ஒரு முத்தம்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 13,012
சென்னையை நோக்கி வேன் படு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் என, ஊர்கள் சரசரவென பின்னுக்குச் சென்றன. டிரைவர் அருகில், அமர்ந்து இருந்ததால் வேகம் அதீதத்தை தொடும்போது அவரைப் பார்ப்பதும் எனது பார்வையை உணர்ந்து டிரைவர் வேகத்தை மட்டுப்படுத்துவதுமாக இருந்தார்.
விபத்தில் பலியான ஒரு சோகத்தை நோக்கி செல்லும்போது நிதானம் தேவை என்பதை எனது நிருபர் மூளை எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தது. வேனில் இருந்த யாரும் அதன் வேகத்தைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. எட்டு பேரில் இருவர் மயக்க நிலையில். மற்ற மூவர் உச்ச சோகத்தில். ரவி மட்டும் விசும்பலுடன் எனது கையைப் பிடிப்பதும், நான் அவனை சமாதானப்படுத்துவதுமாக பயணம் மிக மிக இறுக்கத்தில்.
தினம் காலை மொபட்டில் ஊரை ஒரு ரவுண்ட் வருவது வழக்கம். நிருபருக்குரிய அடிப்படை கடமை. பன்னிரண்டு மணிக்குள் எனது பணி எல்லைக்குள் அன்றைய செய்திகளைக் கணினியில் உள்ளிட்டு இணையம் மூலமாக தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும். காவல் நிலையம், எம்.எல்.ஏ. அலுவலகம், பிஆர்ஓ அலுவலகம் மூன்று இடங்களுக்கும் சென்று செய்தி இருக்கிறதா, பத்திரிகை குறிப்பு ஏதாவது உண்டா என்று கேட்க வேண்டும். அப்படியான தினசரி ரோந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போதுதான் ரவியைப் பார்த்தேன். ரவி பள்ளிப்பருவத்து நண்பன்.
மொபட்டை நிறுத்திவிட்டு ஊர் விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தபோது அவனது செல்லிடப் பேசி ஒலித்தது. எடுத்துப் பேசியவன் முகத்தில் முதலில் குழப்பக் கோடுகள். பிறகு அவனது விரல்கள் நடுங்கியதை உணர்ந்தேன்.
ஏதும் புரியாமல் என்னைப் பார்த்தவன், செல்லிடப் பேசியை என்னிடம் நீட்டினான்.
நான் எதற்காக என்னிடம் தருகிறான்? என்கிற குழப்பத்தினூடே, வாங்கி காதில் பொருத்தினேன்.
“”சார்… சார்… ரவி சார்…” மறுமுனைக் குரலில் ஒரு வித பதற்றம்.
“”இது ரவியோட மொபைல்தான்… நான் அவரு ஃபிரெண்ட்… பேரு மோகன். ரிப்போர்ட்டரா இருக்கேன்… நீங்க யாரு?…”
“”ரவி சார் இல்லையா?”
“”இருக்காருங்க… நீங்க யாருன்னு சொல்லுங்க..”
“”சார்… நான் சென்னைலேந்து பேசறேன். அவரோட மச்சான் வெங்கட்டோட பிரெண்டு. என் பேரு மாதவன்… நான் வெங்கட்டோட ரூம் மேட்… போன தடவை சென்னைக்கு வந்தப்ப ரவி சார்தான் இந்த நம்பர் கொடுத்தாரு…”
“”சொல்லுங்க மாதவன். ரவி பக்கத்துலதான் இருக்காரு…என்ன விஷயம்?”
குரல் தயங்கித் தயங்கிப் பேசியது.
“”இங்க வெங்கட்டுக்கு ஆக்ஸிடெண்ட்… எலெக்ட்ரிக் டிரெயின்லேந்து விழுந்து.. மண்டைல அடி…”
எனக்குள் சரசரவென ஏதோ ஓடியது. ரவியைக் கவனித்தேன். அவன் செல்லிடப் பேசியை என்னிடம் கொடுத்ததற்கான காரணம் புரிந்தது. என்னையே பார்த்தபடி இருந்த அவன் முகம் இருண்டு போயிருந்தது.
செய்தியின் தாக்கமும் அது மறைத்திருக்கும் விபரீதமும் எனக்குள் இறங்க… காலை நேரத்தில் அன்றைய பொழுதின் நிகழ்வுகள் அசாதாரணமாய் இருக்கப் போகிறது என்பதை எனது புலன்கள் உணரத் தொடங்கின.
நான் சுதாரித்து, நிதானமாய்ப் பேசினேன்.
“”மிஸ்டர் மாதவன்.. இப்ப வெங்கட் எப்படி இருக்காரு…?”
மறுமுனையில் தேக்கி வைக்கப்பட்ட அமைதி.
அந்த அமைதி ஒளித்து வைத்திருக்கும் அதிர்ச்சியையும் அது வெளிப்படுத்தப்போகும் அதிர்வுகளையும் நான் முழுவதுமாய் உணர்ந்தேன்.
“”செத்துட்டான் சார்…”
குரல் உடைந்து அழுதான்.
செல்போனை காதிலிருந்து எடுத்து எதிரே நின்ற ரவியைப் பார்த்தேன்.
அவன் வாய் கோணிக்கொண்டு அழுகைக்குத் தயாரானது.
கண்களில் சொரேரென நீர் சுரந்தது.
“”மிஸ்டர் மாதவன்… இது உங்க நம்பர்தானே…”
“”ஆமாம் சார்…”
“”அஞ்சு நிமிஷத்துல உங்கள கூப்பிடறேன்… எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுது…”
“”சரி சார்..”
செல்லிடப்பேசியை அணைத்தேன்.
“”என்னடா சொல்றாங்க?”
ரவி பதற்றமாகக் கேட்டான்.
நான் ரவியின் தோளைப் பிடித்தேன்.
“”ரவி…ரொம்ப ரொம்ப அதிர்ச்சியான தகவல்…மனச திடப்படுத்திக்கோ… உன் மச்சான் வெங்கட்… சிகப்பா அழகா… உன் ஆபீஸ்ல அறிமுகப்படுத்தி வச்சியே அவன்தானே…”
“”ஆமான்டா… என்னடா… என்னடா ஆச்சு?”
செய்தி புரிந்தும், அப்படி ஏதும் இருக்கக்கூடாது என்கிற நப்பாசையிலும்
நலிந்த எதிர்பார்ப்பிலும் கேட்டான்.
“”எலெக்ட்ரிக் டிரெயின்ல அடிபட்டு செத்துட்டானாம்…”
“”ஐயைய்யோ…” அலறினான், தேம்பி தேம்பி அழத் தொடங்கினான். எனக்கு அந்த சந்தர்ப்பம் சங்கடமாய் இருந்தது. சில விநாடிகளில் மாறிப்போன சூழ்நிலை உடம்புக்குள் ஒருவித படபடப்பை ஏற்படுத்தியது. மொபட்டை நிறுத்திவிட்டு அவனை ஓரங்கட்டி அழைத்துப் போனேன்,
“”ரவி அழாதே… அழாதே…தைரியமா இரு…”
தெரிந்த டீ கடையில் அமர வைத்தேன். அங்கிருந்தவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள்.
எனது தோளில் சாய்ந்து சில நிமிடங்கள் குலுங்கினான். மூக்கில், கண்களில் நீர் ஒழுகப் பேசினான்.
“”இப்ப என்னடா பண்றது… என் பொண்டாட்டி… அவங்கப்பா அம்மாகிட்ட இத எப்படிடா சொல்லுவேன்?… தாங்க மாட்டாங்கடா…..”
“”கொஞ்சம் பொறு… முதல்ல எங்க எப்படின்னு நான் டீடெயில் கேட்டுக்கிறேன்…”
நான் மாதவனை அழைத்தேன்.
முதல் ரிங்லேயே எடுத்தான்.
“”சொல்லுங்க சார்…”
“”ஆக்ஸிடெண்ட் எப்படி நடந்துச்சு… இப்ப பாடி எங்க இருக்கு?”
“”நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல பிளாட்பாரத்து ஓரமா செல்போன்ல பேசிகிட்டே நடந்திருக்கான்… டிரெயின் வந்தது தெரியாம… மோதின வேகத்துல தூக்கி எறிஞ்சதுல முதுகெலும்பு மண்டைல அடிபட்டு…”
இப்போது வெங்கட் மீது எனக்கு கோபம் வந்தது. தினசரி நாட்டு நடப்பில் ஒன்றான செய்தி. வாகனத்தில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும் செல்போனில் பேச்சு. முழுக்க முழுக்க அலட்சியம்.
“”பாடி ஜி எச்ல இருக்கு…. பேரண்ட்ஸ்
இல்லாட்டி ரிலேட்டிவ்ஸ் யாராவது வரணும்… நான் எங்க ஆபீஸ் மூலமா சில முயற்சிகள் எடுத்து போஸ்ட்மார்ட்டத்துக்கு ரெடி பண்ணிட்டு இருக்கேன்.. பட் அவங்க வந்தாங்கன்னா… இல்ல யாரையாவது இங்க வரச் சொன்னாங்கன்னா எல்லாம் வேகமா நடக்கும்…. சில ஃபார்மாலிட்டீஸ் முடிக்கணும்…”
“”மாதவன்.. நான் குடவாசல் ஏரியா ரிப்போர்ட்டர்… இப்ப எங்க ஆபீஸ்லேந்து சீனியர் கரெஸ்பாண்டண்ட், என் ஃபிரெண்ட் பிரசன்னான்னு ஒருத்தர் உங்களுக்குப் பேசுவாரு… நீங்க எங்க இருக்கீங்க?”
“”நானும், பிரெண்ட்ஸம் ஜிஎச்ல இருக்கோம்”
“”அங்கேயே இருங்க… அவர அங்க வரச் சொல்றேன்… வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுவாரு”
“”ஓகே சார்..”
செல்லிடப்பேசியை அணைத்தேன்.
பிரசன்னாவை செல்போனில் பிடித்து விவரம் சொன்னேன். “”உங்களைப் போல நெருங்கிய நண்பனொருவரின் மைத்துனர். அசம்பாவிதம் நடந்து விட்டது. உங்கள் உதவி தேவை” என்றேன். மாதவன் நம்பர் கொடுத்தேன்.
“”நான் பார்த்துக் கொள்கிறேன்” நம்பிக்கையூட்டினார்.
சூழ்நிலையை எப்படிக் கையாளலாம்? யோசித்தேன்.
எனக்கும் வெங்கட்டுக்கும் பொதுவான நண்பர்களை அழைத்தேன். விவரம் சொல்லி டீ கடைக்கு வரச் சொன்னேன். நடந்த சோகத்தை அனைவரும் பகிர்ந்து ரவியைத் தேற்றிய பிறகு, அவன் வீட்டில் எப்படி நாசூக்காக இந்தத் தகவலைச் சொல்லலாம் என்று யோசித்தோம். ரவியின் நெருங்கிய உறவினர்களை அழைத்து முதலில் அவர்களிடம் விவரத்தைச் சொல்லி அவர்களைத் தயார்படுத்தினோம். சென்னைக்குப் புறப்பட வேன் ஏற்பாடு செய்தோம். குடவாசலில் இருந்த வெங்கட்டுவின் வீட்டுக்குச் சென்றோம்.
வெங்கட் தயங்கி தயங்கி அவன் மனைவியிடம் செய்தியைச் சொல்ல… அவள் மயங்கி சரிந்தாள்.
மயக்கத்தைத் தெளிவித்து காரில் ஏற்றி அனைவருமாக இருபது கிலோமீட்டர் தொலைவில்… கும்பகோணம் நோக்கி வெங்கட் பிறந்த திருச்சேறை கிராமம் நோக்கிப் புறப்பட்டோம்.
வெங்கட்டின் வீட்டில் அனைவரும் கதறித் தீர்த்தார்கள். சில நிமிடங்களில் ஊர் கூடியது. வெங்கட் அம்மா, அப்பா மயங்கி சரிந்தார்கள். தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்த… சுவரில் இருந்த மகனின் புகைப்படத்தில் முகம் சாய்த்து நெற்றியில் முத்தமிட்டு கதறித் தீர்த்தாள். நீண்ட போராட்டத்திற்குப் பின் வீட்டின் ஒரே ஆண் மகனுக்கு வேலை கிடைத்து முதல் மாசம் சம்பளம் வாங்கிய தகவலை வீட்டுக்குத் தெரிவித்து வாரக் கடைசியில் வீட்டுக்கு வரவிருந்தவனை வரவேற்கத் தயாராக இருந்தவர்களை அவனின் மரணச் செய்தி புரட்டிப் போட்டது. இழப்பின் தாக்கம் கபாலத்தில் அறைந்து இதயத்தைப் பிளந்தது. யாரை? எப்படி? சமாதானப்படுத்துவதென்றே தெரியவில்லை. அழுகைச் சத்தத்தில் வீடு இரண்டானது. அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் திரண்டு வர… நண்பர்கள் ஓடி வர… அனைவருமாக ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கதறி துடித்து…
இருபத்து மூன்று வயது இளைஞனின் பரிதாப மரணத்தை, இழப்பை உணர்ந்து சுற்றமும் நட்பும் திகைத்து, திண்டாடி திணறித் தீர்த்தது.
“”யப்பா… தம்பி.. நீ தலையெடுத்து குடும்பத்தை தூக்கி நிறுத்துவேன்னு நெனச்சேனே… இப்படி பொணமா வந்து விழுந்து அடி வயித்த பத்தி எரிய வச்சிட்டியே… தம்பி வெங்கட்டு உனக்கு பொண்ணு பார்க்கணும்னு நெனச்சிருந்தேனடா… இப்படி பாடை கட்ட வச்சிட்டியே…”
அம்மா கதறிய கதறலில் சொந்தம் நட்பு சுற்றம் தாண்டி அனைவர் கண்களில் கண்ணீர் கசிந்தது.
சென்னை அரசு பொது மருத்துவமனையை நாங்கள் அடைந்தபோது பிரசன்னாவின் முயற்சியால், போஸ்ட்மார்ட்டம் முடிந்து பாடி தயார் நிலையில் இருந்தது.
வெங்கட்டின் நண்பர்கள் எங்களை அழுகையுடன் எதிர் கொண்டார்கள். வேனில் வந்திருந்த வெங்கட்டின் உறவினர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
நடந்த சம்பவத்தை அவர்களிடம் விளக்கினார்கள். ரயில்வே காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த விதத்தை உறுதிப்படுத்தினார்கள்.
காவல்துறை ஃபார்மாலிடிஸ் நடந்து கொண்டிருக்க.. நான் மாதவனைத் தனியாக அழைத்துச் சென்றேன்.
“”என்ன நடந்துச்சு மாதவன்?”
“”சார் வெங்கட் கொஞ்ச நாளா யாரோ ஒரு பொண்ணுகூட பழகிட்டு இருந்தான். எப்பவும் செல்போன்ல வெறும் பேச்சு மட்டுமா… இல்ல பழக்கமான்னு தெரியல.. ஏன்னா நேத்து நான் ஏதேச்சையா இதப்பத்தி அவன்கிட்ட விசாரிச்சப்ப இன்னும் நேர்ல பார்த்துக்கவே இல்லேன்னான்… ரூம்ல டே அண்ட் நைட்டு அந்த பொண்ணுகூட மணிக்கணக்கா பேசுவான்…”
நான் மாதவனையே பார்த்தபடி இருந்தேன்.
“”நுங்கம்பாக்கத்துல எட்டு மணி டிரெயின்ல ஏறுவான்… எனக்கு எட்டரை மணி டிரெயின்… பிளாட்பாரத்துல நடந்தபடி ரொம்ப நேரமா செல்போன்ல பேசிகிட்டு இருந்திருக்கான்… இத நிறைய பேர் கவனிச்சிக்கிட்டு இருந்திருக்காங்க… அந்த பொண்ணுகிட்டத்தான் பேசிகிட்டு இருந்திருப்பான்னு நெனக்கிறேன்… பின்னால டிரெயின் வர்ற சத்தத்தைக் கவனிக்காம இருந்திட்டான்…”
“”வெங்கட் செல்போன் எங்க…”
“”விழுந்த வேகத்துல சிதறிப் போயிட்டு சார்… சிம்கார்ட் கூட கிடைக்கல…”
நான் யோசித்தேன்.
“”அந்தப் பொண்ணை உங்களுக்குத் தெரியுமா?”
“”தெரியாது சார்…”
“”என்ன மோகன்?”
பிரசன்னா அருகில் வந்தார்.
“”பிரசன்னா… வெங்கட் ஒரு பொண்ணுகூட பழகிட்டு இருந்திருக்கான்…
இன்சிடெண்ட் நடந்தப்ப அந்தப் பொண்ணுக்கூடத்தான் பேசிகிட்டு இருந்திருப்பான்னு நெனக்கிறேன்… மணிக்கணக்கா செல்போன்ல பேசுவானாம்… லவ்வா இருக்குமோ..? இந்தத் தகவல் அந்தப் பொண்ணுக்கு தெரியுமா?”
“”ஈவினிங் பேப்பர்ல நியூஸ் பிளாஷ் ஆவும்.. நாளைக்கு நம்ம பேப்பர்ல ஃபோட்டோவோட போடுவோம்…”
எனக்கு அந்த விநாடி குழப்பமாக இருந்தது. நண்பனின் மைத்துனன். விபத்தில் அகால மரணம். என்னாலான உதவியைச் செய்து விட்டேன். இதோடு விட்டுவிட்டுப் போய்விடலாமா… அல்லது தார்மீகரீதியாக பொறுப்பேற்று வெங்கட்டோடு, அவனது மரணத்தோடு தொடர்புடைய அந்தப் பெண்ணுக்குத் தகவல் சொல்லலாமா?
யோசித்தேன். அழகான இளைஞன். பெண்களைச் சுலபமாக வசீகரிக்கக் கூடியவன். காதல் வலையில் வீழ்வதற்கு நிறையவே வாய்ப்புண்டு. ஒரு வேளை ஆழமான காதலாக இருந்து… அந்தப் பெண்ணுக்குத் தகவல் தெரியாமலே போய்விட்டால்… அவளுக்கு வெங்கட் விலாசம் தெரியுமா? பிற்பாடு அவனிடமிருந்து செல்லிடப் பேசி அழைப்பு இல்லாமல் அவனது அறைக்குத் தேடி வந்து.. விஷயம் தெரிந்து…
இப்போது தெரிந்தால் பாடியை பார்ப்பதற்காவது வாய்ப்புண்டு.
சட்டென்று அந்த முடிவுக்கு வந்தேன்.
“”பேப்பர்ல மிஸ் ஆக சான்ஸ் உண்டு… அந்தப் பொண்ணுக்குத் தகவல் சொல்லணும்.. ஏதாவது வாய்ப்பிருக்கா?”
“”அது பெரிய விஷயமே இல்ல… கமிஷனர் ஆபீஸ்ல எனக்கு வேண்டப்பட்டவர் ஒருத்தர் இருக்காரு… வெங்கட் நம்பர் கொடுத்தா, சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனத்துல பேசி அவன் கடைசியா பேசின நம்பர், மெúஸஜ் டீடெயில்ஸ் எல்லாம் வாங்கிடுவாரு.. அவசியம் தேவையா என்ன?”
“”டிரெயின் வர்றதுகூட தெரியாம,… சுவாரஸ்யமா பேசியிருக்கான்… அப்ப முக்கியமான பொண்ணுதானே… ஒரு விஷயத்த பாதியிலேயே விட்டுட்டுப் போறது நிருபருக்கு அழகில்ல பிரசன்னா… உங்களால இந்த விஷயத்துல எனக்கு உதவ முடியுமா…?”
“”நிச்சயமா முடியும்…”
வெங்கட் நம்பர் வாங்கி, பிரசன்னாவிடம் கொடுத்தேன்.,
காலைல டீடெயில் வாங்கிடலாம்.
ஃபார்மாலிட்டீஸ் முடிந்து பாடியை வேனில் ஏற்றி ரவியை சமாதானப்படுத்தி தங்கை வீட்டுக்குப் போய்விட்டு காலையில் ஊருக்கு வருவதாகச் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
எங்களது நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெங்கட்டின் அகால மரணச் செய்தி புகைப்படத்தோடு பதிவாகி இருந்தது. காலையில் அதை படித்துக் கொண்டிருக்கும்போதே பிரசன்னா என்னை அழைத்தார்.
எனது இணைய முகவரிக்கு கமிஷனர் அலுவலக நண்பரிடமிருந்து வாங்கிய வெங்கட்டின் செல்லிடப்பேசி விவரங்களை அனுப்பி இருப்பதாகச் சொன்னார்.
தங்கை வீட்டு கணினியை உயிர்ப்பித்து ஆராய்ந்தேன்,
பிரசன்னா அனுப்பிய விவரங்கள் இருந்தன.
கடைசியாக, விபத்து நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் ஒரு நம்பருக்கு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பேசியிருந்தான். அந்த நம்பரோடு பேசிக் கொண்டிருந்தபோதுதான் விபத்து நடந்திருக்க வேண்டும்.
அதே எண்ணுக்கு அதிகாலையில் ஒரு குறுந்தகவலும் அனுப்பி இருந்தான்.
“என் முதல் சம்பளத்தில் உனக்கு வாங்கி அனுப்பியிருந்த ஜீன்ஸýம், சுரிதாரும், மேக்கப் செட்டும், வாட்ச்சும் எப்படி?”
அவள் “வெரி நைஸ்’ என்று பதில் அனுப்பி இருந்தாள்.
“இரண்டு மாதங்களாக செல்போனிலேயே பேசிக் கொண்டிருக்கிறோமே… இன்றைக்கு மாலை சந்திக்கலாமா? அட்லீஸ்ட் ஒரு முத்தம் கைகளிலாவது கிடைக்குமா?’ என்று அடுத்த குறுந்தகவலில் கேட்டிருந்தான்.
“பார்க்கலாம்’ என்று பதிலுரைத்திருந்தாள்.
உயிரோடு இருந்திருந்தால் வெங்கட் ஆசைப்பட்ட முத்தம் இன்றைக்கு கிடைத்திருக்குமா? அந்த எதிர்பார்ப்போடுதான் முக்கால் மணி நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்தானோ..?
இருபத்து மூன்று வயது இளைஞனிடம் எவ்வளவு ஆசைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் நிறைந்திருக்கும்… வாலிப கால தாகங்கள் புதைந்திருக்கும்… அத்தனையும் தரைமட்டமா?
அந்தப் பெண் இந்நேரம் பேப்பர் பார்த்திருப்பாளா…?
தனது அன்புக்குரியவனின் மரணத்தைத் தெரிந்திருப்பாளா… அழுது அரற்றி துடித்திருப்பாளா?
நான் அந்த நம்பரை எனது செல்லிடப்பேசியில் பதிந்தேன்.
ஏனோ ஒருவித குறுகுறுப்போடு நம்பர்களை அழுத்தினேன்.
காலர் ட்யூனாக ஹாரீஸ் ஜெயராஜ் மெல்லிசைத்தார்.
பட்டென செல் எடுக்கப்பட்டு “”ஹலோ…”
பெண் குரல். தயக்கமாகப் பேசினேன்.
“”மேடம்… நான் வெங்கட் ஃபிரெண்ட்… என் பெயர் மோகன், செய்தி தெரியுமா?”
“”ஹலோ நீங்கள் யார்…என்ன செய்தி?”
நிதானமாக, அழுத்தமாகப் பேசினேன்,.
“”என் பெயர் மோகன்… உங்கள் காதலர் வெங்கட் ஃபிரெண்ட்… நேற்று ஒரு விபத்தில் வெங்கட் இறந்து போய் விட்டார். இன்று அவரது சொந்த ஊர் கும்பகோணத்துக்கு அருகே….”
“”சாரி… ராங் நம்பர்”
“பளிச்’சென இணைப்பு துண்டிக்கப்பட்டது.
– பெப்ரவரி 2014