ஓர் எலிக் குடும்பம்




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அழகிய தோட்டம் அழகிய மரங்கள், செடிகள் கொடிகள் செறிந்த சோலை; சோலையின் நடுவே மாடி வீடு. மாடி வீட்டுச் சமையல் அறையின் கோடியில் இருந்தது ஒருசிறு எலிவளை; அவ்வளை உள்ளே வாழ்ந்தன எலிகள். தகப்பன் எலியும் தாய்எலி ஒன்றும், மின்னி, சின்னி என்றிரு குஞ்சும் வளையல் குடும்பமாய் வாழ்ந்து வந்தன.
மின்னிக் குஞ்சி பெரியது, துடுக்கு; சின்னிக் குஞ்சி சிறியது, அடக்கம்; ஆயினும் இரண்டும் அன்பாய் இருந்தன. தந்தை எலியும், தாய் எலியும்
ஒருநாள் இரைக்கு வெளியே கிளம்பின.
“அப்பா நானும்,” என்றது மின்னி.
“வேண்டா மின்னி! வேண்டா நில்லு; தங்கை சின்னி தனியாய் வருந்தும்; இருவரும் இருங்கள்,” என்றது தாய்எலி.
சின்னி கேட்டு ஒப்புக் கொண்டது;
அம்மா சொற்படி இருப்போம் என்றது; மின்னி பிடியாய் முரண்டி நின்றது. தந்தை எலியும் தடுத்து, “மின்னி! வெளியில் பூனை பொறிகள் உண்டு; வளையை விட்டு வராதே,” என்றது.
பெரிய எலிகள் போனதும், மின்னி, “நாமும் வெளியே செல்வோம்,” என்றது. தனிமை அஞ்சித் தொடர்ந்தது சின்னி.
வளையின் வெளியே வந்து நின்றன; எங்கும் நோக்கின யாரும் இல்லை. எதிரே கூடம் எங்கும் சாமான். வழுவழுப்பாக இருந்தது கற்றரை; அதன்மேற் செல்ல ஆசை எழுந்தது; தவழ்ந்து நேரே சென்றன இரண்டும். “அச்சம் இல்லையா? அண்ணா உனக்கு,” என்றது சின்னி; அச்சமா அச்சம்! என்று மின்னி எடுப்பாய்ப் போனது.
எதிரே இருந்தது ஓர் அலமாரி; கதவு சிறிது திறந்து கிடந்தது; தாவி உள்ளே குதித்தது மின்னி. தத்தித் தொத்திச் சின்னியுஞ் சென்றது; கிண்ணம் நிறைய வெண்ணெய் இருந்தது; தட்டு நிறையத் தித்திப் பிருந்தது. வளையில் இருந்தால் என்ன கிடைக்கும்? இங்கே நிறையத் தின்னலாம் என்று துள்ளிக் குதித்து இரண்டும் தின்றன.
“போதும் போதும், போவோம் வா நீ; அம்மா வந்தால் அடிப்பள் வைவள்,’ என்றது சின்னி; இகழ்ந்தது மின்னி; பக்கத்தில் ஒரு மரவை இருந்தது; மஞ்சள் தூள் அதில் நிறையத் தெரிந்தது. மூக்கை நீட்டி மின்னி மோந்தது. நீட்டிய மூக்கில் நிறைந்தது மஞ்சள்; தப்பிக் கீழே குதித்தது மின்னி; சின்னி துடித்துப் பின்னே விழுந்தது!

மிளகு கவிழ்ந்தது நெடி மிகுந்தது; ஆஸ், உஸ் என்று தும்மின விம்மின; பூனை ஒன்று மெள்ள வந்தது. தும்மித் துடித்த எலிகளைக் கண்டு பூனையும் உள்ளே பாய்ந்து விசையாய்; தடதட என்றே உருண்டன டப்பிகள் தடதட ஓசை கேட்டதும், சிறுவர் மடமட என்று உள்ளே வந்தனர்; கண்ட இரண்டும் கலங்கித் திகைத்தன.
அருகில் சிறுவர் நெருங்கி விட்டனர்; தா! தூ! என்று தாவிக் கிட்டினர்; மின்னியுஞ் சின்னியும் அலறி உருண்டன. உருண்டு சிறுவர் காலில் சிக்கின; மருண்டு அவரும் உதறித் தள்ளினர்; அள்ளிச் சுருண்டு அப்பால் விழுந்தன. விழுந்து மூலையில் ஒளிந்த மின்னியைப் பூனை குறியாய் உறுத்துப் பார்த்தது; மின்னி பதறி ஓட்டம் எடுத்தது.
ஓட்டம் ! ஓட்டம் ! ஒரே ! ஓட்டம்! ம் மின்னி ஒருபுறம்; பூனை ஒருபுறம்! சின்னி ஒருபுறம்; சிறுவர் ஒருபுறம் ! அச்சம்! அச்சம் ! ஒரே அச்சம்! உடம்பு உதறல் உள்ளம் நடுக்கம்! “செய்வது யாது” என்று தவித்தன. இதற்குள் இரைக்குப் போன எலிகள், வளைக்குள் வந்து குஞ்சுகள் இன்றிப் பதைப்புடன் திரும்பி, இடையிற் பாய்ந்தன.
எதனைப் பிடிப்பது? எதனை விடுவது ! பூ ஆனைக்கு ஒன்றும் புரிய இல்லை? சிறுவர் இங்கும் அங்கும் துள்ளினர். பூனை திகைத்தது ஒரு நொடிப் பொழுது; சிறுவர் திகைத்தனர் மறுநொடிப்பொழுது; ஆயினும் எலிக்கு அந்நொடிப் போதும். “தப்பினோம் பிழைத்தோம்,” என்று குஞ்சுகள் தத்தித் தெத்தி வளையுள் நுழைந்ததும் தாயுந் தந்தையும் தொடர்ந்து புகுந்தன.
மின்னியும் சின்னியும் வளையுள் நுழைந்ததும் அஞ்சிப் பதுங்கி ஒதுங்கி நின்றன ; தாயும் தந்தையும் சீறி நோக்கின. “பெற்றோர் சொல்லைத் தட்டி நடந்தது குற்றம் குற்றம் பெரிய குற்றம்,” என்று குஞ்சுகள் இரண்டும் நடுங்கின, நடுங்கி நின்ற மின்னியைத் தந்தை “ஒடுங்கி உள்ளிரு என்றால், நீயேன் துணிந்து வெளியே காலை வைத்தாய்? அதிலும் முதலில் அலமாரி உள்ளே ஆத்திரப்பட்டுப் புகுவது சரியா? பூனை கண்டால் சும்மா விடுமா? ஓடித் தப்ப வகையில்லாமல் வெளியே செல்வது முறையா? சரியா?” என்று சினந்து கடிந்தது குஞ்சியை. “இதுவே பாடம் இவ்விரண் டிற்கும் போதும் பட்டது,” என்றது தாய்எலி; இரண்டும் அதுமுதல் திருந்தி மகிழ்ந்தன.
– கழகக் கதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: ஜனவரி 1951, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.