ஏழு பூனைகள்




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன் ஒரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவ் அரசனுடைய மகள் மிகவும் அழகாக இருந் தாள். இளம் வயதிலேயே அவள் தாயை இழந்தாள்.
அரசன் மிகவும் வருத்தப்பட்டான். “குழந் தையை எப்படி வளர்ப்பது!” என்று ஏங்கினான்.
ஒரு பெரிய பூனை அங்கு வந்து நின்றது.
“இளவரசியை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்; நீங்கள் கவலைப்படவேண்டாம்,” என்று சொல்லிற்று.
பூனைக்கு அரண்மணையில் தாதி வேலை கிடைத் தது. அது தொட்டிலை ஆட்டும். குழந்தைக்குப் பால் ஊட்டும். குழந்தையோடு சிலசமயம் விளையாடும்.
இளவரசிக்கு ஏழு ஆண்டுகள் நிரம்பின.
அரசன் பூனையை அழைத்து, “உன் வேலை முடிந் தது; உனக்கு என்ன வேண்டும், கேள்?” என்று சொன்னான்.
“என் மூத்த மகனுக்கு இளவரசியை மணம் செய்து கொடுக்கவேண்டும்,” என்று அது கேட்டது.
“என்ன சொன்னாய்? எனக்குப்பின் என் மகள் பட்டத்திற்கு உரியவள். அவளைப் பூனைக்கா மணம் செய்து கொடுப்பது. முடியவே முடியாது,” என்று அரசன் சொல்லிவிட்டான்.
பூனை அரண்மனையைவிட்டு அகன்றது. ஆனால் இளவரசிமட்டும் அதை மறக்கவே இல்லை.
இளவரசிக்கு வயது பதினாறு ஆயிற்று. அவளை ஒரு பூதம் தூக்கிக்கொண்டுபோய்ச் சிறையில் வைத்தது.
இளவரசி அழுதுகொண்டே இருந்தாள். தாய்ப் பூனை மெதுவாக அவள் இருக்கும் இடத்திற்கு வந்தது.
“நீ ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம். என் ஏழு பிள்ளைகளையும் அழைத்து வந்திருக்கிறேன். உன்னை அவர்கள் காப்பாற்றுவார்கள். நீ உடனே புறப்படு,” என்று சொல்லிற்று.
இளவரசி அவைகளுடன் புறப்பட்டாள்.
இடி இடிப்பதுபோல் ஓசை கேட்டது! பூமியில் அதிர்ச்சி ஏற்பட்டது! திரும்பிப் பார்த்தார்கள்! பூதம் பின்தொடர்ந்து வந்தது.
பெரிய பூனை பேனாவில் இருந்த மையைக் கீழே கொட்டிற்று. ஒரு மந்திரம் போட்டது. ஒரு சொட்டு மை பெரிய கடல்போல் ஆயிற்று. பூதம் அதைக் கடந்து வருவதற்குள், இளவரசியும் பூனைகளும் அந்த இடத்தைவிட்டுத் தப்பிச் சென்றனர்.
நடு இரவு வந்தது. மறுபடியும் பூதத்தின் அடி ஓசை கேட்டது. இரண்டாவது பூனை சிறிது மணலை எடுத்து, மந்திரம் போட்டது. உடனே அந்த இடம் ஒரு பெரிய பாலைவனமாக மாறிவிட்டது.
பூதம் பாலைவனத்தைக் கடந்து செல்வதற்குள், இளவரசி ஊரை நோக்கி நடந்தாள். பூதம் குதிரை வண்டியில் ஏறிக்கொண்டது. அருகில் வந்தவுடன் மூன்றாவது பூனை ஒரு மூங்கிலை எடுத்துக் குறுக்கே போட்டது.
மூங்கில் பெரிய முள்வேலியாக மாறிவிட்டது. குதிரை வந்து வேலியில் மோதிக்கொண்டது. வண்டி கவிழ்ந்தது. பூதம் எழுந்து வருவதற்குள் நெடுந் தூரம் போய்விட்டனர்.
பூதம் தொடர்ந்து வந்தது. நான்காவது பூனை ஒரு மயில் இறகை எடுத்துத் தரையில் நட்டுவைத் தது. அது பெரிய காடாக முளைத்தது. பூதம் வழி தெரியாமல் தடுமாறிற்று.
பூதம் காட்டையும் கடந்து வந்தது. ஐந்தாவது பூனை பாதையில் ஒரு கோடு கிழித்தது. அது ஓர் ஆறுபோல் ஓடிற்று.
பூதம் ஆற்றில் நீந்திக்கொண்டு வந்தது.
ஆறாவது பூனை ஒரு குச்சியைத் தரையில் நட்டு வைத்தது. அது ஒரு பெரிய கோபுரமாக மாறிவிட்டது. இளவரசியும் பூனைகளும் அதன்மேல் ஏறிச் சென்றனர். கோபுரம் மிக உயரமாக இருந்தது.
பூதத்திற்கு வழி தெரியவில்லை. “எங்கே போயிருப்பார்கள்!” என்று விழித்துக்கொண்டு நின்றது.
இளவரசி கொல்லென்று சிரித்தாள். அவள் கோபுரத்தின் உச்சியில் இருப்பதைப் பூதம் பார்த்து விட்டது.
பூதம் கோபுரத்தைக் கைகளால் குத்திப் பார்த் தது. உதைத்துப் பார்த்தது. அதைப் பூதத்தினால் அசைக்க முடியவில்லை. ஓர் ஏணியின் உதவியால், மேலே ஏறி வந்தது.
இளவரசியும், பூனைகளும் பின்புறமாகக் கீழே இறங்கிச் சென்றனர். ஏழாவது பூனை மட்டும் மேலே நின்றது. பூதம் உள்ளே நுழைந்தவுடன் பின்புறமாக வந்து கதவைத் தாளிட்டது.

ஏழு பூனைகளும் சேர்ந்து கோபுரத்தைக் கீழே சாய்த்தன. கோபுரம் தரையில் பட்டவுடன் ஒரு சிறிய பெட்டியாக மாறிவிட்டது.
“இனிமேல் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை; பூதத்தைப் பெட்டியில் அடைத்து வைத்திருக்கிறேன்; உயிரோடு நம்மிடம் அகப்பட்டுக் கொண்டது,” என்று ஏழாவது பூனை சொல்லிற்று.
“இளவரசியைக் கொண்டுபோய் அரசனிடம் ஒப்புவித்து விடலாம்,” என்று தாய்ப்பூனை சொல்லிற்று.
எல்லோரும் அரண்மனையை நோக்கிச் சென்றனர். பூதம் பெட்டியுடன் உருண்டு சென்றது.
இளவரசி நடந்த சங்கதிகளை எல்லாம், அரசனிடம் சொன்னாள்.
பூதத்தைக் கொல்லுகிறவருக்கு இளவரசியை மணம் செய்துகொடுப்பதாக அரசன் பறைசாற்றினான்.
பெட்டி உருண்டுகொண்டே ஓடிற்று. பெரிய பூனை ஓடிப் பிடித்துப், பூதத்தைப் பெட்டியுடன் ஆற்றில் வீசி எறிந்தது.
அரசன் பெரிய பூனைக்குப் பெண்ணைக் கொடுக்க இசைந்தான். அவன் சொல்லி வாய் மூடுவதற்குள், ஏழு பூனைகளும் இளவரசர்களாக மாறிவிட்டனர். தாய்க்கும் மனித உருவம் வந்துவிட்டது.
ஒரு மந்திரவாதி அவர்களை எல்லாம் பூனைகளாக மாற்றியிருந்தான். இளவரசியைப் பூனைக்குத் திருமணஞ்செய்து கொடுத்தவுடன், சாபம் நீங்கிற்று.
இளவரசனும் இளவரசியும் இன்பமாக வாழ்ந்து வந்தார்கள். தாய்ப்பூனை அவர்களை அன்புடன் ஆதரித்து வந்தது.
– கழகக் கதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: ஜனவரி 1951, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.