கடவுள் சாட்சி





(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பங்குனி மாதத்து வெய்யில் நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது. வகுப்பு முடிந்து நேரே வீடு வந்துசேர்ந்த ஆசிரியர் ஆறுமுகத்தின் உள்ளமோ அந்த நெருப்பு வெய்யிலையே தோற்கடித்து விடுவது போலக் கனன்று, சுடர்விட்டுப் புகைந்து கொண்டிருந்தது! வந்த வேகத்திலேயே உடுப்புகளை மாற்றிவிட்டுத் தோளில் ஒரு துவாய்த் துண்டைப் போட்டுக்கொண்டு சாய்வு நாற்காலியில் சுருண்டு படுத்தார் ஆசிரியர் ஆறுமுகம். மதிய உணவு வேண்டுமே என்ற எண்ணங்கூட அவருக்கிருப்பதாகத் தெரியவில்லை. பாவம், மனிதர்! வாழ்க்கைப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்களை மிக இளம்வயதிலேயே அனுபவித்துவிட்ட களைப்பு அவரைத் திரையிட்டுவிட்டது. மனித மனத்திற்கு ஆறுதல் என்பது அவசியமற்ற ஒன்று போலும்! இல்லாவிட்டால் ஆசிரியர் ஆறுமுகம் எத்தனையோ முறை தனக்குத்தானே உபதேசித்துக் கொள்ளும் உயர்ந்த நிலையை எட்டிப்பிடித்து ‘சிந்தனைசெய்யாதே மனமே’ என மனக்குதிரையின் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தபோதும் அந்தப் பாழும் மனமோ ‘சிந்திப்பதை’ நிறுத்த முடியாதென அடம் பிடிக்கிறதே!
‘சே, நமக்கு என்ன வாழ்க்கை வேண்டுகிறது’ என அலுத்துக்கொண்ட அவர் தறிகெட்ட போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் மனக் குதிரையை மடக்க அன்றைய தினசரிப் பத்திரிகையை எடுத்து விரித்தார். கண்கள் பத்திரிகையில் பதிந்தன. “ஒரு கொலைவழக்கு, காதல் நிறைவேறாததால் ‘அசிட்’ குடித்து மரணம். புகைவண்டி தடம்புரண்டு பத்துப் பேர் மரணம்” சே, என்ன செய்திகள்! மனிதனை நிம்மதியற்றுத் துடிக்கச் செய்யும் கோர நிகழ்ச்சிகள் அல்லவா செய்திகள் என்ற பெயரில் தரப்படுகின்றன! பத்திரிகைச் செய்திகளில் வெறுப்புற்ற அவர் விளம்பரப் பக்கத்தைப் புரட்டினார். முதலில் ஒரு நன்றி அறிவித்தல். அதையடுத்து ஒரு தியேட்டர் விளம்பரம். அதன் கீழ் திருமண விளம்பரம் ஒன்று! திருமணம் – அந்தச் சொல்லைக் கேட்டாலே அளவுகடந்த வெறுப்பு அவருக்கு இப்பொழுது! வாழத்தெரியாத ஒரு இளைஞன் பரிதாபகர நிலைக்குப் போகப் புறப்பட்டவன், தனக்குத் தானே விலங்கு மாட்டிக் கொள்கிற மதிகெட்ட செயல் அல்லவா திருமணம்! அதற்கு வேண்டியதெல்லாம் ஒரு பெண்தானே! பாவம்! யார் இந்த அவதிக்குள்ளாகப்போகிறவன் என அறிய விளம்பரத்தைப் படித்த அவர் வியப்பினால் திகைத்தார், திணறினார்.
“கயற் கண்ணி – கமல சோதி” இந்த வரிகளைத் திரும்பப் திரும்பப் படித்தார். மீண்டும் ஒருமுறை விளம்பரம் முழுவதையும் நோட்டம் விட்டார். பத்திரிகை அவர் கரங்களிலிருந்து தானாக நழுவித் தரையில் தோய்ந்தது! ஐந்துவருட இறந்த காலத்தை முன்னுக்குத் தள்ளிவிட்டு நின்றார் ஆறுமுகம். அவர் மனதிலே எண்ணக் குமிழிகள் உருண்டு விளையாடத் தொடங்கின. கயற்கண்ணி-அவள் “உங்கள் காதல் சிரஞ்சீவித்துவமானது. என் சீவிய பரியந்தம் உங்களைக் காதலிப்பேன்-காதலிக்கிறேன். ஆருயிரே, நான் ஒருவரை இவ்வளவாக நேசித்ததில்லை. உங்கள்மேல் எப்படிக் காதல் கொண்டேனோ? என் வாழ்வில் உங்களை எப்படி மறப்பேன் ? உங்களிடமிருந்து என்னை-என் காதலைப் பிரிக்க எவராலுமே முடியாது! கடவுள் சாட்சியாக நான் இப்படிக் கூறுகிறேன்” என்று எழுதிய அவள் திருமணம் செய்துகொள்ளப் போகிறாள். யாரை நம்புவது இந்த உலகத்திலே ? முன்னமே நம்பிக்கையின் ரேகைகள் தேய்ந்து மறைந்துகொண்டிருந்த ஆறுமுகத்தின் உள்ளத்திலே இந்தத் திருமண விளம்பரம் நம்பிக்கையின் கறையைத் தூரிகைபோட்டுத் தேய்த்தெடுப்பதுபோலத் தோன்றியது. நீண்ட பெருமூச்சு வெளியே உதிர, இறந்த கால நினைப்பில் ஒன்றிச் சுயவுணர்வு குன்றிக் கிடந்தார் ஆறுமுகம்!
ஐந்து வருடங்களுக்கு முன்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவரது இன்பக் கேளிக்கைகள், அரும்பி வெடித்த மொட்டுக்குள் வண்டினை வைத்துச் சூழவிருக்கும் மெல்லிதழ்களை மூடி இன்பத் தேன் பருகும் எழிற் பூக்களைப் போல அவரைச் சூழவந்த சுந்தரிகள் எல்லாமே பகற்கனவாகவல்லவா தோன்றுகிறது ?” எவ்வளவுக்கும் காதலி, இன்பரசத்திலே மூழ்கு, சுந்தரிகளின் மலர் மடிகளிலே தூங்கு, பணத்தைப் பணமென மதியாது செலவு செய். ஆனால் திருமணம் மாத்திரஞ் செய்துகொள்ளாதே!” என எழுதிவைத்த ஒருமேல்நாட்டு எழுத்தாளனின் தீர்க்கதரிசனத்தை மெச்சுவதிலே போய் மோதித் திரும்பியது அவர் மனம். அந்தக் கடந்தகால இன்ப உலகத்தில் அவரைக் கவர்ந்தவள், கடைசிவரை அவரைக் காதலித்தவள்தான் கயற்கண்ணி! அவளும் திருணமஞ் செய்துகொள்ளப்போகிறாள்! ஆனால் அவளைக் கடிந்துகொள்வதிலும் பார்க்க அவளை மணந்துகொள்ளப் போகிறவனில்தான் அவருடைய அனுதாபம் மலர்ந்தது. ஆறுமுகத்தின் ஐந்து வருட இல்வாழ்வு-இல்லை, இரண்டு வருட இல்வாழ்வும், மூன்றுவருடக்காதல் நாடகமும் பெற்றுக் கொடுத்த அனுபவத்திலே அவர் நல்லவராகி விட்டார்! ஆனால் அவர் நல்லவராக வந்த விதம்…?
ரீங்காரப் பண்ணிசைத்துப் பல நிறப்பூக்களிலும் தேனை ருசி பார்க்கும் வண்டு அந்த மலர்களின் மறைவிலே இருந்தே தன்னைப் பிடித்து விழுங்கக் காத்துக்கிடக்கும் பிராணிகளை அவ்வளவாகச் சட்டை செய்வதில்லை! அதுபோலத்தான் ஆறுமுகமும் தனது காதல் அறுவடைக்குக் காலனைப்போல ஒருத்தி வந்து வாய்ப்பாள் என எண்ணியது கூட இல்லை! சீட்டு விளையாட்டிலே முதல் வெற்றிக்குப்பின் ஏற்படும் போதையைப் போல் ஆறுமுகமும் ‘முதல் அனுபவங்க’ளினால் ஏற்பட்ட தைரியத்திலே கலாவின் காதலையும் சாதாரணமாக்கிக் கொண்டார். ஆனால் நாளடைவில் எப்படியோ அது விசுவரூபமெடுத்துத், ‘திருமணம்’ என்ற தீராத சங்கடத்தில் கொண்டுபோய் மாட்டி வைத்துவிட்டது அவரை! உரலுக்குள் தலையை விட்டபின் உலகைக்குப் பயப்படுகிற குணம் ஆறுமுகத்திற்கு அறிமுகமில்லாத காரணத்தால் திருமணம் வெகு சிறப்பாக-தெய்வசாட்சியாக, அம்மிமிதித்து, அருந்ததி காட்டி நிறைவெய்தியது! மூன்று வருடக் காதல் நாடகமும் அத்துடன் முற்றுப்பெற்றது. கலா இப்பொழுது அவர் மனைவி. தொட்டுத் தாலிகட்டிய மனைவி. கடவுள் சாட்சியாக உங்கள் மரணபரியந்தம் உடனிருப்பவள் எனப் பலரறிய உறுதிகொடுத்து வந்த மனைவி. எனவே ஆறுமுகம் ஒருமாதிரியாக இல்வாழ்க்கையைத் தொடங்கிவிட்டார்! ஆனால் ஒருவருடம் முடிவதற்குள்ளேயே அவர்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகள், சண்டைகள் …சே, ஊரே பழிக்கத் தொடங்கிவிட்டது! ஆறுமுகம் ஒரு மாதிரியான பேர்வழி. எதையும் தாங்குவார். ஆனால் யாராவது அவர்மீது குறைசொல்லி உரத்துப் பேசுவதைத் தாங்கமாட்டார்! அவர்பாடு எக்கச்சக்கமாகிவிட்டது. இடையே பழையநினைவுகள்-ஆனந்தமாகக் காலங்கழித்த இன்பநினைவு அலைகள் அவரை வாட்டின. ஊருக்கும், உலகத்துக்கும் பயந்து, எரிமலையான உள்ளத்தைக் கண்ணீரால் நனைத்து வெடித்துவிடாமல் வைக்கப் பார்த்தார்! ஆனால் குமுறும் எரிமலை வெடித்துவிட்டது ஒருநாள்!
கலியாணமான பிறகு கலாவின் போக்கே ஒருமாதிரியாகிவிட்டது. எடுத்ததற்கெல்லாத் சீறிச் சினந்தாள். “உங்கள் காதல் நாடகங்கள் எல்லாம் எனக்குத் தெரியாதவையா ?” என்று ஏளனமாகக் குத்திக்காட்டினாள். நிலைமை நாளுக்குநாள் மோசமாகிவந்தது. ‘வருவதுவரட்டும்’ என்ற நினைப்புடன் ஒருநாள் வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டார் ஆறுமுகம். அன்று புறப்பட்டவர் தான்! கலாவை நினைத்து அவர் என்றுமே வீடு திரும்பவில்லை. இந்தச் சந்தடிக்குள் ஓராண்டு கழிந்துவிட்டது. கடவுள் சாட்சியான காதல் நீதிமன்றம்வரை நீண்டு, ‘விவாகரத்து’ என்ற முத்திரை பெற்று இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஏப்பமிட்டு ஒழிந்தது!
“ஐயா, கோப்பி ஆறுகிறது!” வேலைக்காரச் சிறுமி வள்ளியின்குரல் அரைத்தூக்கம் பயின்றுகொண்டிருந்த ஆறுமுகத்தை இந்த உலகிற்குக் கொண்டுவந்தது.
‘கடவுள் சாட்சி’ என உறுதி புகன்று ஒழிந்துபோன அவர் ‘காதல் தெய்வங்களில்’ இல்லாத தியாக உணர்ச்சியை, பாசப்பரவலை வள்ளியின் வார்த்தைகளில் உணர்ந்து கொண்ட ஆறுமுகம் கோப்பி குடிப்பதற்காகச் சமையற்கட்டை நோக்கி நடந்தார். அவர் நடையிலே என்றுமில்லாத சாந்தி மிதந்தது!
– சுதந்திரன், 31-3-1957.
– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |