ஒரு குடும்பம் வெளியேறுகிறது

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 10,033 
 
 

நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் மனைவி கேட்ட முதல் கேள்வி, “என்ன ஆயிற்று? வேலை கிடைத்ததா?” என்பது தான். நான் பதில் ஏதும் சொல்லாது பெருமூச்சு விட்டேன். அவள் முகம் வாடியது. அதை பார்த்து என் மனம் உடைந்தது.

பன்னிரண்டு வாரங்களாக நான் வேலை இல்லாமல் இருக்கிறேன். வேலைக்கு நான் முயற்சி செய்யும் எல்லா இடங்களிலும் ஒரே கதை தான். ரோபோக்கள் ஒவ்வொரு களத்திலும் நுழைந்து மனிதர்களை விட சிறந்த வேலையைச் செய்து கொண்டிருகின்றன. பெரும்பாலான வேலைகளில் யந்திரங்கள் நுழைந்து மனிதர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பது போன்ற வேலைகள் மிக மிகக் குறைந்து போய் விட்டன.

வேலையின்மைக்காக அரசாங்கம் தரும் அலவன்ஸ் மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்காது. மேலும், வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பது என்னைப் பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது. என்னால் இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. இந்த மோசமான இடத்தை விட்டு வெளியேற வேண்டிய தருணம் வந்து விட்டது.

அதனால் நான் பாபாவை அழைத்தேன். அவரது உண்மையான பெயர் எனக்குத் தெரியாது, ஆனால் எல்லோரும் அவரை அப்படித்தான் அழைத்தார்கள். இந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கான எனது கடைசி நம்பிக்கை அவர்தான். அவரது முந்தைய வாடிக்கையாளர்களில் ஒருவரான என் நண்பன் ஒருவன் அவரைப் பரிந்துரைத்தான்.

நான் பாபாவிடம் இந்த இடத்தை விட்டு வெளியேற விரும்புவதாகச் சொன்னேன். அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன்.

“உங்களில் எத்தனை பேர் வெளியேற வேண்டும்?” என்று கேட்டார் பாபா.

“நான், என் மனைவி, மற்றும் என் இரண்டு வயது மகன்,” என்றேன் நான்.

“உங்கள் இலக்கைப் பற்றி ஏதாவது மனதில் எண்ணம் இருக்கிறதா?”

“வேலை எளிதாக கிடைக்கும் எந்த இடத்திற்கும் நான் போக ரெடி. எந்த இடத்திலும் நான் முட்டாள் ரோபோக்கள் மற்றும் யந்திரங்களுடன் போட்டியிட விரும்பவில்லை.”

பாபா சொன்ன டாலர் எண்ணிக்கை என் வயிற்றில் புளியைக் கரைத்தது. எங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் ஒவ்வொரு டாலரையும் அவர் கேட்டார். “இது மிகவும் அதிகம், பாபா.” என்றேன்.

“இப்போது போய்க் கொண்டிருக்கும் விலை இது தான் நண்பரே. உங்களைப் போன்ற குடும்பங்களை வெளிக் கொண்டு செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல – நான் போலி பாஸ்போர்ட் மற்றும் போலி ஐடி கார்டுகளை தயார் செய்ய வேண்டும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், வாகனம் மற்றும் ஓட்டுநரை வாடகைக்கு எடுக்க வேண்டும். இம்மாதிரியான வாகனங்களுக்கு வாடகை எவ்வளவு என்பது உங்களுக்கேத் தெரியும். பஸ்ஸில் ஏறி அடுத்த ஊருக்குச் செல்வது போல் இல்லை இது.” என்றார்.

எனக்கு வேறு வழி இல்லை. சரி என்று தலையசைத்தேன்.

“நல்லது. இப்போது போக வேண்டிய இடத்தைப் பற்றி பேசலாம். உங்களுடைய தேவை என்ன? – ஏராளமான வேலை வாய்ப்பு. அதை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால், 2016 ஆம் ஆண்டிற்கு நீங்கள் செல்வது தான் சரி என்பேன். அது கடந்த எண்ணூரு ஆண்டுகளுக்கு முந்தையது. அங்கு செல்வது உங்களுக்கு ஓகேயா நண்பரே?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *