?
(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நினைவுத் திரையின் மெல்லிய சலனங்களுக்கு அப்பால்…அவள்…?
இந்த அகண்ட பிரபஞ்சத்தை ஊடறுத்துப் பார்க்கின்றாள். தன்னுள் தானாய்க் குமைகின்ற தனது எண்ண அலைகளின் இரைச்சல்கள்! சிந்தனைத்துகள்கள்!
எல்லையே இல்லாத மனவெளிப் பரப்பின் மாயாஜாலங்கள். பொழுதுபோவது என்ன கடினமா ?
அவள் என்ன கிழவியா? பழைய அனுபவங்களின் அகக்கனவில் இன்பங் காண்கிறாளா?
கொத்தும் இளமையின் ‘குறுகுறுப்பு இன்னுந் தூர்ந்து விடவில்லையே, அப்படியிருந்துமா?
உலகம் சிரிக்கிறதா? நன்றாகச் சிரிக்கட்டுமேன். அவளுக்கு அவள் தான் அதிகாரி. உலகமல்ல!
அவள் சிரித்தாள். யாருக்கு அந்தச் சிரிப்பின் அர்த்தம்படுமோ! அவளுக்கு என்ன குறைச்சல். நல்ல சம்பளம். நல்ல வாழ்க்கை வசதிகள். படித்தவள், பட்டம் பெற்றவள். எண்ணியது எதையும் செய்து முடிக்கும் துணிவும் வலுவுமுள்வள். நிமிர்ந்து நடக்க முடியும் அவளால்!
ஆனால் ஒரு குறை! அது என்ன குறையா ? குறையாய் அவளுக்குப் படவில்லைத்தான். ஆனால் குறைபோலப் படாமலிருக்கவும் முடிவதில்லையே. அது என்ன?
என்னவோ…?
அவள் அப்படி எத்தனைமுறை அலுத்துக்கொண்டாள். ஆனால் அவள் தோழிகள், உடன் ஆசிரியைகள் சதா நச்சரித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தொழிலே அதுவாகிவிட்டது. அவர்களைக் குறைசொல்லியென்ன பயன் ? பெண்குலத்தின் ‘வியாதியே’ இது தானாக்கும். காலாகாலத்தில் கழனியில் பயிர் முளை அரும்பாவிட்டால் தாய்மை நிலம் தானாகவே காந்தத் தொடங்கிவிடும் போலும்! நல்ல உருவகம்! அவள் மெல்ல நகைத்தாள்.
அவளுக்கப்படி என்ன அவசரம்? உணர்வில், உடலில் எந்தக் காந்துதலும் இல்லையா?
இருக்குதோ, இல்லையோ…!
சிலநேரம் மனம் என்னவோ ஆசைப்படத்தான் செய்யுது. ஆனால் இந்தச் சலிப்பு எதையுமே சட்டைசெய்யாமல் உணர்வைப் போர்த்து மூடிவிடுகிறதா?
இதுதான் பிரச்சனையா…? இந்தப் பிரச்சனையோடு எத்தனை ஆண்டுகளை அவள் நகர்த்திவிட்டாள். ஆனால்…
இன்னுந் தெளிவு பிறந்துவிடவில்லை. பிரச்சனை பிரச்சனையாகத் தானிருக்கிறதே!
அவர்கள்! – அவர்களுக்கெங்கே இதெல்லாம் புரியப்போகிறது. சும்மா பேசித்தீர்ப்பார்கள்! ‘எப்பவும் இப்படியே ஒண்டிக்கட்டையாகத்தான் இருக்கப்போகிறாயா?’
பேசிக்கொண்டேயிருக்கட்டும்!
‘இந்தப் பூனையும் பாலைக்குடிக்குமா?’ என்று எண்ணவைத்த சாவித்திரியே என்னை ஏமாற்றிவிட்டாள். ‘அம்மா எத்தனை கெட்டிக்காரியடி நீ?’
வகுப்பில் உள்ள பதினைஞ்சு ‘பெட்டை’யளிலும் சாவித்திரி வெகு நேர்த்தி. படிப்பில், அழகில், பண்பில்! ‘டீச்சர்’ என்று ஒரு தடவை அவள் அழைத்துவிட்டால், திரும்ப ஒருமுறை அப்படி அழைக்கமாட்டாளா என்று ஆசைப்படவேண்டும். என் அபிமான மாணவி.
ஆனால் அன்று அவள் துடித்ததுடிப்பு….!
இப்பவும் கண்முன் நிழலிடுகிறது.
‘டீச்சர், என்னை தண்டனையாகிலும் தாருங்கள். அந்தக் கடிதத்தைமட்டும் படியாதீர்கள்!’ என்னவாகக் கெஞ்சினாள்.
அப்படியென்ன அந்தக் கடிதத்திலிருந்தது? இந்தக்காலத்தில் எல்லா மாணவிகளுக்கும்தான் ‘கடிதம்’ வருகிறது. சினிமாக்கொட்டகைக்கு ஒரு புதுப்படம் வந்துபோக இவர்களுக்கும் புதுப்புது ரகமான கடிதங்கள்….தபால் பகுதிக்குப் பழுவான வேலைதான்…! இப்படி எத்தனையோ ‘குற்றவாளிகளை’ விசாரணை செய்திருக்கின்றேன். எந்தப் பெண்ணும் இவளைப்போல அத்தனை ஆத்திரம், அவசரம், கெஞ்சல்பட்டதில்லை.
சாவித்திரி ஒரு புதிர்!
மனக்குரங்கின் சேஷ்டைகளுக்கு எல்லைக்கோடு கிழிக்கும் தைரியம் என்றுமே எனக்கில்லை.
சாவித்திரி விடயத்திலும் அது சரியாய்ப் போயிற்று.
“அவன் உள்ளத்து உணர்ச்சிகளை எழுத்திலே பேசவைத்து எழுதியிருந்தான். சாவித்திரி ‘போர்டிங்’கை விட்டுப்போனதும் அவனுக்குத்தான் மாலையிடுவாளாம். அந்த நினைவின் இனிமையில் காலத்தை அணு அணுவாகக் கரைத்துக் கொண்டிருக்கும் இதயம்….” கடிதத்தை நான் உறைநீக்கிப் படித்தபோது சாவித்திரி, அந்தச் சாவித்திரியைப்போலவா…. எமதர்மனுக்கு எதிர்நின்று தாலிப்பிச்சை கேட்ட புராணகாலச் சாவித்திரியைப் போலவா காட்சியளித்தாள்….?
“டீச்சர், இதைமட்டும் கேளுங்கள். மார்கழிப் பரீட்சையோடு வீட்டுக்குப் போகிறவள் தானே நான். அப்பால் வருகிற வருடத்தோடோ, ஆவணியிலேயோ அவருக்கு உரிமையாகிறவள் தானே. அதற்குள்ளாக ஏன் டீச்சர் இதைப் பெரிதுபண்ணி பிரின்ஸிபலுக்குக் காட்டப்போகிறீர்கள். உங்களுக்கு இரக்கமேயில்லையா டீச்சர்…..?”
வாய்விட்டழுதுவிட்டாள் என் சாவித்திரி. கடிதத்தைச் சுக்கநூறாகக் கிழித்து ஜன்னலுக்கு வெளியே வீசினேன். சாவித்திரி அப்படியே என்னைக் கட்டிக்கொண்டாள். அவள் விழிகளிலிருந்து சூடான நீர் பனித்தது. அது என்ன ஆனந்தக்கண்ணீரோ? அவள் இதயம் மட்டுமல்ல அந்தக்கணத்தில் என் இதயமும் நனைந்தது உணர்ச்சியால்-விவரிக்கமுடியாத அந்த உணர்ச்சியால்……!
இப்பொழுது மார்கழிபோய் அடுத்த மார்கழியும் வரப்போகின்றது. சாவித்திரி அங்கே தன் அத்தானுடன்….! இங்கே….!
ஆசையை வளர்த்துவிட்டால் அதற்குத் தீனிபோட்டுக் கட்டாதோ! எண்ணத்தின் எண்ணங்களுக்கு என்னையே இத்தனை காலமும் இரையாகத் தந்துகொண்டிருக்கிறேன்.
விடிவு – சந்திக்காத இலட்சியமா?
அன்று அவர் சொன்னார் எத்தனை துணிச்சல் அவருக்கு ? ஏன் நான்மட்டுமென்ன துணிச்சலற்றவளா? எவ்வளவு ‘பிறீயாக’ அவரோடு பழகுகிறேன்….!
காவிய வார்த்தைகள்! அவர்கூட ஆங்கிலத்தில் இத்தனை புலமையுள்ளவரா…? எவ்வளவு பச்சையாக, நேருக்கு நேர் வர்ணித்தார்…. வெட்கமாக இருக்கின்றதே… “நெஞ்சம், அதன் வீக்கம் அழகின் மோகக் கிடங்கில் என்னைப் பிரக்ஞையற ஆழ்த்துகிறது. தளிருடல், சுகந்தங் கமழும் பருவம், பிரேமையெழுப்பும் உணர்வலைகளைச் சிருஷ்டிக்கும் சிரிப்பு, அரவிந்த முகம்…” இப்படியா சொன்னார். குறும்புக்காரர்.
எப்பொழுதுமே நான் உரத்துப் பேசுவதில்லை. மெல்லென்ற உதடுகளின் அசைவுகளில் காவியப் பிரமை யெழுப்பும் கலை எனக்கும் கைவந்ததா….?
அவர்கள் சொல்கிறார்கள், பிடித்த கொம்பு புளியங்கொம்பாக வேண்டுமென்று! ஏனாம்…. எந்தக் கொம்பையேனும் பிடித்துத் தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கில்லையே!
அவர்கள் எதற்காக அவதியுற வேண்டும் ?
அப்படியானால் என் வாழ்க்கை…. அது எனக்கே விளங்காத புதிர்தானா ? எப்பொழுதும் நான் கனவு கண்டுகொண்டேயிருக்கிறேனா? அவரின் வர்ணனை-அதனை எண்ணுகிறபோது ஏற்படுகின்ற ‘சுகம்’ அவரோடு வாழவேண்டுமென்ற வாஞ்சையை என்னில் ஏன் எழும்ப வலுவில்லாது போகிறதோ!
கேள்விக்குமேல் கேள்வி! இதுதான் என் வாழ்வா ?
நாள் சருகுகள் உதிர்கின்றன, அதேநிலை. கல்லூரி, கற்பித்தல். மாணவியர், ஆசிரிய, ஆசிரியைகள், அவர்களோடு உரையாடல். அவரோடும் அதே உறவு! ‘காதும் காதும்’ வைத்துக் கதை பண்ணுகிறவர்களுக்கே என்னால் பயனில்லாதுபோகிறதாம்…!
நினைவுத் திரையின் விரிப்புச் சுருங்குகிறது. எங்கிருந்தோ சுழன்றுவந்த காற்றின் அசைப்பில் பக்கத்து மரத்தின் இலைகள் நெட்டி முறிக்கின்றன. அவள் ‘கனவுச்சுகத்தின்’ அனுபவத்திளைப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு எழுந்து நடக்கின்றாள். இரவுக்காலத்தில் மின்விளக்குகளால் ஒளிமயமாக விளங்கும் அந்தப் பெண்கள் கல்லூரியும் சூழலும் அவள் பார்வையிலிருந்து மெல்ல மறைகின்றது. அவள் தன் அறைக்குள் நுழைந்து அதற்குள் மடங்கி ஐக்கியமாகிறாள். ஆனால் அவள் நெஞ்சத்துப் பிரச்சனை மட்டும் மறையாத இரும்புக் கொக்கியாகக் கேள்விக்குறியிட்டு, உரமுற்று உறுத்துகின்றது. ஏனோ….?
– தமிழ்முரசு, தை இதழ் 1963.
– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |