ஏலியன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 162,301
மருத்துவமனை வளாகம் ஒரே பரபரப்பாக இருந்தது. வெளியே செய்தி சேனல்களும், பத்திரிக்கையாளர்களும் நேரலையில் ஆளுக்கொரு கருத்தை கூறிகொண்டும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அழுகைகளை படம் பிடித்து கொண்டும் இருந்தனர். மருத்துவமனை ஊழியர்கள் அங்கும் இங்கும் ஓடிய வண்ணம் காயம்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்து கொண்டு இருந்தனர். மருத்துவமனையே அழுகுரலால் நிரம்பி வழிந்தது.
மருத்துவமனை முழுவதும் போலீஸ் கட்டுபாட்டில் இருந்தது. உள்ளே இருந்து மருத்துவமனை டீன் வெளியே வரவும், பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கேள்விகளை அடுக்கினர்.
இதுவரை எத்தனை உயிர் போயிருக்குது? எத்தனை பேர் காயம் பட்டிருக்கிறார்கள்? இன்னும் எத்தனை பேர் கவலைக்கிடமாக உள்ளனர், என்பது போன்று அடுக்கடுக்காக கேவிகளை மாறி மாறி கேட்கின்றனர்.
டீன் அவர்களை பார்த்து, எக்ஸ்கியூஸ்மீ… எக்ஸ்கியூஸ் மீ… நானே சொல்றேன். என்றபடி அவர்களை பார்த்து கை காட்டி.. பேச ஆரம்பிக்கிறார்.
பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 24 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதில் 4 பேர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டனர். 16 பேர் பலத்த காயங்களுடன் ஐசியு வில் உள்ளனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுதான் இப்போதைய நிலவரம். என கூறி அங்கிருந்து செல்கிறார்.
சற்று தள்ளி நின்றிருந்த Dsp, டீனை பார்த்து,” எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் கம்மியா சொல்லி இருந்திருக்கலாம் டாக்டர்” என சொல்ல. டீன் அவரை பார்த்து, இதுவரை 15 பேர் உயிரிழந்திருக்கிறாங்க, நான் 4-ன்னு தான சொல்லிருக்குறேன். எவ்ளோ நேரம் உண்மைய மறைக்க முடியும்” என கேட்கிறார்.
கரெக்ட்டு தான் டாக்டர்,” சென்சிடிவ் நியூஸ் அதான் கேட்டேன்” என Dsp சொல்ல.
அவரை தனியாக அழைத்த டீன் “ இதவிட பெரிய சென்சிடிவ் ப்ராப்ளம் ஒன்னு வந்திருக்கு ” உள்ள வாங்க என கூறி, டீன் தன் அறையை நோக்கி செல்ல, Dsp குழப்பதுடன் அவரை பின் தொடர்ந்து செல்கிறார்.
உள்ளே சென்ற Dsp க்கு டீன் பேசுவதை கேட்டு வியர்த்து ஊற்றுகிறது. போனை எடுத்து யார் யாரிடமோ பேசுகிறார். சிறிது நேரத்தில் அங்கு மாவட்ட கலக்டர் ஆஜராகிரார். கூடுதல் காவல் துறை வண்டிகள் அணிவகுத்து வருகின்றன. அரசாங்க உயர் அதிகாரிகள் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது. இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. சற்று நேரத்தில் அந்த மருத்துவமனை முழு இராணுவ கட்டுபாட்டில் வருகிறது.
விபத்து தகவலை சேகரிக்க வந்திருந்த ஊடகவியலாளர்கள் அப்புற படுத்த படுகிறார்கள். என்ன நடக்கிறது என்று யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. பெரிய அரசியல் கட்சி தலைவர் யாரேனும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு உள்ளனரா? இல்லை தீவிரவாதி யாரேனும் அட்மிட் ஆகி உள்ளனரா? என்று செய்தியாளர்கள் அவர்களுக்குள் கேள்விகளை கேட்டுக்கொள்கின்றனர்.
அப்போது பாதுகாப்பு துறை அமைச்சர் கார் வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைச்சர் காரில் இருந்து இறங்குகிறார். அவரை தொடர்ந்து இன்னொருவரும் இறங்குகிறார். உற்று பார்த்தால் அது முதலமைச்சர். செய்தியாளர்களுக்கு மேலும் சந்தேகம் வலுக்கிறது. புரோட்டோக்கால் எல்லாம் தவிர்த்து முன் அறிவிப்பின்றி முதலமைச்சர் எதுக்கு இங்கு வரணும். அதுவும் பாதுகாப்பு அமைச்சர் காரில் ஏன் வர வேண்டும்? என்பது போன்ற விவாதங்களை உடனே ஆரம்பித்து தொலைக்காட்சியில் நேரலையில் பரபரப்பாக எப்போதும்போல் வேலை வெட்டி இல்லாதவர்களை அழைத்து விவாதிக்க தொடங்கி விட்டனர்.
முதலமைச்சரும், அமைச்சரும் வருவதை பார்த்து கலக்டரும், இராணுவ உயர் அதிகாரிகளும் அவரை வரவேற்று மருத்துவமனை உள்ளே அழைத்து செல்கின்றனர். டீன் முதலமைச்சரை வணங்குகிறார்.
“ விசயம் வேற யாருக்கும்…” என முதலமைச்சர் கேட்கும் முன்பே டீன் குறுக்கிட்டு,
“ இல்லை சார், இங்கே மருத்துவமனைல என்னை சேர்த்து மூன்று பேருக்கு மட்டும் தான் தெரியும். மேலும் Dsp, கலக்டர்க்கு மட்டும் தான் தெரியும்” என்று சொல்ல.
“ சரி போய் பாக்கலாமா ” என முதலமைச்சர் கேட்க.
டீன் ம்.. என்று தலையை ஆட்டுகிறார்.
கலக்டர் குறுக்கிட்டு, வெளியே பத்திரிக்கையாளர்கள் என்ன என்னனு காத்துட்டு இருக்கிறாங்க. முதல்ல பேருந்து விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்றுவர்றவங்கள பார்த்திட்டு போகலாம் என சொல்ல.
முதலமைச்சர் “ அதுவும் சரிதான்” என சொல்லி காயம்பட்டவர்களை பார்க்க செல்கிறார். முக்கியமானவர்கள் மட்டும் பின் செல்கிறார்கள். காயம் பட்டவர்களை ஒவ்வொருவராக நலம் விசாரிக்குறார். அதை பார்த்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுகின்றனர். காயம் பட்டவர்களை முதலமைச்சரே நேரடியாக வந்து விசாரிக்கிறார் என செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர்.
அங்கிருந்து டீன், முதலமைச்சர், கலக்டர், அமைச்சர் இன்ன பிற மூன்று நபர்கள் மட்டும் அங்கிருந்து உள்ளே மூடிய அரை ஒன்றிற்குள் செல்கின்றனர். அங்கு ஏற்கனவே நான்கு நபர்கள் ஒரு கண்ணாடி பெட்டியை சுற்றி நின்றுகொண்டு இருகின்றனர். இவர்கள் அனைவரும் அந்த கண்ணாடி பெட்டியின் அருகில் சென்று சுற்றி நிற்கின்றனர். கண்ணாடி பெட்டியின் உள்ளே பேருந்து விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் வைக்க பட்டுள்ளது. அனைவரும் மிரட்ச்சியுடன் அந்த உடலை பார்த்துகொண்டு இருகின்றனர்.
“ எப்படி கண்டுபிடிச்சீங்க? ”என முதல்வர் கேட்க, டீன் அந்த நபரின் போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட்டை முதல்வரிடம் கொடுத்து விவரிக்குறார். “ விபத்துல இறந்தவங்க எல்லார் உடலையும் போஸ்ட் மாட்டம் பண்ணினோம். அப்பதான் இந்த உடல்ல இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற எந்த உறுப்புகளுமே இல்லைன்னு தெரிந்தது. மூளை மட்டுமே இருக்கு ஆனா அதுவும் வயிற்றுபகுதில ரொம்ப சிறிய அளவுல இருக்கு.
இரத்த நாளங்கள் மூலமா இரத்தவோட்டம் நடந்திருக்கு ஆனா இரத்தம் வெளியேற வெளியேற உடனே ஊறிருது. தானாக தமனிகள்ள இரத்தம் உற்பத்தியாகுது. சுத்தமா இதய துடிப்பே இல்லை. நமக்கு கண்னோட கருவிழி கருப்பா மட்டும் தான் இருக்கும். ஆனா இந்த உடல்ல கருவிழிய சுத்தி நீல நிறத்தில் ஒரு வளையம் வேற இருக்கு. தலைல சிக்னல் ரிசீவர் மாதிரி எதோ ஒன்னு இருந்திருக்கு. விபத்துல தலைல அடிபட்டதுனால அந்த ரிசீவர் டேமேஜ் ஆகி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம். இல்ல மூளைப்பகுதில ஏற்பட்ட காயத்துனாலையும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்” இந்த காரணம்களை வைத்துதான் இது மனித உயிர் இல்லை. மனித உருவத்தில் இருக்கும் எதோ ஒரு அமானுஷ்யம் என்பதை உணர்ந்து உங்களுக்கு தகவல் தெரிவித்தோம்” என சொல்கிறார்.
அவர் பேசியதை கேட்டு அனைவரும் பேயறைந்தது போல் முழிக்கின்றனர். இந்திய விண்வெளி ஆராச்சியில் இருந்து வந்தவர்களில் ஒருவர் முதல்வரை பார்த்து,
“ இப்ப வர நாங்க ஆராய்ச்சி பண்ணதுல கண்டிப்பா மனித இனம் கிடையாது. இது ஏலியனா கூட இருக்கலாம். ஆனா கன்பார்மா சொல்ல முடியாது. இந்த உடலுக்கு சொந்தமானவர் இறந்து மூணு மாசம்தான் ஆகுதுன்னு காவல்துறை இவரின் கை ரேகையை வைத்து அவரின் தகவலை எடுத்து அவரின் ஊரில் விசாரிச்சாச்சு ரிப்போர்ட் குடுத்துருக்குறாங்க. அப்போ இப்ப சமீபமா தான் இது இந்த உடலுக்குள்ள வந்திருக்குது. இங்க வச்சு எங்களால இதுக்கு மேல ஆராய முடியாது, அதுக்கு உண்டான வசதிகளும் கருவிகளும் இங்க கிடையாது. அதனால இந்த உடலை எங்க இடத்துக்கு எடுத்துட்டு போனாதான். உடலை முழுவதாக அராய்ந்து எங்களால ஒரு தகவலை சொல்லமுடியும் என கூறுகிறார்.
“ PM கிட்ட பேசிட்டு சொல்லுறேன் வெயிட் பண்ணுங்க ” என்று அவர்களை பார்த்து கூறிய முதல்வர், அமைச்சரை பார்த்து, “ என்னையா பாதுகாப்பு… பெரிய ஆப்பா… இருக்கு..
ஏலியன் உருவம் கொடூரமா இருக்கும், அதுக்கு இரத்தம் பச்சை கலரா இருக்கும், பறக்கும் தட்டுல வரும்னு தான நாம இதுவர கேள்வி பட்டிருக்கோம், இப்ப என்னய்யா மனுஷ ரூபத்துல கவர்மென்ட் பஸ்சுல வந்திருக்கு? இதுமாதிரி எத்தனை வந்திருக்குதோ ? என கேட்கிறார்.
அதற்க்கு அமைச்சர், ஆமாணே வந்தது தான் வந்துச்சு வடக்குபக்கம் முதல்ல வந்திருக்கலாம்ல இங்க வந்து நம்ம உயிரை வாங்குது என சொல்ல. முதலமைச்சர் அவரை முறைத்து பார்த்துவிட்டு அங்கு ஏற்ப்பாடு பண்ணியிருந்த கான்பாரன்ஸ் மீட்டிங்கிற்கான ரூமின் உள்ளே செல்கிறார்.
மற்ற உயர் அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்து ரூமினுள் செல்கின்றனர். அப்பொழுது அமைச்சரின் போன் ரிங் ஆகிறது.
எடுத்து பேசுகிறார். அவரின் மனைவி.
“ ஏங்க நீங்க சொன்ன அந்த இதயமில்லாத உருவத்துகிட்ட போயிடாதிங்க அது கூடுவிட்டு கூடு பாயிறமாதிரி உங்க மேலேயோ, மத்தவங்க, இல்ல முதலமைச்சர் மேலையோ ஏறிரபோகுது பாத்துங்க ” என சொல்லி போன் கட்டாகிறது.
அமைச்சர் முகம் வியர்த்து ஊற்றுகிறது. முகத்தை துடைத்தவாறு மீட்டிங் ரூமினுள் சென்று அமர்கிறார். அங்கு அமர்ந்திருக்கும் அணைத்து உயர் அதிகாரிகள் முகத்தையும் ஒருவித பயத்துடனே பார்கிறார். மனைவி போனில் சொன்னது நினைவில் வருகிறது படபடப்பு அதிகமாகிறது. கண் மங்கலாக தெறிகிறது. கை நடுங்குகிறது.
முதலமைச்சர் இவரை பார்த்து,
“ யோவ் பாதுகாப்பு என்னையா ஒருமாதிரி இருக்க ” என கேட்கவும் முதலமைச்சரை முகத்தை நேருக்கு நேர் பார்க்கிறார் . அடுத்த நொடி அமைச்சர் மயக்கம் போட்டு கீழே விழுகிறார். முதலமைச்சர் கண்ணின் கருவளையத்தில் நீல நிற வட்டம் தெரிகிறது..
மிகசிறப்பான கதை. நீங்கள் நிச்சயம் குறு பெரு நாவல் கண்டிப்பாக நாவல் எழுதலா. அருமையான நடை, அட்டகாசமான சொல்திறன். பாராட்டுக்கள்.