எது புத்திசாலித்தனம்?





கண்ணாடிக் கற்கள் பதிக்கப்பட்டு, அந்நாட்டுக் குட்டி இளவரசியின் கால்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட செருப்பு அது. அதில் ஒரு செருப்பு மட்டும் தொலைந்ததில் இளவரசிக்கு மிகுந்த வருத்தம். இளவரசியின் அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
தொலையாத இன்னொரு செருப்பை ராஜா காவலர்களிடம் காட்டி, உடனே தொலைந்த அந்தச் செருப்பைக் கொண்டுவர வேண்டும் என்றும், அதற்கு 1000 பொற்காசுகள் பரிசுத்தொகை அறிக்கப்படும் என்றும் அறிவித்தார். காவலர்களும் அரண்மனை முழுவதும் தேடத்தொடங்கினர். ஆனால் 10 நாள்களாகியும் அந்த ஒற்றைச் செருப்பு கிடைத்தபாடில்லை. இளவரசியோ இன்னும் அந்தச் செருப்பை மறக்கவில்லை. மன்னரும் காவலர்கள்மீது கோபத்தில் இருந்தார். அப்போதுதான் மந்திரி சோமன் ஒரு யோசனையைச் சொன்னார்.
“மன்னா… செருப்பு நம் அரண்மனையில் இருக்க வாய்ப்பே இல்லை. எல்லா இடங்களிலும் தேடிவிட்டோம். எனவே அந்த இன்னொரு செருப்பைக் கொடுத்தால், அரண்மனைக்கு வெளியே எங்காவது இதுபோல இருக்கிறதா எனத் தேடிப்பார்ப்பேன்” என்றார். மன்னரும் ‘சரி’ எனச் சொல்லி, அந்த ஒற்றைச் செருப்பைக் கொடுத்தனுப்பினார்.
அன்று மாலையே மற்றொரு ஜோடி செருப்புடன் அரண்மனையில் ஆஜரானார் சோமன். மன்னருக்கும் இளவரசிக்கும் ஒரே மகிழ்ச்சி. உடனே 1000 பொற்காசுகளை பரிசாகக் கொடுத்தனுப்பிவிட்டார் மன்னர். ஆனால் அடுத்த நாளே, சோமன் உண்மையான செருப்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், செருப்பு வியாபாரி ஒருவரிடம் 100 பொற்காசுகள் கொடுத்துப் போலிச் செருப்பைத் தயாரித்து வந்து கொடுத்துள்ளார் என்று தெரியவந்துவிட்டது.
உடனே மந்திரியை அழைத்தார் மன்னர். விஷயத்தைச் சொல்லிக் கோப வார்த்தைகளை வீச, கொஞ்சமும் பதற்றமின்றி பதில் சொல்லத்தொடங்கினார் சோமன்.
“மன்னா… அந்தச் செருப்பை, வியாபாரி மூலம் தயாரித்தது உண்மைதான். அதற்கு எனக்கு 100 பொற்காசுகள்தான் செலவானது. ஒருநாள்கூட ஆகவில்லை. இதனை நீங்கள் அல்லவா முதலில் செய்திருக்க வேண்டும்? அதைவிடுத்து 10 நாள்கள் அரண்மனைக் காவலர்களுக்கு இந்த வேலையைக் கொடுத்தது எந்த வகையில் நியாயம்?” எனக் கேட்க, “நீ செய்தது ஏமாற்றுவேலை என்பதை உணர்ந்தாயா இல்லையா?” எனக் கொதித்தார் மன்னர்.
“மன்னா… இந்த நொடிவரை அந்தச் செருப்பு போலியானது என்பது இளவரசிக்குத் தெரியாது. ஒருவேளை, நான் தயாரித்த செருப்பு சில நாள்களில் பிய்ந்து போகலாம். ஆனால், நீங்கள் நினைத்திருந்தால் இன்னும் தரமான செருப்பையே தயாரித்திருக்கலாமே? ஆனால், தொலைந்த இன்னொரு செருப்பை அல்லவா தேடி அலையச் சொன்னீர்? பிரச்னையைப் பெரிதாக்குவதைவிட, அதனைத் தீர்ப்பதுதான் புத்திசாலித்தனம் மன்னா” என்றார் சோமன்.
ஆனாலும் சமாதானம் அடையாத மன்னர், “எனக்கே புத்தி சொல்கிறீர்களா?” எனக் கோபத்துடன் கேட்க, “அதுதானே மன்னா, மந்திரியின் வேலை?” என நச்சென பதில் சொன்னார் சோமன். தன் தவறைப் புரிந்துகொண்ட மன்னர் மந்திரியின் சாமர்த்தியத்தில் மயங்கி அவருக்கு மேலும் 1000 பொற்காசுகளைப் பரிசளித்தார்.
– டூடுல் கதைகள், ஜூன் 2017