ஊழ்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 13,541
தங்கவேலுவுக்கும், ராஜாத்திக்கும் ஒரே பிள்ளை ராஜா, அதனால் ராஜாத்தி கொடுக்கும் செல்லம் அளவுகடந்து போயிற்று, எந்த அளவுக்கு என்றால் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்த ஆசிரியையிடம் சண்டைக்குப்போகும் அளவிற்கு, தங்கவேலுவும் ராஜாத்தியிடம் சொல்லிப்பார்த்தார். அவள் மாற்றக்கருத்தாக வேறு பள்ளிக்கு அவனை மாற்ற எண்ணினாள். எந்த பள்ளிக்கு சென்றாலும் வீட்டுப்பாடம் செய்யாமலிருக்க முடியாது என்று கூறி பிரச்னையை அப்போது நிறுத்தினார்.
ராஜா வளர வளர பிரச்னைகளும் வளர்ந்தது, படிப்பு அவனுக்கு பிடிபடாத விஷயமானது. எப்பொழுதும் நண்பர்கள் பட்டாளத்துடன் கேளிக்கை, அதன் விளைவு பத்தாவது பரிட்சையில் தோல்வி. வேறு வழி தங்கவேலு அவனை தனி முறை கல்வி கற்பிக்கும் வகுப்பில் சேர்த்து மீண்டும் பத்தாவது பரிட்சை எழுத செய்தார் ஆனால் எவ்வளவு முறை எழுதினாலும் தேர்ச்சி பெறவில்லை.
ராஜாவை பற்றிய கவலை அதிகமானது,என்ன ஊழ் வினையோ, பிற்காலத்தில் என்ன செய்யப்போகிறானோ என்று புலம்பலானார். ஒரு நாள் காலையில் ராஜாத்தி தான் ஆரம்பித்தாள், ராஜா ஏதோ தொழில் தொடங்கபோறானாம் அதற்கு கொஞ்சம் பணம் தந்த நல்லாயிருக்கும் என்றாள். தங்கவேலுவுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை, உன் பிள்ளைக்கு என்ன தொழில் தெரியுமென்றார். அது ஏதோ சொன்னாங்க, அது வந்து என்றவளிடம். சரி, அவனை கூப்பிடு என்றார்.
டேய்! ராசு இங்க வாடா அப்பா பணம் குடுக்க கூப்பிடறாங்க என்றாள், அவள் அழைத்தவிதம் அதிர்ச்சி தந்தாலும், சிரித்தக்கொண்டே, நான் எப்போ தரன்னு சொன்னேன் என்றார். வராத கண்ணீரை கஷ்டப்பட்டு வரவழைத்து ஒரே மகன் அவன் பொழைக்க பணம் தரக்கூட கசக்குதா என்றழுதாள். சரி, சரி நீ போ !! நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்.
தம்பி! நீ என்ன தொழில் தொடங்க ஆசைப்படுற என்றார், அப்பா,நான் போட்டோ மற்றும் வீடியோ கடை தொடங்க நினைக்கிறேன். சரி, அந்த தொழிலின் நுணுக்கங்கள் தெரியுமா என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை, போகப்போக கற்றுக்கொள்வேன் என்றான். அப்படியானால் நான் உனக்கு சவால் வைக்கிறேன் நான் சொல்வதை நீ செய்தால் உனக்கு பணம் தருகிறேன் என்றார். சரி என்றான் ஒற்றை வார்த்தையில்.
தங்கவேலு முதலில் அழைத்துச்சென்றது, அவர் நண்பர் சண்முகத்திடம். சண்முகம் இவன் கூறிய தொழிலில் பல வருட அனுபவமுள்ளவர், அவரிடம் ஏற்கனவே மூன்று பேர் வேலை செய்துக்கொண்டிருந்தனர். நண்பரிடம் தனியாக பேசிவிட்டு வந்தவர் ராஜாவிடம், நீ இவரிடம் இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டும். இது தான், நான் உனக்கு வைக்கும் சவால் என்றார். கோபத்தில் ராஜா விளையாடுறீங்களா, பணம் தர இஷ்டமில்லை சொல்லுங்க அதவிட்டுட்டு ஏதேதோ சொல்றீங்க என்றான். சரி,ஆத்திரப்படாமல் வண்டியில் ஏறு என்றார், அடுத்து அவர்கள் இருந்தது வங்கி மேலாலளர் முன்பு, தன்னுடைய வைப்புத்தொகை கணக்குகளை காண்பிக்கேட்டார். அந்த கணக்கில் இருந்த அனைத்தும் ராஜாவிற்க்கு செரும்படிதானிருந்தது.
மேலாலளர்க்கு நன்றி தெரிவித்துவிட்டு, என்னோடு வா என்றார். ஏதும் சொல்லாமல் அவருடன் சென்றான், இப்பவும் சொல்றேன் அந்த பணம் அனைத்தும் உனக்குத்தான் ஆனால் என் சவாலை ஏற்று முடி, நான் தருகிறேன்.
எப்படியும் தொழில் தொடங்கவேண்டுமென்ற ஆசையில் சரி என்றான் வீராப்பாக. மேலும் சண்முகம் எனக்குத்தான் நண்பர், உனக்கு முதலாளி, குரு அதனால் நீ எந்த சலுகையும் எதிர்ப்பார்க்காதே என்றார். அவன் எதுவும் பேசவில்லை, தங்கவேலு மனதிற்குள் சிரித்துக்கொண்டார். செல்லத்தினால் இவனுக்குள் இருக்கும் சோம்பலை அடியோடு அறுத்தெரியகிடைத்த வாய்ப்பாக எண்ணினார்.
ராஜா சண்முகத்திடம் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்களானது, அன்று மாலை ராஜா தன் தாயிடம் சான்றிதழை நீட்டினான், என்னடா என்றாள் பத்தாவது எழுதி பாஸ்ப்பண்ணீட்டேன் என்றான். ராஜாத்தி, தங்கவேலுவிடம் ஓடி வந்து சொன்னால், நல்லது என்ற ஒற்றைச்சொல்லில் முடித்துக்கொண்டார். அவளை பொறுத்தவரை மகன் ஏதோ சாதித்துவிட்டப்பெருமிதம், ஆனால் தங்கவேலுவை பொறுத்தவரை மகன் இன்னும் முழுமையாக அடியேடுத்துவைக்கவில்லை.
நாட்கள் கடந்தன ராஜா இப்பொழுதேல்லாம் வெகுவாக மாறியிருந்தான். ஒரு நாள் மாலை ராஜா தந்தைக்காக காத்திருந்தான். ஆம்,அன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்திருந்தது. வீட்டுக்கு வந்த தங்கவேலு ஒரு பையை அவனிடம் நீட்டினார். என்னப்பா இது! என்றான். நீ கேட்ட பணம் என்ற தந்தையிடம் வேண்டாம்ப்பா, அது உங்க பெயரிலேயே இருக்கட்டும். நான் முதலில் சிறிய அளவில் தொடங்கயிருக்கிறேன், அதற்கு ஒரு வங்கியில் கடன் கேட்டிருக்கிறேன் அப்பா, சோம்பிக்கிடந்த எனக்கு உழைப்பின் அருமையை உணர்த்தீனீர்களப்பா என்றான்.
தம்பி, கடனேல்லாம் வேண்டாம்ப்பா, நீ இந்த பணத்தில் வாங்கிக்க என்றார் கண்ணீரோடு, அது அப்பா தரும் பரிசு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றார். சரின்னு சொல்லுடா என்றாள் ராஜாத்தி, சரிம்மா என்றான் ராஜா. தங்கவேலு மனதிற்குள் இதுவும் ஊழ் வினையே என்றேண்ணினார். ராஜா தாயையும், தந்தையையும் பாதுகாப்பான் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?
திருக்குறள்: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. (குறள்: 371)
பொருள்: கைப்பொருள் சேர்வதற்கு உரிய விதி இருந்தால், சோர்வில்லாத முயற்சி உண்டாகும், இருப்பதையும் இழப்பதற்க்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
(அறத்துப்பால்-ஊழியில்-ஊழ்)———–திருவள்ளுவர்.