ஒரு சோப்பு அழுக்காகிறது..!





புத்தாண்டுப் பலனைக் கேட்டதற்குப் பிறகு மனசு நிம்மதிப்பட்டார் மகேஸ்வரன். ஆனாலும் அடுதடுத்து எல்லா சேனல்களிலும் எல்லா ஜோதிட வல்லுனர்களும் ஒரு சில விஷயங்களில் மாறுபட்டதால் மனசு வலிக்காமல் இல்லை. பெரும்பான்மையோர் பலன் நன்றாகவே இருந்ததால் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.

இருப்பினும் புத்தாண்டின் ஒரு வாரத்துக்குள் ஒரு விஷயம் தலைகுப்புற விழுந்ததுதான் விபரீதம்.
ஏராளமான பேருக்கு கல்விக்காக, கருணையாக என கடன் கொடுத்திருந்தார் இவர்!. ஜோசியர், ‘கடன் தீரும்..! நிம்மதி அடைவீர்கள்! என்று சொல்லி இருந்தார். ஆனால்… சொன்னதில் தெளிவின்மை ஒருவாரத்தில் உறுதியானது!
கடன் தீரும்தான் யாருக்கு? இவரிடம் வாங்கியவர்கள் திருப்பித்தர கடன் தீருமா? இல்லை., இவர் வாங்கிய கடனை இவர் அடைக்க கடன் தீருமா…?! தெளிவில்லாததால் இவரைக் கட்டச் சொல்லி சிலர் கழுத்தை நெறிக்க தீர்ந்தது கடனல்ல…!! கையிருப்புத்தான்.
பிரச்சனைகளுக்குப்பரிகாரம் என ‘ஏழை எளியவர்க்கு உணவளித்து உபகாரம் செய்தால், கடவுள் உள்ளம் மகிழ்வார்!’ என்றார் ஜோதிடர். அன்றைக்கு அதிகாலை மார்க்கெட் போனார் மகேஸ்வரன். திரும்புகையில, வயதான மூன்று பேர் தூய்மைப் பணியாளர்கள் தெருவைச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். பார்க்க பாவமாக இருந்தது. குனிந்தால் நிமிர முடியாத வயது அவர்களுக்கு! முந்தினநாள் மார்க்கெட் கழிவுகளை மனம் வலிக்காமல் சுத்தாம் செய்து கொண்டிருந்தனர் மூன்று பேர்!,
அவர்களில் ஒருவரிடம் ஒரு நூறு ரூபாயைக் கருணையோடு திணித்து, “மூவரும் டீ சாப்பிடுங்க!” என்றார் மகேஸ்! ‘பொசுக்குனு அந்த மூன்று தூய்மைப் பணியாளர்களில் திறக்கப்படாத கடை வாசலில் படுத்திருந்த ஒரு பெரியவர்..‘காசை வாங்காதே! இவன் பண்ணின பாவம் தீர்க்க நம்மைப் பலிகடாவாக்கப் பார்க்கிறார்!’ என்று மறுக்க…
‘அய்யோ.. பண்ணின பாவத்துக்குப் பரிகாரம் செய்து பகவானுக்குச் சோப்புப்போட நினைத்தால்… ‘நம்ம சோப்பு அழுக்கைப் போக்காமல் தானே அழுக்க்காகிறதே?!’ என்ன ஜோசியமோ.. என்ன நம்பிக்கையோ.. அந்த மகேஃஜ்வரனுக்கே வெளிச்சம்!’ என்று நினைத்தார் இந்த மகேஸ்வரன்.
தூய்மைப் பணியாளப் பெண் கவலையோடு வாங்கிய காசைத் திருப்பித்தந்தார் கைகளில்!