உழைக்கும் கரங்கள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 7,775
உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பல உன்னத வரலாறுகள் ஆங்காங்கே ஆழப்பதிந்து காணப்படுகின்றன.
அத்தகைய வரலாறுகள்தான் இன்றும்கூட மானிடவியல் வரலாற்றுக்கு அணி சேர்ப்பனவாக உள்ளன.
பதினைந்தாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் நியூரம்போக் பிரதேசத்தின் கிராமமொன்றில் ஒரு ஏழைத்தொழிலாளியின் மகனாகப் பிறந்த அல்பிரெச்ட் டூரர் என்பாரின் வரலாறும் அத்தகைய உன்னதம் மிக்க கதையாகவே கருதப்படுகிறது.
டூரர் என்ற அந்த பதினைந்து வயது இளைஞன் அவர்கள் குடும்பத்தின் பதினெட்டு பிள்ளைகளில் ஒருவனாக இருந்தான். அவனின் தந்தை அல்பிரெச்ட் அருகில் இருந்த கல்லுடைக்கும் சுரங்கத்தொழிற்சாலையில் கல்லுடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து நாளாந்தம் கல்லுடைத்து அவனுக்கும் அவனது 17 சகோதர சகோதரிகளுக்கும் ஒவ்வொரு நாளும் ஒருவேளை கஞ்சி குடிக்கக் கொடுக்க பெரிதும் சிரமப்பட்டார்.
அவர் அதற்காக ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் உழைத்தார்.
இந்த பதினெட்டு பிள்ளைகளில் மூத்தவர்களில் இருவரான டூரரும், கிளிபர்ட்டும் ஆண் பிள்ளைகள். இவர்கள் நியூரம்பர்க் நகரத்தில் இருந்த கலைக்கல்லூரிக்குச் சென்று ஓவியம் கற்க வேண்டும் என்று கனவு கண்டனர்.
ஆனால் அப்படி கல்வி கற்பதற்கு தம்மை அந்த கலைக்கல்லூரிக்கு அனுப்ப தமது அப்பாவின் நிதி நிலைமை அனுமதியளிக்காது என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்தேயிருந்தனர். அதன் பொருட்டு அந்த இருவரும் ஒரு திட்டம் வகுத்தனர்.
அவர்கள் ஒவ்வொரு நாளும் அண்ணன், தம்பிகள் மொத்தமாக கூடத்தில் இரவில் உறங்கச் செல்வதற்கு முன் கட்டிலில் படுத்தவாறே தமது திட்டம் தொடர்பில் விவாதித்தனர். அவர்களின் திட்டம் அபூர்வமானதாக இருந்தது. அதன் பிரகாரம் அன்று ஞாயிறன்று அவர்கள் மாதா தேவாலயத்துக்கு சென்று வந்ததன் பின்பு ஒரு நாணயக் குற்றியை எடுத்து சுழற்றி எறிந்தனர். அதில் யாருக்கு தலை விழுகின்றதோ அவர் கலைக்கல்லூரியில் சென்று ஓவியம் கற்க வேண்டும்.
தோற்றவர் அருகில் உள்ள கல்லுடைக்கும் தொழிற்சாலையில் தொழில் பார்த்து மற்றவருக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே உடன்படிக்கை.
அதன் பிரகாரம் நாணயத்தை சுண்டிவிட்டு பார்த்த போது டூரர் கேட்ட தலைப்பக்கம் விழுந்து அவன் வெற்றி பெற்றிருந்தான். எனவே அவன் படிக்கச் செல்வதென்றும் கிளிபர்ட் அவனுக்கு உதவுவதென்றும் முடிவாயிற்று. சில தினங்களிலேயே டூரர் வீட்டாரிடம் விடைபெற்று நியூரம்பேர்க் கலைக்கல்லூரிக்குச் சென்றான். உறுதியளித்தபடி கிளிபர்ட் அந்த ஆபத்து மிகுந்த கல் சுரங்கங்களில் இறங்கி கல்லுடைக்கும் தொழிலுக்குச் சென்றான்.
அங்கு அவன் தன் சகோதரனுக்கு உறுதியளித்ததன் பிரகாரம் கடுமையாக உழைத்து அடுத்த வந்த நான்கு வருடங்களுக்கு தன் சகோதரன் கல்வியை பூர்த்தி செய்ய உதவினான்.
டூரரும் கலைக்கல்லூரியில் அந்த நான்கு வருடங்களில் கடுமையாக முயற்சி செய்து கல்லூரியின் முதன்மை மாணவனாகத் திகழ்ந்து கல்லூரி முதல்வரின் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றான். அவன் மாணவப்பருவத்திலேயே வரைந்த ஓவியங்களும் கலைப்படைப்புக்கள், மரச்சிற்பங்கள் பலரதும் பாராட்டைப் பெற்றன. அவன் கல்லூரியில் பயிலும் காலத்திலேயே கல்லூரிக்குத் கிடைத்த பல்வேறு சிற்பம், ஓவிய நிர்மாண வேலைகளில் தொழில் புரிய அவனுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. அதன் மூலம் அவன் கணிசமான வருமானத்தைப்பெற்றான்.
அவனது கல்லூரி வாழ்க்கை முடிவடைந்தது. அவன் மிகுந்த பெருமையுடன் வெற்றி வீரனாக ஊர் திரும்பினான். இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாட அவன் தந்தையும் சகோதர சகோதரிகளும் ஒரு விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அது ஒரு இரவுச்சாப்பாடு அவர்கள் இசைக்கருவிகள் கொண்டு இசைத்தும் வாத்தியங்கள் வாசித்தும் பாடியும் ஆடியும் தம் அண்ணனின் வெற்றியைக் கொண்டாடினர்.
அந்த நிகழ்ச்சியின் உச்ச கட்டத்தில் தன் ஆசனத்தில் இருந்து எழுந்த டூரர் தான் இந்நிலைக்கு வரக் காரணமாக இருந்த தன் சகோதரன் கிளிபர்ட்டுக்கும் அவன் செய்த தியாகத்துக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினான். அவன் எழுந்திருந்து தன் வைன் கிளாசை உயர்த்திப்பிடித்து அனைவருக்கும் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.
”ஆதலால் என் அன்புச் செல்வங்களே! நாம் எல்லோரும் இன்றைய இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடுகிறோம் என்றால் தம்பி. அது எனது வெற்றி மாத்திரமல்ல அது முற்றிலும் தம்பி கிளிபர்ட்டுக்கு உரித்தானதே.
அவனில்லையென்றால் நானும் இல்லை. இப்போது அவனின் முறை வந்துள்ளது. அடுத்த நான்கு வருடங்களுக்கு நீ நியூரம்பேர்க் கலைக்கல்லூரியில் சென்று உன் கனவை நனவாக்கிக்கொள். இக்காலத்தில் உனக்காக என் உழைப்பை நான் மகிழ்ச்சியுடன் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன்”.
இந்த வார்த்தைகள் அந்த பனிபடர்ந்த அமைதியான இரவில் அங்கு கூடியிருந்த டூரரின் பதினெட்டு சகோதர, சகோதரியர் காதுகளிலும் அவர்களின் பெற்றோரின் காதுகளிலும் கணீர் என்று ரீங்காரமிட்டுச் சென்றன. அவர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் நீண்ட மேசையின் தூரத்து முனையில் அமைதியாக அமர்ந்திருந்த கிளிபர்ட்டை கண் வைத்து நோக்கினர். ஆனால் இந்த வார்த்தைகளால் கிளிபர்ட் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் கண்களில் இருந்து பொல பொலவென நீர் வடிந்தோடிக்கொண்டிருந்தது. சற்றே விசும்பலும் கேட்டது. அவன் உதடுகள் ”இல்லை… இல்லை…..” என்ற வார்த்தைகளை மாத்திரமே உதிர்த்தன.
அவன் தடுமாறி எழுந்திருந்தான். அவனது வலது கரத்தால் வைன் கிளாசை தூக்கிப்பிடித்து டூரரின் மகிழ்ச்சிக்கு தன் மகிழ்ச்சியைத்தெரிவிக்க அவனால் முடியவில்லை. தன் நடுங்கும் இரு கரங்களையும் அவனது மார்பளவு மாத்திரமே உயர்த்த முடிந்தது. அது அவர்களை வணங்குவதற்காக உயர்த்திய கரங்களாக மாத்திரமே இருந்தது. அவன் தழுதழுத்த குரலில் தன் அண்ணனைப் பார்த்துக் கூறினான்.
”இல்லை சகோதரா…. நான் அதற்குக் கொடுத்து வைக்க வில்லை. எனது கனவை நிறைவேற்ற இப்போது காலதாமதமாகி விட்டது. என்னால் இப்போது நியூரம்பேர்க் கலைக்கல்லூரியில் சென்று கல்வி கற்க முடியாது. நான்கு வருடங்களாக கல்சுரங்கத்தில் உழைத்த இந்த நடுங்கும் கரங்களைப்பார்? இவற்றால் பேனாவோ தூரிகையையோ இனி பிடிக்க முடியாது. எனது ஒவ்வொரு விரலிலும் உள்ள எலும்புகள் நரம்புகள் எல்லாம் உடைந்து நைந்து துவைந்து போய்விட்டன.
உடம்பின் மூட்டுக்கள் எல்லாம் தேய்ந்து போய் ஊசலாடுகின்றன. என்னால் தடுமாற்றமின்றி எழுந்து நிற்கவே முடியவில்லை. ஆதலால் என்னை விட்டுவிடு. நான் இப்படியே இருந்து விட்டுப்போகிறேன்”.
அவன் அவ்வாறு கூறி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு அமர்ந்தான்.
அப்போதுதான் எல்லோருக்கும் அவன் எத்தனை பெரிய தியாகத்தை செய்திருக்கிறான் என்பது புரிந்தது. டூரரும் தன் தம்பி தனக்கும் தன் குடும்பத்துக்கும் செய்திருக்கும் தியாகத்தை நினைத்து மனமுருகிப் போனான். அதன் பின் டூரன் தன் தம்பியை இறுதிவரை பேணிப்பாதுகாத்தான். விரைவிலேயே டூரர் மிகப் பிரசித்தி பெற்ற ஓவியக் கலைஞனானான்.
அவன் வரைந்த ஓவியங்களும் வேறும் கலைப்பொருட்களும் உலகெங்கும் பிரசித்தி பெற்றன.
இவற்றையெல்லாம் விட அவன் ஒரு ஓவியத்தினை தனது ஆருயிர்த் தம்பிக்கு அர்ப்பணித்தான். அந்த ஓவியம் அவன் தம்பியின் ஏந்திய இரு கரங்களை சித்தரிக்கும் மிகத்தத்ரூபமான ஓவியம். உழைத்து உருகிப்போன மெலிந்த விரல்கள் சுருங்கி வெடித்துப்போன உள்ளங்கை காய்ந்த தோல் கறை படிந்த நகங்களின் தோற்றம் என்பன உழைப்பை உலகுக்கு பறைசாற்றுவதாக இருந்தது.
உழைக்கும் கரங்கள் என பெயர் பெற்ற இவ் ஓவியம் உழைப்பின் உன்னதத்தை உயர்த்தி பார்ப்போர் மனதை மெய்சிலிக்கச் செய்தது.