கண்ணிலே அன்பிருந்தால்…
பள்ளி வளாகத்தில் காலைப் பிரார்த்தனை முடிந்து மாணவ, மாணவிகள் தங்களது வகுப்பறைக்குள் சென்று அமர்ந்தனர்.
“ஹலோ….ஸ்டூடெண்ட்ஸ்!” என்று அழைத்தபடியே ஏழாம் வகுப்பில் நுழைந்த தலைமை ஆசிரியர் “இவங்கதான் புதிதாக வந்திருக்கும் ஆசிரியை. இனிமேல் உங்களுக்கு வகுப்பாசிரியை இவங்கதான்” என்று தன்னுடன் வந்த பெண்மணியை அறிமுகப்படுத்தினார்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்; நீங்கள் இன்றிலிருந்தே உங்கள் பாடங்களை தொடங்கலாம் என்று திரும்பி சென்றார்.
வழக்கமான அறிமுகப்படலத்தின் பிறகு ஆசிரியை லட்சுமி பாடம் நடத்த தொடங்கினாள்.
ஒரு வாரம் கடந்தது. இரண்டாவது பெஞ்சில் அமர்ந்திருக்கும் பெண் பானுமதி மட்டும் ரொம்பவும் அமைதியாகவும், யாருடனும் ஒட்டாமலும் இருப்பதைக் கண்டு கொண்டாள். பாடங்களை கவனிப்பதிலோ, கேள்விகளுக்கு பதில் சொல்வதிலோ எந்த குறையும் இல்லா விட்டாலும் அவளிடம் ஒரு ஒதுக்கத்தை லட்சுமியால் உணர முடிந்தது.
ஒரு நாள் பானுமதியை அருகே அழைத்து “ஏம்மா.. நீ எப்போதும் இப்படி சோர்வாகவே இருக்கிறாய்? உனக்கு என்ன பிரச்னை?” என்று விசாரித்தாள்.
எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை மிஸ்….
என்னம்மா சொல்கிறாய்?
ஆமாம் மிஸ். எனக்கு இதயம் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. மருந்துகள் சாப்பிட்டு சிகிச்சைகள் பெற்றுக்கொண்டு இருக்கிறேன். மாதாமாதம் செக்-அப் போய் வருகிறேன். கொஞ்சம் உடம்பு தேறியபின் ஒரு வருடம் சென்று ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்.
இங்கு எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் நான் விளையாட்டுகளிலோ, மற்றவர்களுடன் ஆரவாரப்பேச்சுக்களிலோ கலந்து கொள்வதில்லை. மத்த ஆசிரியர்களும் என்னை எதற்கும் கட்டாயப்படுத்தியோ, கேள்விகள் கேட்கவோ மாட்டார்கள். நான் வகுப்புக்கு வருவது, பாடங்களை கவனிப்பது, தேர்வுகள் எழுதுவது என்று இருந்து கொள்கிறேன்.
அடடா…. சரியாகி விடும். கவலைப்படாதே.
“ஆனால் நீ அதையே யோசிக்க கூடாது. இப்படி சோர்ந்து போய் அமர்ந்திருக்கக் கூடாது. அது உன் தன்னம்பிக்கையை குறைக்கும். உன்னை அதைர்யப்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காதே. இப்போது மருத்துவம் ரொம்ப முன்னேறி விட்டது, அறுவை சிகிச்சைக்கு பிறகு நீ நன்கு குணமாகிவிடுவாய்.”
நீ ஒதுங்கி நிற்காமல் எல்லோருடனும் கலந்து பழகு. நீ உன்னை எப்படி அடையாளப்படுத்த விரும்புகிறாய்? உன் பலவீனத்தை வைத்தா அல்லது உன்னுடைய திறமையை வைத்தா? நீ மற்றவர்களின் இரக்கத்தையோ, சலுகைகளையோ சம்பாதிப்பதை விட அவர்களிடமிருந்து ஊக்குவித்தலையும், பாராட்டுக்களையும் பெறத்தான் முயற்சிக்க வேண்டும். யோசி. உன் உடல் நிலையை பாதிக்காத வகையில் உன்னால் என்ன செய்ய முடியும்? உன் திறமை என்ன? தனித்துவம் என்ன ? என்பதை நீதான் உணர்ந்து அதை செயல் படுத்தி வெற்றி பெற வேண்டும் .
அதோ….பார்த்தாயா ? என்று கூரையின் ஒருபுறம் ஒரு இடத்தை சுட்டிக் காட்டினாள். அங்கு ஒரு சிலந்தி வலை பின்னிக்கொண்டிருந்தது.
கலை நயம் கொண்ட ஓவியமாய்
கட்டிடக் கலைக்கு அடித்தளமாய்
வாழ வலை பின்னும்;
சுற்றி வரும் சிலந்தி
சொல்லித்தரும் பாடம்……. சுறுசுறுப்பு,
தனியே உழைத்திடும் தன்னம்பிக்கை
கிங்- ராபர்ட் புரூஸ் மற்றும் ஸ்பைடர் கதையில், சிலந்தி தனது வெற்றியை அடைய எவ்வளவு வலுவாக முயற்சிக்கிறது என்பதைப் பார்த்து, சிலந்தியின் துணிச்சலைக் கண்டு ஊக்கம் பெற்ற ப்ரூஸ் மன்னன் தனது இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற, வெற்றிபெறும் வரை கடினமாக முயற்சி செய்து வெற்றியும் பெற்றான் என்று படித்திருப்பாய் தானே?
நான் இங்கு சொல்வது வெற்றி தோல்வி பற்றியல்ல. சிலந்தி பின்னுகின்ற வலையைப்பார். பறவைகள் கட்டும் கூட்டைப்பார். யாருடைய உதவியும் இல்லாமல் தன்னந்தனியே இந்த வடிவத்தை அமைக்கும் அவற்றின் திறமையைப் பற்றி யோசி. தனித்துவத்தை பற்றி சிந்தித்து பார். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அதை கண்டுபிடித்து அதனை செயல்படுத்த வேண்டும்.
பள்ளிப்படிப்பை தவிர ஏதேனும் ஒரு கலையை கற்றுக்கொள்ள வேண்டும். ஓவியம் வரைதல் பிடிக்கிறதா ? கதை, கவிதை எழுத வருகிறதா ? நல்ல புத்தகங்களை படிக்கப் பிடிக்கிறதா ? இசை பிடிக்கிறதா ? இப்படி பல்வேறு விஷயங்களை யோசித்து, உன் மனதை ஈடு படுத்திக்கொள். உன்னை மேம்படுத்திக்கொள். உன் திறமையை வெளி உலகிற்கு வெளிப்படுத்து. உன் குறைபாடுகள் பின்னுக்கு போய்விடும்” என்று பொறுமையாகவும், அன்பாகவும் பானுமதிக்கு எடுத்துரைத்தாள்.
அதன் பின் வந்த நாட்களில் பானுமதியிடம் சில மாற்றங்களை காண முடிந்தது. தினமும் கரும்பலகையை துடைத்து திருக்குறள் எழுதியோ அல்லது சின்ன சித்திரம் வரைந்தோ ஆசிரியரை வரவேற்றாள். மெதுவாக அவளது கூட்டை விட்டு வெளியே வரத்தொடங்கினாள்.
புரிந்து கொண்ட லட்சுமி டீச்சரும் சிரித்தபடி அவளை தட்டிக்கொடுத்தாள்.
மிஸ்…. இப்போதெல்லாம் நான் லைப்ரரிக்கு சென்று புத்தகங்கள் எடுத்து படிக்கிறேன் என்று கூறிய பானுமதியை, “நல்லது. உன்னுடைய மாற்றங்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது” என்று பாராட்டினாள் லட்சுமி மிஸ்.
ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம் லட்சுமி மிஸ்ஸிடம் தனது நோட்டு புத்தகத்தை கொண்டு வந்து நீட்டினாள் பானுமதி. மிஸ்…. 23 ஏப்ரல் “உலக புத்தக தினம்” என்று தெரிந்து கொண்டேன். புத்தகம் பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கேன். படித்து விட்டு உங்கள் அபிப்ராயம் சொல்லுங்கள் என்றாள் .
வாங்கி படித்துப்பார்த்த லட்சுமி மிஸ் “மிகவும் நன்றாக உள்ளது. இந்த கவிதையை 23 ஏப்ரல் காலை பிரார்த்தனை நேரத்தில் எல்லோருக்கும் முன்னால் நீயே பட” என்று பாராட்டினாள். சொன்னது போலவே அன்று பானுமதியை கவிதையை எல்லோருக்கும் முன்னால் வாசிக்க வைத்தாள்.
எல்லோருக்கும் வணக்கம் செலுத்திய பானுமதி – “புத்தகம் என்ற தலைப்பில் என்னுடைய எண்ணங்களை சிறு கவிதையாக உங்கள் முன் வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி” என்று கவிதையை படித்தாள்
“புத்தகம்”
படித்துப்பார் ..பழக்கமாகும் .
பழகிப் பார் ..நல்ல நட்பாகும்.
தேடிப்பார் ..பார்வை விசாலமாகும்
உணர்ந்து பார் ..நல்ல அனுபவமாகும்
அறிவை பெருக்கும் ஆசானாகும்.
அழியாத அறிவுக் கருவூலமாகும்
உலகை அறிய உதவி செய்யும்
உற்சாகம் தந்து உன்னை உயர்த்தும்
உன்னை உயர்த்தி உன்னதம் தரும்
புரிந்து கொண்டால் பக்குவம் தரும்.
எனவே புத்தகங்களை வாசிக்கத்தொடங்குவோம்.
வாசிப்பை நேசிப்போம்
வாசிப்பை பூஜிப்போம்
வாசிப்பதை ரசிப்போம்
வாசித்ததை யோசிப்போம்
வாசிக்க சுவாசிப்போம்
வாசிக்க யாசிப்போம்
வாசிப்பதற்காகவே வசிப்போம்
வாழ்க்கை அழகாகும்.
எண்ணங்கள் மெருகேறும்
வண்ணங்கள் உருவாகும்.
சரியான ஏற்ற இறக்கங்களுடன் படித்த பானுமதியின் குரலைக்கேட்டும், கவிதையை ரசித்தும் தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர்கள், சக மாணவ மாணவிகள் என்று எல்லோரும் கை தட்டிப் பாராட்டினார்கள். இது நாள் வரை இருக்கும் இடம் தெரியாது இருந்த பானுமதியா இது என்று ஆச்சரியப்பட்டார்கள்.
“இந்த கோடை விடுமுறையில் எனக்கு இதய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அது வெற்றிகரமாக நடந்து நான் நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டும் பள்ளிக்கு வருவேன் என்று நம்புகிறேன். எனக்கு தன்னம்பிக்கையை வளர்த்து, என்னை மாற்றிய லட்சுமி மிஸ்ஸுக்கு என்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் “.
நேற்றைய நிகழ்வுகள் நினைவுகளாக,
எதிர்பார்ப்புகள் நாளைய வெற்றிகளாக ,
இன்றைய பொழுதில் இனிதாய் வாழ்ந்திட,
என்றும் மகிழ்ந்திட, மகிழ்வே தொடர்ந்திட
இறைவா எமக்கென்றும் அருள் புரி
என்று கவிதை படித்தாள் பானுமதி. லட்சுமி மிஸ் அவளருகே வந்து அவளை அணைத்துக் கொண்டார்.
அவளருகே வந்த தலைமை ஆசிரியரும் நாங்கள் எல்லோரும் உனக்காக காத்திருப்போம். கை கொடுப்போம். நீ எல்லாவற்றையும் ஜெயித்து வர எங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் உன்னுடன் இருக்கும். கவலைப்படாதே என்று கூறினார்.
இப்போது பானுமதி முகத்தில் கவலை இல்லை ; சோர்வு இல்லை. அச்சத்தை துறந்து, எதையும் எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை ஒளி தெரிந்தது. தனி கம்பீரம் ஒளிர்ந்தது. அன்பும், ஆதரவும் காட்டும் நட்புகளும், ஒளிந்திருந்த அவளது திறமையை வெளிக்கொணர்ந்த சரியான ஒரு வழிகாட்டியும் கிடைத்த மகிழ்ச்சியுடன், உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்தாள்.