எருமை மாடும் துளசிச் செடியும்…
(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நகரின் சந்தடியிலிருந்து தனித்து ஒதுங்கிய வசதியான சிறுவீடு. வீட்டைச் சுற்றிலும் வேலி. வீட்டுக்கொல்லையில் கிணற்றுக் கட்டுக்குச் சற்று அப்பால் காய்கறிச் செடிகளுடன் வீட்டு எஜமானி பரிவுடன் வளர்க்கும் துளசிச் செடி மெல்லத் துளிர்விட்டு, ஓரிரண்டு இலைகளுடன் அமைதியாய் நின்றிருந்தது. இடையிடையே சிலுசிலுத்த தென்றலோடு சேர்ந்து, நளினமாய்த் தலையசைத்துக் கொண்டிருந்தது.
நேரம் நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது. துளசி கிணற்றடியில் துணிதுவைத்துக் கொண்டிருந்தாள். பதின்மூன்று வயதிருக்கும் அவளுக்கு. வயதினை மீறிய வளர்ச்சி அவளில் தெரிந்தது. பரட்டைத்தலை காற்றில் அலைபாய்ந்தது. முத்து முத்தாய் அரும்பிய வியர்வை காதோரம் ஆறாய் வழிந்தது. மூச்சிறைக்க கல்லில் துணியை அடித்துத் துவைத்தபடி, செய்யவேண்டிய வேலைகளை மனதுக்குள் அடுக்கினாள். துணிதுவைத்துக் குளித்த பின், நோனா சமைத்து வைத்து விட்டுப்போன உணவைச் சூடுபண்ணி, ஐயாவுக்கு மேசையில் எடுத்து வைக்கவேண்டும் உடைகளுக்கு ‘இஸ்திரி’ போடவேண்டும்… என்று எண்ணமிட்டபடி வேலையைத் துரிதமாக்கினாள்.
அந்த வீட்டுக்குத் துளசி வரும்போது, அவளுக்குப் பத்து வயதிருக்கும். வடக்கில் போர் உக்கிரமடைந்தபோது, போட்டது போட்டபடி. கட்டிய துணியோடு ஓடி வந்த குடும்பங்களுள் அவளுடையதும் ஒன்று. அன்பான அம்மா- அப்பா. துளசி அவர்களின் ஒரே மகள்தான். வளைய வந்த அழகான ஓட்டுவீடு. மாம்பிஞ்சு பொறுக்கி எடுத்து உப்புத்தூவி உண்டு, ஆலமர விழுதுபிடித்து ஊஞ்சலாடி, தென்றல்போல் உலவி வந்த தன் அபிமானத்துக்குரிய வளவு; தனதே வயதொத்த சகாக்களுடன் கிளித்தட்டு விளையாடி மகிழ்ந்த, பனை நிற்கும் முற்றம்… இவை அனைத்தையும் விட்டுவிட்டு வரநேர்ந்தமை, அந்தப் பிஞ்சு மனதுக்கும் வலி தரத் தவறவில்லை.
சராசரியாகக் காட்டு வழியே வரும்போது, உணவும் நீருமின்றிப் பசியாலும் தாகத்தாலும் தவித்து, ஒவ்வோர் ஆத்மாவும் உயிருக்காகப் போராடி வழியெங்கும் செத்துச் செத்து விழுந்த காட்சியும், எங்கும் எழுந்து வியாபித்த அழுகுரல் ஒலியின் அவலமும் துளசியின் பிஞ்சு மனதில் அழுத்தமாகப் பதியத்தவறவில்லை.
காலில் வெடிப்புக்களும் கொப்புளங்களுமாக நடக்க முடியாமல் அழுதழுது கூட்டத்தைத் தொடர்ந்து போய்கொண்டிருந்த சிறுவர் குழுவில் அவளும்! எங்கோ முன்பின் அறிமுகமற்ற ஊரின் பாழடைந்த கோயிலில் தஞ்சமடைய எண்ணி, இடம்பிடிக்கவென்று அந்தரப்பட்டு, கூட்டத்தை நெட்டித் தள்ளிக்கொண்டு ஓடிய சிலரில் துளசியின் பெற்றோரும்! ஓடிய சனம் உள்ளே நுழைந்தது தான் தாமதம்! சிவப்புப் பந்தென நெருப்புப் பொறி பறக்க, காதைச் செவிடாக்கும் பேரொலி எங்கும் எதிரொலித்தது. கால் வீங்கிப் போய், நடக்க முடியாமல் அழுதுகொண்டு மரத்தடியொன்றில் அமர்ந்திருந்த துளசியின் கண்முன் தாயும் தந்தையும் இன்னும் பலரும் எரிந்து கரிக்கட்டைகளாய்ப் போன கொடூரம், அவளை ஊமையாக்கிவிட்டது.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் வாகனங்களில் ஏற்றி அகதி முகாமுக்குக் கொண்டு வந்து இறக்கிய கூட்டத்தில், கொடிய போரினால் அனாதைகளாகிப்போன பல்லாயிரம் சிறாருள் ஒருத்தியாக துளசியும் இறங்கினாள். ஒருவாரம் கடந்து சென்றிருக்கும். ஊரில் தமது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த மாமா ஒருவர் அடிக்கடி அவளைப் பார்த்துப் பேசினார். ஏனோ தெரியாது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் தங்கள் வீட்டு முற்றத்தில் ஓடிய அணில் குஞ்சைக் கொத்திக் கொத்தித் தின்ற காகத்தின் ஞாபகம்தான் வரும். அவளுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. முகாமிலிருந்து அவள் அவருடன் புறப்பட்டுப் போனபோது, யாரும் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவரவர் கவலை அவரவர்க்கு!
இந்த வீட்டைக் கண்டபோது, அவளுக்குத் தமது பழைய வீடுதான் நினைவுக்கு வந்தது. ஆனால், அது… அவள் எதிர்பார்த்து வந்த சங்கர் சித்தாவின் வீடல்ல என்பதை சற்றைக்கெல்லாம் உணர்ந்து, அவள் அந்த மாமாவைப் பார்த்தபோது அது அவளது அப்பாவின் சொந்தக்காரர் வீடுதான் என்று சொல்லிச் சிரித்தார். விடைபெறும்போது, வீட்டு ஐயா விடம் ஒரு கற்றைப் பணத்தை, ஒரு கூழைக்கும்பிடு போட்டபடி பல்லிளித்து அவர் வாங்குவதைப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் துளசி. மனித வியாபாரம் வேற்று உருவில் இன்றும் நடைபெறுவது பற்றியெல்லாம் பாவம்! அவளுக்கு என்ன தெரியும்?
உறவினர் வீடு என்று அந்த மாமா சொன்னாரே! அப்படியென்றால் ஏன் இப்படி வேலைக்காரிபோல் நடத்துகிறார்கள்? சாமான் அறையில் தூங்கச்சொல்வதும். பழையதும் மீந்தமாக உண்ணச் சொல்வதும் ஏனென்று துளசிக்குப் புரியவில்லை. காலப்போக்கில் அவை அவளுக்குப் பழகிப்போயின. இங்கு வந்த மூன்று வருடங்களில் தனது எஜமானி ஒரு வைத்தியர், எஜமான் பிரபல வர்த்தகப் பிரமுகர். இருவரும் சமூக சேவையில் பிரசித்தி பெற்றவர்கள். ஆணும் பெண்ணுமாய் இரு பிள்ளைகள் ஹொஸ்டலில் தங்கிப் படிக்கிறார்கள் போன்ற விபரங்களை அவள் அறிந்து வைத்திருந்தாள்.
சில நாட்களில் இரவுவேளைகளிலே தன் பெற்றோரின் நினைவு எழுவதுண்டு. அவர்கள் உயிருடன் இருந்திருந்தால்… என்ற ஏக்கம் அடிக்கடி எழுந்து தொண்டையை அடைக்கும். அப்போதெல்லாம் மௌனமாகக் கண்ணீர் விடுவாள். தன் சோகம் சொல்லியழ வாயின்றி, ஊமையாய் அந்தப் பிஞ்சு தனக்குள்ளேயே மருகிக்கொண்டிருந்தது.
வேலிக்கருகில் தாம்புக் கயிற்றை அறுத்துக்கொண்டு எங்கிருந்தோ எருமை மாடொன்று நின்றிருந்தது. வேலியோரம் செழிப்பாக வளர்ந்திருந்த ‘எல்பீசியா’ செடிகளை சுவாரஸ்யமாய்க் கழுத்தை நீட்டி நீட்டித் தின்ன, அதன் கழுத்தில் கட்டியிருந்த மணி ‘கலீர் கலீ’ ரென தொடர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது.
துணிகளைக் கழுவிமுடிக்கும் தருவாயில் ‘பேசினில்’ இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி, கிணற்றில் வாளியை விட்டு நீரள்ளி ‘பேசினில்’ நீர் நிரப்புகையில், இடுப்பில் அணிந்திருந்த கிழிந்த பாவாடை தெப்பலாய் நனைந்திருந்தது. அடுத்த வாளி நீருக்காய் நிமிர்ந்தபோது ஐயா அழைப்பது கேட்டது. உடனே போட்டது போட்டபடி இருக்க, வீட்டுக்குள் ஓடினாள்.
உள்ளே… ஐயா ரீ.வி. முன் அமர்ந்திருந்தார். திரையில் ஒரு பெண் விரசமாய் அரைகுறை ஆடையுடன் ஆடிக்கொண்டிருந்தாள். ஐயாவுக்கு முன்னால் ‘ரீப்போ’ வில் போத்தல்கள் அணிவகுத்திருந்தன. ஐயா கேட்ட ‘ஐஸ்’ கட்டிகளை ஒரு தட்டில் போட்டுக்கொண்டுபோய் ரீப்பாவில் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, ஐயா விகாரமாய் இளித்தபடி தன்னை வெறித்துநோக்குவதைப் பார்த்தாள். துளசிக்கு முள்ளந்தண்டில் சில்லிவிட்டது. அவர் தள்ளாடியபடி எழுந்து அவளின் தோளை இறுகப் பற்ற, அவள் அச்சத்தில், நனைந்த புறாவாய் வெடவெடத்தாள்.
எருமைமாடு வேலியின் ஒரு பகுதியை முறித்துக் கொண்டு தோட்டத்துக்குள்ளேயே நுழைந்து விட்டிருந்தது. காய்கறிச் செடிகளை மிதித்துத் துவம்சம் செய்தபடி தன்னிச்சையாய் அது முன்னேறியது. வரவிருக்கும் ஆபத்தை உணராமல், காற்றில் சிலுசிலுத்துத் தலையசைத்துக் கொண்டிருந்த துளசிச் செடியை நெருங்கி, அச் செடியின் சின்னஞ்சிறு தளிர்களைத் தன் எச்சில் கடைவாயில் ஒழுகுமாறு அது கபளீகரம் செய்ய, நறுக் நறுக் என்ற சத்தம் கழுத்து மணியோசையுடன் இணைந்து ஒலித்தது. அலறவோ எதிர்க்கவோ சக்தியற்ற அந்தச் சின்னஞ்சிறு செடி முற்றாக அழிந்துபோனது. அது தலையை அசைத்து செடியைத் தின்ற வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல். அச்செடி வேரோடு கழன்று தரையில் கிடக்க, எதுவுமே நடை பெறாதது போல் அது வேலிதாண்டி வெளியேறிப்- போனது.
டொக்டர் நோனாவுக்கு துளசியைப் பார்க்கப் பயமாகவும் கவலையாகவும் இருந்தது. சதாவும் சுவரில் நிலைகுத்திய, வெறித்த பார்வையுடன் இருந்த அவளை, மனநல மருத்துவமனைக்கு அனுப்புவதெனத் தீர்மானித்தார்.
சர்வதேச சிறுவர் தினம் என்ற ‘பெனர்’ தங்கநிறத்தில் பளபளத்துக் கொண்டிருந்தது. மேடைக்கு முன் பெருந்திரளான மக்கள் குழுமியிருந்தனர். தேசிய சிறுவர் தினப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறார்களுக்குப் பரிசளித்து மகிழ்ந்த டொக்டரும் அவரது கணவரான பிரமுகரும், துளசியின் பக்கத்துவீட்டு மாமாவால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
வீட்டுக்கு வந்தபின் கொல்லைக்குச் சென்ற டொக்டர், தன் துளசிச்செடி காய்ந்து கருகாகித் தரையில் கிடப்பதை அப்போதுதான் கண்டு பதறினார்.
“என்னங்க இஞ்ச பாருங்களேன்! இந்த துளசிச்செடி அழிஞ்சுபோய்க் கிடக்குது! வேலிகூட பிரிஞ்சிருக்கு! ஐயோ, கண்ணுக்குக் கண்ணா வளர்த்த செடி இப்படியாச்சுதே!”
“அதுக்கேன் இப்படி அலட்டிக்கிறே? நமக்கு இன்னைக்கி பொன்னாடை போர்த்தினானே, அவனிட்டச் சொல்லி, வேறொரு செடிய அதே இடத்துல நடச் சொல்லு டியர்.” பிரமுகரின் குரல் வெகு சாவதானமாய் ஒலித்தது. டொக்டர் அறியாமல் நாளை அந்தச் செடியும்…?
– இளங்கதிர் – 2000/2001.
– தமிழ் சங்க ‘வரப்பிரகாஷ் நினைவுப்போட்டி’யில் பரிசு பெற்ற சிறுகதை.
– பெண்ணின் குரல் இதழ் 22 (2000)
– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.