ஒரு காதல்.. ஒரு தேடல்…

கிளப்ஹவுஸ் (Clubhouse) அறைகளில் சின்னனின் குரல் பலரைக் கவர்ந்திருந்தது. மல்லாவியிலிருந்து சின்னன் அமெரிக்கா வந்தது அமெரிக்கன் லொத்தர் விசாவில். அந்த லொத்தர் விசாவைக்கூட அவன் நிரப்பியவனல்ல.
பள்ளிக்கூட இங்கிலிஷ் வாத்தி சிறிக்கு தான் அந்த நன்றி யெல்லாம்..விசாக்கிடைத்து அமெரிக்கப் பவலோ வந்த சின்னன், பொழுது போகாமல் கிளப்ஹவுஸில் கடலை போடத் தொடங்கியிருந்தான்..
அதில் பலருடன் பேசிய போது சிக்கியவள் தான் ரேணு. அவளின் அழகான பேச்சில் மயங்கி மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருப்பான். அந்தப் பேச்சுகள் கடைசியில் காதலானது. ஒருநாள் அவளை நேரில் பார்க்க முடிவெடுத்து, சின்னன் அவளிருந்த ரெக்ஸஸ் மாநிலம் நோக்கிப் பயணித்தான்.
ரேணுவின் இருப்பிடத்தை நெருங்கியபோது, அவளுக்கு ஒரு அன்புப் பரிசை வாங்க ஒரு கடைக்குள் நுழைந்தான். அங்கே அவனுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் வித்தியாசமாகவும், சற்று மிரட்டுவதாகவும் இருந்தன. பல அட்டைகளில், “அவசர உதவிக்கு 911 அழைக்கத் தேவையில்லை, எம் எல்லோரிடமும் துப்பாக்கி இருக்கிறது” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. சின்னன் தயக்கத்துடனே ஒரு சிறிய அழகான மீன் பொம்மை மாலையொன்றை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான்.
அவன் ஊபர் (Uber) புக் செய்தபோது, ஆச்சரியப்படும்படி ஒரு ‘வேமோ’ (Waymo) கார் வந்து நின்றது. உள்ளே ஓட்டுநர் இல்லை! தானியங்கி கார் மெதுவாக வளைந்து அவன் முன்னே நின்றபோது சின்னனுக்கு ஒரு நிமிடம் இதயம் நின்றுவிட்டது. காருக்குள் இருக்கும்போது கார் எடுக்கும் பெரிய வளைவுகள் அவனை இன்னும் பயமுறுத்தின. “சின்னன்… தம்பி , மெதுவாகப் போ…” என்று காரிற்குள் இருந்தபடி கத்தினான். அதற்கு இவன் மொழி புரிவதாகவில்லை..
செம்மறி என்று இவன் வாய்விட்டுச் சொன்னதை செம்மறி என்று இவனுக்கே திருப்பிச் சொன்னது அது.
அந்தி சாயும் நேரம். வானம் கறுத்து, வெளவால்கள் கூட்டமாகப் பறக்கத் தொடங்கின. ஒருவழியாக ரேணுவின் வீட்டை அடைந்தான். ஆவலுடன் கதவைத் தட்டினான். கதவைத் திறந்துகொண்டு வெளிச்சத்திற்கு வந்தாள் ரேணு.
சின்னன் ஒரு நிமிடம் உறைந்து போனான். இத்தனை நாள் அவன் கற்பனை செய்திருந்த அடக்கமான பெண்ணுருவம் அவனது கண்களின் முன்னே விசுவரூபமாக நின்றது. ஒரு இராணுவ அதிகாரி போல உடையணிந்து தலையை மடித்துக் கட்டியிருந்தாள். துப்பாக்கி மூலையில் இருந்தது.
அவளது கண்கள் அதே காதலைச் சுமந்து இவனை வரவேற்றன. “வா சின்னன் நாம் பொழுது போக்காகப் பேசியதை நீ சீரியஸாக எடுத்து வந்து விட்டாயா” என்றாள். இவனுக்கு தூக்கி வீரிப் போட்டது. சின்னனின் வெள்ளேந்தித்தனம் ரேணுவிற்கு நேரில் பார்த்த போது பிடித்துப் போயிற்று.
சின்னனின் கையில் அவளிற்காக வாங்கிய மீன் மாலை நடுங்கியது. அவளிற்கு சிரிப்பாக இருந்தது. அவள் ஓர் முத்தம் கொடுத்து உள்ளே அழைத்தாள்.
எந்திரக் கார், துப்பாக்கி வாசகங்கள் நிறைந்த கடை, வெளவால்கள் சூழ்ந்த வானம் என அனைத்தும் அந்த முத்தத்தில் மறைந்தன.
மல்லாவிச் சின்னன் அமெரிக்காவின் பிரம்மாண்டமான ரெக்ஸஸ் (Texas) மாகாணத்திற்கு வந்திருப்பது பெரிய சாதனை . கவ்போய் படங்களின் படப்பிடிப்புகள் நடக்கும் அந்தப் பெரிய நகரமே அவனுக்கு ஒரு கனவுலகம் போலத் தெரிந்தது.
அவன் கையில் இருந்த அந்தச் சிறிய மீன் மாலையை ரேணு கழுத்தில் போட்ட போது ரேணு மறுபடியும் முத்தமிட்டாள். அவன் கிறங்கிப் போனான். அமெரிக்க முத்தம், இலங்கையின் ஈழ முத்தம் போல அரத்தம் பொருந்தியதல்ல என்பது அவனுக்குத் தெரியாது.
ரேணு வா வென அவனை மீண்டும் வேமோவில் அழைத்துச் சென்றாள்.
வேமோ காரை விட்டு இறங்கியபோது, அந்த இடமே தேன்குளவிகளின் ரீங்காரத்தால் நிறைந்திருந்தது. ரேணு அங்குதான் ஹாலிவுட் படங்களுக்காகத் தேன்குளவிகள் வளர்க்கும் ஒரு பெரிய பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தாள். அதைப்பற்றியெல்லாம் அவளுக்கு கதைகதையாகச் சொன்னாள். வான மூட்டம் நிறைந்த வெளவால் கூட்டம் தேன்குளவிகளின் பகையாளி என்றும், ரெக்ஸஸில் நுளம்புத் தொல்லை அவற்றை வெளவால்கள் பிடித்துத் தின்பதால் இல்லையென்றும் சொன்னாள். அவளை ரொம்பவே சின்னனுக்குப் பிடித்துப் போயிற்று.
திகைத்து நின்ற அவனை “வா சின்னன்!” என்று அவள் அழைத்தபோது, அவளது குரலில் இருந்த அதே கிளப்ஹவுஸ் பரிச்சயம் அவனுக்கு பெரு நிம்மதி அளித்தது.
ஆனால், அவள் இடுப்பில் செருகியிருந்த அந்த சிறிய நவீனத் துப்பாக்கி சின்னனை ஒரு நிமிடம் மிரள வைத்தது. அவன் மல்லாவியில் பார்த்த பழைய ரகத் துப்பாக்கிகள் போல அது இல்லை. இது மிகவும் நவீனமானது, பளபளப்பானது.
“இங்கே இது சாதாரணமான ஒன்றுதான் சின்னன். எம் பாதுகாப்புக்கும், பண்ணைப் பாதுகாப்பிற்கும் இது தேவை,” என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள். வானத்தில் வெளவால்கள் கூட்டமாகப் பறக்கத் தொடங்க, அந்த அஸ்தமனப் பொழுதில், ஒரு புதிய தேசத்தில், ஒரு புதிய உறவின் தொடக்கம் சின்னனுக்குப் புரியாத புதிராக இருந்தாலும், அவளது அன்பான வரவேற்பு அவனுக்குப் பிடித்துப்போயிருந்தது.
சின்னனின் கனவுகள்்டெக்சாஸின் (Texas) பரந்து விரிந்த கலாச்சாரத்திற்குள் நுழைய முற்பட்டது.
விடிந்ததும் சின்னனுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அந்தப் பண்ணை வீட்டின் அமைதியில், அதிகாலையிலேயே ரேணுவின் குரல் கணீரென்று ஒலித்தது. அவள் பக்திப்பரவசத்துடன் சுப்ரபாதப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தாள். மல்லாவிக் கோயில்களில் கேட்ட அதே தெய்வீக ராகம், இந்த அமெரிக்கக் கவ்போய் மண்ணில், தேன்குளவிகளின் ரீங்காரத்திற்கு நடுவே ஒலித்தது சின்னனுக்குப் பெருத்த வியப்பைத் தந்தது.
“என்ன சின்னன்… ஆச்சரியமாக இருக்கிறதா? நான் எங்கே இருந்தாலும் என் அடையாளத்தை மறப்பதில்லை,” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அன்றைய மதிய உணவு இன்னும் விசேஷமாக இருந்தது. டெக்சாஸின் புகழ்பெற்ற மாட்டு இறைச்சி பாபிக்யூ (Beef BBQ) தயாராகிக் கொண்டிருந்தது. பெரிய தணல் அடுப்பில் மெதுவாக வெந்து கொண்டிருந்த அந்த இறைச்சியின் மணம் பண்ணை முழுவதும் பரவியிருந்தது.
“இங்கே இதுதான் ஸ்பெஷல்!” என்று கூறி, அவள் ஆர்வத்துடன் அந்த உணவைப் பரிமாறினாள். ஒரு கையில் நவீனத் துப்பாக்கி, மறுபுறம் அதிகாலைத் தமிழ் பக்திப் பாடல், உணவில் இந்த ஊர் மாமிச வைபவம் – என அவளது பன்முகத்தன்மை சின்னனை வியக்க வைத்தது
முந்தைய இரவு கண்ட வெளவால்களும், ஓட்டுநர் இல்லாத அந்த வேமோ (Waymo) காரின் பயமும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கிய வேளைதான் அவள் அந்த உண்மையைச் சொன்னாள். தான் ஒரு திருநங்கையாக வாழ்ந்து கொண்டிருப்பவள் என றாள் எந்த வித சஞ்சலமுமின்றி .. அவனுக்கு அந்த செய்தி தூக்கி வாரிப் போட்டது…திருநங்கையாக அவள் வாழ்ந்து வரும் இந்தத் தைரியமான, முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கை சின்னனுக்குள் ஒரு புதிய மரியாதையை உருவாக்கியது.
மாலை Texus ன் புகழ்பெற்ற பிராங்க்ளின் பிபிக்கியூ (Franklin BBQ) உணவகத்தில் அமர்ந்து, அதே மாட்டு இறைச்சியை ருசித்து முடித்தார்கள். சாப்பிட்டு முடித்ததும், “வா, அப்படியே ஒரு கோவிலுக்குப் போய்விட்டு வரலாம்” என்றாள் ரேணு.
சின்னனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “கோவிலுக்கா? குளிக்காமல், அதுவும் இறைச்சி சாப்பிட்டுவிட்டு எப்படிப் போவது? ஆச்சாரமாக இருக்க வேண்டாமா?” என்றான் தயக்கத்துடன்.
ரேணு அவனை ஒரு பார்வை பார்த்தாள். “என்னடா பழைய பஞ்சாங்கம் மாதிரிப் பேசுகிறாய்?
ஏன் ரேணு, அதிகாலையில் சாமிப் பாட்டு பாடுகிறாய், ஆனால் மாமிசம் சாப்பிட்டு விட்டுத் தீட்டு எதுவும் பார்க்காமல் கோவிலுக்குப் போகிறாய்?
ரேணு சிரித்தாள். “சின்னன், பசியும் பக்தியும் உடம்பைப் பொறுத்தது, ஆனால் ஒழுக்கமும், ஆச்சாரமும் மனுசன் போட்ட சட்டங்கள். நான் ஒரு திருநங்கையாக இந்தச் சமூகத்தோடு போராடியபோது இந்த குரங்கு மனிதர் போட்ட எந்தச் சட்டமும் எனக்கு உதவவில்லை. இப்போது என் கையில் இருக்கும் இந்தத் துப்பாக்கியும், இந்தத் தேன்குளவிகளும்தான் என் உலகம். இந்த வேகமான உலகத்தில் அபத்தமான ஆசாரங்களுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது?” என்று அவனைத் தூஷணத்தில் திட்டிவிட்டு, ஒரு ரம் (Rum) போத்தலை வாங்கிக்கொண்டு அவனையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.
தானும் குடித்துவிட்டு, சின்னனுக்கும் ஊற்றிக் கொடுத்தாள். அமெரிக்க ரம் அவனை ஆகாயத்தில் பறக்க வைத்தது. போதையின் உச்சத்தில் சின்னன் மயங்கி அவளின் தோளோடு தோளணைத்துச் சரிய, அன்று இரவு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. விடிந்தபோது அவனது உடல் முழுக்கப் பயங்கர வலி.
அடுத்த நாள் காலை, இரவு இன்பமாக கழிந்ததா என்றபடி “இயற்கை பூங்காவுக்குப் (Natural Garden) போகலாம்” என்று ரேணு அவனைக் கிளப்பினாள். மறுபேச்சின்றி அவளுடன் சென்றான். வழியில் ‘ரிபப்ளிக் ஆஃப் டெக்சாஸ்’ (Republic of Texas) என்ற பிரம்மாண்டமான இடத்தைக் கண்டு மலைத்து நின்றான்.
அருகிலேயே ஒரு தமிழ் கூட்டத்திற்கான அறிவிப்புப் பலகையைக் கண்டு, “அது என்ன?” என்று கேட்டபடி
உள்ளே எட்டிப் பார்த்தபோது, ஒரு நூறு பேர் கோட் சூட் அணிந்து ஆங்கிலத்தில் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். Postmodernism எனப்படும் பின்னவீனத்துவத்துத்தின் , மையமின்மை, விளிம்பு நிலை என்பதை லக்கான், ஜூலியா கிறிஸ்தோவா, இரிகரி, புரூனோ லத்தூர், போத்ரியால், டெல்யூஸ், கட்டாரி,என்பவர்கள் எப்படிச் சொன்னார்கள் என்பது பற்றியெல்லாம் காட்டுக் கத்தலாக பிடுங்கினார்கள்.
தொழில் நுட்பம் பெருக வேண்டும். இங்குள்ள பெரும்பாலான கணனி விற்பனர்கள் எம் தமிழர்கள் எனப் பெருமையுறலாம். காற்றுள்ள போதே நாம் தூற்றிக்கொள்ள வேண்டும் புள்ளிவிபரப்படி, மனிதர்களை விட தானியங்கி கார்கள் பாதுகாப்பானவை என்றும் இந்தக் கார்கள் மது அருந்துவதில்லை, சோர்வடைவதில்லை மற்றும் கவனச்சிதறலுக்கு உள்ளாவதில்லை.
இதனால் விபத்துகள் பெருமளவு குறையும் என Waymo நிறுவனம் சொல்கிறது என்றெல்லாம்்அவர்கள் பேசிக் கொணலடிருந்தார்கள்.
ரேணு நக்கலாகச் சொன்னாள் “முற்போக்கெனப் பேசும் இவங்கள் எல்லாம் முட்டாள் பயல்கள்!
முதலாளித்துவக் கட்டமைப்பில், இத்தகைய தொழில்நுட்பங்கள் வரும்போது குறைந்த வருமானம் பெறும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
சுமார் 85% அமெரிக்கர்கள் இந்தக் கார்களால் டாக்ஸி மற்றும் டெலிவரி ஓட்டுநர்கள் வேலை இழப்பார்கள் என்று அஞ்சுகிறார்கள்.
இது பொருளாதாரச் சமத்துவமின்மையை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ள தென்பதையெல்லாம் இந்த அறிவிலிகள் பேசுவதில்லை.
உள்ளூரில ஆசாரம், தீட்டு, வேட்டி என்றபடி திரிகிற பயலுக.. அமெரிக்காவில் வந்து கோட் சூட் போட்டுக்கொண்டு நவீனத்தை ஆராய்வார்களாம். இந்த இரட்டை முகப் பிறவிகள் உள்ளூரில் அமெரிக்காவைத் திட்டித் தீர்க்க வேண்டியது..இங்கு வந்து புகழ்ந்து தள்ள வேண்டியது..இதுதான் இவர்களின் பின்னவீனத்துவ ஆராய்ச்சி வேலை.”
அந்தத் தமிழ் ஆய்வுக் கூட்டத்தின் முரண்பாட்டைக் கண்டு சின்னன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
கோட் சூட் போட்டு ஆங்கிலத்தில் தமிழாராய்ச்சி செய்யும் அந்த மேதாவிகள் சிறிது நேரத்தில் வெளியே வந்து கப்பிட்டல் பிரமாண்டக் கட்டிடத்தின் முன் நின்றும், கிடந்தும், படுத்தும் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
மறுபடியும் சிரித்தபடியே ரேணு சொன்னாள், “பார்த்தாயா சின்னன், இவர்கள் அடையாளத்தைத் தேடுகிறார்கள், நான் அடையாளத்தை இங்கு உருவாக்கி வைத்திருக்கிறேன்” என்றாள் தன் இடுப்பு பெல்ட் துப்பாக்கியைக் காட்டி…
அன்று மாலை மீண்டும் ஒரு ரம் போத்தலோடு அமர்ந்தாள் ரேணு. சின்னனுக்கு ஒரு பக்கம் பயம், ஒரு பக்கம் புது அனுபவம்.
ரேணுவை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருபுறம் அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, மறுபுறம் மாட்டு இறைச்சியும் மதுவும், கையில் நவீனத் துப்பாக்கி என அவள் ஒரு புரியாத புதிராக இருந்தாள்.
“எனக்கு இது சரிப்பட்டு வராது ரேணு.. நான் திரும்ப போகிறேன்” என்று அவன் மெல்லச் சொல்ல முயன்றான். ஆனால் அவள் அவனைப் பார்க்கின்ற காந்தப் பார்வை காந்தர்வ லோகத்து தேவதைகளின் பார்வையாக கிறங்கடிக்கிறது. அதை இழப்பதா?? மல்லாவியில் இருந்து வந்த சின்னனுக்கு எந்த முடிவும் எடுக்கத் தெரியவில்லை..மெளனமாக ரீங்கரிக்கும் தேன்குளவிப் பெட்டிகளோடு செல்பி எடுத்துக் கொண்டிருந்தான்.., சின்னன் அவளைப் பார்த்தான்.
அவள் ஒரு சமூகப் போராளிதான் . அவளது முரண்பாடுகளே அவளது அழகு என அவனுக்குப் புரிந்தது. இது வெறும் காதலல்ல, இது ஒரு புதிய தேசத்தின், ஒரு புதிய மனுஷியோடு வாழும் சுதந்திர வாழ்வியல் என்றது அவனது மனம். அவன் மௌனமாக அவள் கொடுத்த ரம் கோப்பையை வாங்கிக்கொண்டான். வானில் வெளவால்கள் மீண்டும் சுதந்திரமாகப் பறக்கத் தொடங்கின.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: April 15, 2026
பார்வையிட்டோர்: 162