எழுச்சி
தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் நடிகர் பிஸ்வஜித்தை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.
அவர்தான் தமிழகத்தின் தற்போதைய உச்ச நடிகர். மிகவும் பண்பானவர். கோடி கோடியாக சம்பாத்தித்தாலும், திரைப்படத் துறையில் உள்ள ஏழை எளிய தொழிலாளர்களுக்கு நிறைய வீடு கட்டிக் கொடுத்து அவர்கள் நலம்பெற வாழ துணை புரிந்தவர். அது தவிர விளம்பரம் இல்லாமல் பலருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார், செய்தும் கொண்டிருக்கிறார்.
பிஸ்வஜித்தின் பெற்றோர் ராஜஸ்தானிலிருந்து அறுபது வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு பிழைப்புத்தேடி வந்தனர். அதனால் பிஸ்வஜித் பிறந்து வளர்ந்தது, கல்வி கற்றது, திருமணம் செய்து கொண்டது அனைத்தும் சென்னையில்தான். தற்போது அவருக்கு வயது ஐம்பத்தி ஐந்து. ஆனாலும் இன்றும் அவர்தான் தமிழகத்தின் முதல்தர கதாநாயகன்.
அவர் நடிக்கும் படங்களில் குடி, சிகரெட் போன்றவைகளின் தீமைகளை விளக்கி மக்களை நல்வழிப்படுத்த மெனக்கிடுவார். தனிப்பட்ட வாழ்விலும் அவருக்கு ஒரு கெட்டபழக்கமும் கிடையாது. தினமும் யோகா செய்து தன் உடம்பை ட்ரிம்மாக வைத்திருப்பவர். அவரது முப்பத்திமூன்று வருட சினிமா உலக வாழ்க்கையில் அவரைப்பற்றி கிசு கிசுக்கள் எதுவுமே வந்தது கிடையாது.
தனது இருபத்திரண்டாவது வயதிலிருந்து கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் விறுவிறுப்பாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்பதால் அவைகள் நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடும். அதனால் பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் பட்டாளமே அவர் வீட்டில் எப்போதும் காத்துக்கிடக்கும்.
அன்று மார்ச் எட்டாம்தேதி. மகளிர்தினம்.
சென்னையின் ஒரு பிரபல மகளிர் அமைப்பில் சிறப்புரையாற்றினார். அந்த மகளிர் அமைப்பினர் ஏகப்பட்ட நலத்திட்டங்களை அறிவித்து, ஏழை எளிய பெண்களுக்கு தையல் மெஷின், பசு மற்றும் எருமை மாடுகள், ஆடுகள் கொடுத்து சிறுதொழில் தொடங்க அவர்களுக்கு உதவினர். அந்த மகளிர் அமைப்புக்கு பிஸ்வஜித் சில லட்சங்கள் நிதியாக கொடுத்து உதவினார்.
அன்று இரவு வீட்டுக்கு வந்தவர், தூக்கம் வராது திடீரென பலமான யோசனையில் ஆழ்ந்தார்.
பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து இன்று தான் ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு தமிழக மக்கள்தான் காரணம். அவர்களுக்கு பெரிதாக தன்னால் திருப்பி என்ன எதிர்மரியாதை செய்ய முடியும்? என்று யோசித்தார்.
நெடுவாசல் மக்கள் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அடிக்கடி சிறை வைக்கப்பட்டு, மீன்பிடிப் படகுகள் பறிமுதல்செய்யப்பட்டு, சில சமயங்களில் துப்பாக்கி சூட்டில் இறப்பையும் எதிர்கொண்டு…..ச்சே ! இந்த மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வே காணமுடியாதா என்ன? இந்த மக்கள் உழைக்கும் வர்க்கம். கடலில்தான் அவர்களின் வாழ்வாதாரமே! அனைவரும் வெள்ளந்தியானவர்கள்.
விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு. அவர்களில் பலர் வறுமையிலும், கடனிலும் மூழ்கி தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது எவ்வளவு பெரிய வேதனையான விஷயம்? ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டால், நம் நாட்டில் வசிக்கும் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும். தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி தான் ஒரு மாபெரும் அறப்போராட்டம் நடத்தினால் என்ன? நாமும் ஒரு நல்ல குடிமகனாக களத்தில் இறங்கினால் என்ன?
தன்னால் எவ்வாறு இந்த சமூகத்திற்கு ஒரு பெரிய அளவில் உதவ முடியும் !? பிஸ்வஜித் ஒரு குழப்பமான யோசனையில் அன்று தூங்கிப்போனார்.
மறுநாள் ஷூட்டிங்கிலும் அவருக்கு இதே நினைப்புதான். தன்னுள் ஒரு மாற்றம் ஏற்படுவதை பிஸ்வஜித் உணர்ந்தார்.
அன்று இரவும் தூக்கம் வராது, அவரது சிந்தனைகள் அரசாங்கத்தால் உதாசீனப் படுத்தப்படும் ஏழை எளிய மக்களின், விளிம்புநிலை மனிதர்களின் துன்பங்களை வரிசையாக நினைவூட்டின. இத்தனை வருடங்களாக தாம் இதுகுறித்து கவலைப்படாமல் இருந்ததற்காக வெட்கினார்.
கடந்த ஜனவரியில், சென்னை மெரீனா உட்பட, தமிழகம் முழுவதும் நடந்த எழுச்சிமிக்க ஜல்லிக்கட்டு போராட்டங்கள், உலகெங்கும் தமிழர்களின் அதிலும் குறிப்பாக நம் இளைஞர்களின் பெருமைகளை பறைசாற்றின. ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மக்கள் இடையே எழுந்த உணர்ச்சிபூர்வமான கோஷங்கள், போராட்டங்கள், கருத்து பரிமாற்றங்கள், தமிழ் இனத்துக்கு உலகளவில் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன.
மிகவும் கண்ணியத்துடன், அமைதியாக, யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யாமல், தங்கள் பொறுப்பை உணர்ந்து, மிகுந்தக் கட்டுப்பாட்டுடன் நடந்த அந்தப் போராட்டம், சுதந்திரத்துக்காக மகாத்மாகாந்தி தலைமையில் நடந்த அறப்போராட்டத்திற்கு நிகராக கூறப்படுகிறது.
இன்று அரசியல் என்பது, ஊழல் செய்வதற்கான ஒரு களமாக மாற்றப்பட்டுள்ளது. நல்ல, நேர்மையான கொள்கை உள்ளவர்கள் சிறுபான்மையினராகி விடுவோமோ என அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்காக நடந்த போராட்டம் போல, அரசியலில் இருந்து மக்களுக்கு எதிரானவர்களையும், ஊழல்வாதிகளையும் விரட்டியடிக்கும் போராட்டத்தை துவக்க, தற்போதைய இளைஞர்கள் முன்வர வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள், நடுநிலையாளர்கள் என, அனைத்து தரப்பினரும் ஒவ்வொரு நேர்மையான போராட்டத்திலும் ஒன்றுசேர வேண்டும். இது சாத்தியமா? நான் இந்த நாட்டின் ஒரு நேர்மையான குடிமகன்தானே! அதனால் என்னால் அவர்களை ஒன்று சேர்க்க முடியும்…. என்னால் மக்களை நேர்மையான போராட்டத்திற்காக ஒன்று திரட்ட முடியும். இது எனக்கு கண்டிப்பாக சாத்தியம்.
முதலில் இதை என் குடும்பம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இதில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும். இருபது வயது இளைஞனான என் மகனிடமிருந்து இது ஆரம்பிக்கப்பட வேண்டும். உடனடியாக படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தார். மகன் தீபக்கின் படுக்கையறைக்கு விரைந்து சென்றார். அங்கு அவன் தூங்காது ஏதோஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.
கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றார். அப்பாவின் இந்த திடீர் நுழைவினால் தீபக் பதட்டப்பட்டு “என்னப்பா, என்ன ஆச்சு?” என்றான்.
“டேய் தீபக்….எனக்கு ரெண்டு நாளா தூக்கம் வரலடா. நம் மக்களின் அறியாமையும், தங்களின் பலம் புரியாத அவர்களின் அப்பாவித்தனமும்….குறிப்பாக நம் விவசாயிகளும், மீனவர்களும் படும் நிரந்தர வேதனை……அவர்களுக்காக நான் ஏதாவது செய்யணும்டா.”
“கண்டிப்பாக அப்பா….இந்த புத்தகத்தை படிச்சுப் பாருங்கப்பா. இது சேகுவாராவின் வாழ்க்கை வரலாறு. அவர் நினைத்திருந்தால் ஒரு காலகட்டத்தில் தன் வாழ்க்கையை சுகமானதாக திருப்பியிருக்கலாம்…ஆனால் போராட்டமே அவரின் தொடர் வாழ்க்கையாகி, போராடியே தன் இறப்பை சந்தித்த மகான்பா அவரு.”
அந்தப் புத்தகத்தின் அட்டையை பெருமையுடன் காண்பித்தான்.
“உங்களுடைய இந்த தொலைநோக்கில் என்னையும் முதல் ஆளா சேர்த்துக்குங்கப்பா. ஏதாவது வித்தியாசமா நாம் யோசிச்சு செய்யணும்பா. எல்லாப் போராட்டங்களிலும் பந்த் அறிவித்து ரயில், பஸ் மறியல் செய்து, கடைசியில் நம் பாமர மக்கள்தான் இதில் அவதியுறுகிறார்கள்….கஷ்டப் படுவது ஏழைகள்தான். அதனால நாம் அறிவிக்கப் போகிற போராட்டங்களில் பணக்காரர்களை மட்டும் குறிவைத்து அவர்களை சிறிது கஷ்டப் படுத்தினாலே போதும், நாடே அலறும்… நமது நியாயமான கோரிக்கைகள் உடனே ஏற்கப்படும்.
“அது எப்படி தீபக் பணக்காரர்களை மட்டும் குறிவைக்க முடியும்?”
“நல்லா யோசிச்சு பாருங்கப்பா, உங்களுக்கே புரியும்.”
பிஸ்வஜித் சற்று நேரம் யோசித்தார். அவருக்கு ஒன்றும் புரிபடவில்லை.
மிகுந்த ஆர்வத்துடன், “நீயே சொல்லுடா” என்றார்.
“நம் போராட்டங்கள் அனைத்தும் முக்கியமாக அஹிம்சையை பிரதானமாக கொண்டிருக்க வேண்டும். போராடுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக நம் நாட்டின் தேசியக் கோடியை போர்த்திக் கொள்ளவேண்டும். எந்த வகையான போராட்டத்திலும் முதலில் சென்னை, கோயமுத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள விமான நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட வேண்டும். அதாவது விமான நிலையங்களை நோக்கிச்செல்லும் சாலைகளுக்குச் சென்று போராட்டக்காரர்கள் அனைவரும் கோஷங்களை எழுப்பியபடி அமர்ந்து விடவேண்டும்.”
“ஆமாண்டா இதை மட்டும் நாம் முனைப்புடன் செய்தால் போதும். விமானத்தில் பயணம் செய்பவர்கள் மட்டும்தான் அவதியுறுவர். அந்த பயணிகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு நம் அரசாங்கம் உடனே நம்மிடம் பேச்சு வார்த்தை நடத்தும்.”
இருவரும் ஆனந்தத்தில் கட்டிப் பிடித்துக்கொண்டனர்.
பிஸ்வஜித் உற்சாகமாகச் சொன்னார்: “இனி நாம் வழிநடத்திச் செல்லும் போராட்டங்களின் போது, தமிழகத்தில் ஒரு விமானம் பறக்காது.”
நிம்மதியாக தன் அறைக்குச் சென்று உறங்கினார்.
அடுத்த இரண்டு நாட்களில், தமிழகத்திலிருந்து வெளிவரும் அனைத்து தமிழ், ஆங்கில தினசரிகளும் பரபரப்பான செய்தியை வெளியிட்டன. அதானது:
திரைப்பட உலகைவிட்டு நடிகர் பிஸ்வஜித் விலக திடீர் முடிவு
ஜூன் 15, சென்னை:
நடிகர் பிஸ்வஜித் உடனடியாக நடிப்பதை நிறுத்திக்கொண்டு, மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு தொடர் போராளியாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். இன்று அவர் நிருபர்களை தன் வீட்டில் அவசரமாக சந்தித்தார்.
தயாரிப்பாளர்கள் நஷ்டப்படாமல் இருக்க, தன் கைவசம் உள்ள இரண்டு படங்களை மட்டும் நடித்து முடித்துவிட்டு, உடனடியாக தமிழக மக்களின் உரிமைக்காக நேர்மையான போராட்டங்களில் அவர்களுடன் இணைந்து செயல் படப் போவதாகவும், இதற்கான அவரது வியூகங்கள் வித்தியாசமாக இருக்கப் போகிறதென்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
“நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டுள்ளவர்களின் கைப்பாவைகளாக இளைஞர்கள் சென்று விடாமல் இருக்க, கவனமாக ஆராய்ந்தறியும் அறிவு இந்தக் கால இளைஞர்களுக்குத் தேவை. இல்லையேல், இளைஞர்களின் அபரிதமான சக்தியை, இத்தகையவர்கள் நாட்டின் அழிவுக்கு பயன் படுத்திவிடுவர்.
ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று விட்டேத்தியாக இல்லாமல், நாளைய வளர்ந்த, பொருளாதார வல்லரசு நாட்டை உருவாக்கும் கருவி, தாங்கள்தான் என்பதை உணர்ந்து இளைஞர்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்.
அப்போது அவருடன் இருந்த அவரது ஒரேமகன் தீபக், “வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளை உருவாக்க மாட்டோம்; அவர்களுக்கு ஆதரவாக செயல்பட மாட்டோம்; அவர்களின் மறைமுக சதித் திட்டங்களைப் புரிந்துகொண்டு நாட்டுக்கு எது நல்லது என உணர்ந்து, அறிந்து அதற்காக நேர்மையான முறையில் மக்களுடன் சேர்ந்து வித்தியாசமாக போராடுவோம்” என்றார்.
“அதென்ன வித்தியாசமாக?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
“தாம் எந்தக் கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும், சொந்தமாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணமும் தனக்கில்லை என்றும்” நடிகர் பிஸ்வஜித் நிருபர்களுக்கு விளக்கினார்.
பிஸ்வஜித்தின் இந்த அதிரடி அறிவிப்பு, பல அரசியல்வாதிகளின் வயிற்றைக் கலக்கியுள்ளது என்பது என்னவோ உண்மை.