன்றவர்களின் வற்றிப்போன வாழ்க்கைகள்… அவர்களது ஏக்கங்கள்…?!
நான் கேசவனைப் பாக்கிறேன்… அவன் எனது பதிலை ஆவலோடு எதிர்பார்த்து நிற்கின்றான். எனது உடம்பெல்லாம் சூடேறி … நரம்புகள் புடைத்து…
‘கேசவா… இந்தப் பூமியில் இறுதி வெற்றி நம்மவருக்குத் தான்…’ என்று கூற நினைக்கின்றேன். ஆனால் நான் கூறவில்லை!
ஏனென்றால்
கேசவனால் புரிந்து கொள்ள முடியாது.
நான் மெளனமாக இருக்கிறேன்.
பாடசாலை விடுவதற்கான மணி அடிக்கின்றது.
(யாவும் கற்பனை)
– வீரசேகரி, 13.06.1982.
– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.