உலகமெல்லாம் வியாபாரிகள்





(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-11
அத்தியாயம்-7

இரவெல்லாம் இடி மின்னல் மழை எல்லாம் பொழிந்ததுபோல் இருந்தது வீட்டில். பெரிய மனிதர்கள் ஒழுங்கு செய்த கூட் டத்தில் இந்தக் காவாலிப் பெடியன்கள் செய்த கலாட்டாவால் எவ்வளவு அவமானம். தாய் வாயாரத் திட்டினாள். தகப்பன் யார் இந்த வேலைக்குப் பின்னால் திரிகிறார்கள் என்று கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என்று கத்திக்கொண்டு திரிந்தார்.
“இந்த பொம்மலாட்டத் தலைவர்கள் சும்மா உருப்படியில்லா மல் புழுகிக்கொண்டு திரிந்தால் இப்படித்தான் நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியவேண்டாமா’ மீனா சந்தோஷத்துடன் சொன்னாள்.
“உனக்கென்ன தெரியும் என்ன கூட்டமென்று? நீதான் தமிழ் பெண் இல்லை என்று யாரோ வெள்ளைக்காரனைப் பார்த்துக் கொண்டு ஓடப் பார்க்கிறாயே” சகுந்தலா சலித்துக் கொண்டாள்.
கலாட்டா செய்தவர்களைக் கார்த்திகேயன்தான் தூண்டிவிட்ட தாகத் தகப்பன் நேரடியாகச் சொல்லிப் பேசுகிறார். போலீ சில் பிடித்துக் கொடுக்கிறேன் என்கிறார். காசு கொடுத்தென் றாலும் ஆள் வைத்து அடிப்பேன் என்கிறார் அடுத்த நிமிடம். பட்ட அவமானத்தில் மூளை குழம்பி விட்டதா இவருக்கு. மீனா விழுந்து விழுந்து சிரித்தாள்.
”என்ன இளிக்கிறாய்?” தமக்கை கடிந்து கொண்டாள்.
”அக்கா நான் என் சிரிக்கிறேன் என்றால் அப்பாவின் அறியாமையை நினைத்துத்தான். அமெரிக்கன் தன் இலவச மாவைக் கொடுத்து ஏழை மக்களைத் தன் பக்கம் திருப்பலா மென்று கனவு காணுவதுபோல் இருக்கிறது அப்பாவின் கதையும். காசு கொடுத்து எதையும் செய்யலாம், யாரையும் வாங்கலாம் எந்தப் பதவியையும் எடுக்கலாம் என்று நினைக் கிறார்கள். என்ன முட்டாள்த்தனம். இவர்களை இப்படிப் படாதபாடு படுத்தியது கார்த்திகேயனோ தெரியாது. தெரிந் திருந்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை விழல்ப் பேச்சு பேசாமல் ஏதாவது காரியத்தில் செய்வோம் என நினைக்கிறார்கள். அது பெரிய வீரமில்லையா” சகுந்தலா வைப் பார்த்தாள் மீனா. இந்தப் பெண்ணுக்கு எப்போது உருப்படியாகத் தெரியப் போகிறது அப்பா மாதிரி ஆட்களின் காசு எவ்வளவு வலிமையானது என்று.
தகப்பனார் கூட்டத்தில் பட்ட அவமானத்தால் மீனாவின் கல்யாண விடயத்தில் அக்கறை காட்டவில்லை போல் இருக்கிறது. வீட்டில் ஏதும் கசமுச பேச்சுக்கள் இல்லை. யார் இந்த நாசகரமான வேலையைத் தூண்டி விட்டவர்கள் எனத் துப்பறிந்து கொண்டு திரிந்தார்.
“ஏன் சும்மா அவன் தரவளியுடன் கொழுவுகிறீர்கள்? அங்கை யாழப்பணத்தில் எத்தனை பொலிஸ்காரன்களைச் சுட்டுப் போட்டான்கள், ஆனானப்பட்ட பொலீஸ்காரன்களாலே பிடிக்கமுடியல்ல, ஏன் உங்களுக்குத் தலையிடி” பார்வதி பயத்துடன் சொன்னாள்.
காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களை ஒழிப்பதுதான் எங்கள் முதல் வேலை என்பது போல் இளைஞர்கள் நடத்தும் தனி மனித பலாத்காரத்தால் பார்வதி பயந்து போய் இருந்தாள். யாரும் உதவு மணியை அடித்தால் யாரென்று தெரியாமல் திறக்காதே என்று உத்தரவிட்டிருந்தார் பேரின்பநாயகத்தார். தங்களைப் போன்றவர்களின் பணத்தின். படிப்பின், அதிகார மமதையின் செல்வாக்கு இந்த விடுதலை வீரர்களின் போராட்டத்தின் முன்னால் பொசுங்கிப் போவதை அவர் வெறுப்புடன் உணராமல் இருக்கமுடியவில்லை. உஷா இந்த நெருக்கடி களுக்குள் போன் பண்ணினாள். முடியுமென்றால் சாப்பிட வரட்டாம் சகுந்தலாவை. அன்றைக்கு அவசரத்தில் வந்து ஓடி விட்டாளாம். இன்றைக்கு வந்து சந்திக்க முடியுமா என்று கேட்டாள், உஷா.
ஒரு சனிக்கிழமை பின்னேரம் சகுந்தலா உஷா வீட்டுக்குப் புறப்பட்டாள். அன்ரனி அன்று ஹாங்கொங் போவதால் எயார் போட்டுக்குப போய்விட்டாள். “எங்கே போகிறாய் விழுந்தடித்துக் கொண்டு” அவரமாகக் காரை ஸ்ராட் பண்ணும் மீனாவைக் கேட்டாள்.
வழக்கம்போல் மீனாவின் குறும்புத்தனமான சிரிப்பு தவழ்ந்தது. இப்போது என்ன பொய் சொல்லப் போகிறாள்? சகுந்தலா தன் வியப்பை வெளிக்காட்டாமல் தங்கையைப் பார்த்தாள்.
“என் மாணவிகளை வின்ஸ்ரர் காஸ்சில் பார்க்கக் கூட்டிக் கொண்டு போகிறேன். வர நேரமாகும்.” இப்படி மீனாவால் எப்படித் தப்ப முடிகிறது.
சினேகிதிகளின் பிறந்த தின நாட்களைச் சாட்டிக் கொண்டு கார்த்திகேயனுடன் திரிந்த நாட்கள் ஞாபகம் வந்தன சகுந்தலாவுக்கு.
தாய், ஏன் கீதாவையும் இழுத்துக்கொண்டு பஸ்ஸில் அலையப் போகிறாய் குழந்தையை விட்டுவிட்டுப் போ என்றாள். சரி என்று பட்டது. இரவு உஷா வீட்டில் தங்கிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வெளிக்கிட்டாள் சகுந்தலா. தற்செயலாகச் சிவனேசன் போன் பண்ணினால் இன்னொருதரம் கோபிக்கப் போகிறான் எங்கே போய்விட்டாள் என்ற யோசனை வந்தது. கோபம் வரட்டும். தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் சகுந்தலா. பஸ் ஸ்ரொப்பில் நின்றபோது சிந்தனை எங்கெல்லாமோ சென்றது. அன்ரனி வருவதற்கிடையில் மீனாவுக்கு ஏதும் நடக்காமல் இருக்க வேண்டும் என மனம் தவித்தது. கார்த்திகேயன் தாய்க்குச் சுகமில்லாமல் இலங்கைக்குப் போயிருந்த போது தானே தனக்கும்….நினைவு தடைப்பட்டது.
“என்ன நீண்ட பயணமோ” அவள் முகத்தில் எப்போதும் போல சிரிப்பு. அவனையும் அவன் சிரிப்பையும் கண்டதும் அவளுக்குத் தகப்பன் துள்ளியது ஞாபகம் வந்தது.
”செய்ததையும் செய்துவிட்டுச் சிரிப்பு வேறு உங்களுக்கு” என்று சொல்ல நினைத்தாள்.
”என்ன பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி நிற்கிறீர்” அவன் கேட்டான். கார்த்திகேயன் போன்றவர்கள் எப்படிச் சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள்.
“வந்த வழியால் போவதற்கென்ன என் சும்மா கரைச்சல் படுத்திறியள்….” அவள் முடிக்கவில்லை…… “ஆக்கள் ஆரும் பார்த்தாலும்” என்று அவன் சொல்லி முடித்தான்.
அவள் பொறுமையின்றிப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் “சகுந்தலா உம்மிடம் கொஞ்சம் கதைக்க வேண்டும்” அவன் கார் ஜன்னலால் தலையை நீட்டிச் சொன்னான்.
”ஓம் நாற்றக்குண்டு போட்ட எழிய வேலை போதாது அதைப் பற்றிய விளக்கம் வேறோ” அவள் எரிந்து விழுந்தாள். பக்கத்தால் போன ஒரு பெரிய நெருப்பணைக்கும் லொறி சத்தம் போட்டுக் கொண்டு போனதால் அவள் சொன்னது அவனுக்குக் கேட்கவில்லை. ஆனால் அவள் முகம் கோபத்தில் துடிப்பது தெரிந்தது
“வேணுமானால் அடுத்த ஸ்ரொப்பில் இறக்கி விடுகிறேன். காரில் ஏறியிருந்து கத்தும்” என்றான் கார்த்திகேயன். அவள் வேண்டா வெறுப்பாக காரில் எறிக்கொண்டாள். யாரும் பார்த்தாள் என்று ஒருகணம் நினைத்தாள். அடுத்த கணம் தகப்பனுக்கு ஏன் இவ்வளவு அவமானம் செய்தீர்கள் என்று கேட்காமல் விடுவதில்லை என்ற வைராக்கியம் பிறந்தது.
“என்ன உமது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது” அவன் வழக்கம்போல் புன்னகையுடன் கேட்டான்.
“நீங்கள் செய்யும் எழிய வேலைக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காமல் என்ன செய்யும்” அவள் குமுறினாள்.
“நான் ஒன்றும் செய்யவில்லை. உமது தகப்பன் தான் அப்பாவிப் பெடியனைப் பிடித்து ஆயிரக் கணக்கில் பவுண்ஸ் தருகிறேன் என் மகள் மீனாவைச் செய் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு திரிகிறார். என்ன கேவலம் இது கருவாட்டுக்கு விலை பேசுவது போல” அவன வெறுப்புடன் சொன்னான்.
என்ன இது உண்மையா? இது சொல்லவா இவன் கூப்பிட்டான். அல்லது வேறு ஏதுமா?
“என்ன உம்முடைய முகம் விறைத்துப் போய்க் கிடக்கு” அவளைத் திரும்பிப் பார்த்து விட்டுக் கேட்டான். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவிலலை “எனக்குத் தெரியும் மீனா இதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டாள் என்று” நம்பிக்கையுடன் அவள் குரல் ஒலித்தது.
“உம்மைப்போல் கோழையாக மீனா இருக்கமாட்டாள் என்று தெரியும்” அவன் பார்வை பின்னேரத்து நெருக்கமான பாதையில் படிந்திருந்தது. லண்டன் மத்தியில் வேலை செய்துவிட்டு நாட்டுப் பக்கங்களுக்குப் போகும் கார்கள் மந்தைகள் மாதிரி நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தன.
அவன் சொற்கள் அவள் மனத்தில் சுரீரென்று தைத்தன. எப்படிக் கல்யாணம் நடத்தப்படடது என்று அவனுக்கு இது வரையும் தெரியாமல் இருக்கலாம். கோழைத்தனமாகத் தாய் தகப்பனை மீற முடியாமல் அந்தஸ்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் முடித்ததாக நினைக்கிறானா? எப்போது சொல்வாள் தன் சோகக் கதையை.
“ஏன் என்னை இப்படித் தாக்குகிறீர்கள்.” கஷ்டப்பட்டு தன் உணர்ச்சிகளைக் குரலில் காட்டாமற் கேட்டாள்.
“என்ன தாக்குகிறேன்.” அவன் சாதாரணமாகக் கேட்டான்.
“என்ன நடந்தது என்று உங்களுக்கு ஒரு நாளும் விளங்கப் போவதில்லை.” அவள் குரல் மென்மையாக ஒலித்தது.
“எனக்கு இதுவரை விளங்கியதே போதும். ஒரு காதல் கதை கேட்க ஆசையிருந்தால் தமிழ்ப்படம் நிறையக் காட்டுகிறார்கள் லண்டனில். போய்ப் பார்ப்பேன். ஆனால் எனக்கு அப்படியான விழல் விடயங்களில் நேரம் செலவழிக்கக் கட்டாது”.
எவ்வளவு எடுத்தெறிந்து பேசுகிறான்.
“ஓமோம். நீங்கள் எல்லாம் இலட்சியவாதிகள்.”
கிண்டலாகச் சொன்னாள் சகுந்தலா.
“நான் விளம்பரம் போடவில்லை, நான் இலட்சியவாதி என்று. எங்கள் நடுவில் இருக்கும் முக்கியமான பிரச்சனையில் அக்கறை எடுத்தால் இலட்சியவாதி என்று ஆகிவிடாது. எனக்கு சரியானது என்று எதை நம்புகிறேனோ அதற்காகப் போராடப் போகிறேன். இம்போது பிழையான காரியம் என்று சொல்பவர்கள் சரி என்று சொல்ல இன்னும் இருபது வருடம் எடுக்கலாம். உரிமைப் போராட்டங்கள் வெறும் விளையாட்டுப் போட்டியல்ல எத்தனையோ மனிதர்களின் தன்னலமற்ற தியாகம் தேவை அதற்கு-”
அவன் பேசிக்கொண்டே இருந்தான். அவள் பொறுமையின்றி முணுமுணுத்தாள்.
“எனக்கு அரசியலில் அக்கறையில்லை” அவனின் சொற் பொழிவைக் கேட்கமுடியாத பொறுமையின்மை குரலில் ஒலித்தது. அவன் முகத்தில் பச்சாதாபமான சிரிப்பு நெளிந்தது.
“என்ன அப்படிப் பார்வை” அவள் அவனின் பார்வையின் கிண்டலைத் தாங்காமற் கேட்டாள்.
”உம்மைப்போன்ற பெண்களுக்கேன் அரசியல்? அடுப்படிச் சீவியம்தான் அருமை என்று நினைக்கிறவர்கள் நீங்கள். ஒரு சீலை, சட்டை, சோறு, கறி, வீடு…” அவன் சொல்லிக் கொண்டே போனான்.
அவள் பொறுமையின்றிக் கத்தினாள். “பின்னே என்ன தும்புத்தடியைத் தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போகவா” அவளின் கோபம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.
“சண்டைக்குப் போகும் காலம் வரும் போது தன் பாட்டுக்குப் போவீர்கள். அதற்காக இப்போது தயார் செய்ய வேண்டும். உலகத்தில் எத்தனையோ நாடுகள் பெண்களின் திறமையுடன் முன்னேறுகின்றன. எங்கள் தமிழர்களைப் பொறுத்த வரையில் பெண்களின் திறமை புட்டவித்து அப்பம் சுடுவதில் தான் ஆயிரக்கணக்கான வருடங்களைச் செலவழித்துவிட்டது”.
“உங்களுக்குப் பைத்தியம். விசர்த்தனமான கதைகள் கதைப்பது போதாதென்று விசர் வேலைகளும் செய்து கொண்டு திரிகிறீர்கள்.” அவளின் குற்றச்சாட்டை விளங்காமல் அவளைப் பார்த்தான், “என்ன கோழி தின்ற கள்ளன் போல் முழிக்கிறியள். நீங்கள்தானே அப்பா ஆட்களின் கூட்டத்தில் நாற்றக்குண்டு போட்டீர்கள்”.
“என்ன அலட்டுகிறீர் சகுந்தலா? படபடக்காமல் சொல்லும் என்ன நடந்தது என்று.”
காரின் வேகம் குறைந்தது. அவனுக்குத் திண்டாட்டமாக இருந்தது. உண்மையில் இவனுக்கு ஒன்றும் தெரியாதா? அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார் கார்த்திகேயன் மாதிரி ஆட்கள் தான் மாணவர்களைத் தூண்டிவிட்டு இதெல்லாம் செய்கிறார்கள் என்று. உண்மையில்லையா அது. குழப்பமான முகத்துடன் அவனை நோக்கினாள். பின்னர் தகப்பன் சொன்னவற்றை விளங்கப்படுத்திச் சொன்னாள் அவனுக்கு. அவன் பெருமூச்சு விட்டான்.
“இவ்வளவு தூரம் உமது தகப்பன் என்னில் பழிபோடுவார் என்று நான் நம்பவில்லை சகுந்தலா. கூட்டத்தைக் குழப்பும் எந்த வேலையும் நான் செய்யவில்லை. செய்தவர்கள் யார் என்றும் தெரியாது. ஆனால் இந்த தலைவர்களுக்கு இப்போதாவது தெரிந்திருக்க வேண்டும். சும்மா வார்த்தைகளால் இனியும் இளைஞர்களைப் பேய்க்காட்ட முடியாது என்று.”
அவன் கூட்டம் குழப்பும் விடயத்தில் சம்பந்தப்படவில்லை என்று அவளுக்குச் சமாதானமாக இருந்தது. கார் அண்டர் கிரவுண்ட் ஸ்ரேசனுக்கு வந்ததும் அவள் இறங்க முற்பட்டாள். அப்போதுதான் அவன் கேட்டான் அவள் எங்கே போகிறாளாம்.
”உஷா வரச்சொன்னாள். மீனாவின் விடயம் என்னவாக முடியப்போகிறதோ தெரியாது. இந்தக் கூத்தை எல்லாம் பார்க்காமல் இருந்திருக்கலாம். லண்டனுக்கு வராமல் இருந்திருந்தால்” அவள் பெருமூச்சுடன் சொன்னாள்.
“சிவனேசன் எப்படி” அவனின் கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. முட்டாள்த்தனமான முடிவுகள் செய்து கொண்டு என்னையே நான் குழப்பிக்கொள்வதாகச் சொல்வான். என்ன சொல்லக் கிடக்கிறது என் கணவரைப் பற்றி?
“நான் லூவிஷாமுக்குச் சில மாணவர்களைச் சந்திக்க போகிறேன். யாரும் பார்ப்பார்கள் என்று ஒப்பாரி வைக்காமல் இருந்தால் வரலாம்” என்றான் கார்த்திகேயன். “யாரும் என்னவும் சொல்லட்டும் உலகத்துக்கு ஏன் பயப்பட வேண்டும் என்று சொல்லாமல் உலகத்துக்காகவே வாழும் உம்போன்ற கோழைகள் தான் இன்று உலகமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள்.” அவன். பிரசங்கம் வைக்கத் தொடங்கிவிட்டானா? ஏக்கம் நிறைந்த பார்வையுடன் அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“மனிதர்கள் மனதையடக்கப் பழக வேண்டும். இல்லா விட்டால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.” அவள் சொல்லிக்கொண்டே கார்க் கதவைத் திறந்தாள்.
“தனக்குப் பயப்பட்டு தான் சரியானதுதான் செய்கிறேன் என்பதைச் சரிவர முடிவுகட்டத் தெரியாத முட்டாள்கள்தான் உலகம் என்று நீர் சொல்லிக்கொள்கிறவர்கள். உம்மில் உமக்கு நம்பிக்கை இருந்தால் சரியாகத்தான் நடந்து கொள்கிறாய் என்ற சுய உணர்வுடன் நடந்து கொண்டால் ஏன் சும்மா குழப்ப வேண்டும்”.
அவள் இறங்கியதும் கார்க் கதவைச் சாத்தும் நோக்கத்துடன் திரும்பினான். அவள் இறங்கவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்தாள் பார்வை மிகக் கடினமாக இருந்தது. திறந்த கதவை ஆத்திரத்தில் அடித்துச் சாத்திட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.
“என்னமாதிரி நடந்துகொள்கிறேன் என்ற சுயஉணர்வுடன் தான் இருக்கிறேன். என்னில் எனக்குப் பயமில்லை. உங்களிலும் பயமில்லை”. அவளுடைய கோபமான முகத்தைப் பார்த்ததும் அவன் விழிகளில் குறும்புச் சிரிப்புத் தவழ்ந்தது. கார் கிறினிவீச் பார்க்கைக் கடந்த போது மீனாவின் அன்ரனியை ஞாபகம் வந்தது அவளுக்கு. அத்துடன் முதற்தரம் தாய் தகப்பனுக்கு தெரியாமல் ‘கிறினிவிச் ஒப்சவேற்றரி’ கார்த்திகேயனுடன் பார்க்க வந்ததும் ஞாபகம் வந்தது. அவனுக்குத் தெரியும் அவளின் முகத்தில் உண்டா கும் மாறுதலைக் கண்டதும் என்ன யோசிக்கிறாள் என்று. எக்காரணம் கொண்டும் பழம் கதைகளைக் கிண்டுவதில்லை என்று முடிவு கட்டியிருக்கிறான். அவ்வாக ஏதும் கதைத்தாலும் அவள் மனம் புண்படும்படியாக ஏதும் சொல்லிவிடக் கூடாது என்று திட்டமாக முடிவு கட்டியிருக்கிறான்.
துன்பமோ துக்கமோ நடந்தது நடந்துவிட்டது. இனிக் கதைத்து என்ன பிரயோஜனம் என்பதுதான் அவனின் யோசனை. அத்துடன் கார்த்திகேயனும் சகுந்தலாவும் பழைய மனிதர்கள் இல்லை. இருவருக்கும் சொந்த வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் உண்டு. சொந்த வாழ்க்கை. கார்த்திகேயன் சிந்தித்தான். சில்வியா சொல்கிறாள் தனக்கு எந்த சொந்த வாழ்க்கையும் இருப்பதாகத் தெரியவில்லை என்று.
ஏன் சில்வியா ஒரு மாதிரியாய் நடக்கிறாள்? ஆனால் சில்வியா சொல்கிறாள் நான்தான் கொஞ்ச நாளாக ஒரு மாதிரி இருக்கிறேனாம். அதுவும் சகுந்தலா வந்த நாளில் இருந்து. என்ன வேடிக்கை?. எப்படித்தான் படித்தாலும் பெண்கள் பெண்கள்தானா? சந்தேகமும் அவசரபுத்தியும் உள்ள பெண் பிறவிதானா உலகமெல்லாம்?
“என்ன பெரிய யோசனை?” சகுந்தலா திடீரென்று கேட்டாள்.
”என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்? நீர்தான் எல்லாம் தெரிந்த முனிவராச்சே” குறும்புத்தனம் குரலில் பளிச்சிட்டது.
‘’உங்களுக்கு வேடிக்கையாகத்தான் கதைக்கத் தெரியுமா?” அவள் வெடுக்கென்று கேட்டாள்.
”சகுந்தலா எங்களுக்குள் சண்டை வராமல் எந்த சம்பாஷணையும் நடக்கமாட்டேன் என்கிறது. நீர் கொஞ்சக் காலம் லண்டனில் நிற்கப்போகிறீர். ஏன் வீண் சண்டை எங்களுக்குள். இனி எப்போது காணப்போகிறோமோ? இவ்வளவு காலமும் ஒழிந்திருந்தது போல் ஒழித்து மறைத்து வாழ யோசிக்காதீர்.” அவன் பேச்சைக் கேட்கப் பொறுமையில்லாமல் இருந்தது அவளுக்கு.
“இவ்வளவுதான் சொல்லத் தெரியுமா உங்களுக்கு? சும்மா வேடிக்கையாகவா போய்விட்டது வாழ்க்கை”
“சகுந்தலா என்ன செய்யச் சொல்கிறீர்? எப்படிக் கதைக்கச் சொல்கிறீர். அம்மாவுக்குச் சுகமில்லை என்று போய்விட்டு வருவதற்கிடையில் நீர் தாலியைக் கட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடிவிட்டீர். நான் என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்? காதலில் தோல்வி என்று தேவதாஸ் நாடகம் போட்டுக் குடித்துக் கொண்டு திரிந்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீரா? அல்லது அனுமான் மாதிரி அத்திலாண்டிக் கடலைக் கடந்து உம்மிடம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீரா? வாழ்க்கையின் தோல்விகளைத் தாங்காமல் நான் சோர்ந்து போயிருக்க வேண்டும் என்று நீர் நினைக்கிறீர் போல் இருக்கிறது. காதல் வாழ்க்கையில் ஒரு பகுதி. அதுதான் வாழ்க்கையில்லை. எத்தனையோ நல்ல காரியம் செய்யக் கிடக்கிறது.”
அவன் சொல்லி முடிக்கவும் கார் உஷா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. கதவைத் திறந்த உஷா கார்த்திகேயனையும் சகுந்தலாவையும் கண்டு திடுக்கிட்டாள். அவள் ஒரு நாளும் நினைக்கவில்லை கார்த்திகேயனும் சகுந்தலாவும் ஒன்றாய்த் தன் வீட்டுக்கு… ஏன் ஒன்றாய் எங்காவது போவார்கள் என்று.
“என்ன உஷா அப்படிப் பார்க்கிறீர்? எங்களால் கல்யாணம் தான் முடித்துக்கொள்ளவில்லை என்றால் சினேகிதர்களாகவும் இருக்கக் கொடுத்து வைக்கக் கூடாதோ?” கார்த்திகேயனுக்கு எல்லாமே வேடிக்கைதானா? சகுந்தலா ஆத்திரத்துடன் அவனை முறைத்துப் பார்த்தாள், “நான் ஒன்றும் உங்கள் சினேகிதி இல்லை.” சகுந்தலா கோபத்துடன் சொல்ல உஷா சொன்னாள், “ஏன் சண்டை பிடிக்கிறீர்கள் இருவரும்.”
கார்த்திகேயன் அவசரப்பட்டான் போவதற்கு. மாணவர்கள் சிலரைக் காணுவதாகச் சொல்லியிருந்தான். “பாவம் மாணவர்கள், பின்னேரம் வேலைக்கும் போகிறவர்கள் இருப்பார்கள். எனக்காகக் காத்திருந்து அவர்கள் நேரத்தையும் வீணாக்க நான் விரும்பவில்லை”. உஷா போட்ட தேநீரை அவசரமாகக் குடித்துக்கொண்டு அவன் சொன்னான்.
“ஓம் இவர் பெரிய இலட்சியவாதி. தான் கெடுவது போதாதென்று படிக்க வந்த பெடியன்களையும் பழுதாக்குகிறார்.” சகுந்தலா வழக்கம் போல் எடுத்தெறிந்து சொன்னாள்.
“அப்படிச் சொல்லாதே சகுந்தலா. இலங்கைக்கு ஒரு தரம் போய் பார்த்தால் தெரியும் என்ன நடக்கிறது என்று நாங்கள் ஊமைகளாய்ச் செவிடர்களாய் இருப்பதாற்தான் இரண்டு கலவரங்களிலும் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக வெட்டிக் கொத்தி விட்டார்கள் எங்களை. ஏதாவது செய்து உரிமைக்குப் போராடுவது என்றால் இனியும் காலம் தாழ்த்தக் கூடாது. இன்னொரு வகுப்புக் கலவரம் வந்தால் நூற்றுக்கணக்கில் இல்லாமல் லட்சக்கணக்கில் தமிழர் உயிர்கள் பலிபோகும். எப்போது சந்தர்ப்பம் வருகிறது என்று வகுப்புவாதிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” உஷா சொன்னதைக் கேட்டு சகுந்தலா வாயடைத்துப் போய் இருந்தாள். “உமக்கும் இவர்களைப் போல் பைத்தியம் பிடித்து விட்டதா உஷா” என்றாள் சகுந்தலா. உஷா கார்த்திகேயனைப் பார்த்துச் சிரித்தாள் கருத்துடன்.
“சகுந்தலா போன்ற தமிழ்ப் பெண்களுக்கு இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்களின் பிரச்சனை தெரியாது. எங்கள் பெண்கள் கொழும்பிலும் கந்தளாயிலும் மலைநாட்டிலும் சிங்கள வெறியர்களால் கற்பழிக்கப்பட்டுவிட்டு யாழ்ப்பாணம் போய் சிங்கள ராசாக் குட்டிகளைப் பெறுங்கள் என்று துரத்தப்படுகிறார்கள். நாங்கள் இங்கு உல்லாசமாக இருந்து கொண்டு ஒன்றும் தெரியாத மாதிரி நடிக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனை யாரோ பிரச்சனை இல்லை சகுந்தலா. எங்கள் பிரச்சனை. நாங்கள் உலககத்தில் எந்த மூலைக்கு ஓடினாலும் நாங்கள் தமிழர். எங்களுக்கொரு நாடு தேவை சீவிக்க. இருக்கிற இடங்களையும் பிடுங்குகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இன்னும் நாங்கள் சத்தியாக் கிரகம் செய்து கொண்டு சீவிக்க வேண்டுமா?”
சகுந்தலா கார்த்திகேயனையும் உஷாவையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“என்ன பார்க்கிறாய் சகுந்தலா” உஷா கேட்டாள்.
“தமிழ்த் தலைவர் வந்த கூட்டத்துக்கு நாற்றக் குண்டு போட்டார்களாம்…” சகுந்தலா முடிக்கவில்லை.
“….அது நானாக இருக்கலாம் என்று திட்டிக்கொண்டு வந்தாள். இப்போது நீராக இருக்கலாமோ என்று யோசிக்கிறாளாக்கும் சகுந்தலா.” கார்த்திகேயன் கதவைத் திறந்து கொண்டு வெளிக்கிட்டான். அவன் போக விட்டுச் சினேகிதியை ஏறிட்டுப் பார்த்தாள் உஷா.
“என்ன விண்ணானமாகப் பார்க்கிறீர் உஷா! நான் ஒன்றும் கார்த்திக்குப் பின்னால் திரிய லண்டனுக்கு வரவில்லை”.
உஷா சகுந்தலாவின் முகத்தைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தாள். சகுந்தலாவுக்கு விளங்கவில்லை ஏன் சினேகிதி சிரிக்கிறாள் என்று
“என்ன இளிக்கிறீர் இப்போது?” சகுந்தலா பொறுமையின்றி துடித்தாள், கார்த்திகேயனும் உஷாவும் சேர்ந்து அரசியல் கதைத்த விதம் ஏதோ இனம் தெரியாத பொறாமையை உண்டாக்கியது. அன்று கார்த்திகேயனுடன் சில்வியாவைக் கண்டதும் ஏற்பட்ட பொறாமை ஞாபகம் வந்தது. கார்த்தியும் உஷாவும் சினேகிதர்களா.
“நான் ஒன்றும் உம்மைப் பார்த்து ஏளனம் செய்து சிரிக்கவில்லை சகுந்தலா. உமது அறியாமையை நினைத்துச் சிரிக்கிறேன்”. உஷா தெளிவாகச் சொன்னாள்.
“என்ன என் அறியாமை” விளங்காமல் கேட்டாள் சகுந்தலா.
“நீர் ஒரு காலத்தில் கார்த்திகேயனுக்குப் பெரிய பொக்கிசமாக இருந்திருக்கலாம். அதை நினைத்துக் கொண்டு கார்த்திகேயனில் இன்னும் உரிமை கொண்டாடுகிறாய் என்று நினைத்துச் சிரிக்கிறேன்.” உஷாவின் முகத்திலுள்ள அசாதாரணமான சிரிப்பும் அவளின் பேச்சும் சகுந்தலாவுக்குப் புரியாதவைகளாக இருந்தன.
“ஏன் எல்லோரும் இப்படி மாறிப்போய் விட்டீர்கள்.” சகுந்தலாவின் குரல் கோபத்தில் தழுதழுத்தது.
“ஏனென்றால் நாங்கள் வளர்ந்துகொண்டு இருக்கிறோம். சகுந்தலா போன்றவர்கள் வளர மறுத்துக் கொண்டிருக்கிறார் கள்.
உஷா தன் அழகிய பெருவிழிகளை விரித்துக் கொண்டு சொன்னாள்.
“என்ன மாதிரி வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள்? ஒழுக்கம் பண்பு, ஒன்றுக்கும் மதிப்புக் கொடுக்காமல் வளர்ந்து விட்டீர்கள் அப்படித்தானே?” சகுந்தலா தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு சொன்னாள். உஷாவையும் கார்த்தியையும் போல் தன்னாலும் நையாண்டியாகப் பேசமுடியும் என்பதை நிரூபிப்பது போல் இருந்தது அவள் தோற்றம். தான் விவாகரத்துச் செய்து விட்டுச் சீவிப்பதைத்தான் சொல்லாமற் சொல்லிக் கிண்டல் செய்கிறாள் சகுந்தலா என்பது தெளிவாக விளங்கியது உஷாவுக்கு.
“சொல்வதை நேரடியாகச் சொல் சகுந்தலா. நான் கட்டிய கணவருடன் வாழாமல் விவாகரத்துச் செய்துவிட்டுச் சீவிப்பதும் கார்த்தி சடங்குகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் சில்வியாவுடன் சீவிப்பதையும் தான் கிண்டலடிக்கிறாய் என்றால் நேரடியாக சொல்வதற்கென்ன.” உஷா தன் குற்றச்சாட்டுக்குக் கோபப்படாமல் மறுமொழி சொன்னது சகுந்தலாவுக்கு தர்ம சங்கடமாயிருந்தது. சண்டையை எதிர்பார்த்தால் தத்துவம் பிறக்கிறது.
“நான் யாரையும் கிண்டல் செய்ய வரவில்லை. நீர் கேட்ட கேள்விக்கு மறுமொழி சொன்னேன்.” சகுந்தலா பட்டும் படாமலும் மறுமொழி சொன்னாள்.
”உனக்கு ஏன் கார்த்திகேயனில் இன்னும் உரிமை இருக்கிறது” உஷா கேட்டாள்.
”உஷா தேவையில்லாமல் கதைக்கவேண்டாம். கார்த்திக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை” சகுந்தலா கடுமையாகச் சொன்னாள்.
“சகுந்தலா உம்மை உமக்குப் புரிந்துகொள்ளப் பயமாக இருக்கலாம். நான் சொல்கிறேன், நான் கார்த்தியுடன் சிரிப்பதைக் கண்ட அடுத்த வினாடி உமது முகத்தில் மாறுதல் இருந்தது. மீனா சொன்னாள் சில்வியாவை எப்படி முறைத்துப் பார்த்தாய் என்று. கல்யாணம் என்ற போர்வைக்குள் மறைந்து விட்டதால் உமது மன உணர்ச்சிகளும் மடிந்துவிட வில்லை. உண்மைகளை ஆராயப் பழகவேண்டும்.”
வீட்டில் நடக்கும் நாடகங்களை மறந்து ஒருநாளாவது உஷாவுடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று வந்தால் உஷா ஏன் இப்படிப் பேசுகிறாள். ஒருவேளை கார்த்தியுடன் வந்தது பிழையாகப் பட்டிருக்கலாம் இவளுக்கு. அல்லது கார்த்தியுடன் சண்டை பிடித்தது பிழையாகப் பட்டிருக்கலாம். சகுந்தலா கொஞ்ச நேரம் பேசவில்லை.
”சகுந்தலா உம்மைப் புண்படுத்த வேண்டும் என்று ஒன்றும் சொல்லவில்லை. அப்படி ஏதும் சொன்னால் மன்னித்து விடு.” உஷா சினேகிதியின் அருகில் இருந்து கொண்டு சொன்னாள். ஐந்து வருடம் பிரிந்திருந்தாலும் அவர்களின் அன்பு பிரிந்திருக்க வில்லை. உஷாவுக்குத் தெரியும் ஏன் தன்னுடன் ஒரு தொடர்பும் வைத்திருக்காமல் இருக்கிறாள் சகுந்தலா என்று. அவள் அதற்காக சகுந்தலாவை பிழை சொல்லவில்லை நீண்ட நாள் பிரிவின் பின் காணும் போது ஏன் சகுந்தலாவைப் புண்படுத்த வேண்டும் என்று நினைத்தாள்.
“மீனா எப்படி’ உஷா கேட்டாள் பேச்சை மாற்ற. சகுந்தலா சினேகிதியை நிமிர்ந்து பார்த்தாள்.
சகுந்தலா தனக்குத் தெரிந்தவற்றைச் சொன்னாள். அன்ரனி ஹாங்காங் போவதையும் மீனாவுக்குத் தகப்பன் மாப்பிள்ளை தேடுவதையும் சொன்னாள்.
உஷாவுக்கு ஒருகணம் நம்பமுடியாமல் இருந்தது பேரின்ப நாயகத்தார் சகுந்தலாவுக்குச் செய்த கொடுமையை மீனாவுக்கும் செய்ய நினைப்பது.
“சகுந்தலா நீர் உமது போலிக் கெரளவத்தை விட்டு விட்டு மீனாவுக்காகச் சண்டைபிடிக்க முடியாதா?” உ ஷா கேட்டாள்.
”என்ன போலி” சகுந்தலா கேட்டாள். உஷாவிடம் எதையும் மறைக்க முடியாது என்று தெரிந்தது.
“குடிகார மாப்பிள்ளையுடன் குடித்தனம் பண்ணும் சீவியம். கெளரவமான இடத்தில் கல்யாணம் செய்த போலிக் கெளரவம்”.
“உஷா” சகுந்தலாவுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.
”சகுந்தலா இதில் கோபப்பட ஒன்றுமில்லை. நீர் மறைத்தாலும் இங்கு உம்மைத் தெரிந்த எல்லோருக்கும் தெரியும் சிவனேசன எப்படிப்பட்ட ஆள் என்று. உண்மையாகச் சொல்லப் போனால் உம்மைக் கல்யாணம் செய்ய முதலே சிவனேசன் எப்படி இருந்தான் என்று. கொழும்பில் அண்ணாவுடன் யூனிவர்சிட்டியில் படித்தவன்.” சகுந்தலா எப்படி அடக்கியும் அடக்க முடியாமல் அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
லண்டனில் கோப்பை கழுவிப்படிக்கிற கார்த்திகேயனுக்கு தன் மகளைக் கொடுக்காமல் நன்றாகப் படித்த மாப்பிள்ளைக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்ததாகப் பேரின்பநாயகத்தார் புழுகிக்கொண்டு திரிந்ததாகக் கேள்வி. உஷா பேசிக் கொண்டே இருந்தாள்.
சகுந்தலா சொன்னாள் “உம்மைப் போன்ற ஆட்களுக்கு எதுவும் வேடிக்கையும் கிண்டலும்தான். வாழ்க்கை அவ்வளவு மென்மையானது இல்லை சிரித்து மழுப்பிவிட.” சகுந்தலாவின் கண்கள் நீரைக் கொட்டின.
“ஏன் ஒப்பாரி வைக்கிறீர். உமது தகப்பன் உமக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ அதெல்லாம் கிடைத்திருக்கிறது. இன்னும் என்ன அழுகை? எங்களைப் போல் ஆட்கள் தான் அழவேண்டும். விவாகரத்துச் செய்தால் எங்கள் ஆட்களுக்கிடையிலுள்ள மதிப்புப் போய் விடுகிறது. கல்லோ, மண்ணோ, கட்டிய துணை எப்படியோ என்று சாட்டுக்கு வாழ்ந்து தொலைத்தால் ஒழுக்கம் பண்பு என்று போற்றப்படுகிறது… உமது தரத்தில் என் வாழ்க்கையில் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்? என்னைப் பொறுத்தவரையில் உண்மை இருக்கிறது”.
அத்தியாயம்-8
போலியாக வாழ்வு தேவையில்லை. உஷா சொன்னாள். சகுந்தலா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். உஷா தன் தோல்வியான கல்யாணத்தைத் தனக்குச் சொல்லி முறை விடுவாள் என்று நினைத்துக் கொண்டு வந்தாள் சகுந்தலா.
அதற்குப் பதிலாக தன்னையும் சகுந்தலாவையும் ஒப்பிட்டுப் பேசிய விதத்தில் உஷாவின் தீவிர மனப்பான்மை தெரிந்தது.
தான் விரும்பிய வெள்ளைக்காரனைத் தன் குடும்பம் எதிரித்த போதும் விட்டுக் கொடுக்கவில்லை. கல்யாணம் சரிவராமற் போனபோது தாய் தகப்பன் சொன்னார்கள், செய்வதைச் செய்து விட்டாய் இனியாவது உருப்படியாகச் சேர்ந்திரு என்று. எனது சீவியம் எப்படி இருக்கவேண்டும் என்று விவாகரத்துச் செய்துவிட்டு இருக்கிறாள்.
“ஏன் சிவனேசன் குடிக்கிறான்” உஷா கேட்டாள். சகுந்தலாவுக்குத் தெரியாத மறுமொழி அது. சிலவேளை தான் சரியான பொருத்தமான மனைவியில்லையோ என்று தோன்றும் அவளுக்கு. ஆனால் தன் பழைய உறவை வைத்துக் கொண்டு இன்னும் கார்த்திகேயனுடன் தன்னைப் பிணைத்துப் பேசுவது அவளால் தாங்க முடியாதிருந்தது. “எனக்குத் தெரியாது; ஆனால் ஏனோ இன்னும் அவருக்கு கார்த்தியிலும் என்னிலும் சந்தேகம். கார்த்தி கல்யாணம் முடிக்கும் வரை எங்களுக்குள் சண்டை இருக்கலாம்”.
“என்ன சொல்கிறாய் சகுந்தலா. சிவனேசனுக்கு உம்மிலும் கார்த்தியிலும் சந்தேகமா” உஷா வியப்புடன் கேட்டாள். வைகாசி மாத மாலை வெயில் ஜன்னல் வழியாகப் பட்டு உஷாவின் முகத்தை தேவதைபோற் காட்டியது. அழகிய அவள் தோற்றம் வடித்தெடுத்த சிற்பத்தை நினைவூட்டியது. அவள் தன்னிடம் கேட்ட கேள்வியை மறந்து சினேகிதியின் அழகை ரசித்தாள் சகுந்தலா. இப்படியான அழகான பெண்ணை என்னவென்று விவாகரத்துச் செய்யச் சம்மதித்தான் றொபின்?
“நான் ஏதோ கேட்கிறேன் நீ ஏதோ கனவுலகத்தில் இருக்கிறீர்” உஷா அதட்டினாள் அன்புக் குரலில். வேதனையான புன்னகை சகுந்தலாவின் அதரங்களில் நெளிந்தது. வேதனையுடன் சொன்னாள்.
“உமக்குத் தெரியாது உஷா. தாய் தகப்பனுக்காகக் கல்யாணம் முடித்து விட்டு இன்றும் நான் கார்த்திகேயனுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டுவார் என் கணவர். ஏனோ தானோ என்று வாழ்க்கையுடன் விளையாடும் உன்னையும், கார்த்திகேயனையும் போன்ற ஆட்களுக்கு என்னைப் போன்ற லட்சக்கணக்கான பெண்களின் பிரச்சினை விளங்காது”.
சகுந்தலா சொல்வதை உஷாவால் நம்ப முடியாமல் இருந்தது. சகுந்தலாவின் பழைய கதைகளாற்தான் பிரச்சினைகள் என்று நினைத்திருந்தாள். ஆனால் சிவனேசன் கற்பனை செய்து கொண்டு பைத்தியக்காரனாக இருக்கிறான் என்பதை நம்ப முடியாமல் இருந்தது.
“நீங்கள் என்னை மோசக்காரி, ஏமாற்றுக்காரி என்று பேசுவீர்கள் என்பதற்காக நான் லண்டனுக்கு வராமல் இருக்கவில்லை. என் கணவர் எப்படி நடத்துவார் என்று தெரியும்” சகுந்தலாவின் குரல் தழு தழுத்தது.
“அப்படியிருக்க நீ துணிவாக கார்த்திகேயனின் காரில் வந்து குதித்தாயே என்ன துணிவு உனக்கு.”
“வேண்டுமென்று வரவில்லை. வரத் துணிவுமில்லை. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் திரும்ப இருவரையும் சந்திக்கப் பண்ணி விட்டது. என்ன நடக்கப் போகிறதோ தெரியாது. என் வாழ்க்கையில் இருக்கிற பூகம்பங்கள் போதாதென்று பட்டப் பகலில் என்னை யாரும் கார்த்திகேயனுடன் கண்டதாகச் சொன்னாலே சிவனேசனுக்கு வலி வரப்போகிறது.”
சினேகிதியின் துயரக் கதையைக் கேட்டு வாயடைத்துப்போய் இருந்தாள் உஷா. இந்த லட்சணத்தில் மற்றவர்களை ஏளனம் செய்கிறாள். ஏனோ தானோ என்று சீவிப்பதாக. என்னென்று இருக்கிறாள் இப்படியான மனிதனுடன்.
“நான் கனவுலகில் இருப்பதாகச் சொன்னாய். இப்போது நீ கனவுலகில் இருக்கிறாய் உஷா.” சகுந்தலா சொன்னாள்.
உஷா மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. வெளியில் இன்னும் வெளிச்சமாய் இருந்தது. வீதி நெடுக சனக் கூட்டம் இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் மனிதக் கூட்டம். இதில் எத்தனை பேர் சிவனேசன் போல் இருப்பார்கள் என எண்ணியது சகுந்தலாவின் மனம். சிவனேசனின் குடிப்பழக்கத்தை கேட்டு இப்படிக் குதிக்கும் உஷா, தான் அன்று போன் பண்ணும் போது தன் கணவன் யாரோடோ இருந்ததைச் சொன்னால் எப்படிக் குமுறுவாள்?
ஏன் உஷா தன் கதையைச் சொல்லவில்லை. ஏன் விவாகரத்து செய்தாள்? படிக்க அனுப்பிவைக்க அடுத்த வருடமே வெள்ளைக்காரனைக் கல்யாணம் முடித்துக் கொண்டு வீட்டாருடன் தொடர்பில்லாமல் இருந்தாள். இப்போது எப்படியிருக்கிறாள். வீட்டாருடன், இலங்கைக்குப் போய் வந்த கதை கதைத்தாள்; எப்போது போனாள். ஏன் போனாள்? சகுந்தலா தன் துன்பம் மறந்து உஷாவின் வாழ்க்கையை ஆராய முற்பட்டாள்.
“உஷா ஏன் உன்னைப் பற்றி ஏதும் சொல்ல மாட்டேன் என்கிறாய்” சகுந்தலா கேட்டாள். உஷா சமைத்துக் கொண்டிருந்தாள். சப்பாத்தி செய்து மரக்கறியும் சமைப்பதாகச் சொன்னாள். வதக்கிய மரக்கறிகளின் மணம் மூக்கைத் துளைத்துப் பசியையுண்டாக்கியது. டிசைனிங் கொம்பனியில் வேலை செய்வதாக மீனா சொன்னாள். உஷாவைப்பற்றி சகுந்தலா கேட்டபோது.
தன் வாழ்க்கையைச் சீராக்கத் தெரியாமல் குழம்பிக் கொண்டு திரிகிறவளுக்கு உடுப்பு டிசைனிங்தான் சரி.
“ஏன் இலங்கைக்குப் போனாய். வெள்ளைக்காரனுடன் போனதும் சரி எங்களின் முகத்தில் முழிக்காதே என்று உன் தாய் தகப்பன் திட்டியதெல்லாம் என்ன நடந்தது” சகுந்தலா செருப்பைக் கழற்றி எறித்துவிட்டு சோபாவில் சாய்ந்து கொண்டு சினேகிதியைக் கேட்டாள்.
“செய்தவனுடன் உருப்படியாக இருக்கத் தெரியாது டிவோர்ஸ் செய்கிறாய், எங்களின் முகத்தில் விழிக்காதே என்று திட்டினார்கள் றொபினுடன் பிரிந்திருக்கும்போது. இப்போது எல்லாம் சரி. அண்ணாவை கந்தளாயில் சிங்களவர்கள் எரியும் நெருப்பில் உயிருடன் போட்டுக் கொலை செய்ததோடு அப்பா வாழக்கையின் தத்துவத்தை மாற்றிவிட்டார். வாழ்க்கையில் முடியுமானவரை சந்தோஷமாக இரு என்கிறார். மரணம் இன்றோ நாளையோ என்று தெரியாத மாய உலகம் என்று சுடுகாட்டு வேதாந்தம் கதைக்கிறார்.” தமையன் கொலை செய்யப்பட்டதை ஒரு உணர்ச்சியுமில்லாமல் சொல்கிறாளே. திடுக்கிட்டு எழும்பி உட்கார்ந்தாள் சகுந்தலா. “என்ன உன் அண்ணாவைக் கொலை செய்தார்களா?” சகுந்தலா திடுக்கிட்டுப் போய்க் கேட்டாள். உணர்ச்சியற்ற முகத்துடன் சினேகிதியைப் பார்த்தாள் உஷா. “என் தமயனைப் போல் நூற்றுக்கணக்கான ஆண்களை கொலை செய்து என் மச்சாளைப் போல் நூற்றுக்கணக்கான பெண்களைக் கற்பழித்தார்கள் சிங்கள வெறியர்கள். இலங்கையில் இன்றும் எங்கள் தலைவர் சத்தியாக்கிரகம் கதைக்கிறார்கள்”. உஷா மேஷையில் சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்தாள். சகுந்தலாவுக்குப் பசி மறந்து விட்டது.
“எங்கள் இனம் உயிரோடும், மானத்தோடும் சீவிப்பதாக இருந்தால் நாங்கள் ஏதும் செய்தாக வேண்டும். அதுவும் உடனடியாகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இன்னுமொரு வகுப்புக் கலவரத்தில் எத்தனை லட்சம் அழியுமோ தெரியாது” உஷா சப்பாத்தியைக் கோப்பையில் போட்டபடி சொன்னாள்.
”உமது தகப்பன் போன்ற ஆட்கள் வெறும் புகழுக்கும் பெயருக்கும் தலைமைப் பதவிக்கும் தமிழர் பிரச்சனையை உபயோகிக்கிறார்கள். அவர்களுக்குச் சுதந்திரக் கட்சி வந்தால் என்ன யூ.என்.பி. வந்தால் என்ன? ஒன்றும் அக்கறையில்லை”. உஷா வெறுப்புடன் சொன்னாள். இருள் பரவிக் கொண்டு வந்தது. உஷா எழும்பி ஜன்னல் சீலைகளைப் போட்டாள். “இவ்வளவு உணர்ச்சியுடன் கதைக்கிறாய், ஏன் கார்த்திகேயன் ஆட்களுடன் சேருவதற்கென்ன” சகுந்தலா கேட்டாள்.
“என்ன உமக்குக் கேலியா இதெல்லாம். நான் மட்டுமில்லை எத்தனையோ லட்சம் பெண்கள் சேரத்தான் போகிறார்கள். போராட்டம் வரத்தான் போகிறது. தமிழ் ஈழம் வராமற் போகலாம். ஆனால் நாங்களும் சிங்களவர்களும் சரி என்ற மனப்பான்மை நாங்கள் சாகமுதல் வரப்பண்ணத்தான் வேண்டும்”. உஷாவை வியப்புடன் பார்த்தாள் சகுந்தலா.
“தமிழ் ஈழமா? எங்கே ஆணையிறவுக்கு அப்பாலா” சகுந்தலா உண்மையாக வியப்புடன் கேட்டாள். “ஈழத்தின் எல்லை எங்கே என்பது இப்போது பிரச்சினையில்லை. ஈழத்துக்குப் போராடுவதுதான் பிரச்சினை, அந்தப் பிரச்சினைகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களை முறியடிப்பதுதான் பிரச்சினை”. உஷா சொல்ல சகுந்தலா கேட்டாள். “நீ இவர்களின் கூட்டத்துக்குப் போனாயா?”
“ஓம்; ஒன்று இரண்டு தரம். அதிகம் பெண்கள் வராதபடியால் போக ஒரு மாதிரி இருக்கிறது.” உஷா சாப்பிட்ட கோப்பைகளை எடுத்துக் கொண்டு சொன்னாள்.
“உஷா பெர்ஸனல் கேள்வி கேட்கலாமா” சகுந்தலா தயங்கிக் கொண்டு கேட்டாள்.
“ஏன் டிவோர்ஸ் பண்ணினேன் என்பதுதானே? றொபினுக்கும், எனக்கும் சரிவரவில்லை. சமாதான ரீதியில் பிரிந்து விட் டோம். நாய் பூனை சண்டை பிடித்துக்கொண்டு உலகத்துக்காக ஒன்றாய்ப் போலியாக வாழ விரும்பவில்லை. ஏன் சரி வரவில்லை என்றால், என்னைப் பொறுத்தளவில் கல்யாணம் என்பது ஒரு விலங்கல்ல. பெண்கள் ஆண்களின் அடிமையுமில்லை. சமையல், துவைத்தல், அரைத்தல் என்பனவற்றுடன் முடிவதா கல்யாணம்? றொபினைப் பொறுத்தவரையில் கல்யாணம் என்பது வேறு பொருள் – மலிவான செக்ஸ் லைஃப். இரண்டு பேரும் இரண்டு கோணங்கள்; எப்படிச் சரி வரும்?”
சகுந்தலா கேட்க நினைத்த பலதரப்பட்ட கேள்விகளுக்கு ஒரே யடியாகப் பதில் சொல்லிவிட்டுத் தன் வேலையில் ஈடுபட்டிருந்தாள் உஷா. சகுந்தலா சோபாவிற் படுத்தபடி தன் நிலையை யோசித்தாள். தன்னோடு சேர்ந்திருந்தவர்களின் வாழ்க்கையைத் தன்னுடையதுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். விபரிக்க முடியாத வேதனை பீறிட்டுக் கொண்டு வந்தது. ஏனோ தானோ என்று சீவிப்பவர்கள் என்று ஆசை தீர உஷாவையும் கார்த்திகேயனையும் திட்டியதை நினைத்தாள், அவர்கள் அப்படி வாழவில்லை. உண்மைகளையும் நேர்மைகளையும் நம்பி வாழ்கிறார்கள். அடுத்துக் கெடுக்காமல் அன்பை அடிமைப்படுத்திப் பாவிக்காமல்…
சகுந்தலாவால் மேற்கொண்டு சிந்திக்க முடியாமல் இருந்தது. கல்யாணம் முடித்த நாட்களில் கணவனின் அணைப்பின் சுகம் தெரியாமல் வெறும் சந்தேகத்துடன் தொடங்கிய கல்யாணச் சீவியம், அதை உலகத்துக்குத் தெரிய விடாமல் வாழ்க்கையில் தோல்வியை மறைத்துக்கொண்டு போலியாக வாழும் வெற்று வாழ்க்கையை யோசித்துப் பார்த்தாள். இவ்வளவு செய்தும் என்ன புண்ணியம். என் பார்வை மறைய இன்னொருத்தி யுடன் இருக்கிறார் என் கணவர் ஒரேயடியாக நினைத்துக் கொண்டிருக்கப் பைத்தியம் பிடிக்கும்போல் இருந்தது.
முன்னால் ஆல்பம் கிடந்தது. எடுத்துப் புரட்டினாள். உ உஷா லண்டனுக்கு வந்த நாட்களில் எடுத்த படங்கள். புரட்டிக் கொண்டே போனாள். கிறினிவிச் கட்டிஷாக் கப்பல்; அதன் தளத்தில் உஷா, சகுந்தலா, கார்த்தி. எவ்வளவு நெருக்கம். கார்த்தியின் முகத்தைப் பார் எப்போதும் போல் கவர்ச்சியும் குறும்பும். கள்ளமாக எடுத்தார்கள். தமயன் தியாகராசாவு டன் போனார்கள், சகுந்தலாவும், மீனாவும், உஷாவும். தேம்ஸ் பொலிரெக்னிக் பஸ் ஸ்ரொப்பில் நின்றிருந்தான் கார்த்திகேயன்.
பெரியப்பா பார்த்தாலும் என்று முணுமுணுத்தான் தியாக ராசா கார்த்தியைக் கண்டதும். “சொல்லடா உன்ர பெரியப் பாக்கு சீதனம் இல்லாமல் பெட்டை மாப்பிள்ளை பாக்குது என்று’ தியாகராஜா பயத்துடன் திட்டினான். “உனக்கு எப் போதும் பகிடியும் விளையாட்டும் தான்.”
ஆசை தீரப் படம் எடுத்தார்கள். இந்தப் படம் எல்லாம் கார்த்தியிடமும் இருக்கும் தானே? என்ன நினைத்துக் கொள்வான் பார்க்கும்போது. துரோகி ஏமாற்றிவிட்டு ஓடி விட்டாள் என்று நினைப்பானா?
வந்து இவ்வளவு நாட்களில் எத்தனையோ தரம் சந்தித்தாகி விட்டது. இதுவரையும் முழுதாக ஒன்றும் நடந்தவற்றைப் பற்றிக் கதைக்கவில்லை. கதைக்க விருப்பமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறான். ஏன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சக் கூடாது என்ற நினைப்பா? அல்லது என்னை ஏன் புண்படுத்த வேண்டும் என்ற நினைவா?
அப்படிப் பெருந்தன்மையான மனம் படைத்த கார்த்திகேயனி டம் எப்படிப் பழகுகிறேன்? கண்டதும் காணாததுமாகச் சண்டை பிடிக்கிறேன். உஷா சொல்வதுபோல் என்னையறி யாமல் இன்னும் கார்த்தியில் உரிமை கொண்டாடுகிறேனா? அமெரிக்காவுக்குப் போகமுதல் உஷாவைக் காண முடிய வில்லை. காண விரும்பவில்லை. கடந்த ஐந்து வருட சீவிய மும் இப்போது இந்த வைகாசிமாத மாலைவெயிலின் நிழலில் இருந்து சிந்திக்கும்போது கனவுபோல் இருக்கிறது. நித்திரை யாகியிருந்து விழித்ததுபோல் இருக்கிறது. லண்டனுக்கு வந்து ஒவ்வொருவரையும் காணவும் கதைக்கவும் தான் தன்னையே ஒடுக்கித் தன் திருமண சீவியம் ஒழுங்காக இருக்க எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் யாவும் தன் சினேகிதி யால் போலி வாழ்க்கையென சில நாட்களாகத் தூக்கியெறிப் பட்டதை யோசித்துப் பார்த்தாள்.
கோடானுகோடி வருடமாகப் பெண்கள் தங்களைத் தங்கள் இல்வாழ்க்கையின் நலத்துக்காகத் தியாகம் செய்கிறார்கள். இதனால் பெண் வர்க்கத்துக்கு என்ன நன்மை கிடைத்துவிட் டது? தங்களுக்கு நன்றாக இருக்கும்வரை போற்றுகிறார்கள் புழுகுகிறார்கள் எங்கள் ஆண்கள். அவர்கள் விதித்த சட்ட திட்டங்களை மீற யோசித்தால் ஆட்டக்காரியோ, அடங்காப் பிடாரியோ எனப் பட்டம் கொடுத்துவிடுகிறார்கள். இவை களை எதிர்த்து வாழ உஷாபோன்ற ஒன்றிரண்டு பெண் களாற்தான் முடியுமா? என் போன்றவர்கள் நிலை என்ன? என் போன்ற பெண்களின் சீவியத்தில் சந்தோஷம் என்பது வானத்துத் தாமரையா?
உஷா தன் குசினி வேலைகளை முடித்துக்கொண்டு சினேகிதி யிடம் வந்து உட்கார்ந்தாள். வயது போகப்போகத்தான் சில பெண்களுக்கு அழகு கூடுகிறதா? எப்போதும் உஷா கவர்ச்சியானவள். கவர்ச்சி என்பது உடுப்பில் இல்லை. அவளின் சுவையான பேச்சு. சுவாரசியமான தத்துவங்கள் எல்லாம் சேர்த்து உஷாவை வெகுவாக அழகாக்கிக் காட்டின.
கல்லூரி வாழ்க்கையின் முதல் வருடமே உஷாவின் பின்னால் வாலிபர் பட்டாளம் சுற்றியிருக்கலாம். கீழ்நாட்டின் எளிமை யான அலங்காரமும் அழகும்தான் இப்போது வெள்ளைக்கார வாலிபர்களுக்குப் பிடிக்கிறதோ. இல்லை என்றால் ஏன் மீனா. உஷா போன்ற பெண்களைத் திருமணம் செய்ய விழுந்தடித்துக்கொண்டு முன்வருகின்றார்கள்.
“என்ன சகுந்தலா ஆல்பத்தை வைத்துக்கொண்டு ஆகாய யாத்திரை போகின்றாயா?” உஷா சகுந்தலாவின் கையிலி ருந்த ஆல்பத்தை வாங்கி அவள் என்ன பார்த்துக் கொண்டி ருந்தாள் என்பதில் பார்வையை ஓட்டினாள். உஷா சந்தே கித்தது சரிதான்; எதிர்பார்த்த இடம்தான். கார்த்திகேயன் சகுந்தலா சேர்ந்திருந்து எடுத்த படம் ஈரம் பட்டிருந்தது. அழுதிருப்பாளா சகுந்தலா. இவ்வளவு வேதனையை மறைத்துக்கொண்டு எப்படி வாழ்கிறாள்.
“சகுந்தலா….” உஷா அன்புடன் அழைத்தாள் சினேகிதியை.
என்ன என்பதுபோல் சகுந்தலா திரும்பிப் பார்த்தாள் உஷாவை. என்ன என்று கேட்பது?
“சிவனேசனுடன் இப்படி நரக சீவியம் வாழ்த்தான் வேண்டுமா?” ஒருமாதிரி நேரடியாகக் கேட்டுவிட்டுச் சினேகிதியைப் பார்த்தாள் உஷா. சகுந்தலாவின் முகத்தில் வழக்கம்போல் ஒருசோக சிரிப்புத் தோன்றி மறைந்தது.
”எனக்கு விதியில் நம்பிக்கை இருக்கிறது உஷா” சகுந்தலா எழும்பி உட்கார்ந்தாள்.
“விழல் கதை கதையாதேயும். தமிழர்கள் இப்படி மூடத்தன மான கற்பனைகளில் வாழ்வதாற்தான் இப்படியிருக்கிறோம். னக்கு வாழ்க்கையுடன் போராடத் தெரியாமல் காட்டாற்று வெள்ளத்துடன் இழுபட்டோடும் வெறும் மரமாய் இருக் கிறாய். இருபத்தாறு வயதில் இப்படி தத்துவம் கதைக் கிறாய். இன்னும் எத்தனை வருடம் இப்படி வெற்று வாழ்வு வாழப் போகிறாய்” உஷா தன் வழக்கம்போன்ற தொனியில் கேட்டாள்.
“வாழ்க்கை என்பது நினைத்த நேரம் போகவும் நினைத்த நேரம் வரவும் என்று இலேசான சட்ட திட்டங்களுடன் அமைக்கப்பட்ட சத்திரமில்லை உஷா. சில விதிகள் அமைப்புகள் இருக்கின்றன. எனக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதி. அதைவிட்டு ஓடிப்போக என்னால் முடியாது. விலகிப்போய் இதைவிட மோசமான சீவியம் கிடைக்காது என்று என்ன நிச்சயம்”.
உஷா பொறுமையின்றித் தலையாட்டினாள். “கல்லில் போட்டுத் தலையையுடைப்பது போலத்தான் உன்னுடன் விவாதங்கள் செய்வது” என்று சொல்லிக்கொண்டு எழுந்தாள் உஷா.
“உஷா எப்போது அமெரிக்கா திரும்புகிறேனோ தெரியாது. மீனாவின் விடயம் சரிவந்தால் அடுத்தநாளே திரும்பிப்போ வேன். அதற்குமுதல் கார்த்திகேயனிடம் கொஞ்சம் கதைக்க வேண்டும். எப்படி எனக்குக் கல்யாணம் நடந்தது என்று சொல்லவேண்டும். இதுவரைக்கும் எனக்குப் பழைய வாழ்க் கையை யோசிக்கவே பயமாக இருந்தது. நினையாப்பிரகாரமாக கார்த்தியைத் திரும்புவும் கண்டதும் நடந்தவற்றிற்கு நான் கார்த்தியிடம் மன்னிப்புக்கேட்கவேண்டும் போல் இருக் கிறது.” சகுந்தலா உஷாவைப் பார்த்துக் கேட்கவில்லை.
“தேவையில்லாத பிரச்சினைகளைக் கிண்டாதே. கார்த்திக் தெரியும் உன் தகப்பன் எப்படியானவர் என்று. அத்தோடு நீ எவ்வளவு கோழை என்றும். நடந்தது நடந்து விட்டது. நான் உனக்குப் புத்திசொல்வதானால் சிவனேச னுக்கு விட்டுக் கொடுத்தது போதும். திரும்பிப்போய் உன் உரிமைகளுக்குச் சண்டைபிடி. குடிகாரனுடன் சீவிக்க உனக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்று சொல்.” உஷா படபடவென்று சொன்னாள்.
சகுந்தலா சிரித்தாள். “இப்படியெல்லாம் சொல்லிச் சண்டை பிடித்துச் சரிவராவிட்டால் உன்னைப்போல் விவாகரத்துச் செய்யவா?” சகுந்தலாவின் குரல் ஏளனமாக இருந்தது.
“சகுந்தலா விட்டுக் கொடுக்கும் வரைதான் விடுதலை பறி போகும்.”
சகுந்தலா பெருமூச்சுடன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். திடீரென்று உஷாவைப் பார்த்துச் சொன்னாள் “என்னில் அன்பில்லாமல் குடித்துக்கொண்டு திரிவதாகத் தானே இப்படி ஆத்திரப்படுகிறாய். அதுவுமில்லாமல் இன்னொரு பெண்ணுடன் இருக்கிறார் என்று சொன்னால் எப்படி இருப்பாய்.”
உஷா நம்பமுடியாமல் தவித்தாள். சகுந்தலா நிதானமாகச் சொன்னாள். தான் சிவனேசனுக்குப் போன் பண்ணியதை யும். யாரோ ஒரு பெண் பதில் சொன்னதையும், அந்த ஆத்திரத்தில் தான் வெளியில் மனம் வெடிக்கும் வேதனையில் போனபோது கார்த்தியைக் கண்டதையும் சொன்னாள்.
“சிலவேளை நான் நினைப்பதுண்டு உஷா, ஆழ்ந்த உணர்வின் அன்புக்கு ஒரு சக்தியுண்டென்று. லண்டனுக்கு வரும் வரை கார்த்தியைப் பற்றி நினைக்கவில்லை. இங்கு வந்ததும் பழைய ஞாபகங்கள் வந்தன. என்னால் தவிர்க்க முடியாமல் சுற்றிச் சுற்றிப் பழைய ஞாபகங்களே வருகின்றன. போதாக்குறைக்குக் கார்த்தியையும் கண்ட இடங்களிலெல்லாம் சந்திக்கிறேன். என்ன கதைகள் உண்டாகுமோ தெரியாது. எவ்வளவு கெதியாய் ஓட முடிகிறதோ அவ்வளவு கெதியாய் ஓட நினைக்கிறேன் .”
உஷா தன் சினேகிதியைப் பரிதாபமாகப் பார்த்தாள். லண்டனுக்கு வரமுதல் கார்த்தியைப் பற்றி நினைக்க வில்லையாம். உண்மையாகவா? அப்படியானால் கார்த்திக்குப் பிடித்தப் பெயரை ஏன் மகளுக்கு வைத்திருக்கிறாள். கீதாஞ்சலி என்று. கார்த்தியின் நினைவாகத்தானே? கேட்கலாமா? கேட்கிற கேள்விகளுக்கு சினேகிதி படுகிற பாடு போதும்.
”உஷா, கார்த்தி இலங்கையால் வந்தவுடன் எப்படி இருந்தார். என்னைப் பேசவில்லையா?” சகுந்தலா கேட்டாள் ஒருவித தயக்கத்துடன்.
எப்படியிருந்தான் கார்த்தி? தாய் இறந்த துக்கத்துடன் வந்திருந்தான். அதற்கு முதல் உஷாவின் வீட்டுக்கு சகுந்தலாவின் பெயரில் கடிதம் எழுதியிருந்தான் தாயின் சுக வீனம் பற்றி. என்ன கடிதம் என்று தெரியாது. உஷா சகுந்தலாவின் வீட்டிற்குப் போவதில்லை. போன் பண்ணிப் பார்த்தாள். சகுந்தலாவின் தாய் சொன்னாள் சகுந்தலா வுக்குச் சுகமில்லை என்று. “என்ன சுகமில்லை நான் வந்து பார்க்கலாமா?” தயக்கம்தான் ஆனால் கேட்டாள் உஷா. ” நீ வரத் தேவையில்லை. சும்மா தலையிடியும் காய்ச்சலும் தான்.’ தாய் அப்படித்தான் சொன்னாள். ஒன்றிரண்டு நாள் கழித்து இன்னொருதரம் போன் பண்ணினாள். கிட்டத் தட்ட அதே பதில். என்ன நடந்தது சகுந்தலாவுக்கு? போனில் கதைக்கக்கூட முடியாமல் இருக்கிறது. உஷா என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள். ஒரு சனிக் கிழமை பின்னேரம் சோர்ந்த முகத்துடன் வந்து சேர்ந்தான் சகுந்தலாவின் ஒன்றைவிட்ட தமையன் தியாகராஜா.
ஏன் இப்படி இருக்கிறீர்கள்? உஷா கேட்டாள். எப்படியிருக் கிறேன்? தங்கச்சிக்குத் திருமணம் சந்தோஷமாக இல்லையா? எரிச்சலுடன் கேட்டான் தியாகராஜா. யார் தங்கச்சி? உஷா விளங்காமல் கேட்டாள். தியாகராஜா தன் சினேகிதனின் காதலியான தன் ஒன்றைவிட்ட தங்கச்சி சகுந்தலாவின் திடீர்த் திருமணத்தைப் பற்றிச் சொன்னான். உஷாவுக்கு இரத்த ஓட்டமே நின்றதுபோல் இருந்தது. கார்த்தியின் கடிதத்தை உடைத்தார்கள். இனிச் சகுந்தலாவுக்குக் கிடைக்கத் தேவையில்லாத கடிதம் அது என்ற நினைவுடன். அம்மா இறந்துவிட்டா. ஒன்றிரண்டு கிழமையில் வருகின் றேன். நான் சொன்னதைப்பற்றி யோசித்து வைக்கவும். நாங்கள் முடிவு கட்டியபடி திருமணப் பதிவை கெதியில் வைப்போம். உமது தாய் தகப்பன் உம்மை ஒன்றும் செய்ய முடியாது. உமக்குச் சட்டப்படி கலியாணம் செய்ய உரிமை யுண்டு. வயது 21ல் தாய் தகப்பன் அனுமதியின்றிச் செய்ய லாம்.-கார்த்தி”
தியாகராஜாளின் கண்களில் நீர் கட்டியது. சினேகிதனின் கடிதத்தைப் பார்த்ததும். ஒன்றிரண்டு கிழமை முடிய கார்த்தி வந்தான் உஷாவின் வீட்டுக்கு. வாழ்க்கையில் கார்த்தியின் சோர்ந்த வேதனையான முகத்தை அன்றுதான் உஷா முதலும் கடைசியுமாகக் கண்டாள். அவன் சகுந்தலாவைப் பற்றி நேரடியாக ஒன்றும் உஷாவைக் கேட்கவில்லை. தியாகராஜா சொல்லியிருக்கலாம் எப்படி நடந்தது என்று.
“சகுந்தலாவில் பிழையில்லை. இது அவளின் தகப்பனாரின் கோரமான விளையாட்டு. சாத்திரத்தையும் தோத்திரத்தை ம் பயன்படுத்தி அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறார்கள். சகுந்தலாவைப் பிழை சொல்லி என்ன பிரயோசனம்? பெண்கள் தங்கள் உரிமைகளையுணர்ந்து போராடாதவரை இப்படியான சோகக் கதைகள் தொடரத் தாள் போகிறது?’
கார்த்தி அதன்பின் அதிகம் உஷாவுடன் தொடர்பு வைத்த தில்லை. தியாகராஜா வெளிநாடு போய்விட்டான். கார்த்தி லண்டன்வாழ் மாணவர்கள் இயக்கங்களுடன் சேர்ந்து உழைக்கிறான். உஷா தன் கல்யாணம் குழம்பிப்போய் இருக்கிறாள். இதற்கிடையில் அவலமான கல்யாணச் சீவிய மும், அழகிய குழந்தையுமாகச் சகுந்தலா வந்து நிற்கிறான் தங்கையின் கல்யாணத்தைக் ‘குழப்ப.’
உஷா இவ்வளவும் சொல்லிமுடிய சகுந்தலா சொன்னாள். “எப்பாடு பட்டும் மீனா தன் விருப்பப்படி கல்யாணம் செய்வ தற்கு உதவி செய்யப்போகிறேன். எனக்கு நடந்த கெதி அவளுக்கும் நடக்கவேண்டாம்.” சகுந்தலாவின் உறுதி உஷாவுக்குச் சந்தோஷத்தையுண்டாக்கியது. நீண்டநேரம் பழைய கதைகளையே கதைத்துக்கொண்டிருந்தார்கள். இனி எப்போது காணப்போகின்றோம் என்ற நம்பிக்கையின்மை இருவரையும் மனம்விட்டுத் தங்கள் கதைகளை அலசப் பண்ணிக்கொண்டிருந்தது. இரவு ஒருமணிக்குமேல் இருக் கும் இருவரும் படுக்கப்போக யோசிக்கும்போது. நித்திரையே வரவில்லை.
”எப்படி என்றாலும் நேரடியாக கார்த்தியுடன் பழைய கதை களை மனம்விட்டுக் கதைக்க முடியாமல் இருக்கிறது.” என்றாள் சோர்ந்த கண்களுடன் இருக்கும் உஷாவைப் பார்த்து.
“முகத்தைப் பார்த்துக் கதைக்கப் பயமென்றால் போன் பண்ணி கதையேன்”. உஷா தூக்கக் கலக்கத்தில் சொல்லி விட்டுத் தூங்கிப் போனாள்.
சகுந்தலா யோசித்துக்கொண்டேயிருந்தாள். பைத்தியக்காரத்தனமா இப்போது போன் பண்ண யோசிப்பது. மாணவர் கூட்டம் முடிய இப்போதுதான் ரூட்டிங் போய்ச் சேர்ந்திருக்கலாம். ஏதோ குருட்டுத் துணிவில் போனை எடுத்து நம்பரைச் சுழட்டினாள். கார்த்தியில்லாவிட்டால் சிதம்பரநாதன் எடுப்பான். அவன் ஒன்றும் தப்பாக நினைக்க ‘மாட்டான். எடுத்தது சிதம்பரநாதன் இல்லை. சில்வியா. சகுந்தலா எதிர்பார்க்கவில்லை சில்வியாவின் குரலை. கார்த்திகேயன் வீட்டில் இல்லையாம். ஏதும் சொல்ல இருந் தால் சொல்லட்டாம் சில்வியா கேட்கிறாள்.
நடு இரவின் மெல்லிய குளிர்காற்று ஜன்னலால் வந்து சகுந்தலாவின் முகத்தில் பட்டும் ஏனோ சகுந்தலாவின் முகம் ‘எரிந்தது, திடீரென்று எதிர்பாராமல் சில்வியாவின் குரலைக் கேட்டு. அப்படி ஒன்றும் அவசரமில்லை என்று போனை வைத்தாள் சகுந்தலா.
என்ன விசர் வேலை? என்ன நினைப்பாள் சில்வியா? தான் இல்லாத நேரமெல்லாம் கார்த்தி என்னுடன் இருந்ததாக நினைப்பாளா? அவள் அப்படி நினைக்கப் போகிறாள் என்று ‘நான் ஏன் நினைக்கவேண்டும்? ஆயிரக்கணக்கான யோசனை கள் முட்டிமோதி சகுந்தலாவின் நித்திரையைக் குழப்பியது. நித்திரையற்ற இரவாக அன்றிரவு முடிந்தது.
சில்வியாவுக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. நடு இரவில் சகுந்தலா போன் பண்ணியதும் அவசரமாக ஒன்றுமில்லை என்றதும்.
என்ன நினைக்கிறாள் இந்தப் பெண். இன்னும் கார்த்தி தன் உடமை என்றா நினைக்கிறாள். கார்த்தியிலும் கோபம் வந்தது. சிதம்பரநாதன் சொன்னான் பின்னேரம் சகுந்தலா வுடன் கார்த்தி போனதாய். மாணவர் கூட்டம் என்று சாட்டுவிட்டுக் கொண்டு பழைய காதலியுடன் லண்டன் சுற்றிப் பார்க்கின்றாரோ?
ஏன் முட்டாள் தனமாக யோசிக்கிறேன். சில்வியா தன்னைத் தாளே கேட்டுக்கொண்டாள். என்ன இருந்தாலும் நான் என்ன கல்யாணம் முடித்த பெண்சாதியா அதட்டிக் கேட்க? கல்யாணம் ஏன் முடிக்கக் கூடாது? இப்படித் தேவையில்லா மல் எந்தப் பெண்ணும் போன் பண்ணினால் தாறுமாறாகப் பேசவாவது ஒரு தகுதி வேண்டாமா? எப்படித்தான் முற் போக்குக் கொள்கைகள் நிறைந்திருந்தாலும் பெண்கள் பெண்கள்தான். பொறாமை பொறாமைதான்.
களைத்து விழுந்து வந்திருந்தான் கார்த்தி. பேரின்ப நாயகத்தார் தங்களில் வீண் பழி போட்டு அப்பாவி மாணவர் களின் பெயரைப் போலீசில் கொடுக்கத் தயங்கமாட்டார் என்பது அவனுக்குத் தெரியும். இலங்கையில் நடக்கும் சில தனிப்பட்ட அசம்பாவித சம்பவங்களில் லண்டன் மாணவர் களையும் சம்பந்தப்படுத்திப் போலீசில் ஒருதரம் புகார் கொடுத்தவர் பேரின்பநாயகத்தார். தங்கள் தலைமைப் பதவிக்கு ஏதும் அபாயம் வந்தால் அடுத்தவரைக் கெடுத்தும் தங்கள் பதவியைக் காப்பாற்றத் தயங்காதவர் பேரின்ப நாயகத்தார். எத்தனையோ கஷ்டங்களுக்கிடையில் இவ் விடம் படிக்கவந்த தமிழ் மாணவர்களை இப்படிச் சில குள்ள நரிகள் கொடுமை செய்வதை அவனால் தாங்க முடியாதிருந்தது.
இப்படியான யோசனைகளுடன் வந்தவன் சில்வியாவின் நீண்ட முகத்தைக் கண்டதும் சோர்ந்து போனான்.
“நான் எந்தச் சண்டைக்கும் தயாரில்லை. வெள்ளைக் கொடி காட்டுகிறேன். சரணமடைகிறேன்”. வழக்கம் போன்ற குறும்பு வார்த்தைகள் வெளிவந்தன கார்த்திகேயன் வாயால்.
“நாங்கள் எப்போது கல்யாணம் செய்யப்போகிறோம்” அதிகார தோரணையாகக் கேட்டாள் சில்வியா.
“உமக்குப் பிள்ளை வயிற்றிலா? ஏன் நடுச்சாமத்தில் வெருட்டுகிறீர்?”
“கார்த்திகேயன் உமக்குப் பகிடிதானா வாழ்க்கை எல்லாம். விளையாட்டு வேண்டாம். நான் கொஞ்ச நாட்களாக யோசித்து வருகிறேன்.” சில்வியா கோபத்துடன் சொன்னாள்.
“நீர் யோசித்தால் நான் கல்யாணம் செய்வதென்று சட்டமா?” இப்போது குறும்பில்லை. நிச்சயம் குறுக்கு விசாரணை.
“உங்களுக்குப் பகிடிதான். உங்கள் பகிடிகளுக்கு பல் இளித்த காலம் போய் விட்டது. என்னை இங்கு சாட்டுக்கு வைத்துக் கொண்டு எத்தனை பேருடன் திரிந்துவிட்டு வருகிறீர்கள்.” அவளின் வெருட்டல் அவனுக்கு எரிச்சல் தந்தது.
“இப்பவே இப்படி வெருட்டிப் பார்த்தால் கல்யாணம் முடிய என்ன நடக்கும்” அவன் எரிந்து விழுந்தான். அவள் முகம் கறுத்தது. கண்கள் கலங்கின. படபடவென்று எழுந்தாள். பெட்டி எடுக்கப்பட்டு உடுப்புகள் போடப்பட்டன. பத்திர காளியாகத் தெரிந்தாள் சில்வியா.
“சில்வியா விளையாட்டுத்தனமாக இராதே. என்ன நடந்தது என்று சொல்”. அவன் அவளை இறுக அணைத்துக் கொண்டு கேட்டான். அவளின் கோபம் முகத்தில் வெடித்தது.
“என்னை ஏன் அணைக்கிறீர்கள்? போய் உங்கள் சகுந்தலாவை அணையுங்கள். இப்போது கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் போன் பண்ணினாள். வார்த்தைகள் அக்கினிகளாகப் பறந்தன. என்ன சொல்கிறாள் இவள். ஏன் சகுந்தலா இந்த நேரத்தில் போன் பண்ணினாள்.
ஏன் இந்தப் பெண்கள் என்னை இந்தப் பாடு படுத்துகிறார்கள்? அவன் யோசிப்பதற்கிடையில் அவள் தடதடவென்று படியிறங்கினாள்.
இவர்கள் போடும் சத்தத்தில் சலீமும், சிதம்பரநாதனும் தங்கள் அறையால் எட்டிப் பார்த்தார்கள்.
“சில்வியா தயவுசெய்து திரும்பி வா.” கார்த்திகேயன் கெஞ்சினான். நடுச்சாமம் எங்கே ஓடுகிறாள் இந்தப் பெண்.
வெளியில் கார்க்கதவு ஆத்திரத்துடன் சாத்தப்படும் சத்தம் கேட்டது. தோல்வி மனப்பான்மையுடன் திரும்பினான் கார்த்திகேயன். மாடிப்படிகளில் சிதம்பரநாதனும், சலீமும் நின்றுகொண்டிருந்தார்கள்.
”எப்படி நாடகம்? இன்ரஸ்ரிங்காக இருந்ததா?” எரிச்சலுடன் கேட்டான் கார்த்திகேயன். அவர்கள் மறுமொழி சொல்லாமல் தங்கள் அறைக்குள் போய்விட்டார்கள்.
ஜன்னலால் எட்டிப்பார்த்தான். கார் இல்லை. அவள் போய்விட்டாள். ஒரேயடியாகப் போய்விட்டாளா? அவனுக்கு முதற்தரமாகச் சகுந்தலாவில் எரிச்சல் வந்தது.
– தொடரும்…
– உலகமெல்லாம் வியாபாரிகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1991, நீலமலர், சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |