என்ன பேச்சு பேசினான்!




ஓர் ஊரில் ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளமுருகு. அவனுக்கு சொந்தமாக கீற்றுக் குடிசை ஒன்று இருந்தது. பல ஆண்டுகளாகக் கீற்றுகள் மாற்றப்படவில்லை. அதனால் மழை பெய்தால் குடிசைக்கு உள்ளும் பெய்யும்; வெயிலும் உள்ளே அடிக்கும்.
அவனிடம் மாடு ஒன்று இருந்தது. அதுவும் அந்தக் குடிசைக்குள் அவனுடன் இருந்தது. பிழைப்பு தேடி அவன் தொலைவிலிருந்த இன்னொரு ஊருக்குச் சென்றான்.
அந்த ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். தன் ஒரே மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தார்.
பேராசை கொண்ட அவர், தன் மகளுக்குத் தன்னை விட செல்வம் மிகுந்தவனே மணமகனாக வர வேண்டும். அப்படிப்பட்டவனுக்கே அவளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தார்.
நிறைய செல்வந்தர்கள் அவர் மகளைப் பெண் கேட்டு வந்தனர்.
”நான் எதிர்பார்க்கின்ற அளவு உங்களிடம் செல்வம் இல்லை. என் மகளைத் தர மாட்டேன்,” என்று மறுத்து விட்டார்.
நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டான் இளமுருகு.
‘எப்படியாவது அந்தச் செல்வந்தரை ஏமாற்ற வேண்டும். அவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்ன செய்வது…’ என்று சிந்தித்தான்.
நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.
பெருஞ்செல்வந்தனைப் போல ஆடைகள் அணிந்து, அந்த செல்வந்தரின் மாளிகைக்குள் பெருமிதமாக நுழைந்தான்.
எதிரில் வந்த இளைஞன் ஒருவன், ”அவர் எதிர்பார்த்த அளவு என்னிடம் செல்வம் இல்லையாம். பெண் தர மறுத்து விட்டார். நீயாவது முயற்சி செய்து பார்,” என்றபடியே சென்றான்.
மாளிகைக்கு வந்த இளமுருகுவைப் பார்த்தார் அந்தச் செல்வந்தர்.
‘தன் மகளைப் பெண் கேட்டு வந்திருக்கும் செல்வன் இவன். விசாரிப்போம்’ என்று நினைத்தபடியே அவனை வரவேற்றார்.
இருவரும் அங்கிருந்த கூடத்திற்குச் சென்றனர்.
வழுக்கி விழுவதைப் போல நடித்தான் இளமுருகு.
”கவனமாக நடக்கக் கூடாதா?” என்று கேட்டார் செல்வந்தர்.
”இங்கே ஒரே இருட்டாக உள்ளது. அதனால்தான் வழுக்கி விழ இருந்தேன்,” என்றான் அவன்.
பகல் நேரத்திலும் இங்கே விளக்குகளை ஏற்றி வைத்துள்ளோம். இருட்டாக இருக்கிறது என்கிறானே… இவனுக்குப் பைத்தியமோ என்று நினைத்து அமைதியாக இருந்தார் அவர்.
”என் வீட்டுக் கூரை வழியாக எதையும் பார்க்கலாம். எப்போதும் வீட்டிற்குள் வெளிச்சம் இருக்கும். பகலில் இப்படிப்பட்ட விளக்குகள் எரிவதை நான் பார்த்தது இல்லை. பழக்கம் இல்லாததால் நான் வழுக்கி விழ இருந்தேன்,” என்றான்.
பிறகு அவர்கள் இருவரும் உணவு உண்ண அமர்ந்தனர்.
வெள்ளித் தட்டுகளில் அவர்களுக்கு உணவு பரிமாறினார்கள்.
உணவை உண்டு முடித்தான் இளமுருகு. மேலும், அவன் உண்பதற்காக அந்தத் தட்டிலேயே உணவு பரிமாறினார்கள்.
அவனோ அந்தத் தட்டிலிருந்து எடுத்து உண்பதற்குத் தயங்கினான்.
”ஏன் உணவு உண்ணத் தயங்குகிறீர்? முன்னரே சாப்பிட்டு விட்டு வந்து வீட்டீரா?” என்று கேட்டார் செல்வந்தர்.
”ஒரே தட்டில் மீண்டும் சாப்பிட என்னவோ போல உள்ளது. இப்படிச் சாப்பிட்டு எனக்குப் பழக்கம் இல்லை. ஒருமுறை பயன்படுத்திய தட்டை மீண்டும் பயன்படுத்த மாட்டேன். தூக்கி எறிந்து விடுவேன்!” என்றான்.
‘பகலில் வெளிச்சம் உள்ளே வரும் என்றால் மாளிகை முழுவதும் கண்ணாடிக் கூரை அமைத்து உள்ளான். ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போது புதிய தட்டு. இவன் என்னை விடப் பெருஞ்செல்வந்தனாக இருக்க வேண்டும். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கிறான்’ என்று நினைத்தார் செல்வந்தர்.
அப்போது அவருடைய தோட்டத்திலிருந்து மாடுகள் கத்தின.
”ஏன் மாடுகள் கத்துகின்றன? அவற்றிற்குப் போதுமான இடம் இங்கே இல்லையா? அங்கே என் வீட்டிற்குள்தான் மாடுகள் இருக்கும்,” என்றான் இளமுருகு.
மாட்டு மந்தையே இவன் மாளிகைக்குள் இருக்குமாமே. அப்படியானால், அந்த மாளிகை எவ்வளவு பெரிதாக இருக்கும்?
இவனுக்குப் பெண் கொடுக்க பல செல்வந்தர்கள் போட்டி போடுவர். நாம் முந்திக் கொள்ள வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தார் செல்வந்தர்.
”உன்னை எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. நீ என் மருமகனானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். உனக்கு விருப்பமானால் சொல். உடனே உனக்கும் என் மகளுக்கும் திருமணம் செய்து வைக்கிறேன்,” என்று இனிமையாகப் பேசினார் செல்வந்தர்.
”உங்கள் விருப்பமே என் விருப்பம்,” என்று பணிவுடன் சொன்னான் இளமுருகு.
ஒரு நல்ல நாளில் செல்வந்தரின் மகளுக்கும், அவனுக்கும் திருமணம் நடந்தது.
மனைவியை அழைத்துக் கொண்டு இளமுருகு தன் ஊருக்கு புறப்பட்டான்.
மருமகனின் செல்வச் செழிப்பைக் காண விரும்பிய செல்வந்தரும் அவனுடன் சென்றார்.
கீற்றுகள் வேயப்பட்டு இருந்த தன் குடிசைக்குள் அவர்களை அழைத்துச் சென்றான் இளமுருகு. அந்தக் கூரையில் ஆயிரம் ஓட்டைகள் இருந்தன.
அதிர்ச்சி அடைந்த செல்வந்தர், ”இதுதான் உன் வீடா? எப்போதும் வீட்டிற்குள் வெளிச்சம் வரும் என்றாயே,” என்று கேட்டார்.
”கூரை வழியாக வீட்டிற்குள் வெளிச்சம் வருகிறதா இல்லையா? நீங்கள் பாருங்கள். நான் சொன்னது உண்மைதானே!”
”உன் வீட்டிற்குள் மாடுகள் உள்ளன என்றாயே,”
”என்னிடம் ஒரு மாடு இருந்தது. அதை விற்ற பணத்தில்தான் உங்கள் ஊருக்கு வந்தேன். அந்த மாட்டைக் கட்டி வைக்க இங்கே தோட்டம் ஏதும் இல்லை. அதனால் அது என்னுடன் குடிசைக்குள்தான் தங்கி இருக்கும்!”
”தோட்டம் இல்லாததால்தான் மாடுகள் வீட்டிற்குள் இருக்கும் என்றானா? இதை அறியாமல் போனேனே,” என்று தனக்குள் முணுமுணுத்தார் அவர்.
”ஒருமுறை உண்ட தட்டை மீண்டும் பயன்படுத்த மாட்டேன். தூக்கி எறிந்து விடுவேன். புதிய தட்டைத்தான் அடுத்தமுறை பயன்படுத்துவேன் என்றாயே… ஏராளமான தட்டுகள் வைத்திருக்கிறாயா?”
”இந்தக் குடிசையில் தட்டு எதுவும் கிடையாது. தட்டுக்குப் பதில் இலையைத் தான் பயன்படுத்துவேன். ஒருமுறை சாப்பிட்ட பிறகு மீண்டும் அந்த இலையைப் பயன்படுத்த முடியுமா? தூக்கி எறிந்து விடுவேன். புதிய இலையைப் பறித்து சாப்பிடப் பயன்படுத்துவேன்,” என்றான் அவன்.
”ஐயோ! இவன் பேசியதற்கு இப்படியும் பொருள் உள்ளதா? அதை அறியாமல் ஏமாந்து போனேனே. என் பேராசைக்கு இந்த தண்டனை தேவைதான். இனி என்ன செய்வேன்,” என்று அழுது புரண்டார் செல்வந்தர்.
பாவம் அவரால் வேறு என்ன செய்ய இயலும்!
– ஏப்ரல் 2016