எங்கிருந்தபோதும் உனை மறக்க முடியுமா?
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 1,546

வாழ்க்கை தந்த வலியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. மறைக்க வேண்டுமானால் முயலலாம்!. ஒரு ஒற்றைப் புன்னகை அதற்கு உதவக்கூடும், ஆனாலும், அதுவும் அவ்வளவு எளிதல்ல!. ஏன் புன்னகைக்கிறோம்?. புன்னகை ஒரு போலிக் கவசம்! ஒரு விதத்தில் நம்மை விட நாம் மற்றவர்க்கு அதிக உயர்வு தருகிற ஒரே காரணம் தான் அந்தப் போலி கவசத்தைப் பூண்டு கொண்டு வருவதற்கு!
அந்த நாள் வந்துவிட்டால், எப்படித்தான் அப்படியொரு நடிப்பு நமக்கு வசப்பட்டு விடுகிறதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்!
அந்த நாளில் அலுவலகம் புறப்படுகையில், கூடுதலாய்க் கொஞ்சம் பவுடர் போட்டு பழைய செய்தித்தாள் கிழிசலில் கொஞ்சம் கிழித்து பவுடர் பொதிந்து பத்திரப்படுத்தி, ஸ்டிக்கர் பொட்டுக் கவரை புதிதாய் வாங்கிப் போட்டு வைத்து, சீப்பை அழுக்கு நீக்கி அதையும் சேர்த்து எடுத்துப் போகிறோம்.
வழியில் தென்படுகிறவர்களுக்கெல்லாம் ஒரு திடீர் புன்னகை தெளித்து உயர் அதிகாரிகளுக்கு பணிவாய்த் தலைவணங்கி, மூத்தோரை நலம் விசாரித்து… சே! சே! எத்தனை செய்ய வேண்டியிருக்கு?!
நாள் வருவதற்குள்ளாகவே, தோளில் ஏறி அமர்ந்து கொள்கிறது முருங்கை மர வேதாளமாய் கடன் தீர்க்க வேண்டிய கஷ்டங்கள்!!பற்றாக்குறை பட்ஜெட்!
மாலை எப்போது வரும் எப்போது வரும் என்று எதிர்பார்த்து.. தனியார் துறை என்றால் அக்கவுண்டண்ட் பேங்குக்குப் போவாரா? சேலரி கிடைக்குமா அது அக்கவுண்டில் கிரிடிட் ஆகுமா? ஏதேனும் சிக்கல் ஜவாப்பு சொல்வார்களோ?
எல்லாம் எண்ணிப் பார்த்து அடிக்கடி பாத்ரூம் போய் அழகை சரிபார்த்து மேக்கப் கூட்டி, மேனி டிரசை மெல்ல மெல்ல சரிசெய்து , போலியாய்ச் சிரித்து டீ வடை வாங்கிக் கொடுத்து, கையில் காசை வாங்குகையில்….
பிடித்தம் போக பிசுபிசுத்தது கிடைக்க…
தூ! என்று காறித்தான் துப்பத் தோன்றினாலும், இதுக்கா இத்தனை எங்கு போனாலும் முதுகில் ஏறிய வேதாளமாய் மூட்டை சுமக்க வேண்டியிருக்கிறதே என உள்ளுக்குள் மென்று விழுங்கி,’சே! பணம் லட்சுமி!’ என்று சமாதானப்படுத்தி.. ‘அடுத்தமாதம் சரியாயிடும்!’ என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம்! ஒவ்வொரு மாத சேலரிடே லேயும்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
