எதையும் தாங்காத இதயங்கள்





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)
கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர் கப்டின் கிறீகோறோபோலஸ். ஆனால் அவர் கப்பலின் கப்டின் தரத்திலுள்ள கப்டின் அல்ல. கப்டினுக்கு அடுத்தபடியாக முதன்மை அலுவலர் தரத்திலிருந்தவர். எனினும் கப்பலுக்கு கப்டினாக நியமிக்கப்பட்டிருந்தார். கடலில் பயணிக்காத கப்பலுக்கு யார் கப்டினாக இருந்தால்தான் என்ன?
கிறீகோறோபோலஸ் அறுபதைத் தாண்டியவர். மாலுமியாக பல கப்பல்களில் பல காலங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். எப்போதும் பளிச்செனத் தோற்றமளிக்கும் முடியற்ற தலை. அமைதியான சுபாவம் உள்ளவர்.
சீமெந்து பையிடும் மெசின்கள் பொருத்தப்பட்ட பாரிய கப்பலொன்றை நாங்கள் ஏடன் துறைமுகத்துக்குக் கொண்டு வந்தோம். அதாவது எங்கள் கம்பனி யேமன் நாட்டுக்கு சீமெந்து விநியோகிப்பதற்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி இந்தக் கப்பல் இங்கு கொண்டு வரப்பட்டது. கப்பலின் கப்டினுக்கு அடுத்த நிலை அதிகாரியாகப் பணிபுரிந்தவர்தான் கிறீகோறோபோலஸ்.
துறைமுகத்தில் கப்பலை இழுத்துக் கட்டிய பின்னர் இரண்டோ மூன்றோ வருடங்களுக்கு திரும்பக் கடற் பிரயாணம் செய்யும் தேவை இல்லை. பெல்ட் கொன்வேயர்கள் பொருத்தப்பட்டு கப்பல் ஒரு தொழிற்சாலையாக இயங்கத் தொடங்கிவிடும். (விநியோகத்துக்குத் தேவையான சீமெந்தை வேறு கப்பல்கள் கொண்டு வரும்.) கப்பலைச் செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த மாலுமிகள், பொறியியலாளர்கள் போன்றோரெல்லாம் “சைன் ஓஃப்” செய்யப்பட்டு கம்பனியின் வேறு கப்பல்களுக்கு அல்லது விடுமுறையில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
தொழிற்சாலையாக இயங்கும் கப்பலின் சகல பொறுப்புகளும் முகாமையாளர் என்ற முறையில் என்னுடையதாகவிருந்தது. எனினும் சர்வதேச கப்பல் பாதுகாப்பு விதிகளின்படி கப்பல் பயணிக்காது தரித்திருந்தாலும் கப்டின், பிரதான இன்ஜினியர் போன்றோர் கப்பலில் தங்கியிருக்க வேண்டும். அந்த வகையிற்தான் பிரதான அலுவலராக இருந்த கிறீகோறோபோலஸ் கப்டின் தரத்துக்கு கம்பனியால் உயர்த்தப்பட்டிருந்தார்.
தொழிற்சாலையில் பணிபுரிவதற்கு பொறியியலாளர் தரத்திலுள்ளவர்கள் இலங்கையிலிருந்தும் யேமன் நாட்டிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். சுமார் இரண்டு வருடங்கள் தொழிற்படுவதென ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் தேவை கருதி இது நீடிக்கப்படலாம்.
ஆனால் இந்தக் கால எல்லையை எட்டுமுன்னரே சில பிரச்சினைகள் சமிக்ஞை காட்டத் தொடங்கியிருந்தன. யேமனில் ஓர் உள்நாட்டுப் போர் வெடிக்கக் கூடுமென்ற செய்தி பற்றிய சமிக்ஞைகள்தான் அவை.
இதுபற்றிய தகவல்களை எங்களுக்குத் தந்து கொண்டிருந்தவன் ஐமன் நாபர். ஜோர்தான் நாட்டைச் சேர்ந்தவன். சீமெந்து விநியோகம் சம்பந்தமான வெளியாருடனான தொடர்புகளைக் கவனித்துக் கொள்வதற்கு அரபு பாஷை தெரிந்த ஒருவர் தேவைப்பட்டார். ஜோர்தான் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் பட்டம் பெற்ற ஐமன் நாபரை கம்பனி தெரிவு செய்து விநியோக முகாமையாளராக இங்கு அனுப்பியிருந்தது.
விநியோகம் சம்பந்தமாக மட்டுமின்றி, கம்பனியினதும் தொழிலாளர்களினதும் நலன்களுக்கும் தேவைகளுக்கும் உள்ளூர் அதிகாரிகளுடனான தொடர்புகள் தேவைப்படின் அவற்றையும் ஐமன் நாபரே கவனித்துக் கொண்டான். தளிசை போன்ற மெதுமெதான தேகம். உடல் குலுங்கக் குலுங்க நடக்கும் நடை. சிரித்த முகம். உடல் மட்டுமின்றி அவனது மனசும் மென்மையானது என்றுதான் சொல்லவேண்டும். தொழிலாளர்களுக்கு ஏதாவது நோய் நொடியென்றால் தனது சொந்தக்காரர்களுக்கு ஏற்பட்டதுபோலக் கரிசனைப்படுவான். அவர்களைத் தானே முன்வந்து அழைத்துப்போய் டொக்டரிடம் காட்டுவான். வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டால் இரவுபகலாக தனது மாய்ச்சலையும் பாராது ஓடித்திரிந்து கவனிப்பான்.
எதையும் தாங்காத இதயம் கொண்டவன். இயந்திரங்களில் வேலை செய்யும்போது தொழிலாளர்கள் ஏதாவது சிறு விபத்துக்குள்ளாகி இரத்தம் சிந்தினாற்கூடத் துடித்துப் போவான்.
உள்நாட்டில் யுத்தம் ஒன்று மூளக்கூடும் என்ற செய்தியை ஐமன் நாபர் சற்று கலவரத்துடன் அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தான். அரபு பாஷை தெரிந்தவனாகையால் உள்ளூர் பத்திரிகைகள், வானொலிகளில் வரும் செய்திகளைக் கொண்டும், வெளிஆட்களுடனான தொடர்புகளைக் கொண்டும் அவன் இதனை ஊர்ஜிதமாக நம்பினான். யுத்தம் ஒன்று மூண்டால் நாங்கள் என்ன செய்வது என்று அடிக்கடி கேட்பான். இந்தக் கதைகளைக் கேட்டு கப்டின் கிறீகோறோபோலஸும் குழப்பமடைந்திருந்தார்.
அவர் இதுபற்றி தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, “சைன் ஓஃப்” செய்து வீடு செல்வதற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு மாற்றாக ஒருவரை அனுப்பாது கம்பனியும் கடத்திக் கொண்டிருந்தது. (கப்டின் தரத்தில் இல்லாதவராகையாலும் ஓய்வு பெற்ற வயதினராகையாலும் கம்பனி அவரை குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தியிருந்தது. அவருக்கு மாற்றாக அதே தகமையில் இன்னொருவரைத் தேடிப் பிடிக்க முடியாமலிருந்திருக்கலாம்.)
ஐமன் நாபர் யுத்தத்தைப்பற்றிக் கூறும் போதெல்லாம் நான் அதை அவ்வளவாகப் பெரிதுபடுத்துவதில்லை. எங்கள் நாட்டில் அப்போது யுத்தம் நடந்துகொண்டிருந்தது. குண்டுகளாலும் ஷெல்லடிகளாலும் பழக்கப்பட்டு மரத்துப்போன மனமும் ஒரு காரணமாயிருக்கலாம். மற்றபடி யேமனில் அன்றாட வாழ்க்கை மிக இயல்பு நிலையிலேயே போய்க் கொண்டிருந்தது. சட்டென ஒரு யுத்தம் வெடிக்கும் என்பதை நம்ப முடியாமலிருந்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாலைப் பொழுதில் அது வெடித்துவிட்டது. குண்டுகள் வெடிக்கும் சத்தம் காதுகளைத் துளைத்து வந்தது.
ஏற்கனவே ஒன்றரை வருடங்கள் யேமனில் பணிபுரிந்திருந்தாலும் அதன் சரித்திரம் பற்றி விரிவாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை. நான் ஒரு சரித்திர ஆசிரியனாக இல்லாததனாலோ என்னவோ, சென்று வந்த நாடுகளின் வரலாற்றுத் தகவல்களைச் சேகரிப்பதில் ஆர்வம்காட்டி மினக்கெடுவதில்லை. பொதுவாகக் காற்றோடு வரும் தகவல்களைக் காது வாங்கிக் கொள்ளும். யேமன் நாடு வட யேமன், தென் யேமன் என சுமார் ஐநூறு வருடங்கள் பிரிந்திருந்ததாம். அண்மையில் நான்கு வருடங்களாக அவை இரண்டும் இணைந்து யேமன் எனும் ஒரே நாடாகச் செயற்பட்டன. இரண்டு பகுதிக்குமிடையில் புரிந்துணர்வு அற்ற நிலையும் சந்தேகங்களும் மீண்டும் யுத்தத்தை மூட்டியிருக்கிறது.
ஏடன் துறைமுகத்திலிருந்து நேர்ப்பார்வைக்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் விமான நிலையம் அமைந்திருந்தது.
கப்பற் தளத்தில் நின்றபடியே விமான நிலையத்தைப் பார்க்கலாம். ஒரு பக்கம் மரங்கள் அதிகமற்ற வெளியான பிரதேசம் ஏடன். மறுபக்கம் பாறை போன்ற கறுத்த மலைகள்.
பெரிய உயரமான கப்பற் தளத்திலிருந்து விமான நிலையத்தின் ஓடுபாதையில் இறங்குகின்ற, ஓடுகிற, ஏறுகிற விமானங்களையெல்லாம் பார்க்கக் கூடியதாயிருக்கும். இது பயணிகள் விமான நிலையமாக மட்டுமின்றி விமானப் படையினரின் குண்டு வீச்சு விமானங்கள் இறங்கி ஏறும் தளமாகவும் பாவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளாகிக் கொண்டிருந்தது இந்த விமான நிலையந்தான். ஏவுகணைகள் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன. அவ்வப்போது பெரிய இரைச்சலுடன் குண்டு வீச்சு விமானங்கள் வந்து விமான நிலையத்தைத் தகர்க்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன.
கப்பற் தளத்தில் நின்றபடி தொழிலாளர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். குழப்ப நிலையும் பதற்றமும் எல்லோரையும் பிடித்திருந்தது.
ஐமன் நாபர் செய்வதறியாது அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தான். கைத்தொலைபேசியில் வெளியே துறைமுக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிய முயன்றான். யாருக்கும் சரியான நிலவரம் தெரியவில்லை. கிடைக்கும் தகவல்கள் மோசமான நிலைமையை இன்னும் பெருப்பித்துக் காட்டிக் கொண்டிருந்தன. விமான நிலையத்தைத் தகர்த்து முடிந்ததும் கப்பற் துறைமுகம் தகர்க்கப்படப் போகிறதாம்!
கப்டின் கிறீகோறோபோலஸ் அடிக்கடி வெளியே ஓடிவந்து உடல் நடுங்க நிலமைகளை அவதானித்தார். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டதும் தனது தலையைக் கைகளால் பொத்திக்கொண்டு ஓடினார்.
இலங்கையிலிருந்து வந்திருந்த தென்பகுதியைச் சேர்ந்த சிங்களத் தொழிலாளர்கள் பேயறைந்தவர்கள் போலிருந்தார்கள். அவர்களது கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடும் போலத் தோன்றின. பாவம்… அவர்கள் யுத்தத்தில் நேரடியாக முன் அனுபவம் இல்லாதவர்கள். இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஏனெனில் இலங்கையின் வட, கிழ பகுதியிலிருந்து இங்கே வந்தவர்கள் இந்த நிலைமையை சற்று வேடிக்கையுடன்தான் பார்த்தார்கள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் சிங்கள நண்பர்களூக்கு எங்களது உள்நாட்டு யுத்தத்தின் கொடூரத்தைப் பற்றியும் புரியவைக்க முயன்று கொண்டிருந்தார்கள்.
“இப்படித்தான்… யாழ்ப்பாணத்தில் விமானங்கள் வந்து குண்டு வீசுகின்றன. இப்படித்தான் அங்கும் ஷெல் அடிக்கிறார்கள்…”
சிங்கள நண்பர்களுக்கு அதை உண்மையிலேயே நம்ப முடியாமலிருந்தது.
“இப்படியா?” என வியப்புடனும் கவலையுடனும் பதில் கேள்வி கேட்டார்கள்.
“இப்படித்தான் குடிமனைகள் உள்ள டங்களெல்லாம் கண்மண் தெரியாது குண்டு வீச்சு நடக்கிறது.”
யுத்தம் ஒன்று ஆரம்பமாகியுள்ள பதற்றமான சூழ்நிலையில் இன்னொரு யுத்தத்தைப் பற்றிய அனுபவபூர்வமான விளக்கங்கள் அவர்களுக்கு உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். நோர்பேட் அப்புகாமி என்னும் சிங்கள இன்ஜினியர் தனிப்பட என்னை அறையில் வந்து சந்தித்துப் பேசினான்.
“அவர்கள் சொல்வது உண்மையா? யாழ்ப்பாணத்திலும் இப்படித்தான் குண்டு வீச்சு நடக்கிறதா?”
அதை நான் ஆமோதித்தேன்.
“புலிகளுடன் தான் சண்டை நடக்கிறது. புலிகளின் முகாம்களைத்தான் குண்டு வீசி அழிக்கிறார்கள்… என்றுதான் நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம்” என தயக்கத்துடன் கூறினான்.
“ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்படுவதெல்லாம் அப்பாவிப் பொதுமக்கள்தான்…”
இதைக் கேட்டு நோர்பேட் சற்று நேரம் மௌனமாயிருந்தான். பின்னர் மெதுவாக வாயைத் திறந்தான்.
“இவ்வளவு காலமும் இதைப்பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. மக்கள் குடியிருப்புகளில் குண்டு போடுவது எவ்வளவு கொடுமையானது என்பதை உணரக் கூடியதாயுள்ளது. மஹத்தயா… எங்களோடு கோபப்பட வேண்டாம்.”
“நோர்பேட்… எத்தனை வருடங்களாக இலங்கையில் யுத்தம் நடக்கிறது. இங்கு நாங்கள் சேர்ந்து வேலை செய்யும் ஒன்றரை வருடங்களுக்குள்ளே அங்கு எத்தனையோ பேர் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கு நான் உங்களோடு கோபமாக நடந்திருக்கிறேனா?”
“அதுதான் மஹத்தயா ஆச்சரியமாயிருக்கிறது. இலங்கையில் பத்திரிகைகள் எல்லாம் தமிழர்களை விரோதிகளாகக் காட்டுகின்றன. இங்கு வருவதற்கு முதல் வவுனியாவுக்கு அந்தப் பக்கம் இருக்கிறவர் களெல்லாம் புலிகள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். இங்கு வந்து வடக்கு கிழக்கைச் சேர்ந்த உங்களோடு சேர்ந்து வேலை செய்த பிறகுதான் உண்மை புரிகிறது.”
வெளியே விமானத்தின் இரைச்சல் என் முன்னே இருக்கும் நோர்பேட்டின் விழிகளைப் பிதுக்கியது. நெஞ்சை உலுக்கும் விதமாக குண்டுச் சத்தம் கேட்டது. கப்பலில் லைட்டுகள் எல்லாம் அணைக்கப்பட்டன. அறைகளின் ஜன்னல்கள் மூடப்பட்டு சிறிய வெளிச்சங்கள் உள்ளே ஏற்றப்பட்டன. ஐமன் நாபர் எனது அறைக்கு ஓடி வந்தான்.
“என்ன செய்வது? இப்போது நாங்கள் என்ன செய்யலாம்?”
“ரி.வி. யைப் பார்… ஏதாவது நியூஸ் சொல்வார்கள். உனக்குத்தான் அரபு புரியும். பேச்சு வார்த்தைகள் நடக்கக்கூடும். யுத்தம் தொடரும் என்று நான் நம்பவில்லை. அவ்வளவு முட்டாள்களாக இவர்கள இருக்கமாட்டார்கள்.”
அவனுக்கு ஓர் ஆறுதலாகவாவது இருக்கட்டும் என்றுதான் அவ்வாறு கூறினேன். ஆனால் நடைமுறையும் அதுதானே? ஒரு பக்கம் சமாதானத்துக்கான யுத்தம் நடப்பதும் மறுபக்கம்
சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதும் பழக்கப்பட்ட சங்கதிகள் தானே?
கப்டின் கிறீகோறோபோலஸ் எனது அறைக்கு வந்தார். வழக்கமாகவே அமைதியான சுபாவம் உள்ளவர். இப்போது இன்னும் பயந்த நிலையில் தலையைக் குனிந்து கொண்டு இருந்தார். தற்போதைய நிலைமையில் என்ன செய்யலாம் என ஐமனுடனும் என்னுடனும் கலந்து பேச வந்திருந்தார்.
பய உணர்வுக்கும் மேலான ஒரு சுமை அவரது தலையை அழுத்திக் கொண்டிருந்தது. கப்டின் என்ற முறையில் கப்பலின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர் அவர். முக்கிய பிரச்சினை என்னவென்றால் தலைமை அலுவலகத்துடன் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமற் போய்விட்டது. யுத்தம் கைத் தொலைபேசியைக்கூட அடக்கிவிட்டது. வெளியே தொலைபேசி வசதி உள்ளதா என்றும் தெரியவில்லை. யாரும் துறைமுகத்திற்கு வெளியே போகவும் அனுமதிக்கப்படவில்லை. கப்பலின் வானலைத் தொலைத் தொடர்புக் கருவியும் நீண்ட காலமாகவே பழுதடைந்திருந்தது. (அதைத் திருத்தியமைப்பதற்கு விஷேட தொழில்நுட்ப வல்லுனர்களை அனுப்புமாறு தலைமைக் கந்தோரை ஏற்கனவே கேட்டிருந்தோம். கடலிற் பயணிக்காத நிலையில் கப்பல் இருந்தமையால் அவர்கள் அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை.)
யுத்தம் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என அபிப்பிராயப்பட்டோம். ஆனால் நாட்கள் குண்டு முழுக்கங்களுடன் தொடர்ந்துகொண்டிருந்தன. யுத்தம் முடிவுக்கு வரும் அறிகுறிகள் இல்லை. கப்பலின் மேற்தளத்திலிருந்து பார்த்தால் குண்டுவீச்சுக்கு இலக்கான பகுதிகள் எரிந்து புகைவது தெரியும்.
ஐமன் நாபர் ஏதாவது குறுக்கு வழிகளில் துறைமுக அதிகாரியைச் சந்திக்க முயன்றுகொண்டிருந்தான். குறுந்தூர வானலைக் கருவியின் மூலமும் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். கப்பலைச் செலுத்துவதற்குத் தேவையான மாலுமி தரத்திலுள்ளவர்களை யேமனில் எடுக்க முடியுமானால்,
ஏடனிலிருந்து கப்பலுடன் வெளியேறிவிடலாம். பக்கத்தில் தரித்து நின்ற ஓரிரு கப்பல்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டன.
இந்நிலையில், ஐந்தாவது நாள் துறைமுக அதிகாரியிடமிருந்து சகல கப்பல் கப்டின்மாருக்கும் ஒரு கட்டளை வந்தது. எந்தக் கப்பல்களும் துறைமுகத்தை விட்டு வெளியேற அனுமதி இல்லையாம். இது தென் யேமன் (இந்தப் பக்க) அரசின் உத்தரவு எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காரணத்தை ஊகிக்கக் கூடியதாயிருந்தது. எதிர்ப்பக்கத்திலிருந்து, ஏடன் துறைமுகம் தாக்கப்படப் போகிறது எனத் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. வெளிநாட்டுக் கப்பல்களைத் தடுத்து வைத்திருந்தால், தாக்குதல்களை அவர்கள் தவிர்க்கக்கூடும் என இவர்கள் எதிர்பார்த்தார்கள். (வெளிநாட்டுக் கப்பல்களைத் தாக்கினால் சர்வதேச அபிப்பிராயம் தங்களுக்கு எதிராகும் என்பதால்.)
இது ஒருவகையில் எங்களுக்கு ஆறுதலையும் இன்னொரு வகையில் தவிப்பையும் அளித்தது. எங்களை அம்போ எனக் கைவிட்டு ஏனைய கப்பல்கள் துறைமுகத்தைவிட்டு வெளியேற முடியாது. (யாம் பெறும் துன்பம் பெறுக இவ் வையகம் எனும் ரீதியிலான ஆறுதல்) தவிப்பு என்னவென்றால் இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு பணயக் கைதிகளாகக் கிடப்பது?
செல்வராஜா மாமா எனும் ஒருவர் அங்கு தொழில் பார்த்தார். அவரது வயது கருதி அவருக்கு மாமா பட்டத்தைக் கொடுத்திருந்தனர். எலக்ட்ரீஷியனாகத் தொழில் பார்த்தவர். கூட வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சாஸ்திரமும் பார்ப்பார். அவர் இந்த நேரத்தில் ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார். எங்களுடைய கப்பலுக்கு விமானக் குண்டு வீச்சு நடக்கப் போகிறதாம். அந்தக் குண்டு சரியாக எனது அறைக்கு மேற்தான் விழுமாம். (அதாவது இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கிற என்மீது) நான் குளோஸ்.
தொழிலாளர்களை சில சமயங்களில் அவர்களது தவறான செயல்களுக்காக தண்டிப்பதுண்டு. அதன் பிரதிபலிப்புத்தான் இது. ஆனால் இந்தச் சாஸ்திரத்தைப் பலர் நம்பிக்கொண்டு, தங்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பும்படி நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். நாட்டில் யுத்தம் நடக்கிறது. விமான நிலையம் தாக்கி அளிக்கப்பட்டுவிட்டது. இங்கிருந்து நகர்வதற்கு வழியே தெரியவில்லை. இந்த விசித்திரத்தில் வீட்டுக்குப் போகவேண்டுமென நாண்டுகொண்டு நிற்பவர்களுக்கு நான் என்ன பதிலைச் சொல்வது?
மாலை நேரமாக ஐமன் புதிய செய்தியுடன் வந்தான். ஏடனிலுள்ள வெளிநாட்டவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அமெரிக்க அரசு சில ஒழுங்குகளைச் செய்துள்ளது. அதன்படி, அடுத்த மூன்று தினங்களும் தினமும் ஒரு கப்பல் ஏடன் துறைமுகத்திலிருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக்கொண்டு புறப்படும். (அதற்காக காலை வேளைகளில் யுத்தம் தணிக்கப்படும்.) ஏடனில் எங்களுக்கு அண்மையான பேர்த்திலிருந்துதான் அந்தக் கப்பல் புறப்பட உள்ளது. இந்தச் செய்தி வானொலிக்கவும் பட்டது.
ஐமன் எனது அறைக்கு வந்தான். “நாங்கள் கப்பலை விட்டுப் போய்விடுவோம். இங்கு நிலைமை இன்னும் மோசமடையப் போகிறது. நீயும் வா… போய்விடுவோம்.. வேறுவழியில்லை…”
“எப்படி ஐமன்…? நான் இங்கிருந்து கிளம்பினால் இங்கிருக்கிற அத்தனை இலங்கையரும் வந்துவிடுவார்கள். அதற்குப் பிறகு கப்பலை இங்கிருந்து நகர்த்துவதற்கே சாத்தியம் இல்லாது போய்விடும்…’
ஐமன் என்னை ன்னும் வற்புறுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடவும் வேண்டியிருக்கிறது. பின்னர் தலைமைக் கந்தோருக்கு என்ன பதில் சொல்வது என்று தயக்கமாகவும் இருக்கிறது. அதனாற்தான் என்னையும் சேர்த்துக் கொள்ளப் பார்க்கிறான். நான் மறுத்தேன். அத்துடன் அவனையும் தடுத்தேன்.
“ஐமன்… நீயும் போகவேண்டாம்… நீ போய்விட்டால்… எங்களுக்கு வெளித்தொடர்புகள் இல்லாது போய்விடும்….. அரபு பாஷையும் தெரியாது. ஏதாவது ஒழுங்கு செய்து இங்கிருந்து கப்பலுடன் வெளியேறுவோம்… அதுவரை பொறுத்திரு… நில்..!”
ஐமன் அறையை விட்டு எழுந்து போனான். அப்போது இரவாகியிருந்தது. நான் படுத்துவிட்டேன்,
விழித்தபோது, காலைப் பொழுது சற்று அமைதியாயிருந்தது. ஐமனைக் காணவில்லை. வழக்கமாக விடியற்காலையிலேயே வந்து கதவைத் தட்டுகிறவன் ஐமன். இப்போது ஆளைக் காணவில்லை. எனக்குச் சந்தேகமாயிருந்தது. “போயிருப்பானோ…?”
கப்டின் கிறிகோறோபோலஸின் அறையை நோக்கிச் சென்றேன்.
“கப்டின்… ஐமன் எங்கே…? ஆளைக் காணவில்லையே…?”
“அவன்… போய்விட்டான்….!” கப்டின் ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினார்.
தங்கள் சொந்த பாதுகாப்புக் கருதி கப்பலை விட்டு வெளியேறுவதாக எழுதப்பட்டிருந்தது. ஐமனுடன் சேர்ந்து இன்னும் இரண்டு ஜோர்டானிய என்ஜினிஜயர்களும் போயிருந்தார்கள்.
கப்டினின் முகம் இருண்டிருந்தது. என்னை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தார். ‘இவரும் போய்விடுவாரோ…?’
கேட்டேன்… “கப்டின் என்ன யோசனை..? நீங்களும் போகப் போறீங்களா…?”
என்னை நிமிர்ந்து பார்த்தபோது, அவரது குழப்பம்… பயம்… திகில்… கவலைகள் எல்லாம் அழுகையாக வெடித்தது. குலுங்கிக் குலுங்கி அழுதார்.
“ஐமன் என்னையும் வற்புறுத்திக் கேட்டான்.. நான் போக மறுத்துவிட்டேன்… இந்த நிலைமையில் உங்களை விட்டுப் போகமாட்டேன்…
– மல்லிகை, 2002.
– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |