என்னுயிர் நின்னதன்றோ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 5,923 
 
 

முன் குறிப்பு: கதை நடக்கும் வருடம் 2006 என அறிக.

கீழ் வானம் சிவக்கும் காலை நேரம்.. மாட்டு மணிச் சத்தமும் பறவைகளின்  கீச்சொலியும் கலந்து விடியலின் வரவுக்கு வாழ்த்து சொல்லும் இதமான பொழுது .. வீசும் காற்றில் இன்னும் இரவின் ஈரம் மீதமிருந்தது.  சேவல்களும், குயில்களும் இன்ன பிற பறவைகளும் தங்கள் குரல் வளத்தை சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்க, தூக்கம் கலைந்திராத தெரு நாய்கள் அரைக் கண் மட்டும் திறந்து பார்த்து விட்டு, இத்தனை அதிகாலையில் எங்களுக்கென்ன வேலை என்பது போல் மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தன.புற்களின் தலை சுமந்த பனித்துளிகள் இளவெயிலில் வைரத் துணுக்குகளாய் ஜொலித்துக் கொண்டிருக்க ,  அவற்றை வாரிச் செல்ல வந்த கொள்ளைக்காரனாய் சூரியன் மெதுவாய் மேகக்  கூட்டத்தின் அடியில் இருந்து எட்டிப் பார்த்தான்.

அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்த பெண்கள் வீட்டின் வாசலில் கோலமிட்டு முடித்துப்  பின்னும் ஓரமாய் நின்று  இன்னும் எங்கெங்கு இழை இழுத்து கோலம் வளர்த்தலாம்  என்னும் பலத்த சிந்தனையில் தலை சாய்த்து பார்த்திருந்தனர். வீடுகளின் கொல்லை புறத்தில் பால் பீய்ச்சும் ஒலியும், தாயைச் சுற்றி துள்ளி விளையாடும் கன்றுகளின்  கழுத்து மணி ஒலியும் , அவற்றை வாத்சல்யமாய்க் கொஞ்சும் பசுக்களின் சத்தமும், அந்த காலை பொழுதின் பூபாளமாய் தெருக்களெங்கும் பரவி ஒலித்தது .

ஊரின் மத்தியில் உள்ள சின்னஞ்சிறிய தேநீர் கடை அந்த அதிகாலை வேளையிலே  பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மரக்கட்டைப் பெஞ்சுகளில் சிலர் அமர்ந்தும், சிலர் நின்றும் கை விரல்களின் வழியே தேநீரின் இளஞ்சூட்டை மூளை பிரதேசத்துக்குள் கடத்திக் கொண்டிருந்தனர் . அடுப்பில் கொதிக்கும் பாலின் வாசனை, பாய்லரில் கொதிக்கும் தேயிலையின் மணம் தட்டிப்போடப்பட்டிருந்த இஞ்சி மசாலாவின் நறுமணத்தோடு கலந்து, அந்தச் சிறிய கடையை ஒரு புதிய உலகமாய் மாற்றிக் கொண்டிருந்தது .

தன் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்த அந்த ஊரின் உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர், ராமசாமி  ஐயா. மூக்கின் நுனியில் வாக்காகப் பொருந்தியிருந்த கண்ணாடியைச் சரி செய்து கொண்டு, அன்று காலை வந்த செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார் . அருகில் அமர்ந்திருந்த சிலர் , “என்ன போட்டிருக்கான் சார் ” என்ற கேள்வியை கண்களில் நிறுத்தி அவர் முகத்தையே அசைவில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் .

செய்தித்தாளை மடித்தவர் , கண்ணாடியைக் கழற்றியபடி மெதுவாகத் தனக்கே உரிய கனத்த குரலில் பேசத் தொடங்குகிறார்.

“வடக்க பஞ்சாப் கிட்ட பதான் கோட் -னு ஒரு ஊர் இருக்கு.. அங்க தான் நம்ம விமானப்படை தளம் ஒண்ணு இருக்கு. நேத்து ராத்திரி  அங்க சண்டை நடந்துருக்கு .. இப்போ வரைக்கும் நம்ம பட்டாளத்துக்காரன் 3 பேரு  செத்துருக்கான்..அந்த பக்கம் எத்தனை பேரு-னு இன்னும் தெரியல..”

“இவனுகளுக்கு இதே வேலைக் கழுதையா போச்சு..தைரியமான ஆம்பிளைனா எதுத்து நின்னு அடிக்கணும்.. அதென்ன உறங்கறப்போ புறவாசல்ல நொழையறது. இவனுங்க எல்லாம் மனுஷ கணக்குலயே சேத்தி இல்ல.. ”

“பொண்டாட்டி புள்ளய கண்ணுல காணாம, குளிர் மழையினு நோகாம நாடு முக்கியம்னு நிக்கிறவன் எல்லாம் இவனுகளுக்கு சுளுவா போச்சு..”

“எங்கையில சிக்கனும்..அன்னிக்கு இருக்குடி கச்சேரி..ஊர்க்கோடி புளியமரத்துல கட்டிவச்சி பிரம்பாலையே வெளுக்கணும்..”

வெள்ளந்தி மனிதர்களின் ஆதங்கத்தின் ஒலி வடிவம் வேறுபட்டாலும் ,உணர்வுகள் ஒன்றுபட்டு ஒலித்தன .

மாட்டுக்கார முத்தையனுக்கு திடீரெனப் பொறி தட்ட , “ஆமா வாத்தியாரைய்யா..நம்ம பையன் பட்டாளத்துலதானே இருக்கான்..அவன் இருக்கற இடத்துல பிரச்சனை இல்லையே..”என்றார்.

அப்போதுதான் ஆதங்கத்துடன் பொருமிக் கொண்டிருந்தவர்களுக்கு வாத்தியார் மகனின் நினைவு வந்தது .

அவரை ஊன்றிக் கவனித்தவர்கள் அவரது கண்களில் கலகத்தைக் கண்டனர் ..

“நம்ம தம்பி எங்க இருக்குது சார்?..”

“அதெல்லாம் பயப்படாதீங்க..நம்ம ஐய்யனார் அவன்கூடவே தொணையா இருப்பாரு..”

“அவன் அங்கதான் இருக்கான்..எனக்கே படபடங்குது ..அவன் அம்மா எப்படி இருக்கப் போறாளோ.. சரங்குத்தி ஐய்யனாரே … நீதான் தொண இருக்கணும்…” வானத்தை நோக்கி கரம் குவித்தார் .

தளர்வாக வீட்டை நோக்கி நடந்தவரை, ஊர்க்காரர்கள் கனத்த மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வீட்டை நெருங்கும் போதே அவரது மனைவியின் தலை வாசலில் தெரிந்தது. பதட்டத்துடன் நின்றிருந்தவள்  இவரைப் பார்த்த உடன் ஓடி வந்தாள்.

“ஏங்க ..எங்காதுல விழுந்த சேதி உண்மையா..நம்ம தம்பி இருக்கற இடத்துல ஏதோ சண்டையாமே ..புள்ள என்ன பண்ணுதோ ஏது பண்ணுதோ..மொதல்ல அவனுக்கு போன போடுங்க ..”

மகனை தொடர்பு கொள்ள முயற்சித்தவர், தோல்வியோடு அமர்ந்தார் .

“லைன் கிடைக்க மாட்டேங்கிது வேணி ..அவனுக்கு ஒன்னும் இருக்காது ..நீ பதறாதே ..உனக்கு படபடப்பு அதிகமாகி மயங்கி விழுந்தா என்ன பண்ணுவேன் நான்..”

“புள்ளைக்கு என்னமோனு பதறுதுங்க..” கண்ணில் நீர் கோர்த்தவள் , பூஜை அறைப்பக்கம் திரும்பி கண்ணீருடன் சத்தமாய் வேண்டிக்கொண்டாள் .

“ஐயா சரங்குத்தி ஐய்யனாரே ..எம்புள்ளய முனை முறியாம என் கையில சேர்த்துரு ..வர கொடைக்கு  ஆடு வெட்டி படைக்கிறேன்..ஐயா மாறா ..எங்கய்யா இருக்க நீ..”

அவன் இளமாறன்..அவர்களது ஒரே மகன்..அழியாத வீரத்துக்கும் குறையாத வேகத்திற்கும் சொந்தக்காரன்.வானூர்திப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த கையோடு இந்திய  ராணுவத்தின் விமானப் படை பிரிவில் இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்து இன்று மிக் 21  விமானத்தை இயக்கும் விமானியாக இருக்கிறான். கண்களில் சூரிய வெப்பத்தையும், மனதில்  தென்றலின் குளுமையையும் ஒருங்கே கொண்டவன்.

10 வயதிலேயே ‘வருங்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்? ‘ என்று கேட்ட பள்ளி ஆசிரியருக்கு , விமானப் படை அதிகாரியாக விரும்புகிறேன் என்று அதிரடியாய் பதிலளித்தவன் , வளர்ந்து வாலிபம் கண்டதும் தன் விமானப் படை கனவை நனவாக்கிக் கொண்டான்.

ஐந்தாறு தெருக்களும், தெருவுக்கு 30 வீடு என்ற கணக்கில் 150 குடும்பங்களும் ,  2 கோவில்களும், ஒரு சர்ச்சும், ஒரு மசூதியும் கொண்ட சின்னஞ்சிறு ஊர் அது.வைக்கோல் போரில் பற்ற வாய்த்த நெருப்பு போல , அதற்குள் விஷயம் ஊர் முழுதும் பரவியது .அவரவர் பழக்க வழக்கத்துக்கு ஏற்ப ஐயா, அக்கா, மதினி  என்று அழைத்துக் கொண்டு  ஒவ்வொருவராய் வரத் தொடங்கினர் .

“ஒன்னும் கவலைப்படாதீங்க வாத்தியாரைய்யா ..15 வயசுலயே அத்துக்கிட்டு போன காள மாட்ட ஒத்தையா நின்னு  பிடிச்ச பய அவன்.எந்த கொம்பனாலயும் அவன் விரல் நகத்த கூடத்  தொட்டுப்பாக்க முடியாது ..” விட்டம் வெறித்து அமர்ந்திருந்த வாத்தியாரை தேற்றிச் சொன்னார் மணியக்காரர்.

“சடையாதீக மதினி ..நம்ம பயலுக்கு ஆயுசு கெட்டி ..10 வயசுலயே ஊர்க்கோடி கிணத்துல முங்கி மண்ணெடுத்து விளையாடுன பய அவன்..மஞ்சதுணியில 101 ரூவாய முடிஞ்சு வையுங்க ..இந்த வருஷ ஊர்க்கொடையில  முடியெடுத்து காணிக்கைய ஒப்படைப்போம் ..” மணியக்காரர் மனைவி வாத்தியார் மனைவியின் கையை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டாள் .

“என்னதான் தைரியம் சொன்னாலும் மனசு பதறுது தேனு ..அவன் குரலை கேட்டுட்டா போதுமாத்தா ..முருகா ..வர தைப்பூசத்துக்கு நடைபயணமா உன் கோவிலுக்கு வரேன் ..என் புள்ளய கண்ணுல காட்டிருப்பா ..” வாத்தியார் மனைவி வேணி மருகித் தவித்தாள்..

அவளது பதட்டத்திற்கு, அவளது தவிப்புக்குக் கொஞ்சமும் குறையாத பயத்துடன் இன்னும் ஒரு உயிர் அந்த ஊரில் அவனுக்காகத் துடித்துக் கொண்டிருந்தது .

அவள் பூங்குழலி..அந்த ஊர் மணியக்காரர் மகள். மாறன் அவளது சிறு வயது தோழன் .. அவளை விட இரண்டொரு வயது பெரியவன். ஆகாயத்தின் அடியில் அவள் காணும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள அவன் வேண்டும் அவளுக்கு. ஒரு கட்டத்தில், அவளது எல்லா குழப்பங்களுக்கும் அவனே விடையாக இருந்தான் . அவளது எல்லாமும் அவன்தான். அது காதலா நட்பா என இனங்காண தெரியாத வயதில் அவளது மனதில் ஆழமாய்ப் பதிந்தவன் அவன்.

“என்னாச்சு குழலி ..முகம் வாடி இருக்கற??”

“பரிட்சையில மார்க் கம்மி ..இந்த வீணா போன பாடம் புரியவே மாட்டேங்கிது ”

“அதுக்கு போயி யாரவது அழுவங்களா..இங்க வா..நான்  சொல்லி தரேன் உனக்கு..”

பொறுமையாய் புரியும்படி அவன் விளக்குவான்.. அவள் கண்களை உருட்டுவதிலேயே அவள் புரிந்து கொண்டாளா இல்லையா என்று அவன் அறிந்து கொள்வான் ..

“அத்தை..அம்மா குடுத்துட்டு வரச் சொன்னாங்க..” கையில் பாத்திரத்துடன் உரிமையாய் மாறன் வீட்டுக்கு வருபவளது கண்கள் அவனைத் தேடும்.. அவனைக் கண்டதும் அவள் கண்களில் மின்னல் மின்னும்.

ஏதேனும் படித்துக் கொண்டிருப்பவன்,” என்ன இன்னிக்கு காத்து எங்க வீட்டுப்  பக்கம் அடிக்கிது ?? என்ன கொண்டு வந்த?” என்று வம்பிழுப்பான் .

“அம்மா அத்தை  கிட்ட குடுத்துரு-னு கொஞ்சம் பால் பாயசம் குடுத்து விட்டுச்சு .. இரு..உனக்கு கிண்ணத்துல போட்டு தரேன்..” என்றபடி உள்ளே ஓடி மறைவாள்.

” என்ன விஷேஷம் ..பாயசம் எல்லாம் தூள் பறக்குது?” என்றவாறே ருசிப்பவனிடம் ,”ம்ம்..அதுவா..சும்மாதான்..” என்று மழுப்பி விட்டு ஓடி விடுவாள்.. அவள் மட்டுமே அறிவாள், அவனுக்கு பிடிக்கும் என்று அவள் செய்யக் கற்றுக் கொண்ட சமையல் அது என்று..முதல் முறை அவனுக்கு சமைத்துக் கொடுப்பது இனிப்பில் துவங்கட்டும் என்று ஆசையாய் செய்து வந்திருப்பாள்..இது போல பல நிகழ்வுகள்..

எந்த நாளில், எந்த மணித்துளியில், அவளுக்குள் அவன் ஆழமாய்ப் பதிந்தான் என்று அவளுக்கே தெரியாது. அவளது உலகமே அவனென்று மாறி போனாள் .

ஒருநாள் ஊருணி கரையோரம் நடந்து கொண்டிருந்தவன் , முருகன் கோவில் வாசலில் நின்றவளைக் கண்டு இயல்பாய், ” முருகன் கிட்ட என்ன மனுப் போட்டுட்டு இருக்க ?, என்று கேலி பேசினான் .

“மனுவெல்லாம் ஒன்னும் போடல..பூஜைக்குப் பால் குடுக்க வந்தேன்..”

“உன்கிட்ட ஒன்னு சொல்லணும் குழலி ..ஏர் போர்ஸ் செலெக்ஷன் எக்ஸாம் ரிசல்ட் வந்தாச்சு ..ஆசைப்பட்ட மாதிரி செலக்ட் ஆயிட்டேன் . ட்ரைனிங் தேதி லெட்டர் வந்ததும் ஐயா கிளம்பிருவேன்..” உற்சாகமாய் சொல்லிக் கொண்டே போனவன், அவளது முகத்தில் கலவரத்தைக் காணவும் , ” என்னாச்சு .இப்படி  முழிக்கற..” என்றான்.

” நீ பட்டணத்துக்கு போய்ட்டீனா மறுபடி எப்போ வருவ மாறா..?” என்று கண் கலங்கியவளைப் பார்த்து , ” பைத்தியமாடி  நீ.. நான் எக்ஸாம் எழுதினது எல்லாமே உனக்கும் தெரியும் தானே..அப்பறம் என்ன..” என்றான் .

“தெரியும் தான்..ஆனா இவ்வளவு சீக்கிரம் ரிசல்ட் வரும்-னு நினைக்கல..”என்றால் கம்மிய குரலில் .

” சரி விடு..இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் .. உனக்கு ஏதாச்சும் தரணும் போல இருக்கு ..உனக்கு என்ன வேணும் கேளு குழலி..” என்று சிரித்தான்.

‘நீ தான் வேணும் மாறா..உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கனும்..’  மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் .

“குழலி..முழிச்சிகிட்டே தூங்கறியா ..சரி இல்ல நீ இன்னைக்கு..” அவள் முகத்துக்கு நேராக கை சொடுக்கி சிரித்தான் .

திரும்பி ஊருணியைப் பார்த்தவள், “அந்த வெள்ளை பூவுக்கு மத்தியில மருதாணியை பூசிக் குளிச்சதுபோல செவப்பா பூத்திருக்கே ஒத்தபூவு ..அது வேணும் மாறா ..” என்றாள். அவளுக்கென்னவோ அந்த செந்தாமரையை பார்க்கும் போதெல்லாம் மாறனைப் பார்ப்பது போலவே இருக்கும் .

“அவ்வளவு தானே.. இரு வரேன்..” சரேலென நீரில் பாய்ந்தவன், விலாங்கு மீனாக நீந்தினான். இரண்டொரு முறை அவன் தலை நீருக்கு மேலே தெரிந்தது .ஒரு கட்டத்தில் அதுவும் காணாமல் போக அவளுக்குள் பதட்டம் அதிகரித்தது .அவனைக் கூவி அழைக்கவும் முடியாமல் , அவன் மீண்டு வந்து விடுவான்  என்று அமைதி கொள்ளவும் முடியாமல் கண்ணீருடன் அலைபாய்ந்தவள் ஊருணி கரையில் இருந்த முருகன் கோவிலைப் பார்த்து கண்ணீருடன் வேண்டிக் கொண்டாள்.

“முருகா..என் ஆசை என் மாறனை தண்ணிக்குள்ள தள்ளிருச்சே..என் மாறனை என்கிட்டே கொண்டு சேர்த்துரு..ஒவ்வொரு செவ்வாயும் உனக்கு என் கையாலேயே தாமரை பூ பறிச்சு வச்சு விளக்கேத்தறேன்..என் மாறன் பத்திரமா வந்துரனும்..”

கண்ணீர் வழிய வேண்டியபடி நின்றவள் மேல் சில்லென்ற நீர்த்திவலைகள் பட திரும்பினாள் .செந்தாமரை மலருடன் சிரித்தபடி மாறன் நின்றிருந்தான். பாய்ந்து கட்டிக் கொண்டவள், “மாறா…மாறா..” எனத் தேம்பினாள்.

ஒரு வினாடி உறைந்து நின்றவன் , மறுவினாடி அவளை இறுக அணைத்துக் கொண்டான். ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல இயலா காதலை அவளது கண்ணீர் புரிய வைத்தது . முன்பு பொருள் விளங்காத அவளது அத்தனை பார்வைகளும் அவனுக்கு அர்த்தம் புரிந்தது . அவனைக் கண்டதும் அவளது கண்களில் மின்னும் மின்னல், அவனது பார்வையில் சிவக்கும் அவளது கன்னங்கள் ,அவனை மட்டுமே தேடும் அவளது பார்வை அவளது காதலின் ஆழத்தை அவனுக்கு உணர்த்தியது. காதலிப்பது சுகம்..ஆனால் காதலிக்கப் படுவது அதனினும் சுகமல்லவா..அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தான் .

“இவ்வளவு ஆசையை மனசுல வச்சிக்கிட்டு ஏண்டி ஊமையா திரிஞ்ச ..வாயத் திறந்து சொல்லிருக்க வேண்டாமா.. என்கிட்டே சொல்ல தயக்கம் கூட வருமா உனக்கு..” அவளது கைகளைப் பற்றி தன்  நெஞ்சில் பதித்துக் கொண்டு  கேட்டவனைத் தீர்க்கமாகப் பார்த்தவள்.

“சொல்லனுமா?.. சொன்னா தான் என்னை உனக்குப் புரியுமா மாறா.. நீ அறியாத ஒன்னு என்கிட்டே ஏதும் உண்டா மாறா..” என்று படபடத்தவள் அவன் கண்களை நேராய் உற்று நோக்கி, “என் காதலை நான் நம்பினேன் மாறா..என் காதல் உண்மை-னு ஆழமா நம்பினேன்..அதுவே என்னை உன்னோட சேர்த்து வைக்கும்னு மனசார நம்பினேன் மாறா..இப்பவும் நம்பறேன்..நீ எங்க போனாலும் உன்னோட நான் வாழ்வேன்னு நம்பறேன்..” என்றாள் .

அவளது காதலின் தீவிரம் அவனை அசைத்துப் பார்த்தது. “என் குட்டிம்மா..” என்று அணைத்துக் கொண்டான்.

நாட்கள் விரைந்தோடின. சுமார் 2 வருடங்கள் பயிற்சி காலம் முடிந்து திரும்பி வந்தான். ராணுவ வீரனுக்குரிய மிடுக்கும், இயல்பான அவனது கம்பீரமுமாய் இருந்தவனைப்  பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு.

ஊருணிக்கரையில் காத்திருந்தவனைக் காண ஓடி வந்தாள். 2 வருட காலம் அவளுள்ளும் பல மாற்றங்களை நிகழ்த்தி இருந்தது.கண்களில் நீர் வழிய பார்த்திருந்தவள் , அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

“என்னய விட்டுட்டு போகாதே மாறா …2  வருஷம் ஆச்சு உன்னை பார்த்து.. இனிமேலும் என்னால உன்னைய விட்டு இருக்க முடியாது ..உனக்கு என் ஞாபகமே இல்லையா..” என்று  அழுதவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டான். அவன் தொடுகையில் நாணிச் சிவந்தவள்  அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“சீக்கிரமே வீட்டுல சொல்லி பொண்ணு கேக்க சொல்லறேன்டி..உன்னைப் பிரிய எனக்கு மட்டும் ஆசையா .. எவ்வளவு நாள் கழிச்சு பாக்கறேன்.. இப்படித்தான் அழுவியா.. நான் என்ன அவ்வளவு பயங்கரமாவா இருக்கேன்..” என்று வம்பிழுத்து சிரிக்க வைத்தான்.

எல்லாம் நேற்று போல இருந்தது அவளுக்கு.. வீட்டில் பேசுவதாக சொன்னவன், அதற்கு வாய்ப்பில்லாமல் அவசரமாக வந்த அழைப்பில் பணிக்குத் திரும்பியதும் , பதறி ஓடி வந்தவளை அணைத்துக் கொண்டு பேச்சின்றி நின்றதும் … எல்லாமே நேற்று போலவே இருக்கிறது.. விளையாட்டு போல ஒரு வருடம் பறந்து விட்டிருந்தது.. மாறனது நினைவுகள் அவளை அதிகமாய் அலைக்கழிக்கும் போது ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு அவனது வீட்டுக்குப் போவதும் அவனது அறையில் அவனது பொருட்களுடன் நேரத்தை கழிப்பதும் மட்டுமே அவளுக்கு சிறு ஆறுதலை தந்து கொண்டு இருந்தது . அவன் அருகில் இல்லாமல் ஒவ்வொரு நாட்களையும் அவன் நினைவுகளை மட்டுமே ஆதாரமாய்க் கொண்டு ஒரு யுகம் போல நகர்த்திச் சென்றவள் மின்னாமல் முழங்காமல் தலையில் வீழ்ந்த இடி போல வந்த செய்தியில் நிலை குலைந்து நின்றாள் .

என் மாறனை என்னிடம் கொணர்ந்து சேர்த்து விடு என்று அத்தனை தெய்வங்களிடமும் மன்றாடிக் கொண்டிருந்தவள் , எதிரிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நம் தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட இரு விமானங்களில் ஒன்று மாறனுடையது என்பதும் முதல் விமானம் திரும்பிய பின்பும் எதிரிகளின் கடைசி பதுங்கு குழி வரை அழித்து ஒழித்த மாறனது விமானம் மோசமான வானிலையால் இன்னும் தளம் வந்து சேரவில்லை என்பதுமான செய்திகளில் உயிர் உறைந்து நின்றாள்  .

ஊர் மொத்தமும் வாத்தியார் வீட்டில் கூடி இருந்தது. அழுதழுது தன் உணர்விழந்து கிடந்த வேணியை மடி தாங்கி இருந்தாள் மணியக்காரர் மனைவி. மாறன் பணியிலிருந்த விமானபடைத் தளத்தைத் தொடர்பு கொள்ள முழு மூச்சாய் முயன்று கொண்டிருந்த வாத்தியார் அதில் தோல்வியுற்று செய்வதறியாது திகைக்கும் போதெல்லாம் அவரைத் தேற்றி தைரியம் சொல்லிக் கொண்டிருந்தது அந்த ஊர் .

ஒருவாறாக தொடர்பு கிடைத்த போது எதிர்முனையில் கிடைத்த செய்தி அனைவரது நெஞ்சத்தையும் உடைத்துப் போட்டது . மாறன் சென்ற விமானம் காடுகளும் மலைகளும் சூழ்ந்த பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் , அவனை தேடும் பணியை தீவிர படுத்தி இருப்பதாகவும், அவன் உயிருடன் கிடைக்க மிக சொற்பமான வாய்ப்புகளே இருப்பதாகவும் தெரிவித்தனர். எதற்கும் கலங்காத மணியக்காரரே ஒரு நிமிடம் தடுமாறிப் போனார் .

“கலங்காதிங்க வாத்தியாரைய்யா.. தேடிகிட்டு தானே இருக்காங்க.. நம்பிக்கையை விட்டுராதீங்க ..ஐயனார் தொண இருப்பார் ..நம்ம பயலுக்கு ஒன்னும் ஆயிருக்காது… நல்லதே நடக்கும்.. நடக்கணும்.. நம்புங்க..” அருள் வந்தவரைப் போல சொன்னவர் அழ ஆரம்பித்தார். ஊர் மொத்தமும் உறைந்து நின்றது.. அன்று வரை மணியம் உடைந்து பார்த்தவர் யாரும் இல்லை..

குழலியின் கண்ணீர் வற்றிப் போயிருந்தது.. திரும்பி நாட்காட்டியில் காற்றில் ஆடிக் கொண்டிருந்த முருகன் படத்தை உற்றுப் பார்த்தவள் ஏதோ முடிவுக்கு வந்தவள் போல ஊருணிக்கரை நோக்கி நடந்தாள்.எப்போதும் மாறன் அவளை சந்திக்கும் விழுதுகள் சூழ்ந்த ஆலமரம் அவளை வா வா என வரவேற்றது.. மாறன் வழக்கமாக காத்திருக்கும் கல் மேடையில் அமர்ந்தவள் ஆற்றவோ தேற்றவோ ஆள் இன்றி அழ ஆரம்பித்தாள்.பார்க்கும் திசையெல்லாம் அவன் முகமே தெரிய , காற்றும் கூட அவன் பெயரைச் சொல்ல சகலமும் அவனே என்று பித்தாகி நின்றாள். . பேசிப்போன வார்த்தைகள் எல்லாம் பேரிரைச்சலாய் காதுகளில் ஒலிக்க ஏன் பிரிந்தாய் என்னவனே என மருகித் தவித்தாள்.

“வாழ்க்கை மாற ஒரு நொடி போதும் தெரியுமா.. அடுத்த விநாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்.. அது தான் வாழ்க்கையோட சுவாரசியம்.. ” என்றோ அவன் சொன்னது காதுக்குள் ஒலித்தது..

“அன்று நீ சொன்னது உண்மைதான் மாறா.. வாழ்க்கை எல்லாருக்கும் நியாயம் செய்வது இல்லை.. ஆனாலும் வாழ்க்கை அழகானது என்று நம்பினாயே..இது தான் நமக்கான நியாயமா . ” மனதுக்குள் அவனோடு பேசினாள் .

“உன் விழியோடு விழி கலந்து , முன் உச்சி முடி கலைத்து , நெற்றியில் முட்டி சிரித்து ,மீசை பிடித்திழுத்து பொய்யாய் என்னை முறைக்கும் கண்களை உரிமையாய்  உற்று நோக்கி புன்னகைத்து, உன் தோள் தழுவி மடி சாயும் வரம் நிரந்தரமாய் மறுக்கப்பட்டதேன் மாறா.. நான் செய்த பாவமென்ன ..” மனதுக்குள் மருகினாள்.

மறக்க இயலா நினைவுகளுடனும் சுமக்க இயலா நிஜங்களுடனும் துடித்தவள், ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்தாள் .கண்களில் கண்ணீர் உறைய ஊருணிக்கரையை அடைந்தவள், அதன் நடுவில் வெள்ளைப்பூக்களின் நடுவில் மலர்ந்து சிரித்த சிவப்பு மலரை உற்றுப் பார்த்தாள்.. வேகமாய் நீருக்குள் இறங்கியவள், நிமிட நேரத்தில் அந்த மலரின் அருகில் வந்தாள். கால்களை நீருக்கடியில் பரவியிருந்த தாமரைக் கொடிகளுடன் பிணைத்துக்  கொண்டவள் , அந்த மலரைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நீருக்குள் அமிழ்ந்தாள்.

மாலையில் கையில் மலருடன் கரை ஒதுங்கியவளைக் கண்டு ஊரே உறைந்து நின்றது..

“வாழ வேண்டிய வயசுல என் வீட்டு வாச மல்லி கருகிப் போச்சே.. தங்கமா ஜொலிக்க வேண்டிய என் வீட்டு தாமரைப்பூ தண்டழிஞ்சு ஒழிஞ்சு போச்சே..” என்று கதறிய ஊர் அறியவில்லை அவள் இனிதான் “வாழ”ப் போகிறாள் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *