கண்ணடக்கம்




(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பக்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் தடுமாறின. வியர்வையால் மேனி குளமாயிற்று. தலைமுடி அலங்கோலமாய் விரிந்து காற்றில் பறந்தது. நெற்றியிலே பூசியிருந்த திருநீறும், அதன் மேல் வைத்திருந்த அகலமான குங்குமப் பொட்டுங்கூட வியர்வையிலே கரைந்து ரத்தமும் சீழும் போல அவன் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தன. புரையோடி விட்ட புண்ணிலிருந்து கிளம்பிய துர்நாற்ற அருவிபோல் இருந்தது அந்தப் பக்தனின் முகக்காட்சி. “தேவீ, தேவீ! காளிகா தேவீ!!” என்ற அலறல் வேறு.

நல்ல இருட்டு. கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளம். அதன்மீது ஒரு மூங்கில் பாலம். அதிலே நிதானமின்றி பக்தன் ஓடினான். கரையோரத்துச் சுடலையிலே எரிந்து கொண்டிருந்த ஒரு பிணத்தை ஆற்றுத் தண்ணீர் இழுத்துக் கொண்டு வருகிறது. அதைப் பக்தன் பார்த்தான். “லோக மாதா” என அலறிக் கொண்டே திரும்பினான். தீவட்டிகளோடு நாலைந்து பேர் வந்து கொண்டிருந்தனர். ஒருவன் கையிலே கொள்ளிச்சட்டி. பிணந்தூக்கிக் கொண்டு வந்தார்கள். இது ஆற்றிலே மிதக்கும் ஈரப்பிணமல்ல, புதிய பிணம். மூங்கில் பாலத்தில் பக்தன் நின்றான். ஒரே அமைதி. புதிய பிணம் எரிய ஆரம்பித்தது. அதன் சொந்தக்காரர்கள் பிரிந்து விட்டார்கள். இனி அது நெருப்புக்கோ, அல்லது ஆற்றில் தெரியும் வாளை மீனுக்கோ சொந்தம்.
காலையில் சொந்தக்காரர்கள் உயிரோடிருந்தால் எலும்பு அள்ளிக் கொட்ட அங்கே வருவார்கள். அதற்குள் ஆறு அந்த வேலையைச் செய்தாலும் செய்து விடும். பெருமூச்சு விட்டபடி மீண்டும் ஓட்டப் பயணத்தைத் தொடர்ந்தான் பக்தன். எதிரே சில தீவட்டிகள். பாடையல்ல! நீண்ட கழியில் ஒரு துணி ஏணை; அதிலே ஒரு குழந்தை. விழிக்காத நித்திரை. கொள்ளிச்சட்டி கிடையாது. மண்வெட்டிகள் தூக்கி வந்தார்கள் சிலர். புதைக்கும் பிணம் போலும்! பக்தன் முன்னிலும் பன்மடங்கு வேகமாக ஓட ஆரம்பித்தான். காலிலே கருவேல முட்கள் தைத்துக் கொண்டன. அதையும் அவன் கவனிக்கவில்லை. கரையோரமுள்ள தாழை மடல்களிலே அவன் முகம் உராய்ந்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை. பழனிக்குப் பால் காவடி எடுப்பவனின் உடலிலே காணப்படும் அலகுகள் போலச் சிலாகைகள் போல அவன் உடலெங்கும் முட்கள் நீட்டிக்கொண்டிருந்தன. எதிரேயுள்ள பாழுங் கிணற்றை எப்படித்தான் தாண்டினானோ தெரியாது. பார்ப்பதற்கே பயங்கரத் தோற்றமளிக்கும் பாவாடைராயன், காத்தவராயன் கோயில்களை எப்படித்தான் கடந்தானோ அவனுக்கே தெரியாது ! ஊர்க்கோடிக்கு வந்து சேர்ந்தான். அதோ ஒரு கோயில். சுற்றிலும் காடு. உள்ளே அந்த ஆலயம்! அம்மா “தாயே!” எனக் கத்தினான். ஆவேசம் வந்ததுபோல் ஓடினான். கதவு பூட்டியிருந்தது. மதிற்சுவரின்மீது தாவினான். அடுத்த பக்கம் குதித்தான்! எதிரே காளிகா தேவியின் உக்கிரமான உருவம். உறுமும் சிங்கம் – உதிரம் கொட்டும் தலை – எல்லாம் சிலைவடிவில்தான் ! அதனால் பக்தன் அச்சமின்றி அம்மையின் அருகே சென்றான். “பத்ரகாளி! மகாதேவி! மகிஷாசுரமர்த்தனிடி” என்று கூவினான்.
“யார் அது?” காளி கேட்டாள்.
“என்னைத் தெரியவில்லையா?” என்று கதறினான் பக்தன்.
“தெரியவில்லை . . . சொல்!”
“நான்தான் உன் பக்தன் – காளிதாசன்.”
“எந்தக் காளிதாசன்? நாக்கிலே எழுதி நாவலனாக ஆக்கினேனே, அந்தக் காளிதாசனா?”
“இல்லை தாயே… நான் அவனில்லை! நான் இயற்கையிலேயே கொஞ்சம் புத்திசாலி! ஆனாலும் உன் பக்தன்!”
“சரி போகட்டும் – பக்தா! என்ன வேண்டும் உனக்கு?”
“என்ன தாயே இப்படிக் கேட்கிறாய் ? ஊரிலே சூறை நடக்கிறதே உனக்குத் தெரியாதா?”
“சூறையா?”
“ஆமாம் தேவி! கொள்ளை கொள்ளையாக மக்கள் சாகிறார்கள். கொடுமையான வாந்திபேதி! கொடிய விஷக்காய்ச்சல்! பிளேக்காம்; புதுவித இங்கிலீஷ் வியாதி! காமாலை! . . . அய்யய்யோ சொல்லத்தரமல்ல தாயே; கூடை கூடையாகக் குழந்தை பிணம்; பாடை பாடையாகப் பெரிய பிணம்!”
“அய்யோ… அப்படியா? எனக்குத் தெரியாதே!”
“உண்மைதான் அம்மா உண்மைதான்! உன் மக்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் ஒழிந்து விடுவார்கள்!”
“பக்தா! நான் ஒன்று சொல்லுகிறேன், கேட்கிறாயா?”
“ஆயிரம் சொல் அம்மையே!”
“கொடிய நோயினால் அழிந்து விட்ட குடும்பங்களில் மிச்சமிருப்பவர்களிடம் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைச் சொல்!”
“அனுதாபத்தைக் கேட்க அடியேன் வரவில்லை சக்தீ ? அபயங் கேட்க வந்திருக்கிறேன். மாளுகின்ற மக்களை மீட்பதற்கு மாதாவிடம் முறையிட வந்திருக்கிறேன். இங்கு நான் வந்து விட்டேன். இந்நேரம் எத்தனை ஜில்லிட்ட உடல்களோ? கணக்குத் தெரியவில்லை! சுடலைக்கு ஓய்வு இல்லை. நெருப்புக்குச் சரியான தீனி! எழுந்தருளுவாய் என் அம்மையே!”
“இயலாது அப்பனே! இயலாது! என்னை மன்னித்து விடு. பக்தா, போய்வா!”
“மன்னிப்பதா? நானா? அகிலாண்டேஸ்வரியை இந்தப் புல்லன் மன்னிப்பதா? மண்டியிடுகிறேன்; என்ன கோபம் இருந்தாலும் மறந்துவிட்டுப் புறப்படு; பராசக்தி!”
“புலம்பினாலும் அழுதாலும் புண்யமில்லை!”
“ஏன் காளி-ஏன் துஷ்டர்களை அழித்துத் தூயவர்களைக் காப்பாற்றும் அருள்விழி பெற்றவளே அனந்த நாயகி! கருணை பொழியும் உன் கண்களைத் திறந்து, கதியற்றுச் சாகும் அபலைகளை, அனாதைகளை உன் திருப்புதல்வர்களைக் காப்பாற்ற ஏனம்மா தயக்கம்?”
“கருணை பொழியும் கண்கள் எனக்கு இப்போதில்லையடா மகனே!”
பக்தனின் மெய் நடுங்கிற்று, குரல் கம்மிற்று. கனைத்துக் கொண்டான் பீதியோடு! காளியை நிமிர்ந்து பார்த்தான். கர்ச்சித்தான்!
“கருணைக் கண் இல்லையா ? காளியா நீ ? அல்லது கன்னியா? பிணக்கொலு கண்டு பெரு மகிழ்வு கொள்ளும் பேய்க்கும் உனக்கும் என்ன வேறுபாடு? எருமையை வதைத்தாய் – சிங்கத்தை அடக்கினாய் மமதையாளன் சிரசை நறுக்கினாய் – அப்போதெல்லாம் உன் கண்களிலே கனல் உண்டு! மற்ற வேலைகளில் அன்புப் புனல் தானே உண்டு! அப்படித்தானே கேள்விப்பட்டிருக்கிறேன், உன்னைப் பற்றி! நீ என்னை ஏமாற்றத்தானே பார்க்கிறாய் ? உன் பிள்ளைகளின் உயிர்கள் பொல பொலவென உதிரும்போது உனக்கு இந்தக் காட்டோரத்து “பங்களா” விலே ஓய்வு பெறும் வேலையா? மிக நன்றாயிருக்கிறதம்மா தாய்ப்பாசம்!’
“மகனே! என்னதான் நீ திட்டினாலும், தீப்பொறி பறக்க வசை புராணம் பாடினாலும் என்னிடமிருந்து கருணையை எதிர்பார்க்க முடியாது! காளிதாசனைக் காளமேகத்தைக் கவிதை பாடச் செய்த காளியல்லடா நான் – இப்போது. நான் இப்போது கருணையற்றவள்! என் கண்களிலே அன்பின் ஒளி கிடையாது!”
இதைச் சொல்லும்போது காளியின் தொண்டை கரகரத்தது. அழுகுரல் கேட்டது. விம்மும் ஒலி பக்தனின் காதைக் குடைந்தது. பக்தன் பதறினான்.
“ஏன் தேவி அழுகிறாய்? என்ன நடந்தது ?” “உன்னைப் போல ஒரு பக்தன் செய்த வேலைதானடா எல்லாம்!”
“என்ன செய்தான் ? எந்த பக்தன் பாதகம் புரிந்தான் ? பார்வதி தேவியார் அழவேண்டிய கட்டத்தைச் சிருஷ்டித்தவன் யார்? பத்மாசனீ! சொல்லம்மா!”
“கேள் கவனமாக! உலகத்து மக்களையெல்லாம் ஒரு சேரக் காப்பாற்றும் திறனும் திறமையும் பெற்றவள் தான் நான்! அதுபோலக் காப்பாற்றியும் வந்தேன். இப்போது ஊரிலே நடப்பதாக வர்ணித்தாயே பயங்கரச் சாவும், அதற்குக் காரணமான நோய்களும்; அவை எல்லாம் என் பார்வை பட்ட மாத்திரத்தில் பஞ்சாய்ப் பறக்கும். பரமசிவனாரின் நெற்றிக் கண்ணுக்குமில்லாத சக்தி என் நேத்திரங்களுக்கு உண்டு என்று அவரே கூறிடுவார் என்னை அணைத்திடும்போது! அநீதியை அழிக்கும் அக்கினியும் உண்டு ! அனாதைகளை ரட்சிக்கும் அருள் நோக்கும் உண்டு என் திருவிழிகளுக்கு! அந்தச் சக்தியைப் பாழ்படுத்தி விட்டானப்பா ஒரு பரம பாதகன்!”
“எப்படித் தாயே எப்படி ?” பக்தன் பதறினான் மறுபடியும்!
“குறுக்கிடாமல் கேள் மகனே! ஒரு பக்தன் பணக்காரன். அவனுக்கு ஒரு குழந்தை. அந்தக் குழந்தையின் கண்ணிலே ஏதோ சிறு கோளாறு! எனக்குப் பிரார்த்தனை செய்து கொண்டான். குழந்தையின் கண் வரவரக் கெட ஆரம்பித்தது. மருத்துவர்கள் மருந்து பச்சிலைகள் மூலம் சிகிச்சை ஆரம்பித்தனர். குழந்தைக்கு கண்கள் சுகம் பெறத்தொடங்கின. அப்போது பக்தன் எனக்கு வேண்டுதல் விடுவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டான். அதன்படி ‘கண்ணடக்கம்’ செய்து வைப்பதாக வேண்டிக் கொண்டான். கண்ணடக்கம் என்றால் உனக்கு தெரியுமல்லவா?”
“ஆமாம் தேவி! தங்கத்தாலோ வெள்ளியாலோ கண் போலச் செய்து விக்ரகத்தின் விழிகளிலே பதிப்பது என்று சொல்வார்கள், நான் பார்த்ததில்லை!”
“பார்த்ததில்லையா? இதோ என் கண்ணில் பதிந்திருப்பதைப் பார்! இதுதான் கண்ணடக்கம்! அந்தப் பக்தன் செய்த பிரார்த்தனை”.
“அதற்கும் நான் வந்த காரியத்திற்கும் தொடர்பு என்ன தாயே!”
“முட்டாளே! இன்னும் புரியவில்லையா? கருணை காட்டி காப்பாற்றும் சக்தி பெற்ற என் விழிகளைத்தான் வெள்ளிக் கண்ணடக்கம் என்ற மூடி போட்டு அடைத்து விட்டானே, நான் எப்படியடா வெளியிலே கிளம்புவது ? – கண் கட்டப்பட்ட எனக்குக் கதி ஏதடா? அடைபட்ட கண்ணிலேயிருந்து அருள் எப்படியடா கிளம்பும்?”
“பக்தனல்ல அவன், பாதகன்! தாயே! அவன் தான் அக்கிரமம் செய்தான் என்றால், நீயாவது உ .னே இந்த வெள்ளி மூடியை அகற்றியிருக்கக்கூடாதா?”
“அகற்றுவதா? பக்தன் செலுத்திய காணிக்கையப்பா இது! அகற்றுவது ஆகுமா ? தகாது – தகாது!”
“பக்தன் அளித்ததை நீ அகற்றுவது தகாது! இதோ நான் அகற்றுகிறேன். உன் கண் திறக்கட்டும். கருணை பொழியட்டும். ஊரார் வாழட்டும்! உன் உலா. நடை பெறட்டும்!! என்று ஆவேசமாகப் பக்தன் பாய்ந்தான். காளியின் கண்களில் பதிக்கப்பட்டிருந்த வெள்ளிக் கண்ணடக்கத்தைப் பிடுங்கி எறிந்தான்.
காளியின் கண்களைப் பக்தன் உற்றுப் பார்த்தான்.
“இப்போது என்னைத் தெரிகிறதா தாயே?”
“தெரிகிறது – என்மீது பிரியமுள்ள முட்டாள் என்று! “
“என்னம்மா மீண்டும் பழி சுமத்துகிறாய்? நன்றி காட்டு தாயே எனக்கு! நமனுலகு செல்லும் மக்களை மீட்க அன்பு மழை கொட்டும் விழிகளைத் திறந்திருக்கிறேன் நான்!”
“விழிகளைத் திறந்தாய் ஆனால் ஒளி தர உன்னால் இயலாது! பத்து வருடமாக மூடிக்கிடந்ததால் தூர்ந்துவிட்ட கிணறு போல ஆகிவிட்டதப்பா என் கண்கள்! ஓர் ஆண்டா, இரு ஆண்டுகளா ? பத்து ஆண்டுகள் அல்லவா இந்தக் கண்ணடக்கம் என் விழியை மறைத்துக் கொண்டிருக்கிறது! இனி என் கண்களுக்கு ஒளி தர அந்த ஒளியிலே கருணை ததும்பச் செய்ய யாராலும் முடியாது! தயவு செய்து போய்விடு! காளி அழுகுரலோடு ஆத்திரமாகப் பேசினாள்.
பக்தன் சற்று நேரம் நின்றான் காளியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். நெற்றியிலே மிச்சம் மீதி ஒட்டிக்கொண்டிருந்த குங்குமம் திருநீறு ஆகியவற்றை நன்றாக அழித்து நெற்றியைத் தூய்மைப்படுத்திக் கொண்டான். கோயிலிலிருந்து விடுபட்டு ஊரை நோக்கி ஓடினான்.
எதிரே, இரண்டு மூன்று கார்களில் டாக்டர்களும் அவர்கட்கு உதவியாளர்களும் வந்திறங்கினார்கள். ஊர் மக்கள் அனைவருக்கும் நோய்த் தடுப்பு ஊசிகள் அவசரமாகக் குத்தப்பட்டன. ஊருக்குத் தேவையான உடனடியாகச் செய்ய வேண்டிய சுகாதார வேலைகளை இரவோடு இரவாக டாக்டர்கள் செய்யத் தொடங்கினர். பக்தனும் அந்தப் பணியில் முன்னின்றான்.
திடீரென விழித்துக் கொண்டேன். கண் வைத்திய சாலையில் இரண்டு கண்களும் கட்டப்பட்ட நிலையில் படுத்திருப்பதை உணர்ந்தேன். எனக்குச் செய்ததுபோல எத்தனை ஆபரேஷன் செய்தாலும் அந்தக் காளிக்குக் கண் திறக்காது என்பதை எனக்கு நானே எண்ணிக்கொண்டு சிரித்துக் கொண்டேன், அந்த வேதனையான வேளையிலும்!
– 16 கதையினிலே, முதற் பதிப்பு: டிசம்பர் 1995, திருமகள் நிலையம், சென்னை.