உலகமெல்லாம் வியாபாரிகள்





(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம்-5

திடீரென்று கல்யாணம் நிச்சயமாகி, கல்யாணம் நடந்து, அமெரிக்கா போய் ஐந்து வருடங்களாக நடக்காத நிகழ்ச்சிகள் எல்லாம் லண்டனுக்கு வந்து இரண்டு கிழமைக்கிடையில் நடப் பதாகப் பட்டது சகுந்தலாவுக்கு. உலகத்தின் ஒருகோடிக்கு ஓடிவிட்டால் எல்லாம் நடக்காமல் விடுமா?
உஷா பெரிய குடும்பத்துப் பெண் கொழும்பில். தமயன் லண் டனில் படித்துக் கொண்டிருந்தான். மகளைப் பிடித்து அனுப் பியிருந்தார்கள் படிக்க. பேரின்பநாயகத்தாரின் சினேகித ருக்குத் தெரிந்த குடும்பம் உஷாவினுடையது. குமர்ப்பிள் ளையை அனுப்பியிருக்கிறோம். புண்ணியமாக இருக்கும் உங்களுக்கு; அவளில் ஒருகண் வைத்திருங்கோ என்று பேரின்ப நாயகம் தம்பதிகளை கேட்டுக்கொண்டார்கள் உஷாவின் பெற்றோர். வந்து கொஞ்ச நாட்கள் ஒரு கரைச்சலும் கொடுக்கவில்லை உஷா.
தமயன் படிப்பு முடிய கனடாவுக்குப் போய்விட்டான். வார விடுமுறையில் பேரின்பநாயகம் வீட்டுக்கு வருவாள். காலம் போகப் போக உஷாவின் வருகை குறைந்தது. சகுந்தலா வுக்குத் தெரியும் ஏன் என்ற காரணம். ஒருநாள் வந்து சொன்னாள் தான் றொபின் என்னும் வெள்ளைக்காரனைச் செய்யப் போவதாக.
பேரின்பநாயகத்தார் உஷாவின் தாய்தகப்பனுக்குத் தந்தி அடித்தார். தமயனுடன் டெலிபோனில் கதைத்தார். ஆனால் உஷா யாருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டாள்.
சகுந்தலா உஷாவுடன் கதைக்கக் கூடாது என்று தடை விதிக் கப்பட்டது. சகுந்தலாவைப்பொறுத்தவரையில் எல்லாம் பேச் சளவில்தான். மறைமுகமாகச் சினேகிதியைச் சந்தித்தாள்.
உஷாவின் உதவியாற்தான் கார்த்தியுடன் கதைக்கமுடிந்தது. தாய் தகப்பனுக்குத் தெரிந்ததோ இல்லையோ சகுந்தலா கள்ளமாகக் கார்த்திகேயனுடன் கதைப்பதை அவர்களாற் தடுக்க முடியவில்லை. உஷாவைப் பற்றி, வாய் போனபடி திட்டினாள் பார்வதி. பெண்கள் பெண்களாக அடக்கமாக
இருக்காமல் என்ன ஆட்டம் இவர்களுக்கு. பிடித்தவள் பிடித்தாள் ஒரு இலங்கைப் பெடியனைப் பிடிக்கக்கூடாதோ என்று பார்வதி சீறிக்கொண்டிருந்தாள்…
“மானம் மரியாதையில்லாமல் இங்கிலிஸ்காரனுடன் பழகும் உஷாவுடன் உனக்கு ஒரு கதையும் தேவையில்லை” என்று சகுந்தலாவை வெருட்டி வைத்துவிட்டாள். இலங்கையாட்கள் தன்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப்பற்றி ஒன்றும் கவலையில்லை என்றாள் உஷா.
“எங்கள் சமூகத்தைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒருநீதி. எத்தனை இலங்கைப் பெடியன் கள் வெள்ளைக்காரப் பெட்டைகளுடன் திரியவில்லை. திரிவது மட்டுமா? கற்பவதிகளாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டு காசுக்காக இலங்கையில் போய்க் கல்யாணம் செய்கிறார்கள். அதெல் லாம் ஒன்றுமில்லை ஆண்களைப் பொறுத்தவரையில். நான் எனக்குப் பிடித்தவனுடன் திரிந்தேன் கேவலமாகச் சொல் கிறார்கள். பிடித்தவனைக் கல்யாணம் செய்துவிட்டேன். என் முடிவு இது. என்ன நடந்தாலும் நான் விதியிற் பழியைப் போடவில்லை. என் பிழை என்றுதான் சொல்வேன்.
சினேகிதிகள் கொஞ்சநேரம் ஒன்றும் பேசவில்லை. “உன்னைப் போல் மீனாவையும் வெள்ளைத்தோல் தேடச் சொன்னாயா? என்று கேட்க நினைத்தேன்” என்றாள் சகுந்தலா.
உஷாவின் நீண்ட கண்களில் ஒரு குறும்புச் சிரிப்புத் தோன்றி மறைந்தது. “உன்னைப்போல் நல்ல பிள்ளைகளாக எங் களால் இருக்க முடியவில்லை” என்றாள் உஷா. “நல்ல பிள்ளை” என்று சொல்லும்போது உஷாவின் தொனியில் ஒரு அழுத்தம் தெரிந்தது. சகுந்தலாவுக்கு விளங்கவில்லை அவள் குரலில் கிண்டல் தொனிக்கிறது என்று. அப்படி விளங்கினா லும் என்ன விதத்தில் தன் சினேகிதி தன்னைக் கிண்டல் அடிக்கிறாள் என்று தெரியாமல் தவித்திருப்பாள். கார்த் தியை ஏமாற்றிவிட்டு உன்னால் எப்படிச் செய்யமுடிந்தது என்று உஷா கேட்காமல் விடப்போவதில்லை என்று தெரியும். அதே நேரத்தில் பெண்கள் உரிமைகளில் நம்பிக்கை கொண்ட உஷா சகுந்தலாவிடம் கேட்டாலும் ஆச்சரியமில்லை ‘உனக் கென்ன தகுதி இருக்கிறது மீனாவுக்குப் புத்திசொல்ல என்று.
“அமெரிக்காவின் நல்லுபதேசம் ஒன்றும் உமது தங்கைக்கு போதிக்கவில்லையா. உஷா கேட்டாள். சகுந்தலாவுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. தனக்குத் தெரிந்த எல்லோருக்கும் மீனா என்ன சொல்லிவைத்திருக்கிறாள் என்று தெரிந்த போது.
மீனாவைப் பிழைசொல்லிப் பிரயோசனம் என்ன. வீட்டில் இத்தனை எதிர்ப்பு இருக்கும்போது தனக்குத் தெரிந்தவர்களி டம் சொல்லியாவது உதவி கேட்டிருப்பாள். அவளுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் தனக்கும் தெரிந்தவர்களாக இருப் பதுதான் பிரச்சனை என்று தோன்றியது சகுந்தலாவுக்கு. லண்டனில் கிட்டத்தட்ட எல்லோரும் மாறிவிட்டார்கள். கார்த் திகேயன் சடங்குகளில் நம்பிக்கையில்லாமல் சில்வியாவுடன் ஒன்றாய்ச் சீவிக்கிறான். ஏன் வெறும் பேப்பரில் கையெழுத் துப் போடவேண்டும்? எங்களுக்கு ஒன்றாக இருக்க விருப்பம். ஒன்றாய் இருக்கிறோம் என்கிறான். இவர்களுக்கு என்ன வென்று உலகம் தெரிகிறது?
விடிந்தால் பொழுதுபடும்வரை அம்மா முருகனையும் பிள்ளை யாரையும் துணைக்குக் கூப்பிட்டுப் பிரார்த்திக்கிறாள். அந் தச் சூழ்நிலையில் வளர்ந்த மீனா எதிர்மாறான சூழலில் வாழப்போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். உலகத்தில் யார் வெறுத்தாலும் சரி காதலித்தவனையே கல்யாணம் செய் வேன் என்று செய்த உஷா எவ்வளவு நிதானமாகச் சொல் கிறாள் விவாக ரத்துச் செய்துவிட்டேன் என்று. தான் மாற வில்லை. தன்னைச் சுற்றியவர்கள் எப்படி மாறியிருக்கிறார் கள் என்பது இவ்வளவு நாளும் தெரியாமல் இருந்தது அவ ளுக்கு. குழந்தை கீதாஞ்சலி சிறுவர் நிகழ்ச்சியில் “ரொப் கற்’ பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள். மீனா தன் வீடுபோல் உஷாவின் குசினிக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
உஷாவின் முகத்தில் நிதானம்.
“ஏன் றொபினை விவாகரத்துச் செய்தாய்” திடீரென்று கேட்டாள் சகுந்தலா.
உஷா சினேகிதியை மேலும் கீழும் பார்த்தாள். “சகுந்தலா ஒரே வசனத்தில் மறுமொழியை எதிர்பார்க்கிறாயா அல்லது விளக்கமாக எதிர்பார்க்கிறாயா என்று முதலில் விளங்கப் படுத்து உஷாவுக்கு எப்படி இவ்வளவு நிதானமாகப் பதில் சொல்லத் தெரிகிறது. இருபத்தெட்டு வயதில் வாழ்விழந்து போயிருக்கிறாள். கட்டான இளமை அப்படியே இருக்கிறது. கயல்விழிகள் காந்தம்போல் பாய்கிறது. இவள் ஏன் இப்படித் தன் வாழ்க்கையை அநியாயம் பண்ணிவிட்டு இருக்கிறாள். இலங்கையாட்கள் எப்படி இவளை மதிக்கப்போகிறார்கள். சகுந்தலா குழப்பத்துடன் சினேகிதியைப் பார்த்தாள்.
“அப்படி என்னைப் பார்க்காதே. என்னில் பரிதாபப் படுவ தாகப் பாசாங்கு பண்ணாதே. உனக்குத் தெரியும் எனக்கு யாரின் பரிதாபமும் தேவையில்லை என்று” உஷா சொன் னாள்.
என்ன மண்டைக்கனம். விழுந்தும் மீசையில் மண்படாத வீரத் தனம். மீசை எங்கே இருக்கிறது உஷாவுக்கு. “நீர் வரும் பியோ விரும்பாமலோ உலகம் உன்னில் பரிதாபப்படத்தான் போகிறது. சகுந்தலா சொன்னாள்.
“ஐ. சீ, உமக்கு உலகத்தைப் பற்றிக் கனக்கத் தெரியும். அதுதான் ஐந்துவருடம் ஒழிந்திருந்து தவம் செய்தீரோ, உபதேசத்துக்கு வெளிக்கிட”
உஷா உன்னால் எப்படி இப்படிக் கதைக்க முடியுகிறது. நீ மட்டுமல்ல எல்லோரும்தான் என்னைத் தூக்கி எறிந்து கதைக்கிறீர்கள். சகுந்தலா வாய்விட்டுச் சொல்லாமல் மனதுக்குள் பொறுமினாள்.
குழந்தை கீதாஞ்சலி தாயிடம் ஓடிவந்து ஏதோ சொன்னாள். சகுந்தலாவும் இளமையில் கீதாஞ்சலிபோல் இருந்திருக்க லாம். தாய்க்கும். மகளுக்கும் அதே அச்சுவார்த்த முகம். அதே குழிவிழும் கன்னங்கள்.
“சகுந்தலா குழந்தைக்கு என் கீதாஞ்சலி என்று பெயர் வைத் தாய்” உஷாவுக்கும், சகுந்தலாவுக்கும், கார்த்திக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் அது. பேரின்பநாயகத்தார் கடைசிவரைக்கும் சகுந்தலாவை கார்த்திகேயனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். கார்த்திகேயன் சோதனை பெயில் ஒருவருடம். இலங்கையிலிருந்து காசும் வரவில்லை.
கஷ்டப்பட்டு வேலை செய்துகொண்டிருந்தான். படிக்கிற தென்று சாட்டுவிட்டு வந்து இங்கு கோப்பை கழுவும் கார்த்தி கேயன் தரவளிக்கோ பெண் கொடுப்பேன்’ என்று கர்ச்சித் தார் பேரின்பநாயகத்தார்.
உமது தகப்பன் உம்மை ஒன்றும் செய்யமுடியாது. உமக்கு இருபத்தொரு வயதுக்குமேல் சட்டப்படி நாங்கள் கல்யாணம் செய்யலாம்” என்றான் கார்த்தி சகுந்தலாவுக்கு.
“கள்ளமாகக் கல்யாணம் செய்துகொண்டு ஓடப்போகிறீர்கள். உலகத்தில் எந்த மூலைக்கு ஓடி ஒழிப்பீர்களோ தெரியாது. என்னையும் சில வேளை நினைப்பீர்களா உஷா விளையாட்டாகக் கேட்டாள்.
“நிச்சயமாக உஷா. உம்மைப்போல் அழகான பெட்டை பிறந்தால் உமது பெயரையே வைப்போம்” கார்த்திகேயன் விளையாட்டாகச் சொன்னான்.
“ஐயையோ என்ர பெயர் வேண்டாம். உதவாத பேர். ஏதும் நல்ல இலக்கியத்தில் உள்ள பெயராய்…” என்று தொடங்கிக் கடைசியாக ரவீந்திரநாததாகூரின் கீதாஞ்சாலியில் வந்து நின்றது. கீதாஞ்சலி!
குழந்தை பிறந்தபோது சிவநேசன் தாய் தகப்பனுக்கு எழுதி னான் சாத்திரம் பார்க்கச் சொல்லி. அவர்கள் க, கா, கி, கீ வரிசையில் பெயர் வைப்பது சாத்திரத்தின்படி நல்லது என்று எழுதியிருந்தார்கள். காஞ்சனா, கற்பனா, காந்திமதி, சிவநேசன் சொன்னான். ‘கீதாஞ்சலி’ என்று வைப்போம். சகுந்தலா கேட்டாள் கணவனை. மனத்திரையில் கார்த்திகேயனும் உஷாவும் அவர்களின் சம்பாஷணையும் ஞாபகம் வந்தன.
“கீதாஞ்சலி நீண்டு போச்சு வெள்ளைக்காரருக்கு, ‘கீதா’ என்று கூப்பிடுவம்” என்றான் சிவநேசன். ஆனால் சகுந்தலா எப்போதும் கீதாஞ்சலி என்றுதான் கூப்பிடுகிறாள். மனதின் ஒரு இருண்ட மூலையில் கார்த்திகேயனின் முகம் ஞாபகம் வருவதுண்டு.
“ஏன் கேட்கிறாய் உஷா. இன்னும் நான் கார்த்தியை நினைத்துக்கொண்டு இருப்பதாக இருக்கிறாயா”சகுந்தலா நேரடியாகக் கேட்டாள் சினேகிதியை.
உஷா சகுந்தலாவின் நேரடிக் கேள்வியால் நிலைகுலைந்து விட்டாள் ஒருகணம். “அப்படியில்லை. நீ பழைய ஞாபகங் களை ஒரேயடியாக அழித்து விட்டாய் என்று நினைத்தேன்’ உஷாவின் முகம் உணர்ச்சியற்று விழிக்கும் சினேகிதியின் பார்வையைத் தாங்காது திரும்பியது.
“சில நினைவுகளும் சில மனிதர்களும் இறக்கும்வரை எங்கள் மனதிலிருந்து மறையும் என்று நான் நம்பவில்லை. மறந்த தாக, மறப்பதாக நாங்கள் எங்களை ஏமாற்றிக்கொள்கி றோம். சகுந்தலா சொல்லிக் கொண்டிருக்கும்போது மீனா வந்தாள்… “என்ன இருவரும் இறந்தகாலத்தைப் பற்றி வர்ணிக்கிறீர்களா?” மீனா சிரித்துக்கொண்டே கேட்டாள். இறந்தகாலத்தின் அதிர்ச்சியின் பிரதிபிம்பங்கள்தான் நிகழ் காலமும் எதிர்காலமும் என்றாகிவிடும்போது இறந்தகாலம் ஒன்று தனியாக இல்லை என்று நினைக்கிறேன்”சகுந்தலா குழந்தையை அணைத்துக் கொண்டு எழும்பினாள். உஷா வும், மீனாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“சகுந்தலா அமெரிக்கா திரும்பமுதல் கட்டாயம் ஒருதரம் வா உஷா கெஞ்சிய குரலில் கேட்டாள். “கட்டாயம் உஷா. உமது கல்யாண புராணத்தைக் கேட்கும்வரை எனக்கு நித்திரை வராது”. சிரித்துக்கொண்டு சொன்னாள் சகுந்தலா.
கார் விம்பிள்டன் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. வாழ்க்கை எவ்வளவு விசித்திரம். வாழ்ந்து காட்டுகிறேன் என்று உலகத்துக்குச் சாவல்விட்ட உஷா வாழ்விழந்து போய் நிற்கிறாள். காதலில்லையேல் சாதல் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட சகுந்தலா…?
சிவனேசன் ஏன் இன்னும் போன் பண்ணவில்லை. நான்தான் போன்பண்ணினேன் என்றுதெரியுமா? தெரிந்தால் ஓராயிரம் பொய் சொல்லித் தன்னைச் சமாதனம் செய்ய போன்பண்ணி யிருப்பான் சிவனேசன்.
கார்த்திகேயன் சொன்னது ஞாபகம் வந்தது அவளுக்கு. நான் ஏன் அழுகிறேன் என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை” என்றாள் சகுந்தலா.
“மற்றவர்கள் சொன்னாற்தவிர மற்றப்படி தேவையில்லாமல் ஏன் மற்றவர்களின் வாழ்க்கையில் வீணாகத் தலையிட வேண்டும்’ என்றான்.
அவளுக்கு ஆத்திரம் வந்தது. நான் ஏன் உங்களுக்கு மற்றவர் களாகிவிட்டேன் என்று கேட்க நா துடித்தது. “என் கணவர் இன்னொரு பெண்ணுடன் இருக்கிறார்” என்று சகுந்தலா சொன்னபோது அதிர்ச்சியில் அவன் முகம் இருண்டது ஒரு கணம்.
“என்ன ஒரு தலைப்பட்சமான முடிவு. இந்த நேரத்தில் என்ன வேலை யாரோ ஒருத்திக்கு என் வீட்டில்” சகுந்தலா பொரிந்து தள்ளினாள்.
“லேட் நைட் பார்ட்டியாக இருக்கும். சில்வியாவும் நானும் எத்தனையோ தரம் காலை ஆறுமணிக்கு பார்ட்டி முடிந்து வந்திருக்கிறோம்” அவன் தர்க்கரீதியாகச் சொன்னான். உண்மையாக அப்படித்தான் இருக்குமோ? தான் அவசரமான முடிவில் விசரிபோல் ரோட்டில் அலைந்து….அவனின் வாதத்தை அவளால் ஒரேயடியாக ஏற்கவும் முடியாதிருந்தது.
“நான் இருக்கும் வரையும் இல்லாத பார்ட்டியும் கூத்தும் நான் இல்லாதபோது நடக்கிறதென்றால் அதன் அர்த்தம் என்ன” அவள் கடு கடு என்று பொரிந்தாள்
‘”சகுந்தலா நான் சிவனேசன் இல்லை. என்னிடம் கத்திப் பிர யோசனம் இல்லை. உம்முடைய வீட்டில் பார்ட்டி நடக்காமல் இருக்கலாம். வேறு எங்கேயோ பார்ட்டிக்குப் போய்விட்டு போகிற வழியில் கொஞ்சநேரம் வீட்டுக்கு வந்து போகும் சினேகிதர்களாக இருக்கலாம்…” ஏன் கார்த்திகேயன் சிவ னேசனுக்காகக் கதைக்கிறான். என்னைச் சமாதானப்படுத் தவா அல்லது கார்த்திகேயன் சொல்வதுபோல் சிவனேசன் யாரோ சினேகிதர்களுடன் இருந்திருப்பானா.
“என்ன சிந்தனை” மீனா ஓரக்கண்ணால் தமக்கையை பாத்துக் கேட்டாள்.
“என் கணவரைப்பற்றி யோசிக்கிறேன்” உணர்ச்சியற்றுச் சொன்னாள் சகுந்தலா.
மீனா திரும்பவும் தமக்கையைத் திரும்பி ஒரு நீண்ட பார்வை பார்த்துவிட்டுப் பாதையில் பார்வையை ஓட்டினாள். மாலைக் கதிரவனின் மங்கிய ஒளி மறைந்து இருள் பரவத் தொடங்கி விட்டது. குழந்தை காரோட்டத்தில் நல்ல நித்திரை.
“என்ன யோசனை என் கணவரைப் பற்றி! எந்த ரோட்டில் குடித்துவிட்டுக் கிடக்கிறார் என்று யோசிக்கிறேன் என்று நினைக்கிறாயா”சகுந்தலா தங்கையிடம் கேட்டாள்.
மீனாவுக்குத் ‘திக்’ என்றது, தமக்கையின் கேள்வியைப் பார்த்து. “தவறாக நினைக்காதே சகுந்தலா. நான் ஒன்றும் அப்படி நினைக்கவில்லை’ மீனா மன்னிப்புக் கேட்கும் பாவனையில் சொன்னாள்.
”என் கணவர் இந்த நேரம் எந்தப் பெண்ணோடு திரிகிறார் என்று யோசிக்கிறேன்” மெல்லிய வெளிச்சத்தில் சகுந்தலா வின் முகம் சோக சித்திரத்தை நினைவூட்டியது.
“ஏன் தேவையில்லாமல் யோசிக்கவேண்டும்? மற்றவர்களில் குறைதேடிக் கொண்டிருப்பது கூடாது. எல்லாரும் எங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதே ஒரு மனவியாதி. புராசிக்கி யுஷன் கொம்பிளக்ஸ். அடுத்தவர்களைப்பற்றி அளவுக்குமீறி யோசிக்கக்கூடாது!” மீனா சொல்லி முடிய சகுந்தலா கலகல வென்று சிரித்தாள். மீனா தமக்கையை விளங்காமல் திரும்பிப் பார்த்தாள்.
”அடுத்தவர் என்று யாரை நீ சொல்கிறாய் தெரியுமா? என் கணவனை. அவர் என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? நான் போன் பண்ணியபோது யாரோ ஒரு பெண் ணுடன் கொஞ்சிக்கொண்டிருந்தார். சகுந்தலா விரக்தி யான சிரிப்புடன் சொன்னாள். காரின் வேகம் திடீரென்று குறைந்தாற் போன்ற உணர்ச்சி.
”ஐயம் சொறி சகுந்தலா” தங்கையின் குரலில் உண்மை யான பாசம் தெரிந்தது.
”கடவுளே ஏன் எல்லோரும் ‘சொறி’ சொல்கிறீர்கள். அவ் வளவு பரிதாபகரமான விதத்தில் என் சீவியம் இல்லை. அப்பா எதிர்பார்த்துச் செய்ததெல்லாம் கிடைத்திருக்கிறது. பெரிய வீடு, கார், வீடு நிறைந்த தளபாடங்கள் எல்லாம் கிடைத்தி ருக்கின்றன. எதற்காக நீ சொறி சொல்லவேண்டும். மீனா தமக்கையைப் புரிந்துகொள்ளாத விதத்தில் பார்த்தாள். இவ ளுக்கு என்ன மூளை குழம்பிவிட்டதா லண்டனுக்கு வந்து?
“என்னப்பா நீங்கள் எல்லாம் பெரியாக்கள் இப்ப. சொந்தக் காரரைக்கூடப் பார்க்க ஏலாமற் போயிற்று” புவனேஸ் சகுந்தலாவை இப்படிச் சொல்லிக்கொண்டு வரவேற்றாள். கொழுக்கட்டை புவனேஸ். இன்னும் கொழுத்துப்போய் இருக்கிறாள் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்கு வரு வதுண்டு புவனேஸ் பெற்றோருடன்.
”என்னடி புவனேஸ் உளுத்தம் மா கஞ்சியிலா சீவிக்கிறாய். கொழுத்துப்போய்க் கிடக்கிறாய்” தியாகராசா இப்படித்தான் பகிடி பண்ணுவான். அவ்வளவு கொழுப்பு. இப்போது ஒன்றும் குறைந்துவிடவில்லை. இரண்டு மூன்று குழந்தை கள் இருக்கலாம். கதவைத் திறந்ததும் திறவாததுமாக குழந்தைகளின் ஆலாபனைகள் கேட்டன.
சகுந்தலா இன்னொருதரம் புவனேசைப் பார்க்கப் போவ தாகச சொன்னபோது பார்வதிக்குப் பிடிக்கவில்லை.
“நான் உன்னை என்னத்துக்குக் கூப்பிட்டன்? இவள் மீனா வுக்கு பைத்தியம் பிடிச்சுப்போய்க் கிடக்கு. ஒருக்காப் புத்தி சொல் என்று கூப்பிட்டால் நீ என்ன செய்து கொண்டு திரி கிறாய். சோசியல் விசிட் அடித்துக்கொண்டு திரிகிறாய் உன் சினேகிதிகள் வீட்டுக்கு” தாய் பொரிந்து தள்ளினாள். உஷாவைப் பார்க்கப் போனதைக் கேள்விப்பட்டபோது தாயும் தகப்பனும் எள்ளும் கொள்ளுமாக வெடித்தனர்.
“பார்த்தாய சகுந்தலா! நீ கல்யாணம் முடித்துப் பிள்ளை குட்டியும் பெற்றுவிட்டாய். இன்னும் தங்களின் பிடியில் நீ இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். நாங்கள் பலவீன மாக இருக்கும் வரையும்தான் மற்றவர்கள் பெலசாலிகள். எனக்கு என் விடயங்களைப் பார்க்கத் தெரியும் என்று நீ சொல்லாதவரை தாய் தகப்பன் மட்டுமல்ல மற்ற மனிதர் களும்தான் முட்டாள்களாக மதிப்பார்கள்” மீனா சொன்னாள் தாய் வெடிப்பதைப் பார்த்துவிட்டு. மீனா சொன்னது சரி.
அடுத்தநாள் புவனேசைப் பார்க்க வெளிக்கிட்ட போதும் தாய் தனக்குப் பிடிக்கவில்லை என்பதைக் காட்டிக்கொண்டாள். புவனேசில் ஒரு கோபமுமில்லையாம் பார்வதிக்கு. ஒன்று விட்ட தமயனின் மகள் புவனேஸ். ஆனாலும் ஜெகநாதனைப் பிடிக்காதாம் தகப்பனுக்கு. அதற்காக சகுந்தலா புவனேசைப் பார்க்கப் போய்க்கொண்டிருப்பதும் பிடிக்கவில்லை என்று காட்டிக்கொண்டார்கள்.
சகுந்தலா உணர்ந்து கொண்டாள், குனியும்வரை குட்டு விழும் என்று.
“மீனா உன் தங்கச்சி. உனக்கு வாய் திறந்து சொல்ல முடி யாதா? அவள் செய்யப்போகும் காரியம் சரியில்லை என்று. தாய் பரிதாபமாகக் கெஞ்சினாள். அந்த அழுமூஞ்சித் தொண தொணப்புக்கு விலகிப்போகும் யோசனையில் தான் புவனேசைத் தேடிவந்தாள்.
புவனேசைக் கண்டதும் அழுது ஆலாபனை வைத்த ஒரு குழந்தை தன் சங்கீதத்தை நிறுத்திவிட்டுக் கீதாஞ்சலியைப் பார்த்துச் சிரித்தது. கைக்குழந்தை இன்னும் அழுது கொண்டிருந்தது.
“என்ன தங்கச்சியின் கல்யாணத்துக்கு வந்த நீரோ புவனேஸ் கள்ளமில்லாமல் கேட்டாள். வந்த நாளிலிருந்து எத்தனையோ பேர் கேட்டுவிட்டார்கள். அவளுக்கு ஆரம்பத்தில் தர்மசங்கடமாக இருந்தது. அம்மாவையும் அப்பாவை யும் பொறுத்தவரையில் ஊர் உலகத்துக்குத் தெரிந்து அவ மானம் வரமுதல் மீனாவுக்குப் புத்தி சொல்லட்டாம். என்ன வேடிக்கை? பூனை கண்ணை முடிக்கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா? அம்மாவுக்குத் தெரியுமா தங்களைத் தெரிந்த எல்லோருக்கும் மீனாவின் விடயம் தெரியுமென்று? இந்த லட்சணத்தில் அப்பா ஓடித்திரிகிறார். ஒரு நல்ல மாப்பிள்ளை அகப்பட்டால் மீனாவைச் செய்துவைக்க.
“உமது அப்பர் மீனாவைப் பேசிக்கொண்டிருப்பதாகத் தம்பி சொன்னான்” புவனேஸ் தொடர்ந்து சொன்னாள். சகுந்தலா மெல்லமாகத் தலையாட்டினாள்.
“ஓடித்திரிகிறாராம் யாரையும் நல்ல மாப்பிள்ளை பிடித்துத் தரச்சொல்லி?” புவனேஸ் தொடர்ந்து சொன்னாள்.
”எனக்குத் தெரியாத விபரம் எல்லாம் உனக்குத் தெரிந் திருக்கு புவனேஸ். கன நாளாய் வரவில்லை என்று லண்ட னுக்கு வந்திருக்கிறன். மீனாவின் கல்யாண விடயம் அவளின் சொந்த விடயம். அப்பாவும், அம்மாவும் என்னைப்போட்டு நச்சரிக்கினம் மீனாவுக்குப் புத்தி சொல்லச் சொல்லி” சகுந் தலா அலுத்துக் கொண்டாள். நல்லகாலம் புவனேஸ் கேட்க வில்லை புத்தி சொல்ல வந்தாயா என்று?
‘‘என்ன துணிவு மாமாவுக்கு? இவ்வளவு தெரிந்த பின்னும் யாரும் எங்கட தமிழ் ஆக்கள் மீனாவைச் செய்வினமோ? எவ்வளவு காலமாக ஆக்கள் கதைக்கினம் மீனா அன்ரனி யுடன் திரிகிறாள் என்று.” புவனேஸ் கைக்குழந்தைக்குப் பால் போத்தலில் பால் ஊட்டியபடி சொன்னாள்.
“ஏன் இல்லாம? காசுக்காக எதையும் வாங்க எத்தனையோ தமிழர்கள் காத்திருக்கினம். எங்கட தமிழர்களைப் பொறுத்த வரையில் பெண்கள் வெறும் கத்தரிக்காய்கள்தானே. வாங்க லாம், விற்கலாம். இங்கு வந்து நிரந்தரமாக இருக்க முடி ‘யாத எத்தனையோ பேர் மீனாவைப்போல் பிரிட்டிஸ் பிரஜா உ ரிமையுள்ள பெண்களைச் செய்யத் தயங்கவா போகிறார் கள்? மீனா அப்பா அம்மா பேச்சைக் கேட்கப் போகிறாளோ இல்லையோ என்பதில்லை அவர்களின் பிரச்சனை’ சகுந்தலா சொல்லி முடிக்கமுதல் ஜெகநாதன் வந்துகொண்டிருந்தான்.
சகுந்தலாவுக்கு ஜெகநாதனை அவ்வளவு பழக்கம் இல்லை. அதனால் போகலாமோ இல்லையோ என்ற தயக்கத்தில் எழுந்தாள்.
என்னைக் கண்டு ஓடத்தேவையில்லை சகுந்தலா. உமது தகப்பன்தான் எங்கள் தரவளியைக் கண்டு ஓடிக்கொண்டிருக் கிறார் என்றால் நீரும் ஏன் ஓடவேண்டும்.” ஜெகநாதனின் சினேகிதபூர்வமான பேச்சு சகுந்தலாவுக்குப் பிடித்துக் கொண்டது.
“அப்பாவும் நீங்களும் அரசியல் விடயத்தில் அடிபட்டுக் கொள்ளுங்கள். என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டாம்.” சகுந்தலா சிரித்துக்கொண்டு சொன்னாள்.
“உமது தகப்பனார் போன்ற ஆட்களின் பிழை என்ன என்றால் தாங்கள்தான் அரசியல் கதைக்கவும் எங்கள் தமிழர் பிரச்சனைகளுக்கு விடிவுகாணவும் தகுதிபடைத்தவர்கள் என நினைக்கிறார்கள். தர்க்கரீதியாக விடயங்களை ஆலோசித்து முடிவுகட்டத் தெரியாமல் காட்டாற்று வெள்ளத்தில் ஓடும் கம்புகள் போல் இலங்கை அரசியல் வெள்ளத்தில் எங்களை இழுத்துக்கொண்டு போகிறார்கள்.” ஜெகநாதனின் சொற் பொழிவு கேட்கவா அவள் வந்தாள்?
சகுந்தலா பரிதாபத்துடன் புவனேசைப் பார்த்தாள். புவனேஸ் கணவனைப் பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டாள்.
“நான் புவனேசைப் பார்க்க வந்தன்” என்றாள் சகுந்தலா குரலில் தன் அரசியல் அறியாமையைக் காட்டாமல்.
“அதாவது அரசியல் பெண்களைப் பொறுத்தவரையில் வெறும் சூனியமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்” ஜெகநாதன் குரலில் விருப்பமோ. விருப்பமில்லையோ கேட்டுத் தொலைக்கவேண்டும் என்ற அழுத்தம் இருந்தது.
“சும்மா இருங்கோ உங்களுக்குத்தான் வேலை இல்லை என்று சகுந்தலாவுக்குமா இல்லை? அவள் ஐந்தாறு வருடங் களுக்குப் பின் வந்திருக்கிறாள் லண்டனுக்கு. சும்மா அரசியல் கதைத்து போரடிக்காதீர்கள்” புவனேஸ் கணவனைக் கடிந்து கொண்டாள்.
“புவனேஸ் எப்போதும் இப்படித்தான். அரசியலைப்பற்றி அறிந்துகொள்ள வேணும் என்று ஒரு அக்கறையுமில்லை”. ஜெகநாதன் குரலில் தெரிந்த ஆற்றாமையைக் கண்டு புவனேஸ் சிரித்தாள்.
“எனக்கு இந்த குழந்தைகளுடன் மாரடிக்க நேரமில்லை. நீங்களும் உங்கள் அரசியலும்.” புவனேஸ் சொல்லிக் கொண்டே குசினிக்குப் போனாள் தேத்தண்ணி போட.
“எப்படி இங்கிலாண்ட். ஏதும் வித்தியாசம் தெரிகிறதா?” ஜெகநாதனின் கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் தோள் களை குலுக்கிக் கொண்டாள். அப்படி ஒன்றும் பிரமாதமான வித்தியாசம் இல்லை என்ற பாவனையில்.
“மாறுதல் இல்லை என்கிறீர்கள்? அல்லது மாறுதல்களைக் கவனிக்கப் பொறுமையில்லை என்கிறீர்கள். பாருங்கள் சகுந்தலா வாழ்க்கையில் மாற்றம், மக்களின் அரசியற் போக் கில் மாற்றம், பிரச்சனைகளைப் பார்க்கும் விதத்தில் மாற்றம், உலகம் கடந்த கோடிக்கணக்கான வருடங்களில் மாறாத வேகத்தில் கடந்த ஒரு சில பத்தாண்டுகளில் மாறிவிட்டது. நாங்கள் எப்படி இருக்கிறோம்? பழைய புராணங்களைப் படித்துப் புளித்துப்போய் இருக்கிறோம். எங்கள் தலைவர் களைப் பாருங்கள்: கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ் என்று விசர்க்கதை கதைத்துக் கொண்டு திரிகிறார்கள். விஞ்ஞான ரீதியில் பிரச்சனை களைப் பார்க்கத் தெரியாதவர்கள்.”
வெளியில் யாரோ கதவு மணியடிக்கும் சத்தம் கேட்டது. ஜெகநாதன் போய்க் கதவைத் திறந்தார். சிதம்பரநாதன் வந்து கொண்டிருந்தான்.
‘மைத்துனரிடம் ஒன்றும் கதைக்காமல் தமக்கையிடம் போய் விட்டு வந்தான். சிதம்பரநாதனையும், ஜெகநாதனையும் பார்க்க வேடிக்கையாக இருந்தது சகுந்தலாவுக்கு. எலியும், பூனையுமா இவர்கள்? ஒருகொஞ்ச நேரத்துக்கு முதல் தமிழர் எப்படி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று சொன்ன ஜெகநாதனின் பேச்சுக்கும் நடைமுறைக்கும் எவ்வளவு வித்தியாசம். சொந்த உறவுக்குள்ளே ஒற்றுமையாக இருக்கத் தெரியாதவர்கள் ஒரு பெரிய இனத்தை ஒற்றுமைப்படுத்தப் போகிறார்களாம். சிதம்பரநாதன் வெளிக்கிடுவதைக் கண்ட தும் தம்பினோம் பிழைத்தோம் என்று சொல்லிக்கொண்டு வெளிக்கிட்டாள் சகுந்தலா.
“ஏன் உன் மைத்துனருடன் கதைப்பதில்லையோ நீர்” என்றாள் சகுந்தலா.
“மச்சான் மாதிரிப் புல்லுருவிகளுடன் என்ன கதை? புத்த கத்து அரசியலை நடைமுறைப்படுத்தப் பார்க்கிறார்கள்.”
சிதம்பரநாதன் காரை ஸ்ராட் பண்ணத் தொடங்கமுதல் புவனேஸ் ஏதோ பார்சலுடன் வந்துசேர்ந்தாள் காரடிக்கு. ”ஏன் புவனேஸ் உமது சணவர் தமிழர் ஒற்றுமையைப்பற்றி ஓலம் வைக்கிறார். உன் தம்பியுடன் ஒற்றுமையாக்க முடியாதா உனக்கு?”
புவனேஸ் வேண்டா வெறுப்பாக முகத்தைச் சுளித்துக் கொண்டாள். “நடைமுறையில் ஒன்றும் செய்யத் தெரியாதவர்கள் புத்தகத்தைப் படித்துப்போட்டுப் புழுகுவதில் மட்டும் ஒன்றும் குறைச்சலில்லை”.
புவனேசின் முகம் இருண்டிருந்தது. குடும்பத்தில் ஏதும் தகராறோ என்று நினைத்தாள் சகுந்தலா. ஆனால் கேட்க விருப்பமில்லை.
“ஏன் புவனேஸ் உமது மைத்துனருடன் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிறாள்.” மௌனமாய் இருக்கும் சிதம்பரனைக் கேட்டாள் சகுந்தலா.
“மச்சான்போல ஆட்களை அக்காமாதிரி ஆட்கள் வீட்டில் வைத்திருப்பது அவர்களின் பிழை. அக்கா லண்டன் மாப் பிள்ளைக்கு ஆசைப்பட்டா. உள்ள சீதனம் எல்லாம் குடுத்துச் செய்து வைச்சினம். அவர் நடக்கிற நடப்பெண்டால்” சிதம் பரநாதன் ஏன் எந்தநேரமும் சிடுசிடு என்று இருக்கிறான்?
“ஏன் சிதம்பரநாதன் எந்நேரமும் மற்ற ஆட்களில் பிழை பிடிச்சுக்கொண்டிருக்கிறீர்?” சகுந்தலா சமாதானக் குரலில் சொன்னாள். குழந்தை கார் ஜன்னலால் புதினம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் யாரிலும் பிழை பிடிக்கல்ல சகுந்தலா அக்கா. புவனேஸ் அக்கா மாதிரி ஆட்கள் வெறும் கௌரவத்துக்காக நாய் மாதிரி உழைப்பதாற்தான் பச்சான் மாதிரி ஆட்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள்”
கார் ட்ரவிக் லைட்டில் நின்றது.
“அப்படி என்ன பிழை செய்துவிட்டார் உமது மச்சான்?” சகுந்தலாவின் கேள்விக்கு சிதம்பரநாதன் பெருமூச்சு விட்டான்.
“ஏன் பெருமூச்சு விடுகிறீர்” சகுந்தலா விளங்காமற் கேட்டாள்.
“மச்சானில் பிழை பிடித்து என்ன பிரயோசனம்? அக்காவைப் பொறுத்தவரையில். வீடு, கார், கதிரை மேசை அத்தோட ஒரு கணவன். எல்லாத் தமிழ்ப் பெண்களையும் போல பட்டதா ரிக் கணவன். இவ்வளவுதான் சீவியம். இதற்காக எதுவும் செய்யத் தயார். பிள்ளைகளை யார் வீட்டிலோ விட்டுவிட்டு மாடு மாதிரி உழைக்கிறா அக்கா. மச்சான்பிள்ளை விழல் அர சியல் கதைத்துக்கொண்டு திரிகிறார். தமிழர் பிரச்சினைக்குச் சிங்களவர்களும் சேர்ந்து போராடும் காலம் வரும்வரைக்கும் எங்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவும் இல்லையாம்.” சிதம்பரநாதன் திரும்பி சகுந்தலாவைப் பார்த்தான் “ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்’” என்றான். என்ன பேச இருக்கிறது நீர் சொல்கிறீர் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்” புன்சிரிப்புடன் சொன்னாள் சகுந்தலா. “லண்டன் மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்ட அக்கா மாதிரி ஆட்களின்ர நிலையைப் பாருங்கோ. இந்தக் குளிரிலும், மழையிலும் கஷ்டப்பட்டு வேலை செய்து என்ன கண்டார்கள்? ஒரு கலர்டெலிவிஷன், ஒரு கார், இருபத்தைந்து வருடக் கடனில் ஒரு வீடு இதற்கெல்லாம் தான் வாழ்க்கையா?”
சகுந்தலாவுக்கு சிதம்பரநாதனின் இளமையான முகமும் துடிப் பான பேச்சும் சுவையாக இருந்தன. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக ஒரு காலத்தில் மாமி கமலத்தின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு திரிந்த அழுகண்ணீர் சிதம்பரநாதனா இவன். “சிதம்பர நாதன் வாழ்க்கை. திருமணம், குடும்பம் என்பது ‘நீர் நினைப்பதுபோல் மிகவும் எளிதான காரிய மில்லை. மிக மிகச் சிக்கலானது. அதில் அகப்பட்டு அதன் அனுபவம்தெரியாத வரை உங்களைப் போன்றவர்களுக்கு வெள்ளையும் கறுப்புமாகதான் தெரியும்.”
சிதம்பரநாதன் சகுந்தலாவைத் திரும்பிப் பார்த்தான். தன் னைச் சிறுபிள்ளைத் தனமாய் நினைக்கும் அவள் அறியா மையை நினைத்துச் சிரிப்பு வந்தது அவனுக்கு.
வீட்டுக்குப் போனபோது அம்மா வாசலில் நின்றிருந்தாள். சகுந்தலாவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு. சிதம்பரநா தனின் முகத்தைக் கண்டதும் மாமியாரின் முகத்தில் ஏனோ தானோ என்ற பாவம் படர்ந்தது.
”என்ன இவ்வளவுநேரமும் புவனேசோட அலட்டல். புரு ஷன வேலைக்குப் போகாம இருந்து புத்தக ஞானம் புலம்பு றார். பொஞ்சாதி உழைத்துப் போடுகிறா. அதைக் கேட்க இவ்வளவு நேரமோ’ தாய் எள்ளி நகையாடும் விதத்தில் சொன்னாள். பார்வதிக்கு ஒரு நாளும் புவனேஸ் குடும்பத்தைப் பிடிக்காது. ஒரு வேளை புவனேசின் தாய் பார்வதியைவிட அழகாய் இருந்தது ஒருகாரணமாய் இருக்கலாம்.
“சிவனேசன் போன் பண்ணினான். இல்லை என்றதும் கோபம் வந்துவிட்டது. இன்னொருக்காப் போன் பண்ணுவார் என நினைக்கிறன்” தாய் சொன்னாள்.
கோபப்படுகிறாராம் என் கணவர். எதற்காக?
அத்தியாயம்-6
வீட்டில் இரண்டு மூன்று நாட்களாக நச்சரிப்பு. மீனா வழக்கம் போல் இருக்கிறாள். தாய் தகப்பனுடன் பேச்சு வார்த்தை யில்லை. தாய் அன்றைக்குச் சொன்னதுபோல் சிவனேசன் திரும்பவும் போன்பண்ணவில்லை. காசு மிச்சம் பிடித்துப் ‘பார் பக்கம் போகிறாராக்கும்.
தாயும் தகப்பனும் அடிக்கடி எங்கோ போய் வந்தார்கள். எதற்காக இருக்கும்?
புவனேஸ் சொன்னதுபோல் யாரும் நல்ல மாப்பிள்ளை தேடி ஓடித்திரிகிறார்களோ? தனக்குச் செய்ததுபோல் சொல்லாமற் கொள்ளாமல் யாரையோ பேசி ஒழுங்கு செய்துவிட்டு பய முறுத்திக் கல்யாணம் செய்யப் போகிறார்களா?
இந்தவார விடுமுறையில் அன்ரனி ஹாங்கொங் போவதாக மீனா சொன்னாள். அவன் வந்தவுடன் கல்யாணம் நடத்துவ தாகத் திட்டம்.
ஏன் மீனா தாய் தகப்பனுக்குச் சொல்லி இத்தனை ஆரவாரத் தையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை சகுந்தலாவுக்கு.
ஒரு பின்னேரம் சொல்லாமற் கொள்ளாமல் பெரிய கூட்டமே நடந்தது பேரின்பநாயகத்தார் வீட்டில். இலங்கையில் இருந்து வரும் தமிழ்த்தலைவரை வரவேற்க மிக மும்முரமான ஏற்பாடு நடப்பது தெரிந்தது. இவர்களுடன் கார்த்திகேயன் கோஷ்டி சேரவில்லையா? யாரைக் கேட்பது. எல்லோரும் ஏதோ அவச ரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மீனா கிட்டத்தட்ட வீட் டில் இல்லை. பாடசாலை முடிய பிந்தி வருகிறாள். தாய் கேட்டால் ஒவ்வொரு சாட்டுச் சொல்கிறாள். தாயைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது சகுந்தலாவுக்கு. சகுந்தலா சின்னக் குழந்தையாக இருக்கும்போது தாய் எத்தனையோ தரம் சொல்லியிருக்கிறாள் தான் எத்தனை விரதம் பிடித்தாள் ஒருபிள்ளை கேட்டு என்று. போகாத கோயில் இல்லை. கும்பிடாத தெய்வம் இல்லை. அப்படியெல்லாம் கஷ்டப் பட்டு உங்களைப் பெற்றால் நீங்கள் இப்படியா எங்களை மனவருத்தப் படுத்துவது என்று கேட்கிறாள் பார்வதி.
அம்மா பொய்மைகளையே நம்பி பொய்மைகளிலேயே வாழப் பிறந்தவள். நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரைவிலக்கணம் வைத்திருக்கிறாள். அப்படி இருக்க முடியாது என்று நான் பிடிவாதம் பிடித்தால் அடங்காத பெண் என்கிறாள். இது மீனாவின் வாதம்.
பெண்கள் என்ன மெஷினில் வார்த்தெடுத்த சிலைகளா இ படித்தான் இருக்க வேண்டும், நடக்கவேண்டும். பழகவேண் டும் என்று படிப்படியாகக் குழந்தைப் பிள்ளை கல்வி புகட்ட. பெண்மை. பண்பு. கற்பு என்கிறார்கள் எங்கள் தமிழர்கள். உஷாவைக் கேட்டுப் பார் இப்போதுதான் யாழ்ப்பாணம் போய்வந்தாள். இந்த இருபதாம் நூற்றாண்டும் முடியப் போகிறது. அமெரிக்கப் பெண் வான்வெளிக்குப் போகப் போகிறாள். யாழ்ப்பாணத்தில் ஒருபெண் தனியாக நடக்க முடியாது. மீனா பொரு பொருவென்று முணுமுணுத்தாள். சகுந்தலா புத்தி சொல்ல வெளிக்கிட
“மீனா எங்கட ஆட்கள் எப்போது ஒரு பெண்ணுக்கு ‘லேபிள் குத்தலாம் என்று காத்திருக்கிறார்கள். சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கொடுக்கிற கதையாய் இருக்கிறது உன் நடப்பு. நீ பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சொல்கிறாய். ஏதோ சொல்லித் தொலை. செய்து தொலை. அதற்காக இப் படி நினைத்தபடி நடக்கச் சொல்லிக் கிடக்கா” தமக்கையின் உபதேசத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது மீனாவுக்கு.
“நீ வேணுமானால் உலகம் உலகம் என்று உன்னையே சுருக் கிக்கொள். உன்னையே ஏமாற்றிக்கொள். நான் என்னை மதிக்கிறேன். என் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறேன். மற்றவர்கள் திட்டம் போட்டு இப்படித்தான் வாழ் என்று ஆட்டையும் மாட்டையும் சொல்லட்டும். நான் மனித ஜன்மம். எனக்கு உரிமையிருக் கிறது. என்ன செய்வது என்று திட்டம்போட.”
மீனாவின் விதண்டா வாதத்தைக் கேட்டால் அம்மா என்ன சொல்வா?
”மீனா உலகத்தை நீர் ஒரு வினாடியில் மாற்றமுடியாது கவனமாக இரு”
சகுந்தலாவுக்கு வேறொன்றும் சொல்ல முடியவில்லை. மீனா வின் விதண்டாவாதம் குடும்பத்தில் இன்னும் பிரச்சினைகள் வந்து அதில் தான் அகப்பட்டுக் கொள்வதைச் சகுந்தலா அடி யோடு வெறுத்தாள்.
கடைசியாகச் சிவனேசன் வார முடிவில் போன் பண்ணினான். அவன் குரலைக் கேட்டதும் அவள் ஆத்திரம் எல்லைமீறியது. தாயும் தகப்பனும் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தார் கள். இருந்தாலும் சகுந்தலா என்ன பேசுகிறாள் என்பது கேட்காமல் இருக்காது. சிவனேசன் குரலிலோ எந்தவிதமான மாற்றமும் இல்லை.
எப்படி நடக்க முடிகிறது இந்த ஆண்களால் அல்லது எப்படி மறக்க முடிகிறது எதையும் எளிதில். “எப்படிக் குழந்தை” அவன் குரலில் பாசம். “சுகமாக இருக்கிறாள்”
கேள்விக்கு மறுமொழியைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை அவளுக்கு. அன்றைக்குத் தான் போன் பண்ணியதைக் கேட்கலாமோ என்று மனம் துடித்தது.
“லண்டன் எப்படி” அவன் ஏதும் கேட்கவேண்டும் என்பதற் காகக் கேட்கிறானா.
“இருக்கிறது வழக்கம்போல். மழையும், குளிரும். அத்தோடு அரசியல் கூத்தும்’ அவள் வேண்டா வெறுப்பாகச் சொன்னாள்.
“அன்றைக்கு நீர் இருக்கவில்லை. எங்கு போனீர். அவன் சாதாரணமாகக் கேட்டான். ஆனாலும் அவளுக்குக் கோபம் வந்தது. மறுமொழி சொல்லவில்லை.
நான் போகுமிடமெல்லாம் உங்களைக் கேட்டுக் கொண்டு போகவேண்டுமா? கேட்க நினைத்தாள் முடியவில்லை. நீங் கள் மட்டும் என்னைக் கேட்டுக்கொண்டா இன்னொருத்தி யுடன் ஆடுகிறீர்கள். இப்படியும் கேட்க நினைத்தாள். வாய் வரவில்லை.
“மீனாவின் கல்யாண விடயம் எப்படி இருக்கிறது?” அவன் கேட்டான்.
“எந்தக் கல்யாணம் உண்மையாகச் சகுந்தலாவுக்கு விளங்க வில்லை. மீனா அன்ரனியைத்தான் கல்யாணம் செய்யப் போவதாகச் சொல்லிச் சண்டை பிடித்தாளே தவிர உடனடி யாகச் செய்யப் போவதாகவோ அதற்காக ஏதும் திட்டம் போடுவதாகவோ மீனாவுக்கு நெருங்கிய ஒன்றிரண்டு பேரைத்தவிர யாரிடமும் சொல்லவில்லை.
எப்படித் தெரியும் சிவனேசனுக்கு?
“என்ன தெரியாத மாதிரிச் சொல்கிறீர்?” சிவனேசன் குரலில் வியப்புத் தொனித்தது
“உண்மையாகத் தெரியாது. மீனாவுக்குப் புத்தி சொல்லச் சொல்லி அம்மா நச்சரிக்கிறா. மீனா என்னுடன் முகம் கொடுத்துச் சரியாகக் கதைக்கக்கூட இல்லை. நான் வந்த நாளிலிருந்து ஏதும் கதைக்க வெளிக்கிட்டால் என் கல்யாண விஷயமாக ஏதும் கதைப்பதாக இருந்தால் தன்னுடன் கதைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்”.
அரைவாசி உண்மையும் அரைவாசிப் பொய்யுமாகச் சொல்லி விட்டாள் சகுந்தலா.
“ஏன் இன்னும் உமது தாய் தகப்பன் உமக்குச் சொல்ல வில்லையா? எனக்குத் தெரியாது. உமது தகப்பன் யாரோ ஒரு ஸ்ருடன்ட்டைப் பார்த்திருப்பதாகக் கேள்வி. யார், என்ன என்று சொல்லவில்லை. கிட்டத்தட்டச் சரிவரும் என்று சொன்னார்’ சிவனேசன் மனைவிக்குச் சொன்னான். சகுந்தலாவுக்குத் தலைசுற்றிக் கொண்டு வந்தது. கணவன் உண்மையாகச் சொல்கிறானா. அல்லது குடிவெறியில் பிதற்றுகிறானா. அவளால் மேற்கொண்டு எதும் கதைக்க முடியவில்லை. சந்தர்ப்பம் பார்த்து, போன ஞாயிற்றுக்கிழமை யாருடன் சல்லாபம் செய்கிறீர்கள் என்று சண்டை பிடிக்க இருந்தாள். மீனாவின் எதிர்காலத்தைச் சிதறடிக்கும் தன் தாய் தகப்பனின் திட்டத்தைக் கேட்டதும் மனம் வெடித்தது.
வெளியில் இன்னும் இருட்டவில்லை. வைகாசி பிறந்தும், குளிர்காற்று சுள் என்று அடிக்கிறது இதே மாதிரித் தானே தனக்கும் திட்டம்போட்டு… தாய் தகப்பனைத் திரும்பிப் பார்த்தாள். தகப்பன் யாரோ சினேகிதருடன் கதைத்துக் கொண்டிருந்தார். தாய் வழக்கம்போல் குசினியில், ஒன்றுமே நடக்காததுபோல் இவர்களால் எப்படி இருக்கமுடிகிறது? இப் படித்தானே ஐந்தாண்டுகளுக்கு முன்பும்…… சகுந்தலா கலங்கும் கண்களை மூடிக்கொண்டாள். நினைவுகள் பின்னோக் கிப் பறந்தன…
பேரின்பநாயகம் தம்பதிகள் வூல்விச்சில் வந்து குடியேறிய காலம். ஐம்பத்தெட்டாம் ஆண்டுக் கலவரத்தின் பின் சிங்களம் படிக்க முடியாது என்று கிளரிக்கல் வேலையை விட்ட பெரிய மனிதர்களில் பேரின்பநாயகத்தாரும் ஒருவர். கொழும்பில் இருப்பது அபாயம். யாழ்ப்பாண வாழ்க்கை பிடிக்காது வேறு எங்கே போவது? ஆசிரியர் நியமனம் எடுத்துக்கொண்டு வந்து விட்டார் இங்கிலாந்துக்கு. கறுப்பர்கள் தங்கள் அடிமைகள் என்ற மனப்பான்மையிற் தங்களை வெள்ளைக்காரர் நடத்திய தைக் கண்ட பேரின்பநாயகம் போன்றவர்கள் தங்களின் சீர் கெட்ட இரண்டாம்தரப் பிரசைகளின் வாழ்க்கையை வெகு சிரமத்தோட ஆரம்பித்தார்கள். சகுந்தலா பாடசாலைக்குப் போகும் வயது வரும்போது மீனாவுக்கு ஒன்றோ இரண்டோ தான். ஒரு சாதாரணமான குடும்ப வாழ்க்கைக்கு கணவனும் மனைவியும், உழைத்து வீடு வாங்கி தலை நிமிர வெகு காலம் எடுத்தது. ஒருதரம் இலங்கைக்குப் போய் சொர்க்க பூமியைப் பற்றிப் புழுகிவிட்டு வந்தார்கள்.
அதன்பின் இலங்கை கிட்டத்தட்ட மறந்துவிட்டது. எழுபதாம் ஆண்டு அரசியல் அமைப்பால் இலங்கையில் ஏற்பட்ட குழப் பங்களால் தமிழ்மாணவர்கள் இனரீதியாக கல்வி முறைகளால் ஒடுக்கப்படத் தொடங்கியதும் வெளிநாடு வந்த மாணவர் பட்டாளத்தில் கார்த்திகேயனும் ஒருவன். தகப்பனை ஐம்பத் தெட்டாம் கலவரத்தில் பறிகொடுத்தவன். தாய் சாதாரண கல்லூரி ஆசிரியை. யார் கையையோ காலையோ பிடித்து லண்டனுக்கு அனுப்பி வைத்தாள். அதேநேரம் பேரின்ப நாயகத்தார் தன் தம்பி மகன் தியாகராஜாவையும் கூப்பிட்டிருந்தார்.
தியாகராஜாவும், கார்த்திகேயனும் ‘தேம்ஸ் பொலிடெக்னிக் கில்” படித்துக் கொண்டிருக்கும்போது தியாகராஜனைத் தேடி பேரின்பநாயகத்தார் வீட்டுக்கு வருவதுண்டு.
இலங்கையிற் பிறந்தாலும் லண்டனுக்கு வந்ததும் தமிழ் மறந்துபோய் ஆங்கிலேய முறையில் வளரும் ஆயிரக்கணக் கான குழந்தைகளில் சகுந்தலா ஒருத்தியாக இருந்தாலும் தமிழையோ, தமிழர்களையோ அலட்சியம் செய்யப் பழக வில்லை. சில ‘டமில்’ பெண்களைப்போல். நீண்ட கூந்தல் அப்படியே இருந்தது அரைவாசி வெட்டப்படாமல். அழகிய கண்கள் கயலாக இருந்தன அள்ளிப் பூசிய மைகளால் கறை படாமல்.
அண்ணனிடம் வந்த கார்த்திகேயனில் காதல் ஒன்றுமில்லை முதலில் காலம் போகப்போக ஒன்றிரண்டு வசந்த காலம் முடிய….
தியாகராசன் பெரியப்பன் புலிபோலப் பாயப்போகிறார் என்று நடுங்கினான். அவனுக்குத் தெரியும் தன் ஒன்று விட்ட தங்கை சகுந்தலா “புலம்ஸ்ரேட் பெண்கள் பாடசாலை பார்க்குக் குப் பக்கத்தில் தன் சினேகிதன் கார்த்திகேயனுக்காகக் காத்திருப்பது.
என்ன விசித்திரம். பேப்பரில் விளம்பரம் போட்டு நேர்ஸ் வேலைக்கு வந்த பெண்கள் லண்டன் மண்ணில் கால் வைத்த தும் தாங்கள் வெள்ளைக்காரர் என்ற மாதிரி வெள்ளைத் தோலுக்குப் பின்னால் திரிந்து அவைகள் எல்லாம் ஏன்?
இந்தப் பெண் என்றால்… சரியாகத் தமிழே கதைக்கத் தெரி யாது. அதோட இந்த அரைப்பட்டினி ஆசாமி கார்த்தியில் என்ன கண்டாள்? தானும் அவனும் இலங்கையில் தமிழர் பிரச்சனை பற்றி தாக்கப்படும்போது வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பாள் சகுந்தலா.
அவர்களின் வாய்பேசுமுதல் கண்கள் பேசின. அவர்களுக் குத் தெரியும் தியாகராஜனுக்கு தங்கள் காதல் ‘சங்கதி’கள் தெரியும் என்று.
முதற்தரம் வூல்விச் ஓடியன் தியேட்டரால் வெளிக்கிட்டு வரும் சினேகிதனையும் ஒன்றைவிட்ட தங்கையையும் கண்டு வாய் அடைத்து விட்டது தியாகராசாவுக்கு என்பது சகுந்தலாவைத் தனயன் பார்த்த விதத்திலிருந்து தெரிந்தது.
“தயவு செய்து அப்பாவுக்குச் சொல்லாதே அண்ணா” தங்கை கெஞ்சினாள்.
“பள்ளிக்கூடத்தில் இன்று நாடக ஒத்திகை. இன்று நடனப் பயிற்சி, இன்று விளையாட்டுப் போட்டி” சகுந்தலாவின் பொய்கள் அழுத்தம் திருத்தமாக இருக்கும்.
கார்த்திகேயனின் பாடு பரிதாபம். முழுநேரப் படிப்பில் சேட்டை விட பிங்கோ பின்னேரம் அதுமுடிய டமுடியாது. ஹோலில் வேலை. அதில் ‘கட்’டடித்தால் சாப்பாட்டுக்கு வழியில்லை.
ஏதோ உடல் அரைப்பட்டினியுடன் தவித்தாலும் உள்ளம் சகுந்தலாவின் அன்பில் வளர்ந்தது. சகுந்தலா படிப்பு முடிய செகரட்டரி கோர்ஸ் படிக்க வெஸ்ட் மினிஸ்ட்டருக்குப் போக வரத் தொடங்கினாள் பஸ்ஸில். நாள் முழுக்க விடுதலை. விடுதலையான நாட்களில் இருவரும் ஹைட்பார்க்கில் கை கோத்துக்கொண்டு திரிந்தார்கள் பின்னேரங்களில். யாரும் இலங்கையர்கள் பார்க்கிறார்களோ என்ற பயத்துடன் இளம் காதலர்கள் பயந்து பயந்து லண்டனில் வசந்தகாலத்தைக் கழித்தார்கள். பின்னேரம் படித்துக் களைத்துப்போய் வரும் அருமை மகளுக்குத் தாய் பார்வதி கோழி சூப் வைத்துக் கொடுத்தாள் பாவம் படிக்கிற பிள்ளை என்று, போதாக் குறைக்குப் பேரின்பநாயகத்தாரின் சினேகிதனாருக்குத் தெரிந்த உஷா கணேசர் அப்போதுதான் லண்டனுக்கு வந் திருந்தாள்.
வெள்ளவத்தையில் சகுந்தலாவுடன் சைவமங்கையரில் படித் தவள் உஷா. அந்தச் சினேகம் இன்னும் மறக்கவில்லை.
உஷா வந்ததும் வராததுமாக அடுத்த வருடமே வெள்ளைக் காரனுடன் ஓடிவிட்டாள் என்று பேரின்பநாயகத்தார் துள்ளி னார். நான் லண்டனிலேயே எவ்வளவு அடக்கமாகப் வளர்த்து வைத்திருக்கிறேன் என்று பெருமை யடித்துக்கொண்டார். அவர் பெருமையில் மண் விழுந்தது ஒருநாள். மகளையும், கார்த்தியையும் கையோடு கை கோர்த்த நிலையில் படத் தியேட்டரில் கண்டபோது. போதாக்குறைக்கு அந்த வருடம் கார்த்திகேயன் தியாகராசா எல்லாரும் சோதனையிலும் பெயில்.
“பாவம் பரிதாபம் என்று வந்த இடத்தில் ஆதரித்தால் இப்படியா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது” உறுமி னார் கார்த்திகேயனைப் பார்த்து. அவன் தலை கவிழ்ந்து போய் நின்றிருந்தான். “ஏதோ சாட்டு போக்குச் சொல்லி லண்டனுக்கு வந்தால்போல நீங்கள் எல்லாம் பெரிய ஆட்களோ? விம்பிபாரில் கோப்பை கழுவத்தான் சரி. படிப்பும், பட்டமும் உங்களுக்கேன்? தான்போக வழியில்லை தும்புத் தடிக்கு…..” பேரின்பநாயகத்தார் வாய்விட்டுக் கத்தினார்.
சகுந்தலா கொஞ்சநாள் வெஸ்ட்மினிஸ்ரருக்குப் போக வில்லை. மகளை எப்படி நம்புவது என்று தாய் கண்ணீர் விட்டாள். கடைசியில் எத்தனையோ வாக்குவாதம். சத்தியங்களின் பின் சகுந்தலா தன் செகரட்டரிப் படிப்பைத் தொடர்ந்தாள்.
‘’சகுந்தலா நீர் சின்னப்பெட்டையில்லை. இருபத்தொரு வயதாகிறது. இன்னும் கொஞ்ச நாளில் படிப்பு முடிகிறது. எனக்கு இன்னும் இரண்டு வருடத்தில் படிப்பு முடிகிறது. சட்டப்படி கல்யாணம் செய்யலாம். என் படிப்பு முடியும்வரை தான் கஷ்டம். அதன்பின் ஒரு கஷ்டமும் இல்லை. கார்த்தி இப்படிச் சொன்னான் சகுந்தலாவுக்கு. அவன் கெஞ்சினான். மரமெல்லாம் இளம் துளிர்கள் துளிர்த்துப் பச்சைப்பசேல் என்றிருந்தது. பறவைகள் லண்டனில் ‘சமரை’ அனுபவித்துப் பாடிக்கொண்டிருத்தன. கிறின்விச் பார்க் மூலையில் உள்ள பெஞ்சில் அவன் மார்பில் முகம் பதித்து அவள் உட்கார்ந்திருந்தாள்.
“என்ன சகுந்தலா வாய் பேசாமல் இருக்கிறாய்” அவள் முகத்தை நிமிர்த்திக் கேட்டான் கார்த்திகேயன். “ஏன் அவசரப்படுகிறீர்கள்” அவள் அவனை விளங்காமற் கேட்டாள்.
“ஏன் என்றால் உமது தகப்பனுடன் மனதைக் குழப்பி ஏதும் செய்யாமல் ருப்பதற்காகத்தான்”. அவன் அவளின் அறியாமையைக் கண்டு கொதித்தான்.
“நீங்கள் சோதனை பெயில் என்றுதான் அப்பாவுக்குக் கோபம். கட்டாயம் என் சொல்லைக் கேட்பார், நீங்கள் படித்து முடித்ததும். நான் முதற்பிள்ளை அவர்கள் என்னைச் சந்தோஷமாக வைத்திருக்கத்தானே யோசிப்பார்கள் ” சகுந்தலா களங்கமின்றிக் கேட்டாள்.
அதிக நாட்களின் பின் கண்டிருக்கிறாள் அவனை. சண்டை பிடித்து வீணாக்க விரும்பவில்லை.
“சகுந்தலா உன் தாய் தகப்பனைக் கேட்டா என்னை விரும்பினாய்” அவன் வெடித்தான். அவள் பேசாமல் இருந்தாள்.
”அல்லது நான் எஞ்சினியரிங் படிக்கிறேன் என்பதற்காகவா விரும்பினாய்” அவன் குரூரமாகக் கேட்டான்.
”ஏன் இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்.” அவள் அழுதே விட்டாள். “ஏனென்றால் உமது தகப்பன் எனக்காகத் தன் மனத்தை ஒருநாளும் மாற்றப்போவதில்லை. நான் உங்கள் அந்தஸ்துக்குச் சரியில்லை என்று நினைக்கின்றார். எனக்குத் தம்பி தங்கைகள் இருக்கிறார்கள். தகப்பன் இல்லை. பெரிய குடும்பபாரம் இருக்கிறது. இதெல்லாம் உமது தகப்பனுக்குத் தெரியும். அவர் ஒருநாளும் மனம்மாறப் போவதில்லை. நீர் சொல்வதுபோல் என் படிப்பு முடிய அவர் மாறுமென்றால் மாறட்டும். நாங்கள் சட்டப்படி கல்யாணம் செய்யலாம்.’
அவன் எத்தனையோ சொல்லியும் அவள் மனம் மாறவில்லை. “என்ன அவசரம். படிப்பை முடியுங்கள் முதலில். தாய் தகப்பனை மனம் வருத்தக்கூடாது.”
“கிழட்டு உபதேசம் எனக்கு வேண்டாம்” அவன் கத்தி னான். முடியுமானவரையில் சகுந்தலாவைச் செய்வது அவன் திட்டம்.
“உங்களுடன் திரிந்ததற்காக என்னை எப்படியும் செய்யச் சொல்லலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள்.” அவள் முதற் தரம் கத்தினாள் வேதனையில்.
“நான் உம்மை எதுவும் செய்யச் சொல்லவில்லை. என்னில் உண்மையான அன்பிருந்தால் என்னைக் கல்யாணம் முடி என்கிறேன்.” அவன் கெஞ்சினான். அளவுக்கு மீறிக் கதைத்து அவளை மனம் வருத்தி விட்டேனோ என்று அவன் தவித்தான்.
அவள் அழுது முடிய எழுந்தாள். நான் சின்னப்பிள்ளை யில்லை எடுத்தார் கைப்பிள்ளையாக. படிப்பை முடித்து விட்டு வாருங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.’ அவள் ஓடினாள் அவன் கூப்பிடுவதை அலட்சியம் செய்துவிட்டு. இருவருக்கும் தெரியவில்லை அதுதான் அவர்களின் கடைசிச் சந்திப்பு என்று.
இரண்டு மாதத்துக்குமேல் அவனைக் காணவில்லை. போதாக்குறைக்கு பேரின்பநாயகத்தார் விம்பிள்டனில் வீடு வாங்கிவிட்டார். இனி எங்கே அவனைக் காண்பது. ஒரு சொன் நாள் உ உஷாவுக்குப் போன் பண்ணியபோது உஷா னாள் தாய்க்குச் சுகமில்லை என்று இலங்கைக்குப் போய் விட்டதாக.
ஒருநாள் களைத்து விழுந்துபோய் கல்லூரியால் வந்து சேர்ந் தாள் சகுந்தலா. தாய் பரபரவென்று ஓடித்திரிந்து பலகாரம் செய்துகொண்டிருந்தாள். ”என்னம்மா விஷேசம்?” சகுந் தலா கேட்டாள். மீனா தன் பாடசாலைச் சினேகிதியுடன் பிரான்சுக்குப் போயிருந்தாள். தமயன் தியாகராசா அவர் களுடன் இல்லை. லண்டனிலுமில்லை. கல்லூரி மாணவர் கோஷ்டியுடன் ஸ்கொட்லாண்ட் போயிருந்தாள்.
தாய் மகளை சந்தோஷத்துடன் பார்த்தாள். நாளை உன் தகப்பனின் சினேசிதர் குடும்பம் சாப்பிட வருகிறார்கள். நல்ல பலகாரம் செய்கிறேன்.நாளைக்கு வெள்ளன வரப்பார். அல்லது அரை நாள் லீவுபோடு.”தாய் அன்புடன் சொன்னாள். எத்தனை பேர் வருகிறார்களோ தெரியாது அம்மா பாவம். அடுத்த நாள் அரைநாள் லீவோடு வந்து சேர்ந்தாள்.
அமர்களமான சமையல். அருமையான பலகாரங்கள் அப்பாவின் சினேகிதர் அப்பாவுடன் கொழும்பு இந்துக் கல்லூரியிற் படித்தவராம். இன்னும் சினேகிதர்களாய் இருக்கிறார்களாம். அப்பாவின் சினேகிதரின் மகன்கள் மூன்றுபேரில் ஒருவர் அமெரிக்கா போகிறாராம் வேலை விட டயமாக. மற்ற மகன்களில் ஒருவர் லண்டனில் படிக்கிறார். மற்றவர் கனடாவில் கல்யாணம் முடித்திருக்கிறாராம்.
நல்ல குடும்பம். சகுந்தலா நினைத்துக் கொண்டாள். கல கலவென்று நல்ல குடும்பம். “எப்படி ஆட்கள்?” அம்மா கேட்டா எல்லோரும் போய் முடிய
“நல்ல ஆட்கள்போலக் கிடக்கு.” அதைத்தவிர அவள் ஒன்றுமே சொல்லவில்லை வெள்ளிக்கிழமை பின்னேரம் சோர்ந்துபோய் வந்தாள் சகுந்தலா. வரமுதல் உஷாவுக்குப் போன் பண்ணிக் கேட்டாள் கார்த்தியிடமிருந்து ஏதும் கடிதம் வந்ததா என்று. இல்லை என்ற மறுமொழி அவளை வருத் தியது. அவனை மனம் புண்படப் பண்ணி விட்டேனோ என்று தவித்தாள்.
அவன் வந்ததும் முதல் வேலையாக அவன் சொல்படி நடப்ப தாகச் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். தாய் தகப்பனை மனம் வருத்திவிட்டுக் கார்த்திகேயனிடம் போவது அவளைத் துன்புறுத்தியது. தாய் தகப்பன் இவ்வளவு எதிர்ப்பார்கள் என்று தெரியாது. கார்த்திகேயன் சொல்வதுபோல் அவர்கள் ஒருநாளும் கார்த்திகேயனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றால் அவர்களுக்குத் தெரியாமல் போவதைவிட வேறு என்ன வழி?
சாப்பிட்டு முடிய தகப்பன் சகுந்தலாவுடன் கதைக்க வேண்டு மென்று சொன்னாராம். முன்னறையில் நுழைந்தபோது அவர் மெல்லிய வெளிச்சத்தில் டெலிவிஷனில் பார்வையைப் பதித்தார். மகளைக் கண்டதும் டெலிவிஷனை ஓப் பண்ணி விட்டு லைட்டைப் பிரகாசமாக்கிவிட்டு மகளின் அருகில் உட்கார்ந்தார்.
ஏன் தகப்பன் தன்னை எடைபோடுவதுபோல் பார்க்கிறார் என்று தெரியவில்லை அவளுக்கு.
“என்ன பார்க்கிறீர்கள்” மகள் தலையைத் தாழ்த்திக் கொண்டு கேட்டாள்.
“லண்டனில் வளர்ந்தும் எவ்வளவு அடக்கமாய் இருக்கிறாய் என்று என் சினேகிதர் குடும்பம் சொன்னது. அதுதான் பார்க்கிறேன் என் மகளை.” தகப்பனின் குரல் தழுதழுத்தது.
சகுந்தலா மறுமொழி சொல்லவில்லை. ”நீ அதிர்ஷ்டசாலி சகுந்தலா” தகப்பன் தொடர்ந்தார். அவள் விளங்காமல் தகப்பனைப் பார்த்தாள்.
“லண்டன் முழுக்க இடறுபட்ட இடமெல்லாம் எத்தனையோ எஞ்சினியர்களும் எக்கவுண்டன்களும் இருக்கிறார்கள் தமிழ் ஆட்களுக்குள். ஆனால் எந்தக் குடும்பத்தில் இருந்து வந் திருக்கிறார்களென்பதில்தான் அவர்களின் தகுதி தங்கியிருக்கிறது”.
மகள் இன்னும் வாய் திறக்கவில்லை.
“நான் பேர்வழி சிங்களவர்களுடன் மோதாமல் இவ்விடம் வந்து மழையிலும், குளிரிலும் மாரடிக்கிறம். என்ர சினே கிதனைப் பார் இலங்கை அமைச்சு ஒன்றின் நிரந்தரக் காரிய தரிசி இப்போது. என்ன தகுதி தெரியுமா அது!”
சகுந்தலாவுக்குத் தெரியத் தேவையா?
“அவர்களின் மகனுக்கு உன்னைச் செய்யச் சம்மதித்திருக் கிறார்கள். எவ்வளவு அதிர்ஷ்டசாலி நீ” தகப்பன் பெருமை யாகச் சொன்னார்.
சகுந்தலா திடுக்கிட்டு உட்கார்ந்தாள். என்ன சொல்கிறார் பேசவா கல்யாணம் தகப்பன்?
வந்தார்கள்? காதுகள் அடைத்துக் கண்கள் இருண்டுகொண்டு வந்தன அவளுக்கு. என்ன சொல்கிறார் அப்பா? நா வரண்டு, தொண்டை யடைக்குமாற்போல் இருந்தது.
“பிள்ளைகளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக லண்டனுக்கு வந்திருக்கிறார்கள். மகன் சிவனேசன் நியூயோர்க் போக முதல் கல்யாணம் செய்து அனுப்ப நினைக்கிறார்கள். ஒரு விதத்தில் எங்களுக்கும் நல்லது. அவசரம் என்றபடியால் ஆட்களுக்கு அறிவிக்கவில்லை என்று சொல்லலாம்.தகப்ப னின் குரலில் எவ்வளவு மகிழ்ச்சி.
“என் உயிர் போனபின்தான் எனக்குக் கல்யாணம் செய்து வைப்பீர்கள். அவள் குரல் அடைத்தது. விம்மலுடன் ஓடிப்போய்த் தன் அறையை பூட்டினாள். தாய் தகப்பனால் இப்படி கொடூரமாக நடக்கமுடியுமா?
இவர்களுக்குத் தெரியாதா தன்னையும், கார்த்திகேயனையும் பற்றி; அல்லது தெரியாததுபோல் நடக்கிறார்களா? என்ன செய்வது வீட்டை விட்டு ஓடலாமா? கண்கள் மரத்து நித்திரை கூட வரவில்லை. நடுச்சாமம் இருக்கும். அழுது களைத்து விட்டாள் சகுந்தலா.
தாய் கதவைத் தட்டினாள். அழுத கண்ணும் சிந்திய மூக்கு மாகக் கதவைத் திறந்தாள் சகுந்தலா. தாயின் முகத்தின் கருமை அவளைப் பயமுறுத்தியது.
“சகுந்தலா உன் தகப்பன் இருதய நோயாளி என்று தெரியும் உனக்கு. நெஞ்சைக் கையில் பிடித்துக்கொண்டு துடிக்கின் றார். போய்ப் பார். டொக்டர் பக்கத்தில் இருக்கின்றார். ஒன்று சொல்கிறேன். நீ என்ன நாடகத்தையும் ஆடு. ஆனால் உனது தகப்பனுக்கு ஏதும் நடந்தால்… நீதான் கொலைகாரி.
இரவின் அமைதியில் தாயின் வார்த்தைகள் தெளிவாக இருந் தன, ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டிகளாய்த் தலையில் அடித்தன.
கீழே டொக்டரின் குரல் கேட்டது. கீழே போய் பார்க்கலாமா?
கார்த்திகேயனின் கெஞ்சலான முகம் மனத்திரையில் தெரிந் தது. இப்படி ஏதும் நடக்குமென்று எதிர்பார்த்துத்தானா அன்று அப்படிக் கேட்டான்?
ஏன் மாட்டேன் என்று சொன்னேன். நினைவுகள் திரும்பத் திரும்ப கார்த்திகேயனில் வந்து நின்றன.
மனம் மட்டுமல்ல உடம்பே விரைத்த உணர்ச்சி. எத்தனை நாள் அப்படி இருந்தாள் என்று தெரியாது. “இரண்டு மூன்று நாட்களாக நித்திரையில்லாமல் இருக்கிறாள் டொக் டர். திடீர்க் கல்யாண ஷொக்காக இருக்கலாம்” தகப்பன் நெஞ்சக்குத்துடன் சொல்கிறார். ”என்ன ஒரு மாதிரி இருக் கிறாள் நேர்வஸ் பிறேக்டவுனா” தாய் பரிதாபமாகக் கேட் பது அவளுக்கும் கேட்டது.
சகுந்தலா இதுதான் சீவியமா? உஷா எங்கே போய்விட்டாள்? அண்ணா தியாகராஜா இருந்தால் என்றாலும் தாய் தகப்ப னுடன் சண்டை பிடித்திருப்பான். மீனா நீயாவது இல்லையா எனக்குத் துணையாக
அவசரக் கல்யாணம் என்றபடியால் அதிகம் விருந்தினரோ சினேகிதரோ இல்லை. ‘பெண் மிகவும் வெட்கப்படுகிறாள் போல் இருக்கு!” விண்ணானம் பிடித்த சில பெண்கள் சொல்லிக் கொள்வது கேட்டது. உடம்பு வேலை செய்து கொண்டிருக்கும் சிலவேளை உள்ளம் மரத்துப்போய் இருக்கும்போது.
சிவனேசன் பார்வைக்குப் பரவாயில்லைத்தான். நல்ல உத்தியோகம். நல்ல குடும்பம். பார்வதியும், பேரின்ப நாயகத்தாரும் பூரித்துப் போய்விட்டார்கள். கல்யாணம் நடைபெற்று முடிந்தபோது.
“உங்கள் வீட்டுக்குச் சாப்பிட வந்தது உம்மைப் பெண் பார்ப்பதற்காகத்தான் என்று தெரியுமா” சிவனேசன் கிளுகிளுப்புடன் மனைவியை அணைத்துக் கேட்டபோது அவள் கண்கள் வெறுமையாக அவனைப் பார்த்தன.
சகுந்தலாவின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. இன்னொருதரம் இப்படிச் செய்யத் தயங்கமாட்டார்கள் தாயும் தகப்பனும். அதிலும் இலங்கைப் பெடியன் என்றா லும் பரவாயில்லை. வெள்ளைக்காரனுக்குப் பின் திரிகிறாள் மகள்.
மீனாவுக்கு இதெல்லாம் தெரியாது. கலகலவென்ற சத்தத் துடன் குழந்தையுடன் மீனா மேலே வருவது கேட்டது. மீனா இந்தச் சந்தோஷமான சிரிப்பு எவ்வளவு நாளைக்கு இருக்கப்போகிறது உன் முகத்தில்?
“என்ன இஞ்சி தின்ற குரங்குபோல் மூஞ்சியை நீட்டிக் கொண்டிருக்கிறாய்” தமக்கையைக் கேட்டாள் மீனா. அறிவும், இளமையும், துணிவும் கொண்ட தன் தங்கையின் முகத்தைப் பார்த்தாள் சகுந்தலா.
“என்ன என்னை அப்படி பார்க்கிறாய்?” தங்கை குழப்பத் துடன் கேட்டாள்.
சொல்வதா வேண்டாமா? அப்பா கூட்டத்துக்குப் போய் விட்டார். வரட்டும் நேரே அவரைக் கேட்டுவிட்டு இவளுக்குச் சொல்லலாம்.
கீழே சத்தம் கேட்டது. அப்பா கூட்டத்தில் இருந்து வந்து விட்டாரா?
கோபத்துடன் அவர் குரல் கேட்டது. அவருடன் இன்னும் சிலரின் குரலும் சேர்ந்து கேட்டது. என்ன நடக்கிறது கீழே தமக்கையும், தங்கையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் ஒன்றும் புரியாமல்.
“எதற்கும் கீழே போய்ப் பார்ப்போம்.” மீனா தடதடவென்று கீழே இறங்கினாள்.
தகப்பன் உருத்திர மூர்த்தியாகத் துள்ளிக்கொண்டிருந்தார். கூட்டத்தில் ஏதும் அடிபிடியோ? தாய் வந்தவர்களுக்குக் கோப்பி போட்டுக்கொண்டிருந்தாள்.
“என்னம்மா நடந்தது” சகுந்தலா தாயைக் கேட்டாள்.
தாய் மகளின் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள், “தாய் தகப்பன் இல்லாமல் வளர்ந்த சண்டியன்கள் தங்கள் எழிய குணத்தை இங்கிலாந்துக்கு வந்தும் மறக்கவில்லை.”
கார்த்திகேயனுடனா சண்டை!
சகுந்தலா மேலே ஒன்றும் கேட்கவில்லை.
“எழிய நாய்கள். நாங்கள் நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கூட்டம் வைக்க குண்டுபோட்டு விட்டார்கள்.” தகப்பன் கத்தினார்.
சகுந்தலா திடுக்கிட்டுப்போய் நின்றாள்.
– தொடரும்…
– உலகமெல்லாம் வியாபாரிகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1991, நீலமலர், சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |