கடலும் கரையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2025
பார்வையிட்டோர்: 401 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடல் இரைந்து கொண்டிருக்கிறது.  

அவள் துயின்று கொண்டிருக் கிறாள், அவளுக்கு அருகிலும் சற்றுத்தள்ளியும் அவளது பிள்ளைகள் அவளைப் போலவே ஆழ்ந்த நித்திரையில். 

அவன் அவர்களையே வைத்த கண்வாங்காது பார்த்துக் கொண்டிருக்கிறான். கடலின் இரைச்சல் அவர்கள் ஆழ்துயிலுக்கு தாலாட்டாய் அமைய, அவர்கள் தம்மை மறந்தநிலையில் உறங்கிக் கொண்டிருந் தார்கள். 

அவன் மனைவியும். அவள் பெற்றெடுத்த அவன் பிள்ளைகளும், அவனது ‘செல்ல’மான கடைக்குட்டி ரூபா, தாயை இறுகக் கட்டியணைத்து காலையும் தூக்கி தாயின் மேலே போட்டவளாய் கிடக்கிறாள். ஏதோ துயர் அவன் நெஞ்சை நெருடிச் செல்கிறது. 

திடீரென அவன் கண்முன்னே அவனும் அவளும் காதல் வயப்பட்டிருந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. 

கடலைத் தன அண்டையத் தோழியாக அணைத்துள்ள அக்கிராமம் அதன் கூப்பிடு தொலைவில் குரல் கொடுத்த வாறு கிடக்கும் அக்கடல். 

குடிசைக்கு முன்னால் சடைத்துக் கிளை பரப்பி, தன் முறுகிய வேர்களின் முதுகுப்புறத்தை நாலாபக்கமும் பரப்பி ஆசனம் அமைத்து நிற்கும் வேப்பமரம். அதன்கீழ், அவனும் அவளும் இரவிரவாகச் சல்லாபித்திருந்த காலங்கள். 

கடல் இரைச்சல் காதுக்கு இதமூட்ட, வேம்பில் வந்து விழும் கடல்காற்று, போக வழியற்று கீழிறங்கி, அவர்கள் முகம் தடவிச் செல்ல, காதல் வயப்பட்டுக் கனிந்த இரவுகள்…. 

கீழ்வானில் எழும் நிலவின் கன்னிக்கதிர்கள், வேம்பால் வடிக்கப்பட, எஞ்சியவை முற்றமெல்லாம் சிதறி பொட்டுப் பொட்டாய் பூப்போட்டிருக்க எழும் மோகன இரவில் அவனும் அவளும் கனவு கண்ட காலங்கள். 

“இப்படியே உலகம் விடியாமல் இருக்குமெண்டால்” – அவள் அவனில் சாய்ந்தவாறே கூறுவாள். 

“இப்படியே விடியாமல் இருந்தால் என்ன செய்வ?” – அவன் அவள் ஆழ்ந்து கொண்டிருக்கும் சுகப்பெருக்குள் இன்னும் முற்றாக முழுகாத வெளிநிலையில் நின்று கேட்பான். 

“நீங்க என்ன கதைக்கிறியள் இப்படி அபத்தமாக…” அவள்தன் சுகநிலையைக் கெடுக்க விரும்பாதவள் போல் தன் பேச்சை சுருக்கமாக கத்தரித்துக் கொள்வாள். 

“ஏன் அப்படிச் சொல்லிற?” 

‘வேற என்ன, செயல் எல்லாம் ஒழிந்த சுகமல்லவா இது? போகத்தைவிட காதல் வசப்பட்ட இருப்பு அதைவிடப் பெரியதவம் எண்டு ஒருத்தன் சொன்னானே, அவன்ர வாய்க்கு சக்கரைதான் போடவேணும்” “நாளைக்கு எனக்கு எத்தனையோ வேலையிருக்கு ராணி’ அவன் அபசுரம் தட்ட மீண்டும் கதைப்பான். 

“நீங்க இன்னம் வெளியிலதான் நிக்கிறியள்” -அவள் சிறிது சினம் மேலேறிவரக் கதைப்பாள். 

“கோவிக்காத ராணி, நீ தாற சுகத்திலை அப்படியே நான் மெய்மறந்து போகேக்க ஏதாவது ஒரு பிரச்சினை வந்து என்னைத் தட்டி எழுப்பிவிடுகுது.. அவன் அவளிடம் மன்றாடுவதுபோல் கதைப்பான். “பிரச்சினை எப்பதான் இல்லை. ஆருக்குத்தான் இல்ல? பிரச்சினையிக்க சந்தோசமாய் இருப்பதிலதானே தனிச் சுகம்? நாளைக்கு வாறதை நாளைக்குப் பார்ப்பம்; இப்ப சந்தோசமாய் இருப்பம்” என்று அவள் கூறிவிட்டு லேசாக சிரிப்பாள். 

இருட்டில் அவள் முகம் தெரியாவிட்டாலும், அவள் சிரிப்பால் இருள் மோகனம் கொள்வது போல் இருக்கும். அச்சிரிப்பின்போது அவள் அழகிய பற்களில் நிலாக்கதிர் பட்டுத்தெறிப்பது போன்ற ஓர் ஒளிர்வு. அவன் அப்படியே அவளை அள்ளி அணைப்பான். 

அவன் வாஞ்சை அள்ளலில் அவள் வெண்பட்டுத் துகிலென அவன் பிடியுள் அடங்கி ஒடுங்கிக் குழைவாள். 

திடீரென அவர்கள் இருவரையும் இறுக்கிய மௌனப் பேரணைப்பில் சற்றுத்தள்ளியிருக்கும் கடலன்னையின் கூப்பிடுதல் கேட்கும். 

இருவரது இதயமும் ஜோடிக் குதிரைகள் போல் விரையும் குளம்போசையின் அதிர்வு 

இந்நேரங்களில் திடீரென அவன் அடிமனதில் இனந் தெரியாத பீதி. 

அது பீதியா, துயரா? 

பனிப்படலம் விலக, மெல்ல மெல்லத் தெளிவுறும் தூரத்து முகம்போல் அடிவயிற்றில் நெளிந்த பீதி, துயராகக் கசிவுறும். 

பீதியின் போர்வையில் வரும் துயர். 

அப்போதெல்லாம் அவன் வயிற்றை அளைவதுபோல், வயிற்றை அளைந்து வாந்தி வருவது போல் -ஓர் உணர்வு… 

ஆழமாக அவன் சந்தோசத்தில் ஆழ்ந்துபோகும் ஒவ்வொரு சமயமும் எங்கிருந்தோ திடீரென ஓர் இனந்தெரியாத பீதியின் வாடை. நள்ளிரவமைதியில் திடீரென கதவைத் தட்டும் அந்நியன்போல் அதன் வருகை! 

எதிர்பாராத விதமாக ஒரு சந்தோசம் ஏற்பட்டு, அதைக் கொண்டாடும் முகமாக அவன் சிகரட் ஒன்றைப் பற்றவைத்து, ஆழமாக இழுத்து புகையை வெளித்தள்ளும்போது, புகையின் கடைசி எச்சச் சுருள்களோடு அவன் நெஞ்சில் நெளியும் பீதியின் சுருள்… 

எப்போதாவது விருந்து வைபவத்தில், நண்பர்களோடு சேர்ந்து நிறையக் குடித்து, அந்தக் குடியின் போதையால் தூண்டப்பட்ட தற்காலிக மனவிரிவின் ஆனந்தத்தில் அவன் அள்ளுப்படும்போது, எங்கிருந்தோ அவனுள் மிதந்து வரும் அந்தப் பீதி…. அடுத்தவினாடி அவன் தன்னைக் சூழ நிகழும் கொண்டாட்டத்தையும் கும்மாளத்தையும் மறந்து, அவற்றிலிருந்து விடுபட்டு, இவன் யாரும் அணுக முடியாத தனித் தீவாகச் சமைத்து போக,

ஏன் அந்தப் பீதி? அதன் அறிகுறி என்ன? 

ஆனந்தத்தின் மத்தியில் ஏன் இந்தப் பீதி எழுகிறது? எந்தக் குற்றவுணர்வு அமுக்கத்தின் மாறுவேட வெளிக்கிளம்பல் இது? முதலில் பீதி, பின்னர் அது துயரமாகமாறும் ஒரு ரசவாதம். 

அந்தப் பீதியையும் துயரையும் அவன் ஆழமாக ஆய்வு செய்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதையோ அவன் இழந்து போனதை ஞாபகப்படுத்துவதுபோல் அது மெல்ல மெல்ல அருட்டல் காட்டி ஓய்வுறும், இத்ததைய சந்தர்ப்பங்களில் எல்லாம் அவன் மனம் அவனை அறியாமலே, ” எல்லாம் மாயை` என்று பெரிதாகவே கத்திவிடும். அன்றும் அப்படித்தான். 

கூப்பிடு தொலைவில் கடல்காவல் இருக்க, வெள்ளி இறைத்த நிலாக்கதிரின் வேப்பமர விரிப்பின் கீழ். அவன் அவளை இறுக அள்ளி அணைக்க, அவள் அவன் அணைப்பில் துவண்டு குழைந்து அழிந்துபோக. அவனும் அவளோடு சேர்ந்து அக்கனவு இருப்பில் கரைந்துபோக திடீரென அப்பீதியின் வருகை. 

அவன் நெஞ்சுள் அது அரவுபோல் நெளிந்து மேலேறுகிறது. அவன் குரல்வளையை இறுக்குவது போல்…. 

அவள் தந்த சுகத்தில் அவளோடு சேர்ந்து கரைந்து கொண்டிருந்தவன் திடீரென வெளியே தூக்கியெறியப்படுகிறான். பனிக்கட்டி போல் கரைந்தவன், திடீரென மீண்டும் உறைபனியாகிறான். யாரும் தீண்ட முடியாத ஒரு தீவாக சமைகிறான். அவனை அறியாமலே அவன் வாய், ‘எல்லாம் மாயை என்று கத்திக் கொண்டபோது, அவன் அவள் அணைப்பிலிருந்து தன்னையும் தன் அணைப்பிலிருந்து அவளையும் விடுவித்துக் கொள்கிறான். 

“என்னப்பா. இப்ப என்ன நடந்திற்று?” அவள் தன்னை மெதுவாகச் சமநிலைப்படுத்தி அழுத்தமாகக் கேட்டாள். அவளுக்கு அவனது விசித்திரப் போக்குகளில் நல்ல பரிச்சயம். 

இருந்தாலும் தனது கைகளால் அவன் முகத்தை தன்பக்கம் திருப்பியவாறு மீண்டும் கேட்டாள்: 

“இப்ப, என்னப்பா நடந்தது? 

”ஒண்டுமில்ல, ராணி” என்று கூறியவன், கூப்பிடுதொலைவில் இருக்கும் கடலின் அழைப்புக்குக் காது கொடுப்பதுபோல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். 

”உங்களுக்கு நிலையில்லாத மனமப்பா’ என்று கூறியவள் ஒருவித வேதனைச் சிரிப்போடு, வேப்பங்கிளைகளால் இடைக்கிடை துண்டாடப்படும் நிலவின் தோற்றங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 


அவன் முன்னே அவன் மனைவி ராணி துயின்று கொண்டிருந்தாள். 

அவளைப்பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு அவள்மேல் மேலும் மேலும் ஓர் துயர் கூடிய அனுதாபம். 

பழைய நினைவுகள், மீண்டும் மீண்டும் அவனை அறியாமலே மடை திறந்து பெருகிக் கொண்டிருந்தன. 

எதிலும் அதிக அளவு காலூன்றாத. எந்த ஆழ்ந்த உணர்விலும் தான் மூழ்கிக் கொண்டிருக்கும் போது தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளும் அவனது போக்கு அவளைப் பலவிதத்திலும் அந்தர நிலைக்குள் ளாக்கியிருக்கிறது. 

அவள் ஆசையோடு எடுத்து, தன்மார்போடு அணைத்து அழகுபார்க்கும் சிறு சிறு சந்தோசங்களை, எந்தநேரம் அவனது போக்கு அறுத்து சிந்திவிடுமோ என்று தெரியாத மனப்பிராந்தியோடுதான் அவள் வாழ்ந்து வந்தாள். அவனது இத்தகைய விசித்திர குணாம்சங்களால் மொத்தத்தில் அவனிடமிருந்து அவ்வவ்போது அவள் தொட்டந் தொட்டமாகக் கறந்தெடுத்த இன்பங்கள் கூட தேன்பூசப்பட்ட வெற்றிலையில் தரப்பட்ட நாட்டு வைத்திய மருந்தாகவே நெடி வீசியது. 

இருந்தாலும் இத்தனைக்கும் மத்தியில் அவன் வாடை படாமல் அவளால் சிறிது நேரம் கூட தரித்திருக்க முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். அவனது விசித்திரங்கள், அவனது ஈடுபாடுகள், அவனது விடுபடல்கள் எல்லாம் அவளுக்குப் பழக்கப்பட்டவை மாத்திரமல்ல. அவற்றில் ஓர் உள்ளார்ந்த ஈடுபாடும் பிடிப்பும் அவளை அறியாமலே அவளிடம் உள்ளோடியிருந்ததையும் அவன் அறிவான். 

வெளிப்படையாக அவைபற்றி அவள் அலுத்துக் கொண்டாலும் அவை எல்லாரிடமும் காணப்படா தவையாகவும் இவனுக்கே உரியனவாகவும் அவையே ஒருவித பால்கவர்ச்சியை அவன்பால் ஏற்படுத்தும் தனித்தன்மையும் ஆண்மையும் கொண்டவையாகவும் இருப்பதை அவள் நுணுக்கமாக உள்வாங்கியிருந்தாள். 

அவள் எப்போதாவது நாடகம், சினிமா என்று போய்விட்டு வந்தால் அதில் வரும் பாத்திரங்கள் அவனது குணச் சாயல்கள் கொண்டவையாக இருந்து விட்டால் போதும், அவை எத்தகைய மட்டரகமான படைப்புகளாகத்தான் இருந்தாலும், அவை அவளைப் பொறுத்தவரை ஒப்பற்ற கலா சிருஷ்டியாகவே போற்றப்படும். 

“அதில்வாற கதாநாயகன் அச்சொட்டாக உங்களைப் போலவேதானப்பா…” அவளுக்குப் பிடித்தமான நாடகமோ சினிமாவோ பார்த்துவிட்டு வந்தால் அவளது விமர்சனம் முதலில் இப்படித்தான் ஆரம்பிக்கும். 

“ஏன் அப்படிச் சொல்லிற?” அவன் காரணம் தெரிந்தாலும் ஒப்புக்காக இதைக் கேட்டுவைப்பான். 

“அவன் தாமரை இலைத்தண்ணீர் மாதிரி, எதிலும் நிலையாக இல்லாமல் ஓடிறதைப் பார்த்தால் அச்சொட்டாக உங்களைப் போலத்தான்…”

“படம் எப்படி?” 

“கனகாலத்துக்குப் பிறகு ஒரு நல்ல படம். அந்த மாதிரி பாத்திரத்தை மறக்கேலாது. உங்களோட இருந்து அந்தப் படத்தை இன்னொருக்கா பாத்தாத்தான் எனக்கு திருப்தி வரும்போல இருக்கு. அப்பத்தான் ஒவ்வொரு கட்டத்திலும் கதாநாயகனட்ட தெரியும் உங்கட சுபாவத்தை உங்களுக்குச் சொல்லி ரசிக்கலாம்’ என்று அவள் நீட்டி முழக்கிக் கொண்டு போகும் போது அவன் மனம் பெரிதாகவே தனக்குள் சிரித்துக் கொள்ளும். 

ஒவ்வொரு சமயமும் அவள் பேச்சில் பளிச்சிடும் கண்ணாடி போன்ற குழந்தை உள்ளத்தில், அவள் முன்நிற்போர் எவரும் தம் பிரதி பிம்பத்தை கண்டுகொள்ளலாம் போன்ற தூய்மை இருக்கும். 

அவனும் அப்படித்தான். 

அவளைப் பிரிந்திருப்பது என்பது அவனுக்குப் பெரிய பகீரதப் பிரயத்தனமாகவே இருக்கும். சிறிது நாட்கள் பிரிந்திருந்தால் கூட, யுகம்யுகமாய் அவளைப் பிரிந்து விட்டது போன்ற காலத்தின் போலி நீட்சி அவனை ஆட்கொள்ளும். 

அவனுக்கு அவளது களங்கமற்ற மனம், தெளிந்த நீரோடை போன்ற சிரிப்பு, எதையும் மறைக்காது, அவனது நெஞ்சின் உள்ளிறங்கி, அவனோடு கைகோர்க்கும் ஆழமான இணைவு அவனை எப்போதும் கிறங்க வைக்கும். 

அவன் எப்போதாவது திரைப்படம் பார்க்கும்போதோ, ஏதாவது நல்ல கதைப்படிக்கும் போதோ அவளது இத்தகைய இயல்புகளைக் கொண்ட பாத்திரங்களை அதில் கண்டதும், அவனுக்கே உரிய உளவியல் சிக்கலாய் அவன் மனம் அலைபாயும், பின் அதைத் தொடர்ந்து அவனுக்கே உரிய அந்தப் பீதி, அந்தப் பீதி மெல்ல மெல்ல அடியழிந்துபோக அதன் எச்சமாய் இனந்தெரியாத அந்தத் துயரின் விரிவு.. 

ஏன் அந்தத் துயர்? 

அவள் அவனைவிட்டு எங்கோ எங்கோ நெடுந்தூரம் போவதுபோல்.. அவன் அவளை இழந்து எங்கோ எங்கோ தனிமைப்பட்டுப் போவதுபோல்… 

அவ்வேளைகளில் அவன் தன்னை சுதாரித்துக்கொண்டு சுயநிலைக்குத் திரும்பும் போது, அவள் அங்கே, அவனருகே அமர்ந்துரி.வி. பார்த்துக் கொண்டிருப்பதையோ, கதைப் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பதையோ காணுவான். இருந்தபோதிலும் அவன் நெஞ்சின் மூலையில் ஊற்றுக்கண்ட துயர், அவனைச் சூழ்ந்து வெகுநேரம் வரை மிதந்து கொண்டிருக்கும். 

ஏன் அந்தத் துயர் ? அந்தத் துயரின் வடிவை நுணுகி நுணுகி ஆய்ந்து சென்றால் எதையோ இழந்து போவதுபோன்ற துயர். அவன் மனைவி அவனருகே அழகும் சதையுமாக இருக்கும் போதும் அவள் தொடர்பாகப் பரவும் அந்தத்துயர்? 

அவன் மனைவி அத்துயரின் உயிர்த்தூண்டி!

அவள் அவன் இழந்து போன ஒன்றின் குறியீடு? 

அதுதான் உண்மையா? 

எது எப்படி இருந்தாலும் அவன் நெஞ்சில் ஊற்றிடும் பயமும் துயரும் அவன் அவளில் கொண்டிருந்த இறுக்கமான காதலையும் பற்றையும் காட்டும் சமிக்ஞைகள் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். 

தொலைவில். வெகுதொலைவில், வான்வெளியின் கோடி மூலையில் வெகு அற்பமாக வட்டமிட்டுக் கொண்டிருக்கும் பருந்து, கண்ணிமைக்கும் கணப்பொழுதில் பளார் என மண்ணில் விழுந்து, இரையைக் கௌவவரும் பூதாகரத் தாக்குதல் போல், அவன் அவள்மேல் கொண்டிருந்த பற்றும் பாசமும் திடீரென ஆக்கிரமித்து, பெரும் பரிமாணம் கொள்வதை அவனே கண்டு வியந்திருக்கிறான். 

நாளாந்த நடைமுறையில் வழமையான சலிப்போடும் ஜீவனோபாய அந்தரங்களோடும் வாழ்க்கை கழிக்கப்படும் போது எங்கோ. அடிமனதின் கோடி மூலையில், ஒரு தணல் பருக்கையாகச் சாடை காட்டும் அவ்வுணர்வு திடீரென சில சந்தர்ப்பங்களில் விஸ்வரூபம் எடுத்துத் தாக்கும் விந்தையை அவன் கண்டிருக்கிறான். குறிப்பாக, வீட்டை விட்டு அவன் பிரிந்துபோகும் சந்தர்ப்பங்களில் இவ்வுணர்வுகள் சிறிது சிறிதாக கனதி கொள்ளத் தொடங்கி, பின்னர் பிரிவின் இடைவெளி எதிர்பார்த்ததை விட அதிகரிக்கத் தொடங்கிவிட்டால், உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் அவையாகவே மாறி அவனை ஆட்டிப்படைக்கத் தொடங்கும் போதுதான் அவை எவ்வளவு ஆழமாக அவனில் வேர்பாய்ச்சி உள்ளன என்பதை அவன் அறிந்து தன்னிலேயே வெறுப்பும் கோபமும் கொள்ளத் தொடங்கி யிருக்கிறான். 

இச்சந்தர்ப்பங்களில் உடல் பெரும் பாரமாகி, பாறாங்கல்லைப் போல் அவனை அழுத்தத் தொடங்குவதை உணர்கிறான். உடலைக்கொண்டு செயல்படுவதென்பதே பெரும் வேலையாக மாறுகிறது. அதனால் செயல் அனைத்தும் ஒழுங்கு கெட்டுச் சிதறி அரைகுறை வேலைகளாய் அந்தரத்தில் விடப்படுகின்றன. 

அப்போதுதான் எல்லாப் பாரங்களையும் விட பற்றும் பாசமுந்தான் பெரும் பாரமாய் இருப்பதை அவன் அறிகிறான். 

அதன் விளைவு, உடனேயே இவற்றை எல்லாம் தலைமுழுகி விடவேண்டும் என்ற கங்கணம் கட்டல். அதற்கான தயாரிப்புகள், முஸ்தீபுகள் என்று மனச்சமப்படுத்தலுக்கான ஒரு தொடர் ஓட்டம். இதன் அடிப்படையில் எவ்வளவோ பரிசோதனைகள் அவன் செய்து பார்த்திருக்கிறான். எத்தனையோ விதத்தில் உடல் ஒறுப்பு வேலைகளிலும் அது தரும் வேதனைகளிலும் உள்ளாழ்ந்திருக்கிறான். 

ஆனால் முடிவு? 

ஏதோ பெரும் சாதனைபோல் ஆரம்பித்து, கடைசியில் வெற்றி கரமாக தோல்விக் கம்பத்தையே அவன் முயற்சிகள் தொட்டிருக்கின்றன.

தன் முயற்சியில் வெற்றிபெற்றுவிட்டதாக அவன் நெஞ்சு அகமகிழ்ந்து தனக்குள் பெருமிதம் உற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தப்பற்றுகள், வெட்ட வெட்டத் தழைக்கும் சூரன் போல் ஒவ்வொரு தோற்றங்கொண்டு புதுவித முகங்களோடும் புதுவிதக் காரணங்களோடும் அவனை ஆக்கிரமிப்பதை அவன் கண்டு களைத்திருக்கிறான். 

பற்றுக்களின் ஒவ்வொரு தோற்றந்தான் வாழ்க்கையா?

பின்னர் மாயை என்பதும் அதுதானா? 

அப்படியானால் உனக்கு இனி மீட்சியே இல்லை? 

இச்சந்தர்ப்பங்களில் மூச்சு விட முடியாத இருட்டறைக்குள் தள்ளப்பட்டவன் போல் அந்தரித்திருக்கிறான். அதிலிருந்து வெளியேற முடியாமல் போவதே வாழ்க்கையாகவும் அதுவே பெருஞ்சிறையாகவும் கண்டு எதுவும் செய்வதறியாது மாயையின் முகங்களோடு அள்ளுப்படுவதே தஞ்சமெனக் கண்டிருக்கிறான். 

ஒருமுறை அவனுக்கும் அவளுக்கும் இடையே அற்ப ‘வீக்க தூக்கத்தின்” விளைவாய் ஏற்பட்ட சிறுபூசல், பெரிதாக வெடித்தது. அவனுக்குப் பிய்த்துக் கொண்டுவந்த ஆத்திரத்தில் அவள் அப்போதுதான் காலை உணவை சாப்பிட ஆரம்பித்திருந்தாள் என்பதையும் பார்க்காது ஓங்கி அறைந்து விட்டான். காலை உணவான பிட்டு நாலாபுறமும் சிதறுண்டு போக அவளது பாத்திரம் தூரப்போய் விழுந்தது. 

அவ்வளவுதான். 

அவனைப் போலவே அவளும் மோசமாக உணர்ச்சி வசப்பட்டாள். அந்த உணர்ச்சி வசப்பட்ட கோப முனைப்பில் அவள் இதுகாலவரை அவனுக்கு காட்டி வந்த மரியாதை வார்த்தைகள் சில சிதைவு கண்டன. அதைக் கேட்க அவனுக்கு மேலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. ‘பற்றிக் கொண்டு வந்தது” என்ற சொல்லர்த்தத்துக்கேற்ப ஒவ்வொரு தலைமயிரும் நெருப்புக் கம்பிகளாய் நிமிர்ந்து எரிந்து நிற்க, உச்சந்தலை பற்றி எரிவது போன்ற கோபக் கனல். கண்கள் மூலம் அவை வெளிவருவது போல் அழல் தெரிந்தது. அவளை ஓங்கி ஒரே உதையாய் உதைக்க வேண்டும் போன்ற மூர்க்க உச்சம்… அவளை அப்படியே எத்தி விடுவதற்குக் கால்கள் துருதுருத்துக் கொண்டுவந்த அந்தக் கணத்தில் திடீரென அவனுள் ஒன்று ஓடி வெளித்தது. 

அப்போ இவ்வளவுதானா இவள்? 

இவளுக்காகத்தானா நான் இவ்வளவு தியாகம் செய்தேன்?

இவ்வளவுதான இவள் என்மேல் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் ? 

இப்படிப்பட்டவளுக்காகத்தான், நான் பிரிந்திருக்கும் ஒவ்வொரு சமயமும் ஏதோ குடிமுழுகிவிட்டதுபோல் தவித்தேனா? 

என்ன மாயை! 

அவன் அவளோடு காதல் கொண்டிருந்த காலத்தில், அவளைக் கைப்பிடிப்பதற்கு எதிராக குறுக்கே நின்ற எத்தனையோ தடைகளை யெல்லாம் ஒதுக்கித்தள்ளி அவளை மணந்து கொண்ட அவனது போராட்டம் அவன் கண் முன்னே வந்து வந்து மோதிற்று. 

ச்சே, என்ன வியர்த்தம்! 

எல்லாம் மாயை! நான் வெறும் பேயன்! 

இந்தக் கணத்தில் அவன் நெஞ்சை இதுகாலவரை அழுத்தி வந்த பாறாங்கல்லு பட்டெனக் கழன்று வீழ்ந்தது போலாயிற்று. அக்கணத்திலேயே அவனில் பற்றியெரிந்த பெருங்கோபம் தண்ணீர் வார்க்கப்பட்டதுபோல் தணிந்து போயிற்று. 

அப்பாடா, அவன் மனதில் பெரும் நிம்மதி கவிந்தது.

நெஞ்சில் பெரும் வைரம் பாய்ந்தது போன்ற ஒரு மனக் கோணம்

வீணான பற்றும் பாசமும் இனித் தேவையில்லை. 

ஒரு விஞ்ஞானி ஆய்வுகூடத்தில் இருப்பது போல், வாழ்க்கை என்னும் பொருளை விடுபட்டு நின்று அணுகுவதுதான் இனி அவன் வேலை. அதனால் வீண் அவஸ்தை, அந்தரம், விரக்தி எல்லாம் இல்லாமல் போகிறது. குடும்பத்தலைவன் என்ற ரீதியில், அவரவர்க்குரிய கடமையைச் செய்வது, அதற்கு மீறிய பற்றும் பாசமும் எனக்கு மட்டுமல்ல குடும்ப அங்கத்தினர் சகலருக்குமே ஆபத்தானது. அனர்த்தங்களை ஏற்படுத்தக் கூடியது. அவன் தனக்குள்ளே சொல்லி தன்னைத் திடப்படுத்திக் கொண்டான். குடும்பத் தலைவன் ஒரு விஞ்ஞானி போல் இருக்க வேண்டும். விஞ்ஞானி தனது ஆய்வுப் பொருளில் பற்றுவைத்தால் அவன் எந்தப் புதிய ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது போய்விடும். அதனால் மிஞ்சுவது சமூகத் தேக்கம். பின்னடிப்பு, பற்றுவைக்கும் குடும்பத் தலைவனால், குடும்பத்துக்கு நன்மைக்குப் பதில் சஞ்சலமே அதிகம் ஏற்படுகிறது. 

அவன் புதிய சித்தாந்தம் வகுத்துக் கொண்டான். அதற்கேற்ப நெஞ்சில் வைராக்கியத்தை வரவழைத்துக் கொண்டு, தனது பற்றற்ற வாழ்க்கையை ஆரம்பித்தான். அப்படியே சிறிது நாட்கள் செயல்பட்டான். 

ஆனால் அவனது புதிய விடுபடல், அவனை விட அவளுக்கே புதிய அச்சத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்திற்று. அவனது இயல்புக்கு மாறான புதிய போக்கை அவளால் தாங்க முடியவில்லை. அது முதலில் எரிச்சல், சினம். விரக்தி என்னும் வடிவங்களில் அவளது செயலிலும் சொற்களிலும் வெளிப்பட்டன. 

ஆனால் அவன் தளரவில்லை. 

அவன் தனது விடுபடலையே தொடர்ந்து கடைப்பிடித்தான். 

சினம், விரக்தி, எரிச்சல் என்பவற்றின் மூலம் தனது ஆற் றாமையை வெளிக்காட்டிய அவள், அதில் தோல்வியுற, இரண்டொருநாள். ஏதோ நோய்வாய்ப்பட்டவள்போல் ஒரு மூலைக்குள் கிடந்து அனுங்கினாள். இதை அவள் வேண்டுமென்றே செய்யவில்லை. உண்மையில் அவனது விடுபடலை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் உடல் சோர்வுற்று வாழ்க்கை அர்த்தம் கெட்டதுமாதிரி, அதில் எந்தவித பிடிப்பும் அற்று அவளை முடங்க வைத்தது. 

அவன் அப்போதும் அசையவில்லை. முன்னர் என்றால் அந்நேரங்களில் அவன் ஓடிப்போய் அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்து, முதுகைத்தடவி விட்டு, பனடோலையோ டிஸ்பிறீனையோ தானே கொடுத்து அவளைக் குடிக்கவைப்பான். அப்படி அவன் செய்யும் போது, மருந்து குடிக்க முந்தியே அவளுக்கு உடம்பு சுகமாகி விடும். அவள் பழைய நிலைக்குத் திரும்பி கலகலக்கத் தொடங்கி விடுவாள். 

ஆனால் இந்தமுறை அவன் அதை ஒன்றும் செய்யாது உண்மையாகவே விடுபட்டு நின்றான். தான் அவளுக்கு வழமையாக கொடுக்கும் மருந்தை தனது கடைக்குட்டி மகள் மூலம் கொடுத்தனுப்பினான். இச்செயல் அவளுடைய வருத்தத்தை குறைப்பதற்குப் பதில் இன்னும் கூட்டிவிட்டது போலவே இருந்தது. கூடவே ஆத்திரமும் அந்தரமும் வேறு. அவளது எல்லா ஆற்றாமையும் ஒன்றுசேர, கொடுத்தனுப்பிய பனடோலை தூக்கி வீசினாள். அவை ஒவ்வொன்றும், அவனும் அவளும் போல் வெவ்வேறு திசைகளில் சிதறி ஓடின. 

அப்போதும் அவன் அசையவில்லை. மாறாக, அதைப் பொருட்படுத்தாது, ஏதோ அலுவலாக வீட்டை விட்டு வெளியே இறங்கி நடந்தான். 

அப்போது அவன் பின்னால், மெதுவாக ஆனால் ஆழமாக கூவியழும் அழுகுரல் கேட்டது. அவள்தான் அழுகிறாள். அது அவளின் கடைசி ஆயுதம். எல்லாவற்றிலும் தோல்விகாணும் சந்தர்ப்பங்களில் அவள் தன் வழக்கை வெல்ல முன்வைக்கும் கடைசி கடைசி விவாதமுறையும் ஆயுதமும்தான் இது: 

அழுகை! 

அவனுக்கு பின்னால், கேட்ட அவளது குழந்தைப்பிள்ளைத் தனமான தேம்பல் அவன் நெஞ்சை என்னவோ செய்தது. பாவம் அவள்! அவள் மட்டும் என்ன யந்திரமா? அவளுக்கு மட்டும் கோப தாபங்கள் விருப்பு வெறுப்புகள் இருக்கக் கூடாதா? எனக்கே இன்னும் சரியான பக்குவம் இல்லாதபோது அவளிடம் அதை எதிர்பார்ப்பது எவ்வளவு சரி? 

அவன் மனம் அலைபாய்ந்தது. வழியில், அவனெதிரே ஒரு அகதிப் பெண் வந்துகொண்டிருந்தாள். அவள் தன் இரண்டு குழந்தைகளை அருகருகே வரவிட்டு, ஒரு கைக் குழந்தையைக் காவியவளாய் வந்தகாட்சி, அவன் மனதில் ஏதேதோ கற்பனைகளைத் தோற்றுவித்தது. முகத்தில் வேர்வை பிசுபிசுக்க, கண்களின் கருவளையங்கள் பசியின் கொடுமையைப் பறை சாற்ற அவள் வந்து கொண்டிருந்தாள். நான் இல்லாவிட்டால் என் மனைவியும் பிள்ளைகளும் இப்படித்தான் ரோட்டில் அனாதைகளாத் திரிவார்களோ? 

எதுவித சம்பந்தா சம்பந்தம் அற்ற இந்தக் கேள்வி அவன் நெஞ்சில் வந்து வந்து மோதிற்று. அந்த நினைவை அவன் எதுவித அர்த்தமும் அற்றது என்று ஒதுக்க ஒதுக்க, அது இன்னும் வேகங்கொண்டு அவனைத் தாக்கிற்று. எந்தவித அர்த்தமோ சம்பந்தமோ அற்ற அந்தக் கற்பனையின் நிழலில் அவன் தள்ளி வைத்த பற்றும் பாசமும் ஒதுக்கிடம் தேட முயல்கின்றது என்பதை அவன் பூரணமாக அறிந்தும் அதைக்கட்டுப்படுத்த முடியாத நிர்கதிக்குள்ளாகிக் கொண்டிருந்தான். அதற்கு ஏற்றாற்போல் அவன் வீட்டைவிட்டு வரும்போது அவன் பின்னால் கேட்ட அவளின் தேம்பல் ஒலி கூட்டிற்று. அவன் மனம் மெல்ல மெல்ல இளகிக் கரைவு கண்டது. 

பாவம் அவள், எப்படியாவது அவளை ஆறுதல் படுத்த வேண்டும். அவன் மனம் முடிவெடுப்பதில் துரிதம் கொள்கிறது. இச்சந்தர்ப்பத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் உபதேசங்களில் ஒன்று அவன் நினைவுக்கு வருகின்றது. அவர் சகல பெண்களையும் தாயாகக் காணவேண்டும் என்று கூறியிருக்கிறார். 

ஓமோம். அதுதான் உண்மையான வழி. நான் அவளிலிருந்து விடுபட்டு நிற்பதைவிட, அவளைத் தாயாகப் பாவித்து அன்பு செலுத்துவது மிக இலகுவானதும் நேர்த்தியானதும் எவருக்கும் மனப்பாதிப்பை ஏற்படுத்தாதும் கூட. அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். ஓமோம் அதுதான், அதுதான் சரி, விடுபட்டு நிற்றல் பற்றற்று வாழ்தல் என்று அதிகம் அலட்டிக் கொள்ளாமலே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி எவருக்கும் பறைசாற்றாமலே விடுபட்டு நிற்பதற்கு இதுதான் சிறந்தவழி. 

அவன் தனது விடுபட்டு நிற்றலின் புதிய சிந்தாந்தத்தை தனக்குள் உருவேற்றிக் கொள்கிறான். ஆனால் வேடிக்கை என்னவென்றால், எவ்வளவு வேகமாக மாயை அவனைத் தன் கைக்குள் போட்டுக் கொள்கிறது என்பதையோ, அது, ஆத்மீக போதனையைக் கூடத் தனக்கேற்ற ஒப்பனையாக பாவித்து அவனை ஏமாற்றுகிறது என்பதையோ அவனால் அப்போது உணர்ந்து கொள்ள முடியவில்லை. 

அவன் வீட்டுக்குத் திரும்பியபோது, அயல் அட்டத்தில் உள்ள இரண்டொரு பெண்கள் அவன் வீட்டுக்கு வந்திருந்தனர். முதலில் அவன் நெஞ்சு திக்கென்றது. ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை என்பது வீட்டுக்குள் போனதும் தெரிந்தது. 

“எங்க தம்பி திரியிற, பொடிச்சிக்கு காய்ச்சலாய் இருக்கு. வாயாலை எடுத்துப் போட்டுக் கிடக்கிறாள். உன்ர பிள்ளையள் பயந்து அழுதாப்போல வந்தனாங்க…” என்று உள்ளேயிருந்து பக்கத்து வீட்டுக் கிழவி கூறினாள். 

அவன் அவளைத் தொட்டுப் பார்த்தான். லேசான காய்ச்சல். அதுவும் காலையிலிருந்து சாப்பிடாததால் வெறும் வயிறு வயிற்றைப் பிரட்டியிருக்கும். ஆனால் எதுக்கும் அவளை வைத்தியரிடம் காட்டுவது நல்லது. அது நோய்க்குரிய பரிகாரம் என்பதைவிட அவளைப் பழைய சகஜநிலைக்கும் சந்தோசத்துக்கும் கொண்டுவர மிக உதவியாய் இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். 

“ஏன் தம்பி பாத்துக்கொண்டு நிக்கிற, பொடிச்சியை டாக்குத்தரட்டக் கொண்டுபோய்க் காட்டியெண்டு வா’ முன்னர் கதைத்த கிழவியே மீண்டும் அவனைத் தூண்டினாள். 

முதலில் அவன் கேட்ட போது அவள் ஒப்புக்கு மறுத்தாலும் சிறிது நேர இழுபறிக்குப் பின்னர் அவள் அவனோடு வைத்தியரிடம் போவதற்கு வெகு உற்சாகமாக கிளம்பி விட்டாள். 

எவ்வளவு வேகமாக அவனை அந்தமாயை கௌவியது! 


பற்றற்று வாழுதல், இல்லறத்தில் இருந்து கொண்டே துறவறம் புகுதல் பற்றி எல்லாம் அவன் ஏராளமாகப் படித்திருக்கிறான். அவை பற்றிப்படிக்கும் போது, அவனது நெஞ்சின் மூலையில் ஏதோ இனந்தெரியாத கிளுகிளுப்பு நிகழ்வதை அவன் கண்டிருக்கிறான். தூரத்தே அடிவான் தொலைவில், ஒரு சிறு கொக்குப் போல் பாயிழுத்துவரும் வள்ளத்தைக் கண்டு கிளுகிளுப்படையும் மீனவப் பெண்போல் நெஞ்சக் கரையில் ஒரு கிளுகிளுப்பு. 

ஆனால் புத்தகங்களில் படிக்கும்போது, கருத்துரூபத்தில் கிளுகிளுப்புத்தந்த அந்த “விடுபடல்” செயலில் எவ்வளவு கஷ்டமானது என்பதை அவன் பலதடவை உணர்ந்து விட்டான். அவன் அது சம்பந்தமாக எடுக்கும் ஒவ்வொரு தீவிரமான சங்கல்பமும் மாயையின் பன்முகத் தோற்றங்களால் விழுங்கப் பட்டுப்போவதை அவன் பின்னர் உணர்ந்து விரக்தியடைந்திருக்கிறான். 

இத்தொடர் அனுபவங்களுக்குப் பின்னர் அவன் பெரிதாக இதுபற்றித் தீர்வு எடுப்பதை நிறுத்திவிட்டான். ஆனால் அதற்காக அவனிடம் அது பற்றிய பிரக்ஞை அறவே அடிபட்டுப் போய்விட்டது என்றும் இல்லை. அது அவனது நெஞ்ச மூலையில், தனக்கென ஒரு படுகை விட்டு, வாழ்க்கைப் பெருக்கின் தனியான பிரக்ஞை ஓட்டச் சுழியாகச் சென்று கொண்டுதான் இருந்தது. அதனால் வழமைபோல் அவன் ஆத்மீகம் பற்றிய புத்தகங்கள் படிக்கும்போது, அந்தத் தனியான பிரக்ஞை சுழியிலிருந்து ஓர்வகை ஆனந்தக் கிளுகிளுப்புக் குமிழ்கள், மேலாடி அடங்கத் தவறுவதில்லை. அவ்வளவே. அதற்குமேல் அவைபற்றிய வேறு அழுத்தங்கள் இல்லை. 

ஆனால் திடீரென்று ஒருநாள் அது நிகழ்ந்தது. 

அதுபற்றி அவன் துப்புரவாகவே மறந்துபோய் விட்டிருந்த நேரத்தில் திடீரென அது அவன் முன் ஒரு புதுவிதத் தோற்றத்தில் வந்து குதித்தது. அதைத் தொடர்ந்து அது அவனை ஆட்கொண்ட விதமும் வியப்புக்குரியதே. 

மாலை நேரம். அன்று அவன், வழமைக்கு மாறாக, ரோட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் தனது வீட்டு விறாந்தையில், சிறிது ஓய்வெடுக்கலாம் என்பதுபோல் வந்தமர்கிறான். 

ரோட்டில் சனங்கள் இடைக்கிடை போய்வருவது தெரிகிறது. அவர்களில் அவன் மனதை அதிகம் பதியவிடாது, நுனிப்புல் மேய்வது போல் அமர்ந்து கொண்டிருந்தபோதுதான் அது நிகழ்ந்தது. இருந்தாற்போல் அவன் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்ததுபோல் அந்த உணர்வு அவனை உலுக்கி எடுத்தது. 

மரணம்! 

உருவற்ற வெறும் கருத்து, உருக்கொண்ட உயிர்ப் பொருளாய் அவன் முகத்தில் அறைந்து சிரித்தது. அவன் வெலவெலத்துப் போனான்.

அடுத்தகணம் அவன் முன் தோற்றங்கொண்டவை எல்லாம் கரைவனபோல் மிதந்தன. கரைந்து கரைந்து, வெறும் பனிப்புகையாய் அழிந்து அழிந்து போவது போல்…. 

முன்னால் ரோட்டில் சைக்கிளில் சமாந்தரமாக இரண்டு இளைஞர்கள் பெரிதாக சிரித்துக் கதைத்துக்கொண்டு போகிறார்கள். அவர்கள் என்ன இளமையோடு இருந்தென்ன, அவர்களை விட இன்னும் இளமையாய் அவர்களுக்கு முன் இருப்பது மரணம்! அது அவனுக்குப் பளிச்சிட்டது. அவர்கள் மரணத்தால் கரைக்கப்படப் போகிறவர்கள். அவர்களுக்கு எதிரே தண்ணீர் குடம் தாங்கி வரும் கன்னிப் பெண்கள் சிலர். காற்றில் மிதந்து வரும் அவர்கள் வெங்கல நகைப்பொலி மரணத்தின் ஒலியாகவே வருகிறது. அந்தக் கன்னிப் பெண்களும் மரணத்தின் கரைவுகளே. அதோ ரோட்டின் ஓரமாக போளை அடித்து விளையாடிக் கொண்டிருக்கும் அந்தச் சின்னஞ்சிறு வாண்டுகள். அவர்களும் மரணம் தாங்கும் உருவங்களே. அவன் பார்க்கும் ஒவ்வொன்றும் மரணத்தின் பல்வேறுபட்ட தோற்றங்களாகவே பளிச்சிட்டன. 

எங்கும் மரணத்தின் வியாபிப்பு. மரணம் பற்றி அவன் எத்தனையோ வியாக்கியானங்கள் வகுத்தபோதோ, அது பற்றி ஆழமாகச் சிந்தித்தபோதோ தோற்றாத, பிடிபடாத புதுப்புதுப் பரிமாணங்கள் இப்போ திடீரென அவன் முன், அவன் கேட்காமலே, சிந்திக்காமலே வந்து குதித்தன. அப்போ இதுகாலவரை சிந்தித்ததும். இப்போ சிந்திப்பதும் அவனா, வேறொன்றா? 

அவன் மனைவி, அவன் பிள்ளைகள், எல்லாமே, எல்லாரும் சாவின் தோற்றங்கள். அவர்கள் இன்றைக்கோ, நாளைக்கோ,எப்பவோ சாகவிருக்கும் தோற்றங்கள், சாவின் கைப்பிடிகள் 

சகலரும் சாவின் பின்னணியில் நிழலாடும் பொம்மைகள். சமாந்தரமாகச் சிரித்துக் கொண்டு போகும் சைக்கிள் இளைஞர்கள், தண்ணீர் குடம் காவும் கன்னிகள், போளை அடிக்கும் சிறுவர்கள், அவன் மனைவி, பிள்ளைகள், அயல், அட்டம் அனைத்துமே எதிர்வரும் சாவின் நிழல் எறியங்கள்! 

எல்லாம் நிரந்தரமற்ற மாயை! அந்தக் கணத்தில் அவனது ஆசைகள், லட்சியங்கள். கற்பனைகள் எல்லாமே அர்த்தம் கெட்டுப் போகின்றன. ஓர் அந்தரத்தில் விடப்பட்டவையாய் ஆகின்றன. 

அப்போ அர்த்தமுள்ளது எது? 

மரணத்தின் பின்? மரணத்தின் பின்? 

மரணத்தின் பின், “முன்னும்” “பின்னும்” பார்க்க யார் இருக்கிறார்? யாருக்கு வேணும் அந்த முன்னும் பின்னும்? 

அவனுக்கு அந்தக் கணத்திலேயே தன்னை அழித்துக் கொள்ள வேண்டும் போன்ற ஓர் உந்துதல், ஆனால் அதையும் செய்துகொள்ள முடியாத அந்தரம் வேறு. 

அன்றிரவு முழுக்க அவனுக்கு நித்திரையே இல்லை. 

அவன் பித்துப் பிடித்தவன் போலானான். எல்லாரையும் தூங்க விட்டு, விளக்கை அணைத்துவிட்டு இவன் மட்டும் தனியே கொட்டக் கொட்ட ஆந்தைபோல் விழித்துக் கொண்டிருந்தான். 

அந்நேரம் சேவல் ஒன்று திடுக்கிட்டு விழித்துக் கூவியதும் சாக்குருவி இரண்டு தலைக்கு மேலால் கத்திக்கொண்டு போனதும் அவன் நிலைக்கு ஏற்ற சரியான சுருதிபோலவே அவனுக்குப் பட்டது. 

அவன் மனைவி பயந்து போனாள். 

அவனது அன்றைய புதுவித நடத்தைகளைக் கண்டு தான் ஏதும் பிழை விட்டாளோ என்று பயந்து, எதை எதையெல்லாம் யோசித்து, அப்படி எந்தவிதத் தவறும் தான் செய்யவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட பின்னர், அவள் அவனருகே வந்தாள். 

“என்னப்பா உங்களுக்கு, உடம்புக்கு ஏதும் சுகமில்லையா? என்ன யோசிச்செண்டு இருக்கிறியள்?’ -அவள் அவனை மெல்லவாக தோளைப்பற்றி அசைத்தாள். 

அவன் அவளை சாடையாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு லேசாகப் புன்னகை செய்தான். 

அந்த புன்னகையில் அவன் அவளை விட்டு எவ்வளவோ தொலைவில்போய் நிற்பது தெரிந்தது. 

“என்னப்பா அப்பிடி யோசிக்கிறியள்? இருந்தாப் போல என்ன நடந்தது உங்களுக்கு?” அவள் அவனைத் தொடர்ந்து உலுக்கினாள். 

“ஒண்டும் இல்லையப்பா” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவன் அவளைப் பார்த்தான். 

அந்தப் பார்வையில் ஒரு அசாதாரண அமைதியும் அவளிலிருந்து அவன் அந்நியப்பட்ட தன்மையும் தெரிந்தது. அது அவளைப் பயமுறுத்தியது. அதனால் அவள் மேலும் பேசாது அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். 

அவன் பார்வை தூர வெறித்திருந்தது. என்றாலும் இருட்டில் அவன் அருகில் நிற்கும் அவன் மனைவி, கருந்திரளாய் அவன் ஓர விழிகளில் பட்டாள். மரணம், மனைவி என்ற பேரில் அவன் அருகில் நிற்கிறது. அருகே உள்ள அறையில் பிள்ளைகளின் குறட்டை ஒலி லேசாகக் கேட்கிறது. பிள்ளைகள் என்ற இன்னொரு பேரில் மரணம். அவன் அருகில் நிற்கும் மனைவி, பிள்ளைகள், இனம், சுற்றம், சமூகம், உலகம் சகலதும் மரணம் அணிந்து விட்டெறியும் வேடங்களா? 

அவனுக்கு என்றைக்குமில்லாத விதத்தில் அவன் மனைவி, பிள்ளைகள் அனைவரிலும் ஓர் அனுதாபமும் இரக்கமும் பெருகியது. மரணந்தான் வாழ்க்கையின் அர்த்தமா? 

அதற்குமேல் ஒன்றுமில்லையா? 

அவன் மனம் ஆழமாக எங்கோ நுழைவது போல் இருந்தது.

தூரத்தே கடல் கூப்பிடும் ஒலி கேட்டது. 


அவனை விட்டு ஒவ்வொன்றாகக் கழன்று கொண்டிருக்கின்றன. கழன்று, கழன்று அவை அவனை விட்டுத் தூரப் போய்க் கொண்டிருப்பது போன்ற தோற்றம். 

தோணியில் செல்லும்போது கடலில் மிதந்து வரும் அலைகள். அவ்வலைகளின் முதுகில் தோணிவிட்டுச் சவாரி செய்து வரும் தாழை இலைகள், கடற்பாசித் துணுக்குகள் எப்படி ஆடி ஆடி, ஒரு சமவேக கதியில் தோணியைத் தாண்டிச் செல்லுமோ அவ்வாறே அவன் இறுகப்பற்றியிருந்த விருப்பு வெறுப்புக்கள், ஆசைகள், கனவுக் கோட்டைகள் யாவும் மெதுவாகக் கழன்று, கழன்று அவனைவிட்டுத் தூரப் போய்க் கொண்டிருப்பதை அவன் கண்டான். 

திடீரென அவன் நெஞ்சை நிலத்தில் அழுத்திய பாரம் நீங்குவது போன்ற ஓர் நிம்மதி. 

அவனது பிரயாணம் கடலில். அதுவும் யந்திர விசை எதுவும் பூட்டாத தோணி, பாயிழுத்துச் செல்வது போல் அவன் உணர்கிறான். அதில் அந்தரம் இல்லாத ஒரு சுகம். யந்திரம் பூட்டப்பட்ட அந்தரம் அவனுக்குப் பிடிக்காது. அதனால் தரையில் யந்திர வாகனங்களில் செல்லும்போது நம்மை விட்டு டக் டக் கென்று கண்வெட்டும் கணப்பொழுதில் சென்று மறையும் மின்கம்பங்கள் போல் எதுவும் அவனைவிட்டுக் கழன்றோடவில்லை. 

அவை ஆடி, ஆடி அலைகளின் தாலாட்டோடு தாலாட்டாய் மெல்ல மெல்ல அவனை விட்டுக் கழன்று போகின்றன. 

ஒரு கணம் அவனுக்கு சந்தேகம். 

உண்மையாகவே அவை கழன்று போகின்றனவா அல்லது திரும்பவும் அவை அவனிடம் வந்து ஒட்டிக் கொள்கின்றனவா என்பதை பிரித்தறிய முடியாத மயக்கம். அலைகளின் தாலாட்டுக்கேற்ப அவற்றின் முன்னோடலும் பின் வாங்கலும், அத்தகைய பயணம் அவனது. 

இடைக்கிடை அவன் ஆழப்புதைவிலிருந்து அவனது பழைய இன் கிளுகிளுப்பின் மேலாடல். 

அப்போதெல்லாம் அவன் உறங்காததோடு சுக்கானில் கைப்போட்டவனாய், காற்றுதைக்க எழும் தோணியின் கும்பகப் பாய்விரிப் பின் ஏகாந்தத்தில் தன்னை மறந்து சஞ்சாரம். 

பாசித்துணுக்குகள் மெல்ல மெல்ல கடந்து செல்கின்றன. கடலின் தொப்பூழ் கொடியாய் நின்றாடும் தாழங்கொடிகள் அறுபட்டும் அறுபடாமலும் நெளிகின்றன. அவனுக்கு அவைபற்றிய பிரக்ஞையின் தொடர்பும் துண்டிப்பும் மாறி மாறி நிகழ்கின்றன. அவன் ஒரு புதிய பிரக்ஞையுள் மிதக்கிறான். 

கடல். 

எல்லையற்ற நீல விரிப்பு. 

இப்போ அவன் தோணி, ஏறிய கரையை விட்டு எவ்வளவோ தூரம் வந்துவிட்டது. புகைமண்டலம் போல் தூரந்தெரிந்த, அவன் விட்டு வந்த கரையும் இப்போ இல்லை. 

எங்கும் எப்பக்கம் திரும்பினாலும் பளபளக்கும் நீல நீர்ப்பரப்பு.

அவன் முன் பாய்விரித்த ஏகாந்த சஞ்சாரம், திடீரென அச்சமாய் மாறுகிறது. 

ஏன் அச்சம் ? அப்படி யாரோ நடுக்கடலில் இருந்து குரல் கொடுப்பது போல் கேட்கிறது. 

நடுக்கடல், திசை தெரியாத நீர்ப்பரப்பின் நீட்சி, வியாபிப்பு. அதன் உணர்ச்சி உருவகமாய் அச்சம். 

ஏன் அச்சம். 

மீண்டும் அதே குரல் கடலில் இருந்தா? அவனுள் இருந்தா? அவன் செல்லும் திசை சரியா? 

கடல்நீர் தழுவிவரும் குளிர்காற்று அவன் நெஞ்சைத் தடவிச் செல்கிறது. 

உடல் நெளிந்து விறைக்கிறது. 

ஏன் அச்சம் ? 

சற்றுமுன் சாகத் துணிந்த உனக்கு அச்சமேன்? சாகத் துணிந்தவனுக்கு செல்லும் திசை பற்றிக் கவலையேன்? 

மேற்கை நோக்கி சூரியன் சரிந்து கொண்டிருக்கிறது. போக்கு வெயில். தோணியில் இருந்தவாறு அண்ணாந்து பார்க்கிறான். 

அங்கே வான்வெளியின் தாலாட்டாய் வெகுதொலைவில் வட்டமிடும் பருந்துகள். அவை பருந்துகளா அல்லது அவன் விடும் பட்டங்களா? அவன் நெஞ்சில் விண்கூவும் பட்டங்களாய் பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. 

நெஞ்சில் விண்கூவும் பட்டங்களின் கயிறுகள் இன்னும் பூரணமாக அறுபடவில்லை. 

அதுதான் அச்சம்? 

கடலின் தொப்புழ் கொடியாய் இரண்டொரு நரம்புகளில் இன்னும் நின்றாடும் தாழங் கொடிகள். 

சூரியன் வேகமாக மேற்கில் விழுந்து கொண்டிருக்கிறான்.

தூரத்தே பெருகிவரும் இரவின் கரியவாடை, கடல் காற்றில் கனத்து வருகிறது. 

கடலும் இரவும் ஒன்றாகக் கலக்கின்றன. 

அவன் தோணியில் இருந்தவாறே, கணகளை மூடி, கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்து, தன் முழங்கால்களை இரண்டு கைகளாலும் கட்டிக் கொள்கிறான். 

பீதியின் தாக்குதல். 

பீதி தாக்கும்போது, அவன் உடல் அதை எதிர் கொள் ளும் முறையின் இருப்பு அது. 

அவன் உடல், குளிரால் நடுங்குவதுபோல் நடுங்குகின்றது. வானில் அவன் விட்ட பட்டங்களாய் பறந்த பருந்துகள் திடீரென கழுகுகளாய் மாறி அவன் தோணியில் வந்து குந்துகின்றன. 

பிணந்தின்னிக் கழுகுகள்! 

அவன் உடல் இன்னும் வேகமாக நடுங்குகிறது.

அப்போது ஒரு குரல்: 

பருந்துகளும் சரி கழுகுகளும் சரி எல்லாம் ஒன்றுதான். எல்லாம் உன்னைத் தின்ன வந்தவைதான்! 

எங்கிருந்து அந்தக் குரல்? 

வேறெங்கும் இல்லை. அவனுக்குள் இருந்தே வருகிறது.

சிறிது நேரத்தில், அவன் மனம் குலைந்து அந்தரப்பட்ட நிலை மாறி சிறிது சிறிதாக அமைதிக்குள் ஆழ்கிறது. 

அவன் இப்போ பெருகிவந்த பீதியைக் கையில் எடுத்துப் பார்ப்பதுபோல் அமைதியாக விடுபட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். 

திடீரென ஒரு பேரிரைச்சல் எழுகிறது. அவன் முன்னே நேவிப்படகு பெரிதாக இரைந்து கொண்டு அவனைச் சுட்டுத்தள்ளுவது போல் வந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் இப்போ அவன் அசையவில்லை. 

அதே அமைதியோடு பார்த்துக் கொண்டிருந்தான். 

வந்த நேவிப்படகு திசை திரும்பி வேறு பக்கமாகச் சென்று மறைகிறது. 

அது மறைந்து போகும் கடல்வெளி, அவன் நெஞ்ச வெளியாக மாறுகிறது. 

பீதி மறைய 

அந்த வெளியிலிருந்து பெருகிவரும் பெருந்துயர்! 

படம் விரித்தாடும் பாம்பு அவனில் கவிவது போல் அத்துயர் அவனைச் சூழ்கிறது. 

ஆனால் அவன் அசையவில்லை. 

முன்னர் போல் அவன் அத்துயரால் உணர்ச்சி வசப்பட்டு அள்ளுப்படாமல் நிதானமாய் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் மனைவி பெரிதாக வாய்விட்டு அழுவது கேட்கிறது. அதைத் தொடர்ந்து அவன் பிள்ளைகளின் ஓலம். 

அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். 

அவன் முன்னே இன்னும் பல காட்சிகள் எழுகின்றன. 

பாம்பு கடித்து காட்டில் அனாதரவாக இறந்து கிடக்கும் லோகிதாஸன். 

சுடலையில் லோகிதாஸனைக் காவிக்கொண்டு நிற்கும் சந்திரமதி. அவன் நெஞ்சு இளகிவிடும் போன்ற கசிவு. 

ஆனாலும் அவன் அசையவில்லை. 

திடீரென இன்னொரு காட்சி எழுகிறது. 

நடுக்காட்டில், நள்ளிரவில், பாழடைந்த மண்டபத்தில் தமயந்தியை தனியே விட்டு நழுவிப் போகும் நளன், அவனைக்காணாது தவிக்கும் தமயந்தி போல் அவன் மனைவியின் முகம் வந்து வந்து மறைகிறது. 

திடீரென இன்னொரு காட்சி. 

ராணுவ நடவடிக்கைகளால் சிதறிக் கிடக்கும் சடலங்கள்: இளைஞர்கள், பெண்கள், பிள்ளைகள், வயோதிபர்… 

அவன் நெஞ்சுக்குள் ஏதோ திரண்டு கொண்டுவருகிறது.

ஆனால் அவன் அசையாது பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

சிறிது நேரத்தில் 

எல்லாம் அடங்கி, இரவின் பேரமைதி எங்கும். 

அவ்வேளை அவனை அருட்டுமாப்போல் ஓர் உணர்வு. 

அவன் உணர்வுகள் கூர்மையடைந்தபோது, வெகுகாலமாக அடங்கிப் போயிருந்த அந்த இன் கிளுகிளுப்பு, அவனது ஆழப்புதைவிலிருந்து மீண்டும் மேலாடிவருவதை அவன் உணர்ந்தான். 


அவன் தலை நிமிர்ந்து பார்க்கிறான். 

காலைப்புலர்வின் வெண்கோடு அடிவானில் தெரிகிறது. 

அவன் தான் வந்த தோணியை விட்டிறங்கி, கடலின் மறுகரையில் புதுமனிதனாக குந்திக் கொண்டிருக்கிறான். 

அவன் வந்த தோணி, சற்றுத்தூரக்கடலில், துயரில் மிதந்து கொண்டிருப்பது தெரிகிறது. 

அந்தத் தோணியில், அவன் மனைவியும் பிள்ளைகளும் இன்னும் தெரிந்த சில முகங்களும் கண்ணீரில் நீந்துகின்றன. 

அப்போது, ஆற்றுநீரில் அள்ளுப்பட்டுச் செல்லும் தன் மனைவியைப் பார்த்துக் கொண்டு நிற்கும் அகத்திய முனிவரின் காட்சி அவன் முன்! 

அகதிகளை ஏற்றிய தோணிபோல் அவனது பிள்ளைகளும், மனைவியும் நிற்கும் படகு, துயரில் மிதந்து மிதந்து செல்கிறது. 

அவர்கள் பின்னால் அவர்களை நோக்கி உறுமிக்கொண்டு வரும் நேவிக்கப்பல். 

அவனை நோக்கி அவர்கள் பரிதாபமாகக் கைகாட்டி அலறுவது தெரிகிறது. 

மீண்டும் துயர். 

அவன் கடலில் இறங்கி, அவர்களை நோக்கி நடக்கிறான்.

அவர்களை நோக்கி அவன் நடக்க நடக்க, இப்போ அவனில் நீர் ஒட்டாமல் இறங்கி இறங்கி அவனுக்கு வழி விட்டுச் செல்கின்றது. 

– 1986

– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *