எனக்காக





(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பாபு, நான் மறக்கவில்லை. நேரம்தான் கூட. ஆனால் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஆறாக ஓடினாலும், அள்ளும் போது, அள்ளும்வரைதான் அள்ள முடியும். அண்டாவில் மொண்டு வைத்துக்கொள்ள முடியாது. இங்கு கைதான் பாத்திரம். நீ கேட்டது அப்படி விஷயம்.

உனக்காகவே நீ கேட்டாலும், கேட்டடாலும், முன்னால் என்னில் ஊறாமல் உனக்கு எப்படிப் பங்காகும்? ஆகவே அது எனக்கும்தான் என்பது இன்றியமையாதது.
வெய்யில் உச்சிக்கு ஏறிவிட்டது. ஆனால் உள்ளங் காலில் சூடு ஏறவில்லை திரும்பி இரண்டு மாதங்களாகியும், வால்பாறைக் குளிர் என்னை முற்றிலும் விட்டபாடில்லை. எப்படியோ ஒரு கழைக்கோடி பனி உள் இறங்கி உள் ஊற்றம் கண்டுவிட்டது!
சாய்வு நாற்காலியை இழுத்து வந்து வெளியே போட்டு உட்கார்ந்து, மேடைமீது காலையும் நீட்டிவிட்டேன்.
வீட்டைச் சுற்றி முள்வேலி. உள், புழங்கத் தாராளமான இடம். சிமிட்டி மேடை வேறு (நடுவில் பாளம் வெடித்து). கிராதி gate இன் இருமருங்கிலும் கட்டிய தூண்களைத் தம் இஷ்டத்துக்கு முறித்துக்கொண்டு, இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் பூவரசு; மறுபக்கம் ஒதிய மரம். இலைகள் உதிர்ந்து, பூமியில் ஜமக்காளத்தைப் பரப்பியிருக்கின்றன. பெருக்கி மாளவில்லை. இலைகளில் சில சமயம் சலசலப்பு எது வேணுமானாலும் இருக்காலம்.
ஜயமுள்ளவரை பயமில்லை.
மேஸ்திரி இந்தத் தடவை சொல்லிவிட்டான்.”மரங் களை அடியோடு வெட்டாட்டி, வீட்டு அஸ்திவாரம் “தக்க டாப் புக்கடா த்தான். அடியிலே வேர், அப்பிடி முறுக்கிட்டு ஓடுது.
மனதைத் திடப்படுத்திக் கொண்டேயிருக்கிறேன்.
இலைகள் உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன.
உள்ளே கூடத்தில் உறங்குகிறார்கள் சுகவாசிகள்.
”நீங்கள் ஊருக்குத் திரும்பினதும் எனக்கு எழுத வேண்டும். என்ன எழுதுவீங்களோ, ஆனால் அது எனக்கு. எனக்கே, எனக்காகவே இருக்க வேண்டும்.
ஆம், நீ என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்? ஒரு எழுத்தாளனிடமிருந்து கடிதம். பொத்தி வைத்துக்கொள்ள? அல்லது நாலுபேரிடம் பெருமையாய்க் காண்பிக்க? அல்லது ஒரு முதியோனின் புத்திமதி, உபதேசம், மந்த்ரம்?
ஆனால் நீ கேட்டபோது, உன் புருவங்களின் நெரிசலில், நான் கண்ட வலி, கண்களில் ஏக்கம் அப்படியெல்லாம் நீ எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்க்கமாட்டாய்.
உள்ளங்காலில், படிப்படியாக சூடு பிடிக்கிறது. அடுத்து உடல் பூரா, வெய்யிலின் இதமான வெதவெதப்பு. மைகளைச் சுகம் அழுத்துகிறது. தூக்கம் அன்று.
“எனக்கே”
சிந்திக்கச் சிந்திக்க, சீண்டல் கூடக்கூட, மூடு சூளையில் சுவாரஸ்யமான சாத்தியங்கள் விரிய விரிய
மடக்கு விசிறியை விசுக்கெனத் திறந்து வெளிப்படும் வர்ண ஜாலங்கள்.
இந்த வெய்யிலில் உரம் இல்லை. அதன் ஒத்தடத்தில் பொல பொல புபு லுலு மைத் திரையில் மஞ்சள் கலந்த செந்திட்டு-
சே! ஒரு இழை நரம்பு பிசகினாலும் உடலுக்கு இத்தனை பாடா? எதுவும் கோணாமலிருந்தால், அதுவே ஒரு சுகம். வெட்கம்! வெட்கம்! கூடவே ஒரு பெருமிதம். மகிழ்வு. என்ன? ஏன்??
மேலே வெள்ளையானைகள் மேய்கின்றன.
ஓடங்கள் தவழ்கின்றன.
பாறைகள் சரிகின்றன
வெகு நாட்களுக்கு முன்னர் – நீ பிறக்கவில்லை. மியூசியம் நியேட்டரில் ஒரு symphony கேட்டேன். லண்டனி லிருந்து Orchestra
ஸ்ருதி கூட்டியாகிறது. இருபது வயலின்; ஜாலர்கள் triangle (டிங்! டிங்! டிங்! ட்ரிங்க்! ட்ரிங்! ட்ரிலிங்!!!) Cellos drums, flutes, viola, trambounes, plano, இன்னும் ஏதேதோ பேர் தெரியாது. நூறு? எண்ணியா பார்த்தேன்?
நான் அங்கிருந்தவரை உனக்கும். இன்னும் என்னைப் பார்க்க வந்தவர்களுக்கும் வேணது என்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். பேருக்குத்தான் சம்பாஷணை. ஆனால் One way traffic. நான் படமெடுத்து ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். தப்பில்லை. எனக்கும் என் புள்ளி களைக் காட்டச் சந்தோஷம்தான். ஆனால் அதற்குமேலும் என்னைப்பற்றித் தெரிந்து காள்ள என்ன இருக்க முடியும்?
But…
இந்த ஆனால் இருக்கிறதே, அது படுத்தும் பாடுதான் எல்லாமே. உந்துகோலே அதுதான்.
என்னவோ நிகழப்போகிறது. என்ன அது ? என் உடல் நரம்புகளில் உணர்கிறேன். நிகழப்போவதில் என் பங்கிற்கு என்னைத் தயாரில் ஸ்ருதி கூட்டியாகிறது. உணர்கிறேன். உடலின் லேசான பரபரப்பு.
Conductor தன் மேடைமீது நிற்கிறார். பேட்டனைத் தட்டினதும் கப்சிப். ஊசி இடறினால் கேட்கும். கைகளை உயரத் தூக்கி வீசுகிறார். அந்த விரல் நுனிகளிலிருந்து கண்ணுக்கு அகப்படா மின்னல்கள் புறப்பட்டு வாத்யங் களைத் தாக்கினதும், அவை முழங்குகின்றன. Symphony இன் பின்னல்கள் தனித்தனி அததற்குரிய வாத்யத்தின் மீது படர்கின்றன.
முதி இரவில், கட்டுமரத்தில், நடுக்கடலில் மீனவன், பிரம்மாண்டமான வலையைத் தவழும் அலைமீது, தோகையாக விசிறி எறிகிறான்.
புள்ளிக் கோலம் ஒன்றை அப்படியே பூமியிலிருந்து பெயர்த்து ஆகாசத்தில் எறிந்தாற்போல், மேகங்களில் ஒரு பட்சிக் கூட்டம்.
பூமிமேல் விரித்த ஜமக்காளமாக உதிர்ந்த இலைகள் சலசல கிலுகிலு.
அடுப்பங்கரையில் ஏதோ ஏனம் உருள்கிறது.
எங்கோ துவைக்கும் கல்மேல் துணி அறையும் சத்தம். தீச்! 681! கீச்!!! மீனாட்சி.
பாபு, நாம் எல்லோரும் விதிக்கப்பட்டவர்கள். விதிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டோ? அறியேன்.
என் ஜன்னலுக்கெதிரே பாரியாக வளர்ந்துவிட்ட செடியில் எட்டாத உயரத்தில் செம்பருத்திப் பூக்கள் சிரிக்கின்றன. இதழ்கள் விரிந்து, கும்குமம் பிழம்பில் தோய்ந்து, அபயத்தில் அவள் ஹஸ்தம். இன்று வெள்ளிக் கிழமை. இன்றைக்கு அவளுக்குப் பதினாறு கைகள். இல்லை பதினாயிரம். எண்ண முடியுமா என்ன?
நீலமே பிரம்மாண்டமான புடவை. காய்வதற்காக இழுத்துக் கட்டி, காற்றில் சப்தமில்லாமல் பட பட
நீ கேட்டாய், நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆனால் என்ன எழுதப்போகிறேன் அப்போத் தெரியாது. ஆனால் நான் கவலைப்படவில்லை. எழுதிவிடுவேன் அது மட்டும் தெரியும். உன் வேண்டுகோள் ஒரு சாக்காக வெளிப் படக் காத்திருக்கும் இவ்விஷயமும் ஏற்கனவே விதிக்கப் பட்டது. இதே தர்க்கரீதியில் உன் வேண்டுகோளும் விதிக்கப் பட்டதே. இல்லையேல் நீ கேட்டிருக்க வழியில்லை.
அதோ மேட்டுவளைவில் ரயில் விரைகிறது. ராக்ஷஸ மர வட்ை கண்ணைத் திறவாமலே கண்ணுள் பார்க்கிறேன்
மொட்டை மாடியில் ஆன்டனா.
ஆரம்பித்துவிட்டேனே, முடிப்பேனா என்று நான் கவலைப்பட்டதேயில்லை. ஒரு தடவை ஒரு கதை கருவூன்றி, அதன் முழுமையில் என்னின்று புறப்பாடுக்கு எட்டு வருடங்கள் பிடித்தன. இங்கு அதைச் சொல்வது பொருந்தும்.
மதியத்துக்கு கலையப் பள்ளி மணி கணகணகண்
“அம்மா!” பசு. நெஞ்சைப் பிழிகிறது
“வீணா மதுர மதுர முரளி நினைவு அலையின் பழைய ஒலி. வேளையா, பொழுதா?
அது அது அதனதன் வேளையில் வெளிப்பட்டே ஆக வேண்டும்.
ஆனால் கள்ளத்தனம் இல்லாததேயில்லை.
கடவுள்தான் கள்ளனுக்கும் கள்ளன்.
எனவே காத்திரு. முது இரவில், நடுக்கடலில் நட்சத்தி ரங்களின் மினுமினு ஒளியில் நீ விரித்த வலையில் அவன் மாட்டிக்கொள்ள
ஆமா, அவன் என்று ஒன்று தனியாகயிருக்கிறானா என்ன? அப்படியிருந்தபடி, அத்தனை தேஹிக்கும் வினியோகம் ஒண்டியாக முடியுமா? ஆனால் அவன் அன்றி ஓரணுவும் அசையாது. தூணிலும் இருப்பான் துரும்பிலு மிருப்பான் எல்லாம் தெரிந்தவன் எங்கும் நிறைந்தவன். எல்லாம் முடிந்தவன். ஆனால் அவரவர் விதிப்படி பூர்வ ஜன்மா. பிராரப்தம். சஞ்சிதம் … கர்மா theory…
அவன் கிடக்கிறான். என்னைப் புரிந்து கொள்ளத்தான் எனக்கு என் பிறவி. ஒரு நுனியைப் பிடித்து இழுத்தால் அத்தனை முடிச்சுக்களும் அவிழ்ந்து கொள்வதுபோல் என்னை நான் புரிந்துகொண்டால், அவனும் புரிபடுவான்.
புரியாவிட்டால் போகட்டும்.
‘ட்வீக்! ட்வீக்! ட்வீக்!” இரண்டு அணில்கள் மரத்தில் ஒன்றையொன்று துரத்துகின்றன. ஒன்று, ஒரு கிளையி லிருந்து மேல் கிளைக்கு ஒரு பெரிய தாவல் – அப்பா! tremendous. அதன் ஸாஹஸத்தில், அத்துடன் என் நெஞ்சும் தாவி அதன் குழியில் விழுகிறது. ஒரு இழை தப்பினால் அதன் கதி என்ன?
(என் கதி என்ன)
கிணி கிணி கிணி கிணி!”
சைக்கிள் மணி அலறல்.
எண்ணத்தின் உச்சரிப்பு மொழி. உன்னோடு என் உள்ள எழுச்சிகளைப் பங்கிட்டுக்கொள்ள மொழி.
மண்டை உச்சியில், அசையாத சிறகு விரிப்பில், பருந்து: குடை நீந்துகிறது.
கிளைகளில் மலர்களும் இலைகளும் கிசு கிசு. கிணற்றடி யில் தென்னையில் குலைகுலையாக முலைகள்
தொலை தூரத்தில், நாயின் தனித் தனிமையின் குரைப்பு.
தெருவில் புழுதி எழுப்பிக்கொண்டு ஒரு கார் பறக்கிறது. இத்தனையும் சேர்த்து வாங்கின ஒரு பெருமூச்சு. அதன் விசனத்திலும் அசதியிலும் மிரண்டுபோகிறேன். எங்கிருந்து வந்தது? மரங்களிலிருந்தா? காற்றா? பூமியா?
அல்ல நானேதானா? நான் என்கையில் இது வெறும் என் தனி உயிர் அல்ல.
நான் என்னும் இந்த ப்ரக்ஞையின் பெருமூச்சு. காசம் வரை வியாபித்த கணத்தின் அசதி.
நேரம், தூரம் தாண்டி, எங்கிருந்தாலும் உன்னைத் தொட, மொழியின் உருவாம் எழுத்து.
இந்த பூமி, ஆகாசம், காற்று இவைக்குமேலும் இன்னும் ஏதேதோவையையும், உன்னையும், என்னையும் எல்லா வற்றையும் அதற்குமேலும், நினைக்க முடிந்தது, முடியாத தையும் கவ்விக்கொண்டு எங்கும் நிறைந்ததாய் மோனம்.
Absolute. கேள்வியுமில்லை, பதிலுமில்லை, அர்த்தமு மில்லை, ஒலிகள், ஓசைகள், அசைவுகள்.கனங்கள், நயங்கள். தன்னுள் வாங்கிக்கொண்ட Absolute கர்ப்பம்,
மோனா கானா–
விளிம்பு நிலை.
இது ஒரு தருணம்.
தருணங்கள் ஸதா நம்மைச் சுற்றி நீந்திக் கொண்டிருக் கின்றன. அதை வேண்டிப் போனால் பிடிபடாது. ஆனால், தானாகவே, பின்னால் வந்து, தோளைத் தொட்டு அது தாங்கி வந்த சேதி மோதி, பூரித்து, பட்டவனையும் பூரித்து விடும் தருணம்.
அதன் சேதிதான் என்ன? அது சொல்லில் அடங்காத சேதி. அது விக்ரமாதித்தன் கதை.
தந்தப் பெட்டிக்குள்
வெள்ளிப் பேழைக்குள்
தங்கச் சம்புடத்துள்
ரத்னச் சிமிழுக்குள்
ஸ்படிகக் குமிழியுள்
துளி
விஷம்.
இது பாம்பின் மண்டையுள் மாணிக்கம் கட்டின கெட்டிப்பட்ட விஷத்திலும் கொடிது.பாற்கடலில் தோன்றி சிவன் விழுங்கிய விஷத்திலிருந்து ஒரு பனியிலும் பாதியிலும் பாதி அதன் நுண்ணியம் காண்பதற்கு இல்லை. ஆனால் காற்றுப் பட்டாலே, அமரத்வம், நித்யத்வத்தின் தனிமை இத்தனையும் தந்து இவைகளால் பயன் என்னும் உணர்வை யும் தந்து சிவமாக்கிவிடும். அமுதினும் கொடிய சேதி. சிவமான பின் அழுவதா? சிரிப்பதா? கொட்டிக் கொட்டிக் குளவியாகி…குளவி கொம்பேரி மூக்கனாகி…
விடமுண்டு எஞ்சினவனுக்கு அமிர்தத்தால் ஆக வேண்டியது என்ன?
சரி விடு விடு, அத்தனையும் யூகம்.
ஆனால் இன்றைய யூகம் நாளைய தரிசனம், நிதர்சனம்.
அத்தனையும் பித்து. இந்தத் தருணம்தான் என்ன?
தருணம் ஒரு தரிசனம். ஒவ்வொரு தரிசனமும் ஒரு பூரிப்பு: சாவு: புது ஜன்மா, சட்டையுரிப்பு.
இதெல்லாம் என்ன பிதற்றல்? புரிந்தால் புரிந்துகொள் புரியாட்டி – போ.
இந்தத் தொடல் அவசியம்தானா? இல்லாமல் இருக்க முடியாதா? Involvement இன்னும் எதற்கு? போதுமடா போதும் தொடலின் விளைவுகள்.
உறவே தொடல்தானே! பூமியில் விழுந்ததுமே, குழவி யின் முதல் கூவல் உறவின் கூவல்தானே! அங்கிருந்தே ஆதிக்கம் தொடங்கியாச்சு. தொட்டால்தான் தொடலின் தொடலா?
எனக்கு என்னாலே உறவுதான்.
உறவு தப்ப முடியாதது.
அன்றொரு நாள், தெருவில் போய்க்கொண்டிருக் கையில், காற்றில் அலைந்து வந்து ஒரு காயிதம் காலைச் சுற்றிக்கொண்டது. குனிந்து எடுத்துப் பார்த்தால் – பாலாஜி.
ஆமாம். புது வருடம் புதுக் காலண்டர்கள் வர ஆரம்பித்துவிட்டன. சினிமா ஸ்டார்களுக்கெதிரே பெருமாள் எங்கே எடுபடுவார்? வெய்யிலில் காய்ந்து, மழை யில் நனைந்து. சோகை பிடித்திருந்தார்.
கீழே போட்டுவிட்டுப் பத்தடி நடந்தேன். ஊஹும் நடை தடுத்துவிட்டது. கண்ணாடி போட முடியாது, அவர் கள் கேட்கும் விலைக்கு, இருந்தாலும்-
திரும்பிச் சென்று எடுத்துக் கையால் இரண்டு தட்டுத் தட்டிவிட்டு பிடித்துப் பையில் சொருகிக்கொண்டேன். முகத்தையே அடைக்கும் நாமம்.
வழியில் கண்பட்ட இந்தப் படத்தை உதற முடியவில்லை உறவைத் துற என்று போதிக்க வாய் எங்கே இருக்கிறது?
உறவைத் தப்பமுடியாதென்கையில் அத்துடன் இன்றி யமையாத விளைவு துரோகங்களையும் சேர்த்துத்தான்.
உறவை மறந்தாலும் துரோகத்தை மறக்கமுடியாது.
துரோகம் உறவினும் பெரிய உறவு.
பயம், பக்தி, மூட நம்பிக்கை, நம்பிக்கை, பகுத்தறிவு Images. Imageries, Beauty, Worship, Philosophy, Science, நீ, நான், நீ, நான், எனக்கு… எண்ணமெனும் வித்தில் பிறந்து வளர்ந்து பாரம்பரிய விருக்ஷம், அதன் கிளைகளும், விழுதுகளும்,வேரும், நிழலும் ஓடாத இடத்தை எனக்குக் காண்பி.
அடி, முடி, காணமுடியாதது என்பது இதுதானோ?
முள் வேலிக்கு அப்பால் முட்களின் அடர்த்தியின் இடுக்குகள் வழி, யாரோ தெருவில் நடந்து செல்வது தெரிகிறது. சந்துக்களின் வழி ஒளிச் சிதர்களில் அந்த வடு பன்முகப்படுவது போல் ஒரு பிரமை. வேலி தாண்டி கிராதி கேட்டை அடைந்ததும் அங்கு பாய்ந்த ஒளி வெள்ளத்தில் அப் பன்முகங்கள் ஒன்றுகூடி ஒருமுகமான அது- யார்? கண்ணைக் கசக்கிக்கொண்டு சாய்வு நாற்காலியின் குழுவி லிருந்து என்னைத் திரட்டிக்கொண்டு எழுவதற்குள் திருப்பத்தில் மறைந்துவிட்டது.
சிவப்புப் புடவை பளபள . அழுந்த வாரி இழுத்துப் போட்ட கொண்டை.
இந்தத் தருணத்தின் தேவதை?
தருணி.
அவள் இல்லாத இடமே இல்லை. ஆனால் அவள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதமும் வேளையும் அவளுடையது.
எங்கும் நிறைந்த பேருயிரில் உறையும் அவள், குளிர நினைக்கும் அந்த அருள் சமயத்தில், தருணத்தில்,
ஆழ்ந்த சிந்தனையிலோ,
நீண்ட பெருமூச்சிலோ,
நெஞ்சின் தழுதழுப்பிலோ
நீ படித்துக்கொண்டிருக்கையில்
வரிகளின் நடுவே, தொக்கி உன்னைத் தடுத்து நிறுத்தும் மௌனத்திலோ.
கன்னத்தில் துளித்த கண் முத்திலோ
கனம் தழைந்த புன்னகையிலோ
அவள்தான் அப்படித் தோன்றித் தெரிந்து உடனே மறைகிறாள்.
ஆயுசைத் தூக்கி உடைப்பில் போடு. தருணங்களுக்கு வாழ்.
யந்திரம் போன்ற வயதைக் காட்டிலும் தருணங்களின் சட்டையுரிப்பு. விட்டில் பூச்சியாக ஒரு சமயம்.
தருணத்தின் எரிப்பில் அத்துடன் ஐக்கியமாவது எப்படி? அவள் கண் உன்மேல் விழக் காத்திருப்பதேதான் பிறவி யின் கனவே.
நேற்று இரவு யாரோ தட்டி எழுப்பினாற்போல். வெடுக்கென விழித்துக்கொண்டேன். யாரது? யாருமில்லை. ஜன்னலுக்கு வெளியே வெள்ளி முளைத்திருந்தது. ஆனால் விடிவு என்னுள் அதுதான் எழுப்பியிருக்கிறது.
It is the spirit alone matters
ஸ்பிரிட் என்கையில் ஆவி அன்று
என்னிலும் உயர்ந்த தடமே நோக்காய், குறியாய். அதை நோக்கி என்னை உந்தும் உள்சக்தி, ஊக்கம்,
The instinct for noble aspirations.
“எழு, எழு, உன் சிறகுகளை விரி
பற, பற மேனோக்கி
பறந்து கொண்டேயிரு”
spirit வேறு ஆத்மா வேறு.
The Spirit is the individual, The Spirit is innocent, naked and restless in the purity of its innocence
அது பின்னோக்கே அறியாது. “மேலே மேலே! முன்னேறு, முன்னேறிக்கொண்டேயிரு. எது எப்படியிருந் தாலும் சரி, நீயே எப்படியிருந்தாலும் சரி- முன்னேறு. “
மனிதனில் மற்ற அம்சங்கள் எல்லாம் சமுதாயம் எனும் மந்தையைச் சேர்ந்தவை. மந்தை நிலைக்க அதன் சூது, வாது, கபடு, பயங்கள், பத்ரங்கள், கறைகளுடன்
The Spirit is the Dreamer.
“உன் கனவை நோக்கி முன்னேறு!”
பாபு, உன் கனவை நான் காணமுடியாது
அவரவர் கனவு அவரவருடையது.
The Spirit is the Passion
நீ “எனக்கே” என்றது சரியே. உன்னை அறியாமலே. அது உன் கனவுக்காக
கனவு? ஆம் வானம் உனக்கு விடு தூது.
மொழி, சொல், தருணம், Passion, கனவு, தரிசனம்
-இன்னும் அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி
-அத்தனையும் தருணிக்கு அர்ச்சனை
எத்தனை உன்னைத் தந்தாலும் அவள் வாங்கிக்கொள் வாள். அப்பவும் நீ மிஞ்சுகிறாய் – அவளுக்கு ஆச்சர்யமா யில்லை?
தருண நிலையில் இன்று, நேற்று, நாளை எல்லாம் ஒன்றாகிப் பிழம்பாகி…
The River of Life Flows on
கடிவேகத்தில் ஒரு வெள்ளையும் கறுப்பும் கலந்த பந்து என்மேல் மோதுகிறது.
“சனியன்!இதுக்கே தினம் ஆழாக்குப் பால் வேண்டி யிருக்கு, என்னைக் கேட்காமலே இதுக்கு ஊத்திட்டு எல்லாரும் மோர் தண்ணியாயிருக்குன்னு கத்தினால் நான் எங்கே போவேன்! விஷமம் தாங்கல்லே! காலை நக்கி நக்கி வேண்டியே இல்லை. எல்லாம் உங்கப்பா கொடுக்கற செல்லம்! ஒரு நாள் அவர் சாப்பிடறப்போ இலையில் வாய் வெக்கறப்போன்னா தெரியப்போறது. இது ல்லேன்னு யார் அழுதா? எங்கானும் கொண்டுபோய் விட்டுடுங்கடா! தெவசம் வேறே வரப்போறது!”
அது இன்னும் என்னை நக்கி ஓய்ந்தபாடில்லை. அதெப்படி அதன் வால், தூக்கத்தில்கூட ஓயாமல் ஆடிக் கொண்டிருக்கிறது!
இதை நான் வேண்டி அழைக்கவில்லை. இருபது நாட்களுக்கு முன் விடிகாலையில் இதே மேடைக்கு அடியில் குளிரில் வெடவெடத்துக்கொண்டு ‘வ்ராட்! வ்ராட்” என்று கத்தல் தாங்கமுடியல்லே. தவப்பிஞ்சு. அதன் தாயே விட்டு விட்டுப் போயிருக்கிறது. உன்னோடு பெத்த நாலோடு நீ அதிகப்படி. என்னால் சமாளிக்க முடியல்லே. சாவாயோ, பிழைப்பாயோ உன்பாடு.
அதுதான் Jungle Law
ஸ்ரீகாந்த் பாலைக் கொட்டாங்கச்சியில் ஊற்றி அதன் எதிரில் வைத்ததுமே அது குடித்த அவசரமே எங்கள் அனைவருக்கும் ஒரு காக்ஷி.அப்படி ஆரம்பித்ததுதான் இந்த உறவு. இவ்வளவு சுருக்கில் எவ்வளவு குண்டாகிவிட்டது! மதமதப்பில், ஓடி உருண்டு விழுந்து எழுந்து ஓயாத சுறுசுறுப்பில் அது வளைய வந்தது. ஒளிக்கதிரின் விளையாட்டுப் போல்… பின்பாகத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஒரு பக்கமாகச் சாய்த்து அது ஓடுகையில் சிரிப்பு வருகிறது. என் நெஞ்சில் ஒரு அமைதி இறங்குகிறது. இந்த வீட்டில் குழந்தை விளையாடி வருடங்கள் பல பல ஆகிவிட்டன. எங்கள் பிரியத்தை நாங்கள் அதன்மேல் கொட்டவில்லை. ஆனால் அதன் பிரியத்தைக் காட்டுவதில் அது சிக்கனமாயில்லை.
இதோ. என் காலை நக்கிவிட்டு, முன்னங்கால்களை என்மேல் வைத்து என் முகத்தை எட்டப் பார்க்கிறது. வேட்டி அழுக்காகிறது. இதற்கு ஓரளவு கால் முளைத்தவுடன் எங்கேயாவது தள்ளிவிட வேண்டியதுதான். பின்னால் இதனால் சிக்கல்கள் காத்திருக்கின்றன. No involvement for me.
தாய்கூட அவ்வப்போது வந்து போகிறது. அதன் வயிற்றுக் காம்புகளில் ஒன்றை இது கடித்துத் தொங்கியபடி குட்டியை இழுத்துக்கொண்டு தாய் கொஞ்சதூரம் ஓடி வெடுக்கென்று தன்னை விடுவித்துக்கொண்டு ஓடிவிடும். இது மறுபடியும் தன் விளையாட்டில் இறங்கிவிடும்.
அதை வயிற்றில் தூக்கிப் பிடிக்கிறேன். எங்கள் கண்கள் சந்திக்கின்றன. வெள்ளை உடலில், கழுத்திலிருந்து ஓடி முகம் முழுக்க வியாபித்த கறுப்பிலும் கறுப்பாய்ப் பதித்த பெரிய ஜபமணிகள் போன்ற விழிகளில் பொழியும் கனிவு- அந்த விழிகளில் ஏதேதோ பார்க்கிறேன். கடல் – நதிமூலம் – ஜீவநதியின் மூலம் – வசனகவிதை ஏன் இத்தனை சின்னப் பிராணியுள் இத்தனை பெரிய அன்பைத் திணித்து அதை தாங்கமுடியாமல் தவிப்பதில் என்ன களிப்பு உனக்கு? நாயின் கண்களைக் காட்டிலும் அழகிய கண்கள், நான் அறிந்தவரை
இனிமேல்தான் காணவேண்டும்.
நான் ஏன் பிறந்தேன்?
பிறந்தால் என்ன, வாழத்தான் பிறப்பு
நான் உனக்காக
எனக்காக நீ
இதற்குமேல் நமக்கு என்ன வேண்டும்? என்கிறதா!
“உனக்கும் எனக்கும் உறவு இன்றா நேற்றா? இன்று, நேற்று, நாளையேது? உனக்குத் தெரியவில்லை என்றால் என் கண்ணைப் பார்!”
கீழே அதை விடுகிறேன். ஏதோ புது விளையாட்டு. அதற்குத் தோன்றி அதன் பின்னால் ஓடுகிறது.
என்னை அறியாமல் பெருமூச்செறிகிறேன்.
இந்த வயதில் நான் என் அம்மா இல்லையே என்று ஆசைப்பட்டாலும், அளிகைப்பட்டாலும், விசனப்பட்டா லும் அது நியாயமா?
மூன்று நாட்களாக அதைக் காணோம் புரியவில்லை “என்னடா ஸ்ரீகாந்த்? உன் ஸ்வீகாரம் எங்கே?”
“யார் கண்டது? அதுக்கே கால் முளைச்சுப்போச்சு. தாயோடு எங்கானும் போயிருக்கும். யாரானும் பிடிச்சுண்டு போயிருப்பான்!
“அவன் என்னடா பண்ணுவான்?”
“என்ன பண்ணுவான்? வளர்ப்பான்.”
என் கேள்வியின் அசடு எனக்குத் தெரியவில்லை நெஞ்சில் கசண்டு. சரி யார் என்ன பண்ணமுடியும்? அதற்குக் கால் முளைத்துவிட்டால் அதுவும் நியாயம்தானே. எங்கேயாகிலும் சௌக்யமாயிருந்தால் சரி.
ஆனால் ஒளிக்கதிர்போல் உலாவி வந்தது.
பெருமூச்சு
நேற்றிரவு T.V. ஓய்ந்தபின், கூடத்திலிருந்து ரகஸ்யத் தில் குரல்கள், எட்டுகின்றன.
“நானே கண்ணாலே பார்த்தேன். யார் என்ன பண்ண முடியும்?”
“ம்! எவ்வளவு ஆசையாக வளர்த்தோம்!’ அவள் அங்கலாய்த்தாள்.
“நடு வயத்துலே!- பாவி”
“ஐயையோ!’”
“உஷ் அப்பாகிட்டே மூச்சுவிடாதே. ஓடிப்போயிடுத் துன்னே நினைச்சுண்டிருக்கட்டும். உண்மை தெரிஞ்சா இடிஞ்சு போயிடுவா.”
ஓஹோ. துரோகங்கள் இப்படியும் நடக்க முடியும். “அசுவத்தாமாஹத” (குஞ்சர: இல்லை)
“எனக்காக”
ஓயாத Symphony
Thank you, Babu
என்றும் உனது
நான்
– தினமணி கதிர்
– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.