கடந்த வியாழக்கிழமை உருவான பிரபஞ்சம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: May 26, 2025
பார்வையிட்டோர்: 4,035 
 
 

“திவ்யன்!” என்று உரக்க அழைத்த கடவுளின் தூதுவரின் குரல் வானுலக அலுவலகம் முழுவதும் எதிரொலித்தது.

ஓட்டமும் நடையுமாக வந்த திவ்யன் தூதுவரின் அறைக்குள் நுழைந்தார். “என்ன சார், கூப்பிட்டீர்களா?”

“கடவுள் அடுத்த வாரம் இங்கு வருகிறார். நாம் படைத்த பிரபஞ்சத்தை நேரடியாக பார்க்க விரும்புகிறார்.”

“சார், என்ன சொல்கிறீர்கள்? வரும் வியாழக்கிழமை தான் நாம் பிரபஞ்சத்தை உருவாக்கவே போகிறோம்.”

தூதுவரின் முகம் மாறியது. “‘வியாழக்கிழமையா? பிரபஞ்சத்தை நாம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே படைத்து விட்டோம் என்றல்லவா நான் கடவுளிடம் சொல்லியிருக்கிறேன்!”

“சார், நீங்கள் கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்கள்…” திவ்யன் தயங்கினார். “பிரபஞ்சத்தை உருவாக்கும் பெருவெடிப்புத் திட்டத்தின் தாமதங்கள் பற்றிய நிலை அறிக்கைகளை நான் தொடர்ந்து உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்!”

“ஹும்… அதை நான் சுத்தமாக மறந்து விட்டேன்,” தன் நாற்காலியில் சோர்வுடன் சரிந்த தூதுவர் பெருமூச்சு விட்டார். “அப்படியென்றால் அடுத்த வாரம் கடவுளுக்குக் காட்ட நம்மிடம் எதுவுமே இல்லையா?”

“அடுத்த வாரம் நம்முடைய பிரபஞ்சத்தை உருவாக்கி நாலைந்து நாட்கள் தான் சார் ஆகியிருக்கும். அத்தனை இளம் வயதில் பிரபஞ்சம் ஒரு புட்பால் சைசுக்குத்தான் இருக்கும். அதற்குள் காட்டுவதற்கு ஒன்றுமே இருக்காது, சார்!”

“ஒரு மாபெரும் பிரபஞ்சத்தை எதிர்பார்த்து வரும் கடவுளிடம் ஒரு புட்பாலை காட்ட முடியாது… அப்படியென்றால் இதற்கு என்ன தான் வழி?”

“சார்… பேசாமல் கடவுளிடம் உண்மையை சொல்லி விடுங்களேன்?”

“யோவ்! புரியாமல் பேசாதீர்,” குரலை தாழ்த்தினார் தூதுவர். “என்னுடைய ஆண்டு இறுதி பெர்பார்மன்ஸ் இன்டெர்வியூ அடுத்த வாரம் நடக்க இருக்கிறது… பிரபஞ்சத்தை காட்டா விட்டால் கடவுள் என்னை கிழித்து விடுவார். கொஞ்சம் யோசித்து நல்ல ஐடியாவாக சொல்லுமையா.”

ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் திவ்யன், “சார், இந்த பிரச்சனைக்கு ஒரே ஒரு தீர்வு இருக்கிறது.” என்றார்.

“என்ன அது?” என்று பிரகாசமானார் தூதுவர்.

“வரும் வியாழக்கிழமை ஒரு முதிர்ந்த பிரபஞ்சத்தை நாம் உருவாக்கி விட்டால் என்ன?”

“அப்படியென்றால்?”

“ஆரம்பத்திலிருந்து தொடங்குவதற்குப் பதிலாக, நாம் முன்னேற்பாடு செய்யப்பட்ட ஒரு முதிர்ந்த பிரபஞ்சத்தை வியாழக்கிழமையன்று உருவாக்கி விடலாம். அதில் விண்மீன் மண்டலங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள், ஏன் உயிரினங்கள் கூட இருக்கும். அது பல பில்லியன் ஆண்டுகள் பழமையானதாகத் தோன்றும்.”

“அப்படி செய்ய முடியுமா?”

“கண்டிப்பாக. பிரபஞ்சத்தை உருவாக்குவது ஒரு மென் பொருள் தானே? அந்த மென் பொருளில் ஒரு சில அமைப்பு அளவுருக்களை மட்டும் மாற்ற வேண்டியிருக்கும்.”

“ஹ்ம்ம். இது கூட நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது,” தூதுவர் தன் மோவாயை தடவிக் கொண்டார். “ஆனால் பூமியில் இருக்கும் மனிதர்களை என்ன செய்வது? அவர்கள் திடீரென்று தோன்றியது போல நடந்து கொள்ள மாட்டார்களா? கடவுள் உடனே அதைக் கவனித்து விடுவார்.”

திவ்யன் இல்லை என்பது போல தலையை அசைத்தார். “நாம் மனிதர்களுக்கு கடந்த கால நினைவுகளைக் கொடுத்து விட்டால் அப்படி நடக்காது. அவர்கள் பூமியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக நம்புவார்கள். மேலும் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் நினைக்க எல்லா ஆதாரங்களையும் நாம் உருவாக்கி விடலாம்.”

“வெரி கிளவர்,” என்று தலையசைத்தார் தூதுவர். “அப்படியே செய்து விடலாம். ஆனால் எல்லா விவரங்களையும் பல முறை சரி பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் . கடவுளுக்கு கூர்மையான கண் உண்டு.”

“நிச்சயமாக, சார். வியாழக்கிழமை நாம் உருவாக்கப் போகும் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்த முடியாதபடி ஆக்கி விடுவோம்.”

“மிக அருமை. திவ்யன்?”

“என்ன சார்?”

“பிரபஞ்சத்தில் சில மர்மங்களையும் சேர்த்துக் கொள். கடவுளுக்கு அதெல்லாம் பிடிக்கும்.”

“செய்து விடலாம் சார்.”

“வெரி குட்.போய் வேலையைத் தொடங்கு.”

திவ்யன் அறையை விட்டு வெளியேற திரும்பியபோது, தூதுவர் மறுபடி கூப்பிட்டார், “ஓ, இன்னொரு விஷயம்.”

“சார்?”

“இது நமக்குள்ளேயே இருக்கட்டும், சரியா? வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்.”

திவ்யன் தலையசைத்தார். “புரிகிறது, சார்.”


இந்தக் கதை “Last Thursdayism” என்னும் தியரியை அடிப்படையாகக் கொண்டது. அந்த தியரியை பற்றி தெரிந்த கொள்ள நீங்கள் இங்கு செல்லலாம் – https://rationalwiki.org/wiki/Last_Thursdayism

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *