எலிகள்




1

எலிகளும் நாங்களும் பல்லாண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதாவது, தலைமுறைகளாகத் தொடரும் எலிகளின் சந்ததிகளும், இரண்டு தலைமுறையினரான நாங்களும். ஒரே கூரையின் கீழ் மனிதர்களும் எலிகளும் வாழ்வது எவ்வளவு சிரமத்துக்குரியதாக இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ள முடியும். எதிரிகளான இரு தரப்புகள் அவ்வாறு வாழ நேர்வது இரு தரப்புகளுக்குமே சிக்கல்களை விளைவிப்பதுதான். அதிக பாதிப்பும் சேதமும் பாவப்பட்ட மனிதர்களுக்குத்தான் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்த எலிகள் எங்கள் வீட்டின் பகுதி நேர வசிப்பாளர்கள். பகற்பொழுதுகளில் அவை இங்கே இராது. ஊருக்கு ஒதுக்குப்புறமான இந்தக் காட்டுப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய அவற்றின் சொந்த வீடுகளான வளைகளுக்குச் சென்றுவிடும். இரவில்தான் எங்கள் வீட்டுக்கு வரும். அதுவும், நாங்கள் தூங்கிய பிறகு.
அவை வந்து சென்ற விஷயம் எங்களுக்குத் தெரியவருவது மறுநாள் காணக் கிடைக்கும் தடயங்களின் மூலமாகத்தான். சமையலுக்கு வைக்கப்பட்டிருந்த தேங்காய் மூடி கரண்டப்பட்டிருக்கும், காய்கறிகள் கடிக்கப்பட்டிருக்கும், பிற தின்பண்டங்கள் கொறிக்கப்பட்டிருக்கும், இப்படியிப்படி. இதோடு நில்லாமல் இந்த எலிகள் சட்டி பானைகளுக்குள் புகுந்து தானியங்களைக் கடித்து நாசப்படுத்தவும், குடைகள், பைகள், கூடைகள் முதலானவற்றைக் கடித்துச் சேதமாக்கவும் செய்யும். ப்ளாஸ்டிக் பொருட்களையும் விடுவதில்லை; தலையணை, தீபத் திரி போன்ற பஞ்சுப் பொருட்களையும் விட்டுவைப்பதில்லை.
நாங்கள் பூனை வளர்த்துவது கிடையாது. அதனால், எலிகள் சர்வ சுதந்திரமாக ஊசாடவும், தமது அழிமானங்களைச் செய்யவும் ஏதுவாயிற்று. பக்கத்தில் உள்ள பங்காளிக் குடும்பங்களிலும், அயலில் உள்ள குடியானவ வீடுகளிலும் வளர்த்தப்படுகிற பூனைகள் இங்கே வந்து ஆள் அசந்த நேரத்தில் பாலைக் குடித்துவிட்டுப் போகவும், சட்டி உருட்டவும் செய்யுமேயல்லாமல், எலிகளைப் பிடித்துக்கொண்டு போகக் காணோம். எங்கள் வீட்டு எலிகளின் ருசி அவற்றுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ!
அடுத்தவர்களின் பூனைகளிடம் நாம் எதிர்பார்ப்பதும் சரியல்லவே! பாலைத் திருடிக் குடிப்பதற்குப் பரிகாரமாக எலிகளையும் பிடித்துத் தின்னுங்கள் என்று அவற்றிடம் நாம் நியாயம் பேசவும் முடியாது. அதனால், எங்களுக்கென எடால் வைத்திருந்தோம். அதன் மூலமாகத்தான் எலிகளைச்
சிறைப்படுத்திக் கொல்வதாயிருந்தது. மரத்தாலான எடால் அது. தச்சரானதால் அப்பாவே அதைச் செய்திருந்தார். வீட்டிலேயே இருக்கக்கூடிய துண்டுப் பலகைகள், மரச் சட்டம், வீணான குடைக் கம்பிகள், மிதிவண்டித் தாங்கியில் பொருத்தப்படுகிற கம்பிச் சுருள் போன்றவற்றைப் பயன்படுத்தி அதைச் செய்தார் அவர்.
எடாலில் இரை வைப்பதும் அப்பாதான். அது நுணுக்கமான வேலை. தூண்டில் கம்பி முனையில் தேங்காய்த் துண்டோ, கருவாட்டுத் துண்டோ குத்தி வைப்பது இறுக்கமானதாக இருக்க வேண்டும். இதில் நமது கைத்திறனோடு இரையின் தரத்துக்கும் பங்கு உண்டு. முற்றாத தேங்காய், சொத சொதவென்றிருக்கும் கருவாடு போன்றவற்றில் நெகிழ்தன்மை இருக்குமாதலால் அவற்றைத் தவிர்த்து, வலுவானவற்றையே தேர்ந்தெடுக்க வேண்டும். இதைச் சாதாரணமாக செய்துவிடலாம். தூண்டில் கம்பியின் மறுமுனையை, விடுபடு கதவின் சட்டத்து முனையில், மயிரிழையில் தொடுத்துக்கொண்டிருப்பது போல நிறுத்துவதற்குத்தான் திறமையும், அனுபவமும் தேவை. இந்தப் பொறி நுட்பத்தின் 99 சதவீத சூட்சுமமும் அந்த மயிரிழைத் தொடுப்பில்தான் இருக்கிறது. மீதி ஒரு சதவீதம் அந்த இரையில்.
எலிகள் தந்திரம் மிக்கவை. இந்த எடால்களைப் பற்றி நன்கு அறிந்தவை. இரையைக் கடித்து இழுக்கும்போது அனக்கம் ஏற்படுவதன் மூலம் விடுபடு கதவு மயிரிழைப் பிடிப்பிலிருந்து விடுபட்டு படாரென்று மூடிக்கொண்டுவிடுவதுதான் எடாலின் சூட்சுமம் என்பது அவற்றுக்குத் தெரியும். எனவே, இரையை இழுக்காமல், அலுங்காம கொறித்துத் தின்றுவிட்டுப் போய்விடும். இரை சரிவர இறுக்கமற்றுக் குத்தப்பட்டிருந்தால் அதற்கு இன்னும் வசதி. அப்படியே வெளியே இழுத்து, அதன் பெண்டாட்டி – பிள்ளைகளுக்கோ, கள்ளக் காதலிக்கோ கொண்டுபோய் தின்னக் கொடுக்கும்.
இப்படி சில எலிகள் அல்லது ஒரே எலி சில தடவை தப்பித்துவிடுவது சகஜமானது. என்றைக்காவது அதன் சாமர்த்தியத்தில் மயிரிழையின் மயிரிழையளவு பிசகு ஏற்படும்போது, மனிதனின் மகத்தான அறிவுக்கும், தொழில் நுட்பத்துக்கும், கைத்திறனுக்கும் சான்று பகரக் கூடிய அந்த சம்பவம் நிகழும். எலி அகப்பட்டுவிடும். எலிகளில் முன் அனுபவமற்றவை, அவசரக் குடுக்கைகள், மூத்தோர் சொல் கேளாதவை, இள ரத்தங்கள், முட்டாள்கள் போன்றவை உள்ளன. இவை முதல் தடவையே மாட்டிக்கொள்ளும்.
அகப்பட்ட எலிகளைக் கொல்வது – அதுவும் அப்பாதான் – ஒரு கலை. எடாலின் மேற்புறம் உள்ள ஜன்னல் அமைப்புக் கம்பி இடைவெளிகளின் வழியாக சுருக்கிட்ட கயிறையோ, பனை நாரையோ நுழைத்து, சுருக்குக்குள் எலியின் கழுத்து மாட்டிக்கொள்ளும்படியாகச் செய்து, இழுத்துக் கொல்வது அந்த முறை. இதுவும் எலிகளுக்குத் தெரியும். அதனால், கயிறு அல்லது நாரை
நுழைத்தவுடன் உஷாராகி, மூலையில் சென்று பதுங்கிக்கொள்ளும். கிட்ட வரவே வராது. அந்தப் பக்கமாகத் தட்டி ஓசைப்படுத்தி இப்பால் வர வைக்கவேண்டும். அப்போதும் எச்சரிக்கையாக சுருக்கிலிருந்து விலகியே நகரும். இப்படியும் அப்படியுமாக ஓட ஓட அதை விரட்டி, சுருக்கில் மாட்டவைக்கப் படாத பாடு படவேண்டும். இந்தக் கொலைத் திட்டத்தை அறிந்து, உயிருக்குப் போராடுகிற அது, நமது விடா முயற்சியைக் கண்டு ஆவேசமுற்று, கயிற்றுச் சுருக்கைக் கடித்துத் துண்டாக்கவும் முயலும். இவ்வளவையும் மீறி, அதைச் சுருக்கில் மாட்டவைத்துக் கொல்வதற்கு மிகுந்த பொறுமை தேவை. நேரமும் சுமார் கால் மணியாவது ஆகிவிடும்.
இப்படித்தான், எங்கள் வீட்டுக்கு அழையா விருந்தாளிகளாக வந்து, பகுதி நேர வசிப்பாளர்களாகத் தங்கி, எங்களின் உயிரை எடுத்துக்கொண்டிருந்த எலிகளின் உயிர்கள் எடுக்கப்பட்டன.
2
எலித் தொல்லைகள் இல்லாதிருந்த ஒரு சமயத்தில், எடாலை ஊருக்குள் வசிக்கும் தெரிந்தவர் ஒருவர் இரவல் வாங்கிச் சென்றிருந்தார். திருப்பித் தரவேயில்லை. கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் எலிகளின் வரத்து தொடங்கிவிட்டது. எடாலைக் கேட்கப்போக, அது அங்கிருந்து வேறொருவருக்கு இரவல் போனது தெரியவந்தது. அவர்களோ சமீபத்தில் வெளியூருக்குக் குடிபெயர்ந்துவிட்டிருந்தனர். போனபோது கூடவே எடாலையும் கொண்டு போய்விட்டார்களாம். அதை வாங்குவதற்காக அவர்களைத் தேடிச் செல்ல முடியுமா? போனது போனதுதான்!
எடால் இல்லாததற்காக விட்டுவிடவும் முடியாதல்லவா? நமது உடைமைகளை நாசப்படுத்திக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு எப்படி சும்மா இருப்பது? அதனால் எலிகளுக்கு விஷம் வைத்தோம். சும்மா, அரைக் கவளம் சோற்றில் கலந்து, அவை நடமாடக்கூடியதும் நாம் புழங்காததுமான இடங்களில் – உதாரணமாக, சுவருக்கு மேலே – வைத்துவிட்டால் போதும். இந்த ஏமாளி மனிதர்கள் சோற்றை நமக்குத் தோதான இடத்தில் வைத்திருக்கிறார்களே என்று குஷியாகி, எலிகள் அவற்றைத் தின்னும். அப்புறம், அவை ஏமாந்து பலியாகிவிடும்.
எந்தக் கண்டுபிடிப்புகளிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்குமல்லவா? எலி விஷத்தினால் ஆன நன்மை, அதைத் தின்னும் எலிகள் சர்வ நிச்சயமாகச் செத்துவிடும் என்பது. தீமை, சமயங்களில் இவை வீட்டுக்குள்ளேயே, கண்காணாத இடத்தில், எட்டாத உயரத்தில், இடுங்கலான பகுதிகளில் போய் செத்துத் தொலைக்கும் என்பது.
வெளியே தூரமாகச் செத்தால் பிரச்சனை இல்லை. வீட்டிலாயினும் நம் கண்ணுக்குத் தட்டுப்படக் கூடியதும், எளிதாக அப்புறப்படுத்தக் கூடியதுமான இடங்களில் என்றாலும் பரவாயில்லை. அவற்றுக்குப் ப்ரியமான மோட்டுவளையிலோ, நாம் புக முடியாத சந்து பொந்துகளிலோ, சட்டி பானைகளுக்குள்ளோ, தட்டுமுட்டுச் சாமான்களின் இண்டு இடுக்குகளிலோ சென்று மண்டையைப் போட்டுவிடும்போதுதான் தொந்தரவு. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல இவை செத்தும் கெடுத்தவையாக ஆகிவிடும். பார்வை படாத பகுதிகளில் இவற்றின் துர்மரணம் சம்பவிப்பதால், செத்தவுடன் நமக்குத் தெரியாது. இரண்டாவது நாள் வீட்டுக்குள் துர்வாடை அடிக்கும். எலி செத்த நாற்றம் என்பதை, திறன் மிக்க நமது நாசிகளால், விவும் வைத்த நமது மூளை கண்டுபிடித்துவிடும் என்றாலும், எங்கிருந்து அந்த வாடை வருகிறது என்பது தெரியாதபடிக்கு அங்கிங்கெனாதபடி அவ் வாடை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். நாம் தேடித் தேடி ஓய வேண்டியதுதான்!
மூன்றாவது நாளில் வாடை பலத்துவிடும். கதவு ஜன்னல்கள் வழியே வருகிற காற்று அதைச் சுழற்றியடித்து நம்மைத் திணறடிக்கும். வீட்டுக்குள் ஒவ்வொரு மறைவிடங்களிலும் எலிகள் செத்துக் கிடப்பதைப் போன்ற எண்ணம்கொண்டு எல்லாப் பொருட்களையும் ஆராய்ந்துகொண்டிருப்போம். சோற்றிலே விஷம் வைத்து எலிகளைக் கொல்வது ப்ரம்மஹத்தி தோஷத்தைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமான பாவச் செயலாகும். அந்தப் பாவம் நம்மைச் சும்மா விடாது. உண்ணும் உணவு, பருகும் நீர், கவாசிக்கும் காற்று எல்லாவற்றிலும் அந்த வாடை புகுந்து நம்மைப் பீடிக்கும். வீட்டுக்கு வெளியே போனாலும் விரட்டித் துரத்தும்.
உண்ணாமல், பருகாமல் உபவாசம் இருந்து கூட ஒரு நாளைக் கழித்து விடலாம். சுவாசிக்காமல் சுணமேனும் இருக்க முடியுமா? துணியால் மூக்கைக் கட்டிக் கவசமாக்கிக்கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கிவிடுவோம். பொருட்களையெல்லாம் இடம்பெயர்த்தியும் திறந்தும், கலைத்தும், பெரும் போராட்டம் நடத்திய பிறகு, கூடிக்கொண்டேயிருக்கும் துர்வாடை வேறெங்காவதிலிருந்து தன்னை அடையாளப்படுத்தும். ஒரு வழியாக அந்த இடுக்கை அடைவோம். அங்கே நாம் காணக் கூடிய காட்சி என்ன? பெருச்சாளியின் அளவுக்கு வீங்கிவிட்ட எலியின் புழுத்த உடலும், அதில் நெளியும் புழுக்களும்.
துணியால் இறுகக் கட்டியிருந்தாலும் அந்தத் தடுப்பையும் ஊடுருவித் தாக்குகிற கடுமையான துர்நாற்றம் உங்களது நாசித் துவாரங்கள் வழியே புகுந்து நுரையீரலுக்குள் போகும். மறுகணம் வயிற்றிலிருக்கிற குடல் வாய்க்கு வந்துவிடுமளவுக்கு குமட்டல் ஏற்படும். அருவருப்பு தாளாமல் ஓங்கரிப்பீர்கள். வாந்தியும் வரலாம்.
புழுத்து நாறுகிற அந்த எலிச் சடலத்தை அப்புறப்படுத்துவது உங்களுடைய சசிப்புத்தன்மைக்கு ஒரு சவால். இதிலிருந்து நீங்கள் பின்வாங்க வழியே இல்லை. அதைச் செய்தே ஆகவேண்டும். சளியினால் மூக்கடைத்திருந்தாலோ, மூச்சு அடக்குகிற வித்தை தெரிந்திருந்தாலோ நல்லது. இல்லாவிட்டால் உங்கள் பாடு திண்டாட்டம்தான்.
எலிச் சடலத்தையும், அதன் அழுகல் துணுக்குகளையும், அதிலிருந்து ஊர்ந்து நெளியும் புழுக்களையும் அப்புறப்படுத்திய பிறகும் தொல்லை தீர்ந்துவிடாது. அது இருந்த இடம் இன்னும் துர்நாற்றத்தின் மிச்சத்தோடு இருக்கும். காட்டமான வாடையுள்ள பினாயில் தெளித்து நாற்றத்தை நாற்றத்தால் போக்க வேண்டும். அதோடு முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். உண்மையான விவகாரமே அதற்குப் பிறகுதான் ஆரம்பிக்கும். நீங்கள் உணவு உண்கிறபோது அது நைந்து புழுக்கள் நெளியும். குடிக்கிற பானங்களில் சதைத் துணுக்குகள் மிதக்கும். குடல், குண்டாமண்டி விடுமளவுக்கு வாந்தியெடுப்பீர்கள். இது நினைவுகளின் விளைவான பிரமைதான். ஆனால் அதிலிருந்து விடுபடுவதற்கு நாட்கள் ஆகும். அதுவரை, மற்ற நேரங்களில் இல்லாதிருக்கிற அந்த ஊழ்வினை, சாப்பிடுகிற – குடிக்கிற நேரங்களில் தொடர்ந்து வந்து உறுத்திக்கொண்டிருக்கும்.
எலிகளுக்கு விஷம் வைத்த நாங்கள் பல தடவை இவ்வளவு அவஸ்தைகளுக்கும் ஆட்பட்டோம். இவற்றை ஒப்பிடும்போது, எலிகள் உயிருடன் இருந்து தருகிற தொல்லைகளே மெச்சம் என்று பட்டது. அதனால் விஷம் வைப்பதை நிறுத்திவிட்டோம்.
நாங்கள் அந்த நல்ல முடிவுக்கு வருவதற்கு முன்னரே அப்போதிருந்த எலிகள் யாவும் செத்துவிட்டிருந்தன. விஷம் தின்று எங்கள் வீட்டிலேயே செத்து விழுந்தவை தவிர, வெளியே சென்று செத்தவையும் பலது இருக்குமல்லவா? அதோடு, இயற்கையாகவும் சிலது செத்திருக்கலாம். பூனை, காகம், கழுகு, பாம்பு போன்றவற்றிற்கு இரையாகியும் சில பலது செத்திருக்கலாம்.
எப்படியோ கொஞ்ச காலத்திற்கு எலித் தொல்லைகள் இல்லாமல் நிம்மதி நிலவியது.
3
அந்த நிம்மதி அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை. எலிகள் மீண்டும் வந்துவிட்டன.
இந்த எலிகள் முந்தைய எலிகளின் அடுத்த சந்ததியினராக இருக்கவேண்டும். தமது மூதாதைகளை நாங்கள் எடால் மூலமாகவும், விஷம்
வைத்தும் கொன்றொழித்தோம் என்கிற பூர்வ கதை, பிழைத்திருந்த முந்தைய தலை முறை எலிகளால் அவற்றுக்கு சொல்லப்பட்டிருந்திருக்க வேண்டும். தலைமுறைகளின் வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டவை போல அவை வந்தன. பொருட்களை மிகுந்த சேதாரப்படுத்தின.
இப்போது விஷம் வைப்பதற்கு நாங்கள் தயாரில்லை. அதன் பலாபலன்களை அனுபவித்த துன்ப நினைவுகள் இன்னும் எங்களுக்கு மறக்காதிருந்தது.
எலிகளை அனுமதிக்கவும் முடியாது. அதனால் அப்பாவிடம் புதிதாக எடால் செய்யச் சொன்னோம். அவரும் முன்பு போலவே செய்தார்.
பழி தீர்க்கப் புறப்படுகிறவர்களின் நெஞ்சுரமும், திறன் கூட்டப்பட்ட தந்திரமும் இந்தத் தலைமுறை எலிகளுக்கு இருந்தன. அதனால் முந்தைய தலைமுறை எலிகளை விட சாமர்த்தியமாக அவை தப்பிச் சென்றன. மனித எத்தனங்கள் விடாமுயற்சிகள் ஆகியவற்றுக்கான பலனும் எப்போதாவது கிடைக்கும். அவ்வாறு அகப்படும் எலிகள் வழக்கப்படியே அப்பாவால் கயிற்றுச் சுருக்கிட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டன. அம் முயற்சி பலனளிக்கவில்லை. இந்த எலிகள் தற்காப்புக் கலையைக் கற்று வைத்திருந்ததால் இப்போது அவற்றுடன் போரிடும் நேரம் அதிகரித்தது. நிராயுதபாணியான அவற்றைக் கயிறாயுதத்தைப் பிரயோகித்து வெல்ல முடியவில்லை.
அதனால், மீண்டும் எலி விஷம் வாங்கப்பட்டது. ஆனால் நேரடியாக வைக்கவில்லை. எடாலில் எலிகளைப் பிடித்த பிறகு, அதற்குள்ளே விஷச் சோற்றுப் பருக்கைகளைப் போட்டுவிடுவது. அதைத் தின்று செத்த பிறகு வெளியே எடுத்து தூரமாக வீசிவிட வேண்டியது.
இப்படியாக, இரட்டை முறைகளில் எலிகள் கொல்லப்பட்டன. மீண்டும் சில காலத்துக்குத் தற்காலிக நிம்மதி சாத்தியமாகியது.
4
இப்போது சில மாதங்களாக மீண்டும் தொல்லை தொடர்கிறது. முன்பைக் காட்டிலும் பன்மடங்காக.
உணவுப் பதார்த்தங்கள், அவற்றின் மூலப் பொருட்கள், காய்கறிகள் முதற்கொண்டு, தின்னத் தகாத துணி ரகங்கள், ப்ளாஸ்டிக் பொருட்கள், கூடைகள், ஒயர்கள், குடைகள், பைகள், புத்தகங்கள் – அவ்வளவு ஏன், செருப்புகளைக் கூட கடித்துக் குதறி நாசப்படுத்தி விடுகின்றன. வீட்டில் எங்கு
நோக்கினும் அவற்றின் அராஜகங்கள்தான்! அவற்றால் கடிக்க இயலாத மரம், இரும்பு, பிற உலோகங்கள் மட்டுமே தப்பித்திருந்தன.
திடீரென ஏற்பட்ட இந்த நாசவேலை எதிர்பாராத அளவுக்கு இருந்தது. இத்தனை காலமாகக் கொல்லப்பட்ட எலித் தலைமுறைகள் அனைத்துக்குமான பழி தீர்ப்பாக இந்தப் புதிய சந்ததி, தலைமுறைக் கோபத்தோடு களமிறங்கியிருக்க வேண்டும். நிரந்தரத் தீர்வு காணாமல் சில பத்தாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் போராட்டத்துக்கு ஒரு முடிவு கட்டியே தீர்வது என்கிற லட்சிய ஆவேசம் கொண்டவை போலச் செயல்பட்டன.
இவ்வளவு காலமாகத் தலை மறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த அந்த எலிகள் காட்டுக்குள் போர்த் தந்திரங்களையும் கற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எடாலில் அவை சிக்கவேயில்லை. தூண்டில் இரையாகக் குத்தி வைக்கிற தேங்காய்த் துண்டு அல்லது கருவாட்டுத் துண்டை லாவகமாகத் தின்றுவிட்டுப் போய்விடுகின்றன. மேற்சட்டத்தின் நுனி விளிம்பில், கொக்கிக் கம்பியை எவ்வளவுக்கு நுணுக்கமாக, மென் மயிரிழையில் தொடுத்துக்கொண்டிருக்கிறபடி வைத்தாலும் சாதுரியமாகத் தப்பிவிடுகின்றன.
முன்னைப் போல இரவில் மனிதர்கள் உறங்குகிற வரை காத்திருப்பதுமில்லை. இருட்டியதுமே எங்கள் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன. எங்களைப் பற்றிய பயம் கிஞ்சித்தும் இல்லாமல் அவை பாட்டுக்கு அங்கிங்கென ஓடிக்கொண்டிருக்கும். ஏதோ ஒன்று அப்படியென்றாலும் பரவாயில்லை. சிறிதும் பெரிதுமாக இருக்கக் கூடிய மூன்று நான்கு எலிகள் இப்படி வந்து சுவர் மீதும், தரையிலும், அலமாரியிலும், மேஜை மீதும் தன்னிச்சையாக உலவின. அதைப் பார்க்கும்போது என்னவோ இந்த வீடு அந்த எலிகளுடையது போலவும், நாங்கள் அவற்றுக்குத் தொல்லை தருகிற பிராணிகள் போலவுமான தோரணை வெளிப்பட்டது.
தின்னக் கூடியவற்றைத் தின்பதும், தின்னத் தகாதவற்றைக் கொறித்து வைப்பதும் மட்டுமின்றி, இவை இன்னொரு தொல்லையும் கொடுத்தன. இரவில் எங்களைத் தூங்கவிடவில்லை. பாத்திரம் பண்டங்களை உருட்டவும், தள்ளிவிடவும் செய்து உறக்கத்தைக் கலைக்கும். அல்லது உறங்கிக்கொண்டிருக்கிறவர்களின் மேலே ஏறி ஓடி, பதறி விழிக்கச் செய்யும். சில தடவை சுடித்துவிடவும் செய்தன. எலிக் கடி உடனடி விஷமல்ல என்றாலும் பிற்காலத்தில் பயங்கரமான வியாதிகளை ஏற்படுத்தக் கூடியது என்று சொல்கிறார்கள். அதனால், மருத்துவமனைக்குச் சென்று எதிர்கால ஆபத்திலிருந்து எங்களைக் காத்துக்கொண்டோம்.
எலிகளின் எண்ணிக்கை அதிகமானது. அவற்றின் அட்டகாசங்களும் மிகுதியாயின. அவற்றிடமிருந்து பொருட்களைக் காக்க இரும்பு அலமாரியிலும் பெட்டிகளிலும் போட்டுவைத்தோம். போதாமை ஏற்பட்டதால் கூடுதலாக ஒரு அலமாரியும் வாங்கப்பட்டது. எனினும் எவ்வளவுதான் காபந்து பண்ண முடியும்? எலிகளின் நாசவேலை தீவிரப்பட்டுக்கொண்டேயிருந்தது.
பெற்றோர் செய்கிற பாவம் பிள்ளைகளுக்கு வந்து சேரும் என்று சொல்கிறார்கள். எனது விஷயத்தில் அது பலித்துவிட்டது. எலிகளின் தாக்குதலுக்குக் கூடுதலாக இலக்கானவை எனது புத்தகங்கள்தான். இடப் பற்றாக்குறை காரணமாக எனது புத்தகங்களைப் பல இடங்களிலும் வைக்க வேண்டியிருக்கிறது. சுதவுள்ள ஒரு சிறிய அலமாரியில் கொஞ்சம் புத்தகங்கள் உள்ளன. கதவற்ற ஒரு பெரிய மர அலமாரியின் இரண்டு அடுக்குகளில் கொஞ்சம். இவை தவிர ஒரு ட்ரங்க் பெட்டி மற்றும் நாலைந்து அட்டைப் பெட்டிகள் நிறையவும் புத்தகங்கள்தான். ஜனரஞ்சகப் பத்திரிகைகள், சிறு பத்திரிகைகள் போன்றவற்றைக் கட்டி பெஞ்ச்சுக்கு அடியிலும், அலமாரிகளுக்கு மேலேயும் போட்டு வைத்திருப்பேன். இவற்றில் கதவுள்ள சிறிய மர அலமாரி, ட்ரங்க் பெட்டி ஆகியவற்றில் உள்ளது நீங்கலாக, திறந்த வெளியில் உள்ளதும் அட்டைப் பெட்டிகளில் உள்ளதுமான புத்தகங்கள் பலவற்றையும் எலிகள் பாழ்படுத்திவிட்டன.
பத்திரிகைகளைக் கொறித்துக் கடித்ததில் கூட எனக்கு அவ்வளவு வருத்தமோ கோபமோ இல்லை. புத்தகங்களைக் கடித்துவிட்டனவே என்பதில்தான்.
நான் புத்தகங்களை நேசிப்பவன். எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும் வாசகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறவன். எழுதுவதை நிறுத்திவிட்டு, ஆயுள் முழுக்க வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று கூட எனக்கு ஆசை உண்டு. அவ்வளவுக்கு அருமை அருமையான புத்தகங்கள் – குறிப்பாக, இலக்கியங்கள் – தமிழிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் உள்ளன. அவ்வளவையும் வாசிக்க ஆயுள் போதாது. மற்ற சௌகரியங்களும், சாந்தியங்களும் இல்லை. முக்கியமாக, பணம். எனவே, மிக முக்கியமான பழைய புத்தகங்களையும், தற்காலத்தில் வெளியாகக் கூடிய புத்தகங்களையும் வாங்கி வைப்பேன். அதில்தான் எலிகள் தமது கை வரிசையைக் காட்டிவிட்டன.
எனக்கு தாங்க முடியாத வேதனையும் ஆத்திரமும் உண்டாயிற்று. நேசத்துக்குரியவை பாதிக்கப்படும்போது யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்? இத்தனை காலமாக நான் தேடிச் சேர்த்த எனது செல்வம் என் புத்தகங்கள்தான். அதற்குப் பங்கம் நேர்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பேனா? அவற்றின் வம்சத்தை ஒரு குஞ்சு கூட பாக்கியில்லாமல் பூண்டோடு அழித்துவிடுவது என்று மனதிற்கு கங்கணம் கட்டிவிட்டேன்.
எடாலிலும் அவை அகப்படுவதில்லை. பிற்பாடு புழுத்து நாறி எடுத்தெறிகிறதின் தொல்லைகள் நேர்ந்தாலும் பரவாயில்லை, அவற்றைக் கொன்றொழித்தே தீரவேண்டும் என்று எலி விஷம் வாங்கச் சென்றேன்.
எனது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அல்லது எலிகளின் அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். இப்போது எலி விஷம் விற்கப்படுவதோ தயாரிக்கப்படுவதோ இல்லையாம். தற்கொலை விரும்பிகளால் அதிகமாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது என்று தடை செய்யப்பட்டுவிட்டதாம்.
5
எலிகளைக் கொல்வதற்கான இரு வழிகளும் அடைபட்டுவிட்டன. இதனால் அவற்றின் துஷ்டத்தனம் கட்டற்றதாகிவிட்டது. எதுவும் செய்ய இயலாமல், அவற்றை அப்படியே விட்டுவிட வேண்டிய கையறுநிலை. விளைவு என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் சொல்கிறேன். நாசம், சர்வ நாசம்!
உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும்தான் மனிதனின் அடிப்படைத் தேவைகள். இந்த மூன்றும் எலிகளால் சூறையாடப்பட்டன.
ஒரு பாக்கியம்: எலிகள் எங்களைக் கொல்லவில்லை! தங்களது பிராணிதத்தைக் காட்டிக்கொள்வதற்காக இருக்கலாம். இனி சேதப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லாத நிலையில், தமது முந்தைய தலைமுறைகள் யாவும் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கிவிட்ட மன நிறைவோடும், மனிதர்களான எங்களுக்குப் பாடம் கற்பித்துவிட்ட வெற்றிப் பெருமிதத்தோடும் அவை தமது வளைகளுக்குத் திரும்பச் சென்றுவிட்டன.
இழப்புகளின் துயரம் குறிப்பிட்ட விளிம்பு வரை மட்டுமே நிலவும். மித மிஞ்சிப் போகிறபோது துயரம் போய், விரக்தி வந்துவிடும். அப்போது சரி – தவறு, நன்மை – தீமை, நல்லது – கெட்டது, சுகம் – துக்கம் என்கிற பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக ஆகிவிடுகிறோம். அப்படிப்பட்ட நிலையில்தான், சிதைவுகளும் சிதிலங்களும் குலைவுகளுமாகக் கிடந்த எங்கள் வீட்டில், எஞ்சிய பொருட்களை ஒழுங்குபடுத்தினோம்.
கதவுள்ள அலமாரியிலும், ட்ரங்க் பெட்டியிலும் வைத்திருந்த எனது புத்தகங்களுக்குத் துளி சேதாரமும் இல்லை. திறந்தவெளியில் புத்தக அடுக்குகள் இருந்த இடங்களில் பொடிப்பொடியான காகிதத் துணுக்குகள்தான் காணப்பட்டன. அட்டைப் பெட்டிகளில் இருந்த புத்தகங்கள்
கொறிக்கப்பட்டும், கடிக்கப்பட்டும், தின்னப்பட்டும் வெவ்வேறு நிலையில் உருக்குலைந்து போயிருந்தன.
எனது சேகரிப்பில் இருந்தவை செவ்வியல் இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியங்கள் வரையிலான புத்தகங்கள். இவற்றின் பெரும்பகுதி எலிகளால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. உலக இலக்கியம், இந்திய இலக்கியத்தைக் கூட விட்டுவிடுவோம். தமிழ் இலக்கியத்தில் முக்கியமான அந்தப் புத்தகங்களை எலிகள் கபளீகரம் செய்துவிட்டதை என்னால் பொறுத்துக் கொள்ளவே இயலவில்லை.
இதில் ஆச்சரியமான ஒரு விஷயம். வெளியிலேயே – மற்ற புத்தகங்களோடு சேர்த்தே – வைத்திருந்த சில புத்தகங்களை மட்டும் எலிகள் தொடக்கூட இல்லை. ஜனரஞ்சக எழுத்தாளர்களாகவும், இலக்கியவாதிகளாகவும், நவீன இலக்கியவாதிகளாகவும் உள்ள குறிப்பிட்ட சிலரின் புத்தகங்கள் அவை. எலிகள் ஏன் அவற்றை மட்டும் கடிக்கவில்லை என்பது பற்றி எவ்வளவு யோசித்தாலும் எனக்குப் பிடி கிடைப்பதில்லை.
– ரசனை, நவம்பர் 2004.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |