ஏழு வயசுல எளநி வித்தவ..!





கோடை வெயிலின் உக்கிரத்தில் உறவுக்கு வந்தவங்களுக்கு என்ன கொடுத்தால் மனசுக்கு இதமாய் இருக்கும் என்று யோசித்த இமயராஜ் இளநி வாங்கிக் கொடுக்க முடிவுசெய்து எம்டிபி ரோடு முழுதும் வண்டி எடுத்து இளநி கடையைத் தேடினான். எங்குமில்லை. என்ன? வெயில் உக்கிரத்திற்கு இளநி இறக்கின உடனேயே விற்றுவிடுகிறதோ?!.

விலை ஐம்பது ரூபாய் என்றாலும் கொடுக்கத் தயார்! முடிவு செய்து தேட, கடைசியில் மூலையில் தள்ளுவண்டி ஒன்றில் தென்பட்டது இளநி வியாபாரி கடை.
ஆனால், விற்பதோ ஒரு இளம் பெண். பள்ளிப் படிப்பு படிக்கும் வயசுதான் இருக்கும். அருகில் போய் நின்று…
‘ஏன் இன்னைக்கு ஸ்கூலுக்குப் போகலையா?’ ஸ்கூல் லீவுன்னு தெரிஞ்சே கேட்டான்.
‘சீசன்’கறதுனால வியாபாரத்துக்கு வந்துட்டேன்! ஏழு வயசிலிருந்தே இளநி வியாபாரம் பார்க்கிறேன்!’ என்றாள்.
‘அதெல்லாம் சரி, இளசா, வழுக்கையா. ஐஞ்சு வேணும்.. ஜீபே பண்ணலாமா?!’ என்றதும்,
‘வழுக்கையா இருக்காது! கொஞ்சம் கெட்டியாத்தான் இருக்கும். கோடை வெயிலுக்கு இளநி வழுக்கையா வரதில்லை, இளசிலயே முத்திக் காயாயிடுது..! ஐஞ்சு வாங்கினாலும் ஐம்பது வாங்கினாலும் வழுக்கைப்பதம் வராது, உள்ளதைச் சொல்றேன்!’ என்றாள்.
ஆச்சரியமாய்ப் பட்டது, பள்ளிப் பருவப் பெண்! கடையில் இருக்கும் இளநி உள்ளே வழுக்கையா இல்லைங்கறதை வெட்டிப்பார்க்காமலேயே கண் பார்வையிலேயே விளக்கமாச் சொல்றா…?! ம்ம்ம்..! நமக்குத்தான் மனுசனுக மனசுல உள்ள என்ன இருக்குன்னு உணர முடியலை.! நம்பி ஏமாந்து வழுக்கையாட்டம் ‘ஃசாப்டா’ பேசறானுகளேன்னு நம்பி ஏமாந்து, பழகி பாழாப்போனதுக்கு அப்புறம்தான் புத்தி வருது!’, நினைத்துக் கொண்டான்.
அதுசரி, அவதான் பள்ளி வயசிலிருந்தே இளநி பதத்தைப் பார்த்துத் தெரிஞ்சவளாச்சே?!
தென்னை எல்லாக் காய்களையும் ஒருபோலத்தான் உற்பத்தி செய்கிறது. ஆனால், மனுஷனுகள்தான் ஒரே குடும்பத்தில் உருவானவர்களில்கூட ஒவ்வொருவர் ஒவ்வொரு ரகம். வெளித் தோற்றத்தை வைத்து இள்நியைப் போல மனுஷனுகளை ஒண்ணும் முடிவு பண்ன முடியலை., அதான் நாம ஏமாந்திடறோம்.
கிளம்பும்போதுதான் அவள் சொன்னாள், ’கொஞ்சம் ரெண்டு மாசம் பொறுத்துக்குங்க, வழுக்கைப்பதமா எளசாத் தரேன்! இப்ப கடுசாத்தான் இருக்கும்!’ என்றாள் அவளாக!
நான் ஒண்ணுமே சொல்லாத போது, ‘ஐஞ்சு’ எளநி வாங்கிப் போறவன் மனசு குளிரணும்னு நெனைச்சு ரெண்டு மாசம் பொறுத்துக்கச் சொன்ன அவள் மனிதாபிமானம் இளநி தராத சுகானுபவத்தை மனுஷ வார்த்தை மகிமை தந்தபோது தென்னையைவிட அவள் குளிர்ச்சியில் உயர்ந்து நின்றாள்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |