கடமை – ஒரு பக்க கதை





தலைவிரி கோலமாய் கண்ணீரும் அழுகையுமாக் கிடந்தாள் சுகந்தி
தீர்ந்து போகிற சோகமா, அவளுக்கு நேர்ந்திருக்கிறது?
ஈடு செய்கிற இழப்பா, அவள் இழப்பு?
கைக்குழந்தையோடு அவளைத் தவிக்கவிட்டு, ஒரு சிறு விபத்தில் பெரிய துன்பத்தைத் தந்துவிட்டுப் போய்விட்டானே அவள் கணவன்.
‘’இனி இருந்து என்ன செய்யப் போகிறோம்? தானாகப் போகாத உயிரை தற்கொலையாய் மாய்த்துக் கொள்ள வேண்டியதுதான்.!’’
எண்ணி எண்ணிக் குமைந்தாள் சுகந்தி.
எதிரில் மாமனார் சந்திரசேகரன் வந்து நின்றார்.
‘’சுகந்தி இப்படியே பட்டினி கெடந்தா எப்படிம்மா? எழுந்து சாப்பிடம்மா உம் பிள்ளை முகத்தைப் பாரும்மா!’’
கலங்கி கண்ணீர்விட்டபடியே தொடர்ந்தார்..!
‘’உன் ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்கணும், உன் மாமி சிறுசாவே போனதும் உன் புருஷனை நானே எவ்வளவோ கஷ்டப்பட்டு வளர்த்தேன்.
கொடுத்து வைக்கலை? இனிமே நீதானே எல்லாம்! நீ இல்லாட்டி உன் பிள்ளை மட்டுமல்ல, நான் – கிழவன் – உன் மாமனாரும் அனாதைதானே? நானும் குழந்தைதானே! ரெண்டு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய கடமை உனக்கு!’’
உடனே எழுந்தாள் சுகந்தி.
எழுப்பி விட்டது கடமை!
– அ.சி.மணியன் (பெப்ரவரி 2013)