ஒரு தலை காதல்





அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

காலேஜில் ஃபேர் வெல்லை(fare well) நண்பர்களோடு கொண்டாடி விட்டு வீட்டுக்கு வருகிறான் ஹரி. வீட்டிற்குள் வந்ததும், டிவியில் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல…! திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல…! என்ற பாடலை அம்மா ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார். ஹரி சோஃபாவில் அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்து தோள்பட்டையில் சாய்கிறான். தன் மகனின் தலை முடியை கையால் கோதியவாரே, “ஹரி எப்படிடா போச்சு கடைசி நாள் கொண்டாட்டம்?”
அம்மாவின் தோள்பட்டையில் சாய்ந்தவரே, “நல்லா தாமா போச்சு..! கண்ண மூடி கண்ண தொறக்குறதுக்குள்ளயும் இந்த மூணு வருஷம் ஓடிருச்சும்மா.. அத நெனைச்சா தா ஃபீலிங்கா
இருக்கும்மா..!”
“சரி விடுடா கவலப்படாத…! மேக்கொண்டு ரெண்டு வருஷம் அந்த காலேஜில்ல தான படிக்கப் போற அப்பறம் என்ன?”
“மேக்கொண்டு படிச்சாலும் ஏங் கூட படிச்சவங்க எல்லாரும் வருவாங்களாக்கும்..?”
அதற்கு அம்மா,“நம்ம கூட இருக்கிறவங்க கடைசி வர வரமாட்டாங்ககுறத புரிஞ்சுகிட்டு நாம தா பக்குவப்பட்டு போயிறணும்யா..!” என்று கூறி டீ போட செல்கிறார். அப்படியே ஹரியும் டிவியில் ஓடும் பாட்டை பார்க்கிறான். அப்போது டிவி பக்கத்தில் தனது டைரியை பார்த்து பதறியவாரே,“ம்மா ஏ டைரி எப்படி இங்க வந்துச்சு?”
“அந்த ஆளு தா எடுத்தாரு”
இதைக் கேட்டு ஹரி வெடவெடத்து போகிறான். பதட்டத்துடன், “ம்மா… அப்பாவா எடுத்தார்ரு..?”
“ம்.. ஆமாண்டா.. ஏ இப்ப பயப்படுற..! டைரியில அப்படி என்னத்த எழுதி வச்சிருக்க?”
‘எல்லாத்தையும் படிச்சிருப்பாரோ..! லவ் மேட்ரு தெரிஞ்சிருக்குமோ..?’என்று எண்ணிக்கொண்டு, “ஒன்னும் எழுதலம்மா..!சும்மா தா கேட்டேன்..!” என்று மழுப்பி விடுகிறான். அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வருவதற்கு ஏழு மணி ஆகும். அதற்கிடையில் ஹரிக்கு அப்பாவை நினைத்து வயிறு கலங்குகிறது..!
‘வீட்டுக்கு வந்து என்னன்ன சொல்ல போறாரோ?’என்று குழம்பி தவிக்கிறான். சரியாக 6:30 மணியளவில், “ஹரி.. வாசலையே வெறிக்க வெறிக்க பாக்குறயே.. என்னாச்சு?”என்று
அம்மா கேட்டதற்கு,“ஒன்னுமில்ல தாயி சும்மாதா பாக்குறேன்” என்கிறான்.
சிறிது நேரம் கழித்து, ஊரையே எழுப்பி விடும் அளவிற்கு வரும் சத்தத்தோடு, எக்ஸலில் அப்பா தூரத்தில் வருவது ஹரிக்கு கேட்கிறது.
சுந்தரம் எக்ஸலை வாசலுக்கு முன் நிறுத்திவிட்டு, “மஞ்சுளா.. மஞ்சுளா.. வெளிய வா”
இதைக் கேட்டு வெளியே வந்த மஞ்சுளா, “என்னங்க என்னாச்சு? சட்டையில ரத்தமா இருக்கு..!” என்று பதறுகிறார்.
அப்பாவிற்கு பயந்து வீட்டிற்குள் இருந்த ஹரி திடுக்கிட்டு வெளியே வந்து, “ப்பா.. என்னாச்சுப்பா?”
அதற்கு சுந்தரமோ, “வர்ற வழியில ஒரு ஆக்சிடெண்ட்டு, யாருன்னு தெரியல பாவம்..! அப்புறம் நா தான் ஆம்புலன்ஸ்சுக்கு போன் பண்ணி வந்ததும், ஏத்திவிட்டு வரேன்..!”
“அவருக்கு ரொம்ப அடியாங்க..!”
“கை கால்ல தா அடி..! மத்தபடி ஒன்னுல்ல.. சரி மஞ்சுளா சுடுதண்ணி போடு குளிச்சிட்டு உள்ள வரேன்”
ஹரி தயங்கி தயங்கி அப்பாவிடம், “ப்பா.. என்னோட டைரிய பாத்தியாப்பா?”
“டிவி பக்கத்துல தா இருக்குடா.. அதை ஏ திருட்டு முழியோட கேக்குற?”
“ஒன்னுமில்லப்பா நா போய் எடுத்துக்கிறேன்..!” என்று கூறி வீட்டுக்குள் செல்கிறான்.
இருந்தும் பயம் குறையவில்லை.
சுந்தரம் குளித்து முடித்துவிட்டு உள்ளே வருகிறார். பின் மூன்று பேரும் ஒன்றாக சாப்பிடுகிறார்கள்.
11 மணியளவில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சுந்தரம் மஞ்சுளாவிடம், “மஞ்சு நம்ம புள்ள தீபிகாங்கிற பொண்ண லவ் பண்றாம் போல…! அவன் டைரிய படிச்சு பாத்தேன்..!”
ஆச்சரியத்தில், “என்னங்க சொல்றீங்க உண்மையாவா..!”
“டைரியில அந்த பொண்ண ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கான். அந்தப் புள்ளகிட்ட இருந்து ரப்பர் வாங்குனது, பென்சில் வாங்குனது, ஸ்கேல் வாங்குனது, ஜூஸ் வாங்குனதுன்னு எல்லாத்தையும் எழுதி வச்சிருக்கான் தேதி மொதக்கொண்டு. அது இல்லாம கவிதை வேற..! இதெல்லாம் படிச்சு பாத்துட்டு மனசே கேக்கல..!”
“அதனாலதான் டைரிய பாத்து பயந்துகிட்டு இருந்தானா..! இப்ப என்னங்க பண்றது..?”
“மொதல்லே திட்டிட்டா நம்ம மேல ரொம்ப கோவமாயிவான்..! அதனால நீயே கொஞ்சம் கொஞ்சமா சொல்லி புரிய வைக்க பாரு..!”
“ம்.. சரிங்க நா சொல்லிப் பாக்குறேன்.. இப்ப வாங்க தூங்க போவோம்”
“நீ போ நா கொஞ்சம் நேரம் ஒக்காந்துட்டு வாரேன்”
தன் மகனின் தலை முடியை தடவியவாறு அருகில் தூங்க ஆரம்பிக்கிறார் மஞ்சுளா.
நள்ளிரவு 12:15 போல் ஹரி சிறுநீர் கழிக்க வெளியே வருகிறான். அப்பாவை பார்த்து, “என்னப்பா இங்க உக்காந்து இருக்க தூக்கம் வரலையா?”
“சும்மா காத்து வாங்க உக்காந்து இருக்கேன் டா..! நீ ஒன்னுக்கு அடிச்சிட்டு போய் தூங்கு போ..!”
ஹரிக்கு ஒன்றும் புரியவில்லை, குழப்பத்தோடு தூங்க செல்கிறான்.
மறுநாள் காலையில் ஹரியின் அம்மாவும் அப்பாவும் ஒரு சொந்தக்காரரின் கல்யாணத்திற்கு மதுரைக்கு புறப்படுகிறார்கள். டவுன் வரை இருவரும் எக்ஸலில் சென்று, பின் பஸ் ஏறி மதுரைக்குச் செல்வார்கள். இங்கு வீட்டில் ஹரி மட்டும் தனியாக இருக்கிறான். காலை சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, போனை நோண்ட ஆரம்பிக்கிறான். சிறிது நேரம் கழித்து போர் அடிக்க தொடங்கியது.
‘டிவில படம் பாப்போமா? ஓகே வேணாம்..! நாம இப்போ கவிதை எழுதுவோம்..!’என்று எண்ணி எழுத ஆரம்பிக்கிறான்; பிறகு கொஞ்ச நேரம் போனில் சிவாவிடம் பேசுகிறான்; பின் பாட்டு கேட்கிறான்;அப்படியே மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு; ஒரு தூக்கத்தை போடுகிறான். மணி 4:45 ஆகிவிட்டது.பிறகு அம்மாவிற்கு ஃபோன் செய்கிறான்;அம்மாவோ, “டேய் தம்பி இப்ப தான்டா மதுரையிலயிருந்து பஸ் ஏறி இருக்கோம்..! எப்படியும் 8 மணிக்குள்ள வந்துருவோம்..!”
நேரம் ஓடின இரவு எட்டு மணி, ஹரி அம்மாவிற்கு ஃபோன் செய்கிறான். ஸ்விட்ச் ஆப் என்று வருகிறது. பின் அப்பாவிற்கும் போன் செய்கிறான். ரிங் போகிறது ஆனால் பதில் இல்லை. ஹரிக்கு சிறிய பதற்றம் ஏற்படுகிறது. 9 மணி ஆகிவிட்டது. கிட்டத்தட்ட அப்பாவிற்கு மட்டும் 15 தடவை போன் செய்திருக்கிறான். எந்த பதிலும் கிடைக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, அப்பாவிடம் இருந்து போன் வருகிறது. ஆனால் எதிரே அம்மா பேசுகிறார். பேசி முடித்துவிட்டு பதட்டத்தில் கையும் ஓடாமல் காலும் ஓடாமல், பக்கத்து வீட்டில் பைக்கை வாங்கிக்கொண்டு டவுனுக்கு வேகமாக செல்கிறான்.
மருத்துவமனைக்குள் அம்மாவிடம் சென்று, “ம்மா.. இப்ப எப்படி இருக்கு அப்பாக்கு? டாக்டர் என்ன சொன்னாரு? சொல்லுமா..!”
பதிலுக்கு கண்கள் கலங்கியவாறு,“ஆப்ரேஷன்ன உடனே பண்ணனுமாண்டா..!”
“எப்படிம்மா ஆச்சு..? திடீர்னு..!”
“பைக் ஸ்டான்டுல பைக்க எடுத்துட்டு வெளிய வர்ரப்ப..! என்ன ஆச்சுன்னு தெரியல அப்பவே நெஞ்ச பிடிச்சு சரிஞ்சு கீழ விழுந்துட்டாரு..! பக்கத்தில்ல உள்ள ஆளுங்க தான் ஆஸ்பத்திரி கூட்டி வர உதவி பண்ணாங்க..!” இதைக் கேட்டு ஹரி மனம் நொந்து போகிறான்.
டாக்டரோ ஆப்ரேஷனுக்கு 8 லட்சம் ஆகும் என்கிறார்.
தனது எல்லா நகைகளையும், ஒரு வருடத்திற்கு முன் ஆசையாக வாங்கின நிலத்தின் பட்டாவையும் அடகு வைத்து 8 லட்சத்தை புரட்டுகிறார் மஞ்சுளா. ஹரியும் தான் படிக்கும் போது வேலைக்கு போய் சம்பாதித்து சேர்த்து வைத்த பத்தாயிரத்தை கொடுக்கிறான். நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து சுந்தரம் வீட்டிற்கு வருகிறார்.
பிறகு தனது அப்பாவை ஹரி வேலைக்கு அனுப்பவில்லை.
8 வருடங்களுக்குப் பின், ஹரி தனது அப்பாவின் போட்டோவை துடைத்து சந்தனம் பொட்டு வைத்து பூ வைக்கிறான். வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு அம்மா ஹரியை பார்த்து, “ஏய்யா.. ஒனக்கு அந்த பட்டுக்கோட்ட பொண்ண புடிச்சிருக்கா.. நாம வேணும்னா பேசி முடிச்சிருவோமா?”
“இங்க பாருமா எந்த பொண்ண நீ பாக்குறியோ அந்த பொண்ணையே நா கட்டிக்கிறேன்..!”என்றபடி அடுப்படிக்குள் சென்று தட்டில் சோத்தை போட்டுக் கொண்டு வந்து அம்மா பக்கத்தில் சாப்பிட ஆரம்பிக்கிறான்.
“அப்புறம் சொல்ல மறந்துட்டேம் பாரு.. நம்ம லட்சுமிக்கு பொம்பள புள்ள பொறந்து இருக்கியா..! தீபிகா-ன்னு பேரு வச்சிருக்காளாம் அத ஒங்கிட்ட சொல்ல சொன்னாயா..!”
இதைக் கேட்டு ஹரிக்கு புரை ஏறுகிறது. அம்மாவோ பதறிக்கொண்டு, “பாத்து சாப்பிடுயா.. மெல்ல மெல்ல இந்தா தண்ணிய குடி..!”
ஹரிக்கு தீபிகா என்ற பெயரை கேட்டதும், தான் ஒருதலையாக காதலித்த தீபிகா மனதுக்குள் வருகிறாள்..!
சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு, பைக்கில் பண்ணைக்கு கிளம்புகிறான். இப்போது ஹரி,இறால் வளர்ப்பிற்காக இறால் பண்ணையை கட்டமைத்து நிர்வகித்து அதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டுகிறான். அதுமட்டுமில்லாமல் ஆடு, கோழி, வான் கோழி, வாத்து என்று வளர்க்கிறான். அப்பாவின் இழப்பிற்குப் பின் தான், இது போன்ற இயற்கை தொழிலை செய்ய ஆரம்பித்தான். ஒரு படியாக 8 லட்சம் கடனை அடைத்துவிட்டு, இப்போது நிம்மதியாக அம்மாவுடன் இருக்கிறான்.
ஒரு வாரம் கழித்து, சாயங்கால நேரத்தில் ஹரிக்கு சிவா போன் செய்கிறான்.
ஹரி ஃபோனை எடுத்து, “டேய் மாப்ள சிவா எப்படி இருக்க? துபாய்ல இருந்து வந்துட்டியா?”
“வந்துட்டேன் டா மூணு நாளாச்சு..! இப்போ பஸ் ஸ்டாண்ட்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தா தீபிகாவ பாத்தேன்”
ஆச்சிரியத்தில் ஹரி, “டேய் எப்படி இருக்கா தீபிகா நல்லா இருக்காளா..! என்ன சொன்னா?”
“ஹரி தீபிகாக்கு கல்யாணம்மாகி ஒரு புள்ள இருக்கு..! காலேஜ்ல பாத்த மாதிரியே இருக்காடா..! உன்னோட நம்பர்ர கேட்டா நா கொடுத்தேன்டா..!”
ஹரிக்கு மனதில் கலக்கம் இருந்தாலும்,“ஓ அப்படியா..டா சூப்பர் சூப்பர்..! தீபிகாவோட பழைய நம்பர் ஏங் கிட்ட இருக்குடா..! இப்ப புது நம்பரு மாத்துனாலும் மாத்திருப்பா போல..!”
“சரி மாப்ள நெறைய முக்கியமான விஷயம் பேசணும் நாம நைட்டு பேசுவோம்..! இப்ப வேல இருக்கு நா வைக்கிறேன்”என்று சிவா போனை கட் பண்ணுகிறான்.
பேசி முடித்துவிட்டு ஹரி, ஆடுகளை கொட்டகையில் கட்ட செல்கிறான். அதோடு கோழிகளையும், வாத்துகளையும் கூண்டில் அடைகிறான். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்து போனில் தீபிகாவின் போட்டோவை பார்க்கிறான். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வருகிறது. ஹரி ஃபோனை எடுத்து, “தீபிகா தான பேசுறது..! ஹே.. தீபிகா நல்லா இருக்கியா?”
எதிரே, “அண்ணே நா தான் மூர்த்தி பேசுறேன்..! பண்ணையோட ரூம் சாவி எங்கண்ணே?”
“சாரிப்பா தெரியாம சொல்லிட்டேன்..! சாவி மோட்ருக்கு அடியில இருக்கும்”
சிறிது நேரம் கழித்து இன்னொரு அழைப்பு வருகிறது, இப்போது ஹரி சுதாரித்துக் கொண்டு, “ஹலோ..யாரு? யார் பேசுறீங்க?”
எதிரே ஹரிக்கு பிடித்த அந்த காந்தக் குரலில், “ம்.. ஹரி நா தான் தீபிகா பேசுறேன் நல்லா இருக்கியா?”
“நல்லா இருக்கேன்..!தீபிகா, நீ எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் டா..! ஹரி நாளைக்கு நம்ம காலேஜுக்கு எதுக்க இருக்க பூங்காவுக்கு வரியா நாம பேசுவோம்..! இந்த விஷயத்த போன்ல பேசினா நல்லா இருக்காது..!”
“ம்..கண்டிப்பா வரேன்..! டைமிங் மட்டும் சொல்லு!”
“ஒன்பது மணிக்கு வா ஹரி நாம அங்க பேசுவோம்..!” என்றபடி தீபிகா போனை வைக்கிறாள்.
அப்போது அம்மா, “ஏய்யா தம்பி நாளைக்கு பொண்ணு பாக்க பட்டுக்கோட்ட போய்ட்டு வந்துருவோம்யா..! அம்மா போன்ல பேசிட்டேன் சரின்னு சொல்லிட்டாங்க..!”
“சரிம்மா போவோம்..! நாளைக்கு வேற முக்கியமான ஒரு ஆள பாக்கணும்..!”
“சரியா பாத்துட்டு வா..! அதுக்கப்புறம் கிளம்பி நாம போவோம்”
மறுநாள் காலையில், தாடியை சுத்தமாக எடுத்துவிட்டு மீசையை ட்ரிம் செய்து, தளபதி விஜய் போல் கிளம்பி, தீபிகாவை பார்ப்பதற்காக பைக்கை எடுக்கிறான்.
அப்போது அம்மா, “ஏய்யா யார பாக்க போற?”
ஹரி நமட்டு சிரிப்போடு, “ம்மா.. போய்ட்டு வந்து சொல்றேன்..!”
“சரிய்யா பொண்ணு பாக்க போறோங்கிறத ஞாபகத்துல வச்சுக்கோ.. போயிட்டு சீக்கிரமா வந்துரு..!”
“ம்.. சரிம்மா சீக்கிரம்மா வந்துருவேன்”என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு ஹரி பைக்கில் கிளம்புகிறான்.
அடுத்த பாகத்தில் சந்திப்போம்..!