எல்லோரும் கொண்டாடுவோம்




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊர் முழுவதும் ஒன்றுகூடிக் கோலாகலமாய் நாட்டின் சுதந்திர தினவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரம். அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள் அழகாய் உடுத்திக்கொண்டு அப்பா அம்மாவோடும், அண்ணன் அக்காவோடும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கொய்த்தியோ கடை ஆசெங் காலையிலேயே அழகிய மலேசியக் கொடியைத் தன் கடையின் முன்புறக் கம்பில் கம்பீரமாய்ப் பறக்கவிட்டு, அதற்கு உற்சாகமாய்ச் சல்யூட் அடித்துவிட்டு வியாபாரத்தை ஆரம்பிக்கிறார்.
வங்சாக் கடை வீரப்பன் பிள்ளை தம் காரில் வந்து இறங்கி உள்ளே வைத்திருந்த தேசியக் கொடியை எடுத்துக் கடையின் முன்புறத்தில் மிகமிக பயபக்தியோடு செருகிவிட்டுக் கைகுவித்துக் கும்பிட்டுவிட்டுக் கடையைத் திறக்கிறார்.
நாசிகாண்டா யூசோப் தம் பத்துவயதுப் பையனை அழைத்து அவனுக்கு நாட்டின் சுதந்திர தினம் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை விளக்கி அவன் கையில் அதை ஏற்றிவைக்கச் சொல்லி மரியாதை செலுத்துகிறார்.
எங்கும் குதூகலம்! எங்குப் பார்த்தாலும் கொண்டாட்டம். கும்மாளம். வான் வெளியில் சாகசங்கள். வான்குடை வழி பறக்கும் காளான்களாய்ப் பவனி வருகின்ற வான்குடை வீரர்கள்.
முழுமையாய்… கொஞ்சம்கூட குறையாமல் நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பும் வானொலியும் தொலைக் காட்சியும். எதிர்புறத்திலிருக்கும் சாப்பாட்டுக் கடையில் பொதுமக்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ள தொலைக் காட்சியில் தேசிய தின நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சிவராமனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. ஓய்வாக சாய்ந்து கிடந்த உடம்பை ஒருமுறை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்து உட்காருகிறார்.
கண்களில் தொலைக்காட்சி முழுமையாய் ஆக்கிரமித்து கொள்ள இமைக்காமல் பார்க்கிறார். நாட்டின் தலைவர்கள் வரிசைபிடித்து நிற்கும் கண்கொள்ளாக் காட்சி. அந்தக் காட்சியை ஆணித்தரமாய் அழுத்தும் நினைவுக்குள் நீந்தும் அந்த சுதந்திர கானம்!
சிவராமன் மெய் சிலிர்த்துப் போகிறார்.
“ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமா?”
அமரகவி பாரதியின் அந்தக் ஏக்கக்குரல்…! ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குமுன் ஓர் உணர்ச்சிமிக்க இளைஞனாய். கட்டுக்கடங்காத காளையாய்ச் சுதந்திர தாகம் கொண்டு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பின்னால் புயலென திரண்ட காலத்தில் சிறுவர்களாய் விளையாடிக்கொண்டிருந்த அன்றைய சிறுவர்கள்தாம் மாண்புறப் போற்றும் இன்றையத் தலைவர்களாகிய இவர்கள்!
சிவராமன் கண்களை மூடுகிறார். நெஞ்சிலே பொங்கிய புனல் இப்போது கண்களில் கானல்வரி பாடுகிறது. கடந்துபோன காலத்தின் சுவடுகள்…
தமிழாசிரியராக இந்த நாட்டுக்குள் காலடி வைத்துக் கலிடோனியா தோட்டத்தில் தம்முடைய பணியைத் தொடங்கிய சிவராமன். வந்த காலத்திலேயே மனதில் வைத்த ஒரே உறுதி ஏற்பட்டுவிட்ட வளர்ச்சியும் மலர்ச்சியும் அவருக்கு நிம்மதியான சூழ்நிலையைக் கொண்டு வந்திருந்தது.
நான்கு பிள்ளைகள் ! நால்வருமே ஆண்மக்கள். நன்றாகப் படித்தார்கள். நிறைய செலவழித்தார். மனைவி செண்பகவல்லி. தாய்நாட்டிலிருந்து தான் கொண்டு வந்திருந்த சீதனமான உயரிய பண்புகளால் அவருக்குத் துணையாக அவரது அனைத்து சுக துக்கங்களையும் தாங்கும் தூணாக இருந்து தன் மத்திய வயதிலேயே காலமாகிப் போனாள்.
பிள்ளைகள் பெரியவர்களானார்கள். சிறகுகள் விரிக்கத் தொடங்கின. நான்கு பேரும் நான்கு விதமாகி நான்கு பாதையில் போனார்கள். மனைவியின் இழப்புக்குப் பின் அன்போடு பராமரிக்க ஒரு பெண் குழந்தை என்று கனவு கண்டிருந்த மனம் இப்போது வாடத் தொடங்கியது.
பல இனமக்கள் ஒன்று சேர்ந்து பல சமய இன கலாச்சாரப் பண்புகளோடு வாழ்கின்ற நாட்டில் ஒரு தாய் மக்கள் ஒன்றாய் சேர்ந்து வாழாமால், வந்தவள் பின்னால் போய்விட்ட அவலம் கண்டு மனம் பொறுக்க முடியாமல் தனித்து வந்து விட்ட சிவராமன், தம் ஆதி காலத்திய நண்பரின் வீட்டில் தங்கி கொண்டு தம் சொத்து சுகங்களைச் சொந்தபந்தங்களை விட்டு ஒதுங்கி தனிமையாய்க் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் நேரம் அது!
சுமார் பத்து வருடமாய் இந்த அஞ்ஞாநவாச நிலை.
என்றைக்கு நான்கு பிள்ளைகளும் சேர்ந்து தம் மனைவி மக்களோடு தம்மைக் காண வருவார்களோ அன்றைக்குத்தான் நான் என் சொந்த வீட்டுக்குத் திரும்புவேன்; அதுவரை இப்படியே என் வாழ்நாள் கழியட்டும் என்று நண்பரோடு பிடிவாதமாய்த் தங்கிப் போனவர்.
ஒற்றுமை என்பதை அறவே மறந்துவிட்ட சமுதாயத்தில் பிறந்து விட்டோமே என்று மனம் ஆதங்கப்பட்டது. எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு அல்லல்படடு இம்மண்ணுக்குச் சுதந்திரம் வாங்கினோம். மூன்று இன மக்களும் ஒரு தாய் பிள்ளைகளாய் கை கோர்த்து வாங்கிய சுதந்திர நாட்டில்.. ஒரு தாய் வயிற்று மக்களுக்கிடையே ஒற்றுமை இல்லாதது எவ்வளவு பெரிய கொடுமை! அதை அவர்கள் எப்போதுதான் உணரப் போகிறார்கள்…!
சிவரமான் பழைய நினைவுகள்… குடும்ப நினைவுகளில் இருந்து மீள்கிறார். கடைக்குள்ளிலிருந்து மெர்டேகா! என்று சீனக் குழந்தை கொடியுடன் ஓடிவந்தாள். கைதட்டி அவளை அழைக்கிறார்… பாச்சி. எனறு செல்லமாய் கூவிக்கொண்டு குழந்தை அவர் மடியில் வந்து உட்கார்ந்து கொள்கிறாள். அவளை அன்பொழுக அணைத்து உச்சிமோர்ந்து முத்தமிடுகிறார். நெஞ்சு விம்முகிறது. கண்களில் நீர் ததும்புகிறது.
முப்பத்தெட்டு ஆண்டுகளக்கு முன் தேசத்தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் குரல் ஒலித்த அந்தக் காட்சி. அந்த அரிய சுதந்திரத்தைப் பெற்றுவிட்ட பெருமையோடு கை உயர்த்திக் குரல் எழுப்பிய மாட்சி…!
சிவராமன் குழந்தையை வைரமாய்.. தங்கமாய் அள்ளிக் கொஞ்சுகிறார். நெஞ்சிலே ஓரு சிறு ஓசை.
இது என் வீடு! என் நாடு! என் உயிர் உள்ளவரை இதுவே என் சொந்தம்… என் உயிரும் உடலும் இம்மண்ணுக்கே சொந்தம்.. என் பிள்ளைகள்?
என் உடலும் உயிரும் இம்மண்ணுக்கு நான் அர்ப்பணித்தேன்!
என்ற சத்திய வாக்குதான்.
தனக்குத்தானே அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மற்றவர்கள் எல்லாம் இரைதேடிக்கொண்டிருக்கும்போது மட்டும், இது என் வீடு, என் நாடு என்ற எண்ணத்தில் கால்களை ஆழமாய் ஊன்றிக் கொண்டவர் சிவராமன். ஆழமாய் ஊன்றிய கால்கள் வெறுமனே ஊன்றிநிற்கவில்லை. சுதந்திர வேட்கையில் இந்திய மண்ணிலே இந்தியர்கள் போராடிக் கொண்டிருக்கிற காலத்தில், கல்விகற்றுக் கொண்டிருந்த இளைஞராகையால் அந்த ஆர்வமும் வேகமும் போராட்ட உணர்வும் இந்த மண்ணில் பீறிட்டு எழுந்தது.
இரண்டாவது உலகப்போரின் போது ஜப்பானியர்கள் மேற்கொண்ட ரயில்பாதை முயற்சியில் தன் உறவினர்களை இழந்தவர்கள் பலர். போர்க் கைதிகளையும் கட்டாயப்படுத்திக் கொண்டு வரப்பட்ட இளைஞர்களையும் நடுத்தர வயதினரையும் ஜப்பானியர்கள் இவ்வேலையில் குவித்தார்கள்.
அடர்ந்த காடுகளுக்கிடையே போடப்பட்ட ரயில்பாதையை அமைப்பதில் ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். குவை ஆற்றின்மீது பாலம் அமைத்து அதன் மீது ரயில் பாதை போடப்பட்டது. குவை ஆற்றின் நீரில் தொழிலாளர்களின் வியர்வையும் குருதியும் கலந்தோடியது.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில் ஒரு சாதாரண தமிழாசிரியராக பணிபுரிந்து வந்த சிவராமன் தனது குடும்ப நலத்திற்காகவும், பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவும் தொழில் புரிய மலாயாவுக்கு வந்தவர் என்றாலும். தான் படித்திருந்த படிப்பும் சுதந்திர உணர்வும் அவரை வாளாவிருக்கவிடவில்லை.
நேதாஜியின் வீரமுழக்கம் அவர் நெஞ்சுக்குழியில் ஊழித்தீயாய் சுடர்விட ஆரம்பித்தது. எந்த நிலையில் போராடி வெற்றிபெற இயலுமோ அப்படி எல்லாம் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் அவரும் சேர்ந்து கொண்டார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அமைத்த படையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஆயிரமாயிரம் இளைஞர்களில் அவரும் ஒருவரானார்.
தொலைக்காட்சியில் மாமனார் வருவதும் அணிவகுப்பு மரியாதை தொடர்வதும் அந்த நலிந்து விட்ட உடம்பில் ஒரு புத்துணர்வை உண்டு பண்ணுகிறது. அன்று ராணுவ வீரனைப்போல் தன் கால்களும் தன்னை உரமாய் உருண்டு திரண்டு நிமிர்ந்த மார்பும் திரண்ட தோள்களும் வலுவான கைகளுமாய் அவர் இருந்தார்.
பார்ப்பவர் வியக்கும் உடல்வாகுவும் நல்லொழுக்கமும்,சீரிய பண்புகளும் தேசவிசுவாசமும் நாட்டுப்பற்றும் ஒரு அருமையான தோற்றத்தை அவருக்கு வழங்கியிருந்தது. நாட்டு நலனில் அக்கறை கொண்ட பெருந்தலைவர்கள் கூட்டத்தில் அவரும் இருந்தார்.
ஐ.என்.ஏ. தொண்டர்களிடையே இருந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் பிறர் மதிக்கும் அளவில் இருந்த காலம் அது. சிவராமன் நாட்டு இந்தியர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட ம.இ.கா.அமைப்புக் கூட்டத்தில்கூட தம் முழு ஆதரவை வழங்கி அதில் தாமும் அங்கம் வகித்தார்.
ம.இ.கா.வின் முதல் தலைவராக இருந்த ஜான் திவி காலத்தில் உறுப்பினராகச் சேர்ந்த சிவராமன் துன் சம்பந்தன் தலைவரானபோது நல்லதொரு பொறுப்பில் அமர்ந்தார். நல்ல அரசியல் அனுபவம். வாழ்க்கையில் இல்லாவிட்டாலும் உன்போல் ஆயிரமாயிரம் பிள்ளைகள் இம்மண்ணில் எனக்குச் சொந்தம்.
‘சிவராமா… வாசல்ல யார் வர்றாங்கள்னு பாரேன்!”
நண்பர் குரல் கொடுக்கிறார். வாசலில் வரிசையாய் நான்கு கார்கள்! நான்கு கார்களில் இருந்தும் அவரது நான்கு பிள்ளைகள்! தளர்ந்துவிட்ட
அந்த வைரமண்டபத்தின் நான்கு தூண்கள்! இருண்ட கண்களில் புதிய ஒளி..! கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எழுகிறார். அப்பா என்று பிள்ளைகள் ஓடிவந்து அவரைச் சூழ்ந்து கொண்டிருக்க…
போதுமா சிவராமா… இனிமே உனக்கு சந்தோஷம் தானே! என்னால் இந்த உதவியைத்தான் உனக்குச் செய்ய முடிஞ்சுது.. உன் பிள்ளைகள் உன்னை விடமாட்டார்கள். உன்னோடத்தான் இருப்பார்கள். நண்பரின் வார்த்தைகள் கோத்தா திங்கி நீர் வீழ்ச்சியாய் அவர்மேல் குளிரைப் போர்த்துகிறது. எங்கோ ஒலித்த மெர்தேகா என்ற ஓசை நெஞ்சை நிறைக்கிறது!
– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.