ஐயாக்குட்டியும் ஆறுமுகமும்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரிலே ஐயாக்குட்டி என்றும், ஆறுமுகம் என் றும் பெயருடைய இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். ஆறுமுகம் பள்ளிக்கூடத்திலே சிறிது கல்வி கற்ற வன்; அதனால் நல்லொழுக்கமுடையவனாக இருந்தான். ஐயாக்குட்டிக்கோ ஓர் எழுத்தும் தெரியாது. அதனால், அவனுடைய குணம் மிகவும் கொடுமையானதாக இருந்தது. ஐயாக்குட்டிக்கும் ஆறுமுகத்திற்கும் நட் புண்டாயிற்று. சிலர் ஆறுமுகத்தைப் பார்த்து, “ஐயாக்குட்டி மிகவுந் தீயவன் ; நீ அவனுடன் நட்புக் கொள்ளாதே. நட்புக்கொள்ளுவாயானால், உனக்குத் துன்பம் உண்டாகும். கல்லாத பேதைகளின் நட்புத் தள்ளத் தக்கதேயன்றிக் கொள்ளத்தக்கது அன்று,” என்று அறிவுரை கூறினார்கள்.
ஆறுமுகம் ஐயாக்குட்டியிடம் கொண்ட நட்பை விட்டுவிடவில்லை. அவன் நம்மை என்ன தான் செய்து விடுவான் பார்ப்போம் என்னும் துணிவுடன் இருந் தான். ஐயாக்குட்டி மற்றவர்களிடந் தன் குறும்பு களை மிகுதியாகக் காட்டினானே யன்றி, ஆறுமுகத் திடம் காட்டவில்லை. நாட்கள் பல சென்றன. ஆறு முகம் நல்லவனாகவுந் தான் கெட்டவனாகவும், ஆறு முகம் அறிவுடையவனாகவும் தான் அஃதில்லாதவனாக வும் இருப்பது ஐயாக்குட்டிக்குப் பிடிக்கவில்லை. ஆறுமுகத்தை எவ்வாறாயினும் கொன்று தொலைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான். அறிவற்றவர் களுடைய நட்பு விரைவில் தேய்ந்து போவது இயற்கை.
ஒருநாள் மாலையில் ஐயாக்குட்டி ஆறுமுகத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றான். அபினியைக் கொஞ்சம் வெல்லத்தில் வைத்து, “இந்த வெல்லத்தைத் தின்பாயாக!” என்று கொடுத்தான். அபினி சேர்ந்த வெல்லத்தைத் தின்ற ஆறுமுகம் அறிவுசோர்ந்து மயங்கினான். ஆறுமுகத்தின் இடுப்பிலே பெரிய கல் ஒன்றைச் சேர்த்துக் கட்டி, அவனைப் பிடித்து ஆற்றில் ஓர் ஆழமான இடத்திலே தள்ளிவிட்டான்.
ஆறுமுகம் அறிவு மயங்கியிருந்தபடியாலும், இடுப் யில் கல் கட்டப்பட்டிருந்தபடியாலும் ஆற்று நீரில் அமிழ்ந்து இறந்து போனான். ஆறுமுகம் இறந்ததைக் கண்டு ஐயாக்குட்டி உள்ளங் குளிர்ந்தான். பாம்பு போன்ற தீயவர்களுடன் நட்புகொண்டால், இவ்வாறு தான் அழிந்தொழிய நேரிடும்.
“பாம்பொடு பழகேல்” (இ – ள்.) பாம்பொடு – பாம்பைப் போன்ற தீய குணம் உடையவர்களுடனே, பழகேல் – சேராதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955