கண்ணாடிக் கோலங்கள்
கதையாசிரியர்: வாசுகி நடேசன்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 263

(இத்தாலிய மொழியில் இருந்து மொழிபெயர்ப்பு)
எனக்கு, லூக்காவைச் சந்தித்த முதல் நாள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது செப்ரெம்பர் மாதம் .அன்றுதான் இடைநிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு தொடங்கியிருந்தது.அவன் வகுப்பில் நுழைந்தபோது நான் எனது இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
சற்றுக் கருமையான மயிர்க்கற்றை..மண்ணிற விழிகள்.சிரித்த முகம்..எமது ஆசிரியர் எனக்குப் பக்கத்து வாங்கில் அவனை அமரச் செய்தார், ஏனோ எனது இதயம் மிக வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.அதனை அவனும் உணர்ந்திருக்கக் கூடும் என எண்ணினேன்.
தொடக்கத்தில் நாம் இருவரும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவே இருந்தோம். என்னால் அவனுடைய கண்களை நேர்கொண்டு பார்த்துப் பேச முடியவில்லை.பாட நேரத்தில் நாம் இருவரும் இணைந்து வேலை செய்யும் ஒவ்வொரு சமயமும் அவன் முகம் சிவந்து போகும்.
முதல் தடவை அவன் என்னிடம் பேனாவை இரவல் கேட்ட போது நான்மிகவும் தடுமாறிப் போனேன்.அவன் எனக்கு பேனாவைக் கொடுக்க விருப்பமில்லைப் போலும் என எண்ணியது நினைவில் இருக்கிறது.பின்னாளில் எமது முதிராத இத்தன்மையை எண்ணி இருவரும் சிரித்தபோது தான் எல்லாம் மாறிப் போனது.மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ளத் தொடங்கினோம். ஓய்வு நேரங்களில் இருவரும் எல்லாவற்றையும் பற்றிப் பேசத்தொடங்கினோம் .எமக்குப் பிடித்த பாடகர். எமக்குப் பிடித்த படங்கள் ,நாங்கள் வெறுக்கும் பாடங்கள் என்று எல்லாமும்தான். லூக்கா கலகலப்பான சுபாவம் கொண்டவன். நான் சோகமாக் இருந்த பொழுதுகளில்கூட தன் பேச்சால் என்னைச் சிரிக்க வைத்தான்.அவன் அருகில் இருக்கும்போது எனது பிரச்சினைகள் யாவும் மறந்து போகும்.சில மாதங்களில் எமது நட்பு மிகவும் உறுதியானது.வீட்டுப் பாடங்களை இணைந்து செய்தோம் .இரவில் ஒருமணிப்பொழுதாவது போனில் பேசலானோம்.வார முடிவில் இணைந்தே பொழுதைக் கழித்தோம்.
நாம் இருவரும் பிரிக்கமுடியாதவர்கள் என்று எமது பெற்றோர் கேலி செய்தார்கள். அவர்கள் சொல்லுவது சரிதான் .அவன் இல்லாத பொழுதுகளை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.பள்ளி இறுதி ஆண்டில் லூக்காவுடன் நான் கொண்டிருப்பது வெறும் நட்பு மட்டுமே அல்ல என்பதை உணரத் தொடங்கினேன். அவன் சிரிக்கும்போது எனது வயிற்றில் பட்டாம் பூச்சிகள் சிறகடித்தன .பதின் மூன்று வயதில் நான் உணர்ந்ததை அப்பொழுது என்ன பெயர்இட்டு அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. லூக்கா எனது வாழ்வில் மிக முக்கியமான ஒருவனாக மாறி இருந்தது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது.
நடுநிலைப் பள்ளிக்கும் உயர்நிலைப் பள்ளியின் முதலாமாண்டுக்கும் இடையிலான கோடைக்கால விடுமுறையின் போது, லூக்காவுக்கும் எனக்கும் இடையே ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்தேன்.
அன்று மாலை காற்றுக்கூட ஏதோ மாற்றம் கொண்டதாய் வீசியது நானும் அவனும் வழமை போல பூங்காவில் நீண்ட தூரம் நடந்துகொண்டிருந்தோம். அவன் எனது கையைப்பற்றினான்.இம்முறை அவன் எனது கையை விடுவிக்கவேயில்லை..
எங்கள் கண்கள் ஒன்றை ஒன்று சந்தித்துக்கொண்டன. எமக்கிடையே வார்த்தைகள் எவையும் தேவைப்படவில்லை. நான் என்ன உணர்ந்தேனோ அதையே அவனும் உணர்ந்தான் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
எங்கள் வகுப்பு நண்பனின் பிறந்த நாள் ஒன்றில் நாம் கலந்து கொண்டோம். இருவரும், எமது நண்பர்களிடம் இருந்து சற்று விலகி தோட்டத்தில் அமர்ந்து கொண்டோம் .உயர் நிலைப் பள்ளிக்கு செல்வது பற்றிப்பதட்டத்துடன் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று, லூக்கா என்னை நோக்கி சாய்ந்து மென்மையாக முத்தமிட்டான் அவன் முத்தம் என்னுள் வெட்கத்தை உருவாக்குவதாயிருந்த போதும் எனக்குத் தேவையானதாகவும் இருந்தது. நாங்கள் பிரிந்தபோது, முட்டாள்கள் போல சிரித்துக் கொண்டோம். அந்தத் தருணத்திலிருந்து, நாங்கள் அதிகாரப்பூர்வமாக காதலராகியிருந்தோம்.
பள்ளியில் முதல் மாதம் மஜிக் போலக்கழிந்தது பள்ளிக்கு ஒன்றாகவே போனோம் .மதிய இடைவேளையின் போது ஒன்றாகவே இருந்து உணவருந்தினோம் . மாலையில் நூலகத்தில் ஒன்றாகவே அமர்ந்து படித்தோம்,சனிக்கிழமை மாலைகளில் நண்பர்களுடன் சினிமாவுக்கோ பீட்சா சாப்பிடவோ ஒன்றாகவே சென்றோம் . ஞாயிற்றுக்கிழமைகளில் நகரின் மத்தியில் நீண்ட தூரம் இருவர் மட்டும் நடந்தோம் .எல்லாம் சரியானதாகவும் எளிமையானதாகவுமே கழிந்தது.வீட்டுப் பாடங்களைச் செய்வதையும் பரீடசகளையும் தவிர்த்து எமக்கு எந்தவிதக் கவலைகளும் பெரிதாக இருக்கவில்லை.
நண்பர்கள் இல்லாது நாங்கள் சென்ற முதல் பயணம் எனக்கு இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. லூக்கா என்னை மிகவும் அழகான இடங்களுக்கு அழைத்துச் சென்றான்,ஆற்றங்கரையில் உள்ள பூங்கா,… வெளிப்புற இருக்கைகள் கொண்ட ஐஸ்கிரீம் கடை,…நல்ல வியூ உள்ள மலைமுகடுகள்…எனப் பல இடங்கள் சென்றோம்.
எங்கள் கனவுகளைப் பற்றி, ….நாங்கள் வளர்ந்ததும் என்ன செய்ய விரும்புகிறோம் என்பது பற்றி, …நாங்கள் எதிர்காலத்தில் ஒன்றாகச் செல்லப்போகும் பயணங்களைப் பற்றி …மணிக்கணக்கில் பேசினோம்.
உயர்நிலைப் பள்ளியில் கற்ற காலங்கள் எங்கள் வாழ்வில் மிகவும் அழகானவை. நாங்கள் இளமையாக இருந்தோம், காதலில் மூழ்கியிருந்தோம், எங்கள் காதல் என்றென்றும் நீடிக்கும் என்று உறுதியாக நம்பினோம். எந்த விதமான பொறாமையோ , சிக்கல்களோ, அல்லது கடுமையான பிரச்சினைகளோ எமது காதலில் இல்லை. ஒருவருக்கொருவர் உண்மையிலேயே நேசித்த இரண்டு டீனேஜர்கள்,என்ற இனிமை மட்டுமே இருந்தது.
நாங்கள் உயர்நிலைப் பள்ளியினை முடித்தபோது, லூக்காவும் நானும் வெவ்வேறு பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுத்தோம். ஆரம்பத்தில் அது கடினமாகவே இருந்தது..நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் மிஸ் செய்தோம், ஒவ்வொரு மாலையும் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசினோம். வார இறுதி நாட்கள் விலைமதிப்பற்றனவாக மாறின, ஏனென்றால் அவை மட்டுமே நாங்கள் ஒன்றாகச் செலவிடக்கூடிய தருணங்கள். ஆனால் சிறிது சிறிதாக, தூரத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொண்டோம், உண்மையில் அது ,நாங்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தை இன்னும் அதிக பெறுமதியுடையதாகவும் சுவாரசியமானதாகவும் மாற்றியது.
பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எங்களுக்குள் சில பிரச்சினைகள் தோன்றின.
லூக்கா தனது வகுப்பில் சாரா என்ற பெண்ணை அடிக்கடி சந்தித்து பேசத் தொடங்கினான். அது என்னைப் பொறாமையடையச் செய்ததை என்னால் மறைக்க முடியவில்லை.
ஒரு மாலை, நாங்கள் தொலைபேசியில் ஒரு பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்,.அதன் பின் ஒரு வாரமாக ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. என் வாழ்க்கையின் மிக மோசமான வாரம் அது.
வார முடிவில் லூக்கா ஒரு பூங்கொத்துடன் என் வீட்டிற்கு வந்து மன்னிப்புக் கேட்டான். சாரா ஒரு தோழி என்றும், அவன் என்னை மட்டுமே நேசிப்பதாகவும் சத்தியம் செய்தான். என்னை இறுக அணைத்து தன் துய்மையான அன்பை வெளிப்படுத்தியபோது நான் சமாதானம் அடைந்திருந்தேன். இருவரது கண்களும் கலங்கின .
அதுதான் நாங்கள் ஒன்றாகச் சமாளித்த கடினமான முதல் தருணமாகும். சில நேரங்களில் நாங்கள் அற்பமான விஷயங்களுக்கு வாதிட்டோம்: போதுமான அளவு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள்வில்லை என்பதை நாங்கள் உணராமல் இல்லை. இருவருக்கும் ஏதாவது ஒன்றைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன. இருவரும் சோர்வாகவும் பதட்டமாகவும் இருந்தோம்.
ஆனால் ஒவ்வொரு முறையும், நாங்கள் சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்தி முன்பை விட வலுவானவர்களாகத் திரும்பி வந்தோம்.
காதல் அழகானது மட்டுமல்ல, காதலில் நிலைகொள்ள அர்ப்பணிப்போடு பொறுமையும் தேவை என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்.
நாங்கள் இப்பொழுது உயர்நிலைப் பள்ளிக் காலத்து அப்பாவித்தனமான காதலர்கள் அல்ல,,பல்கலைக்கழக காலத்தில் எங்கள் காதல் முதிர்ச்சியடைந்திருந்தது..இக்காலத்தில் ஆரம்ப சிரமங்களை நாங்கள் சமாளித்து, மன அழுத்த காலங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து,,,, அது தேர்வுகளாக இருந்தாலும் சரி, எதிர்காலம் பற்றியதாக இருந்தாலும் சரி…..ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டவர்களாக மாறிவிட்டதாக நம்பிமோம் ….
நாங்கள் வளர்ந்துவிட்டதாகவும், அடுத்த கட்டத்திற்குத் தயாராக இருப்பதாகவும் உணர்ந்தோம். எங்கள் எதிர்காலத்திற்கான தீவிரமான திட்டங்களை உருவாக்கத் தொடங்கினோம். பட்டம் பெற்ற பிறகு எங்கு ஒன்றாக வாழ்வது, என்ன வேலை தேடுவது, எப்போது திருமணம் செய்து கொள்வது என்பது பற்றி நாங்கள் அடிக்கடி பேசினோம். லூக்கா ஏற்கனவே ஒரு பொறியியல் நிறுவனத்தில் பகுதிநேர வேலை செய்யத் தொடங்கியிருந்தான், நான் தனியார் கல்லூரியில் படிப்பித்துக் கொண்டிருந்தேன்.
முப்பது வயதில், எங்கள் வாழ்க்கை நாங்கள் எப்போதும் கனவு கண்டது போல் மாறிவிட்டது. நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக நகர மையத்தில் ஒரு நல்ல அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்.
நான் ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிகிறேன், லூக்கா ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியியலாளராக இருக்கிறான் காலையில், நாங்கள் ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறி, தனித்தனியாகச் செல்வதற்கு முன் ஒரு சிறிய முத்தத்தைப் பகிர்ந்து கொள்வோம், மாலையில், இரவு உணவிற்குச் சந்திப்போம். இந்த வாழ்க்கை என்னைப் பாதுகாப்பாக உணர வைத்ததுடன் பிடித்தமானதாகவும் இருந்தது..
எங்களுக்கு, பல வருடகால பழக்கமுள்ள நெருங்கிய நண்பர்கள் வட்டம் இருந்தது. அவர்களுடன் ஒரு குடும்பம் போல நாம் பழகினோம்..
மூன்று வருடங்களாக ஒன்றாக வாழும் அந்திரேயாவும், ஆனாவும் ……கிறிஸ்தீனாவும் அவள் காதலன் ஆன சிமோனும்… தனியாகவாழும் மார்க்கோவும் எமது நண்பர்களில் மிக முக்கியமானவர்கள்.நாங்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் சந்தித்துக் கொண்டோம், சில சமயங்களில் திரைப்படங்களுக்குச் சென்றோம், சில சமயங்களில் ஒருவரின் வீட்டில் இணைந்து விருந்துண்டுமகிழ்வோம் .
வார இறுதி நாட்களான சனி ஞாயிறு எமக்கு ஓய்வு நாட்கள்.
நானும் லூக்காவும் வழக்கமாக ஒன்றாக சமைப்போம்;
பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி சோபாவில் அமரந்தபடி சினிமா படம் பார்ப்போம்.ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்தவுடன் காலை உணவை முடித்துவிட்டு பேப்பர்களைப் படிப்போம்.பின் நடப்பதற்குச் செல்வோம். அல்லது நண்பர்களைச் சந்திப்போம். அது ஒரு எளிமையான, ஆனால் நிறைவான வாழ்க்கை. குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது பற்றி நாங்கள் இன்னும் தீவிரமாக விவாதிக்கவில்லை,
இவ்வளவு நிலையான உறவைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். என் சக ஊழியர்கள் எப்போதும் தங்கள் காதலர்களைப் பற்றி புகார் செய்தார்கள், ஆனால் எனது காதல் வாழ்க்கையில் ஒருபோதும் புகார் செய்ய எதுவும் இருக்கவில்லை.
லூக்கா நல்ல குணம் படைத்தவன்., வீட்டு வேலைகளில் எனக்கு உதவினான், எப்போதும் எனது பிறந்தநாளையும் நாம் இருவரும் திருமணத்தில் இணைந்து வாழத்தொடங்கிய நாளையும் நினைவுவைத்திருந்தான், எந்த காரணமும் இல்லாமல் எனக்கு பூங்கொத்துக்களைக் கொண்டுவந்து பரிசளித்தான்.
நான் சோர்வாக வீடு திரும்பியபோது, அவன் ஏற்கனவே இரவு உணவை தயாரித்திருப்பான். நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எல்லாம் , அவன் என்னை ஒரு குழந்தையைப் போல பார்த்துக்கொண்டான்
எங்கள் வாழ்க்கையைப் பார்க்கும்போது, எல்லாம் சரியானதாகத் தோன்றியது. கல்லூரிக் காலத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நாங்கள் சமாளித்தோம், எங்கள் சமநிலையைக் கண்டறிந்தோம், எங்களுக்கு நம்பகமான நண்பர்கள் குழுவும் நாங்கள் நேசித்த ஒரு வீடும் இருந்தது.
எங்கள் காதல் கதை ஒரு பாறை போல உறுதியாகிவிட்டது.
மார்ச் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை மாலை, மார்கோவின் வீட்டில் இரவு உணவை ஏற்பாடு செய்திருந்தோம்.
நாங்கள் அனைவரும் அங்கே இருந்தோம்: அனைவரும் இணைந்து சமைத்தோம். சூழல் எப்போதும் போலவே, நிதானமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
நாங்கள் மார்க்கோவின் பிரபலமான லசானியாவை சாப்பிட்டோம், சிமோன் கொண்டு வந்த சிவப்பு ஒயினைக் குடித்துக்கொண்டிருந்தோம். அந்திரேயா சொன்ன ஒரு நகைச்சுவையைக் கேட்டு அனைவரும் சிரித்தோம், நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தபோது நான் எப்போதும் போல மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் உணர்ந்தேன்.
இனிப்புவகை உண்வைச் சாப்பிட்டு முடித்ததும், மார்கோ எழுந்து நின்று மேசையில் தாளம் தட்டி சுத்தம் செய்யத் தொடங்கினான்.
“பொறு,” என்று மர்மமான புன்னகையுடன் திடீரென்று கூறினான், “மாலையை இன்னும் சுவாரஸ்யமாக்க எனக்கு ஒரு யோசனை இருக்கிறது.”
அவன் மீண்டும் அமர்ந்து தனது செல்போனை எடுத்து, மேசையின் மையத்தில் வைத்தான். “இந்த விளையாட்டைப் பற்றி நான் ஆன்லைனில் படித்தேன். இது ‘மேசையில் தொலைபேசி’ என்று அழைக்கப்படுகிறது. எல்லோரும் தங்கள் தொலைபேசியை இங்கே மையத்தில் வைக்க வேண்டும், மாலை முழுவதும், வரும் ஒவ்வொரு குறும் செய்தி, அழைப்பு அல்லது அறிவிப்பும் குழுவுடன் பகிரப்பட வேண்டும்.”
முதலில், நாங்கள் அனைவரும் பதட்டமாக இருந்தோம். “உனக்கு பைத்தியமா,” கிறிஸ்தீனா கூறினாள், “அதனால்தான் இது வேடிக்கையாக இருக்கிறது!
மார்கோ வலியுறுத்தினான்:
“எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் நண்பர்கள் நம்மிடையே எதை மறைக்க வேண்டும்?” அந்திரேயா ஆதரித்தான்:
“வாருங்கள், வேடிக்கையாக இருக்கலாம்! எனக்கு மறைக்க எதுவும் இல்லை.”
சிமோன் உற்சாகமாகியதுடன், உடனடியாகத் தனது தொலைபேசியை மார்கோவின் தொலைபேசியின் அருகில் மேசையில் வைத்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக, நாங்கள் அனைவரும் விட்டுக்கொடுத்தோம். ஆன்னா கொஞ்சம் தயங்கினாள், ஆனால் அந்திரேயா தனது தொலைபேசியை வைத்தபோது, அவளும் அதையே செய்தாள்.
கிறுஸ்தீனா பெருமூச்சுவிட்டபடி தனது தொலைபேசியையும் வைத்தாள்.
மார்கோ லூக்காவைப் பார்த்து, “, நல்ல வேடிக்கையாக இருக்கும். என்ன நடக்கப்போகிறது பார்க்கலாம் ?” என்று உற்சாகப்படுத்தினான்
நான் சிரித்துக்கொண்டே என் தொலைபேசியை மற்றவர்களுடையதுடன் வைத்தேன்.லூக்காமிகவும் தயங்கினான், ஆனால் இறுதியில் அவனும்தனது தொலைபேசியை மற்ற அனைவரதுடனும் மேசையில் வைத்தான்.
மார்கோ மகிழ்ச்சியுடன் கூறினான், “சரி! இப்போது விதிகள் எளிமையானவை: ஒவ்வொரு முறையும் ஒரு தொலைபேசியில் ஏதாவது வரும்போது, உரிமையாளர் செய்தியைச் சத்தமாகப் படிக்க வேண்டும் அல்லது ஸ்பீக்கர்ஃபோனில் அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டும்.”
மாலை முழுவதும் எந்த ரகசியங்களும் எங்களுக்குள் இல்லை!
முதல் அரை மணி நேரம், விளையாட்டு மிகவும் வேடிக்கையாக இருந்தது. தீங்கற்ற செய்திகள் மட்டுமே வந்தன: கிறிஸ்தீனாவின்வின் அம்மா அவளை மருந்து சாப்பிட்டாயா என்று கேட்கிறார், லூக்காவின்
நண்பன் கால்பந்து விளையாட்டு எப்படி நடந்தது என்பதை அறிய விரும்புகிறான், மார்கோ ஒரு உணவகத்தின் விளம்பரத்தைப் பெறுகிறான்.
நாங்கள் எல்லோரும் சிரித்துக்கொண்டும், மகிழ்ச்சியாகவும் இருந்தோம், மது எங்களை இன்னும் மகிழ்ச்சியாக மாற்றியது.
மார்கோ வெற்றியுடன், ” பார்த்தீர்களா நான் சொன்னேன், இது வேடிக்கையாக இருக்கும் என்று!” என்றான்.
பின்னர், பத்து மணியளவில், முதல் செய்தி வந்தது, சிறிது பதற்றத்தை உருவாக்கியது. அந்திரேயாவின் தொலைபேசி “டிங்” என்று ஒலித்தது, “வாலன்டினா அலுவலகம்”—என்ற பெயரில் இருந்து ஒரு செய்தி திரையில் தோன்றியது. அந்திரேயா தொலைபேசியை எடுத்துச் சத்தமாக வாசித்தான்
“ஹாய், அழகானவரே, நீங்கள் அந்த அறிக்கையை முடித்துவிட்டீர்களா? உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நான் இன்னும் இங்கே இருக்கிறேன்… எதற்கும் தயாராக இருக்கிறேன்”
அங்கு நிலவிய அமைதி சங்கடமாக இருந்தது. நாங்கள் அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
ஆன்னாவின் முகம் மிளகாய்ப் பழம் போல சிவந்துவிட்டது.
“வாலன்டினா யார்?” அவள் அமைதியான குரலில் கேட்டாள், ஆனால் அவள் உள்ளே கொதித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை நான் புரிந்துகொண்டேன். “அவள்… அவள் ஒரு சக ஊழியர், நாங்கள் மில்லர் திட்டத்தில் ஒன்றாக வேலை செய்கிறோம்.அவள் வேலை சம்பந்தமாகவே பேசியிருக்கிறாள், அவள் எப்படிபட்டவள் என்பது உங்களுக்குத் தெரியும், சில சமயங்களில் விசித்திரமாக நகைச்சுவை செய்வாள்…” என்று அந்திரேயா தடுமாறத் தொடங்கினான், ஆன்னாவின் முகம் மேலும் மேலும் சிவந்து கொண்டே இருந்ததால் அவனது விளக்கம் அவ்வளவு உறுதியானதாகத் தெரியவில்லை.ஆன்னா சிரிக்க முயற்சி செய்தாள், ஆன்னா பதட்டமா இருக்கிறாள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. “ஓ, நிச்சயமா, வேலை உறவு,” அவள் வக்கிரமான தொனியில சொன்னாள். “அந்த சின்ன மனசுக்கு என்ன அர்த்தம்? அவ உன்னை தொழில் ரீதியாக நேசிக்கிறா?”
அந்திரேயா பதட்டமாகச் சிரிக்கிறான் “அலுவலகத்தில் பெண்கள் எப்படி இருக்காங்கன்னு உனக்குத் தெரியும், அவங்க எமோடிகான்ஸை எல்லா இடத்துலயும் வைக்கிறாங்க. அதுக்கு அர்த்தம் இல்ல அன்பே.” ஆன்னா மேசைக்கு அடியில் கைமுட்டி பிடித்திருந்ததைப் பார்த்தேன்,
“சரி, அந்திரேயாவுக்கு அதிக வேலை இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்!” என்று மார்கோ மனநிலையை எளிதாக்க முயன்றான். நாங்கள் அனைவரும் மனப்பூர்வமாகவன்றி கடமைக்காகச் சிரித்துவைத்தோம், உரையாடல் மீண்டும் தொடங்கியது.
ஆன்னா இன்னும் அந்திரேயாவின் தொலைபேசியை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன், அவள் முன்பை விட பதட்டமாகத் தெரிந்தாள்.
மாலை தொடர்ந்தது, ஆனால் ஏதோ மாறிவிட்டது.
வாலண்டினாவின் குறுஞ்செய்திவந்ததிலிருந்து சுமார் இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது,
மாலை இயல்பு நிலைக்குத் திரும்பியது போல் தோன்றியது. நாங்கள் கோடை விடுமுறையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம், மார்கோ கிரேக்கத்திற்குச் செல்ல விரும்பிய ஒரு பயணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, லூக்காவின் தொலைபேசி வாட்ஸ்அப் அறிவிப்பைப் போல ஒலித்தது.
நாங்கள் எல்லோரும் மேஜையை நோக்கித் திரும்பினோம், லூக்கா புன்னகையுடன் தனது தொலைபேசியை எடுத்தான். “இந்த நேரத்தில் எனக்கு யார் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள் என்று பார்ப்போம்,” என்று அவன் நகைச்சுவையாகக் கூறியபடி திரையைத் திறந்தான்.
வாட்ஸ்அப்பைத் திறந்தவுடன், அவனது முகத்தில் இருந்து புன்னகை மறைந்து, அவன் முகம் வெளிறியது.லேசாக நடுங்கத் தொடங்கினான். “அப்போ?” மார்கோ கேட்டான், “அது யார்? நீ அதைச் சத்தமாகப் படிக்க வேண்டும்; இதுவே விதி!”
லூக்கா எதுவும் சொல்லாமல் திரையை வெறித்துப் பார்த்தான். நான் கவலைப்படத் தொடங்கினேன்: “லூக்கா, நீ நலமாக இருக்கிறாயா? அவன் பீதியடைந்த கண்களுடன் என்னைப் பார்த்துத் தடுமாறினான்: “பேர்ளா (இதுதான் எனது பெயர்)… என்னால் முடியாது… இது ஒரு தவறான…”
”என்ன தவறு?” நான்
“சாக்குகள் இல்லை!” என்று மார்க்கோ கூச்சலிட்டான், முன்பு இருந்ததைவிட லூக்கா இன்னும் பதட்டமானான். “விதிகள் விதிகள்தான், நாங்கள் அனைவரும் பார்க்க வேண்டும்!”
மார்க்கோ தொலைபேசியை எடுக்க முயன்றான், ஆனால் லூக்கா அந்தச் செய்தியை அழிக்க முயன்றான்.
இந்த இழுபறியில் தொலைபேசியின் திரை எனது பக்கம் திரும்பியது. நான் திரையை அவசரமாகப் பார்க்கிறேன்.. நான் பார்த்தது என் இரத்தத்தை உறையச் செய்தது.
உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருந்த, காம உணர்வைத் தூண்டும் அரை நிர்வாணப் பெண்ணின் புகைப்படம் இருந்தது.
அதன் கீழே எழுதப்பட்டிருந்தது: “நாளை 3 மணிக்கு பேர்ளா வேலையில் இருக்கும்போது உங்களுக்காகக் காத்திருப்பேன்… என்னால் அதிக நேரம் காத்திருக்க முடியாது.”
என்னைச் சுற்றியுள்ள உலகம் நின்றுவிடுகிறது. என்னால் சுவாசிக்க முடியவில்லை, பேச முடியவில்லை.
மேஜையில் இருந்த அனைவரும் புகைப்படத்தையும் செய்தியையும் பார்த்தார்கள், அமைதி ஊழி முடிவின் பின்னானது போல் பரவியது.
நான் தொடர்பின் பெயரைப் பார்த்தேன்: “மாரியோ டெலூக்கி.”
ஆனால் அது மாரியோ(ஆணின் பெயர்) அல்ல; திரையில் இருந்தவளை எனக்கு நன்கு தெரியும்: அவள் கியாரா, லூக்காவின் சக ஊழியர்களில் ஒருத்தி. நான் அவளை லூக்காவின் தோழி என்றே நினைத்திருந்தேன்; லூக்கா எப்போதும் அவளை எனக்கு அப்படித்தான் அறிமுகப்படுத்தியிருந்தான். நன்றாகப் பார்க்க நான் தொலைபேசியை எடுத்தபோது என் கைகள் நடுங்கின.
“பேர்ளா, என்னால் விளக்க முடியும்…” லூக்கா அவசரமாக ஏதோ உளறத் தொடங்கினான், ஆனால் எனக்கு எதுவும் கேட்கவில்லை. கோபமும் வலியும் எனக்குள் வெடிகுண்டு போல வெடித்துக்கொண்டிருந்தன. நான் குதித்து எழுந்து என் நாற்காலியைத் தட்டினேன்.
“என்னை விளக்க?” ,,,அவன் வார்த்தைகளை முடிக்கவில்லை..நான் அடையாளம் தெரியாத குரலில் கத்தினேன். “நீ இவ்வளவு காலமாக என்னை ஏமாற்றி வருகிறாய் என்பதை விளக்கவா?
கியாராவின் தொடர்புத் தகவல் ஏன் உன்னிடம் உள்ளது என்பதை விளக்கவா? அவளுக்கு என் வேலை நேரம் எப்படித் தெரியும் என்பதை விளக்கவா?”
எங்கள் நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார்கள். அந்த அழகிய மாலை நேரம் என்னுடைய மோசமான கனவாக மாறியது.
எனது கோபம் தலைக்கேறியிருந்தது, என் உடல் முழுவதும் நடுங்கியது. “பதினேழு வருடங்கள்!” நான் லூக்காவின் கண்களைப் பார்த்துக் கத்தினேன். “பதினேழு வருடங்கள் ஒன்றாக…… சீ…!நீ எனக்கு இதைச் செய்கிறாய்! நம் எல்லா நண்பர்கள் முன்னிலையிலும்!”
லூக்கா என் அருகில் நெருங்க முயன்றான், அவனது கைகள் என்னை நோக்கி நீண்டன:
“பேர்ளா, தயவுசெய்து, நான் விளக்குகிறேன். திரையில் தோன்றுவது போல் இல்லை, நான்…” ஆனால் நான் எதையும் கேட்க விரும்பவில்லை. “அதில் தோன்றுவது போல் இல்லை?” நான் இன்னும் சத்தமாக கத்தினேன். “நான் வேலையில் இருக்கும்போது உனக்காகக் காத்திருப்பதாகச் சொல்லும் ஒரு நிர்வாணப் பெண்ணின் புகைப்படம் இருக்கிறது! அது எப்படி இருக்க வேண்டும்?”
எங்கள் நண்பர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர், முற்றிலும் அதிர்ச்சியடைந்திருந்தனர். ஆன்னா என் கையைப் பற்றி என்னை அமைதிப்படுத்த முயன்றாள்: “பேர்ளா…! நீங்கள் இருவரும் வீட்டில் தனியாகப் பேசுவது நல்லது…” என மிகவும் மெல்லிய குரலில் வேண்டினாள்.
ஆனால் நான் அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. நான் லூக்காவின் தொலைபேசியை எடுத்து கியாராவின் வற்சப் செய்திகளை திறந்து பார்க்க ஆரம்பித்தேன்.
டஜன் கணக்கான செய்திகள், புகைப்படங்கள், ரகசிய தேதிகள் இருந்தன. “பாருங்கள்!” நான் கத்தினேன், அனைவருக்கும் அவனது தொலைபேசியைக் காட்டினேன். “இது எவ்வளவு காலமாக நடக்கிறது என்று பாருங்கள்! மாதக்கணக்கில்! எனக்கு ஒரு சரியான உறவு இருப்பதாக நான் நினைத்தபோது, நீ அவளுடன் சேர்ந்து என்னை ஏமாற்றிக்கொண்டிருந்தாய்!”
அந்த வீட்டில் இனியும் இருக்க முடியாது, எல்லோரது கண்களும் என் மீது இருக்க, நான் என் கைப்பையை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி ஓடினேன். லூக்கா என் பின்னால் ஓடிவந்தபடி, “பேர்ளா , நில்! தயவுசெய்து, நான் சொல்லுவதைக் கேள்!” என்று சொல்லியபடி பின் தொடர்ந்தான்.
ஆனால் நான் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நான் படிக்கட்டுகளில் இருந்து கீழே ஓடினேன், அவன் இன்னும் என் பின்னால் ஓடிவந்தபடி , என்னை நிற்குமாறு கெஞ்சினான்.
நான் தெருவை அடைந்ததும், அவனைத் திரும்பி பார்த்து, வெறுப்புடன்: “போதும்! நான் இனி உன்னைப் பார்க்க விரும்பவில்லை! இனி உன்னிடமிருந்து எதுவும் கேட்க விருப்பமில்லை!!”என்று பல்லக் கடித்தபடி சொன்னேன்
கனவில் நடப்பது போல வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் . லூக்கா காரில் என்னைப் பின்தொடர்ந்தவனாய், ஹாரன் அடித்து, என்னைத் தடுக்க முயன்றான். நாங்கள் வீடு திரும்பியதும், நான் உள்ளே ஓடி, அவனுடைய எல்லா பொருட்களையும் ஒரு சூட்கேஸில் அடைய ஆரம்பித்தேன்.
“நீ என்ன செய்கிறாய்?” அவன் உள்ளே வந்ததும் கேட்டான். “நான் இதை பல மாசத்துக்கு முன்னாடியே பண்ணியிருக்கவேண்டும்!” அவனைப் பார்க்காமலேயே பதில் சொன்னேன். அவனுடைய உடைகள், புத்தகங்கள், அவனுக்குச் சொந்தமான எல்லாவர்றையும் இரண்டு சூட்கேஸ்களில் அடைத்தேன். அப்புறம் கதவைத் தாண்டி வெளியே எறிந்தேன்.
“போய் விடு! இனி உன்னை இந்த வீட்ல பார்க்க எனக்குப் பிடிக்கல!” லூக்கா அழுது கொண்டே என்னை நேசிப்பதாக திரும்பத் திரும்பச் சொன்னான், ஆனால் நான் அவன் முகத்துக்கு நேரா கதவை அடித்துச் சாத்தினேன். கட்டிலில் படுத்தபடி விடியும்வரை அழுதேன்.
அந்தப் பயங்கரமான மாலைக்குப் பிறகு வந்த நாட்கள் நரகமாக இருந்தன. லூக்கா என்னை ஒரு நிமிடம் கூடத் தனியாக விடவில்லை. அவன் காலை ஆறு மணிக்கு என்னை அழைக்க ஆரம்பித்து நள்ளிரவு வரை தொடர்ந்தான்.
நான் போஃனை எடுக்காத போது, எனக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினான். என் போன் ஒருபோதும் ஒலிப்பதை நிறுத்தவில்லை. “தயவுசெய்து எனக்கு பதில் சொல்லு,” என்று அவன் எழுதினான்.
“நான் விளக்குகிறேன். நீ நினைப்பது போல் இல்லை. பேர்ளா, நான் உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன்.” ஆனால் நான் அவனுடைய பொய்களைக் கேட்க விரும்பவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு, என்னால் இனி தூங்க முடியாது என்பதால் நான் அவனுடைய எண்ணைத் தடுக்க வேண்டியிருந்தது.
அவன் இனி என்னை அழைக்க முடியாது என்பதை உணர்ந்ததும், அவன் என் வீட்டு வாசலுக்கு வரத் தொடங்கினான். ஒவ்வொரு காலையிலும் நான் வேலைக்குச் செல்லும்போது, அவன் அங்கே இருந்தான். எனக்காகக் காத்திருந்தான். “பேர்ளா, தயவுசெய்து, எனக்கு ஐந்து நிமிடங்கள் கொடு,” என்று அவன் கெஞ்சினான்.
“நான் உனக்கு எல்லாவற்றையும் விளக்க முடியும். அது ஒரு முட்டாள்தனமான தவறு, எங்களுக்குள் ஒன்றுமில்லை.” ஆனால் நான் அவனனைப் பார்க்காமல் அவனைக் கடந்து நடந்தேன். ஒருமுறை அவன் வெளியேறாததால் நான் செக்கியூரிற்றியை அழைக்க வேண்டியிருந்தது, ஆனாலும் தொடர்ந்து வந்த நாட்களில் வாசல் மணியை அடித்துக்கொண்டே இருந்தேன்.
ஒரு வாரம் கழித்து, அவன் பூங்கொத்துக்களை அனுப்பத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும், மன்னிப்புகள் நிறைந்த ஒரு குறிப்போடு ஒரு வித்தியாசமான பூங்கொத்து வந்தது. “என்னை மன்னி,” என்று அவன் எழுதினான். “நான் ஒரு முட்டாள். நீதான் என் வாழ்க்கையில் ஒரேஒரு காதலி. நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை.”
குறிப்புகளைப் படிக்காமலேயே பூக்களை நேராக குப்பைத் தொட்டியில் எறிந்தேன். ஒரு நாள், ஒரு பரிசு வந்தது: “எப்போதும் ஒன்றாக” என்று எழுதப்பட்ட ஒரு தங்க வளையல். அதை அவனிடமே திருப்பி அனுப்பினேன்.
லூக்கா எங்கள் நண்பர்களையும் இதில் ஈடுபடுத்தினான். அந்திரேயா என்னை தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தான்:
“பேர்ளா, லூக்காவின் நிலை பயங்கரமாக இருக்கிறது. அவன் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை, எப்போதும் அழுதபடி இருக்கிறான்.
“ நீ அவனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.”
அந்திரேயாவுடன் பிரச்சினைகள் இருந்தபோதிலும், ஆன்னா கூட என்னிடம் கூறினாள்: “அவன் தவறு செய்தான் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நீ ஒருதரம் பேச வேண்டும். பதினேழு வருடங்களை இப்பந்த் தூக்கி எறிய வேண்டாம்.”
. “பதினேழு வருடங்களுக்குப் பிறகு அவன் என்னை ஏமாற்றினால், அவன் என்னை ஒருபோதும் உண்மையில் நேசிக்கவில்லை என்று அர்த்தம்,”
நான் ஆன்னாவுக்குப் பதிலளித்தேன்.
இந்த முற்றுகையின் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நான் குழப்பமடையத் தொடங்கினேன். கோபம் இன்னும் வலுவாக இருந்தது, ஆனால் நான் அவனை இழப்பதாக உணர்த் தொடங்கினேன். அவன் இல்லாத வீடு வெறுமையாகவும் சோகத்தால் சூழப்பட்டதாகவும் இருந்தது. மாலையில், நான் வேலையிலிருந்து திரும்பியபோது, எப்போதும் போல சோபாவில் அவனைக் காண்பேன் என்று எதிர்பார்த்தேன்.
மௌனம் என்னை பைத்தியமாக்கியது. ஒரு இரவு நான்
அவனது ஒரு அழைப்பிற்கு பதிலளித்தேன், ஆனால் பின்னர் போஃனை அணைத்துவிட்டேன். அவன் எனக்குச் செய்த அனைத்திற்கும் பிறகும், என்னில் ஒரு பகுதி இன்னும் அவனை நம்ப விரும்பியதால் எனக்கு என் மீதே கோபம் வந்தது.
மூன்று வாரங்கள் எதிர்ப்புத் தெரிவித்த பிறகு, ஒரு மாலை நான் விட்டுக்கொடுத்தேன். நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்தேன், ஏனெனில் அது எங்கள் திருமண நாள்.நாங்கள் ஒன்றாக இருந்து சரியாக பதினேழு ஆண்டுகள் ஆகிறது. லூக்கா எப்போதும் போல என் வீட்டிற்கு வெளியே காத்திருந்தான், ஆனால் இந்த முறை அவன் ஒரு கடிதத்தை வைத்திருந்தான்.
“தயவுசெய்து,” என்று அவன் அழுது கண்கள் சிவந்த நிலையில், “இதைப் படி. நீ என்னை மீண்டும் ஒருபோதும் பார்க்க விரும்பவில்லை என்றால், நான் என்றென்றும் மறைந்துவிடுவேன்” என்று கூறினான். நான் நடுங்கும் கைகளுடன் கடிதத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். கவரின் உள்ளே பத்து பக்கங்கள்கொண்ட கடிதம் கையால் எழுதப்பட்டிருந்து.,
அதில் நான் எல்லாவற்றையும் உணர்ந்தேன்: கியாராவுடனான தொடர்பு எப்படி தொடங்கியது, அவன் எவ்வளவு குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறான், அவன் என்னை எவ்வளவு உண்மையிலேயே நேசித்தான் நேசிக்கிறான் என்பதையெல்லாம்….
அக்கடிதத்தில், கியாராவுடனான அனைத்தும் தற்செயலாக நடந்தது என்று லூக்கா எனக்கு விளக்கியிருந்தான். அவள் வேலையில் அவனைக் காதலிக்கத் தொடங்கினாள்,என்றும் பலவீனமான ஒரு தருணத்தில் அவன் தன்னை விட்டுக்கொடுத்தான் என்றும் . “அது வெறும் செக்ஸ்,தான் என்றும், “எப்போதும் அது காதலாக இருந்ததில்லை என்றும் தான் நேசிக்கும் ஒரே பெண் நாந்தான் என்றும், எப்போதும் உன்னைநேசிப்பேன் என்றும். எழுதியிருந்தான்.
கியாராவை மீண்டும் பார்க்கக்கூடாது என்பதற்காக வேலையை மாற்றுவதாகவும், அவளுடைய எண்ணை நீக்கிவிட்டதாகவும், அந்த பயங்கரமான இரவுக்குப் பிறகு அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை
என்றும் அவன் சத்தியம் செய்தான். “எனக்கு ஒரு வாய்ப்புக் கொடு,” என்று அவன் இறுதியில் எழுதியிருந்தான், “நீ என் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உனக்குக் காண்பிப்பேன்.”
அந்தக் கடிதத்தைப் படித்து நான் அழுதேன். என் மனதின் ஒரு பகுதி அதைக் கிழித்து எறிய விரும்பியது, ஆனால் மற்றொரு பகுதி, எல்லாவற்றையும் மீறி அவனை இன்னும் நேசித்த பகுதி, அவனை நம்ப விரும்பியது.
பதினேழு ஆண்டுகள் ஒன்றாக,வாழ்ந்த காலத்தில் அனைத்து அழகான தருணங்களையும் , நான் நினைத்தேன்.
அவன் இல்லாமல் என் வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. தனியாக இருப்பதற்கும், மீண்டும் ஒருபோதும் இவ்வளவு வலுவான அன்பைக் காண முடியாததற்கும் நான் பயந்தேன். அன்று இரவு பதினொரு மணிக்கு, நான் கீழே சென்றேன், அவன் இன்னும் அங்கேயே, கட்டிடத்தின் படிகளில் அமர்ந்து காத்திருப்பதைக் கண்டேன்”சரி,” நான் நடுங்கும் குரலில் அவனிடம் சொன்னேன், “நான் உனக்கு ஒரு கடைசி வாய்ப்புத் தருகிறேன். ஆனால் நீ என்னை மீண்டும் காயப்படுத்தினால், அது என்றென்றும் முடிந்துவிடும்.” லூக்கா மகிழ்ச்சியால் கண்ணீர் வடித்தான் மூச்சு விட முடியாத அளவுக்கு என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தான். “நீ இனி வருத்தப்படும்படி நடக்கமாட்டேன் என்று நான் சத்தியம் செய்கிறேன்,” என்று அவன் மீண்டும் கூறினான்.
“உனக்கு தகுதியான அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன், மதிக்கிறேன். நான் உனக்காக உலகிலேயே சிறந்த மனிதனாக இருப்பேன்.” என்று உறுதியளித்தான்.
அன்று இரவு அவன் வீட்டிற்கு வந்தான், நாங்கள் விடியும் வரை பேசினோம். அவன் எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான், என் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தான், அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று சத்தியம் செய்தான்.
அவன் திரும்பி வந்த முதல் சில நாட்கள் விசித்திரமாக இருந்தன, ஆனால் நம்பிக்கை நிறைந்தவையாகவும் இருந்தன.. லூக்கா பரிகாரம் செய்ய விரும்பியவனாய் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தான்: அவன் எனக்கு ,காலை உணவைப் படுக்கையில் கொண்டு வந்தான், எனக்குப் பிடித்த உணவுகளை சமைத்தான், எனக்கு சிறிய பரிசுகளை வழங்கினான்.
அவன் கவனமுள்ளவனாகவும்,, உடனிருப்பவனாகவும் இருந்தான். அவன் ஒரு நாளைக்கு நூறு முறை “ஐ லவ் யூ” என்று என்னிடம் கூறினான், நான் அதை மீண்டும் நம்ப ஆரம்பித்தேன். ஒருவேளை எங்கள் உறவில் இருந்த மிகப்பெரிய நெருக்கடியை நாங்கள் சமாளித்திருக்கலாம், இப்போது நாங்கள் முன்பை விட வலுவாக இருப்போம் என்று நினைத்தேன். “நாம்
மீண்டும் தொடங்குவோம்,” என்று அவன் என்னிடம் கூறினான், “எல்லாம் முன்பை விட அழகாக இருக்கும்.”
நான் அவனை முழு மனதுடன் நம்ப விரும்பினேன், ஆனால் எனக்குள் ஏதோ “என்றென்றுக்குமாய் மாறிவிட்டது” என்று ஒரு சிறிய குரல் என்னிடம் கூறியது.
சில வாரங்கள் அமைதியுடன் இருந்த பிறகு, எனக்குள் ஏதோ ஒன்று நிரந்தரமாக உடைந்து போனதை உணர ஆரம்பித்தேன். முன்பு போல லூக்காவை இனி நம்ப முடியவில்லை. நான் வேலைக்குச் சென்றதும், அவன் உண்மையில் எங்கே இருக்கிறான், யாருடன் பேசுகிறான், மீண்டும் என்னைப் பற்றி யோசிக்கிறானா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அவன் ஐந்து நிமிடங்கள் தாமதமாகிவிட்டால், என் இதயம் படபடவென்று படபடக்கும், என் தலையில் ஆயிரம் பயங்கரமான எண்ணங்கள் ஓடும். “நீ எங்கே?” நான் உடனடியாக அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்புவேன். “நீ ஏன் போனை எடுக்கவில்லை?” பொறாமை என்னை உள்ளிருந்து தின்று கொண்டிருந்தது.
நான் அவன் செய்யும் அனைத்தையும் கண்காணிக்க ஆரம்பித்தேன்.
அவன் குளியலறையில் இருந்தபோது அவன் தொலைபேசியை எடுத்து செய்திகள், அழைப்புகள் மற்றும் புகைப்படங்களைப் பார்ப்பேன். அவனது இணைய வரலாற்றைப் பார்த்தேன், அவன் ஒரு புதிய செயலியை நிறுவிவிட்டானா என்று சந்தேகித்தேன்.
ஒரு முறை அவன் தனது இணைய வரலாற்றை நீக்கிவிட்டான் என்று எனக்குத் தெரிந்தது, நாங்கள் வாக்குவாதம் செய்தோம். “உன்னிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், ஏன் எல்லாவற்றையும் நீக்குகிறாய்?”
நான் அவனிடம் கத்தினேன். லூக்கா அமைதியாக இருக்க முயன்றான்:
“நான் அதை தவறுதலாக நீக்கிவிட்டேன், அதில் விசித்திரமாக எதுவும் இல்லை.” ஆனால் நான் அதை இனி நம்பத் தயாராகவில்லை..
நான் அவனைப் பின்தொடரத் தொடங்கியபோது நிலைமை மோசமடைந்தது.
ஒரு மாலை, அவன் தன் சகோதரியிடம் செல்ல வேண்டும் என்று என்னிடம் சொன்னான், ஆனால் அவன் சொன்ன நேரத்தில் உண்மையிலேயே வெளியேறிவிட்டானா என்று பார்க்க அவனது அலுவலகத்திற்குச் சென்றேன். மற்றொரு முறை, அவன் யாரையாவது சந்திக்கிறானா என்று பார்க்கக் காபி குடிக்கச் சென்ற பாருக்கு நான் அவனைப் பின்தொடர்ந்தேன்.
எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது போல இருந்தது, ஆனாலகவனைச் சந்த்ர்ர்கிப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை.
இவற்றைக் கவனித்த அவன், “என்னால் இப்படி வாழ முடியாது!” என்று கத்தினான். “நீ என்னை ஒரு குற்றவாளி போல கட்டுப்படுத்துகிறாய்!”
நானும் எனக்குப் புரியாத வகையில் ஆக்ரோஷமாகிவிட்டேன். எல்லாவற்றிற்கும் நான் என் குரலை உயர்த்தினேன், அவனைக் குற்றம் சாட்டினேன், பொறாமைப்பட்டேன். உணவகத்தில் ஒரு பணி செய்யும் பெண் அவனைப் பார்த்து சிரித்தால், நான் கோபமடைந்தேன். தெருவில் அவனது சக ஊழியர்களில் ஒருவரை நாங்கள் சந்தித்தால், நான் முரட்டுத்தனமாகவும் மாறினேன்.
“நீ முன்பு இப்படி இல்லை,” என்று லூக்கா சோகமான கண்களுடன் என்னிடம் கூறுவான். “நீ இப்போது வேறு ஒரு நபராகிவிட்டாய்.” அது உண்மைதான்: நான் கோபம், பொறாமை மற்றும் பயம் நிறைந்த ஒரு பெண்ணாக மாறிவிட்டேன். ஆனால் எனக்கு முன்பு இருந்த அதே நபராக எப்படித் திரும்புவது என்று தெரியவில்லை.
ஒவ்வொரு நாளும் எங்கள் உறவு மேலும் மேலும் சுமையாகவும் நச்சுத்தன்மையுடனும் மாறியது. என்னால் முன்பு போல ஓய்வெடுக்கவோ மகிழ்ச்சியாக இருக்கவோ முடியவில்லை. லூக்காவின் ஒவ்வொரு புன்னகையும் போலியாகவும், ஒவ்வொரு வார்த்தையும் பொய்யாகவும் தோன்றியது.
அவன் பொறுமையாக இருக்க முயன்றான், அதற்காக அவனும் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடிந்தது. நாங்கள் முன்பு போல் காதலிக்கவில்லை, ஒன்றாகச் சிரிக்கவில்லை, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுக்கவில்லை.
ஒவ்வொரு இரவும் !நாங்கள் இவ்வாறு வாழ்வதில் இன்னும் அர்த்தமுள்ளதா?” என்று யோசித்துக்கொண்டே படுக்கைக்குச் சென்றேன்.
ஒரு நாள் காலை,நான் கண்ணாடியில் என்னைப் பார்த்தேன்,
விம்பத்தில் என்னை அடையாளம் காணமுடியவில்லை. என் கண்கள் என் முகம் என்பன சோர்வு மற்றும் மன அழுத்தத்தால் முற்றாக மாறியிருந்தன.
நான் பொறாமை, சந்தேகம், என்பவற்றால் கொடூரமான ஒரு நபராக மாறிவிட்டிருந்தேன்.
லூக்காவுக்கு நான் கொடுத்த மன்னிப்புப் பயனற்றது என்பதை உணர்ந்தேன், ஏனென்றால் ஆழமாக நான் உண்மையிலேயே மன்னிக்கவில்லை. ஒரு முறை உடைந்த நம்பிக்கையை வார்த்தைகளால் மட்டும் சரிசெய்ய முடியாது. நான் அவனை மன்னித்துவிட்டேன் என்று ஆயிரம் முறை சொல்ல முடியும், ஆனால் என் இதயம் அதை உண்மையில் நம்பவில்லை.
அன்று நான் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து வீட்டிலேயே இருந்து யோசித்தேன். நாங்கள் ஒன்றாக அனுபவித்த அனைத்து அழகான தருணங்களையும், பதினேழு வருட உண்மையான அன்பையும் நான் மீண்டும் நினைத்தேன்.
ஆனால் பின்னர் கடந்த சில மாதங்களைப் பற்றியும் யோசித்தேன்: தூக்கமில்லாத இரவுகள், வெறித்தனமான சோதனைகள், நிலையான துக்கம், நிலையான பயம். நாங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பது காதல் அல்ல, அது வெறும் துன்பம். நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம், அது எனக்கும் சரியல்ல, அவனுக்கும் சரியல்ல
அன்று மாலை லூக்கா வேலையிலிருந்து திரும்பியபோது, நான் அவனுக்காக வரவேற்பறையில் காத்திருந்தேன். “நான் உன்னிடம் பேச வேண்டும்,” என்று அமைதியாகச் சொன்னேன். அவன் என் அருகில் அமர்ந்தான், அவன் என்னைப் புரிந்துகொண்டதை அவனது கண்களில் காண முடிந்தது. “இனிமேல் என்னால் உன்னை நம்ப முடியாது,” என்று நான் அவன் கண்களைப் பார்த்துச் சொன்னேன். “நான் உன்னை நம்ப முயற்சித்தேன்,, ஆனால் என்னால் முடியவில்லை..
நம்பிக்கை இல்லாத இடத்தில் , அன்பு நிலைக்காது..”
லூக்கா கவலையானான்: “ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன்,பேர்ளா. என் உயிரை விட உன்னை நேசிக்கிறேன்.”
“எனக்குத் தெரியும்,” நான் பதிலளித்தேன், “நானும் உன்னை நேசிக்கிறேன். ஆனால் நாம் உடைத்ததை அன்பால் மட்டுமே காப்பாற்ற முடியாது.”
நான் அவனை நம்ப முடியாதது அவனது தவறு அல்ல என்பதை அவனுக்கு விளக்கினேன்.
“நீ தவறு செய்தாய், அது உண்மைதான், ஆனால் இப்போது,,, உண்மையிலேயே மன்னிக்க முடியாத என் இயலாமைக்கு நீ விலை கொடுக்கிறாய். நம்மில் இருவருமே இப்படி வாழ்வது நியாயமில்லை.”
லூக்கா மீண்டும் முயற்சி செய்யச் சொல்லி,…. அவனுக்கு இன்னும் நேரம் கொடுக்கச் சொல்லி….கெஞ்சினான்.
ஆனால் காலம் எதையும் மாற்றாது என்பதை நான் புரிந்துகொண்டேன். சில காயங்கள் ஆற முடியாத அளவுக்கு ஆழமானவை, சில துரோகங்கள் ஒருவரின் இதயத்தை என்றென்றும் மாற்றிவிடும்.
அன்றிரவு, சிமோன் இரண்டாவது முறையாக தனது பைகளை அடைத்தான். ஆனால் இந்த முறை வித்தியாசமாக இருந்தது: கோபம் இல்லை, அலறல் இல்லை, ஆழ்ந்த சோகம் மட்டுமே இருந்தது. நாங்கள் இன்னும் ஒருவரையொருவர் நேசிக்கிறோம், ஆனால் இனி ஒன்றாக இருக்க முடியாது என்பதை அறிந்து, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம்.
“நான் அவனை மன்னிக்க வேண்டுமா?” கடந்த சில மாதங்களாக நான் ஆயிரம் முறை என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இறுதியாக எனக்கு பதில் கிடைத்தது: நான் ஏற்கனவே அவனை மன்னித்துவிட்டேன், ஆனால் மன்னிப்பது என்பது மறந்துவிடுவதைக் குறிக்காது, மேலும் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்ப முடியும் என்று அர்த்தமாகிவிடாது. சில நேரங்களில் நீங்கள் ஒருவருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய அன்பு, உங்கள் இதயத்தை உடைத்தாலும் கூட, அவர்களைப் போக விடுவதுதான்.
அதனைத்தான் நான் செய்தேன்: என் வாழ்க்கையின் அன்பை நான் விட்டுவிட்டேன், ஏனென்றால் அதுதான் செய்ய வேண்டிய ஒரே சரியான விடயமும்கூட.
![]() |
வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் "சங்க இலக்கியங்களில் மருதத்திணையின்…மேலும் படிக்க... |
