கடன் – ஒரு பக்கக் கதை






அப்பா இறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவருடைய டைரியை தற்செயலாய் புரட்டிய நவீன், பல்வேறு தேதிகளில் பெருமாள் 1000, பெருமாள் 2000 என்று எழுதியிருந்ததைப் பார்த்து அதிர்ந்தான். கூட்டிப் பார்த்தால், மொத்த தொகை எழுபதாயிரத்தைத் தாண்டியது.

பெருமாள் அப்பாவின் பால்ய கால நண்பர். அடிக்கடி அப்பாவைப் பார்க்க வீட்டிற்கு வருவார். அழுக்கு வேட்டியும், அழுக்கு சட்டையும் போட்டுக் கொண்டு, பார்க்க பிச்சைக்காரர் போலிருப்பார்.
“கடன் வாங்கிவிட்டு அந்த பெருமாள் அமுக்கமாக இருக்கிறாரே!” என்று வெதும்பிய நவீன், அந்த பெருமாளின் வீட்டிற்கு உடனே கிளம்பினான்.
பெருமாள் வீடு பங்களா டைப்பில் சூப்பராக இருந்தது. “வசதியான ஆள்தான் போலிருக்கிறது. அழுக்கு சட்டை வேட்டி போட்டு அப்பாவை ஏமாத்தியிருக்கிறார்!” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான் நவீன்.
நவீன் அந்த டைரியை எடுத்துக் காட்டியதும், “உன்னைக் கையெடுத்து கும்பிடறேன். உங்க அப்பாவுக்கு நான் கடன் கொடுத்த சிறு சிறு தொகைகளைத் திருப்பிக் கொடுத்து, எங்க நட்பைக் களங்கப்படுத்திடாதே” என்று தழுதழுத்தார் பெருமாள்.
– ஏப்ரல் 2020