என் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2025
பார்வையிட்டோர்: 158 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நெசவாலையில் வேலை கிடைத்தது. ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலைக்குள் ஒருநாள் விடியற்காலையில் நானும் போய் நுழைந்தேன். அம்மைத் தழும்புகளை முகமெங்கும் புள்ளிகளாகக் கொண்டிருந்த ஒரு வயோதிகக் காவல்காரன் என்னைக் கூட்டிக்கொண்டு போய் தூசியும் புகை மண்டலமுமாகப் படர்ந்துகிடந்த ஒரு பகுதிக்குள் தள்ளினான். திணறிப்போனேன். ஏதோ மேக வெளிக்குள் வந்து விழுந்தாற் போல திக்குமுக்காடினேன். 

சில நாழிகைக்குள் எல்லாம் பழகிவிட்டது. முன்னால் படர்ந்துவிட்டிருந்த புகையை ஊடுருவிய பொழுது ஒரு பெண் நீண்ட தடியினால் பெரிய வாளியொன்றில் எதனையோ கலக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. 

‘என்ன இது; இயந்திரம் மாதிரி சுழல்கிறாளே!’ 

என் முணுமுணுப்பு கேட்டிருக்க வேண்டும். அவள் தலைதூக்கிப் பார்த்தாள். 

மறுபடியும் குனிந்த தலையுடன் தடியை வேகமாகச் சுழற்றத் தொடங்கினாள். 

இரண்டு மூன்று நாட்கள் பறந்து விட்டன. 

மிகவும் சங்கோஜப் பேர்வழியான நான் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி விட்டேன். என்னுடைய இயல்பான லஜ்ஜை குணத்தைத் தள்ளி வைத்துவிட்டு அவளைப் பேச்சுக்கிழுத்தேன். 

“இது, மிச்சம் கஷ்டமான வேல இல்லியா?” 

அவள் தலை தூக்கிப் பார்த்தாள். இயந்திரத்தில் முழுகி நனைந்து பறந்து விரிந்து ஓடிக் கொண்டிருந்த வர்ண துணிகளுக்கிடையாக அவளுடைய முகம் தெரிந்தது. முத்து முத்தாக முகத்தில் அரும்பிக் கிடக்கும் வியர்வைத் துளிகளை ‘சளுக்’கென வழித்தெறிந்துவிட்டு என்னை நோக்கிப் புன்னகைத்தாள். 

“பழகிவிட்டது. அதுதான் கஷ்டம் தெரியல” அவளுடைய மெதுவானதொரு முணுமுணுப்பு. 

“இங்கே காத்தே இல்ல” 

அவள் கலகலவென நகைத்தாள். 

அவள் சாயத்தைக் கலக்கிக் கொண்டிருந்த இடத்திலுள்ள காங்கைக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டிருந்ததால் அதன் வழியாக ‘குபுகுபுவென வெண்புகை வெளிப்பட்டு எங்கும் வியாபகமாகி விட்டிருந்தது. அந்தப் புகைவெளியில் அவள் மறுபடியும் இயந்திரமாக இயங்கத் தொடங்கிவிட்டாள். 

“இது அசிங்கமான இடம். சுத்தமில்லாத தண்ணி நோய்க்கிருமிகளை உண்டாக்கும்…” 

நான் சொல்லி முடிக்கும் முன்னரே அவளுடைய ‘களுக்’ சிரிப்போசை என் பேச்சை முறித்தது. 

“நோய்க்கிருமி,தூசி,பஞ்சுத்தூள். ஸ்டீம் சூடு, அவ்வளவும் இருக்கா அதுக்கென்ன?” வேலை செய்வதை நிறுத்திவிட்டு அவள் என்னை நோக்கி அனுதாபத்துடன் கேட்டாள். 

சாயம் கலக்கும் தடி நுனியை கைவிரல்கள் பொத்திக் கொண்டிருக்க முகத்தின் நாடி அதன்மீது அமர்ந்திருக்கிறது. வியர்வையில் நனைந்தும், வேலைக் களைப்பினால் வாடி தளர்ந்து இருண்டும் இருந்த பொழுதும் அவள் முகம் என்னை வசீகரித்தது. விழி இமைகளில் சலனத்தை உண்டு பண்ணாமல் வெகுநேரம் அவளை உற்று நோக்கினேன். லஜ்ஜையினால் அவள் முகத்தில் செவ்வரிகள் படர்ந்தன. 

“பொல்லாத நசல்கள் வரும்.” 

மறுபடியும் அவளுடைய கலகலப்பான நகைப்பொலி கேட்டது. 

“பசியைவிட பெரிய நோயா?” என்னைத் திருப்பிக் கேட்டுவிட்டு சுவரை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே பிரேம் போட்டதொரு சட்டம் தொங்கிக் கொண்டிருந்தது. 

‘விசுவாசமுள்ள தொழிலாளியே! ஆண்டவனை நேசிப்பதுபோல உன் முதலாளியை நேசி. அவர் இல்லையென்றால் ஒரு பிடி சோறாவது உனக்குக் கிடைக்காது என்பதை மறவாதே!’ 

அதில் அச்சடிக்கப்பட்டிருந்த அந்த வாசகங்களைப் படித்துவிட்டு அவளைப் பார்த்தபொழுது அவள் நன்றிப் பெருக்குடன் அந்த வாசகங்களை இன்னும் படித்துக் கொண்டிருந்தாள். 

‘மிகவும் நன்றி குணமுள்ள பெண்’ மனதிற்குள்ளாகச் சொல்லிக்கொண்ட நான் அன்போடு அவளை நோக்கினேன், 

“உன் பெயர்?” 

“ஜெபமாலை!” 

“அழகான பேர்” அவள் முகத்தில் மறுபடியும் அந்த செவ்வரிகள் தோன்றின. 

“எவ்வளவு காலமா இங்கே வேல?” 

“பதினொரு வருஷம்!” 

“இந்த வேலயா?” 

“ஆமா!” 

என் உடம்பு லேசாக நடுங்கியது. எலும்புகள் சிலிர்த்துக் கொள்ளுமாற் போன்ற ஓர் உணர்வு பரவியது. 


பதினோரு ஆண்டுகள் என்பது லேசானவையா என்ன? அதிலும் அழுக்கும் அசிங்கமுமான இடம். காங்கைச் சூடு, சாயங்கள், அவற்றிற்குப் பயன்படுத்தும் மருந்து வகைகள், பிளிச்சிங் பவுடர் போன்றவற்றின் தூசி எல்லாமே மனிதனை நரகத்தை நோக்கித் தள்ளிவிடும் விஷப் பொருள்கள். காற்றும் வெளிச்சமும் இல்லாத இந்த இடத்திற்கு பதினெட்டு வயதில் வந்து நுழைந்து பதினோரு ஆண்டுகளை கடுமையான உழைப்பிலே கழித்துவிட்டா ளென்றால் அதுவென்ன லேசான காரியமா என்ன? குடும்பத்தின் முழுச் சுமையையும் தலையில் சுமந்து ழைப்பிலே கண்ணும் கருத்துமாகி வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். 


எங்களுக்குள் வளர்ந்த காதல் எங்களை இணைத்தது. தொழிலாளர் குடியிருப்பில் நாங்கள் வசித்து வந்தோம். அந்திப் பொழுதுகளில் வாசல் படிக்கட்டில் அமர்ந்து மணலில் குழந்தைகள் தூசி பறக்க கூச்சலிட்டு கும்மாளமடித்து விளையாடுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்போம். சிலவேளைகளில் அவளுடைய கண்கள் கலங்கி நீர் துளிர்த்து பிரகாசிக்கும். அழுக்கும், வடிக்கின்ற மூக்குச் சளியுமாக விளையாடுகின்ற அரை நிர்வாணக் குழந்தைகளைத் துன்ப நீர் சுரக்கும் கண்ளுடன் பார்ப்பாள். 

இருள் நிறமான தொழிலாளர் குடியிருப்பின் மீதாக தவழ்ந்து செல்கின்ற மாலைச் சூரியன் பொன்னிறக் கதிர்களை வெறிக்கப் பார்த்தவாறு என்னவோ முணுமுணுப்பாள். 

“என்ன ஜெபா?”

தனது நிர்ச்சலனமான பார்வையிலிருந்து விடுபடும் அவள் என்ன என்பதுபோல் என்னைப் பார்ப்பாள். பிறகு அவளாகவே சொல்வாள்; இல்லை என்னைக் கேட்பாள். 

“இந்தக் குழந்தைகளெல்லாம் ஏன் இப்படி இருக்கு?” 

“எப்படி?” 

“அசிங்கமா, கறுப்பா!” 

நான் கலகலவென நகைப்பேன். அதில் கிண்டல் பறக்கும். 

“என்னத்துக்கு நசலுக்காக ஏன் பயப்படணும். பசி முடிஞ்சாப் போதாதா?” 

அவள் திகிலுடன் என்னைப் பார்ப்பாள்; கண்கள் மருட்சியில் உருளும். 

“நமக்குப் பொறக்குற குழந்தைகள் இப்புடியா இருக்கும்?” 

“இதைவிட மோசமாவும் பொறக்கலாம்!” 

“அது ஏன்?” 

“மனுஷன் தின்றது, மனுஷன் குடிக்கிறது. ஏன் வாழ்றது. சுவாசிக்கிறது எண்டு அடுக்கிக்கிட்டே போனா எல்லாமே சுத்தமா இருக்கணும். இல்லாட்டி அது வெசம்தானே!” 

அவள் மௌனமாகவிருந்தாள். ஓர் ஊமையைப் போல வானத்தையே வெகு நேரம் வெறித்து நோக்கினாள். 

‘பரம மண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே! எனக்குப் பொறக்கும் குழந்தை ஒரு தேவ பாலகனைப் போன்று அழகாக இருக்க வேண்டும்’ அவள் ஓசையெழுப்பாமல் மனதிற்குள்ளாகவே பிரார்த்தனை செய்வது என் இதயத்திற்கு தெளிவாகக் கேட்டது. என் இருதயமும் மானசீகமாக அந்தப் பிரார்த்தனையில் கலந்து கொண்டது. 


பிரசவத்தின்போது ஜெபா துடியாகத் துடித்தாள்; உறுப்பு உறுப்பாக வெட்டியெறிவதுபோல அலறினாள். மெலிந்த கறுப்பு நிறமான ஒரு சதைத் துண்டைப் பிரசவித்துவிட்டு தன் மூச்சை அடைக்கிக் கொண்டாள். 

மில்லுக்குப் பக்கத்திலுள்ள அந்த மயானத்தில் ஜெபாவின் சடலத்தைப் புதைத்துவிட்டு திரும்பியபொழுது இந்த உலகை சூன்யம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாகவும் அங்கே ஜன்னிக் காய்ச்சலால் நான் மட்டும் தன்னந்தனியனாக நடுங்கிக் கொண்டிருப்பதாகவும் பயப்பிராந்தி என்னை ஆட்கொண்டது. 


என் கனவு, என் நினைவு அனைத்துமாக என் மகன் ஜோர்ஜ் வளர்ந்தான். அவனை பூப்போல பராமரித்து வளர்ப்பதிலே காலத்தைச் செலவழித்தேன். எனினும் என் ஜெபாவின் நினைவு அடிக்கடி தோன்றி என்னை அலைக்கழித்ததால் நான் குடிக்கத் தொடங்கினேன். தொழிலாளர்களில் அநேகம் பேர் குடிக்கிறார்கள். நான் குடித்தாலென்ன? 

மூன்று வருடங்களை காலம் அள்ளிக்கொண்டு சென்று விட்டது. சம்பளம் பெற்ற ஒருநாள் இரவு நன்றாகக் குடித்துவிட்டு வீடு சென்று கதவைத் தட்டினேன். 

ஓ…. அது திறந்தல்லவா கிடக்கிறது. குப்பி விளக்கின் மினுமினுப்பில் என் மகன் வெறும் தரையில் சுருண்டு படுத்திக் கிடப்பது தெரிந்தது. அவனை நான் தூக்கிய பொழுது என் குடியுணர்வு மின்னலென மறைந்துவிட்டது. 

‘இதென்ன நெருப்புத் துண்டையா தொட்டேன்’ மனம் படபடவென வேகமாக அடித்துக்கொள்ள ஓடோடிச் சென்று குப்பிவிளக்கை தூக்கிக்கொண்டு வந்து அவன் உடலருகே நீட்டி குனிந்து பார்த்தபொழுது என் சர்வாங்கமும் ஒடுங்கிவிட்டது. 

ஜோர்ஜ்ஜின் காதுகள் விரிந்து புடைத்து சிலிர்த்தவாறிருக்க, மூக்கு விம்மி வீங்கிக் கிடக்க, கண்களில் பாசி படர்ந்தாற் போன்றதொரு பச்சை வர்ணம் நிழலாடுகின்றது. 

சில நாட்களிலே அவனுடைய சிறிய மேனி பெருத்து விட ஒட்டி உலர்ந்த வயிறு ஒரு பானையாக உருமாறத் தொடங்கி கால்களும் கைகளும் பெரியதொரு கொழுத்த மனிதனுடையதைப் போன்று மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாயின. 

ஒருநாள் வெள்ளிக்கிழமை காலையில் நான் வேலைக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்… என் மகனின் கால் விரல்களில் வெடிப்புத் தோன்றி அதிலிருந்து சலம் சொட்டுச் சொட்டாகக் கொட்டத் தொடங்கியது. 

நான் பிசாசைக் கண்டவனைப் போன்று ஓடத் தொடங்கினேன். நெசவாலைக்குள் சென்று நுழைந்த நான் ஒரு மதயானையைப் போல நாலா திசைகளிலும் தாவி சுவர்களிலெல்லாம் மோதி, கையில் கிடைத்த ஓர் இரும்புக் கம்பியினால் அந்தப் பிரேம் போட்ட சட்டம் எங்கெல்லாம் தொங்குகிறதோ அங்கெல்லாம் சென்று அவற்றை அடித்து நொறுக்கி துகளாக்கினேன். 

அந்த அம்மைத் தழும்புக் காவற்காரன் பறந்து வந்தான். என் பிடறியில் தாக்கிய அவன், இழு இழுவென இழுத்துக் கொண்டுபோய் வாசற்கதவிற்கு அப்பால் தள்ளிவிட்டான். 

மணலில் விழுந்தேன். என் நாடியில் கல்லொன்று குத்தி கிழித்துவிட்டது. சிவப்பு வெள்ளம் மளமளவெனக் கொட்டுகின்றது. 

நான் எழுந்து தலைநிமிர்ந்தபொழுது அட்டா அதுவென்ன… நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு நடுவிலே அந்த அம்மைத் தழும்புக்காரன் ஒரு பந்தாகப் பறந்து கொண்டிருக்கிறானே! 

– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

கே.விஜயன் கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *